வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமைகளில் எங்காவது வெளியே கிளம்பினால் வீட்டில் எதாவது வாங்கிவரச் சொல்வது வழக்கம் .இன்று முடிதிருத்தம் செல்லப் போகிறேன் என்று சொன்னததுதான் மாத்திரம், கும்பிட வேண்டாத தெய்வம் குறுக்கே வந்தது போல ரேசன் கடையில் சர்க்கரைக் கோதுமை எண்ணெய் என்று வாங்க வேண்டிய பட்டியலோடு முன்னாடி நின்று விட்டார் எனது இல்லத்தரசி. அது மட்டுமல்ல இன்று கூட்டம் எதுவும் இருக்காது உடனே வாங்கி விடலாம் என்று அந்தத் தண்டனையில் சலுகை வேறு ! பையன் பரிதாபமாகப் என்னை பார்த்தான் .அம்மாவை எதிர்த்து, அப்பாவின் வெற்றியை ஒரு நாளாவது பார்க்க வேண்டும் என்பது போல இருந்தது அது ! அவனுக்கு என்னை விட Bad Luck !.
ரேசன் கடை என்றாலே எனக்கு லேசாய் ஒரு வித அயற்சி மனசுக்குள் வரும் .சின்ன வயது முதலே திண்டுக்கல் ரேசன் கடை வரிசை எனக்குச் சலிப்பைத் தரும் வீட்டில் சின்னப் பையன் என்பதால் எனக்கே வரிசையில் நிற்கும் பதவி வழங்கப்படும்.ஒரு முறை நான் எதனாலோ போக வில்லை அன்று ( நான்கு பேரில் ) பெரிய அண்ணன் போய் இருந்தார் அவர் கோபக்காரர்.வாடகை டாக்சி ஓட்டுபவர் .கடையில் மிகப் பெரிய மண்ணெண்ணெய் வாங்கும் வரிசையில் யாரோ இடையில் தனது கடைக்காரருடன் இருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி முன் சென்று வாங்க , இவர் கேட்கச் சண்டை வந்து விட்டது .நியாய விலைக் கடைக்காரர் அநியாயமாகக் குறுக்கே வந்தவருக்குச் சிபாரிசு செய்ய , மண்ணெண்ணெய் வாங்காமல் விட்டுக்குச் சண்டயில் கிழிந்தச் சட்டையை மாற்ற வந்தவரை அழைத்துக் கொண்டு மற்ற அண்ணன்கள் போய்க் குறுக்கே வந்தவரைக் குடும்பத்தோடு அடித்துக் குவித்து விட்டார்கள்.தடுக்க வந்த கடைக்காரருக்கும் சில தரும அடிகள் வழங்கப்பட்டது.அன்றிலிருந்து வீட்டில் யார் ரேசன் வாங்கப் போனாலும் வரிசையில் நின்றாலும் உடனே கூப்பிட்டு எடைச் சுத்தமாக ,( நிறுவைத் தட்டை அழுத்தாமல் ) வழங்கி அனுப்பி விடுவார்கள் ! ஒரு வேளை அந்த ரேசன் கடைக் கல்வெட்டில் எங்கள் பெயரைப் பதிவுச் செய்துவிட்டார்களோ என்னவோ ?
ஆஃபிசுக்குப் போகும் வழியில் ரேசன் கடை இருப்பதால் மனைவியை இறக்கி விட்டுச் செல்வது வழக்கம் உள்ளே போனதில்லை.எனக்கும் முன் இரண்டு பேர் இருந்தனர். ரேசன் கடை என்பதை விட அதை ரேசன் கொடவுன் என்று சொல்லிச் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம் .எங்கும் பழைய சாக்கு மூடைகள் ,பிரிக்கப் படாத சர்க்கரை மூடையில் SSCSM ( Subramaniya Siva Coop.Sugar Mills Ltd.,Gopalapuram) என்று கொட்டை எழுத்து இருந்தது . மண்ணெண்ணெய் ட்ரம்கள்,அட்டைப் பெட்டிகள் என அந்த இடத்தின் இறுக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தன.சர்க்கரை ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை .அதை மறைக்க வைத்த அட்டை, சண்டையில் கிழிந்தச் சட்டை போல அக்கு வேறாக (அடித்த) ஆணி வேறாகத் தொங்கிக் கொண்டு தனது கடமையைச் சிறிது செய்யாததால் வெப்பத்தின் கதிர்கள் ஆஸ்பெஸ்டாஸ் வழியே வெளியேரும் போது கோபமாக மாறி உடம்பின் வியர்வைச் சுரப்பிகளுக்குத் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் துவக்கி வைக்கத் தொடங்கியது .அந்த ரேசன் கொடவுனுகுக்குள் விலையில்லா இலவச மின் விசிறி கூட இல்லை .சுவர் முழுவதும் சாமி ஆங்காங்கே விநாயகர் ,முருகன் ,இயேசு என எல்லோரும் இருந்தனர்.அவைகள் அனேகமாகப் பல தீர்ந்து போன சாமிப் படக் காலண்டர்ப் படங்கள் .பல இடத்தில் இயேசு தனது இருதயத்தைத் திறந்து வைத்து இருந்தார் .அவர் நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்து யேசுவையே மதம் மாற்ற முயற்சி செய்து இருந்தார்கள் அங்கே ! .
உள்ளே ஒரு பணியாளார் மட்டுமே இருந்தார் அவரே பில் போட்டார் .அவரே வழங்கலும் .எனக்கு முன் இருந்தவரின் கார்டில் பில் போடும்போது அதற்கு முந்திய மாத பதிவில் பச்சரிசி வாங்காத இடம் நிரப்பாமால் இருந்ததை, வாங்கியதாகப் பதிவு செய்தார் .அதைப் பார்த்து அந்தக் குடும்ப அட்டைதாரர் எதர்க்கு அதைப் பதிவு செய்கிறீர்கள் என்று கேட்டார் .(அவர் புதிதாய்க் கடைக்கு வருபவர் போல ? ) .அதற்கு ஓர் அற்புதமான பதில் தந்தாரே பார்க்கலாம் கடைப் பணியாளர்.நீங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் இல்லாவிட்டால் பதிவு செய்ய வேண்டும் என்றார் .நாம் உயிரோடு இருக்கும் பொதே நம் ஓட்டை யாரோ போடும்போது போன மாதம் வாங்காத பச்சரிசி மூட்டை ,நாம் வரும் வரைக்கும் குத்த வைத்தா உட்கார்ந்து இருக்கும் ?
எனக்குப் பில் போடும்போது நான் கேட்டதை விட ஒரு பொருள் கூட இருந்தது.கேட்டதர்க்கு ’டீத்தூள்’ என்றார் .கட்டாயத் திணிப்பு.மானியச் சிலிண்டர் வீட்டுக்குக் கொண்டு வந்து தரும்போது `சம்திங்` போகக் கட்டாயம் வேறு ஏதோ ஒரு பொருள் வாங்க வேண்டுமே அது போல ! இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளும் மக்களாட்சி என்று நாம் கத்திக் கொண்டே போகலாம் யாருக்கென்ன போச்சு ? வாழ்க மக்களாட்சி .
தொப்பலாக வியர்வையில் நனைந்து விடுதையாகி வெளியே வந்தேன்.அப்போது தான் பார்த்தேன் அதே காம்பவுண்டுக்குள் ரேசன் கடைக்கு நேரெதிரே டாஸ்மாக் கடை இருந்தது.காலைப் பத்து மணிக்கும் கனிசமான கூட்டத்திர்க்குக் குறைவில்லை.ஒரு வேளை என்னைப் போல ரேசன் கடைக்கு வந்தவர்கள் மக்களாட்சி மேல் கோபம் வந்து, குடிக்கப் போய் விட்டார்களோ ? இருக்கலாம் ! சரி எப்படியும் யாரோ சிலருக்கு இது கூட லாபம்தானே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக