திங்கள், 11 ஏப்ரல், 2016

சினிமாவில் ( உண்மைக் ) கொலையாகும் இலக்கியம் !



        ஹாலிவுட்டில் மிகப்பல பிரபல நாவல்கள் கதையம்சம் மாறாமல் திரைப்படமாவதும் வெற்றிப் பெறுவதும் மிகச் சகஜம்.லாரன்ஸ் ஆஃப் அரேபியா , டாக்டர் ஷிவாகோ & டேவிட் லீன் எடுத்த தி டேல் ஆஃப் டூ சிட்டிஸ். போன்ற நாவலின் அத்தனை பக்கங்களையும் சம்பவங்களாகத் திரைக்குக் கொண்டு வந்தார்கள் . ஆனால் நமது நாட்டில் அது அப்படிச் சாத்தியமாவது மிக அதிசயம் .இங்கு இன்று நேற்றல்ல 1935ல் வடுவூர் கே. துரைசாமி ஜயங்கார் எழுதிய ’மேனகா’ என்ற நாவல் , முதலில் நாடகமாகவும் பின்னர் 1935 ல் திரைப்படமாகவும் பரிணமித்தது ( இந்தத் திரைப்படம் மூலம்தான் நமது மறைந்த திரு.என் எஸ் கிருஷ்ணனைத் தமிழ் உலகிற்கு அறிமுகமானார்.) தொடங்கிக் கடந்த ஆண்டு வெளிவந்த திரு.மு.சந்திரகுமார் அவர்களால் படைக்கப் பட்ட "லாக்கப்" விசாரணை ‘ யாக மாறிய விதத்திலும் எழுதியவர் நோக்கில் அப்படியே நாவல் படமாக்கப் படுகிறதா ? என்பது மிகப்பெரிய கேள்வி . 

                  மறைந்த எழுத்தாளர்த் திரு.ரங்கராஜன் (சுஜாதா) அவர்களின் காயத்ரி நாவல் திரைப்படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்து “எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது’ என்பதாய்ச் சொல்லும் அளவிற்கு நம் நாவல் - திரைக்கதையாக மாறும் போது மிகப்பெரிய கதைக்கருவே விபத்தாக மாறுகிறது .இதற்கு உதாரணமாகச் சுஜாதா அவர்கள் சொன்னதையே இங்கு எடுத்துக்கொள்ளலாம் . “படம் பிடிப்பவர்கள் கதையை மாற்ற விரும்பும் ஆசையை நானும் சமீபத்தில் உணர்ந்தேன். காயத்ரி என்ற என் கதையைப் படம் எடுக்கிறார்கள். படம் எடுப்பவர்கள் களங்கப்பட்டுவிட்ட கதாநாயகிக் கடைசியில் இறந்தே தீரவேண்டும் என்று உடைந்த கண்ணாடித்துண்டை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்”என்று தன் கதையின் முடிவு என்னுடையதல்ல என்று வேதனைப்படுகிறார்.

ஆனால் அதே சுஜாதா கமலுடன் கைகோர்த்துக்கொண்டு ’விக்ரம்’ என்ற தொடர்கதையக் குமுதத்தில் எழுதி அப்படியே படமாக்கினார் என்பது விதி விலக்கு ! அது மட்டுமல்ல அந்தக் கதை குறிப்பாக ஆண் – பெண் வித்தியாங்களைப் பற்றிக் கமல் பேசும் வசனங்கள் வெளிப்படையாக அந்தந்த வாரங்களிலே விமர்சிக்கப்பட்டுச் சிதறடிக்கவும் பட்டது என்பது சுவாரஸ்யம் !


மோக முள்ளின் வலி.. 

திரு.தி.ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’ நாவல் 1955 - 56 காலங்களின் பின் புலத்தில் உருவானது .அதில் ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் காமத்தின் உட்கூறுகளையும் , மிக நுணுக்கமான எண்ணங்களின் சிற்பியாக வார்த்தைகளில் செதுக்கினார் தி.ஜா. அன்று அந்த நாவல் காலத்தின் கட்டயமாகப் பார்க்கப்பட்டது.யாரும் பேசாத இளைஞர்களின் மனதின் ஆழங்களைத் தொட்டது அந்த நாவல் ! 

                இந்த நாவலைப் பற்றி அறிந்த வாசிக்க தேடிய போது, சொந்த ஊரில் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்தோம்.அப்போது எங்கள் நண்பர்களில் ஒருவர் கோவை சென்ற போது பழைய புத்தகச்சந்தையில் இந்த நாவலைப் பார்த்து இருக்கிறார்.அவர் கையில் மதிய உணவுக்கு இருக்கும் பணத்தின் சரியான அதே அளவில் புத்தகத்தின் விலை.மதியம் பட்டினியாய்க் கிடந்து அதை வாங்கி இரவு 10 மணிக்கு என் வீட்டில் கொடுத்து விட்டுப் போனார்.நாண்பர்கள் அனைவரும் உருகி உருகிப் படித்தோம்.வெகு நாளாய்ப் பாபுவாய்க் கிறங்கிக் கிடந்தோம் .நிறையப் பெண்கள் யமுனாவைப்போல இருக்க வேண்டும் ஆசைப்பட்டோம்.இனி இப்படி ஒரு நாவல் யாராலும் எழுத முடியாது என்று பிதற்றினோம் .பல மாதங்களாய்த் தி.ஜாவின் மோகமுள்ளின் உணர்வு குத்திக்கொண்டே இருந்தது. யார் அந்த நாவலை உணர்வோடு படித்தாலும் இது நடக்கும் என்று நம்பினோம்.அந்தக் கதைப் படமாக எடுக்கப்பட்டால் எந்த எந்த இடங்கள் முக்கியமாகப் பேசப்படும் என்று கறுப்பு வெள்ளை நிழற்படங்கள் எடுத்தோம். அப்படி ஒரு பாதிப்பில் கரைந்து போயிருந்தோம்…

இயக்குனர் என்ற தொழிற்நுட்பக் கருவி .. 

           அந்தப் படம் 1995 ல் இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியாகி தேசிய விருதும் பெற்றது. .ஆனால் அந்தக் கதை எந்த அளவுக்கு உயிர்ப்போடு திரைப்படமாக்கப்பட்டு இருந்தது என்று கதைப் படித்தவர்களுக்குதான் அதன் வலி புரியும் ! .அதே சமயம் எழுதுவதையெல்லாம் அப்படியே கதையாக மாற்ற முடியுமா ? என்று கேட்பவர்களும் உண்டு.இதை ஒரு கதாசாரியனும் – ஒரு இயக்குனரும் பேசித் தீர்க்க வேண்டும் என்பதாய் ஒதுக்க விரும்புவர்கள் அதிகம் . ஆனால் இருவரின் கடமையும் நோக்கமும் ஒரு பொதுவான விதிக்குக் கீழ் வருகிறது அது அவர்கள் சொல்ல விரும்புவதைச் சிதைவுப் படமால் பார்ப்பவனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே .கதாசிரியன் உணர்ச்சியாளன் தனது கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நூல் இழையையாகப் பார்த்துப் பார்த்துப் பின்னி வருபவன் ஆனால் இயக்குனர் என்பவன் முழுக்க முழுக்கத் தொழிற்நுட்பம் சார்ந்தவன் . ஆனால் சத்யஜித் ரே, தாகூரின் ஒரு சிறப்பான overstated நாவலை, சேதாரமில்லாமல் இரண்டு காரட் திரைக்கதை (வெள்ளி) மட்டும் 22 காரட் நாவலின் , understated திரைப்படமாக அற்புத ஆபரணமாக ஆக்கியது  விதி விலக்கு ! சத்யஜித்ரே என்ற இயக்குனருக்குள் எப்போதுமே ஒரு எழுத்தாளனின் ஆளுமை நிறைந்து இருந்தது என்பதுதான் அதன் காரணம் !. 


ரசிகன் கொல்லப்பட வேண்டும் !

                            ஏதோ ஒரு கதையில் கதா நாயகன் ஒரு தியானம் செய்ய நுழைகிறான் என்று ஒருவரியில் கதாசிரியர் எழுதிவிட்டுப் போயிருப்பார்.அதைப் படமாக முயற்சிச் செய்யும் இயக்குனருக்கு முதலில் தியானம் என்றால் என்ன ? என்று தெரியவிட்டாலும் தியானம் எங்குப் பண்ணுகிறார்கள் ? ,இந்தக் கதையின் கதை நாயகன் வசதியானவனாக இருந்தால் அதை எங்கு எடுப்பது ? இது எப்படிக் கதைக்கு முக்கியத்துவம் பெறுகிறது ? எப்படிக் காட்சிப்படுத்துவது ? என்ற நூறாயிரம் கேள்விகளுடன் அந்த ஒரு காட்சிக்கு அணுக வேண்டியிருக்கிறது.

    எழுதப்பட்ட காட்சி படமாக்கல் என்ற தொழிற்நுட்பச்சிறைக்குள் மாட்டிக்கொள்ளும் போது இங்கு எழுதியவன் சொல்ல வந்ததோடு இயக்குனர் காட்சிப்படுத்தும் போது  முரண்படலாம். ஆனால் அதில்லாமல் இயக்குனர் அந்த இடத்தில்தான் கதாநாயகியைக் கதாநாயகன் சந்திக்கிறான் என்ற ஒரு “டுவிஸ்டை” கொண்டு போய் வைத்து அப்போது அங்கு ஒரு பாட்டும் தேவைப்படுகிறது என்று வைக்கும் போது அந்தக்கதை அங்கேயே இறந்து போய்விடுகிறது .பிறகு இல்லாத மந்திரமெல்லாம் போட்டு அந்தப் பிணத்தை (கதையை) வைத்துக்கொண்டு A,B,C ரசிகர்களைத் திருப்திப் படுத்த வேண்டும் ,கதாநாயகன் ஹீரோயிசத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்,தயாரிப்பாளாரை குளிரச் செய்யக் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒருபாடலில் ஆந்திர அழகிகளைக் குலுங்கச் சொல்ல வேண்டும்..இப்படியாக இரண்டரை மணி நேரம் கதைப் படித்த ரசிகன் கொல்லப்படவும் வேண்டும். 

எழுத்தும் ,வாசிப்பும் ..

                ஒரு எழுத்தின் மூலம் பெறும் உள்ளார்ந்த உணர்வுகளின் எண்ண ஓட்டம் வாசிப்பவனுக்கும் எழுத்தின் ஆளுமைக்குமானத் தொடர்பைப் பொறுத்து மாறுகிறது.படிப்பவன் முதல் நாள் ஒரு மலையாளப்படம் பார்த்து விட்டு அதே நோக்கில் மணிமேகலையை புராணத்தைப் படித்தால் கோமுகிப் பொய்கை முன் நிற்கும் மணிமேகலையைப் பற்றிய "அணிப்பூங்கொம்பர்," "மணிப்பூங்கொம்பர்," "ஆயிழை," "அணியிழை" வருணனையைப் படித்தால் அவன் பார்த்த மலையாளப்பட நாயகியின் ஞாபகம்தான் முன் நிறுகும்.மணிமேகலை யாரென்று தெரியாமல் அவனே ஒருத்தியை மனதுக்குள் இவள்தான் அவள் என்று தருவித்துக்கொள்கிறான் .இது படிப்பவனுக்கும் – அந்தக் கதைக்கும் இடையே உள்ள ரசவாதம்..ஆனால் இந்த விதித் திரைப்படத்தில் பார்க்கும் போது அடிபட்டு விடுகிறது .அதே மாதவி மகள் மணிமேகலைப் பாத்திரத்தில் நயனதாராவை நடிக்க வைத்திருந்தால் அவர் என்ன உடை உடுத்தியிருப்பார் ? ஒரு வேளை இப்படி எடுக்கப்பட்ட படத்தின் ”ரஸ்”பார்த்து விட்டு சீத்தலைச் சாத்தனார் என்ன சொல்லியிருப்பார் ?
      ஆர்.கே.நாராயணனின் கையிட் (Guide ) என்ற நாவல் விஜய் ஆனந்த் இயக்கத்தில் அமெரிக்க நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர் பெர்ல் பக் (Pearl Sydenstricker Buck ) என்பவர் ஆங்கிலப் பட ஆக்கத்திற்குத் திரைக்கதை எழுதி 1965ல் வெளியானது.இங்கு ஹிந்தியில் இயக்குனரே திரைக்கதை அமைத்து இருந்தார் அந்த முடிவைப் பார்த்து  அதிருப்தி அடைந்து ஆர்.கே நாரயணன் என்ன பேசினாரோ அதைத்தான் சீத்தலைச் சாத்தனாரும் பேசியிருப்பார் ! .(அது மட்டுமல்ல கூடுதலாகச் சாத்தனாருக்கு நயனதாராவுடன் சிம்பு , பிரபு தேவா விசயம் தெரிந்து இருந்தால் என்ன ஆவது ?  காரணம் மணிமேகலை காப்பியத்தின் இறுதியில் துறவு பூணுகிறாள் . 


               

உருவம் -உள்ளடக்கம் எது தோற்றுப்போகலாம் ?

  எழுத்தில் சிலவற்றைப் படிப்பவரின் கற்பனை வட்டத்துக்குள் பயணித்துக் கொள்ளலாம் .அது திரைப்படமாகாத போது அந்தக் கற்பனைச் சேதாரம் ஆகிறது.அந்தக் கதை வாசித்தவனின் முன் திரைப்படம் நொண்டியிடுகிறது .

வாசிப்பவனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவு புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விசலாமானது .முதலில் வாசிப்பவனின் அவன் எந்தக் கோணத்தில் அந்த நாவலை , புதினத்தை அல்லது இலக்கியத்தை வாசிக்கிறான் என்பது முக்கியம் . இதற்கு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம் நமது சோழர்கள் மிக உன்னதக் கலாச்சாரம் கொண்டவர்கள்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தார்கள் .அன்பே சிவம் என்ற சிவ பெருமானுக்குத் தஞ்சைப் பெரிய கோவிலை காணிக்கியாக்கினார்கள் ஆனால் அவர்கள் எதிரி என்று நினைத்தது இன்னொரு தமிழ்ப் பேசும் சமூகமான பாண்டியனையும் , சோழனையும். அவர்களோடு போர்க் களத்தில் மோதினார்கள் வென்றதோடு நிறுத்தியிருக்கலாம் ஊருக்குள் புகுந்து பெண்களைத் தெருவுக்குக் கொண்டுவருவதுவும் இழிவுப் படுத்துவதும் தவறு என்ற மன நிலையில் வாசிப்பவன் வாசித்தால் மொத்த சோழர் குலச் சரித்திரமே அவன் கண்ணோட்டத்தில் மதிப்பில்லாமல் போகலாம் .

இரண்டாவது அவன் வாசிப்பின் மன விரிவு சம்பந்தப்பட்டது.வாசிப்பவன் மிக்கபெரிய கற்பனையாளியாக இருந்தால் அந்தக் கதை எழுதுபவனோடு தன்னிலை மறந்து பயணிப்பான்.இதற்கு உதாரணம் மிகப்பிரபலமான ”ஜூராசிக்பார்க்” கதையைப் புத்தமாகப் படிப்பவன் , ’கிளைமேக்சில்’ அந்த இரண்டு குழந்தகள் தப்பித்து ஓடிக் கதவுகளைச் சாத்திக்கொண்டு ஒளிந்து கொள்ளுவார்கள் .அப்போது அந்த வேட்டை மனோபாவத்தோடு அவர்களைத் துரத்தும் டைனோசர்கள் அந்தக்கதவைத் தகர்த்து உள்ளே போனது என்றால் வாசிப்பவன் அந்தக் கதவு இரும்பால் அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்டதா என்பதெல்லாம் கற்பனை செய்ய மாட்டான் அவனுக்கு அந்த வேட்டை மிருகத்தின் பலிவாங்கும் வெறிதான் முன் நிறுக்கும் அந்தக் கதவைப் பெரிதாய்க் கற்பனை செய்து கொள்ள மாட்டான் .(ஆனால் அந்தப் படத்தில் ஸ்டீபன் ஃபீல்பர்க் என்ன செய்தார் அந்த மிருகம் அந்தக் கதவின் கைபிடியைத் திருகி உள்செல்வது போல அந்த இடத்தில் காட்சி அமைத்து இருப்பார்.)

மூன்றாவது இந்த வாசிப்பில் அவன் அறிந்து கொள்ள முயலும் விசயமும் இருக்கிறது .ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவன் ஓஷோவைப் படித்தவன் அடுத்து இன்னும் ஆழமான தேடலில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் புரிந்து கொள்ள முயற்சிப்பான்.அவன் வாசிப்பின் மூலம் தேடலின் விசாலம் கூடும் .விசய ஞானத்தின் வேர் எல்லையில்லாமல் பரந்து விரியும் ...

ஆனால் இத்தனைக்கும் அதற்கு மேலும் வாசிப்வனை அவன் எல்லைக்குள் நுழைந்து வெற்றி பெறுவதும் வாசிப்பை அப்படியே காட்சிப்படுத்துவதும் இயக்குனருக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல . ஆனால் இதைத் தாண்டி ஒருநாவல் என்ற படைப்பு உருவான பின் அதன் முக்கியமான இரண்டு அங்கங்களான உருவம்-உள்ளடக்கம் (form and content) இருக்கிறது இது பொதுவாக எல்லாப் படைப்புகளுக்குமே சொத்துதான் .எழுத்து என்ற படைப்பு ஆனால் அதன் உருவம் முழுமைப்படுத்த இயலாத போது அதன் உள்ளடக்கம் மாறக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள்வது அவசியம் மறைந்த திரு.பாலுமகேந்தரன் இதை We should understand /feel the point which triggered the author to write that story and we should start from there என்கிறார் .நாமும் இதையே எதிர்பார்ப்போம்.மாம்பலத்திலிருந்து எல்லா மாம்பழ ஜூஸ் தயார் செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும் அது ஆர்ட்டிஃபிஷியல் ஃபிளேவரிங் சப்சண்ட்டை விஞ்ஞான முன்னேற்றம் ! ஆனால் இது மாம்பழ ஜூஸ்தான் என்று வேப்ப எண்ணையை வாயில் ஊற்றும் முயற்சி செய்வதற்குச் சும்மா இருந்து கொள்ளலாம் அல்லவா?



சினிமாவும் இலக்கியமும் !

                     முப்பது வருடமாகப் போராடியும் இலக்கியத்தையும், சினிமாவையும் இணைக்க முடியவில்லை என்கிறார் கமல்.சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் கமல் பேசும்போது...

                எனது சினிமா வாழ்க்கை 50 வருடமென்றால், அதில் கடந்த 30 வருடமாகச் சினிமாவையும், இலக்கியத்தையும் இணைக்கப் பாலமாக இருந்து வருகிறேன். ஆனாலும் முடியவில்லை. சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அது யார் காதிலும் விழவில்லை. சினிமாவும், இலக்கியமும் தனித்தனித் தீவாக இருக்கிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? இதில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது. ஒன்று தெரிந்து விட்டால், இன்னொன்றுத் தேவையில்லை என்று இருவருமே நினைக்கிறார்கள். சினிமாவே ஒரு இலக்கியம்தானே என்று சினிமாகாரர்கள் நினைக்கிறார்கள். இலக்கியம் அனைத்தையும் படித்து விட்டோம். சினிமா எதுக்கு என்று இலக்கியவாதிகள் நினைக்கிறார்கள். இவர்களை எப்படிப் பேலன்ஸ் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தது சினிமா மட்டுந்தான். தமிழைக் கற்று வருகிறேன். எனது சினிமாவில் வித்தியாசங்கள் இருக்குமானால் அது மற்றவர்களின் எழுத்தால் கிடைத்தது. சினிமாப் பார்ப்பவர்கள் புத்தகமும் படிக்க வேண்டும், அப்போதுதான் சினிமா பற்றிய விமர்சன அறிவு வளரும். சினிமா மொழி வேறு. ஆனால் அது மக்கள் மொழியில் பேச வேண்டும். இலக்கியம் சினிமாவோடு சேர்ந்தால் தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு உயரும் என்று நம்புகிறார் 



            சமீபத்தில் வெளியாகிய சுமார் 300 படங்களுடன் போட்டியிட்ட இந்தியத் திரைப்படங்களில் ’விசாரணை. தேசிய விருதும் குவித்து இருக்கிறது .ஆனால் அதன் கதைப் படிக்கப் பயமாயிருக்கிறது .ஒருவேளை இவ்வளவு அற்புதமாகப் படமாக்கப்பட்ட திரைப்படத்தில் சந்திரகுமாரை நான் தேடும் நிலை வந்து விட்டால் …? வேண்டாம் !
 தமிழ் சினிமாக்கள் நாவல்களைத் திரைப்படமாக மாற்றட்டும் .இது ஆரோகியமான முயற்சிதான். இது எந்த வித சமாளிப்பும் அற்ற ,ரசிகருகளுக்காகக் கதையில் மாற்றம் செய்தோம் என்ற மழுப்பலும் இல்லாத படங்களாக வரட்டும்.இந்த வரிசையில் சுஜாதாவின் ‘என் இனிய இந்திரா’ கல்கியின் 'பொன்னியின் செல்வன்' (அனிமேஷன்) திரைப்படம் எப்படி வருகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம் !