வெள்ளி, 31 ஜூலை, 2015

மகாத்மா அப்துல் கலாம் .



ஒரு நிறைவான மனிதர் நேர்மையான தனது வாழ்வைப் பூர்த்தி செய்துள்ளார்.ஒரு மனிதன் தன் வாழ்வுக்குப் பிறகு பேசப்படுவதில்தான் அவர் அருமை புரியும் .மக்களுக்குப் புரிந்து இருக்கிறது .அதனால்தான் திரும்பிய பக்கமெல்லாம் அஞ்சலி வரிகள் .அந்த மாமனிதரின் மரணத்தின் வலிகளைப் புரிந்த வாசகங்கள் ஆனால் சோகமாக இல்லை உங்கள் கனவுகளை மெய்பிக்கிறோம் என்ற வாக்குறுதிகள் .ஒரு மனிதன் மரணம் விதைக்கப்பட்டுள்ளது .அதன் பலனை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா 2020 மூலம் அனுபவிக்கும்.
இங்கு , திருப்பூரில் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல அமைப்புகள் மூலம் மௌன அஞ்சலி ஊர்வலம் மாலை 4.30 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளியிலிருந்து துவங்கி சிக்கண்ணா கல்லூரியில் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .எங்கள் அலுவலத்திலிருந்து நான்கு பேர் கலந்து கொண்டோம் .அவசர அவசரமாகப் பிற்பகல் 3.15 க்கெல்லாம் பேருந்துக்காகக் கூட காத்து இருக்காமல் போனால் 100 பேர் கூட இல்லை .ஆனால் 4.20 க்கு ஆயிரக்கணக்கோர் கூடி விட்டனர் .ஆட்சித்தலைவர் கமிசனர் , துணைக்கமிசனர் ,அரசு சார்பில் கலந்து கொண்டனர்.அதனாலேயே என்னவோ Mine-Resistant Ambush Protected கூட்டத்தைக் கலைக்க உதவும் காவல் துறையின் மிக விலையுள்ள வாகனம் பயமுறுத்தியது. மூன்று பேர் கொண்ட வரிசையாய் தொடங்கும் முன் நிற்கச் சொன்னார்கள் .ஊர்வலம் முடியும் வரை யாரும் மூன்றுக்குள் வரவில்லை நானும் மற்ற இரண்டு பேரை சேர்க்கப் போனால் வெள்ளையாய் ஓவர் கோட் அணிந்த ,மருத்துவ சங்கத்தை சேர்ந்தவர்கள் .ஒரு வித தயக்கத்தோடு அவர்களோடு சேர்ந்து கொண்டேன் . சிக்கண்ணா கல்லூரிக்குள் மிகப் பெரிய மேடை ஏற்பாடு செய்து இருந்தார்கள் .எல்லோரும் வரிசையாய் நீண்ட மலைப்பாம்பைப் போல உள்ளே போய் நிறைந்தோம் .அங்குள்ள மைதானத்தில் நிற்பதர்க்கு கோடுகள் கூட போட்டு இருந்தார்கள் .மக்கள் மனதில் கலாமை மனதில் வைத்து இருப்பதால் மிக வரிசையாகவும், அமைதியும் காத்தனர் .

மேடை முழுதும் கலாம் அஞ்சலி படங்கள் .இங்கு ஒரு வித்தியாசமான அஞ்சலி நடந்தது.இரண்டு பிரமாணர்கள் சாந்தி பண்ணும் மந்திரம் சொல்லியும் அடுத்து கிறிஸ்துவ மதச் சார்பில் வசனங்களும் ,முடிவில் இஸ்லாமைச் சேர்ந்த ஒருவராலும் அந்த ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் .ஆனால் அவர் இந்த மூன்று மதங்களில் முடிந்து விடவில்லை அதற்கு அப்பால் பல நாடுகளின் மக்களின் மனங்களில் விதைகளாய் வாழ்கிறார் .அமெரிக்காவின் இரும்பு கோட்டையிலே கூட அவர்கள் தேசியக் கொடியை பாதிக்கம்பத்துக்கு இறக்கி வணங்கச் செய்து விட்டாரே !

முதலில் பேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் திரு .சக்திவேல் பேசும்போது நமது தேசப்பிதா காந்தியைப் போல அவரும் ஒரு மஹாத்மா .எனவே இன்றிலிருந்து ,இங்கிருந்து மகாத்மா அப்துல் கலாம் என்று அன்போடு அழைக்கப்படுவார் என்றார்.அடுத்து திருப்பூருக்கு கலாமை அழைத்து வந்த பெருமைக்குரிய அகில் எஸ்.ரத்தினசாமி அவர்கள் பேசும்போது கலாமின் நினைவில் கலங்கி பேச்சைத் தொடர முடியாமல் பேச்சை நிறுத்தினார் .மேலும் சிலர் பேசி முடித்த பின் உறுதி மொழி வாசிப்பட்டது .முடிவில் கலாமின் கனவுகளில் ஒன்றான மரம் வளர்ப்புத் திட்டத்தினை நனவாக்க ராம் ராஜ் காட்டன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .அங்கிருந்து வீட்டுக்கு பேருந்து ஏறும் மனம் கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டு இருந்தபோது கூடவே நடந்து வந்து கொண்டு இருந்த ஒரு அறுபது வயதுக்கு மேற்பட்டவர் தானாகவே என்னிடம் மெல்ல கலாமின் நினைவாகப் பேசி ஆரம்பித்தார் .என்ன மனுசன் சார் ? வாழ்ந்தா இப்படிப் பேசும்படியாக வாழனும் சார் .பேச்சோடு பேச்சாக வி.வி.கிரி இதே பதவி முடியும்போது அள்ளிக்கொண்டு போனதையும் இதற்கு முன்னிருந்த பிரதீப பாட்டில் வண்டிக்கு பெட்ரோல் கேட்டுக் கொண்டு இருப்பதையும் நொந்து கொண்டார் இது நம் சினிமா கலாச்சாரத்தின் விளைவா தெரியவில்லை ஒருவரை நல்லவரென்று சொல்ல இன்னொரு கெட்டவரை உதாரணப்படுத்திக் கொள்கிறோமோ ? எங்களோடு இன்னும் ஒருவர் சேந்து கொண்டார் .அவர் இனி இப்படி ஒரு சிறப்பு யாருக்கும் இருக்காது என்று ஆதங்கப்பட்டார் . நாம் எப்போதுமே யாராவது நல்லவராக்கட்டும் என்றூ மட்டும்தான் யோசித்துப் பழகி விட்டோம் நாமும் அதற்குத் தகுதி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பயம் விடாது துரத்திக் கொண்டேதானே இருக்கிறது என்ன செய்ய ?

அவர்கள் கூட என்னவோ பரவாயில்லை இங்கு .அவர் புதைக்கபடும் முன்னே எத்தனை விமர்சனங்கள் ? பேச்சு உரிமை இருக்கிறது என்ற ஆவேசத்தில் ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் மரணதிற்கான  அடிப்படை அஞ்சலி கூடத் தெரியாமல் விமர்சிப்பதுவும் பேசுவதுவும் அதை எந்த வித கூச்சமும் இல்லாமல் ரேட்டிங் எகிறலுக்காக சில மீடியாக்கள் ஹைலைட் பண்ணுவதுவும் எப்போது மாறுமோ தெரியவில்லை. பாகிஸ்தான் அணு வி்ஞ்ஞானி அப்துல் காதர் கான் அப்துல் கலாம் ஒன்றும் மாபெரும் விஞ்ஞானி கிடையாது என்றூம் அவர் எல்லா விஞ்ஞானிகளையும் போல சாதாரண விஞ்ஞானிதான் என்று கூறியிருக்கிறார்.இதைச் சொன்ன இவரை வைத்துதான்  பாகிஸ்தான்  அணு ஆயுதச் சோதனையையும் நடத்தியது. இதே கானை தேசதுரோகம் செய்து விட்டார், நாட்டின் அணு ஆயுத ரகசியங்களை விற்று விட்டார் என்று கூறி பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலிலும் வைத்தது.அப்படி எதுவும் அரசாலோ நாட்டு மக்களாலோ எந்த குற்றமும் அற்ற அவரை விமர்சிக்கும் முன் அதுவும் அவர் உடல் அடக்கம் செய்யும் முன் பேசுவது எவ்வளவு மனிதாபினம் உள்ள செயல் ?

 தன் வாழ்வின் திருப்தி என்று கலாம் நினவு கூறும் போது ,பொக்ரானில் அணு குண்டு சோதனையையோ அக்னி ஏவுகணை பற்றியோ சொல்லவில்லை.  அதற்கு பயன்படுத்தப்படும் காம்போசிட் மெட்டீரியல்களை ரீ சைக்கிள் செய்து இந்த கேலிப்பர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களைத் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் செயற்கை கால் நான்கு கிலோ எடையில் தயாரிப்பதை 400 கிராம் அளவுக்கு எடை குறைக்கும் யுக்தியை கண்டுபிடித்ததும் ,  அதை அணிந்து கொண்ட குழந்தைகள் நடப்பது மட்டும் அல்லாமல் வேகமாக ஓடினர். இதனைப் பார்த்த அவர்களது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அப்போது கலாம் பெரிய திருப்தி என்கிறார் என்பதை நினத்துப் பாருங்கள்

அது மட்டுமா இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் இப்போது இரத்த குழாய்களுக்கு ஒரு ஸ்பிரிங்கை வைத்து குழாயை பெரிதாக்குகிறார்கள். அதை ஸ்டென்ட் என்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் இந்த ஸ்டென்ட் விலை அதிகமாக இருந்தது.  1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இந்த ஸ்டென்டுக்கு அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது.இதே போல கால் மூட்டு அறுவை சிகிட்சையின் போது பயன்படுகிற ஸ்டீல் பிளேட்டுக்களுக்கு மாற்றாக சிரமங்கள் குறைந்த புதிய வகை பிளேட் ஒன்றையும் கலாம் கண்டு பிடித்தார்.அது ஒன்று போதும் .அப்படி ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் அபிப்ராய பேதம் கொண்டால் மக்கள் உங்களை மன ஊனம் கொண்டதாக நினைத்து விடும் அபாயம் உண்டு .சுதாரித்துக் கொள்ளுங்கள் .பிரபலங்களை தாக்கிப் பேசி பெயர் வாங்கிக் கொள்வது அரசியல் சாத்தியமாக இருக்கலாம் .

விவேக் தனது இரங்கல் பேச்சின் போது கலாம் அணிந்து கொள்ள இரண்டே கோட்டுகள்தான் வைத்திருந்தார்.அதில் ஒரு கோட்டில் பின்புறம் லேசாக தையல் விட்டிருக்கும்  என்றார் .நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன் எனது பணியில் எப்போதுமே இறைவனை ஒரு பங்குதாராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன். என அக்னிக் சிறகுகளில் அவர் குறிப்பிடுகிறார்.அதனால்தான் அந்த எளிமையால்தான் அவர் மஹாத்மா கலாம் ஆனார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் போராடிய அந்த எளிய குடும்பத்திலிருந்து விஞ்ஞானியாகவும் ,முதல் குடிமகனாகவும் உயர்ந்தவர் .அவர் சில்வர் ஸ்பூன் பிறப்பல்ல .அப்படிப் பிறந்து பீரங்கி பேர ஊழல் செய்தவர்களைக் கூட அவர்கள் இறப்பிற்குப் பிறகு இந்தத் தேசம் மறந்து விட்டது.ஆனால் முழுமையான வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த பேராத்மாவைப் பற்றி மாற்றுக் கருத்து வைத்து இருந்தால் உங்களையே உங்களால் மன்னிக்க முடியாத ஒரு பாவத்தை செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

தன் தாயை நினைவு கூறும் வகையில் அவர் எழுதிய கவிதையை படியுங்கள் அவர் எங்குப் போயிருக்கிறார் என்பது புரியலாம் .

''தாய்'' என்ற தலைப்பிலான அந்தக் கவிதை....
 ''அம்மா... எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள். எனக்கு வயது 10 அது ஒரு பௌர்ணமி தினம் என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும், அம்மா நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்.. திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள் என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன குழந்தையின் வலிகளைத் தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!'' 
ஓடி ஓடி உழைத்துப் படிக்கும் மகனை வருடியபடி கலாமின் தாயார் கண்ணீர் விட அந்தக் கண்ணீரின் வெப்பத்தில் எழுந்து தனது தாயாரைப் பார்த்த நினைவில் கலாம் எழுதிய கவிதை இது... அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் கலாம்...

 ''உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே, இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா''! அன்பு நிறைந்த தன் தாயாரைப் பார்க்க கலாம் போய்விட்டார் .


இனி எதுவும் வேண்டாம் என்ற அந்த மாமனிதருக்கு இனியாவது இளைப்பாறட்டும் .அவர் பிறந்த நாளைத் தேசிய மாணவர் தினமாகவோ அல்லது இளைஞர் எழுச்சி நாளாகவோ கொண்டாடுங்கள் .அவருக்குத் தபால் தலை வெளியிடுங்கள் ,மணிமண்டபம் கட்டுங்கள் .அவர் வீட்டை அருங்காட்சியகமாக ஆக்குங்கள்.அவரில் பெயரில் விருது வழங்குங்கள் , இன்னும் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யுங்கள்.அதெல்லாம் காலத்தின் கரங்களால் பழசாகி விடலாம் ஆனால் அவரின் மரணத்திற்காக அவரை நேரில் பார்க்காத பிஞ்சு குழந்தைகள் மற்றும் மெழுகுவத்தி சுடர் முன் பள்ளிக்குழந்தைகள் விட்ட கண்ணீரும் , அவர் மரணத்தைச் சொந்த வீட்டு மரணமாக நினைத்த ஒவ்வொரு மனமும் போதும் அதற்கு எதுவும் இனி சமம் இல்லை .அப்படியே அதற்கும் மேல் எது இருந்தாலும் அவர் அன்பு அம்மா பார்த்துக் கொள்வார்கள் ,

வியாழன், 23 ஜூலை, 2015

அவளும் மனசோடுதான் பிறந்தாள்


கிழக்குக் கோவிந்தாபுரத்தில் எங்கள் வீடு அந்தத் தெருவில் சேவல் பண்ணை

போல ஐந்து பசங்க உள்ள ஒரே வீடு .இதில் ஒரு துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த ஏரியாவில் எங்கள் தெருவில் மட்டும் இளம் பெண்களுக்குப் பற்றாக்குறை !.ஒரே ஒரு வீட்டில் அந்தத் தெருவுக்கே இரண்டு பெண்கள் மட்டும் இருந்தார்கள் அது டீச்சர் வீடு. அதில் இருந்த சின்னப் பெண் எங்கள் அம்மாவிடம் வந்து ஏதாவது பேசும் சாக்கில் உள்ளே அடிக்கடி உள்ளே எட்டிப் பார்துக் கொண்டு பேசும் .வலிய அது பார்க்கும் விதமே கொஞ்சம் குழப்பமாக இருக்கும் அதனால் அது எங்கள் பட்டியலில் கடைசி வரை வரவே இல்லை .

                        அந்தச் சமயத்தில்தான் அந்தப் பெண் எங்கள் தெருவுக்குக் குடியேறினார்.என்னை விடப் பல வயது மூத்தவர் .ஆனால் மிக அழகாக இருப்பார் .வந்து சில வாரங்கள் ஆன பிறகுதான் அந்தப் பெண் எப்போதாவது தெருவில் நடந்து வருவார்.அவர் வரும் போது .வைத்த கண் மாறாமல் எல்லோரின் கவனமும் அந்தப் பெண் மேலே நிலைத்து இருக்கும் .பெண்கள் எல்லோரும் ஏனோ தங்கள் கை வேலையை அப்படியே விட்டு விட்டுக் கூடக் கவனிப்பார்கள் . ஆண்கள் மெனெக்கெட்டு பார்ப்பதற்குப் பல காரணம் இருந்தாலும் பெண்கள் அவ்வளவு ஆர்வமாய்ப் பார்ப்பதற்கான காரணம் 20 வயதான எனக்கு அப்போது எனக்குப் புரியவில்லை என்னை விட அதிக வயதான எனது நான்கு அண்ணன்களுக்கும் இதே போல அதன் காரணம் புரியவில்லை ..
       
           அந்த வீட்டில் ஒர் வயதானப் பெண்மணிப் பகல் நேரத்தில் வந்து போவார் .தெருவில் வரும் காய்கறி வாங்குவதால் அந்த வயதானப் பெண்ணுக்குச் சமையல் மட்டுமே அங்கு வேலை என்று தெரியும் ஆனால் அந்தப் பெண்ணை ஏதோ தூரத்துச் சொந்தம் என்பதாகாவும் அந்த வயசாளிப் பெண் சொல்லிக் கொண்டதாக எதிர் வீட்டு விஜி அத்தைச் சொல்வார்கள் சில வாரங்கள் இப்படிப் போன பிறகு மாலை நேரங்களில் தெருவின் முனையில் ஒரு ஆட்டோ வரத் தொடங்கியது . எப்போதாவது கார் வந்தது . ஆட்டோ வரும் போது அதிலிருந்து , 25 வயதுக்குள் இருக்கும் ஒருவன் வந்து அந்தப் பெண் வீட்டுக்குள் சென்று விட்டு உடனே திரும்பி வந்து ஆட்டோவில் காத்து இருப்பான் ஆட்டோவில் நின்று கொண்டு இருக்கும் போதும், ஏதாவது பாட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கும். சுமார் அரைமணி நேரத்திற்குள் மிக அழங்காரமாய் அந்தப் பெண் கிளம்பிப் போகும் போது பலர் பார்த்து இருக்கிறோம் .அந்தப் பெண் திரும்பி வரும் போது யாரும் பார்த்ததில்லை.மிக இரவானப் பிறகே திரும்புவார் .

     ஓரளவுக்கு அந்தப் பெண் பற்றித் தெருப் பெண்கள் கூடிக் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.அந்தத் தெருவில் அந்தப் பெண் வரும் போது மட்டும் பெண்கள் ,வாசலில் வண்டித் துடைக்கும் தங்கள் கணவன்மார்களின் கவனம் அங்குப் போவதை கண்டித்தார்கள் .அதுவரை அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியாத ஆண்கள் பல பேர் ஆர்வமாக விசாரித்து அதன் பிறகு இன்னும் அதிகமாகக் கவனிக்கவும் அதுவே பின்னாளில் காரணமாகவும் இருந்தது வேறு விசயம் .”பெர்முடா ட்ரே ஆங்கிள்” ( Bermuda_Triangle)போல அந்தப் பெண் ஆண்களுக்கும் ரகசிய முடிச்சாயும் இருந்தார் ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இனம் புரியாத உற்சாகமாகவும் இருந்தார். சமூகத்தில் மனிதர்கள் எப்போதும் தான் தவறு செய்யாத போது அதை மற்றவர்கள் மூலம் தங்கள் எண்ணங்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது எங்கோ படித்த ஞாபகம் .அந்தப் பெண் சமூகத்தின் சிலரின் ஆழ் மன எண்ணங்களின் தோற்றமாகவே பட்டார்

           வயதுக்கு உரிய அத்தனை எண்ணங்களும் எனக்கு அந்தப் பெண் மேல் தனியாக இருந்தாலும் , பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் கதையில் வரும் விஸ்வநாதன் சந்திக்கும் வசந்தா ( பக்கம் 107 -117 ) தன் வாழ்க்கைப் பற்றிப் வேதனை மிகுந்த பேசுவதுவும் ”தேவுடு சேசின பெள்ளியிது மா தேவனின் லீலையிது கலகல லாடே நவ்வுணுலோலா கண்ணீர் எந்துக்கோ” என்ற வரிகளே ஞாபகத்தில் வந்து நிற்கும்.

          அதைப் போல நான் சின்ன வயதில் கிராமத்தில் ( இப்போது திண்டுக்கல் -ஹவுசிங் ஃபோர்டு பகுதி ) வசித்த போது, பக்கத்து வீட்டில் ஆண்டாள் அக்கா என்ற என்னை விட ஐந்து வயது மூத்தவர் இருந்தார் .என் மேல் கொள்ளைப் பிரியமாக இருப்பார் .அதிக நேரம் எங்கள் அம்மாவுக்கு உதவியாக எங்களுக்குச் சகோதரி போல இருப்பார் .அவருக்குக் கல்யாணம் ஆனப் பிறகும் அதே கிராமத்தில்தான் இருந்தார் .கணவர் அங்குள்ள பூர்வீக வயல் வெளியில் விவசாயி .
அரசு அவர்கள் வயல் வெளியை ஹவுசிங் ஃபோர்டுத் திட்டத்தில் எடுத்த போது தாத்தன் முப்பாட்டன் சொத்தின் அருமை தெரியாமல் சதுர அடியைச் சில ரூபாய் கொடுத்த அரசின் விலையை அப்போது  மிகப் பெரிய பணமாகப் பெற்றுக் கொண்டு விவசாயம் மட்டுமே அறிந்த அவர் வேறு வேலைத் தெரியாமல் ஏதோ ஒரு சிறு திருட்டில் சம்பந்தப்பட்டு யாரோ ஒருவருக்காகப் போலிஸால் அடிபட்டு ஆறு மாதத்தில் இறந்து போனார் .அந்தப் பெண் அந்தச் சமயத்தில் இப்போது , இந்த எங்கள் தெருப் பெண் மாதிரி, அலைந்துச் சில வருடங்களில் ரகசிய நோயால் பாதிக்கப் பட்டு இறந்து போனார் .
   
        அந்த ஞாபகமும் அடிக்கடி வந்து, இந்தப் பெண் பேரில் ஒரு வித பரிதாபத்தையும் உருவாக்கி விட்டது.இதல்லாமல் அந்தப் பெண்ணால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாத போது யாருக்கென்ன ? அவரை உட்கார வைத்து ஒரு நேரம் சாப்பாடுப் போட கூடத் தகுதி இல்லாத யாரும் அவர் பற்றிப் பேச உரிமை இல்லாத போல்தான் பட்டது .

              ஆனால் இந்த வாழ்க்கையும் அந்தப் பெண்ணுக்கு நிலைக்கச் சில பேர் விடவில்லை .அந்தப் பெண் ஒரு ஆளும் அரசியல்வாதியால் ஆக்கிரமிக்கப் பட்டார் .பல நாள் பகல் இரவு அனுப்பாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்து இருக்கிறார்கள் பிறகு அங்கு நடந்தது என்ன ? எப்படி நடந்து கொண்டார்கள் ? என்று தெரியவில்லை.மனம் வெறுத்துப் போய் ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு உடல் முழுதும் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தன்னை எரித்துக் கொள்ள முயன்று வலி தாங்காமல் தெருவில் வந்து கத்திக் கதறி உருண்டார் .பல பேர் ஓடிக் காப்பாற்ற முயற்சித்து மருத்துவமனைக் கொண்டு சென்றார்கள் .ஏற்கனவே மனதால் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்ட அந்தப் பெண் உடல் , இறந்த பிறகு வீடு வரை கூட வரவில்லை ஏதோ ஓர் அனாதையைப் போல மீதி உடலை எரித்து விட்டார்கள் .சம்பிரதாயமாக ,காவல் துறை இறந்துப் போன அந்தப் பெண்ணைத் தற்கொலை என்று தனது கேஸ் ஃபைலை  அவள் வாழ்வைப் போலக் கொன்று மூடிவிட்டது  !

           இந்த பதிவுக்கு ஒரு படம் தேடும் போது  எழுத்து.காம் பகுதியில் - விருத்த இலட்சுமி எழுதிய விலைமாது   ( http://eluthu.com/kavithai/115304.html )
கவிதை   இடறியது .
 
நான் ஒரு வியாபாரி -அதில் 
நானே விலை பொருள் ! 

பல ஆண்களின் 
பொழுது போக்கு நான் !! 

எனக்கென்று ஒரு 
மனம் கிடையாது 
இருக்கவும் கூடாது !! 

கட்டிலில் கிடக்கும் போது 
கட்டையாகி போகிறேன் !! 

என்னை விற்ற கணவன் 
ஆண்மை இல்லாதவன் 
என்னை தொடுபவனோ 
நேர்மை இல்லாதவன் !! 

பத்தினி நான் என்று 
உரக்க கூறுவேன் 
படக்கென்று நானே சிரிப்பேன்!!


புதன், 22 ஜூலை, 2015

குழந்தைகள் தீவிரவாதப் படையா?

சில நாட்களுக்கு முன் நான் பார்த்த மறக்க முடியாத ஒரு சிறுவன் முகம் என்னைக் கலவரப் படுத்தி விட்டது .அது சிரியாவின் ராணுவ அதிகாரியைப் பிடித்துச் சென்ற சிரியாவில் ராணுவ வீரரின் தலையை ஒரு சிறுவன் தலையை வெட்டும் வீடியோ, ஐ.எஸ். அமைப்பு மூலம் வெளியிட்டுள்ளது.இருக்கிறது ஆனால் நான் பார்த்தது மூன்று படங்கள் மட்டுமே இதுவே என்னை உலுக்கிவிட்டது .சில நாளாக இந்தப் படமும் அந்தச் சிறுவனின் முகமும் நினவில் முள்ளாய் மேலே வந்து வந்து வலிக்கச் செய்கிறது .அதோடு அந்த ராணுவ அதிகாரியின் வாயில் ஏதுவும் கட்டப்படாத நிலையில் மரணத்தைச் சந்திக்கத் தயாராகும் முகம் இரண்டும் மரணத்தையும் - வாழ்வையும் மிகச் சமீபத்தில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமாகக் காட்டுகிறது

உலக வன்முறைக்கு யாரெல்லாம் காரணம் எதுவெல்லாம் காரணம் என்ற பட்டியல் எல்லோருக்கும் தெரியும் அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது .அதிகக் காரணமாக வளம் உள்ள நாடுகளைக் குறிவைத்து அவர்களின் பலவீனத்தைக் குறிவைத்து வன்முறை தீ பரவுகிறது .இருந்தாலும் கடந்த டிசம்பர் 16 ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் ஒன்றுமறியாத 132 குழந்தைகள் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப் பட்ட செய்தியை வன்முறையை வளர்த்த நாடுளே தவறு என்று கண்டித்தன .ஆனால் இப்போது குழந்தைத் தீவிரவாதிகளை உருவாக்குவது என்ற புதிய அவதாரம் எடுத்துச் செயல் புரியும் தீவிரவாத அமைப்புகளின் நோக்கத்தை எந்தக் குறிக்கோளாய்ச் சொல்வது குழந்தைகள் என்ன செய்தார்கள் இந்தப் பூமியில் பிறந்தது அவன் தவறா ? ஏற்கனவே நம் பூமியைக் காற்றை,புவிப்பாதையை,கடல் நீரை, மாசு படுத்த எல்லாத் திட்டங்களையும் வகுத்து விட்டோம் .வருங்காலத்தைத் தொலைக்க மனிதனால் மட்டுமே முடியும் என்று மற்ற மிருகங்களுக்குச் சவால் விட்டு வருகிறோம் .அந்தப் பட்டியலில் குழந்தைகள் தீவிரவாதம் படை ஒன்றா ?

என்ன செய்தார்கள் குழந்தைகள் ?
இவர்களை வன்முறையாளார்களாக மாற்றி விட்டால் உங்களின்  சுதந்திரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை ஒரு மதமோ மனிதமோ ஒத்துக் கொள்ளுகிறதா ? அன்பை மட்டுமே போதிக்காத மதம் இந்தப் பூமியில் இருக்கிறது என்றால் நூறு மில்லியன் டாலர்ச் செலவில் வேற்று கிரகவாசிகளைத் தேடும் ரஷ்யக் கோடீஸ்வரர் யூரி மில்னர் திட்டத்தில் அவர்களெல்லாம் சேர்ந்து வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று குடியேறுவதே உத்தமம்.இதுக் குழந்தைகளை தெய்வமாகக் கொண்டாடும் உலகம் .பாவம் அவர்கள் கையில் ஆயுதங்களுக்கு வேலைத் தராதீர்கள் .உங்களால் முடிந்தால் அவர்களை விட்டுவிடுங்கள்.இதைத்தான் இந்த  உலகம் உங்களை வேண்டிக் கொள்கிறது.

வியாழன், 2 ஜூலை, 2015

பாண்டிச்சேரியின் கலாட்டா கச்சேரி


ஒவ்வொருவருக்கு வாழும் ஊர்த் தவிர வேறு ஒரு ஊர் மேல் கண் இருக்கும் அதில் எனக்குப் புதுவையும் ஒன்று .வெகு நாளாய் இங்கு வாழ வேண்டும் என்ற ஆசையும் கனவும் துரத்தியது .ஒருவேளை திண்டுக்கல் போன்ற தண்ணிப் பஞ்சம் நிலவும் ஊரிலிருந்து வந்ததால் கண்ணுக்கு எட்டும் தூரம் அங்குக் கடல் பார்த்த மயக்கமா ? தெரியவில்லை .

                  வெகு நாளாய் எனக்கு இந்த விசயத்தில் ஒரு சந்தேகம் கூடப் பிறந்தது போல எனக்கு வந்து , வந்து போகிறது.அது நாம் ஒவ்வொருவரும் எந்த ஊரில் வாழ வேண்டும் என்பதை அந்த ஊர் முடிவுச் செய்கிறதா? இல்லை நம் எண்ணம் முடிவு செய்கிறதா? இதெல்லாத்தையும் தாண்டி விதி என்று பிறப்பதற்கு முன் மண்டைக்குள் எழுதிய புரியாத சமாச்சாரம்தான் காரணமா ? தெரியவில்லை .அடுத்த ஜென்மத்தில் திபெத்தின் - டியூஸ்டே லாப்சாங் ராம்பாவைப் ( Tuesday Lobsang Rampa) பார்த்தால் விசாரிக்க வேண்டும் ..

                   இதாவது பரவாயில்லை எங்குப் போனாலும் இந்தப் பழகின பசங்கத் தொல்லை இருக்கே அது மட்டும் - விடாதுக் கருப்பு மாதிரித் தொடாமல் விட மாட்டேன்கிறது . என் நண்பரின் உடல் நலம் கருதிப் புதுவையில் சில ஆண்டுகள் தங்க வேண்டிய ( தியாக ) சூழ்நிலையால் அங்குள்ள பிவிசிப் பைப் தயாரிக்கும் கம்பெனிக்கு வேலை ஏற்பாடு செய்து இருந்தேன் .இந்த வேலையை அங்கு ஏற்கனவே தங்கிப் பணிபுரியும் ஒருவர் நண்பர் முயற்சி மூலம் நடந்து இருந்தது .ஆனால் அங்குப் போன பின் சொந்தமாய்த் தொழில் செய்யும் ஆர்வம் வந்து , அங்கு வாழ்ந்த இரண்டாண்டுக்குப் பின் ஒரு சூழலில் சிக்கி ,சின்னாபின்னப்பட்டு ஒருமாதம் முழுதும் ஒரு வேளை சாப்பாட்டுடன் அங்கேயே இருக்கணும் என்ற கொள்கையே பிரதானமாய் இருந்து ,சிறு பிள்ளைகள் செய்யும் வெள்ளாமை வீடு வந்து சேராதக் கதைப் போல நடந்ததை வேறு பதிவில் பேசவேண்டும் .

அதனால் நம்மப் பசங்க ( ஃப்ரண்சோட ஃப்ரண்ட்ஸ்தான் பசங்க ! ) ஒரு புது வருசம் கொண்டாட ஆசைப்பட்டுப் புதுச்சேரி வந்து அடித்த கூத்தை ! மட்டும் இங்கே சொல்லப் போகிறேன் .


புதுவருடத்திற்கு முதல் நாள் இரண்டு ஃபிரண்ட்ஸ் வருவதாகப் பேச்சு .நாங்கள் தங்கி இருக்க அங்கு ஒரு வீடு பிடித்து இருந்தோம் .வருபவர்களை அங்குத் தங்கவைத்து மற்ற கொண்டாட்டத்தைத் தொடங்கி மெல்ல வெளியில் போய்க் கொள்வோம் என யோசித்து வைத்து இருந்தோம் எங்கள் வீட்டு ஓனர் அங்குள்ள AFT - Anglo French Textiles மில்லில் ஒரு கட்சிச் சார்பு யூனியன் லீடர் .பேச்சுலர் என்றால் அங்கு வீடு தரத் தயங்குவார்கள்.நண்பரின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்து ( ஏமாந்துதான் ) அந்த வீட்டை வாடகைக்குத் தந்து இருக்கிறார்.

பஸ் ஸ்டாண்ட் போய் வரவேற்கப் போன போதுதான் தெரிந்தது அந்த வரவேண்டிய ரெண்டுப் பேரோட பக்கிப் பசங்க, ஆறு பேர் மொத்தமாய் வந்து இறங்குகிறார்கள் . இவர்களை எங்கள் வீடு தாங்காது . பக்கத்தில் உள்ள லாட்ஜில் (புதுவருடப் புக்கிங்கால்) மிகச் சிரமப்பட்டுச் சிபாரிசையெல்லாம் பயன் படுத்தி ஒரு டபுள் ரூம் புக் பண்ணி ’வாங்க வேண்டியதெல்லாம்’ வர வைத்துக் கொண்டாட்டதைத் துவங்கினால், பசங்கத் திண்டுக்கல் KKM நன்னாரிச் சர்பத் மாதிரி நினைச்சுகிட்டு அப்போது புதுவையில் புதுசாத் தயாராகி வெளியான கோக் மிக்ஸ்டு, ”கரிபா ரம்மை” கொட்டிச் சாய்த்து அளவில்லாமல் ஊற்றி வயிற்றை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள் .எனக்கு அப்போதுதான் ஒரு விசயம் புத்திக்கு உறைத்தது. அட நம்ம ஊர் ஹாட் ட்ரிங்ஸ் விசயம் வேறு அங்குச் சப்ளை இல்லாத இந்த மாதிரி ட்டிரிங்ஸ் ஆல்கஹால் அளவு வேறு .அளவா எடுத்துக்கலைன்னா ஒன்னு வாந்தி எடுத்து ஹேங் ஓவர் .இல்லைன்னா நிதானமில்லாம ஆளைக் கவிழ்த்து விடுமே ? அப்புறம் புது வருசம் கொண்டாடிய மாதிரிதான் .அதிலிருந்து காப்பாற்ற எல்லோருக்கும் அதே கரிபா ரம் கலரில் இருக்கும் கோக்கை அதே பாட்டிலில் ஊற்றிக் கொடுத்துச் சமாளித்தோம் .அப்படியும் சிலபேர் இரவு பதினோறு மணிக்குப் பீச்சுக்குச் சென்ற போது ’உவ்வே’ எடுக்கத்தான் செய்தார்கள் .

ஒருவழியாய்ச் சமாளித்து ரூமில் படுக்க வைத்து விட்டு .அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் ரூம் செல்லப் போன போதுதான் ஞாபகம் வந்தது மெயின் கேட் சாவி எடுத்து வரவில்லை.ஏறிக் குதிக்கக் கவுரவத்தடை மட்டுமல்ல அங்குள்ள பல வீடுகளில் புதுவருடத்தை வரவேற்கும் கலர்க் கோளங்கள் ஜோராகப் போடப்பட்டுக் கொண்டு இருந்ததும் இன்னொரு காரணம். .வேறு வழியில்லை . காலிங் பெல்லை அழுத்த (நல்ல வேளை ) தூக்க அசதியில் வெளியே வந்தது வீட்டு ஓனர் அம்மா !

                               அந்த அம்மாவிடம் ,என்னம்மா நீங்க கோளம் போடலையான்னுக் கேள்வியில் சமாளிக்க  முயற்சி செய்து தோற்றுப் போனேன் ,பதில் சொல்லாமல் அந்த அம்மாள் முறைத்துப் பார்ததைப் பார்த்தால் வீட்டை இப்போதே காலிப் பண்ணச் சொல்லும் சாத்தியம் அதிகம் இருப்பது போலப் பட்டதால் , உள்ளே போன உடனே கதவைச் சாத்தி ,லைட்டை நிறுத்தி விட்டேன். 

   காலை மூன்று இடம் அவர்களை அழைத்துப் போகத் திட்டமிட்டோம் .ஒன்று ஆரோவில் .இரண்டாவது நோணாங் குப்பம் - போட் ஹவுஸ் ,இறுதியாக அரவிந் ஆசிரமம். இதற்கு உதவியாக அங்கு எங்களைக் குடும்பத்தில் ஒருவர் போலப் பார்த்துக் கொள்ளும் நண்பரை எங்களுடன் துணைக்கு அழைத்துக் கொண்டோம் . காரணம் போட் ஹவுசில் ” கயாக்ஸ்”( Kayaks) ரகப் போட் வாடகைக்கு எடுக்க அவர் உதவி மிக அவசியமாக இருக்கும். அந்தப் போட் ஓட்டுவதை விட வாடகைக்கு எடுப்பது அவ்வளவு சிரமம்.

அப்போதுதான் வந்து இருந்த ஃப்ரண்டோட ஃப்ரண்ட் ( பசங்களில் ஒருத்தன் ) அந்த நட்புக் கட்டுச் சோற்றுக்குள் இரண்டு பெரிச்சாலியைக் கட்டிக் கொண்டு வந்த விசயம் புரிந்தது .என் நண்பரை மட்டும் அழைத்துக் அவன் மெல்ல ரகசியம் பேசினான். என்ன விசயம் என்று நண்பரிடம் கேட்டேன் அப்புறம் சொல்கிறேன் என்றார் .

கயாக்ஸ் ரகப் போட்டுக்கு எப்போதும் லைஃப் ஜாக்கெட் அவசியம் கொடுப்பார்கள். கடலோடு நேரடியாகத் தொடர்புடைய அந்தப் போட் ஹவுசில் சில சொல்லப் படாத அபாயங்கள் இருப்பதால் நீரில் குதித்து நீந்த அனுமதியில்லை இதெல்லாம் சொல்லிவிட்டுப் போட் கொடுத்து விட்டு ஓட்டத் தெரியுமா என்பதையும் கவனித்தார்கள் .அதனால் அதில் தேர்ச்சிப் பெற்ற புதுவை நண்பரைக் கிளப்பச் சொல்லி விட்டு நாங்கள் பெடல் போட் எடுத்துக்கொண்டு பின் தொடர்ந்தோம் .வந்த பக்கி ஒன்று நீச்சல் தெரியும் என்ற தெனாவெட்டில் நீரில் குதிக்க , எப்படியோ கரையிலிருந்து கவனித்த போட் ஹவுஸ் நிர்வாகம் மோட்டார்ப் போட்டில் வந்து எச்சரிக்கைச் செய்து, மேலேற செய்ததோடு இனியும் மீறினால், படகு உடனே கரைக்குத் திருப்பப் படும் என்று ஸ்மக்ளிங் கேங்கைச் சொல்வது போலக் கடுமையாக எச்சரித்தார்கள்.புதுவை நண்பர் என்னை முறைத்துப் பார்த்தார் .நான் வழக்கம் போல எந்தச் சர்க்கசுக்குச் சம்பந்தமில்லாத கோமாளி மாதிரி ஒரு சிரிப்புச் சிரித்துச் சமாளித்தேன்.வேறு என்ன செய்யக் குரங்குக்கு வாழ்க்கைப் பட்ட பிறகு பேன் பார்க்கத் தலையைக் கொடுக்க முடியாது என்றாச் சொல்ல முடியும் ?


ஒரு வழியாய் மதியம் மூன்று மணிக்குத் தண்ணீரில் இருந்த கண்டத்திலிருந்து தப்பித்து, மீண்டு , புதுவை லாட்ஜ் ரூம் வந்தோம் . அடுத்த ப்ளான் பற்றி நண்பரும் புது நண்பரும் கிசுகிசுத்து விட்டு என்னை வா என்று அழைத்துக் கொண்டு புதுவை நண்பர் வெளியே வந்தார் .எங்கப் போறோம் என்றேன் .உங்க பசங்க இங்க நடக்கிற காபரே டான்ஸ் பார்க்கணுமாம் புக் பண்ணி விட்டு வருவோம் வா என்றார்ச் சிரித்துக் கொண்டே .எனக்குப் பக்கென்றது .அது இங்கு நடப்பதை நானே வந்த இரண்டாவது வருடம்தான் கேள்வி பட்டேன் .ஆனால் இந்தப் பக்கிப் பண்ணாடைகள் முதல் தடவை வருவதற்கு முன்னாலேயே தெரிந்துத் திட்டமிட்டு வந்து இருக்குக.அடப்பாவிகளா !


மாலை ஐந்தரைக்கு மணிக்கு முதல் ஷோ.நான்குப் பக்கிகள் கிளம்ப எனக்கு ஏற்கனவே ஒரு பயம் இருந்ததால் அங்குப் போய் ஏதாவது கலாட்டா பண்ணி அடி வாங்கி விடக்கூடாது என்பதற்காகவும் , ’இந்த மாதிரி’ விசயத்திற்குக் கிளம்பும் போது கடைசி நேரத்தில் நானும் வருகிறேன் என்று சில தருமன் கூடத் துச்சாதனாவது நடைமுறை சகஜம் என்பதால் ஐந்து டிக்கெட் வாங்கச் சொன்னேன் .அது வாங்கும் போது புதுவை நண்பர் சந்தேகத்தோடு நீயுமாப் புரூட்டஸ் ? என்ற பார்வையில் பார்க்க , ( நான் பின்னாளில் பெரிய பதவிக்கு வரும் போது எதிர்கட்சிகள் இதைப் பெரிய பிரச்சனையாக எழுப்பலாம் என்ற காரணத்தால் ) அவசரமாக மறுப்பு அளித்தேன்.புதுவையின் இன்னொரு நண்பர் பல தடவை அங்குப் போனவர் .நாங்கள் இப்போது தங்கி இருக்கும் லாட்ஜ் மானேஜரும் கூட .அதனால் அவரைக் கூட அனுப்ப என்றேன் .அவர் லாட்ஜ் மேனேஜர் என்பதால் புதுவைப் போலிசும் மேற்படி ஷோ நடக்கும் ஹோட்டலில் நண்பர்களும் உண்டு என்ற என் சிபிஐ ரேஞ்சுக்குப் பாதுகாப்பு வளையத்தை விளக்கிச் சொன்னேன் நண்பரிடம் .மேலும் அவர்தான் இந்த ஆண்டு எனக்கு அங்கு இது நடப்பதாகச் இந்தத் தகவலை( மிகத் தாமதமாகச் ) சொன்னவர் .!


 ஒருவழியாய் அந்த இரண்டு மணி நேரக் காட்சிக்கு அனுப்பிவிட்டு நாங்கள் பீச் போனோம் .இந்தியாவிலேயே அனேகமாகக் காந்தியும் நேருவும் நேரெதிராகச் சிலை வடிவில் (இப்போதும் )நிற்கும் ஒரே இடம் புதுவையாகத்தான் இருக்கும் . அங்குச் சட்டச் சபைக்கும் உயர்நிலைக் காவல் அலுவலகதிற்கும் இடையில் உள்ள ஒரு ஃபிரென்ஞ் புண்ணியவான் 99 வருடம் ’பார்’ நடத்த மட்டுமே நடக்க எழுதி வைத்த ’குவாலித்தே’ (Qualithe ) கடைக்குப் போய் ஊரிலிருந்து வந்து இருப்பவர்கள் வசம் ஊருக்குக் ’மேற்படிகளை’ கொடுத்து விடத் திண்டுக்கல்லில் சில கிடைக்காத அயிட்டங்களை வாங்கிக் கொண்டு வரும் வழியில் , வந்து இருப்பவர்கள் திரும்பிச் செல்லப் புதுவைப் போக்கு வரத்துக் கழகத்தில் (நேரடியாகத் திண்டுக்கல் போய் இறங்க) முன் பதிவு செய்து விட்டு வந்தோம்.

            நாங்கள் போகும் முன்னரே அவர்கள் ஐவரும் லாட்ஜ் ரூமிற்கு இருந்தார்கள் .இந்த மாதிரித் தப்பு விசயங்களுக்கு முதலில் போய் வந்தவர்களை (ஒரு பொறாமையிலும்) உற்றுப் பார்ப்பது - போகாதவர்கள் வழக்கம் .அப்படி நான் பார்த்தப் போது பசங்க மத்தியில் ஒரு சுவாரசியம் இல்லை .ஏனென்று அவர்களுடன் கூடப்போன இன்னொரு புதுவை நண்பரைப் பார்த்தேன் .அவர் என் பார்வையின் அர்த்தம் புரிந்துக் கொண்டவர் போல ஒரு அபாயகரமான குறும்புப் புன்னைகையும், நமுட்டுச் சிரிப்புடன் விஷமமாகச் சிரித்தார் அது என்னவோ செய்தது எனக்குள்ளே .எதாவது அங்கும் ஏடாக் கூடாமா ?


அவரை வெளியில் அழைத்துக் கொண்டு வந்து என்னவென்று ஆவலாய் விசாரித்தேன் .முதலில் அடக்கி வைத்த சிரிப்பைக் கொட்டித் தீர்த்த அவர் மெல்லக் கேட்டார், உங்க ஊர்ல நீ மட்டும்தான் ஒரு மாதிரியா ? இல்லை எல்லாரும் இப்படித்தானா? 
நான் எதுவும் புரியவில்லை என்னைவிடச் சீனியர் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பது போல (பாவனையாக) முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தேன் . 

அவரே தொடர்ந்தார். 
உள்ள ஷோ ஆரம்பித்த அரைமணியில உங்க பசங்க ரெண்டுப் பேர் வெளியிலப் போறேன்னு நிக்கறானுக .அப்படிப் போக அனுமதி இல்லைன்னுச் சொன்னதுக்கு அதுல ஒருத்த அழுதுட்டான் .எனக்கு ஒன்னும் புரியிலச் சரின்னு அங்க நம்ம மிசே (Monsieur) க்கிட்டச் சொல்லி வெளியிலக் கூட்டிட்டு வந்து என்னப்பான்னு விசாரிச்சா , 

சார் இங்க ஆடுறவங்கப் பாவம் சார் அவங்க கூடப் பிறந்தவங்க யாராவது பார்த்தா நம்ம வீட்டுப் பொண்ணு இப்படி ஆடிச் சம்பாதிக்கிதுன்னு தெரிஞ்சா எவ்வளவு மனசுக் கஷ்டப் படுவாங்க ? அதான் அழுகையா வந்துருச்சு அப்படின்றானுக என்றார். 


அவர்கள் எல்லோரும் பஸ் ஏறிப் போன பின்னும் பல மாதம் இதை வைத்தே என்னை எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிக் கிண்டலடிப்பார் .பல ஆண்டுகள் கழித்து நான் புதுவைக்கு ஒரு போன போதும் கூட அவர் அந்தப் பசங்க அப்போது அழுத மாதிரி நடித்துக் காண்பித்தார் . சுற்றி இருந்த எல்லோரும் சிரித்தார்கள் ! 
அவர்களோடு நானும் சிரித்தேன். 
ஆனால், 

அங்கு என் சிரிப்பின் காரணம் மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை!