வணக்கம் .
வெகுநாளாகிவிட்டது உங்களுக்கு கடிதம் எழுதி . நேற்றைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை .அதர்க்கு பதிலாக இந்த பதிவை எனது பரிசாக சமர்ப்பித்து கொள்கிறேன் .
இன்று கூட கோர்வையாய் சில எழுத்துக்களாவது எனக்கு வருகிறது என்றாள் அதர்க்கு காரணம் தங்கள் எழுத்தின் மேல் இருந்த தீவிரமும் ,ஆழ்ந்த கவனிப்பும்தான் .ஒரு முறை உங்களை படிக்கும் ஆர்வத்தில் எனக்கும் எழுத வருமா என்று சோதிக்கும் சுய ஆராய்ச்சியில் செய்த முதல் முயற்சி வினோதமானது .!
ஆம் .நெருங்கிய நண்பரின் முறைப்பெண் 17 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் .தாய் மாமனாகிய எனது நண்பருக்கு அவள் மணம் பேசப்படாமல் மறுக்கப்பட்டு வேறு ஒருவருக்கு மணம் முடிக்க முயற்சி செய்வது அறிந்தவுடன் ,வைகுண்ட ஏகாதசி அன்று தாய் மாமன் சீராக என் நண்பர் வீட்டில் கொடுத்த சேலையை உடல் முழுதும் சுற்றி, சேஃப்டி பின் போட்டுக்கொண்டு,தனது வீட்டு மனிதர்கள் சகலரும் வயலுக்கு போன பின், வெகு நேர்த்தியாய் வீட்டு உத்திரத்தில் கயிறு இட்டு தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனாள் .
நண்பரும் அவர் வீடும் இது தாங்க முடியாமல் மனம் உடைந்து, கதறி அழுததை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை .என் வீட்டுக்கு வந்து, நண்பரை ஆறுதல் படுத்த ஏதாவது செய்ய வேண்டும் நினைத்து வெகு நேரம் உங்களின் ’இரும்பு குதிரைகள்’ படித்து விட்டு ,( அப்போது எனது வழக்கம் - யாருக்காகவாவது கடிதம் எழுத நினைத்தால் கூட சிறிது நேரம் உங்களின் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில பக்கங்களையாவது படித்து விட்டுத்தான் எழுதுவேன் ) இறந்து போகும் முன் அந்த தங்கம் என்ற பெயருடைய பெண் , நண்பரின் குடும்பத்திர்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்து அதில் இருந்தால் அதில் என்ன சொல்லி இருப்பாள் என்பதாக ஒரு இரண்டு பக்க கடிதம் எழுதினேன் .அதை அடுத்த நாள் நண்பரை தேடி கொண்டு போய் வீட்டுக்கு வெளியே வர வைத்து ,தெரு விளக்கில் படிக்க வைத்தேன் .சில பாராக்கள் தாண்டவில்லை என்னை பார்த்தார்.மீண்டும் தொடராமல் நாளை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு ,வீட்டுக்குள் போய் விட்டார் .
அடுத்த நாள் மாலை அவர் என் வீட்டுக்கு வந்து ,உன்னை அம்மா பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் வா என்று அழைத்தார் .வீட்டுக்குள் போனவுடன் அம்மாவும் அவரின் தங்கைகள் இருவரும் என்னை வெகு வினோதமாக பார்த்தார்கள்.பெரிய தங்கை முதலில் கண் கலங்கினாள் என்னை விட அவள் ஒரு வயதே இளையவள் .அம்மாவும் லேசாக கண்கள் கலங்க ,ஏண்டா தங்கத்தை ( இறந்த பெண்ணை ) நீ பார்த்ததே இல்லையே அப்புறம் எப்படிடா அவள் பேசற மாதிரியே அச்சா எழுதின ? என்றதும் அப்போதுதான் புரிந்தது என் ஆறுதல் கடித முயற்சியின் விளைவை.அப்புறம் அவர்கள் வீட்டில் நான் ஒரு மகனாக மாறிபோனது அந்த ஒரு கடிதம் தந்த உணர்வுதான் .
இன்னும் பல நண்பர்கள் கால சூழலில் பிரிந்து ஊர் மாறி பணி புரிய நேரிட்ட போது எங்கள் கடிதங்களே ஆறுதல் .இன்றும் அடுத்த தலை முறையான நண்பர்களின் குழந்தைகள் ,அப்போது நாங்கள் எழுதி கொண்டதை படித்து நட்பாய்,மரியாதையாய் பார்க்கும்போது மனதுக்குள் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம் .
சார் உங்கள் ஒவ்வொரு எழுத்து மாற்றத்திலும் உங்களோடு இருந்தோம் .எழுத்து தாண்டி சினிமா பிரவேசம் ,ஆன்மீக தொடர்பு அதில் நீங்கள் சொல்லித்தான் அந்த மகான் ராம் சுரத் குமாரை பார்த்து ஆசீர்வாதம் பெற்றோம் .
போன வாரம் என் தாயின் மறைவுக்கு பின் ,கலைந்து கிடந்த புத்தக அலமாரியை சரி செய்யும்போது உங்களின் முதல் கடிதம் கடிதம் கிடைத்தது.எழுத்தின் மூலம் மனதின் சூட்சுமத்தை உங்களிடமும் அறிவியலின் பிரமிப்பை சுஜாதாவிடமும் கற்று கொண்டு வளர்ந்த நாங்கள் இந்த உலகத்தின் எந்த மூலையிலும் தோற்று போக மாட்டோம் என்பதை கற்று கொண்டோம் .
நன்றி .
என்றென்றும் அன்புடன் ,
சுகி..