பேட்டரியை உருவி...
யாரையாவது நான் ,என் போனிலிருந்து அழைத்தால் அவர்கள் பேசி முடித்தவுடன் அவர்களாகவே தொடர்பை துண்டிக்கவில்லை என்றால் என் போனில் இருந்து துண்டித்து கொள்ளும் தொடு திரை (End button ) வேலை செய்யாது . இன்னும் சொன்னால் தவறுதலாக ஒருவரை கூப்பிட்டு அவரை தொடர்புகொள்ள வேண்டாம் என்று துண்டிக்க நினைத்தால் கூட முடியாது ஒரே வழி பின்புற கவரை கழற்றி பேட்டரியை உருவினால் மட்டுமே சாத்தியம் .
விசிடிங் கார்டு.
குழந்தை பிறக்கும் போது கையை மூடி பிறப்பது , அதன் இறப்பு தேதி குறிக்கப் படாத ரிட்டன் டிக்கெட் போன் வாங்கி வருவதாக வேதாத்ரி மஹரிசி சொல்வது போல - புது போன் வாங்குபோது பில்லோடு சர்வீஸ் சென்டர் விசிடிங் கார்டும் இருந்ததன் காரணம் இப்போதுதான் புரிந்தது .
உத்திரவாத காலம் !
சரி போனை எடுத்து கொண்டு விசிட்டிங் கார்டு சொல்லிய இடத்திர்க்கு போனேன் .அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர் மட்டுமல்ல கூடுதலாக மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி மையமாகவும் செயல்படுகிறது ( நம்ம போனில் பழகத்தானோ ? ).சொன்னால் நம்ப மாட்டீர்கள் , அரசு மருத்துவ மனையின் - குறை பிரசவ குழந்தைகள் வார்டில் வரிசையாக நிற்பது போல ஒரே கூட்டம்.உள்ளே கூட்டத்தில் நீந்தி,அங்குள்ள வரவேற்பு அறை பெண்ணிடம் எனது குறையை சொன்னேன்.
ஃபோனை கையில் வாங்கி கொண்டு,இது ’சென்சார்’ (sensor ) பிரச்சனை ,ஃபோனை கொடுத்துட்டு விட்டு பத்து நாள் கழித்து வாங்க என்று அந்த பெண் மிக சாதரணமாக ஒரு குண்டை வீசியது .ஏன் என்று கேட்டதர்க்கு , உத்திரவாத காலம் (Guarantee Period) முடியாததால் கம்பெனிக்கு இந்த பிரச்சனயை இணயத்தில் அவர்களுக்கு பதிவு செய்வோம் , அவர்கள் வந்து பார்க்குபோது உங்கள் போன் இங்கு இருக்க வேண்டும் என்றார்கள் .அப்படியானால் ’இந்த கம்பனி’ போனை வாங்குபவர்கள் , வயதானவர்கள் துணைக்கு வைத்து கொள்ளூம் கைத்தடி போல இன்னொரு போனை உதவிக்கு வைத்து கொள்வது அவசியமா ? தெரியவில்லை .
கை(தடி)
ஆனால் எனது பழைய சோனிஎரிக்சன் k750i போன் இப்போது நல்ல வேலையாக இந்த இடத்தில் கை(தடியாக ) கொடுத்தது . அந்த ஃபோனில் இருந்த மெமரி கார்டையும் , சிம் கார்டையும் பெற்று கொண்டு ,ஆடி மாதத்தில் பிறந்த வீட்டில் புது மனைவியை விட்டு திரும்பும் அன்பு கணவனை போல கனத்த சோகத்துடன் அங்கிருந்து திரும்பினேன் !.
ஃபோனை வாங்கி கொண்டு ,அவர்கள் கொடுத்த ஃபோனை பெற்று கொண்டதர்க்கான ஒப்புகை பதிவு கடித்ததின் நாட்களை அடிக்கடி (தவிப்புடன்) பார்த்து உறுதி செய்து கொண்டே இருந்தேன் .
இதர்க்கு இடையில் இதை பற்றி விசாரித்தவர்கள் ,அடடா அப்படியா ரிப்பேர்னு போனா அது சரி வராதே. இப்படித்தான் என் ஃப்ரண்ட் கொடுத்துட்டு திரும்பி வாங்கி அதே பிரச்சனை மீண்டும் வந்துருச்சு வேஸ்ட் என்று இன்னொரு அணு குண்டை நான் எதிபாராமல் போட ,நாம் தான் அடுத்தவன் விசயத்தில் எதுவும் தெரியாத விசயத்தை கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E=MC2 ரேஞ்சுக்கு பயமுறுத்தும் போது எனக்கு அப்போது ஒரு விசயம் உறுத்தியது ! .இந்த போன் வாங்குவதர்க்குள் என் நண்பர்கள் பலரையும் அடிக்கடி யோசனை கேட்டு துன்புறுத்திய பாவமோ என்று எனது உள் மனசு உறுத்த தொடங்கியது ( மன்னித்து கொள் சுகுமார் ! ) .
சரி விடு கஷ்டப்பட்டு சம்பதிச்ச காசு என்று அதே மனசு ஆறுதலும் சொன்னது .வெகு நீண்ட என் போனை பிரிந்த - அந்த பத்து நாட்களும் முடிந்தது !
ஒப்புகை சீட்டை அங்கிருந்த (அதே ) பெண்ணிடம் கொடுத்தேன், வாங்கி கொண்டு உட்காருங்கள் என்றது .அந்த உட்காருங்கள் என்ற வார்த்தையின் அழுத்தத்தின் மதிப்பு ’இரண்டரை மணி நேரம்’ என்பது ,அப்படி சொல்லும்போது தெரியவில்லை ! உட்கார இடமும் பஞ்சம் .பல பேர் என்னை விட ,காத்து இருப்பதில் இங்கு (ஆடி மாத )சீனியகள்போல! பல பேர் அழுந்திய முகத்துடன் இருந்தனர் .சில பேர் அடிக்கடி அங்கிருந்து போய் காஃபி ,டீ,தம் அடித்து திரும்பி வந்து உட்கார்ந்து இருந்த இடத்தை இழந்தனர்.
அதில் சுமார் ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் மிகவும் உணர்ச்சி வசபட்டவராக ( ரொம்ப சீனியர் போல ) அடிக்கடி என்ன ஆச்சு ? என்று கேட்டு கலவரப்படுத்தவே ஒருசமயத்தில் அவருக்கு முகத்தை திருப்பிகொண்டது அந்த பெண் .வேகமாக எழுந்த அவர் சர்வீஸ் செண்டர் ஓனரை பார்க்க ஆவேசமுடன் உள்ளே சென்றார் .
அங்கு அவரை ஆசுவாச படுத்தி , மரத்தில் இருக்கும் மாங்காய்க்கு வீசபட்ட கல் தலையில் வந்து விழுந்த கோபம் அவர்முகத்தில் தென்பட திரும்பி வந்து, எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தார் .ஏதோ முணுமுணுப்பு மட்டும் அவரிடமிருந்து ஓயவில்லை .
அப்போது என்னிடம் உங்கள் மெமரி கார்டு கொடுங்கள் என்று அந்த (வரவேற்பு அறை) பெண் கேட்டது . சென்சார் பிரச்சனைக்கு மெமரி கார்டு எதர்க்கு ?என்ற கேள்வியுடன் வேறு வழி இல்லாமல் 8GB UltimaPro Micro SDHC Card கொடுத்தேன் .அடுத்து சில நிமிசத்தில் சிம் கார்டு கேட்கிறார்கள் என்று ஒரு சின்ன பையன் வாங்கி போனான் .
சுமார் கால் மணி நேரத்தில் , சர்வீஸ் சென்டர் ஓனர் வந்து அந்த உணர்ச்சி வசப்பட்ட மனிதரிடம் இந்தாருங்கள் உங்கள் மெமரி கார்டு என்று அந்த மனிதரிடம் கொடுத்தார் .அவர் அதை வாங்கி கொண்டு திருப்பி, திருப்பி பார்த்தார். அதுவும் 8GB UltimaPro Micro SDHC Card .சில நிமிடங்களில் அவர் செட் ஒரு வழியாக வர, வாங்கி கொண்டு வெளியேறினார் .
அவர் போன சில நிமிடத்தில் , எனது அன்பு ஃபோனை என்னிடம் கொடுத்து செக் பண்ணி கொள்ள சொன்னார்கள் .சிம்மை பொருத்தி என் ஆர்வத்தோடு பரிசோதித்தேன்.சென்சார் பிரச்சனை (அப்பாடா ) சரியாக இருந்தது . வாங்கி போன மெமரி கார்டை செக் பண்ண ’மியூசிக் ஐகன்’ உள்ளே போனால் ஒன்றுமே இல்லை செட்டிங்ஸ் வந்து ஸ்டோரேஜில் SD Card Total Space பார்தால் அங்கேயும் உள்ளே எதுவும் இல்லை என்றது .அடப்[ பாவிகளா ?
அந்த பெண்ணிடம் மெமரி கார்டு இல்லை என்பதை சொன்னேன் . வாங்கி வர உள்ளே போனது.யாரோ உரக்க அந்த பெண்ணை சத்தம் போட்டது எனக்கு கேட்டது . கண் கலங்க திரும்பி வந்து , என்னிடம் எதுவுமே சொல்லாமல் தன் சேரில் அமர ,நான் இலக்கு தவறிய அம்பை எய்த வேட்டைக்கரன் போல நிற்க்க , சர்வீஸ் சென்டர் ஓனர் வேகமாக வெளியே போனார்.அதர்க்குள் போனுக்காக காத்து இருந்த இரண்டரை மணிதாண்டி மூன்று மணி நேரமும் ஆனது .திரும்பி வந்த ச.செ ஓனர்,உள்ளே சென்று ஒரு 8GB கார்டை எனக்கு திருப்பி தந்து விட்டு ,அந்த பெண்ணை பார்த்து ஏதோ சொல்ல, சட்டனெ எழுந்து அந்த பெண் உள்ளே போய் தனது ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு சர்வீஸ் சென்டரை விட்டு அவசரமாக வெளியேறியது .
அப்போது ஓனர் சத்தமாக , செய்த தப்ப புரிந்து கொள்ளாமல் பாருங்க சார் கோவத்தை ! உங்களிடம் வாங்கியதை அவரிடம் கொடுக்குபோது ஒரு வார்த்தை சொல்லவில்லை ஆனா கோவம் மட்டும் வந்துருச்சு ,வேலையை விட்டு போகுதாமா. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றார் கோபத்துடன்.
அங்கிருந்தவர்கள் எதுவுமே புரியாமல், பாதியில் ஆங்கில படம் ஓடும் தியேட்டருக்குள் வந்து வேடிக்கை பார்ப்பவர்களை போல எதுவும் புரியாமல் பார்க்க ...
என்னால் எதுவும் பேச முடியவில்லை .ஆனால் அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது . அவர் அந்த வேலையை விட்டு போன பெண்ணை சொல்கிறாரா அல்லது என் ஃபோனைத்தான் வேலைக்கு ஆகாது என்று சொல்கிறாரா ?
கிளம்பினேன் ... ( இனி ஆடிமாதம் வரவே வேண்டாம் ! )