இரவு நல்ல மழை . மக்களும் சாலையும் ஒன்று போலவே எப்போதும் மழைக்கு மட்டும் பழக்கப்படவேயில்லை. வழியெல்லாம் சாலை எது தண்ணீர் எது என்பது தெரியாமல் நிரம்பி ஓடிக்கொண்டு இருந்தது . எப்படியோ மறக்காமல் ரெயின் கோட் அலுவலகத்தில் இருந்ததால் வீடு வந்து பத்திரமாகச் சேர்ந்தாகி விட்டேன்.தொலைக்காட்சியில் ,திருப்பூரில் தொடர் மழையென்ற செய்தியும் அதிகமாகப் பெய்து கொண்டு இருக்கும் பகுதிகள் காட்சியாக்கப்பட்டு ஒளிபரப்பிக் கொண்டு இருந்தார்கள் .
அப்பா இந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டு இருப்பார். எப்படியும் பத்து மணிக்குள் அலைபேசியில் தொடர்பு கொள்வார் .என்னப்பா அங்க மழையாமே ? பத்திரமா நனையாம வீடு வந்தூட்டியான்னு விசாரித்து முடிக்காமல் தூங்க மாட்டார் .
ஆனால் தினமும் தொடர்புகொள்ளும் அப்பாவிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக அழைப்பே வரவில்லை .தூங்கும் முன் மனைவியிடம் கேட்டேன் அப்பா உனக்கு ஏதுவும் ஃபோன் பண்ணினாரா ? இல்லையென்றார் மனைவி .
அலைபேசி அழைத்தது ...
மணி இரவு 2.30 .
நான்காவது அண்ணன் பேசினார்.
அப்பாவுக்கு ரொம்பவும் முடியவில்லை.திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனைப் பெயர் சொல்லி அங்கே சேர்த்து இருப்பதாகவும் உடனே கிளம்பி வா என்றார்.
எனக்கு முதுகுத் தண்டுக்கள் மின்சாரம் பாய்ந்த சிலிர்ப்பு.இனம் புரியாத பயம் கவ்விக்கொண்டது .
அம்மா இறந்து மூன்று மாதம் முடிந்து சில நாட்களே ஆகியிருந்தது அப்போது .இன்னும் முழுதாய் அந்த அழுத்தமான மன நிலையிலிருந்து யாரும் விடுபடக் கூட இல்லை.
நான் மொபைல் பேசுவதில் எழுந்து கொண்ட மனைவி ,என்ன என்றார் பதஷ்டமாகச் சொன்னதும், நானும் வரவா என்றார் .இல்லை போய்ப் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பிக் கொண்டு இருந்த அரை மணி நேரத்தில் மீண்டும் அலைபேசி அழைப்பு .
இப்போது இரண்டாவது அண்ணன் குரல் .
கிருஷ்ணா , அப்பா போயிட்டாருடா .
என் நண்பர் ஆதியை அலைபேசியில் அழைத்தேன்.வந்தார் .என்னிடமிருந்த அலுவலகப் பணம் மற்றும் சில முக்கியத் தகவல்களைச் சொல்லச் சொல்லி விட்டு அவரிடம் கொடுத்தேன் .கார் ஏற்பாடு செய்யவா என்றார் அவர் வேண்டாம் என்று பையனை எழுப்பிக் கிளம்பினோம்.பையனையும் மனவியையும் அவரே பஸ் நிறுத்தம் வரை வந்து கொண்டு போய் விட்டு விட்டுப் போனார்.
பேருந்தில் ஏறி அமரும் வரை நான் இறுகப் பிடித்து வைத்து இருந்த என் ஆற்றாமை அதற்கு மேல் இருப்புக்கொள்ளவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் நான் அழுவதை முதன் முறையாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான் என் எட்டு வயது பையன்.
நான்காவது அண்ணன் வீட்டில், அப்பாவை வைத்திருப்பதாக மேலும் ஒரு அலைபேசி அழைப்பில் சொன்னார்கள் .
அண்ணன் வீடு போய்ச் சேரும் போது மெல்லச் சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியது .
இந்த உலகத்தில் நாற்பத்தி மூன்று வருடம் என்னைத் முழுவதுமாகத் தெரிந்த ஒரு மனிதர் அந்தக் கண்ணாடிப் பெட்டிகுள் படுத்திருந்தார்.
வாடாக் கிருஷ்ணா என்று சிரிக்கவில்லை .
ப்ரணவையும் , புனிதாவையும் கூட்டி வந்தியான்னுக் கேட்கவில்லை .
இந்த உலகிற்கு என்னைத் தந்த அந்த மனிதர் வெறும் உடலாகக் கிடந்தார்.
எனக்கு முன்னே வந்திருந்த அந்த ஊரின் என் நண்பர்கள் வெகு வேகமாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள் .
அப்பாவின் உடலுக்கு இறுதி யாத்திரைக்குத் தேவையான சடங்கு சம்பிராதயக் காரியங்களுக்கான வேலைகளை நண்பன் மாரிமுத்துச் செய்து கொண்டு இருப்பதாகச் அண்ணன் சொன்னார்.
அவனை அலைபேசியில் அழைத்தேன் .வந்து வந்துட்டியான்னுக் கேட்டு விட்டு வச்சுட்டான்.
என் நண்பர்கள் அனைவருக்கும் அப்பா ரொம்பப் பரிச்சயம். என்னைத் தேடி வீட்டு வந்தாலும் அப்பாவுடன் புத்தகம் பற்றியோ அன்றைய செய்திகள் பற்றியோ பேசிக்கொண்டு இருப்பார்கள் . அந்த உரையாடல்களில் அப்பா தன்னைத் தன்னை மூத்தவர் என்று காட்டிக்கொண்டதே இல்லை .மிகவும் சகஜமாகப் பேசிப்பழகுவார்.எல்லோருக்கும் பிடிக்கும் .விடிய விடிய வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தாலும் என்னப்பா தூங்கலையான்னுக் கேட்டு விட்டுப் போய் விடுவார் .அதனால் அப்பாவிடம் என்னை விடவும் நண்பர்கள் பிரியமாகவே இருந்தார்கள் .அதனால் அவருக்கும் செய்யும் இறுதி மரியாதை யார் சொல்லியும் அங்கு எந்த வேலையும் நடக்கவில்லை தானாகவே செய்துகொண்டு இருந்தார்கள்.நண்பர் சங்கர் சொல்லும் போது சில மாதம் முன்னே பேசிக்கொண்டு இருந்த போது கூட உங்க வீடெல்லாம் கோயில் மாதிரி கிருஷ்ணா .எந்த வீட்டிலும் அத்தனை சுதந்திரம் நண்பர்களுக்கு இருந்திருக்க முடியாது என்று நினைவுபடுத்திக்கொண்டார்.
கடைசிப் பையன் என்பதால் அப்பாவின் உடலுக்கு நெருப்பிட்டு இறுதி அஞ்சலி செலுத்த வைத்தார்கள் . எல்லாக் காரியமும் முடிந்து போனது .
அப்பாவுக்குச் சில ஆண்டுகளாகச் சிறு நீரக நீர் வெளியேற்றத்தில் தடை இருந்ததால் செயற்கைக் குழாய் மூலமே வெளியேற்றம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது .அம்மாவின் மறைவு நேரத்து நட்சத்திரத் தோசம் இருந்ததால் ஐந்து மாதம் தினமும் விளக்கேற்ற வேண்டியது இருந்தது. அப்பாதான் செய்து வந்தார்.அதையும் ஒரு மாதம் இறந்த வீட்டில் இருந்து செய்து விட்டுத் தனது நண்பர் வீட்டுக்கு எதிரில் குடிபெயர்ந்தார்.அடிப்படை வசதி குறைந்த வீடு இது ஏன் என்று கேட்ட எங்களுக்குத் தன் நண்பர் திரு.முனியாண்டி வீட்டுக்கு எதிரே இருப்பதைச் சந்தோசமாக நினைக்கிறேன் என்றார். கடைசிவரை அப்பா தனது நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் .அதை எங்கள் நண்பர்களுக்கும் செய்தார் . அப்பாவின் அந்த நண்பர் ஒரு இசைக் குழு வைத்திருந்தார்.முன்பெல்லாம் அப்பா வெகு நேரம் அங்கேதான் இருப்பார் .இத்தனைக்கும் அப்பாவுக்கும் சங்கீதத்திற்கும் எப்படி ஒரு ஈர்ப்பு அந்த வயதில் வந்தது என்று தெரியவில்லை .எந்த நண்பர் விட்டுக்கு எதிரே இருந்தால் சந்தோசம் என்று வந்தாரோ அந்த நண்பர் வீட்டுக்கு அப்பா அங்கிருந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூடப் போகவில்லை .அதைச் சொல்லித்தான் அவர் நண்பர் அப்பாவின் இறுதிப் பயணத்தின் போது சொல்லிச் சொல்லிக் கலங்க வைத்தார்.
சில நாளுக்குப் பிறகு அப்பாவுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் இருந்ததால் அப்பா இருந்த வீட்டில் நான் தங்க வேண்டி வந்தது .சில ஆண்டுகளாக அவர் புத்தகம் வாசிக்கச் சிரமப்பட்டதால் அண்ணன் வாங்கிக் கொடுத்த பல புத்தகங்கள் புதிதாய் அலமாரியில் இருந்தது .அதில் பெரிய கனத்தப் புத்தகம் ஆறு இருந்தது. அது பாலகுமாரனின் - உடையார் .
எனக்கு வாசிக்கக் கற்றுத் தந்த இரண்டாவது அண்ணனுக்கும் ,என் அப்பாவுக்கும் ,எனக்கும் எப்போது புத்தகம் வாசிப்பதில் போட்டி உண்டு .முதல்ல யார் படிப்பதென்பதே அந்தப் போட்டி .அண்ணன் எப்போதும் கொடுத்து விடுவார் .அப்பா வேகமாக வாசிக்கும் பழக்கம் இருப்பதால் அவரால்தான் முதலில் வாசிக்கப்படும் .ஆனால் புத்தக விசயத்தில் நான் பேராசைக்காரன் முதல்ல நான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் வழக்கமிருப்பதால் எனக்குத் தெரியாமல் அப்பாவிடம் தான் கூடப் படிக்காமல் வாங்கிக் கொடுத்து இருக்கிறார் .அந்த ஆறு பாகத்தில் அப்பா தன்னுடைய உடல் உபாதையையுடனே இரண்டு பாகத்தை முழுமையாக முடித்து விட்டு மூன்றாவது பாகத்தில் படித்ததற்காக ஒரு அடையாளம் வைத்து இருந்தார்.அங்கிருந்த சில நாளில் அப்பா படித்து முடித்து அடையாளம் வைத்து இருந்த அதே இரண்டரை பாகம் அளவுக்குத்தான் என்னாலும் படிக்க முடிந்தது...
தனக்கு உடல் சரியான பின் என்னுடன் இங்குத் திருப்பூர் வந்து பத்து நாளாவது தங்க வேண்டும் என்பதே அப்பாவின் கடைசி ஆசையாக இருந்தது. எல்லோரும் சொன்னார்கள் .அப்பா அவஸ்தைப் படக்கூடாது என்பதால்தான் அம்மா தான் இறந்த போன 104 ஆவது நாளில் அழைத்துக் கொண்டதாக. நல்லவிதமான இறப்பு என்றார்கள் .
சில மாதங்களுக்கு முன் எனக்கு இரண்டாவது ஒரு பையன் பிறந்தான் .அவனுக்குப் பெயர் வைக்கப் பேசிக்கொண்டு இருந்த போது நண்பர் சுகுமார் ஒரு பெயர் சொன்னார் .அந்தப் பெயரின் இரண்டாவது பாதிப் பெயர் எதேச்சையாக அப்பாவின் பாதிப் பெயராக இருந்தது.அப்பா பத்து நாள் இங்கு வந்து தங்கிப் போக ஆசைப்பட்டார். இயற்கை இன்னொரு பையன் பெயரில் என் வாழ் நாள் முழுதும் தங்க வைத்து விட்டது .
அப்பாவின் நண்பருக்கு எனக்கு இரண்டாவது பையன் பிறந்து இருக்கிறான் என்று அலைபேசியில் சொன்ன போது அவர் சந்தோசப்பட்டார்.அப்பா இருந்தா ரொம்ப சந்தோப்பட்டு இருப்பார் என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீபாவளி , பொங்கல் , முப்பது நாள் கோட்டை மாரியம்மன் திருவிழா எதற்கும் பிறந்த ஊரிலிருந்து அழைப்பும் இல்லை . நண்பர்கள் மட்டும் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் .
தாய், தந்தையரை இழந்தவன் என்ற முறையில் விரதம் கடைபிடிப்பது வழக்கம் .
இந்த உடலைக் இந்தப் பூமிக்குக் கொடுத்த அப்பா அம்மாவுக்கு நினைவாகவும் என்னைப் போலத் தன் பிறந்த ஊரில் தனது முகவரியையும் அடையாளத்தையும் இழந்த அத்தனை பேருக்கும் இந்தப் பதிவு சமர்பணம் .