புதன், 15 மார்ச், 2017

அவனுக்கு நல்ல கனவு வந்திருக்கலாம் !



            இன்னும் கொஞ்ச நேரம்தான்  இருக்கிறது . ஒருவேளை  நான் தாமதித்தால்   இன்ஸ்பெக்டர் இந்த கோவிலுக்கே தேடிவரலாம்.நான் பையனுடன் கடைசியாகக் கோவிலுக்குப் போக மட்டுமே அனுமதி கொடுத்தார்கள் .  கை விலங்கு பூட்டிக் கைது செய்யாமல் , ஜெயிலுக்கு அழைத்துப்போக இன்ஸ்பெக்டர் ஒப்புக்கொண்டார் . யார் எனக்காக கேட்டார்கள் என்று கூடத்தெரியவில்லை.ஆனால் அது தாற்காலிக தப்பித்தல்தான். ஏற்கனவே  முடிந்து விட்டது எல்லாம். இன்னும் பத்தாண்டு காலம் ஜெயிலுக்குள் இருக்க வேண்டும் .வீட்டுக்குப் போனவுடன் மஹரிசியின் எல்லாப் புத்தகங்களையும் கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஜெயிலுக்குள் இத்தனை புத்தகம் கொண்டு செல்ல அனுமதி தருவார்களாத் தெரியவில்லை .எனக்கு ஏதோ ஒரு சோகம் மனதைக் கவ்வியது . நான் வசித்த வீடு ,பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை , எடுத்துக்கொண்டு இருக்கும் தத்துவ வகுப்புகள் எல்லாமே  இன்றோடு எனது இந்த வாழ்க்கையில்  முடியப்போகிறது . நாளைக் காலை ஜெயிலுக்குள்தான் எனக்கு விடியல்.முகம் தெரியாத யாரோடு தங்க வைக்கப் போகிறார்களோ ? ஒருவருடனா இல்லை பல பேருடனா ? தெரியவில்லை . 

          பையனும் வேடிக்கை பார்த்துக்கொண்டே  வந்து கொண்டு இருந்தான்.அப்பா உங்கள் மொபைல் தாங்க என்றான். பையனை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கிறது.அவனிடம் எப்படிச் சொல்வது ? பதினோறு வயது பையனை விட்டு விட்டு ஜெயிலுக்குப் போக எந்த அப்பாவுக்குத்தான் நிம்மதி இருக்கும் .ஒரு வேளை அவன் என் கண்டிப்பிலிருந்து விலக்குக் கிடைத்து விட்டதால் சந்தோசமாக இருப்பானா ? ரெண்டு வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம்தான் அவனை அடித்தேன் . அந்தக் கோபத்தில் அப்பா ஜெயிலுக்குப் போகட்டும் என்று விட்டு விடுவானா ? தினமும் அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து நான் கூட்டி வரப் போகவில்லையென்றால் அவன் ஃபிரண்டுகளுக்குத் தெரிந்துவிடும்.எல்லோரும் ப்ரணவ் அப்பா ஜெயிலுக்குப் போய் விட்டார் என்று சொல்லி அவனைக் கேளி செய்யக்கூடும் .அது எனக்கு அவமானமாகத் தோணியது ! ஆனால் வேறு வழியில்லை ! .அப்பா இல்லாத அவன், யார் பராமரிப்பில் வளர்வான் ? . பாவம் அந்தப்பையன் குற்றவாளிக்கு மகனாகப் பிறந்து விட்டோமே என்று நான் திரும்பி வந்த பிறகு பேசுவானா ? புத்தி மனதைப் பிறாண்டியது .அழுது விடுவேனோ என்று உள்ளுக்குள் பதஷ்ட்டம் தொற்றிக்கொண்டது . 

            என மனைவி அவள் தம்பி வீட்டுடன் வசித்துக் கொண்டு இருக்கும் அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து பையனின் பள்ளிக்கூடத்திற்கு அருகில் வீடு பார்த்துத் தங்கச் சொல்ல வேண்டும் .ஆனால் வாடகை எப்படிக் கொடுக்க முடியும் ?  என் வங்கி வைப்பு நிதியை வைத்துக்கொண்டு ஒரு வருடம் தாக்குப் பிடிக்கலாம் .அதற்குள் கைக்குழந்தைச் சின்னவனுக்கு ஒரு வயதாகிவிடும்.அவள் அம்மாவிடம் விட்டு விட்டு எதாவது வேலைக்குச் செல்வாள்.என்னிடம் வேலைக்குப் போகவா வேண்டாமா என்று ஒப்புக்குக் கேட்பாள் .ஆனால் நிச்சயம் போவாள்.அவள் அப்பாவின் பென்சன் தொகைப் போதாது .ஒருவேளை அந்தப் பள்ளியிலிருந்து அவனை நீக்கி விட்டு வேறு எதாவது பள்ளிக்கூடம் சேர்த்து விடுவார்களா ? அப்படியானால் சென்ற வருடம் கட்டிய அந்த பெரிய டொனேசன் தொகை வீணாகப் போய் விடுமே ? என்னால் அதற்கு மீறி யோசிக்க விருப்பமில்லை .எனக்குத் தெரியும் நான் யோசித்தால் மட்டும் அது நடந்து விடாது . என் குடும்பத்தில் நான் இல்லாது போனால் யார் யாரோ முடிவெடுப்பார்கள் .தனியே இருக்கப் போவதால் அவள் இரண்டு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பைப் பொருத்து ஒத்துக்கொள்வாளோ என்னவோ ? 

                  எனக்கு என்னவோ உள்ளே பிடுங்கித் தின்னுவது போல அசூகை வந்தது .  காலெல்லாம் நடுங்கியது . கையைப் பிடித்து இருந்த பையன் கையை விடுவித்து  அந்தக் கோவிலின் வெளி வளாகத்தில் தளர்ந்து உட்கார்ந்தேன். பையன் என் மாற்றத்தைக் கவனித்தான் .என்னப்பா ? என்றான். ஒன்றுமில்லைப்பா என்றேன் .இப்போது சொல்ல வேண்டாம். வீட்டிலிருந்து கிளம்பும்போது சொல்வோம் .ஆனால் என்னால் அவனைப் பிரிவதைத் தாங்கிக் கொள்ள முடியுமா தெரியவில்லை .ஏன் இப்படி ஒரு சோதனை என்ன தவறு செய்தேன் பத்தாண்டு ஜெயிலுக்குப் போகுமளவுக்கு ? தெரியவில்லை . 

                ஜெயிலுக்குள் எனக்குத் தியானமெல்லாம் தெரியும், தத்துவச் சிந்தனையில் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறேன் என்றால் என்ன சொல்வார்கள் ? அதெல்லாம் தெரிந்து என்னய்யாப் பிரயோசனம் ? அப்படினா நீ ஜெயிலுக்கு எதுக்கு வந்தேன்னு கேளி செய்வார்களா ? இதெல்லாம் சொல்லலாமா ? நான் ஜெயிலுக்குப் போய்விட்டேன்னு தெரிந்தால் இங்கு என் தத்துவ ஆசிரியர் தகுதியை இழந்து விடுவேனா ? ஜெயிலுக்குப் போனவன் திரும்பி வந்து தத்துவ வகுப்பு எப்படி எடுக்க அனுமதிப்பார்கள் ? சொல்லாமல் விட்டாலும் தெரியாமல் தவறுதான் . ஆனால் ஒரு ஆசிரியன் ஆக வேண்டும் என்ற கனவு பறி போய் விடுமே ? இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது ? சொல்ல வேண்டாம் என்று சொல்ல வேண்டும் .அதெப்படி அதுவே தவறுதானே ? பொய் சொல்ல குரு அனுமதிப்பாரா ? பொய் சொல்பவன் தத்துவ வகுப்பெடுத்தால் மற்றவர்களுக்கு உணர்வாய் போய்ச் சேராதே .இயற்கைப் பெயரில் பொய் சொல்லுபவனை இந்த உலகத்தில் எந்த உயிரும் மன்னிக்காதே . கடவுளே என்ன பாவம் செய்தேன் .ஏன் நான் தண்டிக்கப்பட்டேன் ? 

        வீட்டுக்கு வண்டியில் வந்தோம் . பையன் வழக்கம் போல வண்டியை நிறுத்தும் முன் என் பாக்கெட்டிலிருந்த செல் ஃபோனை எடுத்துக்கொண்டு கேம் விளையாட உட்கார்ந்து விட்டான் .அவனுக்குத் தெரியாது இனிமேல் அந்தச் செல்ஃபோம் அவனுக்கே சொந்தம் .ஜெயிலுக்கு எடுத்துப் போக அனுமதியில்லை . ஆயிரம் யோசனைகள் என்னிடமிருந்து கழன்று விடுவது போலத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது . என் இந்த வண்டியைக் கூட மனைவியின் தம்பியிடம் கொடுத்து விடுவார்கள். ஜெயிலிருந்து திரும்பி வரும்போது நிச்சயமாய் எனக்கு இந்த வண்டியை ஓட்டுவதற்குப் பிடிக்கப்போவதில்லை.அதற்கு என்ன செய்வது ஓட்டாமால் ஸ்டாண்டு போட்டா வைத்து இருக்க முடியும் ? 


             உள்ளே வந்தேன் இந்தத் துணி ஸ்டாண்டில் என் பீரோவில் இருக்கும் எந்த உடையும் இனி எனக்குப் பயன் படப்போவதில்லை.ஜெயிலில் என்ன உடைத் தரப்போகிறார்களோ அதுதான் இனியெல்லாம் . நான் ஜெயிலுக்குப் போவதால் ஒரு சந்தோசம் மட்டும் லேசாய் வந்தது .எப்படியாவது நான் சேர்த்து வைத்திருக்கும் மொத்தப் புத்தக்கத்தையும் படித்து விடுவேன். எப்படியாவது மாதமோ அல்லது அனுமதிக் கிடைத்து என்னைப் பார்க்க ஜெயிலுக்கு வருபவர்களிடம் இதையெல்லாம் ஒவ்வொன்றாயாவது எடுத்து வரச் சொல்லவேண்டும் .

             இது என்ன அற்பச் சந்தோசம் .குடும்பத்தை அனாதையாய் விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போய் இந்தப் புத்தகமெல்லாம் வாசித்து முடித்து விடுலாம் என்று யோசிக்கிறேனே ? சே ! என்ன ஒரு குரூர சுயநலம் ? புத்தகம் படிக்கவா ஜெயிலிக்குப் போகிறேன் .ஆனால் என்ன செய்வது வேண்டாம் என்றால் அந்த இன்ஸ்பெக்டர் மன்னித்து விட்டு விடுவாரா ? கோர்ட் ஏன் எனக்கு இந்தத் தண்டனை கொடுத்தது ? ஓடி விடுவோமா ?  முடியாது .மனைவி குழந்தையெல்லாம் ஸ்டேசன்ல வைத்து உண்மையைச் சொல்லச் சொல்லிக் கொடுமை படுத்துவார்கள் . இப்படித்தான் கம்பெனி விசயமாக ஒரு குற்றத்தைக் கண்டறியக் காவல் துறையை நாடிய போது என்னிடமே ஒரு ஏட்டு சொல்லியிருக்கிறார். குற்றவாளியுடைய பொண்டாட்டிப் பிள்ளைகளையும் அவன் அம்மாவை ஸ்டேசன்ல வைத்து அடிக்கிற மாதிரி செய்தால் கூடக் குற்றவாளித் தன் குற்றத்தை எப்படியாவது ஒத்துக்கொள்வானாம். அது பெரிய பாவம் . அவர்கள் என்னால் ஸ்டேசனல்லாம் போக வேண்டாம் .என் மீது இன்னும் வெறுப்பு வரலாம் .நான் போய்த்தான் ஆகவேண்டும் .

          அப்பா அம்மா ஒன்றாய் இருக்கிற ஃபோட்டோவையும் , மனைவி குழந்தை குடும்பம் இருக்கிற போட்டோ ஒன்றையும் எடுத்துப் பைக்குள் வைத்தேன்.அதில் புதிதாய்ப் பிறந்த மூன்று மாதக் குழந்தை போட்டோ இல்லை .யாரையும் ஜெயிலுக்கு வந்து பார்க்க கூடாது என்று சொல்லிவிடலாம் .இவர்கள் வந்தால் என் வேதனை கூடலாம்.சினிமாவில் பார்ப்பது போல ஜெயிலின் விசிட்டர் ரூம் கம்பி அடைப்புக்குப் பின்னால் நின்று கொண்டுதான் இனி இவர்களைப் பார்க்க வேண்டுமா ? முடியாது. என்னால் தாங்க முடியாது .எனக்கு எங்கிருந்து அப்படி ஒரு அழுகை வந்தது தெரியவில்லை .கேவிக் கேவி அழத்தொடங்கினேன். 
என் உலகத்தில் நான் மட்டும் தனியாக அனாதையாக உணர்ந்தேன்.
சட்டெனே கரைந்தது போல எல்லாம் மறைந்து விட்டது 

சட்டெனெ விழிப்பு வந்தது ... 
என்ன கனவிது ? 
ஜெயிலுக்கு நான் ஏன் போக வேண்டும் ?


பக்கத்தில் பையன் அவன் தலையணையிலிருந்து விலகி வந்து என் தலையணையில் தூங்கிக் கொண்டு இருந்தான் .

அவன் முகம் அந்த இரவு வெளிச்சத்தில் லேசாய்ச் சிரித்தபடி இருந்தது.

ஒருவேளை அவனுக்கு நல்ல கனவு வந்திருக்கலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக