இது என்னப்பா உன் குழந்தையை அடித்து விட்டால் அதற்கு எங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது ? இதுக்கு ஒரு பதிவா ? அப்படி வருத்தமா இருந்தா ஓரமா உட்கார்ந்து அழுதுட்டு வந்திற வேண்டியதுதானே ? எல்லாமே சரிதான் .ஆனால் இந்தப் பதிவு பாவ மன்னிப்புப் பெறுவதற்கு இல்லை .அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை .நிச்சயமாய் எனக்குத் தண்டனை வரத்தான் செய்யும்.
விசயம் இங்கே அது இல்லை .ஏன் இந்த உலகத்தில் அப்பா ஸ்தானம் மட்டும் ஏன் இத்தனை பெரிய அனாதையாகத் தனித்து விடப்பட்டு இருக்கிறது என்பதுதான் ? .அப்பா என்றால் பொறுத்துப் போக வேண்டும் அதற்கு எல்லையே இல்லை .ஏனென்றால் ஆம்பிளை .இந்த வெற்றுப் பந்தாவுக்குள் எத்தனை எரிமலைகள் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது அவனவனுக்கு மட்டும் வெளிச்சம் .
சொந்த அம்மா.அப்பா ஒரு பக்கம் முன் வைக்கும் விமர்சனங்கள் ,மாமனார் , மாமியார் வந்து போகும் போது கொடுக்கும் அழுத்தம் ,பக்கத்து ,எதீர் வீட்டுக்காரர்கள் கொடுக்கும் சோதனைகள் , பணிபுரியும் இடத்தில் நிருவனத்திற்குத் தவறான முடிவெடுப்பவன் முதலாளிக்கு ஜிங்,ஜக் என்றால் அதை ரெட் கார்பெட் போட்டி வரவைக்க வேண்டிய அவலம் , கேசியரா இருந்தாக் கடன் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் மாதத்தில் பாதி நாட்கள் லேட்டா வந்தாலும் சம்பளத்தில் கை வைக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்க வைக்கும் சகப்யணிகளின் கோபம் ,எத்தனை முறை ஸ்டேடஸ் கொடுத்தாலும் வாங்கிச் சீட்டுக்கடியில் போட்டுவிட்டுத் தரவேயில்லை என்று சாதிக்கும் ஆடிக்கெடுக்கும் ஆடிட்டர் அலுவலச் சித்திரக் குப்தன்கள் , நம் உடல் மன நலனுக்கென்று போகும் அமைப்புகளில் தினமும் ஒழுங்காகப் போவதால் கொடுக்கப்படும் பொறுப்புகள் என்ற தண்டனை ,
வழக்கமாய் மாதத்திற்கு இரண்டு முறை எடுக்கும் நூலகத்தில் தானாக முன் வந்து ,உங்களைப் பார்த்தால் நல்ல வாசிப்பாளாராகத் தெரிகிறது ரெஃபரன்ஸ் புத்தகம் தருகிறோம் பத்திரமாப் படிச்சுட்டுத் தாங்கன்னு நான்கு மாதம் கொடுத்திட்டு இருக்கீற வேலையெல்லாம் ஓரம் கட்டி மொத்த ஓஷோ முடிச்சிறலான்னு ஆர்வமா அடுத்துப் போதித்தர்மரை முடித்து விடலாம்ன்னு எடுத்துட்டுப் பதிவு செய்யக் கொடுத்தால் ,இல்லைங்க இப்பெல்லாம் ரெஃப்ரன்ஸ் புத்தகம் வெளியிலக் கொடுப்பதில்லைன்னு சட்டுன்னு மூஞ்சியிலப் புத்தகத்தை வீசியது போலப் பதில் சொல்லும் கறுப்பான அழகான நூலகி , எப்பவுமே சரியான மைலேஜில் அல்லது காலத்திற்குள் வண்டிய சர்வீஸ் விட்டாலும் சந்தோசமாக எடுத்துக் கொண்டு போய்த் திரும்பி வந்து என்னப்பாப் பிக்கப் எப்படி என்றால் சூப்பரா இருக்குன்னு அதீதமாகப் பொய் மெக்கானிக் கேட்ட பணம் கொடுத்து விட்டு அப்படியும் மீறிக் கேட்டால் நான்கு வருசமாச்சு சார் அப்படியேவா இருக்கும்ன்னு சலவைக்காரி ஜோக்கைக் கண்டுபிடித்த நக்கல். சாலையில் முன்னாடி ஆயிரம் பேர்த் தவறு செய்து நாம் விட்டுச் சென்றாலும் ஒரே ஒரு முறை ஆளே வராத சந்திரமண்டல வீதியில் இண்டிக்கேட்டர்ப் போட்டுத் திரும்பாதற்குக் குறுக்கே வந்து திட்டி விட்டுப் போகும் வெகு ஜனப் பிரதிநிதிகள்
நீங்களே சொல்லுங்கள் இப்படி எத்தனையோ சோதனைகளில் அடித்துச் சமாளித்து விட்டு வெந்தும் வேகாமலும் விட்டு அல்லது சமாளித்து விட்டு வீட்டுக்குள் வந்தால் - இங்க பாருங்க இவன் எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துகிட்டு இருக்கான் , ஹோம் ஒர்க் பண்ணவேயில்லை, ப்ராஜெக்ட் போன வாரமே கொடுத்தாங்களாம் இன்னைக்கு வந்து சொல்றான்,ட்ரெஸ் எல்லாம் அழுக்காக்கிட்டு வந்து நிற்கிறான், லாஸ்ட் மிட்டெர்ம் பேப்பர்ஸ் எனக்குக் காட்டாம உங்கள்ட்டக் கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டான் , இனி செஸ் கிளாஸ் அனுப்ப வேணாம் லேட்லாவே பொறான் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை போல, என்னங்க ஹிந்திக்கு மாசம் நாழாயிரம் ரூஃபா ஃபீஸா ? கொள்ளையடிக்கிறாங்களே இப்பயெல்லாம் வீட்டுக் குப்பையெல்லாம் நம்மீது கொட்டி விட்டு, அம்மா பாரு அம்மா பாருன்னு சின்னக் குழந்தைய கொஞ்சப் போய்விடுகிறார் .
அப்போது நம் இயலாமை நமக்கு முன் குதித்து நக்கலாய்ச் சிரிக்கிறது . ஆயிரம் சமாளிப்புகளையும் ஓரம் கட்டி அவமானப்படுத்துகிறது. அப்போது கலீல்ஜீப்ரானின் “உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர் “ என்ற வரிகள்கள் உங்கள் ஞாபகத்தில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
அதை விட “ அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி உங்களிடமிருந்து அல்ல உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர் “ என்பது தோணாமல் போகிற இயலாமை வந்து விடுகிறது .இயலாமைப் பெருமையான விசயமல்ல. அவமானம்தான் .
கடந்த இரண்டு வருடமாக இனிமேல் என் மகன் அடிக்கமாட்டேன்னு குருவின் மேல் சபதமெடுத்து இந்த இயலாமைக்கு அணைக்கட்டி வைத்திருந்தேன் .இது அவனுடைய அம்மாவுக்குக் கூடத் தெரியாது .ஆனால் இன்று அந்த அணை ஒரு பக்கம் உள்ளே உருண்டு கொண்டு இருந்த இயலாமை என்ற பலவீனத்தின் முன் இரையாகிப்போனது .
அன்று அவசரமில்லாமல் சரியான நேரத்திற்கு அக்கறையாய்க் கிளம்பினான் . அவனை அடித்த வலி எனக்குள் காட்டேரி வெளவாலைப் போல அவமானமாய்த் தழைகீலாய்த் தொங்கிக் கொண்டு இருந்தது . எனக்கு அதைப்பற்றிப் பேச கூட மனம் வரவில்லை .வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும் போது அவனே பேசினான் .
ஏம்ப்பா ஸ்கூல்ல டீச்சர் அடிக்கிறாங்க , வீட்ல அம்மா இல்லைன்னா நீங்க அடிக்கிறீங்க எதுக்குப்பா ? என்றான்.
தப்புதான் ஆனா அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்திடுதே என்றேன்
என் அவமானத்தை மறைச்சுக்கிட்டு !
ஆனா ஏன் அடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுதா ?
என்னோட நல்லதுக்குத்தான்னு எல்லாரும் சொல்றீங்க .ஆனா அப்புறம் ஏன் என்னை அடிக்கிறப்ப எல்லாரும் உங்க முகத்தை அப்படிப் பார்க்க முடியாத அளவுக்குக் கோபமா வச்சுக்கிறீங்க ?
அவனுக்கு பதில் சொல்லவில்லை .அதற்குள் ஸ்கூல் போய் விட்டோம்.இன்னும் சொல்லப்போனால் என்னிடம் பதில் இல்லை.
அப்போது மீண்டும் #கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ யின் விட்டுப்போன மீதி வரிகள் மண்டைக்குள் ஓடியது ...
அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு.
அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப் படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.
கனவிலும் நீங்கள் நுழைய முடியாத
எதிர்காலக் கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.
நீங்கள் அவர்களாக முயலலாம் ;
அவர்களை உங்களைப்போல
உருவாக்க முயலாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப் போவதோ இல்லை.
உயிர் கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்,
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.
வில்லாளியானவர்,
முடிவில்லாத பாதையின் இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகள்
துரிதமாகவும் , தூரமாகவும் செல்லும் வண்ணம்
உங்களை வளைக்கிறார்.
அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்,
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல………..
நிலைத்து நிற்கும் வில்லையும் அவர் நேசிக்கிறார்.
எத்தனை படித்தாலும் , என்ன பேசினாலும் உணர்ச்சிகள் உணர்வுகளாக மாற்றத் தெரியாவிட்டால் ஆறாவது அறிவு அவமானம்தான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக