வியாழன், 16 பிப்ரவரி, 2017

கிருஷ்ண மோகினிகள் ! Transgender





விதியை எழுதினேன்..

கடவுளுக்கு மனைவியாகி
ஒரே நாளில் விதவையான
ஒரு பரிசோதனை கவிதை நான்..
என் தாலியின் வாழ்வு
ஒருநாள் மட்டும்.
அறுத்த என் தாலி
எங்கோ மரத்தில் கட்டப்பட்டு
மக்கிப்போய் மண்ணாகியிருக்கும்
அந்தத் தாலி
என் விதியை நிர்ணயிப்பதில்லை
என்பதை அறிந்துகொண்டேன்
எல்லோருக்கும் ஜாதகம்
இருக்கும்.
எனக்கு இல்லை
என் விதியை
நானே எழுதிக்கொள்ள
எனக்கிருக்கிறது
வலிமை மிக்க ஒரு மனம்
தெளிவு பெற்ற என் அறிவு.
அறுத்தெறிந்த தாலிக்கு
அர்த்தமில்லை
வெறும் மஞ்சள் கயிறு
அதில் ஒன்றுமில்லை
அந்த வேதனைச்சடங்கு
எனக்கு வேண்டாம்.
சடங்குகளை மூட்டைகட்டி
சாக்கடைக்குள் போட்டபின்
புன்னகை செய்யக் கற்றுக்கொண்டேன்
பூக்களோடு பேச கற்றுக்கொண்டேன்
காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
கவிதையாகவே
வாழவும் இன்று கற்றுக்கொண்டேன்..
 - திருநங்கை கல்கி.

       நேற்று அலுவலத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி  அலைபேசி இணைப்புகளைப் பற்றி புதிய ப்ளான்களைக் காட்டி  வழக்கம் போலப் பொய் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் . இதற்கிடையே எங்கள் அக்கவுண்ட் செக்சன் பெண் ஏதோ கேட்க வந்தவர் வரவேற்பு அறைப் பக்கம் பார்த்து விட்டு நான் அப்புறம் வரேன் என்று சிரித்துக்கொண்டே அவசரமாகக் கேபினை விட்டு நகர்ந்தார் இல்லை ஏறக்குறைய ஓடினார் .நிமிர்ந்து பார்த்தால் மூன்று திரு நங்கைகள் என் கேபினை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்... 

             கூத்தாண்டவர் திருவிழாவுக்கு வருடா வருடம் அன்பளிப்புக் கேட்டு வருவார்கள்.மொத்த அலுவலகமே செய்யும் வேலையை விட்டு விட்டு வந்த திருநங்கைகள் போகும் வரை என் பக்கம் கவனித்துக்கொண்டு இருப்பது வழக்கம் .வந்தவர்களில் ஒரு திருநங்கை வழக்கமாய் வருபவர் .வந்தவுடன் சூரிய நமஸ்காரத்தின் போது அனாதகச் சக்கரத்தில் வைத்துக் கைகூப்பி வணங்குவது போல மூவரும் வணங்கினார்கள். 

              இந்த முறை நிறையத் தரணும் .உங்க தொழில் ,குடும்பம் நல்லா இருக்கும்.மறுக்காமத் தீபாவளிக்குத் தருவது கணக்கா இல்லாம ரவுண்டா இருக்கட்டும் என்று வழக்கமாய் வருபவர் துவங்கினார். எவ்வளவு தந்தாலும் சில சமயம் மேலும் மேலும் கட்டாயப்படுத்துவார்கள் என்பது எனக்கு வழக்கமாகி விட்டது .இந்த மாதிரி டொனேசன் விசயங்கள் கம்பெனி ஒரு வழிகாட்டுதலைச் சொல்லிவிட்டு நகர்ந்து கொள்ளும் .தீபாவளிக்குத் தீயணைப்புத் துறைத் துவங்கி போஸ்ட்மேன் வரை ஒரு முன் தயாரிக்கப்பட்ட பட்டியலை நீட்டிப் அனுமதி பெற்று பணம் எடுத்து வைத்துக்கொள்வேன் .அந்தப் பட்டியலிலும் இவர்கள் வருவார்கள் .அது இல்லாமல் வருடாந்திரச் சித்திரை மாதம் பௌர்ணமிக்கு  கூத்தாண்டவர் கோயில் விழாவுக்கு முன் இப்படி வருவது வழக்கம்தான். 

                 கொடுத்த  நூறு ரூபாய் நோட்டுக்களை வந்தவர்களில் ஒருவர் வாங்கி எண்ணிப்பார்த்து விட்டு, அந்த நோட்டுக்களைப் பஸ் கண்டக்டர் நீள வாக்கில் மடிப்பது போல மடித்து, தன் உதடுகளுக்கிடையே ஒரு முறைக் கவ்வி எடுத்து, என் தலையைச் சுற்றி என்னிடமே கொடுத்து விட்டு இரண்டாயிரத்து ஐநூறு தரணும் என்றார் .போன முறை தந்ததை விட இந்த முறை அதிகம் இது சந்தோசமாக வாங்கிக்கங்க என்றேன் .அதில் எப்போது வரும் அந்தத் தி.ந தன் கழுத்தின் அணிந்திருந்த தாலியைக் காட்டி எங்கத் திருவிழாவுக்கு மட்டும்தான் அதிகம் செலவாகும் அதான் கேட்கிறோம் என்றார். 

           சித்திரா பௌர்ணமியன்றுக் கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு அங்கேயுள்ள கோயில் அர்ச்சகர்க் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலிக் கட்டிக்கொள்வதுதான் கேள்விப்பட்டு இருக்கிறேன் .இது புதிதாய் இருந்தது .எழுதுகிற மனது விசாரிக்கத் தூண்டியது .ஆனால் மொத்த அலுவலக மெர்சன்டைசர்களுக்கும் நிறைய வேலையிருந்தும் அதெல்லாம் கெடுத்துக்கொண்டு அவர்கள் பார்வையும் கவனமும் சிந்தாமல் சிதறாமல் இங்கேதான் இருந்தது.எனவே கேள்வியைத் தவிர்த்து விட்டு ஒரு வழியாய் கொடுத்த தொகையை பெற்றுச் செல்ல  சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டேன். 


        திண்டுக்கல்லில் இருக்கும் போது நான் வேலை பார்த்த ஷோரூமிற்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் ஒரு திருநங்கை வருவார் .அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் சாந்தி. என்னுடன் வேலை பார்ப்பவர் ஐந்தோ பத்தோ கொடுத்து விட்டு ,அவரை உட்காரவைத்து நிறையக் கேள்விகள் கேட்பார்.அதில் சில சமயம் சென்சார்போர்டே தப்பி ஓடும் அளவுக்கு ஆபாசக் கேள்விகள் அதிகமிருக்கும்.சாந்திக்கு சொந்த ஊர் நிலக்கோட்டைப் பக்கம் .அங்கு ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும் வருமானம் போதாதற்கு இப்படி வீதி வீதியாய் வசூல் செய்வதாக என்னுடன் பணியாற்றும் சாந்தியிடம் கேள்வி கேட்பவர் சொல்லியிருக்கிறார். 

         சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமத்திருந்த போது என் சகோதரரும் நானும் திண்டுக்கம் கடைவீதிப் பக்கம் டூவீலரில் போய்க் கொண்டு இருந்த போது சாலையில் ஒரு பெண் கை காட்டி வழிமறித்து நிறுத்தியது.அப்பா எப்படி இருக்கிறார் என்று அக்கறையுடன் விசாரித்துச் சென்ற பின் அண்ணன் அது யாருன்னு உனக்குத் தெரியுதா ? அண்ணிகூடத் திண்டுக்கல் ஜி.ஹெச்சில் வேலைப் பார்ப்பதாகச் சொன்னார் இதுதான் தமிழகத்தில் முதல் திருநங்கை நர்ஸ் என்றார். 

               இங்குத் திருப்பூர் வந்த போது என்னுடன் பணியாற்றும் நண்பர் தனக்கு நடந்த சம்பவம் ஒன்று சொன்னார்.ஒரு முறை ஊருக்குப் போய்விட்டு இரவு ஒன்பது மணிக்குப் பஸ் நிலைய விட்டு வெளியே வரும்போது , ஒரு தி.ந  நணபரின் கையைப் பிடித்து அழைத்து இருக்கிறார்.நண்பர் அவர்கள் மேல் கண்ணாபின்னாவென்று மதிப்பு வைத்திருப்பவர். அந்தத் திரு நங்கையின் இன்னொரு கையைப் பற்றிக்கொண்டு  உங்கள் மேல் எத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் என்று சட்டெனெக் கண்கலங்கி விட்டாராம்.கையைப் பற்றிய அந்தத் தி.ந உடனே அங்கிருந்த மற்ற திருநங்கைகளையும் அழைத்துப் பக்கத்திலிருந்த கோவிலுக்கு நண்பரை அழைத்துச் சென்று அவருக்கு ஆசீர்வாதம் பண்ணி நெற்றி நிறையக் குங்குமமிட்டு ,எங்க சாமி மாதிரி நீ என்ன உதவி வேணுமின்னாலும் எங்களக் கேளுன்னு சொல்லி  அனுப்பி வைத்தார்களாம் .

             சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வாழ்ந்த போது விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீத் தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனித் தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று வரப் பல முறை முயற்சி செய்து இருக்கிறேன் .ஆனால் அங்கிருந்த நண்பர்கள் தடுத்து விட்டார்கள் .இங்கும் சிலர் அவர்களை விடுவதில்லை .பெரிய கலாட்டாவாக இருக்கும்.நம்மால் சகித்துக்கொள்ள முடியாது என்றார்கள் .


பாலினப் போட்டி

          பெற்ற தாயின் கருவில் உருவாகும் ஆண் பிறப்பதா பெண் பிறக்க வேண்டுமா என்ற பாலினப் போட்டி பொறாமையின் விளைவால் ஏற்படும் மரபுப்பண்புகள் மாற்றமே இந்தத் திருநங்கையாக ஒரு ஆண் பிறக்கக் காரணம் என்கிறது Bill Hamilton ஆராய்ச்சி .உடல் மட்டும் ஆணாகவும் பாலின ஈர்ப்பில் ஒரு பெண் விரும்புவது போலவே இன்னொரு ஆணை விரும்புபவர்களைத் திருநங்கை என்கிறோம் .இது கருவிலேயே உருவாகும் ஒரு குறை.இதற்கு அவர்கள் பொறுப்பில்லை .ஆண் கருவில் Minor histocompatibility antigen ஜீனால் உருவாகும் புரதக்குறைபாட்டுக்கு எத்தனையோ காரணங்கள் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளுக்கு விடைகிடைக்காத பெரிய முடிச்சாகப் போய்க் கொண்டு இருக்கிறது . Anti-Müllerian hormone கையில்தான் கருவில் ஆண் உறுப்பு வளர்வதாற்கான சாவி இருக்கிறது.இந்த ஹார்மோன் சோரம் போனால் பெண்ணாகப் பிறக்கக் கருப்பையும் ஃபோலோப்பியன் ட்யூப்பின் உருவாகி விடுகிறது.வீட்டில் மட்டுமல்ல கருவில் கூட ஆணுக்கு மதிப்பு அளந்துதான் வைக்கப்பட்டுள்ளது .பெண்தான் எப்போதும் மேல் என்பதே இயற்கைச் சட்டம் ! 

        சரி நம்ம காபாரதத்தில் சகல லட்சணமும் பொருந்தி ஆணாக அர்ஜுனனுக்கும் - இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி உலுப்பிக்கும் பிறந்ததாக அரவான் பேசப்படுகிறான்.அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுள். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். நம்மைப் பிடித்தாட்டும் நவக் கோள்களில் சுபகிரக வரிசையில் புதனும், அசுபக் கிரகத்தில் சனியும் ஆணும் பெண்ணுமற்ற அலிக்கிரகம் எனப்படுகிறது (சனி மட்டும் சேரும் கிரகத்தைப் பொருத்து ஆண்கிரகமாகவும் மாறும்) இத்தனை அந்தஸ்த்துப் பெற்ற திருநங்கைகளை மணிரத்தினம் படத்தில் மட்டுமே மதிப்பாகப் பார்க்க முடிகிறது .மற்ற படங்கள் அவர்களைக் கேளியாகவும் அருவருப்பாகவுமே காட்டி இன்னும் கீழ் நிலைக்குக் கொண்டு போய்கொண்டு இருக்கிறது . 

             நமது தேசம் திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்று அறிவித்து ‘இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் வழங்கும் பாதுகாப்பும் உரிமையும் மற்றவர்களைப் போல அவர்களுக்கும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்துள்ளார்கள். தீர்ப்பில் திருநங்கைகளின் வரலாற்றுச் சான்று, இன்றைய நிலை, Universal Declaration of Human Rights (UDHR) கோட்பாடுகள் சர்வதேச அளவில் திருநங்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட Yogyakarta கோட்பாடுகள் போன்ற வற்றினைச் சான்று கூறி ஒரு சிறப்புமிக்கக் காலம் போற்றும் தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். 


               எழுத்தாளராகப் பிரியாபாபு , நாட்டியத் தாரகையாக நர்த்தகி நடராஜன் , சமூக ஆர்வலர் பாரதிகண்ணம்மா , இன்னும் அரசியல்  ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பலர் இருந்தும் திருநங்கைகள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை , அனுபவம் ,முகம் சுளிப்பு ,அருவருப்பு இன்னும் என் நிறைய இருக்கிறது .ஆண்களும் , பெண்களும் ஒரு சேர ஒதுக்கும் போதும் வெவ்வேறு ஊர்களில் விதவிதமாக நடத்தப்படுவதைப் பார்க்கும் போது அவர்களின் சமூகத்தின் மிதானக் கோபம் இன்னும் வலுக்கிறது.எந்தப் பாலினத்திலும் சேராத நாங்கள் விரும்பியா பிறந்தோம் என்ற குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது .சமீபத்தில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி ”சதையை மீறி” என்ற குறும்படத்தில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் மூலம் சந்தோஷ் நாராயணனின் இசையில், 

''அவர்கள் பாலை அவர்கள் சொல்ல 
சர்க்கரை மட்டும் கலப்போம் 
நாம் மனிதரே!'' 

இந்தப் பாடல் கேட்கும்போது , இன்னும் நாம் பயணிக்க வேண்டிய மனிதாபிமானப் படிக்கட்டுகளைக் காண்பிக்கிறதா ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக