வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

புத்த(க) தரிசனம் . திருப்பூர் 14 ஆவது புத்தகத் திருவிழா . Book fare



                        ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின் போதும் ஒவ்வொரு முறையும் ஒரே இடத்தில் இத்தனை நூல்கள் இன்னும் வாசிக்க இருக்கிறது என்று பார்க்கும் போதுதான் நம் ஆயுள் ரேகை மேலுள்ள நீட்சியின் அவசியம் புரிகிறது .நம் இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. ஒருவேளை புத்தர் உயிரோடு இருந்து, புத்தகம் வாசிப்பதற்காக இன்னும் வாழ ஆசைப்படுகிறேன் என்று கேட்டு இருந்தால் அவர் மறுத்து இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது ! ஆமாம் அங்கு வாசிக்காமல் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் நமக்காகவே காத்திருக்கும் ஒரு புத்தன்தானே ? 

                           புத்தகத் திருவிழா இந்த முறைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது . 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்தும் ஏனோ அதிகமாக விற்கும் புத்தகங்கள் மட்டும் போதும் என்ற கணக்குடன் செயல் பட்டு இருப்பதாகவே தோணுகிறது. சென்ற புத்தகத் திருவிழாவில் ஒன்றரைக்கோடிக்கு விற்பனை நடந்து இருப்பதாகச் சொன்னார்கள் .அதனாலோ என்னவோ எங்கு பார்த்தாலும் மிக அதிகமாக ஏற்கனவே விற்றப் புத்தகங்கள் மட்டுமே இருக்கிறது .வியாபாரம் மட்டுமே முதல் நோக்கம் என்பது தவறில்லை . ஆனால் மக்கள் ரசனைய நுட்பமாக அறிந்து செயல்படுவது மிக முக்கியமாகப் படுகிறது .பல ஸ்டால்களிலும் ஒரே மாதிரிக் கல்கி , பாலகுமாரன் ,சுஜாதா,ஜெயமோகன், இவர்களையே பரப்பி வைத்து இருப்பது அடுத்தத் தலைமுறை சிந்தனைக்கு வழிகாட்டுவதாகத் தோணவில்லை .மேலும் இது விஞ்ஞான வழியாகாவே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள ஆசைப்படும் காலம் .அதைப்பற்றிய படைப்புகள் இன்னும் முன்னிறுத்தப்படவேண்டும்.

                           ஒருவேளை புத்தக வெளியீட்டாளர்கள், திருப்பூர் மக்களின் ரசனை இப்படித்தான் என்ற ஒரு தவறான புரிதலில் இருக்கிறார்களா ? இது தொழில் நகரம் இங்குக் கௌரவத்திற்கு மட்டுமே புத்தகம் வாங்க வருவார்கள் என்று யோசித்து வைத்திருக்கிறார்களா ? தெரியவில்லை. சென்ற முறையை விட இந்த முறைப் புத்தகத்திருவிழாவின் உற்சாகத்தையும் வித்தியாசத்தையும் வெளிப்படுத்தும் ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் நகரெங்கும் இருந்தது .சென்று வர வசதியாய் விசாலமான இடத்தேர்வு எனப் பிரமிக்க வைக்கும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் - பாரதி புத்தகாலயம் அமைப்பினர்கள் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து இந்த ஒரே மாதிரிப் புத்தகக் குவியல்களைத் தவிர்க்க ஆலோசனை வழங்குவதும் கண்கானிப்பதும் நல்லது . நம் ஊருக்கு வந்து வந்து போகும் விற்பனையாளர்களும் - மக்களும் ஒரு சேரப் பயன் பெறும் போது அடுத்த முறை எப்போது நடக்கும் என்ற ஆவல் கூடும் . 

             புத்தகத் திருவிழாவில் எப்போதுமே எனக்கு இருக்கும் சங்கடம் .ஒரு ஸ்டாலில் புத்தகம் வாங்குவோம் .பில்லும் தருவார்கள் . ஆனால் அடுத்த ஸ்டாலில் நுழையும் போது ஏற்கனவே வைத்திருக்கும் புத்தகத்தை வைத்துக்கொள்ள ஒரு தர்மசங்கடம் நிலவும் .ஒருவேளை இங்கு எடுத்ததோ என்று வாங்கிப் பார்த்தால் என்ன செய்வது என்ற கூச்சம் தொற்றிக்கொள்ளும் .ஆனால் அதே சமயம் பார்க்கட்டும் காசு கொடுத்துதான் வாங்கி இருக்கிறோம் என்ற சவால் மனசில் வந்து போனாலும் அது ஒரு அழையா விருந்தாளியாகக் கூடவே மனசுக்குள் வந்து விடுகிறது .பாவம் விற்பனையாளர் எத்தனைபேரைத்தான் கவனிப்பார் ? இதிலும் சில உள்ளே நுழையும் இடத்திற்கு எதிர்பக்கம் சிலர் நுழைவார்கள் . 


                                    ஆனால் அந்தச் சங்கடத்தை நம் பெரியார் புத்தக நிலையம் தீர்த்து வைத்தது .சார் இந்தாங்க இந்தப் பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் அளித்தார் .தமிழர்களுக்குத் தந்தை பெரியார் இன்னும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார் . இதையே ஏன் உள்ளே நுழையும் போதே நம் புத்தகத் திருவிழா நடத்தும் அமைப்புத் தங்கள் விளம்பரத்துடன் இதே போல எதாவது குறைந்த விலையில் கொடுக்கலாமே ? நிச்சயமாய் வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அந்தப் பையை வாங்க மாட்டார்கள் .ஒரு வகையில் அது வந்து போனவர்கள் சென்ற பின்னும் அதை ஞாபகப்படுத்துமே ? 

                      நம் கோவில்கள் இல்லாத ஊர்களில் குடியிர்க்கலாகாது என்று சொல்வதைப் போல நல்ல விசயங்களை ஞாபகப்படுத்திக்கொண்டேதான் இருக்க வேண்டும் . புத்தகத் தரிசனமும் ஒரு நல்ல விசயம்தானே ? 


1 கருத்து: