வெள்ளி, 18 அக்டோபர், 2013

நேர்முக (இண்டர்வியூ ) கூத்துக்கள்


                   இப்போதுதான்  எங்கள் நிறுவனத்தில் இண்டர்வியூ புயல் ஓய்ந்தது .எப்போதுமே மெர்சண்டைசிங் ( merchandising ) மற்றும் குவாலிட்டி (Quality ) அழைப்புக்கு எனது ஜீ மெயில் முகவரியும் ,மொபைல் எண்ணும் கொடுத்து விடுவதால் ,ஞாயிறு யாரெல்லாம் தினமலர் வேலை வாய்ப்பு பக்கத்தை   பார்க்கிறார்களோ எனக்கு கூப்பிட அரம்பித்து விடுவது வழக்கம் .

                  இதை மறந்து விட்டு வெகு நாளைக்கு பிறகு ஒரு விருந்துக்கு பந்தி பறிமாற நான் போக ஒவ்வொரு ஒரு இலையை கடக்கும் போதும் ஒரு போன் வர துவங்கியது ... சிலர் பந்தா பண்ணுவதாக ஓடாத படத்தின் போஸ்டரை பார்ப்பது போல என் மேல் பார்வயை மேய விட பாதியில் எஸ்கேப் ஆகி ஒதுங்கிவிட்டேன் .ஆனால் இது இங்கு விசயமல்ல ..நான் அனுபவித்த நேர்முக (இண்டர்வியூ ) கூத்துக்கள் பற்றி

பில் கலெக்க்டர் !

                                ஐடிஐ முடித்து நேர்முக தேர்வுக்கு காத்து  இருந்த சமயம் அது . அப்பாவின் முதலாளி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் செயலாளர் பதவிக்கு அப்போதுதான் தேர்ந்தெடுக்க பட்டு இருந்தார்  .எனவே சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒருமுறை ரசீது கொடுத்து பணம் பெறும் வேலைக்கு, ஆள் போடும்வரை என்னை வசூலிக்க  ஒரு மாதம் மட்டும் கட்டாயத்தின் பேரில் அமர்த்த பட்டேன் .அப்போதுதான் வேலை பற்றி படிப்பதர்க்கும் அதை நேரிடையாக சந்திப்பதர்க்கும் உள்ள இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது .ஒரு மாதம் முடிந்த போது (முதல்) சம்பளம் வாங்க அப்பாவின் முதலாளியை பார்க்க போனேன்.அப்போதுதான் அவர் சொன்னார் இன்னும் உனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை முடிவு செய்யவில்லை நாளைக்கு இவரை போய் பார்த்து வாங்கி கொள்ள சொன்னார் .போனேன் .அதுவும் ஒரு பஸ் செட்.சட்டையில்லாமல் ஒரு மனிதர் கனத்த  குரலுடன் பேசிகொண்டு இருந்தார் .என்னை ஒரு காக்கி சட்டை(கண்டக்டர்) அறிமுபடுத்தினார் .உட்கார சொல்லாமல் உனக்கு எவ்வளவு சம்பளம் என்றார் ? எனக்கு அப்போதெல்லாம் கம்யூனிச சித்தாந்தின் மேல் நம்பிக்கை அதிகம் .அதன் படி உழைப்பவன் வேர்வை காய்வதர்க்குள் கூலி தந்துவிடவேண்டும். ஆனால் இங்கு ஓடி ,ஓடி மாதம் பூரம் வசூலித்து கொடுத்து விட்டு சம்பளம் கேட்டால் எவ்வளவா? எனக்குள் இருந்த அறைகுறை படிப்பறிவும் , கம்யூனிச சிற்றறிவுக்கும் யாரோ தீவைத்தது போல பற்றி கொள்ள , ஒரு மனிதன் வாழ்வதர்க்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு வேண்டும் என்றேன் .எதிரே இருப்பது யார் என்பதை கவலைப்பட கூடாது என்று தீர்மானித்து கொண்டு .அவர் இதை எதிர்பார்க்கவில்லை .உற்று பார்த்து உனக்கு வேண்டியதை சொல் என்றார் .அதை என் அப்பாவிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறேன் என்றேன் .என்னை போக சொல்லிவிட்டார் .அடுத்த நாள் என்னை அப்பாவின் கம்பனிக்கு அழைத்த முதலாளி ,அந்த அந்த ரசீது புக்கெல்லாம் கொடுத்து விட்டு பஸ் கம்பனிக்கு வேலைக்கு வந்து விடு என்றார் .நான் தயங்கி கொண்டே வெளியே வரும் முன்  ,நேற்று நீ பேசியது யார் தெரியுமாப்பா ? என்றார் .தெரியாது சார் என்றேன் .அவர்தான் அசோசியேசன் தலைவர் .பயமில்லாமல் நீ பேசியதர்க்கு இங்கு சேர்த்து கொள்ள சிபாரிசு பண்ணியதே அவர்தான் என்றார்  .
                 எனக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் கிடைக்கும் வரை அங்கு சுமார் இரண்டரை வருடம் பணிபுரிந்தேன் .
             

     அப்ரண்டீஸ்.
      
                அடுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் நேர்முகதேர்வு .பழைய எனது ஐடிஐ நண்பர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள் .அதில் ஒருவன் பால கிருஷ்ணன் .காவல்துறையில் அவன் அப்பா பணிபுரிகிறார் .எனக்கு இரண்டு பேருக்கு முன்னாள் அவன் அழைக்கப்பட்டான் .போய் சில நிமிடங்களில்  அவன் திரும்ப, எங்களுக்கு நேர்முக தேர்வு பயம் இருந்ததால் அவனிடம் ஆவலாய் உள்ளே என்ன கேள்வி கேட்கிறார்கள் என்றதர்க்கு எதுவும் சொல்லவில்லை . நாங்க முன்னாடியே ஏற்பாடு பண்ணிட்டோம் என்பதை மட்டும்  சொல்லிவிட்டு போய்விட்டான் .
                         
மொத்த வெல்டிங் ?
                  என்முறை வந்தது .மூன்று பேர் கேள்வி கேட்க காத்து இருந்தார்கள் .வெல்டிங் எத்தனை வகை  என்றார்கள் முதல் கேள்வியாய்.சார் எனக்கு தெரிந்த ஐடிஐ வெல்டிங் சொல்லவா ? அல்லது உலகத்தில் உள்ள மொத்த வெல்டிங் சொல்லவா சார்  என்று திருப்பி பணிவுடன் கேட்டேன் .ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள் .உனக்கு தெரிந்த வெல்டிங் எல்லாத்தையும் சொல்லுங்க என்றார் .நான் எனது ஐடிஐ சீனியர் வேல்முருகன் திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பார்த்து கொண்டு இருந்தவர் மூலமும் ,மெக்கானிகல் என்ஜீரியங் நண்பர் மூலம் அறிந்த விசயங்களை சொன்னேன் .’இண்ட்ரஸ்டிங்’ என்றார்கள்.

கப்பலில் ஓட்டை

              அப்புறம் ஏன் உங்கள்  ஐடிஐ படித்த பாலகிருஷ்ணன் நடுகடலில் கப்பலில் ஓட்டை ஏற்பட்டால் எந்த முறையில் வெல்டிங் செய்வாய் என்றதர்க்கு கரைக்கு கொண்டுவந்து ஆர்க் (Arc ) வெல்டிங் செய்வேன்னு எப்படி சொல்றார் என்று கேட்டார் .நான் உள்ளுக்குள் சிரித்து கொண்டேன் .அந்த இண்டர்வியூ வெறும் கண் துடைப்பு என்று அவன் சொன்னதை இங்கு எப்படி சொல்வது ?ஆனாலும் எனக்கும் அப்ரண்டீஸ் கிடைத்தது .என்ன பாலகிருஷ்ணன் திண்டுக்கல் RMTC நான் பழனியில் RMTC (ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம் )


அடுத்த எனது இண்டர்வியூ ,எனது கனவு நிறுவனமான TVS நிறுவனத்தில் பணிபுரிய எடுத்து கொண்ட முயற்சி பற்றி ...

4 கருத்துகள்: