எல்லோரு வீட்டிலும் மகன் களோ மகள்களோ எப்படி வர வேண்டும் என்ற பாட்டிமார்களுக்குக் கனவு இருக்கோ இல்லையோ பேரன் பேத்திமார்கள் இப்படித்தான் வரவேண்டும் என்ற கனவை சுலபமாக விதைத்து விடுகிறார்கள். அவர்கள் டாக்டர் ,வக்கீல் தவிர அவர்கள் கனவு அதிகார வர்கத்தில் சில சமயம் வேறு யாரும் வருவதில்லை . அப்படியே வந்தாலும் அது கவர்மெண்ட் வேலையாக இருக்கும் இன்றைய பாட்டிமார்களுக்கு அப்படிக் கனவு குறைந்து வரக் காரணம் இப்போதைய படிப்புகள் எதுவும் புரிவதில்லை என்பது கூட இருக்கலாம்.அல்லது நாடக தொடர்கள் அதை யோசிக்க விடாமல் நிரப்பி இருக்கலாம் ! அதெல்லாம் கூட ஒத்துக் கொள்ளலாம் .ஆனால் அவர்கள் நம் நலனுக்காகச் சமயபுரம் மொட்டை திருப்பதி மொட்டை ,இங்க பால்குடம் எடுக்கிறேன் , அங்க அக்னிச் சட்டி எடுக்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார்களே அதை எதில் சேத்திக் கொள்வது ? தெரியவில்லை .
என்னோட பாட்டி (அப்பாவின் அம்மா ) தாத்தாவை அனுப்பிவிட்டு போகும் முன் எனக்காக அம்மை பார்த்த போது அது நீங்க , திண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு அக்னிச் சட்டி எடுப்பதாக வேண்டிக் கொண்ட சில வருடங்களில் தாத்தாவை பார்க்க கிளம்பிவிட்டார் .அவர் உயிரோடு இருக்கும் வரை அந்த மகமாயிடம் , என் வேண்டுதல் நிறவேற்றும் தன் கை கால் சுகம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்வார் பாட்டி . பல வருடம் இப்படி ஏமாற்றித் தனது ஆயுளை தள்ளிப் போட பார்த்து இருக்கிறார் .மனிதனுக்கே கொடுத்த கடன் திருப்பித் தரவில்லை என்றால் கோபம் வரும். கடவுளுக்குச் சொல்லவும் வேண்டுமா ?
சில நாளாய் எங்கேயும் என்னை விட்டு வெகு தூரம் போகாதே என்று புலம்பி கொண்டே இருப்பார். .ஒருநாள் நத்தம் பக்கத்தில் புதிதாய் திருமணம் ஆன நண்பர் தங்கையின் மாப்பிள்ளை வீட்டுக்குக் கட்டில் பீரோ கொண்டு போய் இறக்கிக் கொண்டு இருந்தோம்.பின்னாலேயே நண்பரின் தம்பி வந்து விசயம் சொன்னான் .எனக்கு விவரம் தெரிந்த பிறகு வீட்டில் சந்திக்கும் முதல் மரணம் அது.எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை .வீட்டுக்கு வந்தோம் .முதல் அறையில் பாட்டியின் உடல் கிடத்தப் பட்டு இருந்த்து .தலை மாட்டில் ஒரு லட்சுமி விளக்கு மெல்லிய சுடருடன் காற்றில் அசைந்து கொண்டு இருந்தது. உயிர் பிரிந்து வெகு நேரம் கழித்துப் பார்த்ததால் கை கால் விறைத்த நிலையில் , கால் நீட்டி படுக்க வைக்க ஏதுவாக இல்லாமல் , உட்கார்ந்த மாதிரி இருந்தது பாட்டி உடல் .ஆனால் கை மட்டும் பிரிக்க முடியாமல் எதையோ கடவுளிடம் வேண்டிக் கொள்வது போல ’கைகூப்பிய’ நிலையில் இருந்தது.
பாட்டி இறந்த முதல் வருடம் முடிந்த கையோடு அவர் யாருக்காக வேண்டினாரோ அவர்தான் அந்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதை .அம்மா சொல்ல .நான் முடியாது என்றேன்.வழக்கம் போல அப்பா முறைத்துப் பார்த்தார்.ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி? அப்படி நான் தயங்க இரண்டு பெரிய காரணம் இருக்கிறது .பாட்டி வேண்டிக் கொண்ட கோட்டை மாரியம்மன் கோவில்பின்புறம்தான் நான் +2 வரை படித்த பள்ளி.அங்கு வருபவர்கள் சாமி வந்து ஆடுவதைப் பார்த்து பயங்கலந்த கேளியாய் நினைத்து இருக்கிறேன் .இன்னொன்று அந்த அக்னி சட்டி எடுக்கும்போது சட்டை போட கூடாது .நான் குளிக்கும் போது தவிரச் சட்டை போடாமல் இருந்ததே இல்லை .அதிலும் கேரளா ,கன்னியாகுமாரி கோவில்களுக்குள் சட்டை போடாமல போகக் கூடாது என்பதால் இது வரை அங்குப் போயும் , உள்ளே போனதில்லை .கூச்சமே எனது பாதுகாப்பு என்று ( சத்திய சோதனையில் ) சொன்ன காந்தியடிகளூக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அதுதான் .ஆனால் அப்பாவின் முறைப்புக்கு முன்னால் இந்தக் கசப்பு மருந்து ஒரு பொருட்டல்ல .ஆனால் திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலிருந்து கோட்டைமாரியம்மன் கோவில் வரை யாரெல்லாம் என் சட்டையில்லாத உடம்பை பார்ப்பார்களோ ?
விரதம் ,தலைமாட்டில் தினமும் வேப்பிலைக் கொத்து, காலை
மாலை குளியல் டி.வி பார்க்கவும் சினிமா பார்க்கவும் தடை .ஓர் இளைஞனுக்குத் தரக் கூடாத தண்டனைகள் வரிசை கட்டி அடித்தன.எல்லாம் பொருத்து பூமியாண்ட பின் அந்த அக்னிச்சட்டித் திருநாள் வந்தது .என்னுடன் அண்ணியும் எடுத்தார்கள் .அவர்கள் கையில் நிறைய வேப்பிலை பரப்பி அதன் மேல் அக்னி வளர்த்த சட்டியை வைத்தார்கள் .நான் வேண்டாம் என்றேன் .என் பக்தி உண்மையாய் இருந்தால் கைகள் வெப்பத்தால் பாதிக்கக் கூடாது என்று கடவுளுக்குச் சோதனை வைத்தேன் .அந்த வயசுக்குரிய பிடிவாதம்.கோவிலுக்குள் சென்று உள் பிராவகம் சுற்றும் வரை கை சுடவில்லை கடவுள் பாஸ் ஆகிவிட்டார்.ஆனால் கடவுளுக்குப் பரிட்சை வைத்ததால் என் மேல் கோபம் போல ! பின்னால் வந்த அண்ணியின் அக்னி சட்டி ஓர் இடத்தில் உள் பிராவகம் சுற்றி வரும்போது கூட்டத்தில் தடுமாறி சமாளிக்க முடியாமல் என் இடது பின் தோலை நல்ல வெப்பத்தோடு பதம் பார்த்து விட்டது .
அப்போதுதான் அந்த ஒரு விசயம் நடந்தது.யாரோ ஓர் இளம் பெண் வேண்டுதல் போல ! என் காலுக்குப் பாத பூஜை செய்வது போலத் தண்ணீர் ஊற்றினார் கடவுளே இதென்ன சோதனை என்று உரக்க மனசு கூவியது .இந்த வேண்டுதலில் எனக்கு வேண்டிய பாட்டியின் கடன் அடைத்து விட்டேன் .அதை மீறி எனக்கு எதாவது ஒரு நன்மை நடக்க இருந்தால் இதோ இந்தப் பெண்ணுக்குச் செய்து விடு என்று கோட்டை மாரியம்மனை கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக