சனி, 9 மே, 2015

சண்டையிலக் கிழியாத சட்டை இருக்கு !


எல்லாத் தனியார் நிறுவனத்திலும் அதிகாரம் பண்ண வாய்ப்புத் தேடுபவர்கள் அதிகம் .அவர்களை வைத்துக் கொண்டு சில நிறுவனங்கள் சில வேலைகளைச் செய்து கொள்ளும் .அதிகம் பிரச்சனை வந்தால் அவரை ஊறுகாயாக்கி விட்டு நிறுவன மேலாளர் அல்லது முதலாளிகள் கூடக் கைகலுவி விட்டுத் தப்பித்துக் கொள்வது வழக்கம் அப்படி அதிகார விரும்பியாக ஆசைப்பட்ட என்னை ’இதற்காகத்தானே ஆசைப் பட்டாய் ’ என்பது போல நான் முன்பு வேலைப் பார்த்தப் பஸ் கம்பெனி நிர்வாகம் ஒரு கூடுதல் அதிகாரம் தந்தது.அது உசிலம்பட்டி வண்டிக்குச் செக்கிங் இன்ஸ்பெக்ட்டர் வேலை .

                       விசயம் இதுதான் நான் மேற்பார்வையாளரகப் பணிப் புரிந்தப் பஸ் கம்பெனியில் ஆறு பஸ்கள் + ஒரு ஸ்பேர்ப் பஸ் இருந்தது . நான்கு பஸ்கள் திண்டுக்கல் to காரைக்குடி.மற்றொன்றுத் திண்டுக்கல் to மதுரை கடைசி ஒன்று, திண்டுக்கல் to உசிலம்பட்டி.இந்தக் கடைசிப் பஸ்தான் என் அதிகாரப் போதையைத் தூண்டியது .காரணம் இந்தப் பஸ் அதிகாலை எங்கள் கம்பெனி விட்டு கிளம்பி இரவு பத்துக்கு மேல் தான் திரும்பிக் கம்பெனிக்கு வரும் .முதலாளியின் கண்ணில் படும் வாய்ப்புக் குறைவு .எனவே மேற்பார்வையாளர்களுக்கு அந்தப் பஸ் மீது அதிக அக்கறையும் பொறுப்பும் இருந்தது அதிக நாள் அந்த நிறுவனத்தில் நான் இரவு பணியில் மட்டுமே இருந்து இருக்கிறேன் .அதனால் அந்தப் பஸ் பற்றிய அத்தனை தேவைகளும் .குறைபாடுகளும் ,பிரச்சனைகளும் என்னை மட்டுமே சார்ந்தவை .எனக்கு இந்தச் சவாலான வேலை மிகவும் பிடித்து இருந்தது.காரணம் பேருந்தின் மீது இருந்த காதல் .

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் . எவ்வளவு பெரிய வாகனம் எத்தனை மக்களைச் சலிக்காமல் ஏற்றிக் கொண்டு போகிறது , எத்தனையோ மக்களின் ஊர்களை, மனங்களை ,பயணங்களை இணைக்கிறது ? அந்தப் பெரிய வாகனத்தின் ஒவ்வொரு பாகமும் உங்களுக்கு அத்துப்படியானால் சும்மா காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளத் தோணாது ?      எனக்கும் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும் கொஞ்சம் இருந்தது  காரணம் பஸ் பாடிக் கட்டும் ஒரு தனியாரிடம் மூன்று மாதமும், ITI வெல்டர் என்பதால் அரசுப் போக்கு வரத்தில் அப்பரண்டிஸ் (வேலைப் பழகுனர் ) என்பதாக ஒரு வருடத்தில் பாதி என்ஞ்சின் செக்சனில் வேலை ,மீதிப் பராமரிப்புப் பணி ( மெயிண்டனென்ஸ்) என அந்த அனுபவமே எனக்கு மிகப் பெரிய பஸ் ஒரு காதலனாக உருவெடுக்க வைத்தது.ஆனால் இதெல்லாம் விட என்னுடைய ஜீன்களிலும் அந்தக் காதல் அறிமுகம் இருந்தது .நான் பிறந்த வருடம் அப்பா சொந்தக் காரை விற்று விட்டு  (என் அதிருஷ்டமா ?) LGB , பஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறார் .எனவே என் ரத்ததிலும் ஆயில் வாடைத் தாக்கம் ஒட்டிக் கொண்டது போல !

                    சரி அதற்குள்   திண்டுக்கல் to உசிலம்பட்டிப் பஸ் போய்விடப் போகிறது அதைப் பற்றிப் பேச வேண்டும் .இரவு பணியிலிருப்பதல் நடத்துனர்களிடம் கணக்கு வாங்குவதும் . இன்வாய்ஸ் செக் பண்ணுவதும் நிறுவனம் கேட்காமாலேயே செய்து என் அதிகார எல்லையைக் கூட்டிக் கொண்டேன் கண்டக்டர்ளுக்கு இன்வாய்ஸ் செக் பண்ணும் செக்கருக்கு அடுத்து இன்வாய்ஸ் திருத்தும் எங்கள் மேல் தான் ஒரு பயம் இருக்கும். அப்படி உசிலம்பட்டி வண்டி இன்வாய்சில் ஒரு குறிப்பிட்டக் கண்டக்டர்ப் பணியிலிருக்கும் போது மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது , ஒவ்வொரு முறையும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது.இந்தப் பஸ் அங்குக் கடக்கும் நேரம் கூலித் தொழிளாலர்கள் வேலைகளுக்குச் செல்லும் நேரம் .அதைக் கண்டு பிடித்து அந்த நேரத்தில் செக்கிங் செய்யச் சிறப்பு அனுமதி ! பெற்று அந்த ஏரியாவில் அதிகாலைப் போய்க் காத்து இருந்தேன்.பொதுவாய் அந்த இந்த மாதிரித் தனியார் பஸ்சில் போகச் செக்கர் என்று சொல்லிக் கொண்டு இலவசமாக ஏறிக்கொள்ளலாம் .ஆனால் அந்தச் சிறப்பு அனுமதி அந்தப் பகுதி ஜெய விலாஸ் போக்கு வரத்தில் இல்லையென்பது அந்தப் பஸ் கண்டக்டர்க் கட்டாயமாக டிக்கெட்டை என் கையில் திணிக்கும் போதுதான் தெரிந்தது.திருட்டைக் கண்டு பிடிக்க வந்த காவல் துறைக்கே அபராதமா ?

அந்த ( திருடப்படும் ) குறிப்பிட்ட ஸ்டாப்பிங்குக்கு ஒரு ஸ்டாப் முன்னாடிக் காத்து இருந்தேன் தலையில் மஃப்ளர்ச் சுற்றி இருந்ததாலும் என்னை எதிர்பார்க்காததாலும் பஸ் ஏறும் போது எங்கள் பஸ் கண்டக்டர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை ( அப்படித்தான் முட்டாள் தனமாய் நம்பிவிட்டேன் ) .நானும் சுமாரான கூட்டம் மட்டுமே பஸ்சுக்குள் இருந்ததால் டிக்கெட்டும் எடுக்காமல் இருந்தேன்..அந்தக் குறிப்பிட ஸ்டாப்பிங் வந்தது .சுமார் 40 லிருந்து 50 பேருக்கு மேல் கையில் மம்பட்டி ,கடப்பாரை ,கொத்து , கூந்தாளம் , கூடை, இரும்புச் சட்டிச் சாப்பாட்டு வாலிச் சகிதமாக ஏற, பஸ் நிரம்பி வழிந்தது அடுத்த ஐந்து கி.மீட்டரில் இதே மீண்டும் கூட்டம் ஏறி இறங்கிக் கொண்டது .அவர்களோடு நானும் மெல்லப் பின் வழியாய் இறங்கிக் கொண்டேன் . நேரே வீட்டுக்கு போய் விட்டு இரவுப் பணிக்கு வந்தேன் .அன்றைய வசூலில் குறையவே இல்லை .சில நாள் விட்டு விட்டோம் .மீண்டும் வேறு இடத்தில் அதே கண்டக்டர்த் தன் தவறைத் தொடர .பகலில் வேட்டைக்குப் போனேன் ! அங்கு வைத்தார்கள் எலிக்கு வைப்பது போல எனக்கான பொறியை.!

                         அந்தக் குறிப்பிட்ட உசிலம்பட்டி ஏரியாவில் பஸ் போக்குவரத்து நிகழ்த்துவது கொஞ்சம் கத்தி மேல் நடப்பது போலத்தான் வேற்று ஊர்க்காரக் கண்டக்டரோ ட்ரைவரோ அந்த ரூட்டில் போகலாம் ஆனால் வர முடியாது கதைதான் !! .ஒருமுறை அப்படி அனுப்பியக் கண்டக்டர்க் குறுக்கே நின்று கொண்டு இருந்த ஒரு பெரிய மீசைகார நண்பரின்  காலைத் தெரியாமல் மிதித்ததற்காக ஓங்கி ஓர் அறை விட்டுப் பஸ் நிறுத்தப்பட்டது .அடுத்து ஒருமுறை வழக்கமான ட்ரைவர் கொழுந்தியாவின் கல்யாணத்திற்குப் போனதால் அசலூர் ட்ரைவர் போய் , ஓர் ஆட்டின் மேல் இடிக்க ,பஸ் ஒரு ட்ரிப்பைக் கட் பண்ணி அந்த ஊர்க் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது .வழக்கம்போல, ஒரு குயர்ப் பேப்பர் ,(வயர்லெஸ்) பேட்டரிக்கு டிஸிலெரி வாட்டர் பாட்டில் , ரெண்டு ரெனாட்ஸ் பேனாவோடு மேற்படி அந்த ஊர்க் காரகளைப் போலப் பெரிய மீசை வைத்து இருக்கும் காவல் துறையைக் கவனித்து விட்டு வர வேண்டியதாக இருக்கும் .

              சட்டெனெ உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த மக்களின் நேர்மை எனக்குப்
ரொம்பவே பிடிக்கும்.வாழ்வைச் சந்தோசமாகக் கொண்டாடுவதில் அவர்கள் ஊர் விசேசங்களே சாட்சி , அவர்களைப் போல மிகவும் பாசக்காரர்களை எங்கும் பார்க்க முடியாது . நட்புக்கு இலக்கணம் அவர்களேதான் .எதையும் முகத்துக்கு முன் கேட்பவர்கள்.நான் போன இடத்திலெல்லாம் அவர்கள் நட்பு உடனே கிடைத்து விடும் .அந்தக் கம்பீரமே எனக்கு அவர்களை அடையாளம் காட்டி ஈர்த்து விடும் தன்னை மதிக்க வேண்டும் என்பதை விடத் தன்னைத் தாழ்த்திப் பார்ப்பவனிடம் தனது கை வரிசையைக் காட்டாமல் வருவதே இல்லை . இந்தக் கடைசிப் பாயிண்ட்தான் அந்த மக்களுக்கு எதிராக எனக்கான பொறியை வைத்தார்கள்

                               நல்ல கூட்டம் .ஸ்டாப்பிங்கில் என்னைப் பார்த்ததும் அத்தனை கூட்டத்திலும் வணக்கம் சொன்னார் (அந்தத் தப்புச் செய்யும்) கண்டக்டர் எனக்குக் கெத்தாக இருந்தது சிலர் வேடிக்கைப் பார்த்தார்கள் யாரோ ஒருவரை எழுப்பி விட்டு முன் பக்கம் எனக்குச் சீட் கொடுத்தார் .அவர் விசாரித்ததர்க்கு மானேஜர் என்றார் .பஸ் நிரம்பி வழிந்தது .எந்த ஸ்டாப்பிங்கில் நின்றாலும் முதுகில் வியர்வைப் பூத்தது .சில நிமிடங்களில் கடைசிச் சீட்டில் சலசலப்புக் கேட்டது .பின்னால் திரும்பி பார்த்தேன் யாரோ இருவர் மடியில் பழைய டி.வி வைத்துக் கொண்டு அதெல்லாம் உன் சௌகரியத்துக்கு டிக்கெட் போட்டால் நாளைக்கு வண்டி நம்ம ரூட்ல வராது அப்பு ,பார்த்துக்க என்றார்ப் பஸ் எல்லோரின் கவனமும் அவர் மேல்தான் மாறியது …
கண்டக்டர் , எனக்குத் தெரியாது ,கம்பெனியில என்ன வாங்கச் சொல்றாங்களோ அதைத்தான் கேட்கிறேன் என்று சொல்லி நிறுத்தி இருந்தால் பரவாயில்லை .வேணும்ண்ணா எங்க மேனேஜர் அங்க உட்கார்ந்து இருக்கார்க் கேட்டுக்க என்ற கொக்கியப் போட்டு விட்டதோடு நிற்காமல் எல்லோரையும் தள்ளிக்கொண்டு என்னருகே வந்து நின்று கொள்ள , டி.விக்காரர்ச் சத்தம் என்னை நோக்கித் திரும்பியது.யாருயா மேனேஜரு உங்க இஷ்டத்துக்கு ரெண்டு டிக்கெட் கேட்டா உடனே தூக்கி வீசறதுக்கு எங்கப் போறது .?

எனக்குப் புரிந்து விட்டது .கோர்த்து விட்டு விட்டார்க் கண்டக்டர் .விசயம் இதுதான் பஸ்ஸில் டி.வி எடுத்து வர அந்த வாரம் முதல் இரண்டு டிக்கெட் வசூல் செய்யச் சொல்லி நிர்வாகம் சொல்லி இருந்தது .அதைக் கச்சிதமாய் எனக்கு எதிராக இந்தக் கண்டக்டர்ப் பயன் படுத்திக் கொண்டார் .மேலும் சில பேர் டிவிக்காரருக்கு ஒத்துழைப்புக் குரல் கொடுக்க ,நான் சரி வேண்டாம் பழைய டிக்கெட் போடுக்கங்கப் பஸ்சுக்குள்ள இதை எழுதி ஒட்டுங்க என்றேன் .ஆனாலும் சீட்டு மீசைக்காரக் குரல் ஓய்வதாக இல்லை..நல்ல வேளை இதற்குள் நான் செக்கிங் செய்ய வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது .கீழே இறங்கி நின்று கொண்டு இறங்குபவர்களீடம் டிக்கெட் கேட்டேன் .அது வழக்கம் .இரண்டு பேர்க் காசு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் டிக்கெட் தரவில்லை .சில பேர் முறைத்துக் கொண்டு கையில் திணித்து விட்டுப் போனார்கள் .ஒருவர் நின்று நிதானித்து ,என் முகத்தைப் பார்த்து - நாங்க ஒன்னும் ஓசியிலப் பயணம் பண்றவனுகக் கெடையாது இந்தா ஒ டிக்கெட் பெறக்கிக்க என்று சொல்லியதோடு டிக்கெட்டைக் கீழே வீசினார் . எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .குனிந்து எடுக்க மனம் வரவில்லை .கண்டக்டரைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஏதோ ஒரு திருப்தித் தெரிந்தது .

         இரவுப் பணிக்கு வந்து முதலாளியிடம் சொன்னேன் .அந்த கண்டக்டருக்கு
டூயுட்டி போடாதிங்க  காலைல என்னை வந்து  பார்க்கச் சொல்லுங்க என்றார். .அதற்குள் எல்லாப் பஸ் கண்டக்டர்களுக்கும் விசயம் போய் விட்டது .எங்க ரூட்ல எப்ப வருவீங்கன்னு விசாரணை வேற ! (தப்பித்து வந்தது எனக்கல்லவா தெரியும் ! சட்டை கிழியாம விட மாட்டாங்களே ?) .ஆனால் அடுத்த நாள் எனக்கு இன்னொரு அதிர்ச்சி ரகசியமாக  வந்தது  .அது அந்த ரூட்டில் போய் விட்டு வேண்டாம் எனக் காரைக்குடி ரூட்டுக்கு மாறிக் கொண்ட ஒரு டிரைவர் மூலம்  வந்தது .நான்  அந்தச் செக்கிங் போகும் முன்னே எங்கள் நிர்வாகத்தில் என்னுடன் பணிபுரியும் பகல் ஷிஃப்ட் சூப்பர்வைசர் இந்தச் செய்தியைக் கம்பெனிச் செக்கருக்குச் சொல்லி,அதை அவர்  அந்தத் திருட்டுக் கண்டக்டருக்கு, அதற்கு எதிரே அந்த ரூட்டில் வரும் இன்னொரு நிறுவனப் பஸ் மூலம் விசயம் போய்விடுமாம்  .ரூட் கிளியர் .

நல்ல நெட் ஒர்க்!

.இதில் இன்னொரு ’ஹைலைட் ’இது நிர்வாகத்துக்கும் தெரியுமாம் !! .

பலே !!!                                                  

1 கருத்து: