ஐந்தாவது படிக்கும்போது எனக்குச் சுத்தமா வராத கணக்குப்பாடத்தில் என்
வகுப்புத்தோழன் முகுந்தன் புலி . வகுப்பிலும் முதல் இரண்டு
இடத்திற்குள் வந்து விடுவான். எனக்குச் சின்ன வயதிலிருந்தே முதல் மதிப்பெண்
எடுக்கும் மாணவர்களோடு நட்பாசை உண்டு .அவன் வீட்டுக்கு ஒரு முறை போயிருக்கிறேன். அவன் வீட்டில் சின்னதாய் ஒரு தங்கை உண்டு. ஒரு சமயம் மோகன் நிறையப் பணம் பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்தான் .கேட்டதற்கு
வீட்டில் தருவதாகச் சொல்வான் .அது பொய்யா மெய்யாலும் பொய்யா என்பது பற்றி அக்கறை படாததிற்குக்
காரணம், எங்கள் வீட்டில் கையில் காசு கொடுத்து அனுப்பி வைக்கும்
பழக்கமில்லை .அவன் என்னை மட்டுமில்லை என் அண்ணனையும் சேர்த்து ஒரு சில முறைக் கடைக்குக்
கூட்டிட்டுப்போயிச் செலவு செய்து இருக்கிறான் அவ்வளவுதான் ..
இரண்டரைக் கொலை
நீதிபதி !
பல மாதம்
திருடன் முகுந்தன் தன் வீட்டில் ஒரு நாள் திருடனாக மாட்டிக்கொண்டான்
திருடிய குற்றதிற்கு அம்மா,அப்பா என அடி எல்லாத் திசைகளிலும் வந்ததை வாங்க முடியாமல் திருடிய பணத்தை எனக்கு மொத்தமும் கொடுத்து விட்டதாகச் சொல்லித் தாற்காலிகமாக அடியிலிருந்து பெயில் வாங்கிக்கொண்டான்.
என் மேல் பொல்லாப்புக் கேஸ் பதியப்பட்டது. அப்போது அந்தக் கிராமத்தின்
கட்டப்பஞ்சாயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.அந்த கட்டப்பஞ்சாயத்து நீதிபதி
ஏற்கனவே இரண்டரைக் கொலை செய்தவர் – ஒருவன் சில நாள் கழித்து இறந்து
போனான் என்பதால் அந்தக்கொலையில் அவர் பாதிக்கொலையாளி மீதி அந்த மருத்துவமனைப்
பொறுப்பு. அவர் முன் வைத்து என்னையும் அவனையும் மிரட்டி கேட்டனர். அதில் மோகன் உளறவே , அவன்
அம்மா என் பையன் பொய் சொல்லமாட்டான் என்று சாதிக்க ,
விசயம் அடுத்தக்
கட்டமாகக் கொலைகார நீதிபதியிடமிருந்து திண்டுக்கல் அருகேயுள்ள உண்டாரபட்டி- காசு
வெட்டிப் போடும் சுப்ரீம் கோர்ட் காளியம்மனிடம் சமர்பிக்கப்பட்டது.
காளியம்மன் கோர்ட்டின் தீர்ப்பு
!
அங்கும் வந்தும் முகுந்தன் அம்மா அழுது புலம்பவே அந்தக் கோவில் பூசாரி எங்கள் அம்மாவிடம், அம்மா
இங்க பாருங்க இது துடியான தெய்வம் பொய் சொல்லிறாதீக நாற்பத்தியெட்டு நாள்ல காட்டிக்
கொடுத்துக் காவு வாங்கிடுவான்னு எச்சரித்தார்.எங்கள் அம்மா எங்கள் மேல் உள்ள
நம்பிக்கையில் சாகவும் துணிந்து காசு வெட்டிபோட துணிந்து சம்மதித்தார்கள் ஆனால்
கடைசி நேரத்தில் அந்தப் பூசாரி என்ன நினைத்தாரோ தெரியவில்லை ,இங்க
பாருங்க உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா இங்க ஆத்தா முன்னாடி சூடம் பொருத்தறேன்
வாங்கலைன்னுச் சொன்ன இந்த அம்மா கையில அடிச்சுச் சத்தியம் பண்ணிட்டுத் திரும்பிப்
பார்க்காமப் போகட்டும் நாற்பத்தியெட்டு நாள் கழிச்சுப் பிறகு பார்ப்போம்ன்னுத்
தீர்ப்பை ஒத்திவைக்க , அதுவே முடிவானது . அம்மா
சத்தியம் செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் என் கையை இறுகப்பிடித்துகொண்டு ,செய்யாத
தப்புக்கு இப்படிச் சத்தியம் பண்ண வேண்டி வந்து விட்டதேன்னு விதியை
நினைத்துக்கொண்டு அழுதுகொண்டே வேகமாக வந்தார்கள் .இனி முதல் மார்க்கே எடுத்தாலும்
முகுந்தன் நட்பே வேண்டாம் என்று நான் முடிவெடுத்துக்கொண்டேன் அப்போது !
நாங்கள் குடியிருந்த வீட்டை வீட்டு வசதி வாரியத்திடம்
எடுத்துக்கொள்ள நேர்ந்ததால் நாங்கள் கிழக்குக் கோவிந்தாபுரத்தில் வீடு கட்டி
வந்துவிட்டோம் .இதில் என்ன விசேசம் என்றால் அது முகுந்தன் வீட்டுக்கு எதிர்
தெரு.வீட்டை விட்டுத் தெருவில் கால் வைத்தால் அவர்கள் வாசல் தெளிவாகத் தெரியும்
.வாழ்க்கையில் எது வேண்டாம் என்று மனம் ஒதுக்கும் போது அதனோடு நம்மை மிக
நெருக்கமாக்கி விடும் அபாயம் இருப்பதை அப்போது இருந்த என் அறிவுக்குப் புரிய
ஆரம்பித்தது .
பெண் பிணம் !
எங்கள் வீட்டுக்கு மிக அருகில்தான் இப்போது இருக்கும்
ஹவுசிங்போர்டு சுடுகாடு மற்றும் இடுகாடு.அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டம் வெகுவாக
இருக்காததால் நான் அங்குச் சென்று முக்கால் பெடல் போட்டு சைக்கிள் பழகிக்கொண்டு
இருந்தேன் .
அந்தச் சுடுகாட்டுக்குச் சொந்தமான மிக ஆழமான கிணறு
இருக்கிறது .எப்போதும் அதில் நீர் நிரம்ப இருக்கும் என்பதால் அதைத் துணி வெளுப்பவர்கள்
பயன்படுத்துவார்கள்.மாலை
நேரத்தில் அதிகம் புழக்கமிருக்காது .அப்போது அந்தக்கிணறு நோக்கி எல்லோரும்
திடீரெனெ ஓடத்தொடங்கினார்கள் .என்னவென்று தெரியாமல் நானும் ஒரு ஆர்வத்தில்
ஈர்க்கப்பட்டு ஓடிப்போய்க் கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க, அங்கு
இடுப்பில் கயிறு கட்டி மேலே இழுத்து நிலையில் ஒரு பெண் பிணம் , குப்புறத்
தண்ணீரில் மிதந்த நிலையில் ஆடிக்கொண்டே இருந்தது. என்ன பார்க்கிறோம் என்று கூடத்
தெரியாத திகிலுடன் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ….
எங்க அம்மாவை நானே கொன்னுட்டேனே யாரோ எனக்குப் பழக்கப்பட்ட
குரல் சத்தமாகக் கேட்க, குரல் வந்த கிணற்றின்
எதிர்பக்கம் பார்த்தேன்.அங்கு முகுந்தன் கதறிகொண்டு இருந்தான். எனக்குச் சட்டெனே
ஏதோ நழுவது போலக் கைகால் எல்லாம் உதறியது .சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வீட்டுக்கு
எப்படி ஓடினேன் என்று எனக்குத்தெரியவில்லை.
அன்று மாலைப் பயத்தில் படுத்தவன்தான், மூன்று
நாள் குளிர் காய்ச்சல் விடாமல் படுத்தியெடுத்தது. அம்மா நான் பயந்து விட்டதாக
வேப்பிலை மந்திரிக்கவும் அழைத்துச் சென்றார்கள் .எனக்குக் கண் மூடினால் யாரோ முகம்
தெரியாத உடல் ஒன்று கிணற்றில்,ஆற்றில் மிதப்பது போலவும்
மரத்தில் தொங்குவது போலவும் கனவு பாதி அரைகுறை நினைவு பாதியாக விடாது மிரட்டியது.
ஒரே நாளில் அம்மாவுக்கு மோகன் அம்மா இறந்த விசயம் தெரிந்து விட்டது.அது அந்தக்
கோவிலில் சத்தியம் பண்ணி விட்டு வந்த நாற்பத்தியேழாவது நாள் .
தற்கொலைக்கு காரணம் தாங்க முடியாத வயிற்று வலியால் சில மாதங்கள் அவதிபட்டதால் இந்த முடிவுக்கு வந்து விட்டதாக தெருவில் ஒருவர் சொன்னார்.
இறந்து போன முகுந்தன் அம்மா ஞாபகம் வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது.அப்புறம் சில நாளில் இறந்தவர்கள்
எல்லோரையும் துன்புறுத்துவதில்லை.அதற்கு வேறு ஏதேதோ காரணங்கள் இருக்குன்னு
புரிந்துகொள்ளத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் எதற்குப் பயந்தேனோ அதன் மேலே ஆர்வம்
மேலிட விக்கிரவாண்டி ரவிச்சந்தரின் புத்தக்கத்தைப் படித்து, நண்பர்
சுகுமாரோடு சேர்ந்து ஆவிகளோடு ஒய்சா போர்டில் பேச முயற்சி செய்ய அதில் என்னுடைய +2
மார்க் எவ்வளவு எனக்கேட்டதற்கு எண்ணூறுக்கு மேல் என்று ஒய்சா ஆவி ,பொய்
சொன்னதால் பேசாமல் அதைத் தொடர்வதிலிருந்து விலகி விட்டோம். அடுத்து ஆவியுடன் பேச -
பேனா நகர்வில் பேப்பரில் எழுத வைப்பது எனத் தத்துப்பித்து என் தொடங்கினோம்.அதில்
யாரோ மதுரையில் ஒரு டாக்டருடைய பெண் விபத்தில் இறந்து போனது வந்து எழுத
.. சத்தமில்லாமல் அந்தப் பேனாவைத் தொலைத்து விட்டோம் . அது யார் கையில் கிடைத்து மை
இல்லாமல் எழுதிக்கொண்டு இருக்கிறதோ ?
பொதுவாக நாம் விஞ்ஞானத்தை நாம் நம்புவதற்குக் காரணம் அதில்
நிருபணங்கள் இருப்பதால் நம்மை ஏமாற்றாது என்ற நம் நினைப்பைக் குழித் தோண்டி
எரிந்துக்கொண்டி இருக்கிறது நவீன விஞ்ஞானம் .வயாகாரா போல இன்னொரு மருந்து
கண்டுபிடிக்கும் வரை பேய் மேல் உள்ள தேடல் ஒயாது என்பது போலக் கங்கணம்
கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள் பலர்.உங்கள் வீட்டில் எதாவது அமானுஸ்ய
நிகழ்வுகள் இருப்பது போல உணர்ந்தால் போதும் அதை உறுதிப்படுத்த Ghost-Hunters Team பெருகிவிட்டது
.அவர்கள் பாட்டுக்கு உங்கள் வீட்டுக்கு நவீனக் கருவிகளோடு வந்து உங்களுக்குக் கை
கொடுத்து விட்டு இரவு முழுதும் பேயைவிடத் தங்களுக்குள் மெல்லப்பேசி, தங்கியிருந்து
பேயைப் படம் எடுத்துக் காட்டிக்கொடுத்து விட்டுக்
கம்பி நீட்டுகிறார்களாம்.அந்த படங்களில் எதாவது ஒன்றில் மேக்கப் இல்லாமல், மனைவியோ
கணவனோ ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக்கொண்டு, அசந்து தூங்கும்போது உங்கள்
முகத்தையே எடுத்தப் படமாக இருக்கலாம் கவனம் !
ஆவி பிடிக்கும் ஆப்ஸ் !
இப்படிப் பட்ட டீம் மட்டும் போதாது என்று பேய் பற்றிய
தேடலில் மென்பொருளாலர்கள் கவனம் திசைதிரும்பியது . 2012 ல் பேய்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க
ஐபோனில் பயன்படுத்தப்படும் மொபைல் அப்ளிகேஷன் மூலம். , ரோஜெர்
பின்ஜெல்டன் மற்றும் ஜில் பெய்ட்ஸ் என்பவர்கள் உருவாக்கி உலவ விட்டனர்.அதன் மூலம்
சந்தேகப்படும் எல்லா இடத்திலும் அதெற்கெனெக் கருவிகளைப் பயன்படுத்தி மொபைலுக்குப்
பேய்கள் மற்றும் ஆவிகளின் சக்திகளை உணர்ந்து அதைக் குறுஞ்செய்தியாக மாற்றிப்
பிங்கர்ஸ், சீக்ரெட்ஸ், ஸ்ட்ரைசினைன், எலிபேன்டியாசிஸ்
என்றும் ஒரு சிலருக்குக் கஷின் ஷேவ், கிராண்ட் பாதர், டைனிங்
ரூம், ரயில் ரோட் என மெசேஜ்கள் வந்துள்ளதாம். இது உண்மையா என்பது
அப்போது பயன்படுத்தியவர்களுக்கே வெளிச்சம்.இப்போது சாதாரண மொபைல்களில்
பயன்படுத்தும் Ghost Hunting Tools ,Detector,Radar ,போன்ற ஆப்ஸ்கள் வந்து அதிகம்
பேய் ஓட்டிக்கொண்டு இருக்கிறது !
நான் கூட ஆசைப்பட்டு ஒரு பிரபலமான ஆப்சைச் சோதிக்க இரவு
பதினோரு மணிக்குக்கு மேல் யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்குப் போய்ச்
சோதிக்கப்போனேன் .ஆப்சை அன் செய்தேன் .ஒரு பத்து நிமிடம் எதுவுமே sensors to scan different frequencies and detect presence of any
ghosts near by. It then tries to display those entities on the radar என்ற நாழு வளையம் கொண்ட ரிங்
ஸ்கேன் செய்தது .மெல்லப் பயத்துடன் காத்து இருந்தேன் .பின்ன சும்மாவா ? எதாவது
இருக்குன்னு காமிச்சுட்டா அது பாட்டுக்கு ஜங்குன்னு முன்னாடி வந்து குதிச்சு
முனிப்படம் ராகவா லாரன்ஸ் கணக்கா ஒரு மாதிரியா முழிச்சுக்குட்டு நெருப்பு
இருக்காத் தீப்பெட்டி இருக்கான்னுக் கேட்டா எந்தப்பக்கம் ஓடுறது .இருக்கிற
மெத்தைப்படியும் குறுகலா இருக்கு. ஒரு நிமிசம் தேவையான்னு யோசிக்கிறதுக்குள்ள ஒரு
இடத்தில் ஒரே ஒரு புள்ளி அந்த ஆப்சிலிருந்த நாழு வட்டத்திலிருந்து ஒவ்வொரு வட்டமா
நகரத்தொடங்கியது அதோடு அந்த ராடார் போன்ற சுத்தலுடன் ஜிங்,ஜிங்ன்னுச்
சத்தம் மொபைலிருந்து வரத்தொடங்கியது...அது டிடெக்ட் பண்ணும் திசையில்
எதேச்சையாய்த் திரும்பிப் பார்த்த்தேன்.அது பக்கத்து வீட்டு மொட்டைமாடி. அங்கு
லேசாய் ஏதோ ஒருசலனம் ... அப்போது ஏற்பட்ட என் இதயத்துடிப்பின் சத்தம் என் குடும்ப
டாக்டர் பெட் ரூம் வரை இன்னேரம் எட்டி இருக்கும்.அந்த அளவுக்கு லப்.. டப்..
உயர்ந்தது. இருந்தாலும் கண்ணில் ரத்தம் கட்ட. தைரியத்தை வரவழைத்து அந்த இருட்டை
உத்துப்பார்த்தேன் .நிச்சயமாய் ஏதோ அசைகிறது.கால்கள் ஓடு ஓடு என்று பரபரக்க , அதற்குள்
அது தொடர்ச்சியாய் அசைந்து அசைந்து நகன்று நழுவி,
அந்த மாடியின் ஓரம்
வரை வேகமாய்ப் போய்ச் சட்டேனெ எதுவும் இல்லை ..
எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது .வீட்டுக்குள் வந்து
,அந்த
ஆப்சை அழித்து விடலாம் என்று ஓப்பன் பண்ணினால் இப்போது அந்த ரேடாரில் மூன்று
சிக்னல் தெரிந்தது .மூன்று ஆவியா ? எதுக்கும் மனைவியை எழுப்பி
நடந்ததைச் சொல்லி வைத்துவிடலாமா ? வேண்டாம் என்று எதுக்கும்
உறுப்படாத என் ஈகோ தடுத்தது .அதை விட முக்கியமான விசயம் என் மனைவி எனக்கே பயப்பட
மாட்டாள் அப்புறம் ஆவிக்கெல்லாம் எப்படிப் பயப்படுவாள் என்ற கேள்வி வர, செல்லை அப்படியே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டுப் போர்த்திப் படுத்தேன் . என்னை நோக்கி ஏதோ ஒரு பொருள் நகர்வதாக ஒரு பிரம்மை வர லேசாய்ப் போர்வையை
விலக்கிப்பார்த்தால், வலது பக்கம் படுத்து இருந்த பையனின் கை, தூக்கத்தில் என்னை
நோக்கி நகன்று கொண்டு இருந்தது...
காலையில் எழுவதற்கு முன் காய்ச்சல் வருவதற்கான அறிகுறி
இருந்தது .யாரோ என்னமோ கனாக் கண்ட மாதிரி என்பார்களே அது மாதிரி மெல்ல எழுந்து
..பாத்ரூம் போகும் போது, பக்கத்து வீட்டிலிருந்து குரல்
கேட்டது .சொன்னாக் கேட்கிறீங்களா அத்தை ஜாமத்துல மெத்தைக்குப் போய் அந்தத் துணி
எடுக்கலைன்னு யார் கேட்டா ? அப்புறம் அது அலையுது இது அலையுதுன்னு
பார்த்துட்டு வந்து பெனாத்திக்கிட்டுக் கெடக்கறீங்க ?
மருமகள், கணவனை இழந்த தனது மாமியாரிடம்
பேசிக்கொண்டு இருந்தது கேட்டது.அடப்பாவமே ஆவின்னு யோசிச்சாலே பிரச்சனை வருதே ?
இருந்தாலும் விடுவாதாக இல்லை .மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற விக்கிரமாதித்தன் மனம் தளராமல் தோளில் தூக்கிக்கொண்டு போவது போல, பைசாசம் , பேய் ,ஆவி பற்றிய ஒரு தேடல் முற்றுப்பெற , எனக்கு ஒரு ஞானி உதவினார். அது பற்றிய வரும் கடைசி பதிவின் துரத்தலில் இறந்தவர்கள் உயிர் என்ன ஆகிறது என்று புரிந்துகொள்வோம்... அதோடு போதும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக