செவ்வாய், 6 ஜூன், 2017

நோன்புக்கஞ்சி ஞாபகம் !





மங்களத்தில் எனது பையனுக்குச் சீருடைத் தைய்து வாங்கிக்கொண்டு கிளம்பிய போது பண்ணிரண்டு வயதிருக்கும் ஒரு பையன் லிஃப்ட் கேட்டுக் கை நீட்டினான்.அவன் கையில் ஒரு தூக்கு வாலி இருந்தது .எங்க போகணும் என்றேன் .குளத்துப்பாளையம் வரைக்கும் என்றான். அழைத்துக்கொண்டேன் .பொதுவாய் நான் லிஃப்ட் கொடுக்கும் போது யாரிடமும் அவர்கள் போகும் இடம் மட்டும்தான் கேட்பேன். பக்கமாக இருந்தால் நான் போக வேண்டிய இடத்தைத் தாண்டிக்கூட சென்று விட்டு வருவது வழக்கம். கூட்டிக்கொண்டு போவதால் இவனிடம் நாம் ஏன் சொல்லவேண்டும் என்ற தடுப்புணர்வு அவர்களுக்குள் இருக்கலாம்.உதவிச் செய்யும்போது அப்படிக் கேட்பது கொஞ்சம் அசிங்கமாகவே எனக்குப் படும்.ஆனால் அந்தப்பையனிடம் ஏதோ பேச வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்டியது .

கையில் என்னப்பா என்றதற்கு ,நான் மங்களம் பள்ளிவாசலிருந்து நோன்புக் கஞ்சி வாங்கிட்டு வந்து கொண்டு இருப்பதாகவும் அடுத்து வாங்கிய இந்தக் கஞ்சிய வீட்டில் வைத்து விட்டு அடுத்துக் கோழிப்பண்ணைப் பள்ளிவாசலில் ஐந்து மணிக்குத் தருவார்கள் போக வேண்டும் என்றான் .சரி வரும்போது எப்படி வந்தாய் என்றதற்கு நடந்துதான் என்றான்.நீ நோன்பு வைத்திருக்கிறாயா என்றேன்.ஆமாம். எங்கள் வீட்டில் எல்லோரும் என்றான். ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து மீண்டும் திரும்பி வரவேண்டும் .என்ன படிக்கிறாய் என்றதற்கு எட்டாவது போகிறேன் என்றான் .உன் பெயர் என்ன என்றதற்கு முகமதுத் தர்வீஸ் என்றான் .அப்படின்னா என்ன அர்த்தம் என்றதற்கு, அல்லாவுடைய பெயர் என்றான்.

நான் இதே வயதில் திண்டுக்கல் கிழக்குக் கோவிந்தாபுரம் குடும்பத்துடன் குடிபெயர்ந்து வந்த போது அங்கிருந்த பள்ளிவாசலில் இரண்டாவது அண்ணன் பள்ளித்தோழர் அப்துல்கௌஸ் வாங்கித்தருவார் .சுடச்சுட அதைக் குடிப்பதில் என்னவோ ஒரு சந்தோசம் .அதிலும் டோக்கன் வாங்கி வைத்து விட்டால் யார் போனாலும் தருவார்கள் என்பதால் நாங்களே கூடப் பள்ளிவாசல் போய் வாங்கி வருவோம்.நான் போகாவிட்டால் கௌஸ் அண்ணன் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டுப் போய் விடுவார்.

அதே போல அந்தத் தெருவில் இரண்டு வீட்டிலிருந்து ரமளான்,பக்ரீத் காலைத் தொழுகை முடிந்தவுடன், பெரிய தட்டில் இலை மூடிக் கொண்டு வந்து தருவார்கள் .அந்தக் குருமாவின் மணமும் கொஞ்சம் உப்புக்கம்மியான பிரியாணி வாசனையும் சாப்பிட்டு முடித்து இரண்டு நாள் ஆனாலும் வீட்டை விட்டுப் போகாது . தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டிலிருந்து வீட்டில் கடைசிப்பையன் என்பதால் புது என்னிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.எனக்கு ஒரு பிடித்தமான வேலை .

காலத்தின் பின்னோக்கிய கதவை முகமதுத் தர்வீஸ் என்ற இறையருள் எனக்கு இன்று சொல்ல விரும்பியிருக்கிறது .



1 கருத்து: