திங்கள், 19 செப்டம்பர், 2016

மரணமற்ற ஜீவாத்மாக்கள் - சித்தர்கள் .( துரத்தல் 8 )



                            ஜீவன்முக்தர்களான சுய விருப்ப மரணங்களை நாடுபவர்கள் மிக எளிமையாக நம்மைச் சுற்றியுள்ள தவயோகிகளாகக் கூட இருக்கலாம் . ஆனால் சித்தர்கள் அவர்களிடமிருந்து சற்றே வேறுபடுகிறார்கள் .சித் என்ற உயிரை உணந்தவர்களாக இருப்பதால் இவர்களை நாம் இவர்களின் அற்புதங்கள் மூலம் அறிகிறோம்.போகரை எடுத்துக்கொண்டால் அவர் உருவாக்கிய அருள்மிகு பழனி தண்டாயுதபானி சுவாமி நவபாசான சிலையை வெறும் வழிபாட்டுக்காக உருவாக்கவில்லை வேறு சில காலத்தின் தேவையைக் கருதியே உருவாக்கி இருக்கிறார் என்று அறிகிறோம். இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மகான்கள் , ஞானிகள் , வரிசையில் சித்தர்கள் இயற்கையின் தேவைக்குத் தகுந்தார் போல அவர்களைப் பிரபஞ்சக் குரல் universal consciousness voice வழி நடத்துகிறதோ என்ற தீராத கேள்விகள் நம் முன் நிற்கின்றன.சரி. எப்படியானாலும் சித்தர்கள் இந்த மனிதக் குலத்தின் அல்லது இந்தப் பிரபஞ்சத்தின் பிரதிநிதிகளாகத் தங்களை மேம்படுத்தியவர்கள் என்பதில் நெல்முனையளவும் சந்தேகமில்லை ! அவர்களால் நாம் எப்போதும் நன்மையே அடைந்து இருக்கிறோம். 

          நாம் இந்த மரணங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஜெயித்த மார்க்கண்டேயர்களான திருமூலர்,கொங்கனர் போன்ற 108 க்கும் மேற்பட்ட சித்தர்கள் ஜீவ சமாதியடைந்த கோவில்களில் இன்னும் உயிர்ப்பாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிகிறோம். சில இடங்களில் தனியார்களால் பராமரிக்கப்பட்டு வரும் சித்தர்கள் சம - ஆதியான இடங்கள் ஏராளம் இருக்கிறது .இன்னும் சிலருக்குச் சித்தர்கள் அப்படியே கருவில் திருவான பிறவிகளா ? துறவு வாழ்க்கை மட்டும் வாழ்ந்த மகான்களா ? என்ற சந்தேகம் வருகிறது . எளிமையாகச் சொன்னால் சித்தர்கள் நம் போன்ற இல்லறத்தவர்களாக இருந்து வேண்டிய பொருள்கள் சம்பாதித்துப் பிறர்க்கும் கொடுத்து உதவிய சாதாரணக் குடிமகன்களாக இருந்தவர்கள் அனேகம்பேர் .பொருள்துறை ,அருள்துறை , அறிவுத்துறை என எல்லாவற்றிலும் இருந்து தங்களைத், தங்கள் தேடல்கள் மற்றும் தீராத முயற்சியால், உள்ளுணர்வால் மேம்பாடு அடைந்தவர்கள் . 

                  உலகத்தின் பெரும்பாலான மதங்கள் அதை உருவாக்கியரையோ அல்லது அவர்கள் காட்டிய இறைவனையோதான் வழிபட்டுக்கொண்டு இருக்கிறது .ஆனால் சித்தர்கள் வகுத்த நெறிப்படி இந்த உலகின் ஒவ்வொரு உயிரின் உருவாக்கத்தையும் இறைவன் வடிவமாகப் பாவித்து வழிபடுகின்றார்கள் .சித் என்றால் உயிர்.கண்களால் காணக்கூடிய இந்த உடலுக்கு மூலமான காணமுடியாத உயிருக்கு உள்ள உறவை நன்கறிந்தவர்களே சித்தர்கள் . உடலுக்குள் உள்ள உயிர் என்பது ’விண்’ என்ற உயிர்சக்தியாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.அந்த உயிர்சக்தியே படர்கை நிலையெய்தி மனமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.மனம் என்பது சீவகாந்த அலை அது எபோதும் வடிவம் எடுப்பது அதுவாகாவே குணமாக மாறுவது ,பதிவு செய்வது பதிவு செய்ததைத் திருப்பித் திருப்பி எண்ணங்களாகப் பிரதிபலிக்கச் செய்வதே மனதின் தன்மைகளாக அறிந்துகொண்டார்கள் .அப்படி அறிந்து கொண்ட ஞானத்தால் அவர்கள் மனிதகுலம் முழுமைக்கும் தந்த முக்கியத் தத்துவங்கள் 1) மகிழ்போகம் 2) ஈதல் 3) இறவாமை என்பதாகும் .இதில் மூன்றாவதான நமக்கான விசயம் இறவாமை. 


               இறவாமை என்பது மனிதன் பேராற்றலோடும் பெரும் நோக்கத்திற்காகப் பிறக்கிறான்.அந்தப் பெருநோக்கம் நிறைவேறத் தடையாய் இருப்பது நீண்ட நாள் உயிர்வாழ்தல் மறுக்கப்படுவதால்தான் .அதனால் மரணத்தைத் தள்ளிப்போடுவதற்கான வழியைத் தேடினார்கள் .காயம் என்ற உடலை கல்பம் என்று உறுதிப்படச் செய்வதற்கு அடிப்படை ஆண்களுக்கு விந்துவும் - பெண்களுக்கு நாதம் என்றுணர்ந்தார்கள் .அதுவே இந்த உடல் உயிர் துவக்கமாகவும் அதை முழுவதுமாக இழப்பதுவே மரணம் என்ற முடிவாகவும் இருப்பதைக் காக்க சித்த வைத்திய முறையில் செய்த முயற்சிக்குப் பெயர் ’முப்பூ’ 


#முப்பூ Philosopher Stone. 

”பொன் நிறமான பூமியில் ஒன்று
கண்ணிறமான கடலினுள் ஒன்று
மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்று .

பொன் நிறமான பூமியில் ஒன்று - பூமியில் சில இடங்களில் குறிப்பிட்ட காலங்களில் மல்லிகைப் பூ பூப்பது போலப் பூநாதம் எனும் பூநீர் பூத்து வரும் அதைத் தண்ணீரில் கரைத்துச் சில பக்குவத்தில் காய்ச்சினால் உப்பாகி விடும்.அடுத்துக் கண்ணிறமான கடலினுள் ஒன்று - கடலில் பூக்கும் கடல் நுரை. இறுதியாக மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்று - மின்னலில் பூப்பது காளான் .இந்த மூன்றையும் சில பக்குவ முறைகளில் புடமிட்டுப் பெற்ற முப்பூவை உண்டால் உடல் விட்டு பிரிய மூலகாரணமான விந்து நாதம் கெட்டிப்பட்டுப் பல ஆண்டுகள் மரணமில்லாப் பெருவாழ்வு கிடைத்தது .ஆனால் இந்த வாழ்வில் அவர்கள் விரும்பி போது மரணம் பெற வழியில்லாமல் வாழ்ந்துச் சலித்துப்போனார்கள் .இதைத் தவிர்க்க அவர்கள் கண்ட அடுத்த வழி யோக மார்க்கத்தில் லம்பிகா யோகம் .


#லம்பிகா யோகம் 

பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் உணவு கிடைக்காத போது நாவை மடக்கி மேல் அண்ணத்தில் வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். 'லம்பிகா' யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். உணவுக் கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாகப் பழைய நிலைக்கு வந்துவிடும்.அந்த உணவால் வாழ்வைத்தொடரும்.ஆனால் உயிர் போகாது. இந்த நிலைக் காலச் சூழலில் நீடிக்கும்போது அதே நிலையில் உயிரை விட்டு விடவும் நேரிடலாம்.. இந்த முறையில் சித்தர்கள் லம்பிகா யோகம் மூலம் உணர்வற்ற நிலையில் வெகு நாள் உயிரை உடலை விட்டுப் பிரியாமல் காத்து வைத்தார்கள் .இதில் சில சமயம் உணர்வற்று மயக்க நிலையில் இருப்பதை மரணம் என்று புரிந்து கொண்டு அடக்கம் செய்யப்பட்டவர்கள் சிலர் உண்டு .நம் மக்கள் சில சமயம் சொல்வார்களே இவர்களிடம் ரொம்பத்தான் உசாரா இருக்கணும் போல, தூங்கும் போது கூடக் காலை ஆட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும். என்ற சொல் பழக்கம் சித்தர்களுக்கு ஏற்பட்ட கதியால் வந்த விளைவாகக் கூட இருக்கலாம் ! இதிலும் உள்ளச் சங்கடங்களை நீக்க அவர்கள் கடைசியாகக் கண்டது மார்க்கம் காயகல்பம்

#காயகல்பம் 

”உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார், மேனியும் சிவந்திடும்,
அருள் தரித்த அம்மைபாதம், ஐயன்பாதம் உண்மையே”- சிவவாக்கியா்

இது சித்தவைத்திய முறையில் செய்த மருந்தல்ல .உடலுக்குள் உயிரின் வேர்களாய்ப் பிண்ணிப் பிணைந்து சுழன்றோடும் சுமார் 72000 நாடிகளில் நீண்ட வாழ்வுக்கும் ,என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதையறிந்த சிவவாக்கியச் சித்தர்பாடல் இதைச் சொல்லுகிறது .இதன் முழுப்பொருளைத் தமது 40 வருட ஆராய்ச்சியைச் செலவிட்ட வேதாத்ரி மஹரிசி இந்தப் பாடலுக்குரிய பயிற்சியை இறைநிலையின் துணையில் கிடைத்த முழுமைக்குப்பிறகு யோகப்பயிற்சி வடிவமாகச் சில நிமிடங்களில் செய்வது போல வடிவைத்து இருக்கிறார் .மனவளக்கலையின் முக்கிய அங்கம் காயகல்பம்.

#ஜீவசமாதி 

         நாம் இந்தப்பதிவின் துவக்கத்தில் பேசியபடிச் சித்தர்கள் நம் பிரபஞ்சக் குரலால் பெற்ற , தங்கள் வாழ்நாள் கடமையை முடித்த பிறகு ,ஜீவசமாதி என்றொரு முறைக்கு ஒரு அற்புதமான வழியை வடிவமைத்தார்கள் .அதன்படி ஜீவன் என்ற உயிரை இந்த உடலுக்குள்ளேயே ”சுவரவிடுதல்” என்ற முறையில் விட்டுக்கொண் அறிவை மாத்திரம் அகன்று அகன்று விரித்துப் பேராதார நிலையோடு இணையவிட்டு மீண்டும் அறிவு உடலோடு சுருங்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய நிலையிலிர்ந்து ஒன்றீக்கலந்து விட்டு உடல் இயக்கம் தானாக நின்று உடலில் உயிர் மிக நுண்ணிய இயக்கத்தோடு நிற்கச் செய்கிறார்கள் . 

                 உடல் உயிரோடு சுவரிவிடும்போது அந்த உடல் கெடாது.அழியாது.அந்த உடலில் வெது வெதுப்பான , உடல் உறுப்புகள் எளிதாக வளைந்து கொடுக்குமாறு இருக்கும் . சித்தர்கள் உடலுக்குள் உயிரைப் பலகாலம் வைத்திருக்கும் வித்தையைப் புரிந்திருந்தது.. உடலில் உள்ள ஆதாரச் சக்கரங்களிலும் வேறு சில மையங்களிலும் உயிரை நிலை நிறுத்தி , வாயுக்களை ஒடுக்கி ஓரிடத்தில் நிலைநிறுத்தி அந்த நிலையில் தூல உடலின் இதயத்துடிப்பு, நாடி, மூச்சு முதலியவை நின்றுவிடும். மற்ற இயக்கங்களும் இருக்காது . உயிரோட்டமில்லாத உடல் கெடும். ஆனால்பிராணவாயுவோ தண்ணீரோ உணவோ உட்கொள்ளாத நிலையில் இயக்கமற்ற உடல் உடல் எடைக் குறைந்தே இருக்கும் .

               என்றைக்கும் சித்தர்கள் உயிராற்றல் அவருடைய உடல் விட்டுப் பிரியாதிருப்பதால் அவர்கள் உலக நன்மைக்காக எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவரச் சுற்றி வர ஜீவசமாதியான சித்தரின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும்.அதனால்தான் ஜீவசமாதிக்குயுள்ள அகஸ்தியர் - திருவனந்தபுரம் ,கொங்கணர் - திருப்பதி ,சுந்தரனார் - மதுரை ,கரூவூரார் - கரூர் ,திருமூலர் - சிதம்பரம் ,தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் ,கோரக்கர் - பொய்யூர், குதம்பைச் சித்தர் - மாயவரம் ,இடைக்காடர் - திருவண்ணாமலை ,இராமதேவர் - அழகர்மலை ,கமலமுனி - திருவாரூர்,சட்டமுனி - திருவரங்கம்,வான்மீகர் - எட்டிக்குடி ,நந்திதேவர் - காசி,பாம்பாட்டிச் சித்தர் - சங்கரன்கோவில்,போகர் - பழனி ,மச்சமுனி - திருப்பரங்குன்றம்,பதஞ்சலி – இராமேஸ்வரம் போன்ற கோவில்கள் மிகப் பிரசித்தம் பெற்றவையாக இருக்கிறது. 

                தமிழக்கத்தில் சித்தர்கள் சமாதி பற்றிய கான மஞ்சரி சம்பத்குமார்க் கணக்கெடுப்பின் படிச் சென்னை மாவட்டத்தில் மட்டும் 87 சித்தர்கள் சமாதிகள் இருக்கின்றன.அதற்கு அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 50ம் அப்படியே 27 மாவட்டங்களில் உள்ள சித்தர் சமாதிகள் பற்றி அறிகிறோம் .



ஜீவசமாதி சிறப்புகள் 

                            மற்ற கோவில்களில் உங்கள் தவறான எண்ணங்கள் கொண்ட கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனைகள் கூட உங்கள் எண்ணத்தின் வலுவிற்கு ஏற்ப நடந்து விடலாம் .ஆனால் சித்தர்கள் ஜீவசமாதிகளில் இயற்கைக்கு முரணான அல்லது ஏதோ ஒரு உயிருக்குத் துன்பம் தரும் கோரிக்கைகள் நிறைவேறாது.அது மட்டுமில்லை அந்த எண்ணத்தின் தன்மைக்கு ஏற்ப எதிர்விளைவை உங்களுக்குச் செய்யும் .அதனால் மிக நுண்ணிய அலை நீளமுடைய அந்த ஆற்றல் களங்களில் உங்கள் கோரிக்கைகளை வெகு சாதரணமாய் வைத்துவிடாதீர்கள் ! 

                  ஆகமவிதிப்படிக் கட்டிய அனைத்துக் கோவில்களிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய முடமுழுக்கு என்ற கும்பாபிசேகம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மைப் புதுப்பிக்கப்படுத்தவே நடைபெறுகிறது புனித ஆறுகளின் நீரால், மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்படுத்தி, சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுகிறது . சித்தர்கள் ஜீவசமாதியான இந்தக்கோவில்களுக்கு இந்த அவசியமில்லை என்பது முக்கியமான விசயம் .

துரத்தலின் முடிவாக....

                 ”பேய்” நல்லதுத் தெரியுமா ? என்ற பெயரில் ஜூலை மாதம் விளையாட்டாய் ஆரம்பித்த தொடர் இது .இன்று எட்டுப் பதிவுகளாக துரத்தப்பட்டு ஓய்ந்து விட்டது .இதன் மூலம் இங்கு சொன்னதை விட நான் கற்றுக்கொண்டதே அதிகம் .இது எந்த அளவுக்கு எல்லோருக்கும் நன்மை தந்து இருக்கிறது என்பது தெரியவில்லை .யாராவது நேரமிருந்தால் சொல்லுங்கள் .

1 கருத்து: