செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

முதல் பக்கம் முகம் சுளிக்கிறது - புத்தக திருவிழா .




புத்தகங்களின் வாசனையோடு ..

நமக்கு மிகவும் பிடித்த சொந்தம் வீடு நிறைய வந்து இருந்து விட்டு  திடீரெனெ கிளம்பி போன பிறகு வீட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது போல திருப்பூர் - KRC சிட்டி சென்டரில் புத்தக திருவிழா ஏக்கத்தை ஏற்படுத்தியது .பொதுவாகவே புத்தகங்கள் நிறைந்த பகுதியில் சும்மாவாது உட்காந்து போகவே ஆசையாக இருக்கும் அதிலும் புத்தக திருவிழாவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ? கிடைத்தது . ஸ்டால் எண் 92 வேதாத்ரி நிலையம் - மனவளக்கலை மன்றத்தின் சார்பில் (கரும்பு தின்னும்) பணி .பல மணி நேரம் அவசரமில்லாமல் பல்லாயிரம் புத்தகங்களின் வாசனையோடு கலந்து உறவாடும் அலாதியான அற்புத வாய்ப்பு .பல புத்தக ஆர்வ நண்பர்களை ஃபோன் செய்து  வர வைத்து  ஆர அமர 77 புத்தக வெளியீட்டாளர்களின் 99 ஸ்டால்களையும் சுற்றி பார்த்து பிரித்து படித்து பார்த்து மேய்ந்து தள்ளினோம்  .


நூல்களின்  அறுவடை...

ஒன்பது நாள் புத்தக விழாவில் ஐந்து  நாட்கள் - ஆறுமுறை போனோம் .முதல் நாள் சென்றபோது வெகு நாளாய் காத்து இருந்து பாலகுமாரனின் உடையார் தொகுப்பு,சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜெயகாந்தனின் ரிஷி மூலம் ,அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு,கல்கியின் பார்த்தீபன் கனவும் சிவகாமியின் சபதம் இணைப்பையும் நண்பர் ஆதி வாங்கி விட்டார். ( என்னுடைய சில புத்தகங்களை முடித்து விட்டு மெல்ல வாங்கிபடித்து விடலாம் ) .இரண்டாவது நாள் உமர் பாருக்கின் - உடல் மொழி கடைசி நாள் இரண்டாவது படிக்கும் பையனோடு போய் அவருக்கு ஹிந்தி மற்றும் தமிழ் சார்ட் வாங்கினேன் .அவர் பென் டென்னிசனின் ஏழியன் அவதார - கலரிங் புத்தகத்தை வாங்கினார்.  
     

காணாமல் போன பக்கங்கள் ...

எனது மகனின் யோக மாஸ்டருக்கு பரமஹம்ச யோகானந்தரின் - ஒரு யோகியின் சுய சரிதை வாங்கினோம் ஆனால் முதல் நாள் பார்த்த - மனிதனின் நிரந்தர தேடல் கிடைக்கவில்லை அதே போல  நான்  ஒவ்வொரு முறையும் தேடிய புத்தகம் தோழமை வெளியீடு 'காலத்தின் சுருக்கமான வரலாறு' Tamil Translation of "A Brief History of Time" by Stephen Hawking's.இந்த புத்தகம் ஆசிரியர் .நல்லங்கிள்ளி மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு செய்து தோழமை வெளியீடு மூலம் இரண்டாம் பதிப்பு 2005 ல் வெளியீடு செய்துள்ளது -  ஆனால் அதே பதிப்பகத்தை  தொடர்புகொண்ட போது இல்லை என கைவிரித்து விட்டார்கள் .கோவை விஜயா பதிப்பகமும் இதே பதில் சொன்னது ஏமாற்றத்தை அதிகரித்தது .நண்பர்களிடம் பல ஊர்களுக்கு கேட்டு இருக்கிறேன் . 


முதல் பக்கம் முகம் சுளிக்கிறது !

யாரையும் குறை சொல்ல வில்லை என்றாலும் இங்கு ஒரு வேதனை.புத்தக திருவிழா அரங்கத்திர்க்குள்  உள்ளே போனபோதெல்லாம் வந்தது .அது புத்தகங்களின் விலை .தமிழ் வளர்ப்பதாகவும் சரித்திரங்ளை மீட்டு கொண்டுவருவதாகவும் சொல்லிகொள்ளும் பல தற்கால தமிழ் படைப்பாளிகள் மெனக்கெட்டு மேலே வருகிறார்கள் .இதை யாரும் மறுக்க முடியாது ஆனால் காலத்தின் பின்னோக்கிய பார்வையில் இவர்கள் சிறந்த படைப்பாளிகளின் புத்தககளுக்காக தேடும் போது அதன் விலை எவ்வளவு முக்கியம் என்பதை உணராமலா  இருப்பார்கள் .(அதிலும் டீலக்ஸ் பிரிண்ட் இரண்டு மடங்கு விலை வேறு ) அவர்கள் முதலில் வாசிப்பவனாக இருக்கும்போது இந்த விலை எவ்வளவு வலித்து இருக்கும் ?


படிப்பவன் யார் ? அதுவும் சரித்திர புத்தகங்களை வாசிப்பவன் தமிழ் மீது கொஞ்சமாவது நேசம் இல்லாமலா இருப்பான் ? அவனை ஏமாற்றுவதும் அந்த சரித்திரத்தை ஏமாற்றுவதும் ஒன்றுதானே? 
தமிழன் ஆன நான் என ராஜ ராஜ சோழனை படிக்க 1400 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று பிரபல எழுத்தாளர் புத்தகத்தை வாங்கிய நண்பர் ஆதி நொந்து போய் கேட்டார். எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள் அவை ? பிரபல எழுத்தாளர்களை முன் வைக்கும் கேள்வி இதுதான். யாரை பற்றி சொல்ல யாரிடம் சம்பாதிக்கிறீர்கள் ? யோசியுங்கள் . இதனால் தமிழ் வளராது .உங்கள் தரித்திரமும் தீராது !வேதனையாக சொல்ல வேண்டி இருக்கிறது இதை .அப்படியானால் எழுதுபவன் கடைசி வரை பிச்சைகாரனாகத்தான் இருக்க வேண்டுமா என்பார்கள் .உங்களுக்கு தெரியும் .நீங்கள் தமிழ் மூலம் வளர்ந்து இருந்தால் அதில் வரும் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடுத்தவன் எவனும் உங்களுக்கு சொல்ல வேண்டாம்.


  சகோதரர் ஜோதிஜி (தேவியர் இல்லம்- http://deviyar-illam.blogspot.in/2013/12/2014.html ) டாலர் நகரம் புத்தகம் சிறந்த எட்டில் ஒன்று (ஆனந்த விகடன் இயர் புக் 2014) தேர்ந்தெடுத்த பின் கூட முதல் மின் நூல் இலவசமாக“ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெளியிட்ட போது  வெளியிட்ட இரண்டு வாரத்தில் 1400க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கம் செய்து மகத்தான ஆச்சரியத்தையும் ஆதரவையும் தந்த காரணத்தால் இந்த மின் நூலையும் உருவாக்கும் எண்ணம் உருவானது என்ற அவர்  தனது அடுத்த படைப்பான ”வெள்ளை அடிமைகள்” வெளியிட்டார்( http://freetamilebooks.com/ebooks/white-slaves/) .ஒருவேளை வேறு வகையில் காசு பார்க்க அவர் போய் இருந்தால் பல்லாயிர  சாதாரண தமிழனிடம் இந்த கருத்து சேராமல் தொலைந்தல்லவா போய் இருக்கும் ?


இதனால் தான் என்னவோ http://tamilnovelsdownload.blogspot.in/2011/02/all-tamil-novels-download.html மற்றும் http://www.openreadingroom.com/ போன்ற பல பிரபலங்களின் புத்தகங்கள்  தன்னை வெளியே சொல்ல இந்தமாதிரி அவதாரங்களை எடுத்து கொள்வதில் தவறில்லையோ ? 
   

           
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ,ஒரு நூலகம் கட்டுவேன்" என்று மஹாத்மா காந்தி  சொன்னதாக இந்த புத்தக திருவிழாவின் வாசகம் (முதல் படம் )சொல்கிறது .இன்று காந்தி இருந்தால் , நூலகம் கட்டி இருப்பார் ஆனால் புத்தகம் வாங்க பத்து கோடி கடன் வாங்க வேண்டி இருந்து இருக்கும் எனபதைத்தான்   குனிந்த தலையுடன் சொல்லி இருப்பாரோ ? 

2 கருத்துகள்:

  1. பழைய புத்தக கடைகளில் எப்போதும்புத்தகங்கள் வாங்க முடியுமா என்று பாருங்கள். பல விதங்களில் சாதகம்.

    பதிலளிநீக்கு