வியாழன், 29 மே, 2014

வாழ்ந்த தெய்வங்கள் (குல தெய்வம்)


              என்னுடைய குல தெய்வம் எது என்பது இங்கு சொல்வது ஏதோ ஒரு சமூகத்தின் அடையாளத்தை எனக்கு தேடுவது போல ஆகிவிடலாம் என்பதால் அதை தவிர்த்து , பயனிக்க ஆசைப்படுகிறேன்.மேலும் இங்கு நாம் சிந்திக்க ஆசைப்படுவது மரபு சார்ந்த ஒரு பண்பாட்டு முக்கியத்துவத்தின் தேடல் பற்றி ..



                     என்னதான் கடவுள்  இருக்கு இல்லை என்று விவாதம் வந்தாலும் அதில் தோற்றுப்போவதும் ஜெயிப்பதும் யாரோ ஒரு மனிதரகத்தான் இருக்க வேண்டும் .இதனால் கடவுளுக்கு முகவரி மாறி விட போவதில்லை ஒருவேளை அவர் இருந்தாலும் இல்லாவிட்டலும் .ஆனால் ஒவ்வொருவருக்கும் ஜீன் மூலம் பரம்பரை தொடர்பு இல்லாமல் போவதில்லை .இதை மறுக்க விஞ்ஞானத்தால்  கூட முடியாது . குல தெய்வ வழிபாடு  ஒரு விசித்திரமான முன்னோர்களின் தொடர்பு எற்படுத்தும் களமாக இருக்கிறது என்பதுதான் அதனுள் புதைந்து இருக்கும் அற்புதமான விசயம் .



              பிடித்தோ ,பிடிக்கமாலோ  நமது தந்தை தாயுடன் முதல் முதலாக போகும் இடம் அனேகமாக குல தெய்வம் கோவிலுக்குத்தான் .சில பேருக்கு தெளிவாகவே தனது குல தெய்வமான முன்னோர்கள் யார் எனக்கூட தெரியலாம் .மற்றவர்களுக்கு  தாத்தன், பாட்டன், முப்பாட்டன்.. என காலத்தின் பின்னோக்கிய பயணத்தின் முடிவில் இந்த குல தெய்வங்கள்- இடம் பெயர்ந்த ஒரு கூட்டத்தின் ,முந்தைய  யாரோ ஒரு ஆண் அல்லது பெண்ணாக இருப்பார்கள் .எனவே குல தெய்வம் வழிபடும் இடம் முன்னோரின் தொப்புள் கொடி தொடர்புக்கான மையம் . இறந்து போன முன்னோரின் ஆத்ம லயம் நிரம்பிய பாத்திரம்.  



                   நான் சம்பாதிக்க துவங்கிய சில காலத்தில் ஏதாவது ஒரு அமாவாஸை அல்லது பௌர்ணமி நாட்களில் குல தெய்வம் கோவில் போக துவங்கினேன் .அங்குள்ள பலிபீடங்கள் ,பெண் தெய்வம் ,காவல் தெய்வம் என ஒவ்வொன்றாய் வலம் வந்து சுற்றி பார்த்து விட்டு ஆள் அரவமில்லாத ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்வேன் .



               இங்கு ,என்ன தெய்வம் வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இங்கு எனக்கு முன் தோன்றிய தாத்தா,பாட்டி, பாட்டன், மூப்பாட்டன்    என முன்னோக்கி போய் ஒருஇடத்தில் முடியுமே , அத்தனை பேரும் இங்கு வந்து இருப்பார்கள் ,அவர்களின் கால் தடம் ,சிந்தனை,சுவாசம்,அவர்கள் தானமளித்த ஏதாவது ஒரு பொருள் ,செய்து வைத்த பல அடி கம்பீர மண் குதிரைகள் அத்தனையும் காலம் வேடிக்கை பார்க்க சாட்சியாய் அலை ரூபத்தில் இந்த இடத்தில் காந்த களமாக உலவி கொண்டு இருப்பதாக நம்புகிறேன்  .


             கொஞ்சம் நானே முட்டாள் தனமாய் இருப்பதாக எனக்குள் சிரித்து கொண்டலும்  ,அவர்கள் வந்து போனது என்னவோ நிஜம் .வாழ்ந்த தெய்வங்கள் வந்து போன இடம் இது என்பது  உண்மை .உயரமான அந்த உருவங்களும் ,கலப்பை பிடித்த உரமேறிய தோள்களும் ,வானம் பார்த்து இயற்கையோடு பேசும் கண்களும் அலை ரூபத்தில் பதிவுகளாய் பரவி கிடக்கும் அபூர்வமான இடமாக இந்த இடத்தையும் ,இதனை சுற்றியுள்ள இடங்களையும் நினைக்கிறேன் .அங்கு போய் திரும்பும் போதெல்லாம் என்னை உரசி யாரோ எனக்கு துணையாக வெகு தூரம்  வருவதாக உணர்கிறேன். இது வெறும் நம்பிக்கையாய் தோணும் .ஆனல் உயிரை தொடும் சந்தோசமாக இருக்கிறதே ?


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக