இயக்குனர் வசந்தப் பாலனைப் பற்றிய ஓர் ஆதங்கம் எப்போதும் எனக்குள் உண்டு .ஏன் இந்த மனிதன் வாழ்வின் எதிர் காற்றில் கரைந்துப் போனவர்களைப் பற்றி மட்டுமே தேடித் தேடித் பதிவுச் செய்கிறார் ? ஒரு வேளை எழுத்தாளர்ச் சுஜாதா அவர்கள் சிறுகதைப் பற்றிப் பாலாகுமாரனுக்கு ’ ஒரு முண்டம் அல்லது தலையில்லாத மனிதன் தெருவில் நடந்து செல்லுகிறான்’ என்று முதல் வரி எழுதுங்கள் அப்போதுதான் அடுத்த வரியைச் சுவாரஸ்யத்துடன் படிப்பார்கள் என்பதைச் சொன்னார் என்பார்கள் . பொதுவாகப் படைப்புகள் வாழ்வின் அசந்தர்ப்பங்களை மட்டும்தான் பதிவுச் செய்யுமா என்பதெல்லாம் எனக்குள் தீராத கேள்வி நதிகள் !.ஆனால் நான் பார்த்தச் சிலர் சிலருடைய வாழ்க்கைக் கேள்விகளில் தொடங்கிக் கடைசி வரை கேள்வியாகவே முடிவடைந்து விட்டது .இதற்கான காரணத்தை வெகு தூரம் சென்றாலும் தேட முடியவில்லை. ஜாதகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் காலசர்பத் தோசம் என்பது கூட வாழ்கையில் 30 வருடம் மட்டுமே இருக்கும் என்பார்கள்.
நான் இங்கு பேசப் போவது - வசந்த பாலன் கதாபாத்திரம் பசுபதி போல கடைசிவரை வாழ்ந்து , தொலைந்த புள்ளியாய்ப் போய் விட்ட அண்ணன் நண்பராக இருந்த நாகராஜ அண்ணன் பற்றி ..இன்று அவர் எங்களுடன் இல்லை . . ஆனால் அவர் எங்களுடன் பயணித்த சுமார் 20 ஆண்டுகள் அது பல ஆச்சர்யங்கள் நிறைந்தது...
எனது இரண்டாவது அண்ணன் செல்வத்தின் பள்ளித்தோழர் நாகரஜ அண்ணன். இப்போது இருக்கும் திண்டுக்கல் ஆர்.எம் காலனிதான் 33 வருடத்திர்க்கு முன்னர் நகர எல்லைக்குச் சுமார் இரண்டு கி.மீத் தள்ளி இருந்த மிக அழகான கிராமம்.முழுக்க முழுக்க வயல் வெளிகள் நடுவில் சுமார் 40 வீடுகளில் ஒன்றுதான் எங்களுடையது .அங்கு நான் பள்ளிக்குப் போவதர்க்கு முன்னால் மிகச் சிறுவனாக இருந்தபோதே நாகரஜ அண்ணன் வரத் தொடங்கி விட்டார் .அவரும் அண்ணனும் செஸ் விளையாடத் தொடங்கி விட்டால் ஒரே ஆட்டம் மட்டுமே சில சமயம் பல நாட்கள் கூட நீடிக்கும்.கற்றுத் தரச் சொல்லிக் கேட்டால், விளையாடுவதைக் கவனித்தால் தானே வரும் என்பார்கள் இருவரும் ஒரே மாதிரிப் பதில் சொல்வார்கள் பேசவே மாட்டார்கள் .மிக வேகமாகப் புத்தகம் படிப்பதிலும் கணக்குப் போடுவதிலும் நாகராஜ அண்ணன் மிகவும் திறமையானவர்.
அவர் பல விசயத்தில் சுவரஸ்யமானவரும் கூட. அவருக்குக் கையில் ஆறு விரல்கள் உண்டு .அவர் திறமைக்கு அதுதான் காரணம் என்பதாக நினைத்து நான் எனக்கு அது மாதிரி எப்போது வரும் என்று கேட்டேன் .உன் கையில் மாட்டுச் சாணத்தை எடுத்துப் பெரு விரல்லுக்கும் பக்கத்தில் தினமும் வைத்துக் கொள் உனக்கும் ஆறாவது விரல் வருமென்பார் .அதை உண்மை என்று கூட நம்பிய வயது எனக்கு அப்போது . எனக்கும் என இரண்டு சகோதரகளுக்கும் பேய்ப் பயம் அதிகம் என்பதால் பல சமயம் வளர்ந்தக் சோளக்காட்டுக்குள் ஒளிந்து கொண்டு பல குரலில் பயமுறுத்தி ஓட ஓட விரட்டுவார் .
சிறு வயதில் தந்தை இழந்ததால் அவர் படிப்போடு பக்கத்துக் கிராமங்களுக்குக் சென்று பால் கறந்து வந்து அவர் அண்ணனுடன் சேர்ந்து நகரத்துக்குள் வியாபாரம் பண்ணும் தொழிலும் செய்து வந்தார் .இவர்கள் இருவரும் சேர்ந்துதான் தனது இரண்டு தம்பிகளைப் படிக்க வைத்து வந்தார்கள்.பள்ளிக்கூட நேரம் பால் கறத்தல் போக மீதி நேரங்களில் அவர் எங்கள் வீடுதான் தஞ்சமென்று இருப்பார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் பால் கறக்க ஒரு கிரமத்துக்குப் போன சமயத்தில் எப்போதும் பசு மாடு கட்டும் ( கட்டாந்தரையில் ) இடத்தில் காளை மாட்டைக் கட்டி விட்டார்கள் .இவர் லேசானத் தூக்கக் கலக்கத்தில் சென்று, வழக்கம் போல மடியைப் பிடித்து இழுக்கக் காளை மாடு கொடுத்த உதையில் பயந்துப் போய் ஓடி வந்த கதையைப் பல நாள் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம் .
அவரிடம் உள்ள ஓர் அசாதாரணத் திறமையில் ஒன்று கிணற்று நீரில் வெகு நேரம் மிதப்பது !! .எல்லோரும் ஆச்சர்யப்படுவோம் .எங்குக் கற்றுக் கொண்டார் என்று அவர் சொல்லவும் இல்லை மற்ற யாருக்கும் ஏன் எங்கள் செல்வ அண்ணனுக்குக் கூடச் சொல்லித் தந்தவில்லை.நாங்கள் குழித்து மேலே வந்த பின் அலை எழுப்பாதக் கிணற்றின் தண்ணீர்ப் பரப்பில் வெகு நேரம் தரையில் செய்யும் சவாசனம் போலக் கிடப்பார்.நாங்கள் எல்லோரும் திரும்பி வந்த பல மணி நேரம் கழித்தே கிணற்றை விட்டுத் திரும்பி வருவார்.ஓர்சமயம் கூடக் கிணற்று மீனோ ,தண்ணீர்ப் பாம்புகளோ அவரைத் தொந்தரவும் செய்ததில்லை !
அவருக்குச் சுமார் 35 வயதுக்குள் மேல் இரண்டு அதிருஷ்டம் நடந்தது ஒன்று அரசுப் போக்கு வரத்தில் நடத்துனர் வேலை இன்னொன்று திருமணம்.ஆனால் அதே அதிருஷ்டம்தான் அவருக்கான துரதிருஷ்ட வாசலை அகலத் திறந்தது என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது .அவருக்கும் அவர் அண்ணனுக்கும் சில குடும்பப் பிரிவினை அவரைத் திண்டுக்கல்லை விட்டு விலக்கி ஒட்டன்சத்திரத்திர்க்கு நகர்த்தியது அதர்க்கு இன்னும் ஒரு காரணம் அவர் மனைவி ஒட்டன் சத்திரம் கிறிஸ்த்துவ மருத்துவ மனையிலன் மருந்தகத்தில் பணிப் புரிந்து வந்தார் .
சிறு வயது முதலே வாழ்வில் துரதிருஷ்டச் சந்தர்ப்பங்களை மட்டுமே சந்தித்த அவரை வீடு மெல்ல விலக்கி வைத்தது தனது சொந்தச் சகோதரர்த் திருமணத்திர்க்குப் கலந்து கொள்ள மறுக்கப்பட்டதாலும் , அப்போது அவர் மனைவி நிறை மாதக் கர்பமாக இருந்ததால் இவர் மட்டும் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் தனியே மதுரைக்குச் சென்று விட்டு ஒட்டன்சத்திரம் அவர் பணிபுரியும் போக்குவரத்துக் கலகப் பேருந்தில் திரும்பிக் கொண்டு இருந்தார் .
செம்பட்டியில் இருந்து இவர் பயணம் செய்தப் பேருந்தைக் கடந்து போகப் போட்டிப் போட்டுக் கொண்டு வந்த ஒரு தனியார் பேருந்து, நாகராஜ அண்ணன் அவர்கள் பயணம் செய்தப் பேருந்து ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்னால் இருக்கும் கிறிஸ்த்துவ மருத்துவ மனை அருகே (அவர் வீடும் இருந்ததால்) நிற்கவே, அப்போது முந்திவிடலாம் என்ற கணக்கில் முந்திப் பாயும் போது அதே சமயம் எதிரே வந்த இன்னொரு லாரியைப் பார்த்துத் தனியார் பேருந்து ஒட்டுனர், நாகராஜ அண்ணன் வந்த பேருந்துக்கு இடது புறம் திருப்ப அப்போதுதான் அந்தப் பேருந்தை விட்டு இடது தோளில் தனது குழந்தையையும் வலதுக் கையில் கொண்டு சென்ற பையைப் பற்றிக் கொண்டு இறங்க அங்கிருந்த மின்சாரப் போஸ்டர் மேல் மோதி அப்படியே எவ்வித வாய்ப்பும் நேரமும் தப்பிக்கக் கொடுக்காமல் இறங்கிய பேருந்தோடு அந்தத் தனியார் பேருந்து உரசி அடித்துக் குழந்தையோடு அவரையும் தோளில் இருந்த குழந்தையையும் இரண்டு பேருந்துக்கும் இடையே நசுக்கி நின்றது.நிலைமையை உணர்ந்துப் பேருந்தைக் பின்னால் எடுக்கும் போது குழந்தையை இறுக்கிப் பிடித்த நிலையில் நாகராஜ அண்ணன் தரையில் உயிர் பிரியத் தரையில் சரிந்தார்...
அவர் விட்டுக்குச் சில நூறு அடிதூரத்தில் அவர் வசிக்கும் வீடு இருந்ததால் .அவர் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளோரெல்லாம் இந்த விபத்தைப் பார்க்க ஓடி வரும்போது அவர் மனைவி அங்கிருந்து யாரோ விபத்துக்கு உள்ளானதாக நினைத்துக் கூட்டம் ஓடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்...
சில நிமிடங்களில் அவருக்கு யாரோ சொல்ல அப்படியே மயக்க முற்றுக் கீழே விழுந்தார்.அவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள் .அவர் மயக்கம் தெளிந்து எழுந்த போது தனது கணவரையும் குழந்தையையும் இழந்து இருந்தார்.நாகராஜ அண்ணன் உயிர் போன பின்னும் அடிபட்டக் குழந்தையைக் காப்பாற்ற அவர் கையிலிருந்து குழந்தையைப் பிரிக்க முடியவில்லை என்பதைச் சொல்லக் கேட்டுக் கதறி அழுததைப் பார்த்த மருத்துவமனையில் அனைவரும் துயரத்தில் மூழ்கினர்.பின்னாளில் நாகராஜ அண்ணன் பணிப் புரிந்த அரசுப் போக்கு வரத்துக் கழகம் அவர் மனைவிக்கு அரசு வேலைத் கொடுத்த போதும் எனக்கு இந்த மருத்துவ மனையும் அதில் பணிபுரிபவர்கள் மட்டுமே போதும் என்று திரும்பினார்.
அதே போல அவரை முழுமையாக ஏற்றுக் கொண்ட மருத்துவ மனை அங்கேயே தங்கும் வசதியளித்து , அவருக்குப் பிறந்த பெண் குழந்தை இப்போது அதே மருத்துவமனை ஆதரவோடு டாக்டருக்குப் படித்துக் கொண்டு இருக்கிறாள்.என்றாவது ஒரு நாள் அவளை நேரில் பார்க்கும் போதோ அல்லது இந்தப் பதிவைப் படிக்கும் போதோ அவள் தந்தை பற்றி அவரின் எதிர் காற்றின் பயணம் பற்றியும் தெரிந்துக் கொள்வாள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக