செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

”வன்முறைக்கு அப்பால் ...2003 பாகிஸ்தான் மேட்ச்”



நேற்று முன் தினம் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் 1992 (96 ,99,2003,11,15) முதல் -2015 ஆம் ஆண்டு வரை நடந்த  இந்திய - பாகிஸ்தான் அணிகளின் போட்டிகள் அனைத்திலும் (ஆறாவது முறையாக) இந்தியாவே வென்றுள்ளது . தீர்க்க முடியாத எல்லை பிரச்சனையைக் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றி ஆறுதலடைந்து கொள்கிறோம் ! இத்தனைக்கும் இந்த முறை சச்சின் போல மிகப் பல சீனியர்களை வீட்டில் இருக்க வைத்து விட்டு வெற்றியை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறோம் . இதெல்லாம் சரிதான் அத்தனையும் ஏதாவது இன்றைய நாளேடு ஒன்றில் விலா வாரியாகப் படித்து விட வாய்பு இருக்கிறது . 



ஆனால் இதே போல 2003 ல் தென் ஆஃப்ரிக்காவின் சென்சூரியன் ( Centurion Park) நம் அணி இதே பாகிஸ்தானை 26 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு மிகவும் த்ரில்லாக வெற்றியை இந்தியாவே அனுபவித்துக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது யாருக்கும் தெரியாமல் ஒருவரை ஒளித்து வைக்கவும் அவரோடு நாங்கள் இருவர் ஒளிந்து கொள்ள இடம் தேடி அலைந்து கொண்டு இருந்தோம் என்பது எந்த ஒரு பழைய பத்திரிக்கையிலும் வந்து இருக்க வாய்ப்பு இல்லை.அப்படி வராத விசயம்தான் இங்குப் பேசப் போகிறோம்.



நான் பணிப் புரிந்து கொண்டு இருந்த கம்பெனி மாலை வேளையில் கிடைக்கும் டீ டைம் 5.30 - 6.00 மணி இடைவெளியிக்குள் மேனேஜர் உட்பட அத்தனை பேரும் கிரிக்கெட் விளையாடுவோம்.ஏன் அந்த நேரம் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதென்றால் காலையில் கம்பெனிக்குள் வந்தால் எத்தனை மணிக்கு வெளியே போவோம் என்றே தெரியாத சராசரித் திருப்பூர் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அது .ஞாயிறு விடுமுறை என்பது பொங்கள் ,தீபாவளி மாதிரி எப்போதாவது வரும்.அப்படி வந்தாலும் அன்று கிரிக்கெட் காலை மாலையிலும் விளையாடுவோம். கிரிகெட் பொழுதுப் போக்கு மட்டுமல்ல ஒரு வடிகால் மாதிரி .இது போன்ற வடிகால் இல்லாததால் என்னமோ திருப்பூரின் தற்கொலைப் பட்டியலில் முதலாவதாக நீடிக்க வைக்கிறது . 


2003 மார்ச் சனிக்கிழமை இந்தியப் பாகிஸ்தான் மேட்ச். முதல் பேட்டிங் பாகிஸ்தான் வேலைகளுக்கு இடையே எல்லோர் முகத்திலும் ஒருவிதமான பரபரப்புத் தொற்றிக் கொண்டு இருந்தது .என்ன நடக்குமோ என்ற பதஷ்டம் துரத்திக் கொண்டு இருந்தது .சனிக்கிழமை மட்டும் சனிப் பகவானை குச்சனூரிலோ ,திருநள்ளாரிலோ இருக்கமாட்டார் நேராய் ஃப்ளைட் பிடித்தாவது திருப்பூர் வந்து விடுவார் .அப்படி அவஸ்த்தை அன்று திருப்பூருக்குப் புதிதாய் வந்தவர்கள் உணரலாம் .சம்பள நாள் ,ஷிப்மெண்ட் அவசரம் ,சனி ,ஞாயிறு இரவு பகல் வைத்து எப்படியாவது முடித்து விடவேண்டும் பரபரக்கும் நாள் .இத்தனைக்கும் நான் வேலைப் பார்த்தக் கம்பெனியில் முதலாளித் தனது சொந்தத் தகப்பன் இறந்த போதுகூட அதில் கலந்து கொள்ள வர வேண்டாம் என வேலைப் பாதிக்கக் கூடும் என முக்கியத்துவம் கொடுத்த கம்பெனியது . ஆனால் முதலாளியும் கிரிக்கெட் பிரியர் என்பது ஆறுதலான விசயம் .


முதலில் விளையாடி முடித்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன் .சயீது அன்வர் ( Saeed Anwar ) 101 ரன் .இதே அவஸ்தையுடன் மதியம் சாப்பாட்டுக்குப் பின் கம்பெனிக்கு நுழையும் போது செக்யூரிட்டியில், யாருக்கெல்லாம் மேட்ச் பார்க்க விருப்பம் இருக்கோ அவர்கள் போகலாம் என்ற அறிவிப்பின் வயிற்றில் பாலை வார்த்தார்கள். 


நானும் எனது கட்டிங் இன்சார்ஜ் இரண்டு பேரும் விழுந்தடித்துக் கொண்டு அருள்புரத்தில் எங்களுடன் வேலைப் பார்க்கும் நண்பர் வீட்டில் பார்க்கப் போனோம் .சச்சின் - சேவாக் ஜோடிப் பந்துகளைச் சிதறடித்துக் கொண்டு இருந்தது.ஆட்டம் தொடங்கி அரை மணி நேரம் முடியவில்லை வக்கார் யூனஸ் பந்தில் 21 ரன்னில் சேவக் அவுட்.அருள்புரத்தில் இ.பி லைன் மேனும் மேட்ச் பார்து கொண்டு இருந்தாரோ என்னவோ அடப் போங்கடா நீங்களூம் உங்க கிரிக்கெட்டுன்னு லைன் கட்.ஆர்வம் வெறியானது .எங்குப் பார்க்கப் போகலாம் எனும் திட்டமிட்டபோது திருப்பூர் MBS பின்புறத்திலுள்ள பாரில் இது மாதிரி டி.வியுடன் அந்தச் சேவை உண்டு என இன்சார்ஜ் சொல்லப் பறந்து வந்தோம் .அதுவும் மூன்று பேரும் TVS -Suzuki யில்.சொன்ன மாதிரி டி.வி ஒளிபரப்புச் சேவையும் இருந்தது .அப்போது டாஸ்மாக் என்ற அரசுச் சேவை (!) கிடையாது.(2003 நவம்பர் 29 முதல், டாஸ்மாக் மூலம் அரசு மது விற்பனையைத் தொடங்கியிருந்தது.) 100 க்கு மேற்பட்டவர்கள் அங்கு வந்து போகும் அளவுக்கு இடம் இருந்தது ஆனால் நாங்கள் போன போது ,விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே இருந்தார்கள் (மாலையில் சம்பளம் வாங்கினால்தானே பாரில் ஆட்கள் நிரம்புவதர்க்கு ?).


நாங்கள் அங்குப் போவதர்க்குள் இன்னொரு விக்கெட்டும் விழுந்து இருந்தது .ஒருவேளை சச்சினோ இருக்குமோ கலக்கத்தில் பார்க்க அப்புறம் (அன்றைய ) நம் கேப்டன் திருவாளர்க் கங்குலிதான் அவுட். இரண்டு பாலை சந்தித்து ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட் ஆகி இருந்தார் .முகமதுக் கைஃப் சச்சினோடு மெல்ல விளையாடிக் கொண்டு இருந்தார்.மறுமுனையில் சச்சின், புதிய பந்தைப் பழசாக்க முயன்று கொண்டு இருக்கும் அந்த இடைவெளியில்தான் எங்கோயோ போக வேண்டிய சனிப் பகவான் பார்வை எங்கள் மேல் படரத் தொடங்கியது .அதன் விளைவு என் கட்டிங் இன்சார்ஜ் முதல் பீரை ஆர்டர் செய்து கொண்டு வரச் சொன்னார் ...



அவரிடம் உள்ள ஒரே குறை விடிய விடிய ஒரு முழுப் பாட்டில் ஹாட்ரிங்ஸ் சாப்பிட்டு விடுவார் ஆனால் ஒரு பீர் அடித்தாலே போதும் நாங்கள் தங்கி இருக்கும் ஸ்டாஃப் குவார்டர்சை ஒரு வழிப் பண்ணி விடுவார் .இப்போது தொடங்கி விட்டார் .சார் வேண்டாம் சார் என்றேன் .சும்மா ஒண்ணும் பண்ணாது .நாம்தான் ஜெயிக்கிறோம் .மேட்சை அனுபவிச்சுக்கிடே அடிக்கணும் பாஸ் என்றார் உங்களுக்கும் சொல்லட்டா என்றார் .வேண்டாம் சார் நான் சும்மாவே உளறுவேன் என்றதும் சிரிச்சுக்கிட்டே எங்களுக்குப் பின் வரிசையில் உட்கார்ந்து ஆம்லேட் சொல்லி விட்டுப் கச்சேரி ஆரம்பித்து விட்டார்.இந்தச் சமயத்தில் 60 பந்தைச் சந்தித்து விட்டு 35 ரன்னில் கைஃப் , அஃப்ரிடிப் பந்தில் அவுட்.ஸ்கோர் 155.கைஃப்க்குப் பதில் இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ட்ராவிட் .அடுத்த 6 ஓவரில் அணியின் ரன் 177 இருக்கும்போது சச்சினுன் அவுட்.நம்பிக்கை நிறைவேறாத இடத்தில் பயம் வருமே அது வர தொடங்கியவுடன் நாங்கள் இன்னும் மேட்சில் பரபரப்பைத் தாண்டி என்ன ஆகுமோ எனும் பயத்தில் மூழ்கத் தொடங்கி விட்டோம்.சச்சினுக்குப் பதில் யுவராஜ் வந்தார் .’மேட்ச்’ சூடு பிடிக்கத் தொடங்கியது ...நம்பிக்கைப் பிறக்கத் தொடங்கியது.


அப்போதுதான் என் இன்சார்ஜைத் தேடினேன் .குறைந்தது 100 பேருக்கு மேல் கூட்டம் கூடி இருந்தது .பின் வரிசையில் இருந்தவர் காணோம்.ஆட்டம் மிகச் சுவாரஸ்யத்தைத் தாண்டி இருந்தது.இந்திய அணியின் கைக்குள் மேட்ச் வரத் தொடங்யிருந்த போது ஸ்கோர் 250 இருக்கும்! அப்போது என் தோளை யாரோ தட்டியதும், திரும்பினேன் .உங்களை அதோ அந்த அண்ணன் வரச் சொன்னார் என்றார் ஒருவர் .அனேகமாக அவர்அந்தப் பாரின் சர்வராக இருக்கலாம்.எங்களைத் தள்ளி அவர் சொன்ன இடத்திலிருந்து ஒருவர் கையை ஆட்டினார் .நண்பரிடம் சொல்லி விட்டு எழுந்து அவரிடம் போனேன் .அவன் கூடயா நீ வந்து இருக்க என்று கையைக் பாரின் பின் பக்கம் காட்டினார் .அங்குப் பாரின் குட்டிச் சுவத்து மேல் ஒரு பீர்ப் பாட்டிலோடு இன்சார்ஜ்.


ஆமாம் என்றேன் எத்தனை பேர் வந்து இருக்கீங்க என்றார் .சொன்னேன் .இன்னும் ஐந்து நிமிசத்துக்குள்ள அவனைக் கூட்டிடு ஓடிப் போயிடுஙக இல்லாட்டி உயிரோட ஒருத்தனும் போக மாட்டீங்க என்று சொல்லி மிரட்டலோடு பார்த்தார் .அவருடன் இருந்த ஒருவர் அவசரமாக எழுந்து என்னை மெல்லத் தள்ளிக் கொண்டு ,இழுத்துக் கொண்டு வராத குறையாக என்னை அந்தக் குட்டிச்சுவருக்குக் கூட்டிக் கொண்டு போனார் .இங்க பாரு அவன் கோபக்காரன் உங்க ஆள் அவனை வெறுப்பேத்தற மாதிரி மதத்ததைப் பற்றியே பேசிக்கிட்டே இருக்கான் கூட்டிட்டு ஓடிட்டா நல்லது,அவன் இந்த ஏரியாயாக்காரன் சும்மா விடமாட்டன் சொல்லிட்டென் என்றார் .அப்போதுதான் என் இன்சார்ஜைக் கவனித்தேன் .நிறையக் குடித்து விட்டு அந்தக் குறிப்பிட்ட மதத்தைப் பற்றித் தொடர்ந்து கெட்ட வார்த்தைக் கலந்து உங்கள ஜெயிப்போம்டா, விடுவமா என்று குரல் உயர்த்திக் கத்திக் கொண்டு இருந்தார்.எனக்கு ’மேட்ச்’ சுத்தமாகப் புத்தியை விட்டுப் போய்விட்டது .கால் லேசாய் நடுங்கியது .ஏதோ எக்கச் சக்கமாக் மாட்டிக்கொண்டோம் என்று உணர்ந்தேன் .ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்க இருந்தால் மட்டுமே அப்படி எனக்குத் தோனும் .எனவே உடனே அவரை வாரிக் கொண்டு இடத்தை விட்டுப் போக வேண்டும் என்று மனம் பரபரத்தது.


என்னுடன் வந்து இருக்கும் நண்பர் என்னை விடவும் பயந்தவர் .எனவே முகத்தில் பரபரப்பைக் காட்டிக் கொள்ளாமல் மெல்லச் சொன்னேன் .அதர்க்கே பயந்து விட்டார்.என்ன ’சார்’ சொல்றீங்க?வந்த இடத்துல ’மேட்ச்’ பாக்காம .என்று பயப்பட ஆரம்பிக்க அவரை அழுத்திக் கொண்டு இன்சார்ஜை இருக்க இடத்துக்குத் கூட்டத்தில் நீந்திப் போய்க் கூப்பிட்டோம். வாங்க ’சார்’ போயிடலாம் .வண்டி வெளிய எடுக்க முடியாது இப்பவே கிளம்பிடலாம் என்றோம் .அவர் இப்பத்தான் அஞ்சாவது பீரைச் சொல்லி இருக்கேன் வரட்டும் என்றார் .என்னுடைய இன்சார்ஜ் என்பதால் நான் அவரை அதிகம் கட்டாயப்படுத்த முடியாது.ஆனால் நிலைமை அப்படி இல்லையே ? வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு நான் முன்னாடி வெளியே நிக்கிறேன் எப்படியாவது கூட்டிட்டு வந்துறுங்க என்றேன் .இதைக் கேட்ட நண்பர் பயத்தில் உளறவே அரம்பித்து விட்டார்.நான் வண்டியை நோக்கிப் போக, இதையெல்லாம் தெரியாத கூட்டத்தின் கூச்சல் வேற்றியை நோக்கி உற்சாகம் பொங்க உரக்கக் கத்திக் கொண்டு இருந்தது. 


வண்டியை எப்படியோ வெளியே நிறுத்தவும் வெற்றி வெற்றி என்று உள்ளே பட்டாசுச் சத்தம் வரவே நான் உள்ளே ஓடினேன்.நண்பரும் - இன்சார்ஜும் இருக்கும் இடத்திர்க்குப் சுமார் 20 அடி வித்தியாசத்தில் நான் ஓடிக் கொண்டு இருக்கும் போது என்னைத் தள்ளிக் கொண்டு போய்ப் பேசியவர், ஓடி வந்து இன்சார்ஜ் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.இன்சார்ஜ் உறைந்து விட்டார்.ஒசூரில் வசதியான குடும்பம் அவர் இப்படி ஓர் அவமானம் ஏற்பட இதர்க்கு முன் வாய்ப்பே இல்லை.அவர அம்மா ஒரு நகர் மன்ற உறுப்பினர்.சந்திரபாபு நாயுடுக்கு ஒருவகையில் சொந்தம் அடுத்த அடி விழுவதர்க்குள் நான் அவரைப் பின்னால் இருந்து பிடித்தேன்.கோபத்தோடு என்னைப் திரும்பிப் பார்த்து ,என்னடாச் சொன்னேன் .அவன் கொல்லாம விடமாட்டான் அங்க பாரு என்றார் .அவர் நணபர் என்று சொல்லிக் கொண்டு இருக்க ,அதர்க்குள் நண்பர் ’இன்சார்ஜை’ கையைப் பிடித்துத் தரத் தரவென இழுத்துக் கொண்டு போக முயற்சிக்கும் போது அவர் முதுகில் ஒரு ப்ளாஸ்டிக் ’சேர்’ பறந்து வந்து தாக்கியது .நான் பிடித்து இருந்தவர் என்னை உதறி விட்டு அவர் நண்பரை நோக்கி ஓடக் கூட்டம் விலகிச் சிதறியது .நான் இன்சார்ஜை இழுக்க அவர் பக்கம் போக ஒரு பாட்டில் என் முதுகைத் தாக்கியது .நல்ல வேளை அது தண்ணீர்ப் பாட்டில்.எப்படியாவது காப்பாற்ற வேண்டும் அவரை . 


இரண்டுப் பேரும் காம்பவுண்ட் சுவரைச் சுற்றி இழுத்துக் கொண்டு ஓடும் போது போகும்போது ,என்னை முதலில் கூப்பிட்டுப் பேசியவரை ஏறக்குறைய மூன்று பேர் அமுக்கிப் பிடிக்க அவர்களை உதறித் திமிறிக் கொண்டு இருந்த போது அவர் கையில் உடைந்த பீர்ப் பாட்டில் இருந்ததுபார்த்தேன் ,மூன்று பேர் ஓடித் தப்பிக்க வழி இல்லை .வண்டியிலும் எடுத்துத் தப்பிக்க வாய்ப்பு இல்லை .நண்பரிடம் சொல்லி இவரை எப்படியாவது பின்னால் இருக்கும் தியேட்டர்ப் பக்கம் கூட்டிக் கொண்டு போயிடுங்க .ஈஸ்வரன் கோவில் பக்கமாய்ப் போய்த் தப்பிச்சுரலாம் அதர்க்குள் நான் வண்டியுடன் வந்தர்றேன் என்று வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது என் இன்சார்ஜை அடிக்க வந்தவர் குரல் எனக்குத் கேட்டது .. 


எப்ப இருந்து சொல்றேன் அந்த நாய்த் திரும்பத் திரும்பத் திட்றான் ,நான் மட்டும் இந்தியனில்லையா ? நான் இதே மண்ணுலதான் பிறந்தேன் எனக்கும் இந்தியா ஜெயிக்கிறது சந்தோசமில்லயா ? விளையாட்டுன்னு வந்துட்டாத் திறமை இருக்கிறவன் ஜெயிப்பான் இவன் எதுக்கு அவன் என் மதத்த பற்றிப் பேசறான் ... 


இதைக் கேட்ட எனக்கு ஒரு நிமிடம் உள்ளே போய் அவரிடம் என் இன்சார்ஜ் பேசியதர்க்காகக் மன்னிப்புக் கேட்டு விட்டு வரலாம் என்பதாகத் தோன்றியது.

அதற்குள் என்னை நோக்கி நண்பர் ஓடி வந்து
“உங்க இன்சார்ஜ் சொல்லறதைக் கேட்காமப் பார் நோக்கி வந்துட்டு இருக்காரு வாங்கச் சீக்கிரமா என்று பரபரத்தார்!”

1 கருத்து: