செவ்வாய், 3 மார்ச், 2015

உயிர் காற்று


                        பொதுவாக நாமெல்லாம் நேரடியாக உதவி செய்பவர்களைத்தான் நம்புகிறோம் கொண்டாடுகிறோம் .ஆனால் நமக்குக் கண்ணுக்குத் தெரியாமல் உதவி செய்யும் சக்திகளினால்தான் வாழ்வே சந்தோசமாகச் செல்கிறது .அதில் முக்கியமானது காற்று ,நீர் இரண்டுக்குமான ஆதார சக்தியாக இருப்பது நம்மைச் சுற்றி உள்ள மரங்கள் . அவை நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதைப் பற்றி நாம் அக்கறை படுகிறோமோ இல்லையோ பிள்ளையைப் பெற்ற அன்னை எப்படிப் பெற்ற மக்கள் திருப்பிச் செய்வார்கள் என எதிர்பாரமல் செய்கிறார்களோ அது போல நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு புல்லும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு நன்மையே தருகிறது நம்மவர்கள் அதனால்தானோ என்னவோ ஸ்தல விருட்சம் என இயற்கையைப் பிற்காலத்தில் கடவுளுடன் சேர்த்து வைத்து விட்டர்கள் போல ?


             வெகு நாள் நான் விரும்பும் ஆராய்ச்சிகளில் ஒன்று வெயில் (காலங்களில்) நம்மைச் சுட்டெரிக்கும் போது அதே வெய்யிலை வாங்கும் பூமி நீர் சத்துள்ள தற்பூசனியைத் தருவது எப்படி ? .மழைக்காலத்தில் காளன்கள் ,இதைப்போல எண்ணற்ற மருத்துவச் செடிகள், கொடிகள்,மருந்தாக வளர்வது எப்படி ? கோள்கள் எப்போதுமே மனிதனுக்குத் தீமைகள் செய்வதே இல்லை .எதாவது ஒரு விதத்தில் ஒரு பேலன்ஸ் பண்ணவே போராடுகின்றன .எனக்குத் தெரிந்த மருத்துவர் மிக எளிமையாக – ’ என்ன சீசன்ல என்ன காய்,கனி விளையுதோ அதுவே போதும் நம்மைக் காப்பாற்ற என்று சொல்வார்’ . ஆனால் நாம் சிம்லா ஆப்பிளும் அமெரிக்காப் பேரிக்காவுக்கும் துபாய் பேரிச்சைப் பழத்துக்கும் ஆசைப்பட்டும் கொண்டு இருப்பது வேறு விசயம் .ஆனால் இயற்கையுள் உலாவும் கோள்களுக்கும் - மனித உயிருக்கும் எப்போது ஒரு ரகசிய ஒப்பந்தம் இருகிறது .அதைப் புரிந்துக் கொண்டவன் சித்தர்கள் என்பார்கள் வாழ் நாளில் எப்படி நிகழ்கிறது என்பதை நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றதை அவர்கள் பாதம் பின் பற்றி ஆராய வேண்டும் .


                     இப்படி ஒரு மிகப் பெரிய ஆர்வத்தை 16 வயதில் எனக்குத் தந்தவர் என் +1 மற்றும் +2 வின் ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் ஐயா அவர்கள்தான். .நான் எடுத்த ப்யூர் சைன்ஸ் ( Pure Science ) பாடத்தில் தாவரவியல் (Botany) ஆசிரியர் அவர் .மிகக் கடின உழைப்பாளி .தாவர ,மரங்கள் செடி மற்றும் கொடி என எல்லாவற்றின் மீதும் ஒருவித கட்டாயக் காதலைக் கொண்டவர் .மிகவும் போராடி அவரின் சோதனைக் கூடத்தில் பல தாவரச் செல்களின் சேகரிப்பு வைத்து இருந்தவர்.மிகவும் கண்டிப்பானவர்.அவர் +2 வில் எனக்கு வகுப்பு ஆசிரியரும் கூட .நான் முதல் மதிப்பெண் எடுத்ததே இல்லை ஆனால் என்னை லீடராக்கி வைத்து இருந்தார்.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வாரத்தில் இரண்டு நாள் எங்களுக்குப் பாட்டனி லேப் .எப்படியும் நான் வரிசையாக வகுப்புத் தோழர்களைப் பாட்டனி லேப்புக்கு அனுப்பி விட்டு ,வகுப்பு அறை பூட்டி விட்டு வருவதர்க்குள் வகுப்பு ஆரம்பித்து விடும் .அவர் வகுப்புக்கு யார் தாமதமாக் போனாலும் வாசல்தான் கதி .அதுவும் அந்த வாசல் ஆறடி உயரம் .அந்தப் பகுதியில் வருவோர் போவெரெல்லாம் என்னைப் பார்த்துக் சின்னதாய் ஒரு நக்கலை உதிர்த்து விட்டுப் போவார்கள் லேப் வகுப்பு ஒரு மணி நேரம் நாற்பது நிமிடம் நடக்கும் அவ்வளவு நேரமும் நின்றே பாடம் கவனிப்பேன்..


அவர் வகுப்பில் எல்லாருக்கும் மைக்ராஸ்க்கோப் வழங்கி சோதிக்கப் பழக்குவார்,அது மட்டுமல்ல நீங்கள் கண்ணில் படும் எந்தத் தாவரமும் கொண்டு போய் ஆராய வாய்ப்பு உண்டு.இத்தனைதான் பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர் என்றாலும் என்னையும் சில மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து உணவு வழங்கி மரியாதை செய்வார் .அவர் வீட்டில் உள்ள புத்தகங்கள் பார்த்துப் பொறாமை படாத நாளே இல்லை அத்தனையும் கலிக்கோ பைண்டிங் செய்து கண்ணாடிப் பீரோக்குள அழக்காக அடுக்கி வைத்து இருப்பார் .இன்றைக்கு இப்போதும் இங்கு” பையர் ஹாலில் ”ஆடைகளை அணிவித்துப் பார்க்கும் டம்மிகளை (Dummy ) பார்த்தால் அந்த ஞாபக நிழல் வந்து போகும் ! என்ன ? அவர் வைத்து இருந்த அத்தனையும் ஆங்கிலப் புத்தகங்கள்.அரசு பள்ளியில் எட்டாவது படிக்கும் வரை என் பெயரே ஆங்கிலத்தில் எனக்கு எழுத தெரியாது .அப்படி இருக்கும் போது அவரின் ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி எப்படிப் படிப்பேன் அதனால் ஆசைத்தீர தடவி பார்ப்பேன் அதைத் தவிர வேறு என்ன செய்ய ?


எங்களுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் விலங்கியல் ,தாவரவியல் எடுத்தவர்கள் எங்களுக்குக் கிடைத்த வரம் .ஆனலும் இங்கும் மேலும் இருவரை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.ஆம்.அவர்கள் கெம்ஸ்ட்ரி ஆசிரியரும் , ஃபிசிக்ஸ் ஆசிரியரும். சம்பாதிக்க மட்டுமே வந்தவகள் போல நடந்து கொள்வார்கள்.அரசு பள்ளியில் படிக்க வைக்கும் எந்த அப்பனும் காசு பணம் வைத்துக் கொண்டு படிக்க அனுப்ப மாட்டன் அதைப் புரிந்து கொள்ளாத அவர்கள் எங்கள் பள்ளிக்கும் ,அந்தப் புனிதமான தொழிலுக்கும் சாபங்கள் என்றே சொல்வேன் .ஆம் அந்த ஆசிரியர்களும் இருவரையும் ! தேர்வில் பாஸ் பண்ண எடுக்க வேண்டிய 70 மார்க்கில் ப்ராக்டிக்கல் என்ற பிரமாஸ்த்திரம் போன்ற 50 மார்க் அவர்கள் கையில் என்பதால் டியூசன் வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் .இதில் டியூசன் போக முடியாதவர்கள் பலர் வாழ்வை எதிர்காலத்தை இவர்களால் கேள்வி குறியாக்கி விட்டு இருக்கிறார்கள் இதில் பாதிப்பட்டவர்களில் .என் சீனியர் உதயசங்கர் என்பவர் பிராக்டிக்கல் மார்க் (டியூசன் போகவில்லை) இல்லாததால் இறுதித் தேர்வில் தோல்வி .அப்போது ( 1986 ல் ) அவர் ஒரு மிகப் பெரிய கோபத்தின் உச்சத்தில் அந்த ஆசிரியரின் Hero majestic வண்டியின் பெட்ரோல் டேங் மூடியைக் கழட்டி ஜீனியைக் கொட்டினார் ( எஞ்சின் இயக்கத்தைக் கெடுப்பதர்க்கு ) .அவ்வளவு கோபம் .அந்த இரு( சாபங்களும் ) ஆசிரியர்களும் எங்களிடம் அடிக்கடிச் சொல்லும் மிகப் பெரிய சொற்தொடர்

“ நீங்க படிச்சா படிங்க ,நீங்க பாஸானாலும் ஃபெயிலானாலும் எனக்கு  மாசா மாசம் வரவேண்டிய  என் சம்பள கவர் வந்துக்கிட்டேதான் இருக்கும் “


    இப்படிச் சொல்லும்  ஒரு தொழில் துரோகம் வேறு இந்த உலகில் இருக்கா என்ன ? சரி நல்லதை பேசிட்டு இருக்கும் போது சாபங்கள் பற்றி அதிகம் பேசிவிட்டோம் .ஏதோ ஓர் ஆழத்தில் கிடந்த கோபம்  ! Postmodernism த்தின் தேடல் கதைகள் போல  வழியை மாற்றிக்  கொஞ்சம் விலகி பயணிக்க வைத்து விட்டது ! போகட்டும் .


         சுந்தர மகாலிங்கம் ஐயா பொதுச் சேவையில் மிக அக்கறையுள்ளவர் .அவர்தான் மரம் நடும் விசயத்தை எங்கள் பள்ளிக்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவர் .அப்போது முக்கியமாகப் பார்த்தீனியச் செடியின் (Parthenium hysterophorus) வளர்ச்சி அதிகம் இப்போது யுரேனிய குப்பைக்கு இந்தியாவைப் பயன்படுத்திகொண்டு இருக்கும் அமெரிக்கா அப்போது கடலில் கொட்டி மீன்வளத்தைப் பெருக்க வைத்து இருந்த கோதுமை மாவுகள் போன்ற உணவுப்பொருட்களை இங்கு இறக்குமதிச் செய்த போது நமக்குத் தந்த அன்பளிப்புப் பார்த்தீனியம் (பார்த்தீனியத்தின் பூர்வீக நாடு அமெரிக்கா) என்பது எல்லோரும் அறியப்பட வேண்டிய விசயம் .எங்கள் பள்ளிகளின் மிக அடர்ந்து வளர்ந்த இருந்த பார்த்தீனியம் செடியை அடியோடு அழிக்க முயற்சி எடுத்தவர் சுந்தர மகாலிங்கம் ஐயா .அது மட்டுமல்ல திண்டுக்கல்லின் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ’கேம்ப்’ போட்டு உப்புத்தண்ணிக் கரைசலைக் தெளித்து அழிக்கத் திட்டமிட்டுக் கொடுத்தவர்.அது மட்டுமல்ல Nature Club என்ற ஓரு அமைப்பை ஆரம்பித்து நகர் முழுதும் சேவை செய்ய வாய்ப்பை கொடுத்தார் .அதில் முக்கியமாகச் செய்தது இரண்டு .ஒன்று இன்றைய திண்டுக்கல் ’ஒடுக்கம்’ பகுதியில் மரம் வளர்ப்புத் திட்டத்தில் பங்கு பெற்று ,மொத்தப் பள்ளியின் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்களை அழைத்துச் சென்று சுமார் லட்சம் மரம் நட காரணமாக இருந்தார்..இதை ஹிந்து ( ஆங்கில) பத்திரிக்கையின் முதற் பக்கத்து பெட்டி செய்திகளில், பள்ளியின் பெயரும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர மகாலிங்கம் ஐயா பெயரும் தலைவர் ( president ) என்ற இடத்தில் என் பெயரும் வந்து இருந்தது .அதர்க்குப் பின்னும் பல பத்திரிக்கைப்[ பெட்டி செய்திகளில் நாங்கள் வந்தோம் !அப்போது இருந்த கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் தோழர் முத்துலக்கையன் ஐயா மற்றும் முன்னால் நகர் மன்ற உறுப்பினர் ( வாணி விலாஸ் ஹோட்டல் ) ஹரிஹரன் ஐயாவும் மிகவும் உதவினார்கள் .


இன்னொரு முக்கியமான சுந்தர மகாலிங்கம் ஐயாவின் சாதனை திண்டுக்கல்லிலிருந்து - குஜராத்திலுள்ள வடோடரா ( vadodara ) மாவட்டத்தின் எல்லயோர ஊரான கெவேடியா ( Kevadiya ) நர்மதை ஆறு பாயும் மலைக்குப் பக்கத்தில் நடத்தப்பட்ட Antar Bharathi National Integaration and Environmental Camp என்ற மரம் நடும் மாநில அளவிலான திட்டத்திர்க்கு ( 24.101988 - 02.11.1988 ) அழைத்துச் சென்றார்.முழுக்க முழுக்க அவரின் திட்டமிடலும் ,உழைப்பும் ,மெனக்கெடலும் அபாரம் . மொத்தம் இந்தியாவிலிருந்து ஐயாயிரம் பேரும் தமிழத்திலிருந்து 350 பேரும் கலந்து கொண்ட மாபெரும் மரம் நடும் விழா அது . 

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஓர் ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன. 

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய் 

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய் 

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய் 

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய் 

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய் 

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய் 

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம் 

இது சற்றுப் பழைய கணக்கீடு. தற்போதைய நிலவரப்படி இது பதின் மடங்கு அதிகரித்திருக்கலாம். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத மக்களால் இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஓர் ஏக்கர் நிலம் மொட்டையடிக்கப் படுகின்றன என ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.( நன்றி http://www.muthukamalam.com/muthukamalam_manam%20thiranthu50.htm) 

       சரி இங்குப் போய் மரம் நட்டு விட்டு சும்மா வந்தோமா ? இல்லை ஒரு மிகப்பெரிய அசம்பாவிதத்தை அங்குச் சந்தித்தோம் .ஆம் கேம்ப்க்கு அருகில் அழகிய நர்மதை ஆறு பாயுந்து செல்லும் இடம்.அழகிய ஆறு மட்டும் அங்குப் பாயவில்லை அதர்க்குள் ஓர் அபாயம் காத்து இருந்தது அதன் பெயர் ஆற்றில் வாழும் முதலைகள் . 
    எங்கள் மரம் நடும் கேம்ப் மரம் நடவேண்டிய மலைச் சறிவிர்க்கு மிகப் பக்கமாக இருந்தது .கேம்பிர்க்கும் மலைக்கும் நடுவே நர்மதை ஆறு திருமணம் ஆன பெண் போல மிகப் பவ்வியாமாகக் கடந்து சென்று கொண்டு இருந்தது .நாங்கள் இரவு நேரம் ஆன பிறகு மெல்ல ஆற்றுப் பக்கம் ஒதுங்க போனோம் இன்னும் நூறடி இருக்கும் போது பின்னால் ஏதோ சத்தம் திரும்பினால் இரண்டு உயரமான குதிரைகளில் இரண்டு பேர் ஒரு வித ராணுவ உடை மாதிரி அணிந்து இருந்தார்கள் .ஹிந்தியில் ஏதோ கேட்டார்கள் .அங்கு எதர்க்குப் போகிறீர்கள் என்பதாகப் புரிந்து கொண்டோம் .திரும்பிப் போகக் கட்டளையிட்டர்கள். ஏற்கனவே ஹிந்தி மொழிக்கு (ஹை ஹை என்பதால் ) குதிரைக்காரன் பாஷை என்ற பெயருண்டே .குத்து மதிப்பாகத் திரும்பி விட்டோம். .அவர்கள் போகும்போது கேம்ப் இன்சார்ஜிடம் நாங்கள் வந்து போன விசயத்தையும் எப்போதுமே அந்த நதி பக்கம் போகக் கூடாது அங்கு முதலைகள் நிறைய இருப்பதாகவும் சொல்லி விட்டுப் போய் இருக்கிறாகள்.அதற்காகத்தான் நாங்கள் பகல் இரவு என்று டெண்ட் போட்டுப் பாதுகாப்பில் இருக்கிறோம் என்றும் சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள் . .இரவு சுமார் ஏழுமணிக்குக் கேம்ப்பில் ,நன் நடத்தை ஒழுங்கு முறைக் கூட்டம் போடப்பட்டது .அதில் இந்த அறிவிப்பு கண்டிப்பாகப் பின் பற்ற வேண்டுமென்று சொல்லப்பட்டது . 



                  அந்த அறிவிப்பு வந்த பின் பலநாள் யார் கண்ணிலும் முதலை எதுவும் கண்ணில் படவில்லை .அதனால் சில பேர் மதியம் மரம் நடுதல் மூன்று மணிக்கு முடிந்தவுடன் திரும்பி வரும்போது டெண்ட்டில் உள்ள ராணுவ உடை ஆசாமிகளுகளின் கண்ணில் மறைந்து குளித்து  இருக்கிறார்கள்.அப்படியே அந்த விசயம் மெல்லப் பரவி, எல்லோருக்குள்ளும் நதி நீராடல் ஆசைப் பற்றிகொண்டது .ஆனாலும் ஒவ்வொரு நாள் மாலை நடக்கும் இருமணி நேர மாநில கலை நிகழ்ச்சிகளிலும் அந்த அறிவிப்பில் மட்டும் சொல்லபட்டுக் கொண்டே இருந்தது . அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை மரம் நடும் வேலை இல்லை .நமது சென்னையைச் சேர்ந்து ஐந்து மாணவர்கள் மட்டும் மதியம் மூன்று மணிக்கு நதியில் குளிக்கப் பாதுகாப்புக் கேம்ப் தாண்டி யார் கண்ணிலும் குளித்து இருக்கிறார்கள் நதியின் நடுப்பகுதிக்குப் போன ஒருவன் திடீரெனெக் கத்திச் கொண்டே உள்ளே இழுக்கப்பட்டு இருக்கிறான் .இன்னொருவனை ஏதோ கையைப் பற்றி இழுத்து இருக்கிறது .கரையை ஒட்டி நீச்சல் தெரியாத மூவர் இதைப் பார்த்துக் கத்த டெண்ட் ராணுவம் உதவ ஓடிப் போய் இருக்கிறது .கையைப் பற்றியவனை ஒரு கையை மட்டும் பிய்த்து விட்டது ஒரு முதலை இன்னொன்று இழுதுக்கொண்டு போய் விட்டது.சில மணி நேரத் தேடுதலில் சுமார் அரைக் கி.மீ தள்ளி இடுப்புவரை அவன் பாதி உடல் கரை ஒதுங்கியது.வெகு சிலரே அதைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். அதில் சுந்தர மகாலிங்கம் ஐயாவும் ஒருவர் அன்று கேம்ப் முழுவதும் மிகப் பயங்கர அமைதி நிலவியது இறந்தது தமிழ் நாட்டு மாணவன் ஆனாலும் எந்த மாநில டெண்ட்களிலும் இரவு உணவு எடுத்துக்கொள்ளபடவில்லை உணவுக் கமிட்டியிலும் நான் இருந்ததால் எல்லாம் மாநில டெண்டும் போவேன் எல்லா உணவும் கீழே கொட்டப்பட்டது அதுக்கு முந்த நாள் வரை சப்பாத்திக்குக்’ சப்ஜி’ சண்டை அனேகமாக எல்லா டெண்டிலும் இருந்தது ஆனால் அன்று வாலி வாலியாகக் கீழே கொட்டப்பட்டது .சப்பாத்திகளும் வீசப்பட்டது . 


அந்தச் சம்பவம் நடந்த சில நாளில் கேம்ப் முடிந்து விட்டது .ஆனலும் நான் பார்க்காத முதலை விட்டுச்சென்ற அந்த இடுப்புவரை உடல் மட்டும் என் நினைவுக்குள் மிதந்து கொண்டே இருந்தது. .ஏனோ பல நாள் கரை ஒதுங்கவே இல்லை… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக