செவ்வாய், 1 செப்டம்பர், 2015

செருப்புதான், ஆனாலும் .

.
எப்பவாவது முக்கியமான வேலை இருக்கும் போது உங்கள் செருப்பு அறுந்துத் தொங்கி ,அடுத்த அடி எடுத்து வைக்கும்போது குடிகாரன் போலத் தள்ளாடும் நிலை வந்தால் என்ன செய்வது ? எங்காவது தைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்வது என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் .அது சரிதான் ஆனால் தைக்க ஆள் தேடுவதுவும் யாரும் பார்க்கக் கூடாது என்ற கூச்சம் பிடுங்கித் தின்பதைத் தவிர்க்க ஹெல்மெட்டைக் கலட்டாமல் வேர்த்து நிற்கும் போது கடங்காரனைக் கண்டுபிடிப்பது போல நச்சுன்னு வந்து பிரேக் பிடித்து நின்று என்ன என்று நம்மையும் நம் தைக்கும் செருப்பையும் மாறி மாறிப் பார்ப்பவர்களை என்ன சொல்வது விதியின் விளையாட்டு என்பதைத் தவிர ? 

செருப்புதானே வீசியெறிந்து விட்டுப் புதுசு வாங்க வேண்டியதுதானே என்று
நீங்கள் யோசித்துக் கொண்டே படிப்பது (!) தெரிகிறது.ஆனால் செருப்பு விசயத்திற்குப் பின்னால் எனக்கு நிறையக் கோபம் பல பேர் மேல் உண்டு.கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தக் காலத்திலிருந்தே செருப்பைத் தொலைப்பது என் அணிச்சையான செயலாக இருந்தால் பரவாயில்லை யாராவது தூக்கிக் கொண்டு போவதுவும் அதற்குப் பதிலாக ஒரு பிய்ந்து போன செருப்புக் கூட விடாமல் போவது எந்த விதத்திலும் நியாயம் இல்லைதானே ?

வெறும் காலுடன் நடந்து வரும் போது யார் மீதெல்லாமோ கோபம் வரும் ! வெறும் காலோடு கூட நடந்து விடலாம் பிய்ந்து போன செருப்போடு  நடப்பது மிகப் பெரிய அவமானமாக தோணும்..என்ன செய்ய ? கிரிக்கெட் விளையாடும் போது மிகுந்த சிரமப்பட்டு ஃபாஸ்ட் பௌலராக உருவெடுத்தபோது கேன்வாஸ் ஷு அவசியம் தெரிந்தும் வாங்கப் பயப்பட்டபோது ஒரு சீனியர் தன்னுடைய இரண்டு ஷூவைப் பிரசண்ட் பண்ணினார்.

எனக்குத் தெரிந்துப் பள்ளியில் தொடங்கி வேலைக்குப் போகும் வரை கூட
இதை அனுபவித்து இருக்கிறேன். எங்கு இருந்துதான் எனக்குன்னு மட்டும் வருவார்களோ தெரியவில்லை அலாக்காக என் செருப்பை மட்டும் தூக்கிக் கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள் .இது நான் தனியாகப் போகும் போது மட்டுமல்ல அம்மா ,அப்பா ,அண்ணன்களோடு போகும் போதும் நடந்த பிறகுதான் அவர்கள் இதை ஒத்துக் கொள்ளத் துவங்கினார்கள். இப்படித்தான் தொலைத்தால் என் வீடுதான் என்ன செய்யும் இருக்கவே இருக்கு ரப்பர்ச் செருப்பு என்று படிக்கும் வரை காலம் தேய்ந்தது அதோடு செருப்பு ராசி இல்லாதவன் என்ற பட்டப் பெயர் மட்டும் இன்னும் தேயவில்லை.

திருப்பூர் வந்து ஊருக்குப் போகும் போதெல்லாம் வீட்டில் வீட்டுக்குள்
நுழையும் போது என்னோடு சேர்த்து என் செருப்பையும் பார்த்துப் பழகிவிட்டார்கள்.திரும்பி வரும் போது கட்டாயம் அப்பாவோ ,அண்ணனோ ஒரு புது ஜோடி வாங்கிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது . .திண்டுக்கல் தோல் தொழிலுக்கு நல்ல பெயர் வாங்கி இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது ஆனால் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை ’தோல்’ என்று திரு.செல்வராஜ் எழுதிய நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கிய பிறகு தெரிந்து இருக்கலாம்.(அந்த நாவலின் அவர்களின் துயர் நிறைந்த வாழ்வு எப்படிப் பட்டது என்பதை விளக்கமாக யதார்த்த மொழியில், 26 அத்தியாயங்களாக 117 கேரக்டர்களுடன் இந்த நாவல் வடிவமைத்துச் சொல்லியிருப்பார். )

கல்யாணம் மண்டபச் செருப்புக் காணாமல் போகும் கார்டூன்கள் பழைய ஆனந்த விகடனின் கூடச் சகஜமாக வெளிவரும் .இப்போதெல்லாம் பரவாயில்லை கல்யாண மண்டபங்களில் திருமண மேடைவரைக் கூடச் செருப்பு சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. கோவில்களில் இலவசச் செருப்பு ஸ்டாண்ட் இருந்தாலும் அங்கும் கை நீட்டிக் காசு கேட்பது தவிர்க்கமுடிவதில்லை என்பது வேறு விசயம். இங்குத் திருப்பூரில் புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் ஒரு அருண் ஐஸ் கிரீம் கடையில் Leave your foot wear outside என்பதைப் படிக்கும் போதெல்லாம் சிரிப்பு வந்து போகும் .

ஜாதகம் நம்புபவர்கள் அதில் திசாப் புத்தி மாறியப் பிறகு சில வயதில்
தழைகீழானப் பலன் தருவதாகச் சொல்வார்கள் அது போல மாறி இருக்கா அதில் செருப்புராசி வந்து இருக்கா (!) இல்லையான்னு ஒரு சோதனைக்காக வீட்டுக்குத் தெரியாமல் தகுதிக்கு மீறிய விலையில் ஒரு செருப்பு வாங்கினேன்.அதிலும் முக்கியமாக டிவிஎஸ் ஸ்டார்ச் சிட்டியில் பைக்கில் கியர் போடும் போது சாதாரணச் செருப்பு நழுவிவிடுகிறது என்பதால் பின் பகுதியில் வார் வைத்த சாண்டக்ஸ் டைப் வாங்கி வந்ததுதான் இப்படிச் சோதிக்கிறது.பாப்புலர் அன்கோவில்  டாட்டா ஸ்கைக்குப் பணம் கட்டி விட்டு படி தாண்டி ஜம்ப் பண்ணும் போது வடிவேலுக்குச் சொன்ன மாதிரிச் சண்டையிலக் கிழியாத சட்டைப் போல முன் பக்கம் பட்டெனே கிழிந்து சிரித்தது .எப்படியோ பஸ் ஸ்டாண்ட் போனால்  செருப்புத் தைப்பவர்கள் இருப்பார்கள் ஆனால் அங்கு நிறையபேர் வந்து போவதால் யாராவது பார்த்து விடுவார்களே என்று அலைந்து திரிந்து ,ஊத்துக்குளிப் பாலத்துக்குக் கீழ் ஒருவரைத் தேடிப் பிடித்துத் தைக்கக் கொடுக்கும் போதுதான் திசாப் புத்திச் சரியாய் இருந்து அந்தரம் சரியில்லை போல ! ஒரு ஆள் வந்து விசாரித்து விட்டுப் போனான் .

செருப்பைத் தைத்து முடித்து விட்டு அந்தத் தொழிலாளிக் கேட்டப் பணம் கொடுக்கும் போது ,போதுமா என்றேன் .இல்ல சார் சரியாய்த்தான் கேட்டு இருக்கிறேன் என்றார் .இல்லங்கப் பெரியவரே நல்லாத் தைத்து இருக்கிறீங்க இன்னும் ஒரு பத்து ரூபா சேர்த்து வைத்துக்கங்க என்று கொடுத்த  போது சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார் . அவராவது திருப்பித்தியாக இருக்கட்டுமே ?

செருப்புதானே என்று மிகச் சாதாரணமாக யோசிப்பவர்கள் ராமன் செருப்பை  வைத்து 12 ஆண்டு காலம் பரதன் ஆண்டான் என்கிற இராமாயண விசயத்தை நினைவுப் படுத்திக் கொள்வதும் முக்கியமான விசயம்தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக