சனி, 10 அக்டோபர், 2015

மருத்துவமனைகளும் இன்னொரு ஆலயங்களே !



ரொட்டித்துண்டு 5 ரூபாய் !

பிரசவ வலியுடன் தவித்த மனைவியை இரவு பத்து மணிக்கு மேல் அவசர அவசரமாக அப்போதைக்குக் கிடைத்த ஆம்னி வேனில் அழைத்துகொண்டு அந்தத் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை ( ஈ.எஸ்.ஐ - Employees' state Insurance Corporation of India ) நோக்கிப் போய்க்கொண்டு இருந்தோம்.மனைவியுடன் வந்த பாட்டி பனிக்குடத்திலிருந்து நீர் வரத்தொடங்கி விட்டது கொஞ்சம் வேகமாகப் போங்கள் என்று எச்சரிக்க இன்னும் வேகமெடுத்தோம் .ஆம்னி வேன் ஓட்டுனர் ஐம்பது வயதைக் கடந்தவர் என்பதால் வேறு எதுவும் சொல்ல எனக்குத் தோணவில்லை.புரிந்து கொண்டு செயல்பட்டார். 

பனிரெண்டு மணிச் சுமாருக்கு மருத்துவமனைப் போய் விட்டோம் .பதிவுச் சீட்டு வாங்கி வரச்சொன்னார்கள் .ஓடினோம் .பதிவுச் செய்யும் அறைக்குப் போகும் வாசல் கதவு மூடியிருந்தது.தட்டியபோது ’கோன் ‘ என்று ஹிந்தியில்  அதட்டலாய் ஒரு குரல் வந்தது.நல்ல வேளை என்னுடன் வந்த நண்பனுக்கு ஹிந்தி மாலத்தெரிந்ததால், சமாளித்துப் பதிவு செய்து அங்கிருந்துத் தப்பித்து மருத்துவமனைக்குள் ஓடவும்,எதிரே பாட்டி வரவும் சரியாக இருந்தது ... 

இங்கு  இரவுப் பணிக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டும்தான் இருக்காங்களாம்.அதனால் அவசரமாப் பார்க்கணுன்னா அரசுப் பொது மருத்துவமனைக்கு எழுதிக் கொடுக்கிறார்களாம் அதுவும் உடனே அறுவைச் சிகிச்சைக்குச் சம்மத்தித்தால் எழுதிக்கொடுப்பதாகச் சொல்கிறார்கள் என்ன செய்யலாம் ?என்று பதஷ்டமாய்க் கேட்டார்கள் மனைவியின் பாட்டி தர்மாம்பாள். அவர்கள் பேத்திமார்க்களோடு சேர்த்து நூற்றுக்கு மேற்பட்ட சுகப் பிரசவம் ஆவதற்குத் துணைப் போனவர்கள் .அதுமட்டுமல்ல வேறு வழியில்லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களின் அவஸ்தை நன்கு உணர்ந்தவர்கள் .எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை அவர்களிடமே ,என்ன செய்யலாம் என்றேன் .கொஞ்ச நேரம் பார்ப்போம் அவள் தைரியமா ( மனைவி ) இருக்கா,ஒரு வேளை வலி வந்தால் எழுதி வாங்கிட்டுப் போயிறலாம் ஆனால் அதற்குள் பக்கத்தில் கார் எதுவும் இருக்கான்னுப் பார்த்து வைக்கச் சொன்னார்கள். ( தர்மாம்பாள் பாட்டி பற்றிய இன்னொரு பதிவு http://myowndebate.blogspot.in/2013/03/blog-post_9.html இருக்கிறது. )

இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் வெளுத்தும் வாங்கும் காற்றும் ,அது இல்லாத வேளையில் தாக்கும் கொசுக் கூட்டதிற்குப் பதில் சொல்லுவதிலேயும் நேரம் கரைந்து கொண்டு இருந்தது .பாவம் . கூட வந்த நண்பன் சங்கர்தான் , அங்குக் கிடந்த ஏதோ ஒரு செய்தித் தாளை விரித்துச் சுருண்டுப் படுத்துக் கிடந்தான்.அலுவலகத்தில் அவனோடு சண்டை நிறைய இருக்கும் .ஆனால் தூங்கும் போது யாரைப்பார்த்தாலும் பாவமாக இருக்கத்தான் செய்கிறது .காலை ஆறு மணிக்குள் மூன்று முறைப் பாட்டி வெளியே வந்து உள்ளே வேலைப் பார்ப்பவர்களுக்காகக் காஃபி வாங்கிவரச் சொன்னார்கள்.அப்போதெல்லாம் மனைவி பற்றி விசாரித்தபோது  தூங்கிக் கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். 

காலை 10:20 க்கு குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம் .அந்தச் சந்தோசம் ஒரு நாள் நீடித்தது .அடுத்த நாள் மதியம் வரை குழந்தைச் சிறுநீர்க் கழிக்கவில்லை செக்கப் வந்த மருத்துவரிடம் எதேச்சையாகக் கேட்டப் போது இதை ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டார்.அடுத்த நிமிடம் இன்குபேட்டரில் வைக்கச்சொல்லி எழுதிக் கொடுத்தார்கள்.இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பு இல்லை என்று எழுதி நிரப்பிய ஃபாரத்தில்  கையெழுத்துக் கேட்ட போது, வலியோடு போட்டேன் .

அடுத்த நாள் காலை திருப்பூர் வந்து ,மருத்துவமனை  கொஞ்சம் தாமதமாகப் போக, மனைவிக்குப் பாத்ரூம் போகத்தரும் வெண்ணீருக்காக இருபது ரூபாய்ப் பணம் கேட்டு இருக்கிறார்கள் அங்கு பணிபுரிபவர்கள் .சில்லறை இல்லை என்று சொன்னதற்காகத் திட்டிவிட்டு, பிரசவமானவர்களுக்குத் தரும் கோதுமை ரொட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டர்களாம் . 

ஆண்டொன்றுக்கு ஈ.எஸ்.ஐ தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் மொத்தக் காப்பீட்டுத் தொகை வருமானம் 14,000 கோடியாம் .

ஆனால் ஒரு ரொட்டித்துண்டு 5 ரூபாய்

மருத்துவச் சேவைப் புரிபவர்கள் !

கடந்த வாரம் சனிக்கிழமை மாமானார் ( மனைவியின் தந்தை ) ஒரு சாலையில் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டதால், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.எனக்கு இந்த விசயம் சொன்னவுடன் நான் விசாரித்த அளவில் அந்த மருத்துவமனை சிகிச்சைப் பார்ப்பதை விட  மிக மோசமாகவும் பில்லை போடுவதில் மட்டும் கவனம் கொள்பவர்கள் என அறிந்து முதலுதவியோடு வெளியே வந்து குடும்ப மருத்துவரிடம் போன போது ,அடிபட்டப் போது மூன்று முறை வாந்தி எடுத்தார் எனச் சொன்னதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் நல்லது. அரசு மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் இரவு பிரச்சனை ஏற்பட்டால் எப்படிச் சமாளிக்க முடியும் என்றார் .உடனே அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப் போனோம் அங்கு உடனே பார்க்க முடியாது வேண்டுமானால் எழுதி வாங்கிக் கொண்டு கோவைச் செல்லுங்கள் என்றார்கள் ஏற்கனவே இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது .இங்கே பார்த்துக் கொள்கிறோம் .என்று சேர்த்தோம் . 

காலைதான் தெரிந்தது. ஞாயிறு ஸ்கேன் எடுக்கமாட்டார்களாம் .விடுமுறையாம். காத்து இருந்தோம் அடுத்த நாள் காலை ஸ்கேன் எடுக்கப்பட்டது .அதை வார்டுக்கு வரும் மருத்துவரிடம் கேட்டப் போது பொறுங்கள் இதற்கு வேறு ஒரு மருத்துவர் வருவார் என்று கழற்றிக்கொண்டார் அங்கு இருந்த நர்ஸ்களிடம் கேட்டப் போது வருவார் காத்து இருங்கள் என்றனர் அவர்களும்.  கடவுளைக் கேட்டால்கூடச் சொல்லியிருப்பார்கள் போல ! ஆனால் நடந்தது வேறு .அந்த நாள் மட்டுமல்ல அடுத்த நாள்  மதியம் வரை கூட யாரும் வரவில்லை .வேறு வழியில்லை டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு ,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கிளம்பினோம். 

அரசு மருத்துவமனை வராண்டா விட்டு  வெளியே வரும்போது அங்கு ஒரு அறிவிப்பைப் பார்த்தேன் “ மருத்துவமனைப் பாதுகாப்புத் தண்டனைச் சட்டம் எண் 48/2008ன் படி, அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைப் புரிபவர்களுக்குக் காயம் ஏற்படுத்துதல், உடல், உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல், பணிச் செய்ய விடாமல் தடுப்பது, சொத்துகளுக்குச் சேதம் உண்டாக்குதல் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் ” 

அப்படியானால் நோயாளிக்கு யார் பாதுகாப்பும் இல்லையா ? 

இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ! 

எனக்கு ஒரு சமயம் சிறுநீர்த் தொற்று ( urinary infection ) ஏற்பட்டுவிட்டது .கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் முதலில் உடல் சூட்டினால் வந்ததாகக் கவனமில்லாமல் இருந்து உடல் சோர்வு மற்றும் குறையாத காய்சல் அதிகரிக்கவும் சந்தேகம் வலுக்கவே ஒட்டன்சத்திரம் - அம்பிளிக்கையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் அனுமதிக்கப்பட்டேன் . வழக்கம்போல ரத்த அழுத்தம் ,ரத்தம் மற்றும் சிறுநீர்ச் சோதனைக்கு அப்புறம் பிரத்தியோக மருத்துவரிடம் அனுப்பினார்கள் .அவர் உடனே பெட்டில் சேரச் சொன்னார்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைச் சிறுநீர்ப் பரிசோதனை நடந்ததது .காய்ச்சல் நின்றபாடில்லை. இரவு அப்பாதான் கூட இருந்தார் எனக்கு நடக்கும் தொடர்ச் சோதனை மற்றும் குறையாத காய்ச்சலால் லேசாய் அப்பாவுக்குப் பயம் வரத் தொடங்கி விட்டது . 

காலை வந்த முதல் வேளையாக என் அறைக்கு வந்து மீண்டும் பரிசோதித்த மருத்துவர் முற்றிலுமாக அனைத்து மருந்துகளையும் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டார். மதியத்திற்குள் மூன்று முறை என்னை நேரில் அவரே வந்து சோதித்தார் .அவர் முகத்தில் ஏதோ ஒரு கேள்வி இருந்தது .அப்பா அவரிடம் கேட்டே விட்டார்.சார் என்ன பிரச்சனை என்று . ஒரு நிமிடம் அப்பாவின் முகத்தைப் பார்த்த அவர் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் .இந்தத் தொற்றுக்கிருமியால்தன் இந்தப் பாதிப்பு என்பதைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்த அளவு போராடிக்கொண்டு இருக்கிறேன்.நீங்கள் பயப்படாதீர்கள் என்று தோளில் கைவைத்து அப்பாவை பார்த்துச் சொல்லிவிட்டு  , என்னைப்பார்த்தும் பயப்படாதீங்கக் குணமாக்கிடலாம் என்றார் .நர்ஸ்களைக் கூப்பிட்டுச் சில மாத்திரைகளை இருப்பில் இருக்கிறதா எனக் கேட்க்க சொன்னார் .காய்ச்சல் கொஞ்சம் விடைபெற்றது.மெல்ல , மெல்ல  என்னுடைய உடல் உணர்வு  திரும்பத் தொடங்கிவிட்டது . 

மதியம் மூன்று மணி இருக்கும்.திடீரெனெ என்னை வந்து பரிசோதித்தவர் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்  இருந்தது , கையில் எழுதிக் கொண்டு இருந்த பேனாவுடன் அப்படியே வந்து விட்டார் போல ! .நர்ஸ்ஸ்ஸ் என்ற அழைப்பின் அழுத்தத்தில் ஒரு புது உற்சாகம் இருந்தது.என்னைப் பெயரைச் சொல்லி அழைத்து , நீங்க கவலைப்படாதீங்க நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம் என்றார் .அப்பாவிடம் , உங்க மகனுக்கு ஒன்னுமில்லை காலைல நீங்க அழைத்துச் செல்லலாம் என்றார் மீண்டும் . ஏற்கனவே கொடுப்பட்ட மருந்துகள் திருப்பிப் பெற .நர்ஸ்களிடம் உத்தரவிட்டார். அப்பா சந்தோசமானார் .

சொன்ன மாதிரி மதியம் இரண்டு மணிக்கு அறையைக் காலிசெய்துவிட்டு இரண்டரை நாள் சிகிச்சைக்கும் தங்கியிருந்ததற்கும் சேர்த்து ஐந்தாயிரம் பில் கொடுத்தோம். மருத்துவர் அறையில் அப்பாவுடன் போனேன்.சில நாளுக்கும் மட்டும் மாத்திரைக் கொடுத்தார்.சத்தான ஆகாரம் எது என்ற ஒரு பட்டியலைத் தந்தார்.  

விடைப் பெறும்போது சார் இது எதனால் வந்தது என்று அவரிடம்
கேட்டேன் .பதில் சொல்லாமல் அப்பாவைப் பார்த்தார் .ஐயா நீங்க ரெண்டு நிமிசம் வெளியே இருங்க என்றார் அப்பா வெளியே போன பிறகு , இது மூன்று காரணத்தால வரும் .தவறான தொடர்பு , பொதுக் கழிவரை உபயோகப்படுத்துவது ,மற்றவர்கள் உபயோகித்த உள் ஆடைகளை உபயோகிப்பது .நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டீர்கள் என்பது உங்களிடம் கேட்க வேண்டும் என்று நிறுத்தினார் .அப்போதுதான் எனக்கு அது ஞாபகத்துக்கு வந்ததது.அலுவலகம் தொடர்பாகப் பலமுறை கோவைச் சென்று வந்தேன் .அப்போது பொதுக்கழிவறை உபயோகித்து இருக்கிறேன்.அதைச் சொன்னதும் இனிமேல் தவிர்த்து விடுங்கள் என்றார் .விடபெற்று வெளியே வந்தோம் . அப்போது எனக்கு உடல் அசதியாக இருந்தது .ஆனால் மனம் இன்னும் சில நம்பிக்கைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது .

அந்த மருத்துவமனையை விட்டு வரவேற்பு அறையைக் கடக்கும் போது அப்பா அங்கு இருந்த ஒரு வாசகத்தை காட்டினார். 

 ” நாங்கள் மருந்தளிக்கிறோம் இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ”. 

சமர்பணம் .

இது எனக்கான அனுபவம் மட்டுமே. எல்லோருக்கும் பொதுவானது அல்ல . எல்லோருக்கும் பொருந்தவும் வாய்ப்பும் இல்லை. மருத்துவம் தொழில் அல்ல சேவை .மருத்துவர்கள் நோயாளிகளின்  வாழ்நாளை அல்லது தலைவிதியை நிர்ணயிக்கும்  இன்னொரு  கடவுளர்கள் .இங்கு வெகு பல மருத்துவர்கள் தனது மருத்துவத் தொழிலைக் கடவுளுக்கு மேலாக மதித்து வருகிறார்கள் அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குடும்பத்தின்   பாதத்திற்கும் இந்தப் பதிவு சமர்பணம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக