வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

”உதிர் இறகு” – நா.முத்துக்குமார்




               உங்கள் வீட்டில் வாசிக்காத புத்தக்கங்கள் உங்கள் தூக்கத்தைத் திருடும் என்பது எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை .ஆனால் நான் அந்த வர்கம்.எதாவது தேடும் போது இன்னும் வாசிக்கப்படாத புத்தகங்கள் கண்ணில் பட்டு சட்டெனெ இடறும்! அது வாழ்வின் வாழாத இறந்த காலம் போன்ற அவமானம் தரும் . இத்தனைக்கும் வேண்டாத புத்தக்கங்கள் என்னிடம் எதுவுமில்லை . இரவல் வாங்கிய புத்தக்கங்கள் கூட யாரோ ஒரு ஆசிரியர் எனக்காகப் பேசிய, சிந்தித்த மௌனத் தவமாகத்தான் காத்து இருக்கிறது என்பதே என் எண்ணமும் கூட.
.
        திருப்பூரில் 29.06.2015 #பிர்லி & டாப்லைட் குழுமம் நடத்திய இல்லத்திருமண அழைப்பிதழை ஒருபுத்தகத்துடன் இணைத்துக்கொடுத்து இருந்தார்கள் . எவ்வளவோ செலவழித்து அழைப்பிதழை அடிப்பதை விடவும் இந்த மாதிரி ஒரு அழைப்பிதழ் மூலம் ஒரு புத்தக்கத்தைத் தன் சொந்தக்காரர் வீட்டுக்குள் கொண்டு சென்ற பெருமை அந்தத் திருமணத்தை நடத்திய நல்ல உள்ளங்களுக்குள் இருந்தது அது மட்டுமல்ல அந்தப் புத்தகத்தின் பின் பக்க அட்டையில் அதன் விமர்சனமும் கொடுத்து இருந்தது இன்னும் சிறப்பு.

எந்த ஒரு புத்தகமும் வாசித்து முடித்தவுடன் நமது எண்ணங்களில்,செயல்களிலும் சிறு மாற்றத்தைக் கொண்டு வருமேயானால் அதுதான் அந்தப்புத்தக்கத்தின் வெற்றி.அந்த வகையில் பார்க்கும் போது நிச்சயம் இந்தப்புத்தக்கம் உங்களது கண்ணீர்ச் சுரப்பிகளைக் கலைத்துவிட்டுப்போனாலும் உறவுகளிடையே சில நல்ல மற்றங்களைக் கொண்டுவரும் என்பது நிச்சயம் எழுத்து விதைகள் இதயங்களில் தூவப்படும்போது செழித்து வளர்வது தனி மனிதனல்ல சமுதாயம்” . - இப்படிக்குத் திருமணவீட்டார்

அது நா.முத்துக்குமாரின் - அணிலாடும் முன்றில்என்ற புத்தகம்.

        இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்கு ஒரு வலி ஏற்பட்டாலும் அது எல்லோரையும் பாதிக்காமல் இருப்பதில்லை .ஆனால் பல வலிகளை உதறிவிட்டு நடந்து விடுகிறோம் ஆனால் சில சம்பவ வலிகள் அத்தனை சுலபமாக நகர விடுவதில்லை. அப்படி ஒன்றுதான் நா.முத்துக்குமார் மறைவு   பாதிக்கிறது ….

ஒருமுறை தூர் என்ற கவிதைப் பற்றி எழுத்தாளார் மதிப்பிற்குரிய சுஜாதா அவர்களால் சிலாகிக்கப்பட்டது..

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க.

இது யாரால் எழுதப்பட்டது என்ற கவனம் போகவில்லை ! ஏனென்றால் எனக்கு ஏனோ கவிதைகளை இரண்டாவது முறை வாசிக்கும் போதுதான் அதில் ஒளிந்து கொண்டு இருக்கும் கவிஞனின் உள்மனதோடு பரிச்சயம் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை !.

அடுத்து வெகுநாளாய் ஒரு திரைப்பாடல் வரிகள் ...

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?

                                             இந்தப் பாடல் கேட்கப் படும் போதெல்லாம் எனக்கு ஏதோ கடந்து போக முடியாமல் தடுக்கிவிடும் . எனது கடந்த காலத்தின் எதையோ ஒன்றை ஞாபகப்படுத்தும் வலியின் வரிகள் அவை .ஆனாலும் அது யார் எழுதியது என்று தேடவில்லை

இது மட்டுமல்ல, 

நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
கிராமம் நகரம் மாநகரம்
பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
ஆணா ஆவண்ணா
என்னைச் சந்திக்கக் கனவில் வராதே
சில்க் சிட்டி
பால காண்டம்
குழந்தைகள் நிறைந்த வீடு
வேடிக்கைப் பார்ப்பவன்

போன்ற எதையுமே தேடி படிக்கும் ஆவலிலும் இல்லை .இதெல்லாம் ஏன் என்று தெரியவும் இல்லை .

பதில் எழுதுகிறார் !

ஆனால் கல்கி இந்த வார அகஸ்டு 21 இதழ் புரட்டும் போது அரைப்பக்கத்தில் ஒரு அறிவிப்பு ...



விரைவில் கவிஞர்.நா.முத்துக்குமாரின் தேரடி வீதியில்!
கல்கி வாசகர்களின் கேள்விகளுக்கு வாரம்தோறும் சுவாரஸ்யமான,சூடான சுறுசுறு பதில் எழுதுகிறார்.

         இந்த வரிகள்தான் என்னவோ செய்தது .ஒரு கவிஞன் நடமாடும் கனவுக் கோட்டை .அவன் பார்வை ஒரு பக்கம் சிந்தனைப் பல பக்கம் என விரியும் இயல்புடையவர்கள் .இந்தத் தேரடி வீதியில் கேள்விகளுக்குத் தன்னைத் தயார் செய்து இருந்து இருப்பார்.மறைந்த அன்று கூட இயக்குனர் விஜய்க்கு பாட்டு எழுதி தர வரச்சொல்லியிருந்தாரம் .

       இதெல்லாம் விட நீண்ட நாள் கனவாக ஒன்று காஞ்சிமாநகரத்தை மையமாக வைத்து காவல்கோட்டம்போன்ற வரலாறும் புனைவும் கலந்த நாவல் ஒன்றைப் படைக்கவேண்டும். இரண்டு, தன்னுடைய பாடல்களை எல்லாம் ஒரே தொகுப்பாகச் சில குறிப்புகளைக் கவித்துவமாக எழுதி வெளியிடவேண்டும். மூன்று சமீபத்தில் குங்குமத்தில் வெளியான கட்டுரை ஒவ்வொன்றும் சிறுகதையாக வந்ததைத் தெரிவித்தபோது, ஒரு சிறுகதைத்தொடர் வெளியிடவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது என்கிறார் அவருடைய கடைசிக் காலம் வரை இலக்கிய நண்பராக இருந்த புல்வெளிநாகராஜ் 

         இன்னும் சொல்லப்படாத கனவுகள் ,கடமைகள் நிறைய இருந்து இருக்கும் அதெல்லாம் ஒரு விடியலில், அவருக்குக் கொடுக்கப்பட்டுப் பணமில்லாமல் திரும்பிவந்த தயாரிப்பாளர்கள் காசோலைப் போல மறைந்து விட்டது !


 மகனுக்கான கடிதம் !
        அதுவரை படிக்கத் தவறிய அவரின் அணிலாடும் முன்றில் கட்டுரைத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்தேன் .முத்துக்குமார் தமது வாழ்வின் இளம் வயதிலிருந்து உறவுகளில் கலந்த பயணத்தின் அநுபவமாய்ச் சொல்லும் கட்டுரைத் தொகுப்பு . இந்தப்புத்தக்கம் கண்ணீர் சுரப்பிகளைக் கலைத்துவிட்டது உண்மைதான்.இருபது கட்டுரைகளுக்கும் துவக்கப்புள்ளியாக  ஒரு சிந்தனை இருக்கும் .இதன் கடைசிக் கட்டுரை மகன்என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்குக் கமலஹாசன் எழுதிய கவிதையைப் பயன்படுத்தி ஆரம்பிக்கிறார்.

மகனே ! ஓ மகனே !
என் விந்திட்ட விதையே
செடியே ! மரமே ! காடே !
மறுபிறப்பே !
மரணச் சௌகர்யமே ! வாழ்.

அடுத்து  முத்துக்குமாரின் மகனுக்கான கடிதம் பேசுகிறது...

என் சின்னஞ்சிறு தளிரே ! கல்வியில் தேர்ச்சி கொள் அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்.தீயைப்படித்துத் தெரிந்து கொள்வதைவிட ,தீண்டி காயம்பெறு .அந்த அனுபவம் சுட்டுக்கொண்டே இருக்கும் இறக்கும் வரை .இங்கு வாழ சூத்திரம் இதுதான், கற்றுப்பார் உடலை விட்டு வெளியேறி ,உன்னை நீயே உற்றுப்பார் .

      அவர் சொன்னதெல்லாம் தன் மகன் ஆதவன் நாகராஜனுக்குச் செய்து காட்டி விட்ட மாதிரி நடந்த நிகழ்வுகள் சொல்லத் தோணுகிறது ..
இந்தப் பிரபஞ்ச விதியில் யாரும் இறந்து போவதில்லை எங்கிருந்து எடுத்தோமோ அதை அங்கே கொடுத்து விடுகிறோம்! ஆனால் அவர் தன்னுடைய உடலை இன்னும் கவனித்து இருக்கலாம்.அந்த ஆனந்தயாழ் இன்னும் பலவருடம் மீட்டப்பட்டு இருக்கலாம். 

அவர் மரணம், கமலஹாசன் ஆதங்கப்பட்டது போல 
நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை. நா.முத்துக்குமார் மிக மெதுவாய் செய்த தன் நலம் பேணாத் தற்கொலையால் கோபமே” !

நாமும் ஒரு இயல்பான வாழ்வின் அனுபவத்தை மொழிபெயர்த்த ஒரு கவியை , ஒரு புத்தகம் எழுதி கொண்டு இருக்கும்போது  நிறுத்தப்பட்டது போல முத்துக்குமாரை இழந்து விட்டோம் ….



நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் !


   இப்போதும் கூட அவர் எழுதிய அணிலாடும் முன்றில் கவிதைக்கு அணிந்துரை எழுதிய கவிஞர் கல்யாணி.சி ( வண்ணதாசன் ) சொன்னதை இங்கு சொல்லவேண்டும் அதுதான் இந்தப்பதிவை முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பொறுத்தமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

” நீங்கள் பறக்கிறீர்கள் கூட்டமாக வலசை போவது போல ,தனித்துத் தரையிறங்கி கழுத்து மினுங்க நடக்கும் போதும் அழகாக இருக்கிறீர்கள் .

                வெயில் வெளியில் காத்திருந்து உங்கள் உதிர் இறகைப் பொறுக்கப் போகும் கடைசி நொடியில் ,அதை ஒரு பள்ளிக் கூடச் சிறுமிக்குச் சந்தோசமாக விட்டுக்கொடுக்கிறது.கொடுத்தபின் வெயில் உங்களைப் போலவே பறந்து செல்வதைத் தூரத்து இலையிலிருந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்….. ”

உண்மைதான். கவிஞன் அழிவதற்கு பொருளல்ல ! மௌனங்களின் ஓசை . எங்காவது  யாருக்காகவாவது அந்த ஆன்மாவின் குரல் இசைத்துக்கொண்டேதான் இருக்கும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக