சனி, 6 ஏப்ரல், 2013

பேய் , உலகத்தி்ல் இல்லாமல் இருக்கலாம் ...


                     இன்று மனவளக்களை மன்றத்தில் நான்காம் நிலை அகத்தாய்வு வகுப்பில், பிறப்புக்கு முன் இறப்புக்கு பின் - உயிரின் நிலை வகுப்பு நடந்தது .அதில் கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் ...பேசியது பற்றிய ஒரு உதாரணம் சொல்லப்பட்டது .மரணங்களின் மூன்று விதமான இயற்கை மரணம் . துர் மரணம் , ஜீவமுக்தி எனப்படும் யோகியர்களின் இறப்பு பற்றி பேசப்பட்டது .அதோடு பேசப்பட்டு இருந்தால் இந்த பதிவிர்க்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும் .


              ஆனால் அதர்க்கு பிறகு அப்படி இறந்து போனவர்கள் உயிர் அவரவர் இறப்பின் நிலைக்கு ஏற்ப நான்கு விதமான இடங்களில் தங்கி செல்வதாக கடோபனிசத்தை மேற்கோள் காட்டி பேசபட்டது.


கடோபநிசத்தில்..
              அதன் படி  முதலிடம்   சாலோக்கியம். - இந்த இடம்  உலகத்தை ஒட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட ஒரு பகுதியில் துர்மரணம் எற்பட்ட உயிர்கள் நிறைவேறாத ஆசைகளோடு பைசாசம் ( பிசாசு ) என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், அடுத்து சாமீப்பியம் - பூமியைக் கடந்த பிறகு அடுத்து உள்ளது சூரியன் சூரியனைச் சுற்றி உள்ள களம் சூரிய களம் எனப்படுகிறது இந்தபகுதியில் இயற்கையாக இறந்து போன உடலை விட்டு பிரிந்த உயிர்கள் இருக்கு இடம் அதர்க்கு அடுத்து சாரூப்பியம் -  சூரிய களத்தை கடந்து போனால் அதற்கு அப்பால் 12வீடுகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும்  சக்தி களத்தை வீடாக கொண்டு மரணத்தை உவந்து ஏற்ற உயிர்கள் இருப்பு நிலையாக கோண்டு இருப்பதாகவும் கடைசியாக  சாயுச்யம் -  முடிவாக இருப்பது அதாவது இயக்க மற்று இருப்பது சுத்தவெளி இந்த சுத்த வெளியைத் தான் சாயுச்யம் என்பர் இங்கு நேரடியாக ஜீவமுக்தி பெறுபவர்கள் உயிர்கள்  இங்கு  கலந்துவிடும் என்கிறார்கள் .  .உதாரணம் - மஹரிஷிகள் உயிர் .  ( இதில் நித்தியான்ந்தா உயிர்  யாருடன் மன்னிக்கவும் எந்த இடம் போவார் என்பது பற்றி நாங்கள் பேசவில்லை !   ( ஆனால் அங்கு நிச்சயம் கேமிரா இருக்கிறதா என அவர்  பார்ப்பார் ! )   
  

வெளியே சொல்லாத அனுபவங்கள் ..
                     எனக்கு மட்டுமல்ல பேயை பற்றி பலருக்கும் பல கருத்துக்கள் பேய்த்தனமாக இருக்கிறது ! .பேய் எது ? ஆவி எது ?பிசாசு எது ? குறளி பேய் எப்படி இருக்கும் ? என்பது பற்றி பயந்துகொண்டே யோசிப்போம் ! வெளியே சொல்லாத அனுபவம் நிறைய இருக்கும் ஆனால் முடிவான விடையேதும் இல்லை .காலத்திர்க்கு ஏற்ப கருத்துக்கள் மாறிகொண்டே இருந்தாலும் எனது பதிமூன்று வயது வரை சிறு கிராமத்தில் வாழ்ந்ததால் பேயை பற்றி பல்வேறு குழப்பமான மன நிலையில் பயந்து கொண்டே இருந்திருக்கிறேன் நான்  . வீட்டுக்குள் யாரும் இல்லாத போது துணையில்லாமல் போகவே பயமான பயமஎனக்கு உண்டு்.அதர்க்கு பல காரணம் இருந்தது .


சாத்தானுக்கு  டோக்கன் !
                  எங்கள் கிராமத்தில் இருந்த பழனியம்மாளுக்கு வயது 50 க்குமேல் இருக்கும் .குழந்தைகள் இல்லை .அந்த அம்மாள் கேரளாவுக்கு போய் ஏதோ செப்பு காசு ( குட்டி சாத்தானுக்கு  டோக்கன் ) வாங்கி வைத்து இருந்தாராம் .அதனால் அம்மாவாசை நடு நிசியில் ஊரை வலம் வருமாம் அந்த பழனியம்மாள்  .ஒரு முறை அண்ணன் பார்த்ததாக சொல்லி இருக்கிறார்.( நல்லவேளை அவருக்கு பதிலாக நான் பார்த்து இருந்தாள் அன்றே பேயாகி இன்று இந்த கட்டுரையை வேறு யாரெனும் எழுத காரணமாக இருந்திருப்பேன்!! ) அதனால் அதை பார்த்த  அண்ணன்  கேட்டதெல்லாம் கொடுத்து விடுவேன் .

பேய் ஓட்டும் ஸ்பெசலிஷ்ட் !
                     அப்புறம் ஒரு சமயம் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கு  பேய் பிடித்து விட்டதாக சொல்லி அடைத்து வைத்து இருந்தார்கள்  .என்னை விட சில வயது மூத்தவள் அந்த பெண் . நான் அப்போது பாடும் ரோசாப்பு ரவிக்கை காரி படத்தின் ”உச்சி வகுந்தெடுத்து” பாட்டுக்கு ரசிகை ! . அந்த பெண்ணை அவர்கள்  வீட்டு வாசலில் வைத்து ,எருக்கம் கொடி,சவுக்கு ,இன்ன பிற ( வசதிக்கு ஏற்ப )  சில பொருளால் அடித்தார் யாரோ பேய் ஓட்டும் ஸ்பெசலிஷ்ட் ! இதில் சாரயம் ,கோழி,சுருட்டு ,இனிப்பு பண்டங்கள் படைத்து கத்த,கத்த அடித்தார்கள் .பல நாள் பசியில் அந்த பெண் அடிதாங்காமல் போய்விடுகிறேன் ,போய்விடுகிறேன் என்று கத்த கடைசியில் ஏதோ வாக்கு வாங்கி கொண்டு ,அந்த பெண்ணின்  உச்சி முடியை கொஞ்சம் அறுத்துக்கொண்டு ,ஒரு கோழியை எடுத்துக்கொண்டு ( பழி கொடுக்கவாம் )அந்த பூசாரி அல்லது பேய் ஓட்டும் ஸ்பெசலிஷ்ட் மறைந்து போனார் . அவர் போன பிறகு ஆண்டாள் அந்த இனிப்புகளில் ஒன்றை தின்றுகொண்டே என்னைப்பார்த்து வேணுமா என்று கேட்டுக்கொண்டே பார்த்த பார்வையை நான் பல வருடம் மறக்கவில்லை .

தற்கொலை புகலிடம்
           அது மட்டுமல்ல எங்கள் வீட்டிற்க்கு சில நூறு மீட்டர் கடந்து திண்டுக்கல் - பழனி ரயில் பாதை இருக்கிறது  .அது தற்கொலை செய்து கொள்ள பல பேரின் புகலிடம் . இறந்தவர்கள் உடலை ரயில்வே போலிஸ் அங்கேயே அதிகம் குழிதோண்டாமல் புதைத்து விடுவதால் நாய்கள் ஒவ்வொரு பாகமாக இழுத்துகொண்டு ஓடும் கோரகாட்சி பல இரவுகளை பயமுறுத்தி இருக்கிறது.

கடவுளும் பேயும் .
            பதினான்கு வயதில் கிராமத்தை விட்டு நகர்புறம் வந்து சில மாதங்களில் அதிகாலை மூன்று மணியிருக்கும். பக்கத்து வீட்டில் ஒரு 35 வயதுள்ள பெண்ணுக்கு சாமி வந்து விட்டதாக சொல்லி நான்கு மணிவரை எல்லா வீட்டு விபூதியும் அடித்தும் , பல மரத்து வேப்பிலை கொத்தும் அடித்து பார்த்தபிறகு ,என்னை எழுப்பி அந்த 35 க்கு முன்னாள் சில அடிகள் தூரத்தில் உட்கார வைத்து, கையில் மாரியம்மனின் பாடல்கள் கொண்ட புத்தகத்தை கொடுத்து, அங்கு இருந்த   குறைந்த வெளிச்சத்தில் தமிழ் படிக்க தெரிந்த ஒரே பாவத்திர்க்கு பாட சொல்லிவிட்டார்கள் .அதர்க்கு பிறகும் அந்த 35 வயதுக்கார அம்மாவின் டேய், டேய் என்று பல்லை கடித்துகொண்டு போட்ட சத்தம் குறையாது போகவே ஒவ்வொருவராக அந்த 10 * 8 அடை அறையை விட்டு வெளியே சென்று ஆலோசிக்க போக, ஒரு கட்டத்தில் அந்த 35 ம் + நானும் மட்டும் தனியே , குறைந்த வெளிச்சத்தில் இதை உணரவே எனக்கு பல நிமிடம் ஆகிவிட்டது .அப்போதுதான் அந்த அம்மா முகத்தை பார்த்தேன் அந்த அம்மாவின் கண்கள் என்னை மட்டுமே வெறித்து கொண்டு இருந்தது ... பயத்தில் படிக்கும் மாரியாமன் பாடல்கள் கூட எனக்கே பயமாக இருந்தது .ஒரு ஆறு மணி இருக்கும்போது என்னை காப்பாற்றி வெளியே அழத்து வந்தார்கள் .அப்பொதும் தமிழ் வாசிப்பில்  இருந்த ஆர்வத்தில் அம்மாவிடம் காரணம் கேட்டேன் .அந்த அம்மாவிர்க்கு பேய் பிடித்து விட்டதாம் என்றார்கள் மிக சாதரணாமாக ! அப்படியனால் இத்தனை நேரம் பேய் பிடித்த 35 வயசு அம்மாக்கு , சாமி பாட்டு பாடியிருக்கேன் .ஒருவேளை நல்ல பேயாக இருந்திருக்கும் போல அப்படியே ஒரு அறைவிடாமல்  விட்டு விட்டது !

 வீட்டுக்குள் ரத்தம்!
          சமீபத்தில் புதிதாய் குடி பெயர்ந்த திருப்பூர் வாடகை வீட்டில் வந்த சில மாதங்களில் பக்கத்து வீட்டு அம்மா மெல்ல என மனைவியிடம் , உங்களிடம் சொன்னால் பயந்து விடுவீர்கள் என்பதால் சொல்ல கூடாது என்று நினைத்தேன் எங்கள் வீட்டுக்குள் சில சமயம் சில இடங்களில் ரத்தம் உறைந்து போனதை பார்த்து இருக்கிறேன் ஏன் என கேட்க என் மனைவி பயத்துடன் இதை சொன்னார்கள் .இத்தனைக்கும் என்னை விட அவர்கள் பேய் படம் பார்ப்பதில் அவர்கள் துணிந்தவர்கள் .நான் இப்போதும்  திகில் படம்  பார்க்கமாட்டேன் .இருந்தாலும் பயமில்லாமல் என் மனைவியிடம் சொன்னேன் ,அவர்கள் வீட்டில் எலி அதிகம் இருப்பதால் பூனையை பிடித்து கடித்து இருக்கும் .அதனால் ரத்தம் இருக்கலாம் என்று சமாளித்தேன் .


        ஆனால் பேயிக்கும் எனக்கும் ஏதோ ஒரு உறவு எங்கு போனாலும் பிடித்து ஆட்டிகொண்டே இருக்கும்போல ....அட போங்கப்பா !

1 கருத்து:

  1. :) நல்ல செய்தி... அது இருக்கிறதா, இல்லையா என்பது அவரவர்களுக்கு மட்டுமே உரித்தான நம்பிக்கை...
    ஆனால் நல்லது செய்யும் கடவுளைவிட இவற்றின் மீதான நம்பிக்கையும், ஆர்வமும் மனிதர்களுக்கு அதிகம்....

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன் :)

    பதிலளிநீக்கு