செவ்வாய், 23 ஏப்ரல், 2013

புத்தகம் வாசித்தல் - ஒரு வரம் .


இன்று உலக புத்தக தினம்.


எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே (அரசு தொடர்புடைய விவகாரத்தில் ) மிக எளிய விசயம் நூலகத்தில் உறுப்பினராவதுதான். சமீபத்தில் வீடு மாறிய போது பக்கத்தில் இருக்கும் நூலகத்தில் (எற்கனவே மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்தான் ) உறுப்பினர் அட்டை வாங்கி கொண்டு எனக்கு ஏரியா கவுன்சிலரிடம் கையெழுத்து வாங்க விருப்பமில்லை என்பதால் அருகில் உள்ள அரசு பள்ளிக்குப்போனேன் .காலை 9.40 மணி.தலைமையாசிரியர் அறை கேட்டு போனால் ஒரு சின்ன பெண் ஈரதுணிவைத்து தரை துடைத்து  கொண்டு இருந்தாள் ,அங்குதான்  படிக்கிறாள் என்பதை அவள் சீருடை சொல்லியது .இருங்க வருவாங்க சார் என்றது அந்த பெண்  .வந்தார்கள் .தலைமையாசிரியர் அல்ல தலைமையாசிரியை .குடும்ப அட்டையை சோதித்து விட்டு , பச்சை கையெழுத்திட்டு குடுத்தார்கள் .நன்றி சொல்லிவிட்டு பெற்று கொண்டு திரும்புபோது அந்த சிறுமி இன்னும் துடைத்து கொண்டு இருந்தாள் .அனேகமாக முதல் வகுப்பு ( Period ) தரை துடைக்கும் வகுப்புதான்  போல !


நூலகம் வந்து கொடுத்தபோது ,பணம் கட்ட சொன்னார்கள் ,கட்டியவுடன் சில விதிமுறைகளை சொன்னார்கள், அதில் ஒன்று புத்தகம் எடுத்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் இங்கு வந்து பதிவு செய்துகொள்ளவேண்டும் குறைந்தது  ஒருவாரத்திர்க்கு மேல் ஆன  பிறகு மட்டுமே கொண்டுவரவேண்டும் .ஒருவேளை ஒருவாரதிர்க்குள் படித்து விட்டால் என்ன செய்வது ? ( ஆனால் நான் கேட்கவில்லை ) எனக்கு தெரிந்த வாடகை புத்தகம் தருபவரிடம் ஜெயமோகனின் புத்தகம் இருந்தது .அதுவும் இந்த கிளை நூலகத்தை சார்ந்தது . அப்படியானால் அவர் செய்வது சரிதானே .

“ஏய் வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத் தாளர்கள்!”
என்று நகுலனின் ஒரு கவிதை.


இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதர்க்கு .எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இபோதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி  இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கோபம் கூட படுகிறது .


புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து என்று மூளையியல் விஞ்ஞானி சூசன் கிரின்பீல்ட் ( susan greenfield) என்பவர் செய்த ஆய்வில் இப்படி சொவதோடு சிறிய வயதில் படிக்கும் பக்குவத்தை சொல்லிதரும்போது  கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது .


             ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

புத்தகம் படிப்பது நல்லது என்பதை தெரிந்து கொண்டபோது எனது இரண்டாவது சகோதரரிடம் எனக்கு 11 வயது இருக்கும்போது கேட்டபோது இந்த மாதிரி உன் பாடங்களை மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்க உதவும் என்று சொல்லிவிட்டு ,சாண்டில்யனின் 'மஞ்சள் ஆறு' நாவலையும்  ,பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது" என்ற சிறுகதையும் தந்தார்  .மஞ்சள் ஆறு அந்த எழுத்து ஏனோ கனமாக பட்டது ஆனால் அண்ணன் படித்துவிட்டாயா என கேட்பாரே என்பதர்காக ( அப்போதே ) கடைசி பக்கம் சிலவும் படித்து வைத்து இருந்தேன் .அவர் கேட்டார் நான் சொன்ன பதிலில் ஏதோ சந்தேகம் வரவே (அண்ணனாச்சே) நடுபகுதியில் சில கேட்க மாட்டி கொண்டேன் .


       அதனால் முதலில் பச்சை வயல் மனதை புரியாவிட்டலும் படித்து சந்தேகம் கேட்டபோது மீண்டும் முதலில் இருந்து படி என்றார் ..அப்புறம் சுஜாதாவின் தொடர் கதை 'பிரிவோம் சந்திப்போம்' என பட்டியல் நீண்டது .எனக்கு ஏனோ அப்போதே சுஜாதாவோடு ஏதோ ஒரு ஒட்டுதல் பின்னாளில் பாலகுமாரன் படிப்பதில் ஏற்பட்டதை விட அதிகம்  ஏற்பட்டது.சுஜாதா எழுத்து எனக்கு நண்பனை போல  என்றால் பால குமாரன் எழுத்து ஒரு குருவை போல இருந்து வருகிறது .


இன்று காலை சூரிய வணக்கத்தில் ( 201 விருந்தினர் பக்கம் ) மூத்த தமிழ் எழுத்தாளர் திரு.ச.கந்தசாமி (இவர்  எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது) அவர்கள் பேசும்போது கூட ஒரு புத்தகம் படித்து முடிக்கும்போதுதான் ஆரம்பிக்கிறது அதன் வேலை  நமக்குள் என்பது அப்படியே ஏற்றுகொள்ளும் பக்குவம் வரும்போது நீங்கள் வாசிப்பதில் தேறிவிட்டீர்கள் என்பதாக புரிந்து கொள்ளலாம்.



ஸ்டெல்லா ப்ரூசின் - அது ஒரு நிலாக்காலம் படித்தவர்கள் இதை மிக எளிதாக உணரலாம் .விகடனில் தொடர்கதையாக வந்து பின் புத்தகமாக  வந்தது .அதில் வரும் ராம்குமார், சுகந்தா ஜோடி பற்றி அந்த கதை முடிந்தபோது நிறைய பேசினார்கள் .அதே போல தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ ஓர் எடுத்துக்காட்டு.( அது திரைபடமாக எடுக்கப்ட்டது அது முழுமையான நாவலை சொல்லவில்லை .ஆனால் ஒரு நல்ல முயற்சி என்பது வேறு விசயம் ) சுஜாதா தன்னுடய நாவல்கள் சில படமாக்கபட்டபோது படம் பார்த்து விட்டு கடைசியாய் இது யாருடைய கதை என்று வெறுத்து போய் கேட்டாராம் என்பது வேறு கதை .


சில ஆண்டுகளுக்கு முன் (RHONDA BYRNE) ராண்ட பைரனின் "ரகசியம்" படித்து விட்டு மிக அற்புதம் என எனக்கு தந்தார் நானும் பலருக்கு பரிசாகவும் படிக்கவும் சொல்லி வந்தேன் .அதர்க்கு பிறகு அதே ஆசிரியரின் "சக்தி" என்ற புத்தகம் வந்தது .அதை படித்த நண்பர் ஒருவர் இதை("ரகசியம்" ) விட அற்புதம் என்று எனக்கு போன் பண்ணி சொன்னார்.உண்மையிலேயே இது அபத்தம் என்பதாக நான் நினைத்து கொண்டேன் .காரணம் எந்த ஒரு எழுத்தாளனின் புத்தகமும் அவன் எழுதிய இன்னொரு புத்தகத்துடன் ஒப்பிடுவது அம்மாவிர்க்கும் - மனைவிக்கும் உள்ள வித்தியாசம் மாதிரி .(சில பேர் என் அம்மா சமையல் மாதிரி உன் சமையல் இல்லை என்று அதிகப்படியாய் பேசி ருசி என்றால் என்ன வென்று தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறுவிசயம் )


         மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .


ஒரு கலை இலக்கிய மன்றத்தில் - படித்த புத்தகங்களை பார்த்த திரைபடங்கள் விவாதிக்கும் பழக்கம் உண்டு .அப்படி ஒரு பால சந்தரின் சமயம் சிந்து பைரவி பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது  ,ஒரு நல்ல பள்ளியில் பணியாற்றி கொண்டு இருந்த ஆசிரியர் அவர் பேசும்போது அந்த படம் இரண்டு பெண்டாட்டிகள் விசயத்தை நியாபடுத்துவதாக இருப்பதாகவும் அதர்க்கு காரணம் அந்த படத்தின் உதவி இயக்குனர்தான்  (அப்போது பாலகுமாரன் )  அவருக்கும் இரண்டு மனைவி என்பதால் அப்படி என்றார் .அப்போது பாலாவின் மீது வெகு தீவிர ரசிகன் என்பதால் மறுத்து பேசினேன் .               உனக்கு தெரியாது நீ சின்னவன்  என்று ஓரங்கட்ட ஒரு தீவிரத்தில் இதை அப்படியே பாலகுமாரக்கு நான் கடிதமாக எழுத, அவர் பதிழும் எழுதினார் .அந்தகூட்டங்களை தவறவிடாதீர்கள் .என்னை பற்றி பேசியவருக்கு ஏதோ கோபம் இருக்கலாம் அதை விட்டு விட்டு இலக்கியம் தெரிந்து கொள்ளூம் அந்த இடத்திர்க்கு தொடர்ந்து போங்கள் என்று .இந்த கடிதத்தை அங்கு எடுத்து சென்றேன் .பாராட்டினார்கள் .அந்த ஆசிரியரை தவிர மற்றவர்கள் .
         சில சமயம் ஹோட்டல் கடையின் தோசை ருசி சமையல் அறை போக கூடாது என்பதாக மறைந்த திரு .கண்ணதாசன் அவர்கள் சொல்லுவார்.அவரும் அர்த்தமுள்ளவர்தானே !

உலகின் ஒட்டுமொத்த எழுதாளர்களிடமும் இன்றும் உள்ள ஒரே கேள்வி வாசகனுக்கு எப்படி எழுதினால் பிடிக்கும் என்பதுதான். இன்றுவரை ஒரு நல்ல புத்தகம் என்பது படிப்பவனின் மன நிலை , எழுதிவன் மேல் உள்ள பார்வை , சமூக பாதிப்பு , அவன் தேடல் , என்று இலங்கை சென்ற ஹனுமாரின் வால் போல நீண்டுகொண்டேதான் போகிறது .முடிவில்லை .ஏனெனில் சில ஆசிரியர்கள் அவர்களின் மேற்படி காரணங்களால் பாதிக்கபடுவது இயற்கைதானே .எனவே எல்லா புத்தகமும் வாசிப்பதர்க்காக பிறந்தவைகளே .அவை முடமாக்கபடுவது ,வாழ்வதுவும் வாசிப்பவனின் பார்வையில் இருக்கிறது .அதிலும் சில பேர் தனக்கு எந்த விசயம் பிடிக்குமோ அதை கெட்டியாக பிடித்துகொள்வார்கள் .கேட்டால், போதும் என்பார்கள்.ராஜேஸ்குமாரை விட்டு அகலாதவர்களையும் ,சுபா என்றால் மட்டும் படிப்பேன் என்பது அவர்களுக்கு அரோக்கியம் என்றால் அது தவறே இல்லை .சில மனிதர்கள் தன் நண்பர்களைப்போல போதும் என்று நின்று விடுகிறார்கள் .ஒருவேளை ஒரு கட்டத்தில் அவர்களின் ஆதர்ச ஆசிரியர் ஜெயகாந்தன் போல எழுதுவதை நிறுத்தி விட்டால் மீண்டும் மீண்டும் படித்ததை படிக்கலாம் ..சில சமயம் படிப்பதை விட இந்த மாதிரி வாசிப்பவர்களை விரும்பி பேசுவேன் .அதர்க்கும் ஏதாவது விசயம் அவர்களிடம் இருக்கலாம் அல்லவா ?

ஆனால் ஒவ்வொரு புத்தகங்களும் மிக பெரிய கடமை செய்கிறது .

1.சக மனிதர்களின் கருத்தை கேட்க்கும் பக்குவதை  வளர்க்கிறது .
2.ஒவ்வொரு விசயத்திலும் ஒரே பர்வை இல்லாமல் வேறு  ஒரு கோணத்தில் பார்க்க வைக்கிறது.
3.சுய அறிவு ( பட்டு தெரிவது ) சொல்லறிவு ( கற்று அறிவது )என்ற பாகுபாடு புரிய தொடங்குகிறது .
4.எந்த தளத்தில் வாழ்கையின் இருப்பு இருந்தாலும் அவன் அறியும் விசயம் எல்லோரையும் ஒரே தளத்தில் நிற்க வைக்கிறது .
5.வேறு ஒரு சிந்தனையை பெரும்போது சிற்றறிவு ,பேரறிவோடு கை கோர்க்கிறது .
6.தொலந்து போன வாழ்க்கையை தேடி தருகிறது .தொட முடியாத சிந்தனை தரிசனத்தை உள்ளங்கயில் வைக்கிறது.
7.கனவுகளை மேம்படுத்துகிறது .தேடிகொண்டு இருக்கும் வேறு ஒரு தளத்தின் ஆதங்கத்தை ஆறுதல் படுத்துகிறது.
8. மூன்றாவது கண் எனப்படும் ஆறாவது அறிவின் வாசலுக்கு வழிகாட்டுகிறது..
9.நல்ல நட்புக்கு பரிசாக வெகு நாளாக நம் நினைவை நிறுத்தி  வைக்கிறது .
10.உலகமே வெறுத்து போனாலும் ரகசியாமாக நம்மை மீட்டு கொண்டுவந்து தொடர்புகொள்தலே வாழ்க்கை என்று போதிக்கிறது.
11.நம் பலம் பலவீனம் என்ற பாதையை சரிபார்க்கும் நீதிபதியாக செயல்படுகிறது .
12. தேடலை அதிகபடுத்தும்போது திசைகள் நான்கு என்பதை சந்தேகபடுத்துகிறது
13.மேலும் என்ன எழுதலாம் என்று அடுத்தவருடமும் யோசிப்போம்.

இன்று படிக்க எத்தனை சுலபமான வழிகள் குவிந்து உங்கள் முன் குவிந்து கிடக்கிறது பல தொழில் நுட்ப சாதணங்கள் வடிவில் .படியுங்கள் ,சொல்லுங்கள் ,ஒவ்வொரு புத்தகமும் உங்கள் சுவீகரித்து கொள்ள கை நீட்டி காத்து இருக்கிறது ...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக