புதன், 28 ஜனவரி, 2015

சிரிப்பது என்பது...





சிரிப்பது என்பது ஒரு புனிதமான பிரார்த்தனைக்குச் சமம்! -ஓஷோ 


இந்த அளவுக்குத் தத்துவ யோசிக்க முடியாட்டியும் பரவாயில்லை நமக்குச் சிரிச்ச மாதிரி கொஞ்சம் மூஞ்சிய வச்சுக்க யாராவது போட்டோ எடுக்கும் போது சொன்னாத்தான் நம்ம யோக்கிதை நம்ம செருப்புக்கு கீழே கிடப்பது தெரியும் .அதைத் தேடி குனிஞ்சு எடுப்பதர்க்குள் போட்டோ எடுத்து விட்டானேன்னு நொந்துக்கறதை தவிர வேறு என்ன செய்ய ? 


       
            அதிருஷ்டம் வருமென்றால் சிரிக்கும் புத்தர் சிலை வைத்துகொள்ள யாரும் தயங்குவதில்லை ஆனால் புத்தரே சிரிக்க தெரியாத சிரிக்க ஞாபக படுத்தவே நம்மை பார்த்து சிரிக்கிறாரோ என்பதாகத்தான் அடிக்கடி நம்மை நினைவு படுத்திக்  கொள்ள வேண்டி  இருக்கிறது !



அஞ்சு நிமிசம் சிரிச்ச மாதிரி சொந்த வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தா கூட நம்ம ஆளுகளே , நான் அப்பவே நினச்சேங்கற மாதிரி ஒரு லுக்கு விடறாங்க அப்புறம் என்னத்ததான் செய்யிறது ? ஆனா நாமெல்லாம் ரொம்ப ஹூயுமரஸ் பேங்குக்குச் சொந்தக்காரன் மாதிரி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ல வருகிற பிரகாஸ்ராஜ் லாஃபிங் தெரபி பார்த்து விட்டு பக்கத்துல இருக்கிறவன் தொடயில தட்டி தட்டி சிரிப்போம் .இதுல வீட்ல சிரிச்சா மரியாதை குறைந்து விடும்ன்னு எப்பவுமே விநாயகர் சதுர்த்திக் களிமண்ணாட்டமே இருக்கணும்ன்னு ஒரு தளராத நம்பிக்கை. அவர்களையெல்லாம் சிரிப்பூட்டும் வாயு நைட்ரஸ் ஆக்சைடு (nitrous oxide)  வைத்து கொண்டு நெருங்க வேண்டியதுதான் !

சரி,அது எதுக்கு நமக்கு ? நம்ம ஏரியாவுக்குப் போகலாம் .



பொதுவா விஞ்ஞான ரீதியா அல்லது மெய்ஞான ரீதியோ நமக்குச் சிரிப்பு வர முதல் காரணம் நாம் லேசா இருந்தா சிரிப்புவரும் அதுக்காகச் சந்திர மண்டலத்தில குடியேறனம்ன்னு சொல்லலை.மனிதனின் இயல்பான குணமே ரசணை என்பதுதான் அது யாருக்கெல்லாம் மருந்துக்காகவாவது இருந்ததுன்னா சிரிப்பு வரும்ங்கிறது கேரண்டி வாரண்டியெல்லாம் உண்டு . 

          இனி போற போக்குல சாதரண டாக்டர்கள் சிபாரிசுகளில் கூட இது பற்றிப் பேசப்படலாம் .இனி பிரஸ்கிரிப்சன்லகூட - நிறையத் தண்ணி குடிங்க ,சூடா சாப்பிடாதிங்க , சுட வைத்த தண்ணியில் குளிங்க ,எக்சசைஸ் பண்ணுங்க அப்படியே மறக்காம தினமும் ஒரு தரம் ரகசியமாவாவது எங்கேயாச்சும் போய்ச் சிரிச்சு தொலைங்கன்னு எழுதி கொடுத்து ஃபீஸ் வாங்கலாம் !.


எனக்குத் தெரிந்த அளவில் மதுரையில கூடச் சாலமன் பாப்பையா அவர்களுக்கு இல்லாத கூட்டம் திண்டுக்கல்லில்தான் கூடும்.அங்குள்ள கோபால சமுத்திரம் விநாயகர் கோவில்,மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில் போன்ற இடங்களில் போடும் அத்தனை பட்டி மன்றங்களும் மாறாத தீர்ப்பாகப் பாப்பையாதான் வருவார் .மக்கள் கூட்டம் அவர்கள் சிரிப்பு வெடிக்காகக் காத்து இருக்கும் .ஆண் பெண் அத்தனை பேரையும் அந்தத் தாமதமான இரவிலும் உட்கார வைத்த பெருமை அவரை மட்டுமே சாரும் அங்கு நடக்கும் சிரிப்புப் பந்தலுக்காகதான் அத்தனை கூட்டம் இன்னும் சேருகிறது . .லியோனி கூட அவர் மேடையில் பாப்பையா வளர்ந்தவர்தான் . 



நதி மூலம் - சேவல் பண்ணை.
 
எங்கள் வீட்டில் எனக்குச் சகோதரிகள் யாரும் இல்லை.நான்கு அண்ணன்கள் அதில் மூன்று பேருக்குமே எப்போதும் அவர்கள் சிரிப்பு வெடி கொளுத்தி போடுவதை ரசிக்கவே ஒரு நண்பர் கூட்டம் இருக்கும் .எங்கள் வீடு அதிகம் மோட்டார் துறை சார்ந்தது என்பதால் சிரிப்பு எங்காவது ஒரு மூளையில் சுழல்வது வாடிக்கை அதிலும் அம்மாவை தவிர ஆண்கள் மட்டுமே வாழும் சேவல் பண்ணை என்பதால் எப்போதும் அந்தச் சிரிப்பு வெடிகளில் செக்ஸ் புகை கட்டாயம் கலந்துதான் வெளிவரும் .ஆனால் நண்பர்களைத் தன்னை மறந்து சிரிக்க வைப்பார்கள் .எங்கள் வீட்டில் வளர்ந்த ஆறாவது பிள்ளையாகச் சிரிப்பு எப்போதும் குடியிருக்கும்.அவர்கள் வேலை பார்க்கும் இடங்களிலும் இதே நிலைதான் .ஒரு கூட்டம் சுற்றிக் கொள்ளும் .இந்த அண்ணன்களில் ஒருவர் பெயர் முருகாணந்தம்.அவர் வீட்டிலேயேயும் வெளியேயும் சிரிப்பால் கதறடிப்பார். 



ஒரு மரணம் தந்த பாடம்..  
இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரண் தனது முதல் படபிடிப்பை திண்டுக்கல் நகரை சுற்றி ஆரம்பிக்கும் போது அவரின் படபிடிப்புக்கு, இதே அண்ணன் வேன் ட்ரைவராகப் போனார். அண்ணனின் அந்த நகைச்சுவையுணர்வை கேள்வி பட்ட ராஜ்கிரண் தொடர்ந்து அங்கு வரும்போதெல்லாம் அவராலேயே அழைக்கப்பட்டுப் படபிடிப்புக்கு போவார் . ஆனால் அவர் துரதிருஷ்டவசமாக மூளையில் கட்டி வந்து இறந்து விட்டார் .அவர் வேன் மற்றும் கார் ஸ்டாண்டிலிருந்து அத்தனை பேரும் வந்து இருந்தார்கள் .அண்ணனின் இறந்த உடலை வீட்டை விட்டு எடுத்துச் செல்லும் கடைசி நேரத்தில் ,அறுபது வயது மேற்பட்டவர் ஒருவர் கையில் மாலையுடன் வந்து சொன்ன கடைசி வார்த்தை அங்கு அடங்கிப் போயிருந்த துக்கத்தைத் தூண்டி எல்லோரையும் கதற வைத்தது. ’எப்போதும் எங்கள் சிரிக்க வச்சுட்டு இருப்பியேட நீ மட்டும் எங்கடா போற எங்கள விட்டுட்டுப் பாவி டே முருகா “ 

இன்னும் எனக்குள் இதை நினைத்து பார்க்க வலிக்கும். அவர் கதறியபடி சொன்ன வார்த்தை எனக்குள் நகைச்சுவை என்பது உணர்வல்ல அது யாரும் கற்று கொள்ளும் கலை  என்பது இன்னும் புரிய வைத்தது .இப்படி வாழ்க்கையில் சில வலிகள் தரும் பாடமே வெகு நாள் கூட வருகிறது !



முதல் தகுதி !
 எனக்கு நகைச்சுவை வருமா ? என்பது அப்போது எனக்கே கேள்விக்குறியதாக இருந்தது .வீட்டில் நான்கு அண்ணன்களுக்கும் சின்னதாகப் போகும் சட்டை எனக்கு ( வந்து ) சேரும் போது ,அவர்களுக்குள் இருக்கும் அந்த ஹூயுமர் என்னுள்ளே இல்லாமலா போகும் என்று தேட ஆரம்பித்தேன் .
        சில பேருக்கு பார்வையிலேயே சிரிப்பு வர வைக்க முடியும் சிலருக்கு அக்சனில் சிரிப்பு வர வைக்கத் தெரியும் .சில பேருக்குப் பேசித்தான் சிரிக்க வைக்கத் தெரியும்.எனக்கு இந்த மூன்றாவது வரும் என்று நம்பினேன் இதர்க்கு என் முதல் தகுதி எனக்குச் சூழ்நிலையை லேசாய் இருக்க மைண்ட் ஃபிரி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .ஆனால் என்ன தலை விதியோ தெரியவில்லை யாருக்கெல்லாம் சிரிக்க வைக்கத் தெரியுமோ அவர்களுக்கெல்லாம் எளிதில் கோபமடையும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்  என்பதையும் இதனோடு புரிந்து கொண்டேன் ! சரி அது வேறு விசயம் ... 



கல்வி வடிவில் நகைச்சுவை இன்று யோகா அடிப்படையில் இந்தியா உட்பட பல நாடுகளில் சிரிப்பை சொல்லி கொடுக்க வந்து விட்டார்கள் கேட்டால் உடலுக்கு நல்லது ,மனதுக்கு நல்லது என்கிறார்கள் இது கூட பரவாயில்லை சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரு பள்ளிக்கூடம் மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. சிரிக்க வைக்க ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.அப்படி ஆகிவிட்டது நிலைமையும் அவசியமும் .


நான் நகைச்சுவையுணர்வை ஏற்படுத்த மற்றவர்களை நிறைய அப்சர்வேசன் பண்ண வேண்டி இருந்தது.முகம் சுழிக்காமல்,அவர்கள்  மனம் நோகாமல் சிரிக்க வைக்க உன்னிப்பாகக் கவனிக்க வேண்டி இருந்தது .முக்கியமாக அவர்களின் சாஃப்ட் கார்னர் எது என்பதுதான். அடுத்து கவனிக்க வேண்டி அவர்கள் சூழ்நிலை.பொதுவாகச் சில பேர் சும்மா கூடக் கெக்கே பெக்கேன்னு சிரிப்பாங்க ஆனால் நாம் அவர்களமுயற்சி செய்யும்போதெல்லாம் எதையோ காணாமல் போட்டு தேடுவது போலப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் சுவத்தில் கூட முட்டி கொள்ளலாம் எனத் தோணியதுண்டு .. 



சிரிக்க வைக்கும் நூழ் இழை !

முதலில் ஆரம்பிக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களோடு நம் சிரிக்க வைக்கும் நூழ் இழை தேடிபின்னி விட்டால் போதும் அப்புறம் நம்மைப் பார்த்தாலே ஏற்கனவே பின்னப்பட்ட இழை தானாகவே வேலை செய்யத் தொடங்கி விடும் என்பது ஒரு விசயம் . 

   அடுத்து, அவர்களிடம் சிரிக்க வைக்கப் பயன் படுத்தப்படும் வார்த்தைகள் மிக எளிமையாக இருக்க வேண்டும் ஐன்ஸ்டீன் ஃபார்முலாக்களை அங்குப் பயன் படுத்த வேண்டியதில்லை.அப்படியெல்லாம் ஆரம்பத்தில் நாக்கை சுட்டுக் கொண்ட அநுபவமெல்லாம் உண்டு.


பெரிய சவால் !
                  அதிலும் எல்லா வயதினரும் தனித் தனியாக இருக்கும்போதெல்லாம்  சிரிக்க வைப்பது கொஞ்சம் சுலபம் . தவறாகப் புரிந்து கொண்டால் பேலன்ஸ் பண்ணிக் கொள்ளலாம்.ஆனால் கூட்டத்தில் ,அதிலும் சொந்தங்கள் கூடி இருக்கும் இடத்தில் ( சொந்தமென்பதால் நம் ஏற்கனவே மேல் இருக்கும் அபிப்ராயம் தவிர்த்து ) நம் ஜம்பம் பலிப்பது கொஞ்சம் கஷ்டம் .ஆனால் இங்குதான் என் பயணம் தொடங்கியது .காரணம் நண்பர்கள் வீட்டு திருமணம்,மற்ற விசேசங்கள் கற்று கொடுத்தன இதெல்லாம் சரி ஆனால் அதை விடக் கஷ்டம் சோகமாக அல்லது பிரச்சனையோடு வருபவர்களைச் சிரிக்க வைத்து அதைப் பற்றிச் சிந்திக்காமல் தள்ளிப் போட வைக்கும் திறமை இருக்கே அதுதான் பெரிய சவால் நமக்கு.


நிறைய படித்துப் பாப்பையா அவர்களை மற்றும் சுகி சிவம் போல என்னால் பேசுவது முடியுமா சாத்தியம் இல்லை.ஆனாலும் படித்தவர்க்ள் மத்தியிலும் பேச தகுதியை உயர்த்திக் கொள்ளும் என்ற் ஆர்வம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரட்டியது .மேலும் எளிமையான விசயங்கள் எப்போதும் அழகும் ஹியுமரஸ் கொண்டவைகள் அதைக் கவனித்து எடுத்து கொண்டாலே போதும்.  நகைசுவையுணர்வை கொண்டுவர மிகப் பெரிய லாஜிக் தேடுவது மிகப் பெரிய குற்றம் எனப்தை தெரிந்து கொள்ள வெகு நாளாயிற்று அதிலும் பெண்கள் மத்தியில் லாஜிக் சிரிப்பு சான்ஸே இல்லை காரணம் பெண்கள் எப்போதும் மனதுக்குப் பிடித்த விசயத்தைப் பேசுவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள் .

             ஆனால் ஆண்கள் - 67P என்ற வால் நட்சத்திரத்தில் இறங்கிய ரோசட்டா விண்கலம் தொடங்கி – சுஜாதாவின் மெக்ஸிக்கோ சலைவைக்காரி ஜோக் வரை பேசலாம் அதிலும் ஆண்கள் தன்னை அறிவு கொழுந்துகளாகக் காட்டி கொள்வதில் எப்போதும் தவறுவதே இல்லை என்பதால்  ஜோக் அடிக்க இடமும் அதிகம் வேலையும்சுலபம் .


நாம் இப்படி சொல்கிறோம். ஆனால் பிறந்த குழந்தை தனது பெற்றோர்களிடமிருந்து 16 மாதங்களுக்குள் சிரிப்பை கற்று கொள்கின்றன .அப்படி கற்று கொண்டவுடன் ,  ஒரு நாளைக்கு 400 முறைகளுக்கு மேல் சிரித்து விடுகிறதாம் . கிளு கிளுப்பையை அதன் முன்னால் ஆட்டினாலும் சரி ,வீட்டு சாவியை ஆட்டினாலும் சரி சுலமபாகச் சிரித்து விடும் குழந்தை உலகம் தனித் தன்மையுடையதுதான் .தொட்டிலில் யாரையும் பார்க்காமல் தானாக சிரிக்கும் குழந்தை கடவுளுடன் பேசுகிறது என்பார்கள் .ஆனால் கடவுளுக்கு தினமும் பூஜை செய்யும் மனிதர்கள் ஒரு நாளைக்கு 20 முறைகள் கூட சிரிப்பதில்லையாம் .இது எப்படி? 



ஆனால் பிடிவதமாக இருக்கும் ஒரு குழந்தையைச் சிரிக்க வைக்க அபாய முயற்சி செய்த  என்னைக் காதோடு ஒன்று விட்டதே பார்க்கலாம் .அன்றிலிருந்து கைக்கெட்டாத தூரத்தில் நின்று கொண்டுதான் என் இன்று என்  வேலையை துவங்குவேன். 



          ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று அழுந்த சொல்கிறார் .


நவரசத்தில் நகைச்சுவை.

நகைச் சுவையுணர்வுப் பரதகலையின் நவரசத்தில் நகைச்சுவையில் உவகைச் சிரிப்பு, பெரு நகை, இடிநகை, கேலிச்சிரிப்பு, வஞ்சப் புன்னைக, வெறிநகை, பைத்தியச்சிரிப்பு இடர்க்கண் நகுதல், செருக்குநகை எனப் பலவகை உண்டு. உதட்டை மலர்த்தியும் வாயை ‘ஒ’ எனத் திறந்தும் கைக் கொட்டியும் குதித்தும் நகைச்சுவையைக் கலை வடிவில் பேசுகிறது !.

மருத்துவத்தில் நகைச்சுவை.
மருத்துவம் இன்று வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்கிறது ..
* அதிகம் வாய் விட்டு சிரிக்கும் போது நுரையீரலுக்குள் செல்லும் பிராண வாயு இரத்தல் முழுதும் பரவி புத்துணவு தருகிறது
*அதே சிரிப்பு ஒவ்வொருவரின் உடலிலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் என்டோர்பின் (Endorphin) சுரக்க உதவுகிறது .
*உடலின் நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது.உடலின் அத்தனை உறுப்புகளும் மருந்து மாத்திரை எடுத்து கொள்ளாமல் இலவசமாக தூண்டப்பட்டு அரோக்யமாக்குகிறது .
*முகத்தின் தசைகள் முப்பதுக்கும் மேற்பட்ட தசைகள் இயங்கும் போது இயல்பாகவே ஃபேர் அன் லவ்லி பூசப்படுவது போல முகப் பொலிவு கிடைக்கிறது .தலையில் முடி உதிர்வு குறைகிறது.

மொத்தத்தில் மாத அல்லது வருட மெடிக்கல் பட்ஜெட் பல விதத்தில் நீங்கள் சிரித்தாலே குறைகிறது எனும் போது ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுங்கள்.


வரும் காலத்தில் மாநில அரசுகளின் இலவசங்களில் சிரிக்க வைக்கும் கையேடுகள்( http://vkool.com/benefits-of-laughing/) விரைவில் சேர்த்து கொள்ளப்படலாம்! எனவே சிரிப்பது இத்தனை தருகிறதென்றால் சிரிக்க வைப்பவர்களுக்கு எல்லாமே தருமல்லவா ?

சிரிக்க வைக்க முயற்சிப்பவனுக்கு நட்பு வட்டம் கூடுகிறது .மற்றவர்கள் சிரிக்க வைக்கப்படும் போது நம்மை சுற்றி ஒரு நல்ல சூழல் உருவாகிறது .மேடையில் நகைச்சுவை கலந்த கருத்து பரிமாற்றம் சிந்தனை தூண்டும் பாலாமகிறது .அடுத்தவகள் சூழல் உங்கள் கைவசமாவது எவ்வளவு பெரிய சுகம் என்பது உங்களுக்கு தெரியும் போது அதுவும் ஒருவகை கிக்தான் .


சில நாட்களுக்கு முன்னால் வழக்கம் போல என் பையனைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற போதுஅவனோடு இருந்த அவன் வகுப்புத் தோழனும் தோழியும் இரண்டு பேருமே என்னருகே வந்து, அங்கிள் ப்ரணவ் எப்பப் பார்த்தாலும் எதாவது சிரிப்புக் காட்டிக் கொண்டே இருக்கான் என்றார்கள் .வீடு வரும் வரை நான் அதுபற்றிக் எதுவும் கேட்கவில்லை .அவன் அம்மா முன் இதைச் சொன்னேன் அதர்க்கு அவன் சொன்னான் ,அம்மாசிரிக்க வைப்பது ஒரு சந்தோசப்படுத்தறதுத் தானே அதனாலே புண்ணியம்தானே நமக்குகிடைக்கும் என்றான்.

என்முகத்தை வேறு எங்காவது தேட வேண்டுமா ?

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக