சாலையில் உங்களுக்கு இடதுப்பக்கம் முன்னால் இரண்டடி வித்தியாசத்தில் சம வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் ஒரு வாகனம் சில நொடிக்குள் தன்னுடைய வேகத்தை முற்றிலுமாகக் குறைத்து உங்களுக்கு வலது பக்கம் ”ட” வடிவில் திரும்பினால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் ? பதஷ்டப்படாமல் ,சட்டெனெ வேகத்தைக் குறைத்து இரண்டு பிரேக்கையும் அழுத்தினீர்களானால் நீங்கள் புத்திசாலி . அப்படியில்லாமல் வேகத்தைக் குறைத்துப் பின் பிரேக்கை அழுத்தினீர்களேயானால் ஓரளவுக்குப் புத்திசாலி . ஒரு வேளை உணர்ச்சி வசப்பட்டு முன் பிரேக்கை அழுத்திவிட்டால் முன்னால் சென்ற முட்டாள் விழுவதற்குள் நீங்கள் விழுந்து அவருக்கும் உங்களுக்குமாக இரண்டு பெட் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வரவைக்கும் அபாயம் ஏற்படலாம். இது எதுவுமேயில்லாமல் கிளர்ட்சை இறுகப்பிடித்துக் கொண்டே பின் பிரேக்கை அழுத்தினால் ?
நிச்சயமாக அது வேறு யாருமில்லை நான்தான் அப்படிச் செய்துவிட்டேன் .அப்புறம் நடந்தது என்ன என்று சொல்ல வேண்டுமா என்ன ? விபத்துதான்.
இரவு எட்டரைக்குக் கிளம்பும் போது டெஸ்பேட்ச் செக்சனிலிருந்து சக ஊழியர் ஒருவர் வந்து ,சார் ஒரு பேக்கேஜ் KPN மூலம் அனுப்ப வேண்டும் .ஆட்டோ உடனே கிடைக்கவில்லை. நம்ம சக உழியரில் ஒருவர் கார் வைத்து இருக்கிறார் அவருக்கு நீங்கள் பெட்ரோல் கொடுத்தால் அவரே கொண்டு போய் அனுப்பிவிடுவார் அது மட்டுமல்ல ஆட்டோவுக்கான செலவில் பாதிதான் ஆகும் மேலும் நம்ம ஆஃபிஸ் ஆளே போவதால் கூட யாரும் போக வேண்டியதில்லை என்று பராசக்தி வசனம்போல, ஒரே மூச்சில் நீட்டிப்பேசி முடித்தார்.கொடுத்தனுப்பி விட்டு ,நான் நம் இந்திய முன்னால் கேப்டன் பரிந்துரை செய்யும் என் பைக்கை எடுக்கும் போது அவர்கள் காரில் பார்சலை ஏற்றிக்கிளம்பிக் கொண்டு எனக்கு முன்னால் கிளம்பினார்கள் .அதை ஓட்டிய எங்கள் சக ஊழியர் அங்கேயே காரை வீலிங் செய்து,தனக்கு கார் ஓட்டத்தெரியும் காட்டிக்கொள்ள ஏதோ செய்தார் . எனக்கு அதற்கு உள்ளே ஏற்றிவைத்த பேக்கிங் பற்றிய கவலை வந்து விட்டது .KPN லாரி சர்வீஸ் அவினாசி சாலையில் நான் செல்லும் வழி என்பதால் பின்னாடித் தொடந்து போவோம் என்று பின் தொடரும்போதுதான் இந்த விபத்து எனக்கு நடந்தது .பேகேஜ் உறுப்படியா போய்ச் சேரனும்ன்னு கவலைப்பட்ட எனக்கு அந்த விபத்து முந்திக்கொண்டு வந்து ஜங்கென்று குதித்து விட்டதோ? இதைத்தான் Think of the devil and the devil appears என்பார்களோ ?
பொதுவாகவே இரண்டு சக்கரத்தில் பயணிக்கும் இருவர் விபத்துக்குள்ளாகும் போது அதில் யாராவது ஒருவர் முதல் காரணமாக இருப்பார் .அந்தக் காரணமாக இருக்கும் முதல் நபருக்கு, விபத்து நடக்கப்போகிறது என்ற ஒரு சிறு முன் எச்சரிக்கைக் கொஞ்சமாவது வந்து விடுவதால்,அவர் புத்தியோ அறிவோ அல்லது அவர் வண்டியில் எழுதியிருக்கும் ஏதாவது ஒரு காக்கும் தெய்வத்தின் உதவியால் அவர் பாதுகாப்புக்கு சின்ன உபாயம் தேடிக்கொள்ளும் குறைந்த பட்ச வாய்ப்பாவது இருக்கும் .ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இரண்டாவது நபர்த் திடீரெனெ அதில் மாட்டிக்கொள்வதால், தன்மீது எந்தத் தவறுமில்லை என்ற ஆவேசம் வந்து, நான் சரியாத்தான் வந்தேன் என்று சாலைகளில் எங்காவது கத்திக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம் !
எனக்கு முன்னால் சென்ற அந்த ஸ்கூட்டிக்காரர் மேல் என் வண்டி மோதியவுடன் நியுட்டனின் மூன்றாவது விசைக்கு உடனே கட்டுப்பட்டு , அவருக்கு இடது பக்கம் சரிந்து, அவரின் வண்டிக்கு அடியில் போய் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தஞ்சமடைந்துவிட்டார்.நான் அந்தக் குறுக்கே கிடைக்கும் ஸ்கூட்டியின் பக்கவாட்டில் வளவளப்பான பகுதியில் ( ரொம்ப வள வளப்பாக இருந்திருக்குமோ என்னாவோ? ) மோதி, வழுக்கிய நிலையில் மெல்ல மெல்ல எனது இடதுபக்கம் சரிந்து,முதலில் வண்டியின் ஃப்ரண்ட் சேஃப்டி பார் சாலையில் மோதி அது வளைந்து அடுத்து இதோ நானும் வந்து விட்டேன் அடியைத்தாங்கிக் கொள்ள என்று இடது கால் ஃபுட்ரெஸ்ட்டும் அடிவாங்கி, அது பத்தாதுப்பா என்று மேலும் சரிந்து இடது ஹேண்ட் பார் சாலையில் மோதி, மெல்ல மெல்ல நானும் என் வண்டிக்கு பக்கவாட்டிற்கு அடியில் தஞ்சம் புகும்போதுதான் என்ன நடக்கிறது என்ற தெளிவுக்கு வருவதற்குள்ளே நான் முற்றிலுமாக நடு ரோட்டில் கிடந்தேன்.
சட்டெனெ வண்டிக்குக் கீழிருந்து நான் எழுந்து கொள்ள முயற்சி செய்யவில்லை . அவசரப்பட்டு மேலும் காயம் ஆகலாம் என்பதால் மெல்ல என் இருப்பை உள்வாங்கி என் அதிர்ச்சியிலிருந்து மீளும்போது சுற்றிக் கூட்டமாகச் சிலர் ஓடிவரத் துவங்கினார்கள். என்ன நடந்து விட்டது என்று முற்றிலுமாக என் நரம்பு மண்டலம் என் இருப்பைத் தீர்மானித்து உட்கார்ந்த நிலையில், கைகளால் வண்டியை மெல்லத் தூக்கிக் கால்களை விடுவித்து ,எழுந்து நின்ற என் உணர்வுக்கு எங்கும் அடிபடவில்லை என்று தீர்மானித்து, வண்டியைத் தூக்க முயற்சிக்க, அதற்கு எனக்கு ஒருவர் உதவினார்.அவரே என்ன நடந்துச்சு என்று கேட்டார். என்னவென்று தெரியவில்லை அவர் திடீர்ன்னுக் குறுக்கே திரும்பிட்டான்னு சொன்னேன் .
திருப்பூரில் ஒருவரோடு ஒருவர் பழகுவது, உண்மையாக இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் ஆனால் சாலையில் விழுந்துவிட்டால் அவன் பரம எதிரியேயானாலும் உடனே ,அந்த நிமிசமே பதறிப்போய் ஓடி வந்து உதுவுவதும் ,முதலுதவி செய்வதும், ஆம்புலன்சை அழைப்பதும் உடனே உடனே செய்து உதவி செய்வார்கள் . அந்த விசயத்தில் இந்த ஊரில் வாழ்வதில் எனக்கு மிகப்பெருமை உண்டு .ஆபத்துக்கு உதவுபவனே முதல் தெய்வம்.
பொதுவாகவே திருப்பூர் to மங்களம் (வழியாகக் கோவை) சாலை இரவு எட்டுமணிக்கு மேல் வெகு சுறுசுறுப்பாய் அதிர்ந்து கொண்டுதான் இருக்கும் . ஆனால் விபத்துக்கு முதலில் காரணமான மனிதனின் மனைவியின் புண்ணியத்தால் சில நிமிடம் பெரிய வண்டிகளின் போக்குவரத்து மௌனமாக இருந்தது.நிமிர்த்திய என் வண்டியைத் தள்ளினேன் .கியரோடு விழுந்ததால் நகரவில்லை.கிளர்ச்சை பிடித்துக் கியரை நியுட்ரலாக்க முயற்சிக்கும் போதுதான் கவனித்தேன் அடி வாங்கிய .ஃபுட் ரெஸ் மேலேறிக் கியரைக் கவ்விக்கொண்டு நின்றது. ( இந்திய முன்னால் கேப்டன் சிபாரிசு செய்யும் என் வண்டியில் இரண்டு பெரிய குறைபாடு இருப்பது அவருக்கு தெரிந்துதான் இந்த விளம்பரத்தில் நடித்தாரா என்பது எனக்கு தெரியாது.ஒன்று காற்று பலமாக வீசினால் முக்கியமாக ஆடி மாதத்தில், வண்டியின் மொத்தம் பேலன்ஸ் நம்மிடம் இருக்காது. காற்று வண்டியை கடந்து அல்லது ஊடுறுவி செல்ல வழி இல்லை - Aerodynamics fault.இரண்டாவது இடது பக்க ஃபுட் ரெஸ்ட் கியர் ராடுக்கு இணையாக இல்லாமல் சில இன்ச் தூக்கலாக இருப்பதால் கொஞ்சம் அசந்தாலும் கால் நழுவி விடும் .சாதாரண செப்பல் அணிந்து ஓட்டினால் அவ்வளவுதான்.அது ஃபுட்ரெஸ்ட் இல்லை ஃபுட்கெஸ்ட் ! ) மீண்டும் கிளட்சைப் பிடித்துக்கொண்டே சாலையின் ஓரத்திற்கு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு எனக்கு முன்னால் விழுந்த அந்த ஸ்கூட்டி ஆளைத் தேடினேன் . யாரோ சிலர் அவரைச் சாலை ஓரம் தூக்கிக்கொண்டு வந்து உட்கார வைக்கத் தலை கவிழ்ந்து, ஹாலோ மேனின் (Hollow man ) மறையும் போது உதிர்ந்து விழும் ஆடையைப் போலப் பொலப் பொலவென்று சாலையில் சரிந்தார். எனக்குச் சட்டெனெப் பயம் பிடித்துக்கொண்டது.அந்த ஆள் என்னைப் போல ஹெல்மெட்டும் அணியவில்லை. ஏதாவது பலமாக அடிபட்டு விட்டதா ?
என் கை கால்களை உதறினேன். இடதுகை வலித்தது. அதற்குள் கூட்டம் கூடியது .நான் காத்திருந்தேன்.அந்தக் கூட்டத்திற்குள்ளிருந்து இரண்டு சிறு வயது பையன்கள் என்னை நோக்கி வந்தார்கள்.அண்ணா உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா என்று கேட்டார்கள் .இல்லை என்றேன் .சரி நீங்க கிளம்புங்க அந்த ஆள் நல்ல போதையிலிருக்கிறான் என்றான் அந்தப் பையன் . அடப்பாவி ஓட்டிக்கொண்டே இருக்கும் போதே கீழே விழும் அளவுக்கா குடிப்பீங்க ? குடி குடியைக் கெடுக்கும் என்பதை மாற்றி இனி நீ குடித்தால் அடுத்தவன் குடியையும் கெடுக்கும் என்றுதான் எழுதி விளம்பரம் செய்ய வேண்டும் போல ?
மெக்கானிக்கை கூப்பிட்டு நடந்ததைச் சொன்னேன் .எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி வீட்டுக்கு ஓட்டிட்டுப் போயிடுங்கக் காலைல வந்தவுடன் ஆஃபிஸ்ல வந்து எடுத்துக்கிறேன் என்றார் . தத்துப் பித்து என்று ஓட்டத்தெரியாதவன் போல ஓட்டினேன்.எப்படியோ கியரின் மேல் ஏறி நின்று போடுமளவுக்குக் கியர் , ஃபுட்ரெஸ்டின் பிடிக்குள் சிக்கித்தவித்தது .நான் ஓட்டிய விதத்தைப் பார்த்தால், நானே டாஸ்மாக்கிலிருந்து வருவது போலச் சூடம் அனைத்துச் சத்தியம் பண்ணி விடுவார்கள் ! மெக்கானிக் சொன்னது போலவே எப்படியோ வீடு போய்ச் சேர்ந்தேன்.வீட்டுக்குள் நுழையும் போது குழந்தைத் தொட்டில் தூங்கிக் கொண்டு இருந்தான் . மனைவி அடுப்பில் வேலையாய் இருந்தார்கள் .எல்லாமும் அமைதியாக இருந்தது. சொல்லலாமா என்று யோசித்தேன் .இத்தனை விழுந்தும் ஒரு சின்னச் சிராய்ப்புக் கூட இல்லை. இதைச் சொல்லி வீட்டின் அழகிய சூழலைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை .
இடது கை வலி காலை எழும்போது கொஞ்சமாக இருந்தது. உடற்பயிற்சி செய்த பின் அந்த வலியும் இல்லை.
பூர்வ ஜன்ம புண்ணியமும் உங்கள் மனைவியின் மாங்கல்ய பாக்கியமும் சேர்ந்து உங்களைக் காப்பாற்றியிருக்கிறது. ஏழு வாரம் வெள்ளிக்கிழமை உங்கள் ஊரில் இருக்கும் பாலாஜி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்ளவும். கடைசி வாரம் கோவையிலிருந்து ஐந்து அதிதிகளைக் கூப்பிட்டு அன்ன, வஸ்திர தானம் செய்யவும். எனக்கு என் பிளாக்கில் பின்னூட்டம் போட்டால் போதும்.
பதிலளிநீக்குகுடிப்பவர்களின் லொள்ளு
பதிலளிநீக்குசாலைகளில் தாங்கவே முடியவில்லை
அது தமிழகத்தில் எந்த ஊராயினும் சரி
நிலைமை இதுதான்
"நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்"
எனத் தலைவர் பாணியில் கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்
நிக்ழ்வு வருத்தம் தருவதாயினும்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்