புதன், 3 மே, 2017

சுஜாதா - காய்த்த மரம் !


 சுஜாதாவின் முதல் நாவல் .

                     ஏராளமான ஏகலைவன்களை உருவாக்கினாலும் கடைசிவரைக் கட்டை விரல் ரேகை கூடக் கேடக்காத ஒரேஎழுத்துலகத் துரோணச்சாரியார் வாத்தியார் - சுஜாதா சார் மட்டும்தான் .அவரின் பிறந்த தினத்தில் தானாக அமைந்துபோனது இந்தக் கட்டுரை .

        அஸ்டமாச் சித்திகள் பற்றி ஸ்வாமிகள் எழுதிய கட்டுரைகள் வாசித்துக் கொண்டு இருக்கையில் சில விசயங்கள் மனம் புரிந்து கொள்ளமுடியாத வெகுதூரத்திற்கு செல்ல, அந்த வாசிப்பு ஒரு அயர்வை தந்தது . தமிழ்திரைப் படத்தில் கதைத் தொய்வாகப் போய்க்கொண்டு இருக்கிறதுஎன்று நம்மத் தயாரிப்பாளர்கள் நினைக்கும் இடத்தில் ஒரு துள்ளல் பாடல் வைப்பார்களே அது மாதிரி வேறு ஏதாவதுகொஞ்ச நேரம் வாசிக்கலாம் என்று தேடும் போது கைக்குச் சிக்கியது வாத்தியாரின் முதல் நாவல் “நைலான் கயிறு”.1968ல் குமுததில் 14 வாரங்கள் தொடராக வந்தது .அதை 1971 ல் அவரின் முதல் நாவலாக வெளிவந்திருக்கிறது அதில் நான் வாசித்தது 2013 விசா பப்ளிகேசனின் பத்தாவது பதிப்பு .


நைலான் கயிறு .
நாவலைப் பற்றி சிலாகிக்க போகலாம்.


முதல் விசயம் - இந்தக் கதையைத் தொடராக வெளிவந்து கொண்டு இருந்தபோது ( நான் பிறக்கவேயில்லை அப்போது ) சுஜாதாவிற்குக் கடிதம் எழுதி இருந்தால் சார் இதுக்கு ’சுநந்தாவின் டைரி “ என்று வைத்திருக்கலாமே என்று கேட்டுஇருப்பேன்.அந்தளவுக்குக் கதையின் ட்விஸ்டுக்குச் சொந்தக்காரி சுநந்தாதான்.

இரண்டாவது - இந்தக் கதையின் ஹரிணி, வயது இருபத்தெட்டு Perry Mason series of detective stories - படிப்பவள் .சுநந்தா,பதினெட்டு வயது - Dame Daphne du Maurier romantic novelist வாசிப்பவள். ரோஹினி Albert Schweitzer புரிந்து கொள்பவளாகஇருப்பாள் .உங்கள் பெண் கதாபாத்திரங்கள் எல்லோருமே படித்தவர்களாக மட்டுமே வலம் இடம் வருகிறார்கள் ?
அதோடு இவர்களில் தற்கொலை செய்துகொண்ட சுநந்தா ,சிக்கலில் மாடிக்கொண்ட ஹரிணிக்கும்பெற்றோர்கள் இல்லை என்பதாகச் சொல்லும் சுஜாதா , குடும்பத்தின் முக்கியத்துவத்தை  மெல்லக் கைகாட்டியிருப்பார்.

மூன்றாவது விசயம் - சுஜாதவை வாசித்தவர்களுக்குக் கணேஷ் வசந்த் என்ற டூயல் ரோலில் சுஜாதவின் நிழல் என்றுசொன்னால் அது வசந்த் பாத்திரத்திற்குத்தான் மிகவும் பொருந்திப் போகும் என்று கவனமாகச் சுஜாதா வாசித்தவர்களுக்குத் தெரியும் .ஆனால் அவரின் இந்த முதல் கதையில் வசந்த் இல்லை ஆனால் அவர் வேலையைக்கணேஷ் பார்ப்பார் .
ஹரிணியிடம் கேள்விக் கேட்கும் கணேஷ் ( இறந்து போன ) கிருஷ்ணனுடன் எவ்வளவு நெருக்கம் என்பார் ? அதற்கு ஹரிணித் தன் நகத்தைக் கடித்துக்கொண்டே, நெருக்கம் என்பாள் .
மீண்டும் கணேஷ் ,எவ்வளவு நெருக்கம் ? ஒரு அடி ,ஒர் இன்ச் ,இல்லை சைபரா ?
அவள் மூன்றாவது என்பாள்.
35 ஆம் பக்கத்தில் இந்தக் கேஸ் ஆரம்பிக்கும் போது கேட்டக் கேள்விக்குப் பிறகு அதையே 84 ஆம் பக்கத்த்தில் இந்தக்கேஸ் முடிந்திருக்கும் போது ஹரிணியைப் பார்த்துக் கணேஷ் ,
என் அறைக்கு வந்து என் பென்சில் சித்திரங்களைப் பார்க்கிறாயா என்று கேட்பார் அதற்கு அவள் சரி என்றாள் .அந்தச்சரியில் மூன்று நான்கு சரிகள் கலந்திருந்தன. என்று முடிப்பார் சுஜாதா.
இந்த இடத்தில்தான் வசந்த்தின் கேரக்டர்த் தேவையை வாத்தியார் யோசித்திருப்பார் போல ? நாம் அப்புறம் நாம் வாசித்தகதைகளில் வசந்த்தின் முக்கியத்துவம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்.


நான்காவது -  கொஞ்ச நேரமே வந்து போகும் காவல்துறையைச் சேர்ந்த ராமனாதன் கேரக்டரில் துப்புத் துலக்குபவர்கள் தங்கள் உள்ளுணர்வின் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை எவ்வளவு நம்புகிறார்கள் என்பதை, அவர் மகள் ரோகினியிடம்சொல்லும் போது,
எல்லாக் கேசிலும் ஒரு க்ளிக் சப்தம் உண்டு.அது எப்போது எவர் மூலம் கேட்கும் என்பது தெரியாது என்பார்.

எதாவது வாசிக்கலாம் என்று எடுத்த படித்த இந்த நாவலை முடித்து விட்டுத்தான் வைக்க முடிந்தது.அந்த அளவுக்கு ,அரை நூறாண்டைக் கடந்தும் சுஜாதாவின் எழுத்தின் நடையின் ஆளுமை நின்று விளையாடுகிறது . இதுதான் சுஜாதா.அவருடைய எழுத்தின் தேவை இன்றும் ஒவ்வொரு வாசிப்பவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும்கட்டாயம் கடந்து போகும் வாசலாக இருக்கிறது.


சுஜாதா - காய்த்த மரம்

கடந்த ஏப்ரல் 28 ல் திரு. ஜெயமோகன் தன்னுடைய இணையபக்கத்தில்,சுஜாதாவின் குரல் என்ற கட்டுரையின் முடிவில் “ சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால்தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடும் கலைஞர்.சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார்.ஆனால்அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின்மையப்பெருக்கில் நுழைகிறார்.” என்று முடித்திருப்பார் .

இந்த நாவலின் எட்டாவது பதிப்பு 2000ல் , தன் முதல் நாவலைப் பற்றி முன்னுரையில் சொல்லும் போது ,

முப்பது வருடம் கழித்து இந்தக் கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் என்றுதோன்றுகிறது.செய்யவில்லை இதை எழுதும்போது இருந்த என் இளமையும் ( அப்போது அவருக்கு வயது 32 ) தமிழில்புதியதாகப் பல முயற்சிகள் வசன நடையில் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது எனக்கு இல்லைஇடைப்பட்ட நாட்களில் எத்தனையோ சுகத் துக்கங்களை நான் பார்த்துவிட்டேன் .உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக்கைவிட்டு விட்டேன் ” 


இதுதான் வாத்தியார் .

          சுஜாதா பற்றி இன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில் யாராவது பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள் .அவரைக் கடந்து வந்தவர்கள்தான் அவரை மறக்க முடியாமல் எதாவது சொல்லி வைக்கிறார்கள் .அதுதான் இருந்த போதும் மறைந்த பிறகும் வாத்தியாருக்குப் பெருமை .

சுஜாதா - காய்த்த மரம்.
(கல்)  சொல்லால் அடிபடுவது இருக்கத்தானே செய்யும் ?

1 கருத்து:

  1. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    சுஜாதாவை அவரின் படைப்புக்கள் மூலம்
    புரிந்து கொண்டவர்களே
    இந்தப் பதிவின் அருமையையும்
    புரிந்து கொள்ள முடியும்

    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு