சனி, 24 மார்ச், 2018

அம்மா எனும் மாயநதி !
வாடகைக்குச் சுமார் மூன்று மாதங்களாய்த் தேடி அலைந்த பிறகு மனைவிக்கும் பையனுக்கும் அந்த வீடு பிடித்திருந்தது

இப்போது தங்கியிருக்கும் வீட்டில் அட்வான்ஸ் திருப்பித்தர ஒரு மாதம் கூட ஆகலாம்.திருப்பூரில் நாம் நினைக்கும் ஏரியாவில் வீடு கிடைப்பது மழைவரும் போது பாத்திரம் வைத்துத் தண்ணீரைச் சேமித்துக் கொள்வது போல உடனடியாகச் செய்து விடவேண்டும் .இல்லாவிட்டால் யாராவாது ஒரு வீட்டுப் புரோக்கர் அதிகம் வாடகைக் கொடுப்பத்தாகக் காய் நகர்த்தி நம்மால் யாரோ ஒருவருக்கும் வாடகையைக் கூட்டி விடுவார்.

வீட்டுக்கு அடவான்ஸ் கொடுக்க உடனடியாக ஐந்து மாத வாடகைத் தொகை வேண்டும் .அந்த அளவுக்குத் உடனே வேண்டும் என்ற ஞாபகத்தோடு மனதுக்குள்ளே மனைவியின் கழுத்தில் அணிந்திருக்கும் அம்மாவின் செயின்தான் முதலில் மனக்கண் முன் வந்து அசைந்தாடியது

அம்மாவின் செயினை வாங்கி ஹேண்ட் பேக்கில் வைக்கும் போது, மனசு கனத்தது .

இந்தத் தேசத்தின் என்ன சாபமோ என்னவோ தெரியவில்லை. எந்த ஒரு மகனும் அம்மா என்ற ஆன்மாவப் புரிந்து கொள்ளும் முன்னே அவள் இந்த உலகத்திலிருந்து இயற்கை மீட்டு அழைத்துக்கொள்கிறது .  
நாற்பது வயதுக்கு மேல் சொந்த வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் தாய்த் தந்தை ஞாபகம் தவிர்க்க முடியாத நிழலாய்த் தொடர்கிறது .

அம்மா இறந்து போவற்கு இரண்டாடுகளுக்கு முன்னால் கடைசி முறையாகத் திருப்பூர் வந்து திரும்பிச் செல்லையில் வாசல் வந்து வழியனுப்பும் போது , அப்பாவுக்குத் தெரியாமால் சுருட்டிய காகிதச்சுருளைப் போலப் பணத்தை என் கைக்குள் திணித்து விட்டு, யாருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்.எனக்கு ஏதாவது ஆச்சுன்னாக் கூட யாரிடமும் ஏதுவும் கேட்காதே என்று நான் வேண்டாம் என்று மறுத்தும், வச்சுக்க என்று ஒரு சின்ன அதட்டலாகச் சொல்லிவிட்டுப் போனார்.

அம்மா சுருட்டிக்கொடுத்த பணத்தை விரித்து எண்ணியபோது எட்டாயிரம் இருந்தது. ரெண்டு வருடம் கழித்து அம்மா இறந்த போது அம்மாவின் கடைசிக் காரியத்திற்கான மூன்று அண்ணன்களோடு செய்த செலவு மொத்தத்தில் என் பங்கு ஏழாயிரத்து ஐநூறு .

அது மட்டுமில்லை அப்பா மாதிரி சேர்த்து வைக்கும் தந்திரம் எனக்கு இல்லை என்பதுவும் அம்மாவுக்குத் தெரியும். அம்மா இறப்பிற்குப் பிறகு இருந்த நகைகள் பிரிக்கப்படும்போது அண்ணன்களும் அண்ணிகளும் என் மனைவிக்குச் செயினை விட்டுகொடுத்தார்கள். கழுத்தில் செயின் இல்லாத அம்மாவின் ஒரே மருமகள் என் மனைவிதான் என்பதால் .

ஆனால் எனக்கு அப்போது கூட அம்மாவின் செயின் அப்படி எங்கள் பங்குக்கு வந்ததன் காரணம் இப்படிச் செலவுக்குக் காத்து இருந்ததால் தானோ என்னவோ ! இறந்த பிறகும் தன்னைத் தேடிவந்தவருக்குக் கொடுத்தார் சீதக்காதி ( செய்தக்காதி ) என்ற 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' பற்றிப் படிக்காசுப்புலவர் பாடிய வரிகளில், “ ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்என்ற வரி தேடி வந்து மனதுக்குள் வந்து முன் நின்றது

 

ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/
கார்தட்டிய பஞ்ச காலத்திலே, தங்கள் காரியப்பேர்/
ஆர்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு/
மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.


அம்மாவை எரித்த சாம்பல் குவியல் கூடுதுறை ஆற்றில் கரைந்து கலந்து போனது உண்மைதான் . முக்கூடல் என்று பேசப்படும் அந்த ஆற்றில் காவிரி, பவானியும் வெளியே கண்ணுக்குத் தெரிந்த ஆறுகள் இரண்டுதான் ஆனால் வெறும் கண்ணுக்குப் புலப்படாத மாயநிலையிலான அமுதா என்ற இன்னொரு ஆறு இரண்டு ஆற்றுக்கும் கீழே ஓடிக்கொண்டு இருப்பதாக ஆன்மீக வரலாறு பேசுவது போல, அம்மா இன்னும் எங்களைச் சுற்றி அரூபமாக ஏதாவது ஒரு பொருள் வடிவத்தில் கலந்து நின்றுக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார் .


அடுத்த முறை என் அமராவதி அம்மா வயிற்றில் நான் மகனாகப் பிறக்கும் வாய்ப்புக் கிடைத்தால், என் மனதில் யாருக்கும் தெரியாமல் அடைந்து கிடக்கும் பல தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கதற வேண்டும் என்று மனம் ஏங்குகிறது !

அந்தப் பிரபலமான கேரள அடகுக் கடையின் செயினை எடையிட்டு மதிப்பிடுபவர் ,ஏன் சார் செயின் ஈரமாக இருக்கிறது என்று கேட்டார் .

ஒருவேளை கழுத்தில் அணிந்து இருந்ததால் அதை அப்படியே கொடுக்காமல் எனது மனைவி தண்ணிரில் கழுவிக் கொடுத்து இருக்கலாம்.ஆனால் அதன் எடை மதிப்புக் கூட்டுவதற்கானத் தந்திரமாகச் செய்து கொண்டு வந்து இருக்கலாமோ என்ற எடை மதிப்பீட்டாளர்த் தன் தொழில் முறையில் சிந்தித்து அப்படிக் கேட்டு இருக்கலாம் .


ஆனால் ஆந்தப் பணத்தைக் கையில் வாங்கி வந்து படியிறங்கும் போது என்  

கண்களின் கண்ணீரால் நனைந்தது .


அம்மாக்கள்  இருக்கும் போதும் இல்லாத போதும் தன் குழந்தைகளுக்குத்  

தேவை ஏற்படும்போதேல்லாம் சுழ்ந்து நின்று உதவும் மாய நதிகள்தான்...1 கருத்து: