வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாலகுமாரனின் - புருஷவதம்.இன்று திரைப்படங்கள் ,நாடகங்கள் எங்குப் பார்த்தாலும் பேய்க்கதைகள் பிடித்து ஆட்டும் சூழலில் பாலா சாரின் புருஷவதம் வாசித்தேன் .முற்றிலும் ஒரு சூட்சும வாழ்வில் சஞ்சரித்த அனுபவத்தை இந்த வாசிப்பு நிகழ்த்துகிறது.பாலாசாரின் புத்தகங்களுல் முதன்முறையாக ஆங்கிலத்தில் WILL FULLY EVIL ( Zero Degree Publishing ) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் என்பதும் இந்த நாவலின் புதிய பலம்.

சென்னைக்கும் - திருவள்ளூருக்கும் நடுவேயுள்ள திருவாலங்காட்டில் பழையனூரில் இன்றும் வட்டார வழக்கத்தில் இருக்கும் பழையனூர் நீலி என்ற உண்மைக்கதைதான் புருஷவதம் என்று அவதாரமெடுத்து இருக்கிறது. இன்றும் இதன் ஆதாரமாகத் தீப்பாய்ந்த வேளாளர்கள் படைப்புச் சிற்பமாகச் தீக்குண்டம் அங்கு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் பழையனூரின் காவல் தெய்வமாக நீலியை வழிபாடு செய்து வருகிறார்களாம்.

கதை இதுதான் - பேராசைக் கொண்ட புவனபதி என்ற வேதமும் சகல சாஸ்திரமும் கற்றுத் தங்கள் குலச்சொத்தாகக் கருதும் வேதத்தை மனனம் செய்து அர்த்தம் தெரிந்து அடுத்தத் தலைமுறைக்கு மாற்றித்தரவேண்டும் தன் பிறப்பு ,உயிர்வாழ்தல்,திருமணம்,பிள்ளைப்பேறு,உண்ணுதல்,உடுத்துதல்,உறங்குதலும் இதன் பொருட்டே என்னை விட என் வேதம் முக்கியம் என்ற ஒரு பிரமாண இளைஞன் வாழ்வைப் பற்றித் தொடங்கும் கதை இது .புவனபதிப் புண்ணியப் பயணம் செய்ய வந்த காசியில் சமணர்களிடம் பலகலைகள் கற்றுத் தேர்ந்து எதிர்பாராவிதமாகக் காசியின் பிரச்சனைக்குரிய நிரஞ்சனர்கள் என்ற ஒரு கூட்டத்தை எதிர்க்க வேண்டி வருகிறது. அப்போது அங்கு ஆதரவு தந்தவரின் மகள் நவக்கினியை ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்துத் தன் சுயநலத்திற்காகத் திருமணம் செய்துகொள்கிறான்.அவளை ஏமாற்றிக் காசியிலேயே விட்டு விட்டுத் திரும்ப முடியாமல் அழைத்துக்கொண்டு வரும் வழியில் புவனபதி நவக்கினியை இரும்பு உலக்கையால் அடித்துக்கொள்கிறான்.இறந்த நவக்கினியின் மேல் அளவு கடந்த பாசம் தம்பியும் இதனால் தற்கொலை செய்துகொள்கிறான்.புவனபதியால் கொல்லப்பட்ட நவக்கினியும் அவள் தற்கொலை செய்துகொண்ட அவள் தம்பியும் திருவாலங்காட்டில் சூட்சும சக்தியாய்ப் பழிவாங்கக் காத்து இருக்கிறார்கள்.

அந்த ஜன்மத்தில் புவனபதி சர்வ சக்தியும் பொருந்தியவனாய் வாழ்ந்ததால் அவனைக் கொல்ல முடியாமல் அடுத்த ஜன்மத்தில் தரிசனன் செட்டியாராகப் பிறக்கும் புவனபதியைக் காத்து இருந்து வதைத்துக் கொல்கிறாள் நவக்கினி.அதோடு மட்டுமில்லாமல் சிவனின் வரத்தால் மறு பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்த பின் இப்போதும் பழையனூர் நீலியாகப் பெண்களைக் காப்பவளாக வலம்வருகிறாள் என்று கதை முடிகிறது .

இந்த நாவல் மூலமாகப் போரில் இறந்தவர்கள் ,கொலை செய்யப்பட்டவர்கள் மேலும் அசம்பாவிதமாக அகால மரணமடைந்த நம் புறக்கண்களுக்குத் தெரியாத துக்கப்பட்டு இறந்தவர்கள் வாழ்வு பேசப்படுகிறது ...

மனிதனின் மனோசக்தி உடம்பை வளர்க்கிறது செயலைத்தூண்டுகிறது.கோபமோ ,ஆத்திரமோ மனோ சக்தியால் நிகழ்கிறது. எல்லா உணர்வுகளும் மனோசக்தியின் வெளிப்பாடே .மனம் வாழ்க்கையை நடத்துகிறது அந்த மனதை நடத்துவது எது ? எந்தச் சக்தி ? அந்தச் சக்தி உடலை விட்டுப் பிரியும்போது பழக்கத்தினால் மனதை இழுத்துப்போகிறது .நடந்த (வாழ்வியல்) நிகழ்ச்சிகளை மனம் ஆழ்ந்து பற்றிக்கொண்டு இருக்க அந்த உயிர் திரும்பத் திரும்ப நடந்தவைகளோடேயே இருக்கிறது.

சாகும்போது இருந்த மனோசக்தியைப் புறகணிக்க முடியாமல் உயிரை உடம்பாக நினைத்து வாழ்பவர்கள் பைசாசமாக அலைகிறார்கள் உடம்பிலிருந்து வெளியேறிய உயிர்சக்தி பெரும் சக்தியோடு இணைய ஒப்புக்கொடுத்தால்தான் பெரும் சக்தியின் வென்னீர் ஆறான வைதரிணியைக் கடந்து குளுமைப் பெற்று சாந்தியடைய முடியும் என்ற சூட்சும உலகையும் அதில் வாழ்பவர்கள் பற்றியும் விவரிக்கிறது நாவல்


இந்த நாவல் மூலம் முக்கியமான ஒரு செய்தியை முன்வைக்கிறார் நாவலாசிரியர் .

பெண்களை இம்சிப்பவன் அவன் தாக்கியதைப் போலப் பல நூறு மடங்குத் தாக்கப்படுவான்.கைகால்கள் சிதைக்கபட்டு ,கழுத்து அறுக்கப்பட்டுச் சாவான் .பல ஆயிரம் பேர்களுக்கு முன் அவமானப்படுத்தப் படுவான் .கசையால் அடிக்கப்படுவான்,உண்ணவும் உறங்கவும் முடியாமல் தவிப்பான்.பயமும் திடுக்கிடுதலும் எந்நேரமும் அவனிடம் இருக்கும் வாய்விட்டுச் சிரிக்க முடியாத பாவியாய் கண் மூடித் தியானம் செய்ய முடியாத கேவலனாய் வாழ்வான் இப்போது பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கும் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைக்கு என்ன தண்டனை என்பதை இந்த நாவலில் விவரித்து எச்சரிக்கிறார்.வரலாற்றின் பின்னோக்கிய காட்சிப்படுத்துதலில்  புவனபதி காசிக்குப் போகும் முன் காட்டு மிருகங்களிடம் தற்காத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் பயிற்சிகளின்நுணுக்கம்,சூக்கும சரீரத்தோடு உலவும் அமானுஷ்ய உலகின் நடத்தைகள் போன்ற நாம் தேடியும் கிடைக்காத பலஆழமான விசயங்களைச் சொல்லுவதன் மூலம் ஒரு கதை காலத்தின் பின்னோக்கி நிகழும்போது ஒரு நாவலாசிரியன்தரவேண்டிய மெனெக்கெடல்களைச் சொல்லித்தருகிறார் பாலா சார் .


.எப்போதும் போலவே  தன்  மிகச்சிறந்த எழுத்தாளும் திறனை வெளிப்படுத்தி இந்த நாவல் முழுதும் பிரமிப்புக் களையாது கட்டி வைக்கிறது அவர் கதை சொல்லும் விதம் .

4 கருத்துகள்:

  1. வாய்ப்பிருந்தால் எஸ் ரா மற்றும் தற்கால எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரை வடிவங்களில் கவனம் செலுத்துங்கள். மனம் விசாலப்படும்.

    பதிலளிநீக்கு