மனைவி ஊருக்கு
போன பின் குக்கரும் சொன்ன பேச்சை
கேட்பதில்லை .
எதிர்பாராமல்
நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
முக்கா டம்ளர்
அரிசி,ஒன்னேகால் சொம்பு தண்ணீர்,நாழு விசில் மனப்பாடம் பண்ணி வைத்து இருந்தேன்.
அடுப்பில் வைத்த
சில நிமிடத்தில் அறுபது வயசு கிழவன் மூச்சு
போல விசில் பலவீனமாக வந்தது . எட்டு பலவீனமான விசிலுக்கு அப்புறம்தான்
இறக்கினேன்.
திறந்து
பார்த்தால் பத்தியகாரனுக்கு கஞ்சி சோறு ரெடியாகி இருந்தது .
வீட்டுக்கார
அம்மாவ ஊருக்கு அனுப்பிய முதல் நாளே இப்படியா ?
அப்புறமென்ன
திருப்பி அடுப்பு..நாழு விசில்..இறக்கினால்
பாதி சாப்பாடு அடிப்பிடித்து போய்விட்டது.
முதல்ல கஞ்சி
சோறாக இருந்தது ஃப்ரை ட்ரை ரைஷ் ஆகி விட்டது
சுரண்டி
எடுத்து தின்று தீர்த்தாகிவிட்டது .
பாவம் நண்பர்
முகம் கோணாமல் சாப்பிட்டு விட்டு நடையை கட்டிவிட்டார் .
இனி வருவாரா
இந்தப்பக்கம் ?
கவுளுக்கே
வெளிச்சம் .
நான் இங்கு சொல்ல வந்தது சொந்த ஊரில் நடந்த ஒரு மலரும் (அவஸ்தை) நினைவு ..
இது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .
அவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்குத் தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .
பெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லச் சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .
நாங்கள் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தோம் . அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று சொல்லித்தான் நண்பர் இங்கு வந்தார் இருந்தாலும் தர்மசங்கடமாக நெளிந்துகொண்டே பேசி காலத்தை ஒப்பேற்றிக் கொண்டு இருந்தோம்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .
ஒருவேளை அந்தப் பெண் வந்து வண்டியைக் கொண்டு வந்து விட்டதா என்ற சந்தேகம் வரவே வெளியே வந்து பார்த்தேன்.
நான் வருவதற்காகவே காத்து இருந்தது போல அவர்கள் வீடு சில அடிகள் தள்ளி நின்று கையசைத்து அழைத்தாள் .வண்டியும் அவளிடம் இல்லை.
அவள் முகம் பார்ப்பதற்குக் களேபரமாக இருந்தது.
என்ன என்று விசாரித்தபோது ,இந்தப்பெண் வேகமாக ஓட்டிச் சென்று யாரோ ஒருவரின் வீட்டுக் கதவில் முட்டி உடைத்து இருக்கிறாள் . அது காம்பவுண்ட் சுவருக்குள்ள மரக்கதவு .
அவர்கள் வண்டியைப் புடுங்கி வைத்துக்கொண்டு வீட்டில் பெரியவர்களைக் கூட்டிக்கொண்டு வாவெனெ அனுப்பி விட்டார்கள்.
இதைச் சொல்லி விட்டு வீட்டில் அப்பாவிடம் சொல்லிடாதீங்க அங்கிள் என்று கெஞ்சுவது போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால்.
நீ இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு நண்பருக்கு விசயம் சொல்லி வெளியே அழைத்து வந்தேன் .
வந்த காரியமும் தோல்வியென்பதால் அவரும் எப்படா என்று இருந்தார் போல !
நூலகம் போக வேண்டும் என்று கொஞ்சம் மதிப்பாக சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கழன்று கொண்டோம்.
அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு கதவை உடைத்த வீட்டுக்குப் போனோம்.
அது ஒரு ஹவுசிங்போர்டு ஏரியா - சி கிளாஸ் ரக வீடு.
கதவைத் தட்டினோம்.அந்த வீட்டிலிருந்து ஒரு முப்பத்தி ஐந்து மதிக்கத் தக்க மனிதர் வெளியே வந்தார் .
அந்தப் பெண்ணோடு எங்களைப் பார்த்தவுடம் புரிந்துகொண்டார் போல ?
ஏன் சார் இந்த மாதிரிச் சின்னப் பிள்ளைகளிடம் வண்டி கொடுத்து விடறீங்க ?
கதவுக்கு ஏதாவது ஆச்சுப் பரவாயில்லை .
அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க என்றார் .
அவர் பேச்சில் ஒரு நேர்மை இருந்தது.இப்போது சசிகுமார் வசனம் கேட்கும்போதெல்லாம் அவர் ஞாபகம்தான் வருகிறது .
அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்க வேண்டும் .அப்பொதெல்லாம் அந்த மாதிரி இருந்தால்தான் ஹவுசிங்போர்டில் வீடு கிடைக்கும்.
அவர் என்னையையும் நண்பரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பேசினார்.
எனக்குப் புரிந்துவிட்டது .
சாதுர்யமாக யார் கதவைச் சரி செய்யும் பொறுப்பெடுத்துக் கொள்கிறீர்கள் என்ற பதிலை எதிர்பார்கிறார்.
நண்பர் என்னைப்பார்த்தப் பார்வையிலேயே தன்னை இதில் மாட்டி விடாதே என்று சொல்லாமல் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.
அவர் உடைக்கப்பட்ட அந்தக் கதவைக் காட்டினார்.
இரண்டு கதவில் ஒன்று மட்டும் தனியே காம்பவுண்டின் உள்புற சுவரோரம், குறுக்கு ரீப்பரெல்லாம் உடைந்த நிலையில் சாத்தி வைத்து இருந்தது.
அவர் சொன்ன மாதிரி, என்ன வேகத்தில் மோதி இருந்தால் இப்படி உடைந்து இருக்கும் ?
இதில் இந்த அசட்டுப் பெண்ணின் அக்காவை நண்பர் உருகி உருகிப் பார்த்து வருகிறார் .அது எப்படியோ ?
சரி எப்படி இருந்தால் என்ன ? விதி யாரை விட்டது ?
அவர் வழிக்கு வரும் வரை மெல்லப் பேசினேன் .
அப்போது கொஞ்சம் குருட்டுத் தைரியம் எனக்கு அதிகம் .
சரி செய்து கொடுக்கக் கொஞ்சம் அவகாசம் கேட்டேன்.அவருக்கு நம்பிக்கைக் கொஞ்சம் வந்த மாதிரி இருந்தது .
அந்தப் பெண்ணின் வீட்டு முகவரியைக் கொடுத்து விட்டு மெல்லக் கழன்று வந்தோம் .
ஒருவழியாய் வண்டியை மீட்டுக்கொண்டு வரும் வழியில், நண்பர் அந்தப் பெண்ணிடம் உனக்கு ஒன்றும் அடிபடவில்லையே என்று அக்கறையாய் விசாரித்துகொண்டு இருந்தார் .
நான் முறைத்தேன் அவரைப் பார்த்து .
எங்களுக்குத் தெரிந்த ஐடிஐ சீனியர் நண்பர் வேல்முருகனுக்கு மரத்தச்சு வேலை நன்றாகத் தெரியும் .இத்தனைக்கும் அவர் ஒரு மெசினஸ்ட்.அவரிடம் போய்ச் சாஸ்டாங்கமாகச் சரணடைந்து உதவி கேட்டோம்.
அவர் வீட்டில் கிடந்த சில மரக்கட்டைகள்,ஆக்சா பிளேடு,கொஞ்சம் ஆணிகள் ,சுத்தியல் சகிதமாக அந்தக் கதவை உடைத்த வீட்டில் போய் இறங்கினோம்.
எங்கள் வரவைப் பார்த்த அந்த மனிதர் தன் நம்பிக்கை வீண் போகவில்லையென்று முகமெல்லாம் பிரகாசமானார் .
ஏறக்குறைய மூன்று மணிநேரம் போராடி சரி செய்து கொடுத்து விட்டுத் திரும்பினோம்.
வரும் வழியில் நண்பர் வேல்முருகன் கேட்டார் ,
ஏண்டா நொங்கு தின்னவிங்க நீங்க, என்னை ஏண்டா இதுல மாட்டிவிட்டீங்க ? .
நான் என் நண்பரைத் திரும்பிப் பார்த்தேன் .
அவர் அப்போதும் வழக்கம் போல இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மாதிரி முகத்தை அசடு வழிய என்னைப் பார்த்துச் சிரித்தார் .
காதல் பண்ணத் தொடங்கிவிட்டாலே இப்படி முகத்தில் அசடு கேட்காமலேயே வழியத் தொடங்கிவிடுமா என்ன ?
ஆனால் அந்தக் காதல் காதலாகவே முடிந்துவிட்டது .அந்தப் பெண்ணின் குடும்பமே சில சூழலால் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது .
அடுத்தப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பருக்கு வேறு பெண்ணுடன் பேசி முடித்தார்கள்.
நண்பரின் திருமணத்தின் போது சீனியர் நண்பர் வேல்முருகன் வந்த போது அதைச் சரியாக ஞாபகம் வைத்து ஏண்டா அந்த நொங்கு என்னடா ஆச்சு ? என்றார் .
இப்போதும் மணமேடையில் நின்று கொண்டு இருந்த நண்பர் என்னைத்தான் பார்த்தார்.
நான் மெல்ல அவருக்கு மட்டும் கேட்கும் அளவில் பதில் சொன்னேன்
அந்த நொங்கு திங்க இவன் லாயக்கில்லை !.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக