புதன், 2 மே, 2018

எஸ்.ராவின் - உப பாண்டவம்சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொடங்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் - 

”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார். 

அது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்தக் திருவிழாவில் அவர் ”மறைக்கப்பட்ட இந்தியா” என்ற தன் வரலாற்று நூல் பற்றிய உரை மூலம் அவர் எனக்குள் விதையாகிப் போனார்.அவர் பேச்சு மிக நெருங்கிய நண்பனின் தோழமை போல வெகு எளிமையாக இருந்தது.என் ஆர்வம் இன்னும் ஒரு படி மேலேறியது.ஆனாலும் எந்த நூலில் வாசிக்கத் தொடங்கலாம் என்ற கேள்வி சில படிகள் இறக்கிவிட்டது . 

வெகு நீண்ட வாசிப்பில் ,தொடக்கம் மிக முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தேன் .ஏனெனில் இப்படிப்பட்ட தவறான துவக்கங்கள் சில சமயம் அந்த எழுத்தாளனை வாழ்நாளெல்லாம் சரி செய்ய முடியாத தள்ளிவைப்புக்கு இழுத்துச் செல்லும் வாய்ப்பாக்கி இருக்கிறது என்பது எனக்கும் ஒரு அனுபவம் . 

சென்ற ஆண்டு இறுதியில் திண்டுக்கல் போயிருந்த போது என் இரண்டாவது சகோதரரும் என் வாசிப்புலகுக்கு குரு நாதருமான திரு.செல்வத்தை வீட்டில் சந்திக்கும் போது அவர் எப்போது போலவே எனக்குப் புதிய பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது எஸ்.ராவின் உப பாண்டவத்தைக் காட்டி ,நல்லா இருக்குடா நான் வாசித்து விட்டுத் தருகிறேன் என்றார்.சென்ற இந்த முறை திண்டுக்கல் போனபோது சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிரபலமான ,புதிய எழுத்தாளர்களின் விலையுயர்ந்த புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார்.சரியான கனம்.வாசிப்ப நேசித்தால் புத்தகச் சுமை எப்போதும் வலிப்பதில்லை .அந்தக் கன வரிசைக்குள் எஸ்.ராவின் உப பாண்டவமும் அடக்கம் .நான் எதிர்பார்த்தது போலவே எஸ்.ரா எதுவும் சொல்லாமலேயே அவர் முதன் முதலில் எழுதிய நாவலான உப பாண்டவ வாசிப்புக் கிடைத்தது சந்தோசமாக இருந்தது. 


தேசாந்திரி ஒருவனின் துரியோதனப் படுகளத் தரிசனத்தைக் காணவிழையும் தேடலில் எதிர்படும்  கதை பாடும் சூதர்களின் அஸ்தினாபுரம் என்பது ஒரு கனவு என்ற வார்த்தையில் இந்த நாவல் தொடங்கினாலும் அதற்கு முன்னரே ”எல்லா வழிகளும் அஸ்தினாபுரம் நோக்கித்தான் போகின்றன” என்ற படகோட்டியான கிருஷ்ண துவைபான வியாசர் வார்த்தையிலிருருந்து வாசிப்பு என்னைக் கைப்பற்றிக்கொண்டது . 

மஹாபாரதம் எனும் நடந்ததாகப் பேசப்படும் ஒரு புனைவெனும் நதியோடை, ஓடி மறைந்த பிறகு அதைக் காலத்தின் பின்னோக்கிய சுவாசத்தின் சுவாசத்தில் மூழ்கிச் சேகரித்த மொத்தப் பயணம்தான் உப பாண்டம். 

”காந்தாரியின் கர்பம் நீண்டுகொண்டே போகிறது. காந்தாரித் தன் கர்பத்தைத் தனே வலிமையால் மோதிச்சரிக்கக் கர்ப்பப் பிண்டம் வெளிப்படுகிறது .அதை நூறு கலயங்களில் இடுகிறார்கள் நூறு குழந்தை பிறக்கிறது “ (ப.40) இன்று டெஸ்ட் டியூப்பில் குழந்த வளர்ப்பது பற்றிய பால பாடம் அங்கேதான் விதைக்கப்பட்டது என்பதைக் கதை பேசி நகர்கிறது . 

மயன் சிருஷ்டித்த மணிமண்டபம் தன் பகைமையின் உன்னதச் சிருஷ்டியின் வடிவாமாக்கி விட்டுப் புறப்பட்டு விட்டான்.மாயமண்டபம் எனும் அழகின் பின்னே எரிந்து உருத்தெரியாது போன காண்டவ வனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது (ப.137) 

பகடையாட்டம் என்பது ஒரு சிருஷ்டிகரம் .அதன் விதிகள் எங்கோ மர்மமாகத் தீர்மானிக்கப்படுகிறன.(ப.199) 

குருசேத்திர யுத்தகளத்திற்கான தேர்வு செய்யப்படும் சமந்த பஞ்சகம் என்ற இடம் காற்றின் உள்வட்டத்திற்கும் ஒளியின் கதிக்கும் எப்படி யுத்த சாதகத்தைச் செய்கிறது என்பதுவும் மேற்கில் என்று யுத்தம் புரிபவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற சூட்சுமச் செய்திகள் பிரமிக்கச் செய்கின்றன (ப.268). 

மேலும் யுத்த விதிகள் , ஒரு அக்ரோணிப் படையின் தேர்,யானை,குதிரை,காலாட்கள் போன்ற அளவுகள் தொடங்கிப் படை வியூகங்கள் நான்கு வகை அதன் உட்பிரிவு எட்டுவகை வியூகத்தின் அங்கம், தலை,சிறகு,உக்கிர அரூபி என்ற ஆழ விளக்கம் தாண்டி என்ன வகை ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன, யுத்தம் நடக்கும் இடத்தருகே அமைக்கப்படும் கூடாரம் தொடங்கி மருத்துவர்கள் வரையும் போர் தொடங்கி அதன் உள்விளைவுகளின் விவரணைகள் மிகுந்த வலியோடு வாசித்துப் பயணிக்க வைக்கிறது. 

இதெல்லாம் தாண்டி இந்த வாசிப்பின் முக்கிய நிகழ்வே மஹாபாரதத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சந்திப்பும் . அவர்களின் உள்மன விசாரணைகளும் அவ்வளவு சுலபமாக நமக்கு ஒரு மஹாபாரதம் பற்றிய ஒரே ஒரு நூலின் மூலம் கிடைக்கும் விசயங்கள் அல்ல .எஸ்.ரா எனும் வரலாற்றுத் தேசாந்திரியின் புதையல் தேடலின் விளைவே அவை .பல வாசிப்பின் உளோட்டங்களின் முடிவுதான் இப்படி உறுதியாகப் பேச வைக்கிறது அவரை .இந்தக் கதாபாத்திரங்களனைத்தும் வியாசன் மனவோட்டத்தில் காலத்தின் கைக்குள் சிக்கிய சதுரங்கக் காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன என்பதை முன்னெப்போதும் பாரதத்தை வாசிக்காதவர்களுக்குக் கிடைத்த வரம் . 

எஸ்.ரா கதை சொல்லும் விதம் சாதரண அறிவுக்கு எட்டாத , அடங்காத காலத்தின் ரகசியம் போல விரிந்து செல்கிறது .எழுத்து என்ற நமக்குள் இருக்கும் எல்லைகளின் பிம்பம் சொந்த உருவகங்கள் கரைந்து ,கரைந்து நாமும் எழுத்தாளனின் பின் தொடரும் நிழலான வியப்பின் ஆழச்சுழிக்குள் கொண்டு செருகிக்கொள்கிறோம். 

வாசிக்க வாசிக்க எல்லையற்ற மனவெளியின் நீண்டப் பயணத் தொலைவில் நிகழ்கால இருப்பை நழுவிய ஓர் கால் இழந்த கனத்தப் பறவையாய்த் தரை பாவாது மிதந்திருந்தேன்.கதை முடியும் போது எங்கோ ஒரு தீராத வலி காலத்தின் எல்லா அசைவுகளுக்கும் முடிவுகளோடுதான் பிறந்திருக்கின்றன என்ற மாயவிதிகளின் வழிகளைச் சொல்லி முடிக்கின்றன . 


”இன்றைக்கும் எனது உப பாண்டவம் நாவலின் முதல்பதிப்பை அடிக்கடி எடுத்து பார்த்துக் கொள்வேன். அது ஒரு பாடம். எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள நான் பட்ட சிரமங்களின் அடையாளச்சின்னம். இலக்கிய உலகில் எனக்கான இடத்தை உருவாக்கி தந்த படைப்பு.நான் எழுதிய நாவல்களில் என்னால் மறுமுறை எழுத முடியவே முடியாத படைப்பாகக் கருதுவது உப பாண்டவத்தை மட்டுமே.

அந்த நாவலை எழுதிய நாட்களில் இருந்த ஆவேசமும் கொந்தளிப்பான மனநிலையும் இன்றில்லை.”

உப பாண்டவத்திற்குப் பின்னால் - எஸ்.ராமகிருஷ்ணன்
(அந்திமழையில் வெளியானது)

நிறைவாக... 384 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் வாசிக்கப்படும் பொது எத்தனை முறை இடக்கை வலக்கை மாறி,அங்கு ,இங்கு வைத்து வாசிக்கப்படும் என்ற முன் நிகழ்வைக் கணித்து வடிவமைக்கப்பட்ட அட்டையின் தரம் அற்புதம் என்பதைச் சொல்லாமல் விலகக்கூடாது. 1 கருத்து:

  1. பலசமயம் எழுதும் போது கொந்தளிப்பை உணர்ந்துள்ளேன். மீண்டு வர நாளாகும்.

    பதிலளிநீக்கு