வெள்ளி, 18 மே, 2018

சிவப்பு விளக்கில் ஒரு அன்னப்பறவை !


அன்புக் கிருஷ்ணாவுக்கு,

இங்கு மும்பையில் நம் வீட்டில் அம்மா,அக்கா,மாமா,தங்கை எல்லோரும் சுகம் .அங்கு நம் அம்மா அண்ணன்கள் சுகமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.வெகு நாளாய் உனக்குக் கடிதம் எழுத ஆசைப் பட்டு இன்றுதான் அது நிறைவடைந்து இருக்கிறது .அதிலும் இரண்டு முக்கியமான விசயத்தை உன்னோடு பேசாமல் என்னால் எனக்குத் தூக்கம் வராமல் தவிப்பின் கட்டாயமே என்னை எழுதத் தூண்டியிருக்கிறது .

முதல் விசயம் என்னை விடவும் உன்னை மிகவும் அதிகம் பாதித்த விசயம் எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்.அவரை நீ மிகச் சின்ன வயதிலிருந்து படித்து வந்தவன் என்ற முறையில் அவர் மரணத்தின் பாதிப்புச் சொல்ல முடியாத துக்கத்ஹ்டில் இருப்பாய் உணர்கிறேன். அப்போது அவர் எழுத்தோடு எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை .ஆனால் வயது ஆக ஆக நீ வரிக்கு வரி நீ வாசித்து அனுபவித்துச் சொன்ன போது புரியாதது இப்போது புரிகிறது .அதிலும் இங்கு மும்பை வந்து ஐந்து வருடங்களில் ஹிந்தியைக் ஒரே வருடத்தில் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன் ஆனால் தமிழ் மறந்து விடும் பயம் வந்து விட்டது அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், சார் வாசிக்கத் தொடங்கினேன் .

சென்ற வாரம்தான் இரும்பு குதிரை படித்தேன் . அதில் விஸ்வநாதன் ,வசந்தா - ஹைவே குயின் ,நெடுஞ்சாலை ராணி,பாதையோரப் பட்டிப்பூ சந்திக்கும் இடம் என்னை உலுக்கிவிட்டது . அதிலும் விஸ்வநாதன் அவளைப் பாடச் சொன்னபோது வசந்தாப் பாடும் தெழுங்குப் பாட்டு ..

தேவுடு சேசின பெள்ளியிது
மா தேவனின் லீலையிது
கலகல லாடே நவ்வுனு லோலா
கண்ணீர் எந்துக்கோ ?

வரிகளை வாசித்த போது எனக்குள் ஏதோ செய்தது. இதெல்லாம் நீயும் வாசித்து இருப்பாய் ஏன் இதைச் சொல்கிறேன்னா உனக்கு நான் சொல்லப் போகும் அடுத்த விசயத்திற்கும் ஒரு பெரிய தொடர்பு இருப்பதால்தான்.இதுக்கு உனது பாசையில் தசாவதார படத்து பட்டர்ஃபிளை எஃபெக்ட் என்பாய் ஆனால எனக்கு அதெல்லாம் தெரியாது.என்னோட ஸ்டைலில் ஏதோ காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக இருக்கலாம் ஆனால் விழப்போகும் பனம் பழத்தில் காக்கா உட்கார்ந்தது நிஜம். 


சரி விட்ட இடத்திற்கு வருகிறேன். அதை வாசித்த உடன் அந்தப் பெண்களில் இப்படியெல்லாம் இருப்பார்களா என்று சோதிக்கும் புத்தி எனக்கு வந்தது.உனக்குத் தெரியும் என்னைப் பற்றி எதிலும் பிராக்டிக்கலாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும் அதனால் சென்ற வாரம் எனக்கு எதிர்பாராதவிதமாக மும்பைக்குத் தென் பகுதியில் சாங்கிலி ( sangli ) ஏரியாவுக்கு அருகில் ஒரு ஓட்டல் மூன்றாவது மாடிக் கட்டிட எலெக்ட்ரிக் காண்ட்ராக்ட் வேலை போயிருந்தேன். ( இதுவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மும்பைக் காமத்திபுரம் ( Kamthipuram ) போல ஒரு சிவப்பு விளக்குப் பகுதி .)அங்கு நாங்கள் தங்குவதற்கு அந்த ஓட்டல் மேல் மாடியில் ரூம் ஒதுக்கிக் கொடுத்து இருந்தார்கள் .

அங்கிருந்த ஏரியாப் பசங்களிடம் சொல்லிக் கேட்டபோது முதல்ல எதுக்குப் பேசணும் ? என்றுதான் முதலில் கேட்டார்கள் . அவர்களுக்குள் இவன் என்னா லூசா என்று கண் சிமிட்டிப் பேசிக்கொண்டார்கள் .அவர்கள் அதை மராத்தியில் பேசிக்கொண்டார்கள் .எனக்கு லேசாய் அப்படித்தான் புரிந்தது.ஒரு வழியாய் ஒத்துக்கொண்டார்கள் . நீ அங்குப் போய்ப் பேசுவாயோ இல்லை பேச மாட்டாயோ எங்களுக்குத் தெரியாது .அது உன் சாமார்த்தியம். நாங்கள் அங்குப் போய்க் கூட்டிட்டுப் போய்க் காட்டுகிறோம் என்று ஒத்துக்கொண்டார்கள் அன்று மாலையே ஏழு மணிக்கு அழைப்போனார்கள்.

அந்த ஏரியாப் பசங்களுக்கு அவர்களுக்குப் பழக்கமான இடம் போல. அது ஒரு நீண்ட சந்துக்குள் ஆட்டோவில் அழைத்துப் போனார்கள் .போகும் வழியெல்லாம் பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள் கைகாட்டிச் சிரித்தார்கள் அதில் சில ஹிந்தி ,இன்னும் சில புரியாத பாசையில் கையசைத்தார்கள் .அதற்கு அர்த்தம் உள்ளே வா என்றும் மட்டும்தான் எனக்குப் புரிந்தது .ஓடுகிற எங்கள் ஆட்டோவை சில தட்டினார்கள் .எனக்கு எந்த ஊரில் இருக்கிறோம் என்பது கூட மறந்து போயிருச்சு.



ஒரு வீட்டு முன்னால் வண்டியை நிறுத்தி உள்ளே அழைத்துப் போனார்கள் .அங்கு ஒரு குண்டாய் ஒரு பெண் பழைய சோஃபா முழுவதும் நிறைத்து உட்கார்ந்து இருந்தது .இவர்களைப் பார்த்ததும் வெகு நாள் பழக்கப்பட்ட தொனியில் நிறைய விசாரித்தது.என்னைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஹால் போன்ற அறையின் மூளையில் சுண்டட்டி-எல்லம்மா பழைய கண்ணாடிச் சட்டமிட்ட படம்

யாரோ ஒரு சின்னப் பெண் எங்கள் எல்லோருக்கும் பாதாம் பால் டம்ளரில் கொண்டு வந்து கொடுத்தது.எனக்கு வேண்டாம் என்ற போது அந்தக் குண்டுப் பெண் அவர்களிடம் இது உனக்குப் புதுசா ? என்று கேட்டது

ஆமாம் என்றேன்.என்னோடு வந்தவர்களைப் பார்த்துச் சிரித்தது.

கொஞ்ச நேரத்தில் ஆறு பெண்கள் உள்ளிருந்து வந்தார்கள் .அந்தக் குண்டுப் பெண் என்னைப் பார்த்து யாரு வேண்டும் என்று கேட்டாள் .எனக்கு உள்ளே கூச்சமாக இருந்தது.அதைப் புரிந்து கொண்டவள் போல அந்தக் குண்டுப் பெண் அந்தப் பெண்களில் ஒருத்தியைப் பார்த்து அழைத்துப் போகச்சொன்னாள் .நான் தயங்கினேன் .அழைத்து வந்த பசங்கள் சிரித்தார்கள் .அவர்களோடு எல்லோரும் சிரித்தார்கள் .
எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அந்தக் குண்டுப் பெண் கை காட்டிச் சொன்ன பெண் என் அருகே வந்து மாடிக்குப் போகலாம் என்றாள் .
அவள் முகம் எனக்கு எங்கோ பார்த்தது போல இருந்தது.

மாடியில் அவளோடு தொடர்ந்து அறைக்குள் போனேன்.
உள்விளக்கைப் போட்டாள். விளக்கின் ஒளியில் சட்டேனெப் பிரகாசமானது அந்த அறை . 

அது ஒரு சின்ன அறை .ஒரு கட்டில் இருந்தது.அதில் மெத்தைப் போலக் கனமான பூப்போட்டப் போர்வை விரித்து இருந்தது.அறையின் மூளையில் ஒரு வாட்டர்க் கேன் இருந்தது.இன்னொரு மூளையில் ஒரு ஸ்கீரின் போட்டுச் சுவற்றில் செல்ஃப் இருந்தது.
சில மணி நேரத்திற்கு முன்னாள் இந்த அறையில் இருந்த எரியும் விளக்கு அணைக்கப்பட்ட எண்ணையோடு கலந்த விளக்குத்திரியின் கருகிய நெடி வந்தது.
என்னை உட்காரச் சொன்னாள்.
அப்போதுதான் அவள் முகத்தை முழுவதுமாகப் பார்த்தேன்.
என்னைப் பார்த்துக்கொண்டே சேலையைக் கழட்டப் போனவள் நிறுத்தி விட்டு
நீங்க அது கொண்டு வந்து இருக்கிங்களா ? என்றாள் .
என்ன ? என்றேன்.
காண்டம் என்றாள் .
இல்லை எனக்கு அது வேண்டாம் நான் வந்தது அதற்கு இல்லை என்றேன் மெதுவாக . 

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே எதுவும் பேசாமல் கதவைத் திறந்து கீழிறங்கிப் போனாள் .
எனக்கு அந்தச் செல்ஃபில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் மேலோங்கியது.சரி பார்த்து விடுவோம் என்று அந்தச் சின்ன ஸ்க்ரீன் விலக்கிப் பார்த்தேன் .

உள்ளே மங்கலாய் ஒரு ஆண் புகைப்படம் இருந்தது.ஒரு மண் விளக்கும் அதற்கு ஊற்ற ஒரு எண்ணெய்ப் பாட்டிலும் தீப்பெட்டி சில ரூபாய் நோட்டுக்கள் கூடவே ஒரு புத்தகம் இருந்தது.
புத்தக்கத்தை எடுத்தேன் .
கிருஷ்ணா சொன்னால் நம்ப மாட்டாய் அது நம் பாலாசாரின் இரும்பு குதிரை தமிழ் நாவல்.
எனக்குப் பளிச்சென்று ஒரு நிம்மதி. அப்படின்னா இவள் தமிழ் தெரிந்தவள்

 . 

புத்தக்கத்தை எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்து வாசிக்க உட்காரவும் அவள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவள் கையில் சின்னதாய் ஒரு கலர் ப்ளாஸ்டிக் கவர் கொண்டு வந்தாள்.
அதைக் கட்டிலின் மேல் வைத்தாள்
அவள் அப்போதுதான் என் கையில் உள்ள புத்தக்கதைப் பார்த்தாள் .
சட்டெனெ அவள் முகம் மாறியது.
நீ தமிழா ? என்றாள் .
ஆமாம் என்றேன் தமிழில்.
சட்டெனெக் கட்டிலில் வைத்த பிளாஸ்டிக் கவரை அறையின் மூளையில் கோபமாக வீசி விட்டு ஏதோ சொல்லவந்தவள் ,வேண்டாம் என்பது போலப் பேச்சை நிறுத்தி விட்டுத் திரும்பி அந்த அறையை விட்டுக் கீழிறங்கிப் போனாள்.
எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது .
அவள் நான் தமிழ்காரன் என்றவுடன் ஏன் கோபப்பட வேண்டும் ?

அவள் கீழிறங்கிப் போன சில நிமிடத்தில் உரக்க ஹிந்தில் யாரோடோ கத்திப் பேசியது கேட்டது .
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .
நான் எடுத்த புத்தக்கத்தை மீண்டும் அங்கேயே கொண்டு வைத்தேன்.
திரையை இழுத்து மூடிச் சரி செய்தேன்.
மீண்டும் அந்தக் கட்டிலில் வந்து உட்கார்ந்தேன் .
அந்த அறை எனக்கு ஏதோ குழித் தோண்டி உள்ளே வைத்தது போல ஒரு எண்ணத்தை உருவாக்கித் தந்தது

யாரோ படியேறி வரும் ஓசைக் கேட்டது .
அவள்தானா ?
இல்லை .நாங்கள் உள்ளே வந்த போது நான் பார்த்த ஆறு பெண்களில் ஒருத்தி அவள் .
அவள் எங்கே ? என்றேன்.
இல்லை அவள் வரமாட்டாள் அவளுக்குப் பதிலாக நான் வேண்டாமா என்று சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு என் கன்னத்தைத் தடவினாள் .
ஒரு நிமிடம் இங்கு உட்கார் என்று கட்டிலைக் கட்டினேன்.
நான் அதற்கு வரவில்லை வேறு நோக்கத்திற்காக வந்திருக்கிறேன் சுருக்கமாகச் சொன்னேன் .
அவள் புரிந்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அதற்கும் சிரித்தாள்.
இப்போது சொல் அந்தப் பெண் தமிழா என்றேன்.
அவளுக்கு என் கேள்வி புரியவில்லை ஆனால் ஒரு மாதிரியாகப் புரிந்துகொண்டு ,மதராசி என்றாள் .
ஏன் அவள் போய் விட்டாள் என்றேன் 
.
என் முகத்தைப் லேசாய் உற்றுப் பார்த்தபடியே அவள் ஒன்று சொன்னாள் கிருஷ்ணா செத்தாலும் அதை மறக்க முடியாதுடா .

மதராசியெல்லாம் அவ கூடப் பிறந்த பொறப்பு மாதிரியாம் .எவ்வளவு காசு வந்தாலும் வேணாம்ன்னுட்டாளாம் .

சொன்னா நீ நம்ப மட்டே, எனக்கு அதைக் கேட்டது கண்ணீர் வந்துருச்சுடா.
என்னால் கட்டுப்படுத்த முடியல.
நான் முகம் கவிழ்த்து அழுவதைப் பார்த்து அவள் என்ன நினைத்தாலோ தெரியவில்லை .
கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே உட்கார்ந்து இருந்துவிட்டு என்னிடம் எதுவும் சொல்லாமல் தயங்கி எழுந்து நின்று விட்டுப் படியிறங்கிப் போய் விட்டாள்.

எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்து இருந்தேன்னு தெரியவில்லை .
ஏதோ அடக்க முடியாத வலிபோல உள்ளே திரண்டு நின்றது .

அந்த இடத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கதறி விடுவேன் போலத் தெரிந்தது .

அந்த அறையை விட்டுக் கீழே வந்து எப்படி நான் தங்கியிருந்த ரூமுக்கு எப்படி வந்தேன்னு தெரியவில்லை .

இப்போது கூட அந்த வார்த்தைய நினைச்சா இதுக்கு மேல என்னால எழுத முடியல ...

முடிக்கிறேன் .

என்றென்றும் அன்புடன் ,
நாகராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக