வியாழன், 14 ஜனவரி, 2016

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’




நர்தகிக்குத் தனது தாய் மூலம் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள்.
தான் வாழ்நாளே இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்து இருந்தது போல உற்சாகமானாள்.
தான் கற்றக் கலையின் தந்தை பரதமுனிக்கும் அதைக் கற்றுக்கொடுத்த குருவுக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள் .
அந்த  சமஸ்தான அரண்மனையில் அவள் நாட்டியம் நிகழ்ச்சி இது முதன் முறையல்ல .மாண்புமிகு மன்னர்  கையால் பல முறை தனிப்பட்ட முறையில் பாராட்டுப்பெற்று நர்தகிக் கௌரவப்படுத்தப்பட்டதைப் பல சமஸ்தானங்கள் அறியும்.ஆனால் நம் தாய் நாட்டின் கல்கத்தாவைச்சேர்ந்த ஒரு சிறந்த யோகியின் முன் நடனமாடும் பாக்கியமும் அவரின் கண்களின் மூலம் பெறவிருக்கும் ஆசிர்வாதமும் ,தன் வாழ் நாளில்கிடைத்தற்கு அரிய பாக்கியம் என நினைத்தாள்.
நர்தகி நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய நடனத்தின் முப்பெரும் பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றவள் கீதம், அபிநயம், பாவம் இவைகளைக்கொண்டுதாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கருத்துக்களை வெளிப்படுத்தும்நாட்டியமும்கலந்துத் திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டிஆடுவதாலும்பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கொண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டித் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கருத்தைப் புரிய வைப்பதே நிருத்தியமாகும்.இவற்றிலெல்லாம் அவள் கரைகண்டவள் .
அந்த ஒரு நாள் நாட்டியக் நிகழ்சிக்காக மிகக்கடினமான பரதநடனத்தின் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் ,இரட்டைக் கை முத்திரைகள ஆகிய.சகல பயிற்சிகளையும் மேற்கொண்டாள் நர்த்தகி . அந்த நாட்டியத்திற்கு வேண்டிய பாடலைத்தேர்வு செய்யும்போது அப்போதைய வழக்கத்தில்முறைப்படுத்தப்பட்ட பரதத்தின்புஷ்பாஞ்சலி, பதம், வர்ணம் ஜாவளி, தில்லானா போன்ற சிருங்காரமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்காரரஸத்திலும் நாயக நாயகிப் பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக அன்றிலிருந்த மன்னர்களைப் பாட்டுடைத் தலைவனாகவும் பாடல்கள் புனைய பெற்றன.நடனங்கள் நிகழ்த்தப்பெற்றன.

ஆனால் நர்தகி பூர்வஜன்மத்தில் கம்சனின் அவையில் மந்திரியாக இருந்த கிருஷ்ணரின் பக்தர் அக்ரூரர் சத்தியபாமாவைஆறுதல் செயல்ஒன்று செய்யப்போய்க் கிருஷ்ணரால் பெற்ற சாபத்தில் அடுத்தப் பிறவியில் பூலோகத்தில் பார்வை இல்லாதவறாகப் பிறந்த சூர்தாசர் வல்லபாச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட "புஷ்டிமார்க்கம்' அடிப்படையில் பாடியச் சூரசாகரம் பக்திக் கீர்த்தனைகளை நர்த்தகி மிகவும் விரும்புவாள். மேலும் சூர்தாசரைப்போலவே கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் போற்றி விரும்பி வருபவள் நர்தகி. அவளும் சூர்தாசரைப் போலவே கண்ணன் எப்போதும் வளர்ந்து பெரியவனாவதை விரும்பமாட்டாள்.மிகுந்த சேஷ்டைகள் செய்யும் பாலகிருஷ்ணன்தான் அவளுக்கும் பிடிக்கும் எனவே சூர்தாசரின் 25 ஆயிரம் பாடல்கள் ஓர்அற்புதமான பாடலைத் தேர்வு செய்தாள் .அதற்காகச் சமஸ்தானத்தின் சிறந்த நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியஇசைககலைஞர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாள்
நர்தகி அன்று மிகுந்த சந்தோசத்தில் அதிகாலை எழுந்தாள்.அவள் வசிக்கும் வீட்டின் மாடத்தில் இருந்து பார்த்தால் மாலை ஆடவிருக்கும் அரசவையின்ஆடலரங்கம் தெரியும் .அதை இங்கிருந்தே வணங்கிகொண்டாள் .
மாலை அரண்மனையின் ஒரு பகுதியில் மிகுந்த பரவசத்தில் இருந்த நர்தகிக்கு நாட்டியத்திற்காகப் பிரத்யோகமாகத் தைக்கப்பட்டவண்ணப்பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்துகொண்டு தயாராக இருந்தாள்
அப்போது அரண்மனை நிகழ்சியை மேற்பார்வையிடும் ஒரு சேடி வந்தாள் , மன்னர் உன்னைத் தயாராக இருக்கச் சொன்னார்கள் .அந்தக்கல்கத்தாசுவாமிகள் விடைப் பெற்று அவர் ஓய்வறைக்குப் போன பிறகு நீ ஆடலரங்கம் வரலாம் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் போகத்திரும்பினாள் .
நர்தகி மட்டுமல்ல அங்கிருந்த அவளுக்கு அலங்காரம் செய்தச் சேடிகளும் அவள் தாயாரும் அதிர்ந்துப் போனார்கள் .
நர்த்தகியின் தாய் அறிவிப்பைத் தந்த அந்தப் பெண்ணை நோக்கி ஏறக்குறைய ஓடிக் குறுக்கே சென்று தடுத்து , அம்மா  ஒரு நாழிகைப் பொறுங்கள்என்னசொன்னீர்கள் கல்கத்தா சுவாமிகள் ஓய்வரை போகிறாரா ? ஏன் அவர் நாட்டியம் பார்க்க அனுமதியில்லையா? என்றால் மூச்சிரைக்க
அதற்கு அந்தச் சேடிச் சொன்ன பதில் எல்லோரையும் மேலும் நிலைகுலைய வைத்தது விட்டது .
தேவதாசியின் நட னத்தைக் கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானதுஎன்று அவர்மன்னரிடம்விடைபெற்றுக்கொண்டார் என்று இடியாய் ஒரு பதிலை இறக்கிவைத்து விட்டாள்
நர்தகி இது நாள் வரை ஒரு தேவதாசிக் குலத்தில் பிறந்தவள் என்பதற்காக வருந்தியதே இல்லை.மன்னனுக்குச் செய்யும் சேவைஇறைவனுக்குச்செய்யும் சேவையாகவே சந்தோசமாக நினைத்து இருந்தாள் ஆனால் இதைக் கேட்டவுடன்தான் தான் ஒரு தேவதாசியாகப்பிறந்ததற்காக வெட்க்கப் பட்டாள்.தன்னுடைய முகத்தை அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்க்கும் போது அவளுக்கு அருவருப்பாகவும் இருந்தது .
அவள் கண்களிருந்துக் கண்ணிர் ஆறாய்ப் பெருகியது.
தாய் வந்து தேற்றினாள் .அவள் தோளில் சாய்ந்து வாய்விட்டு அழுதாள் நர்தகி
அவள் தாய் இந்த இப்படி ஒரு ஏமாற்றத்தில் தன் மகள் அழுது வருந்துவதைப் பார்த்ததே இல்லை .
நான் போக மாட்டேன் என்னால் ஆட முடியாது என்று அரற்றினாள்.
ஏன் அம்மா என்னைப் பெற்றாய் என்று கதறினாள்?
விதி மகளே நாம் பெற்ற வரம் இது என்று சோல்லிக்கொண்டு தாயும் அழுதாள்.
கூடியிருந்த எல்லோரும் செய்வதறியாதுத் திகைத்தனர்.
நர்தகி ஆடலரங்கம் போகாவிட்டால்  அரசரின் கோபத்திற்கும் தண்டைனைக்கும் தப்ப முடியாது .
அங்கிருந்த பெண் ஒருத்தி இதை  நர்தகியின் தாயின் காதோரம் மெல்லச் சொன்னாள்.
சுதாரித்துக்கொண்ட நர்தகியின் தாயார்  , மகளைத் தேற்றத் தொடங்கினாள்
மகளின் முக ஒப்பனைகள் கண்ணீர் பெருக்கத்தால் கலைந்து கொண்டு இருந்தது.
நம் விதி இதுதான் மகளே ,கடவுள் மேல் பாரத்தைப்போட்டுப் போய் ஆடிவிட்டு வந்து விடு என்றாள் .
மன்னனின் கோபத்திற்கு ஆளானால் என்ன ஆகும் என்று என்பதை நர்தகியும் அறிவாள்.
தன்னால் மற்றவர்ளுக்கு துன்பம் வரக்கூடாது என்பதால் தனது முடிவை மாற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்
ஆனால் தான் ஏற்கனவே முடிவு செய்து அயராது பயிற்சி செய்த சூர்தாசரின் கீர்த்தனையை பாட விருப்பமில்லாமல் அவரின் வேறு ஒரு கீர்த்தனையை அப்போது தேர்வு செய்தாள் .
ஆடலரங்கம் போகும் முன்  மெல்லச் தனக்குள் சொல்லிக்கொள்வதும் முணுமுணுத்துக் கொள்வதும் ஆடல் மங்கைகளுக்கு வழக்கம்.
ஆனால் தன் மகள் சொல்லிக்கொண்டு இருக்கும் பாடல் வரிகளை உன்னிப்பாக கேட்கும் போது வேறு ஏதோ ஒரு பாடலை தேர்வு செய்து விட்டாள் என்பதை முடிவு செய்துவிட்டாள் என்பதை அவள் தாய் அறிந்தாள் .
இந்தத் திடீர் மாற்றம் முன்னைவிட அவள் தாயிற்குப் ஒரு வகையில் பயத்தைத் தரமால் இல்லை.ஆனால் நிகழ்சி நடக்க வேண்டும் ,தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிக்க வேண்டும்  என்பது மட்டும் இப்போதைக்கு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தாள் .
சரச் சரவெனெப் பட்டுத்துணியின் ஒளியும்  கட்டியிருந்த சலங்கையும் அதிர ஆடலரங்கம் போகத் தயாரானாள் .
நர்தகியின் காற்சலங்கை அன்று மட்டும் அவளைவிடவும் அமைதியற்று இருந்தது
இரண்டு தோழிகள் , ஒரு பட்டுத் துணியால்  நர்தகியைப் போர்த்தி   ஆடலரங்கம் அழைத்துச் சென்றனர் .


ஆடலரங்கம் ஏறும் முன் முதலில் மன்னரையும் அந்தச் சபையினரையும் வணங்கினாள் .மேடையையும் தொட்டு வணங்கினாள்
அவள் கண்கள் அப்போது ஓர் இருக்கையைத் அந்த சபைக்குள் தேடியது .
ஆம் அது அந்த யோகி, இதுவரை அமர்ந்துச் இந்த சபையைச் சிறப்புச் செய்த இருக்கை அது .அதையும் வணங்கினாள் .
அடுத்தக் கணமே அவளையும் அறியாமல் கண்கள் குளமாயின.
மனதுக்குள் இறைவனையும் , குருவையும், சூர்தாசரை உதவுமாறு ஒரு சேர வேண்டிக்கொண்டாள்.தான் உணர்வு வயப்பட்டு, அந்த யோகியை  இந்த கீர்த்தனை மூலம் வருந்த வைக்காதிருக்க உதவிடுமாறும் மனம் உருக வேண்டிக்கொண்டாள்.
எங்கிருந்து அப்படிப் பலம் தனக்குள் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை ?
இயற்கை தான் கொடுக்க வேண்டிய செய்தியை யார் மூலமாவது எலோருக்கும் தந்து கொண்டே இருக்கும் அன்று அந்த யோகிக்கு நர்த்கி மூலம் அப்போது வெளிப்படத் தொடங்கியது
அந்த யோகியின் ஓய்வறை நோக்கித்திரும்பிய நர்தகி , நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் எதோடும் கலக்காமல், தனது கணீர்க் குரலில் பாடத் தொடங்கினாள் ...
பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ,
பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா?
இரும்புத் துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது.
பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கைவாளாகப் பாதகம் புரிகிறது.
ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்றப் பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்!
பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!
சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?
காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது
ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!
பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’
அவள் குரலின் உச்சமும் வார்த்தைகளும் அந்த சபை தாண்டி ,கம்பீரமான அந்த யோகியின் என்று மூடிய ஓய்வறைக்குள் கதிரவனின் கதிர்களைப்போல சீறிப்பாய்ந்தது.
அது பாடலா ஒரு பெண்ணின் கதறலா என்பதை அங்கிருப்பவர் அறிந்து கொள்ளும் முன்   மேடயில்  மயங்கிச் சரிந்தாள்  நர்தகி. அவையினரும் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டனர்.
ஏற்கனவே நர்தகியின் அடிபட்ட மானின் கதறலாய்  பாடிய கீர்த்தனைகளின் பாதிப்பிலிருந்து மன்னரும் ஏனைய சபையினரும் விலகும் முன்,
யாரும் எதிர்பாராவிதமாக அந்த சபைக்குள் வேறு அதிர்ச்சி சம்பவம் நடந்தது


ஓய்வறையிலிருந்து நர்தகியின் பாடல் வரிகளால் தைக்கப்பட்ட யோகி ,  நேரே சபைக்கே வந்து விட்டார்.
வந்தவர்,  யாரையும் பார்க்கவில்லை. நேராக நாட்டியம் நடைபெற்ற  ஆடலரங்க மேடைக்கு அருகே விரைந்து சென்றார்.
அங்கு ஆடலரங்கத்தில் கண்ணீர் மல்க சரிந்த நர்தகியை நோக்கி தோழிகள்  மேடைக்கு ஓடிக்கொண்டு இருந்தனர்
இயல்பிலேயே ஒளிவீசும் அந்த யோகியின்  கண்கள் கண்ணீரால் பளப் பளத்தது, அங்கு பாடிய நர்தகியை அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி,
தாயே!நான்குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து, உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயேஅதிர்ஷ்டவசமாகஉன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
மொத்த சபையும் எழுந்து நின்று அந்த வீரத்துறவியின் செய்கையால் கைகூப்பி வணங்கியது.
இயற்கை அன்று அந்த யோகிக்கு, நர்தகி மூலம் ஓர் அறச்செய்தியை வழங்கியது அன்று !
இதை உருவாக்கியவனின் உள்ளச்சுமை :


நாம் எல்லோரும் அறிந்த  யாரலும் மறக்க முடியாத ஒரு வீரத்துறவிக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது .ஆனால் ஒரு வரியில் சொன்னால் ஒரு நாட்டிய நங்கையிடமிருந்து  வீரத்துறவிக்கு இயற்கை ஒரு செய்தியை சொல்லிய நிகழ்ச்சி அவ்வளவுதான் .ஆனால் வெகு நாளாய் பெயர் கூட அறியாத ( நர்தகி உண்மை பெயர் இல்லை) அந்த நாட்டிய   மங்கையின் மனதின் உணர்வுகளை மொழி பெயர்க்க ஆசைப்பட்டேன் .அவள் பிறப்பால் எல்லோரும் சமம் என்ற சூர்தாசர் கீர்த்தனை மூலம் என் மனதில் வெகு நாள்  தங்கியிருந்தது.அவளே இதை எழுதுமாறு தூண்டியது போல இருந்தது.( ஒரு வேளை அவளே நானாக பிறந்தேனோ என்ற அதீத கற்பனையா ? தெரியவில்லை. )  அந்தப் பெண் பற்றியப் புனைவால்  அந்த வீரத்துறவிக்கும் அவர் இந்த மாபெரும் இந்திய சமூகதிற்கு செய்த உழைப்புக்கும் எந்த ஒரு பங்கமும் வரக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்திருக்கிறேன் .அதை மீறி யாருடைய மனதிலும் இந்த பதிவு நெல்முனையளவும் தவறு என்று நினைத்தால்  உடனே இங்கிருந்து நீக்க சித்தமாக இருக்கிறேன் .)


வியாழன், 7 ஜனவரி, 2016

பாவம் பசங்க !


           

சில வாரங்களாக நான்காம் வகுப்புப் படிக்கும் எனது பையன் பள்ளியிலிருந்து மாலையில் நான் அழைத்து வரும்போது மிகவும் சோர்வாகவோ அல்லது ஒரு வெறுமையுடன் இருப்பதைக் கவனித்தேன். .பள்ளியிலிருந்து வந்த சில மணி நேரங்கள் யார் கூடயேயும் கொடுக்காமல் யார் பேச்சும் கேட்காமல் எதையாவது செய்து கொண்டு இருப்பான்.அப்புறம் சில மணி நேரங்களில் சரியாகி விடுவான் இது நாளடைவில் அதிகம் ஆனது , 
அவன் அமைதியற்ற நடவடிக்கைச் சில சமயத்தில் எங்களுக்கு எரிச்சல் ஊட்டியது .ஏதோ ஒரு மன அழுத்தம் இருக்கும் பெரிய மனிதர்களைப் போல இருந்தது அவன் நடவடிக்கை. 
            
     வீட்டில் ஒருவேளை அவனுக்குச் சில மணிநேர யாருமில்லாமல் தனியாக இருப்பதோ வேறு எதாவது சூழ்நிலையைக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்ததால் அருகில் உள்ள ஒரு ஆசிரியையிடம் டியுசன் அனுப்பினோம் அங்கு இவன் வீட்டுப் பாடங்களை மட்டுமே செய்வான் .இதிலும் பெரிய மாற்றமில்லை. இப்போது அவனோடு இருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கவனிக்கத்தொடங்கிய போது எவ்விதக் காரணமும் இல்லாமல் கண்களை அதிகம் முறை மூடி முடித்திறப்பது போலச் செய்யத் தொடங்கினான் .இன்னும் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது .’மேனிக் டிப்ரசன்’ மாதிரி இருக்குமோ ? என்ற சந்தேகம் வரவே அருகில் உள்ள குழந்தை மருத்துவரிடம் சென்ற போது அவர் ஒருவேளை நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என்று ஒருமாதம் மாத்திரைகள் கொடுத்தார் .அப்படியும் பெரிய முன்னேற்றமும் இல்லை. 

கடந்த வாரம் ஒரு நாள் என்னிடம் அவன் வகுப்பு ஆசிரியை அவனிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ,அவனைக் கண்டால் பிடிக்கவில்லை என்று சொல்வதாகச் சொன்னான் .அவன் அம்மாவிடம் இது மாதிரிச் சொன்னதாகச் சொன்னேன் . ஆமாம் நான் ஒருமுறை சொன்ன போது என்ன என்னுடைய ”மிஸ்” மாதிரியே நீயும் என்னப்பார்த்தாலே பிடிக்கவில்லை என்று என்னிடம் கூடச் சொன்னான் என்றார் மனைவி . 

எனக்குப் பொறித் தட்டியது. அவன் அந்தப் பள்ளியில் அவன் எல்கேஜி முதல் படித்துக்கொண்டு இருக்கிறான். சரி எந்த ஒரு ஆசிரியைப்பற்றியும் இப்படிச் சொன்னதேயில்லை . நேரில் சென்று அவனுடைய வகுப்பு ஆசிரியைப் பார்க்க முடிவு செய்த போது மனைவி தடுத்தார்.அப்புறம் வேண்டுமென்றே அவனுக்குத் தொந்தரவு கொடுத்தால் அவன் என்ன செய்வான் ? என்ற பெற்றோர்களுக்கே உரிய வழக்கமான பயத்துடன் கேட்டார்.அதற்கேற்றார் போலப் பையனும் வேண்டாம்ப்பா என்றான் பரிதாபமாக ! . 

ஆனால்
 அடுத்தடுத்து அங்கு நடந்த இரு நிகழ்ச்சிகள் என்னை நிர்வாகத்தின் வாசலை கொஞ்சம் வேகமாகச் சென்று மிதிக்க வைத்தது விட்டது ! 

இந்த வாரம் அவன் செய்து கொண்டு சென்ற ”ப்ராஜெக்ட்”கசக்கிக் குப்பையில் வீசப்பட்டது .அடுத்து இன்று மாலை ஒரு வகுப்பு நேரம் முழுவதும் வெளியில் நிறுத்தப்பட்டு இருக்கிறான் .
அடுத்த வகுப்பான ’ஸ்கேட்டிங்’ போக முடியாத அளவுக்கு அது அவனைப் பாதித்து இருகிறது . 

அவனிடமே கேட்டேன் அப்பா பள்ளிக்கு சென்று சண்டைப் போடமாட்டேன் என்ன காரணம் என்று விசாரிக்கிறேன் என்றேன் .அரை மனதாக ஒத்துக்கொண்டான். ஆனால் அன்றுதான் போகிறோம் என்று அவனிடம் சொல்லாமல், மனைவியைப் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து கூட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனேன் . 
போகும் போது மனைவியும் தயக்கத்துடன் என்ன பேசப் போகிறீர்கள் ? என்றார் . 

யார் மீது தவறு இருக்கிறது என்பதைச் சரி செய்யவே போகிறோம் அங்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றேன் . 
பள்ளியின் முதல்வரை காத்து இருக்க வைத்து அனுமதித்தார்கள் அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு ஆன்மீக அறக்கட்டளைக்குக் கீழ் செயல்படுகிறது. 

எங்களை விசாரித்த பள்ளியின் பெண் முதல்வர் முதலில் கேட்ட கேள்வி , 
என்ன நடந்தது? 
நான் பேசினேன் , 
எனக்கு உங்கள் பள்ளி நிர்வாகத்தின் மேல் எனக்குப் பிரச்சனை இல்லை .நான் இப்போது இங்கு வந்தது உங்கள் ஆசிரியர் யார் மீது புகார் கொடுப்பதிற்கில்லை.இந்த வகுப்பில் படிக்கும் எங்கள் பையன் சமீபத்தில் சில நாட்களாக வரும் அவனது நடவடிக்கையும் கடந்த சில நாளுக்கும் முன் உச்சகட்டமாக அவன் செய்தித் தாள் மூலம் செய்த “ப்ராஜக்டை”கசங்கி குப்பையில் வீசியதையும்,நேற்றுப் பக்கத்திலிருக்கும் பையனோடு பேசியதால் அந்த வகுப்பு முழுதும் வகுப்புக்கு வெளியே நிறுத்தித் தண்டித்ததையும் சொன்னேன் .குறிப்பாக அவன் வகுப்பு ஆசிரியை அவன் மீது ஏதோ கோபமாக இருப்பதை அறிந்துக் கொள்ளாவே நாங்கள் வந்து இருபதாக அழுத்திச் சொன்னேன் . 
அவர் ஆச்சர்யபட்டார் .இப்படி எங்கள் பள்ளியிலா ? என்னால் நம்பமுடியவில்லை .அது மட்டுமல்ல அப்படி நடந்து இருந்தால் அது தவறு தவறுதான் .குழந்தைகளைக் கண்டிக்கச் சொல்கிறோம் தண்டனைக் கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்றார் . 
மேலும் பேசிய அவர் , 

இது 1044 பெண்களும் ஆண்களும் இணைந்துக் கல்விப் பயிலும் இடம் .அதனால் ஒவ்வொரு நாளும் எல்லாக் குழந்தைகளும் பள்ளியிலிருந்து அனுப்பி வைத்த பின்தான் நிம்மதி அடைகிறோம் .அந்த அளவுக்கு இந்த வருடம் எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்றார் 
அதற்கு அவர் எனக்கு என் பிரச்சனையை விடப் பெரிதாய்த் தெரிந்தது .ஒரு பாலசந்தர்ப் படத்தில் சொன்ன மாதிரி ஒரு பெரிய கோட்டை அழிக்க அதற்குப் பக்கதில் அதைப் பெரிய கோடு போட்டு சின்னதாக்குவது போல இருந்தது! 
போன வாரம் என்னுடைய டேபிள் உயரம் கூட வளராத யுகேஜிப் பையன் அவன் வகுப்புப் பிள்ளையைக் காதல் பண்ணுவதாகச் சொன்னதாக ஒரு புகார் வந்தது,நான் அதிர்ந்து போய்விட்டேன் . கூப்பிட்டு எப்படி அவன் காதலைப் என்ன புரிந்து வைத்து இருக்கிறான். என்று விசாரித்து நீ காதல் பண்ண வேண்டியது உன் அம்மா அப்பா நண்பன் எல்லோரயும்தான் என்று சொல்லி அனுப்பினேன் .வேறு என்ன சொல்ல ? என்றார்ச் சிரித்துக்கொண்டே . 
இப்படி அது, இது, எது ? என்பது போலப் பல பிரச்சனையைப் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் பையன் பிரச்சனையை நான் உடனே கவனிக்கிறேன் .நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வீட்டுக்குப் போங்கள் என்றார் . 
விடைபெற்றோம் . 

மனைவிக்குச் சமாதானம் ஆகவில்லை என்பதை முகம் சொல்லியது . 
இன்னும் நான் அவர்களை அக்னிப் பரீட்சையில் நாஞ்சில் சம்பத்தைக் கேட்டது போலக் கேட்டு இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ ? 


அடுத்தச் சில நாளில் எனக்குச் சில வேலைகள் இருந்ததால் பையனை அழைக்க அவன் அம்மா போயிருக்கிறார் . 
அந்த வகுப்பு ஆசிரியைத் தானே என் மனைவியை காத்து இருந்து சந்தித்து ,
நான் இங்குப் பத்து ஆண்களாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன் .இப்படி யாரும் என்னைப்பற்றி நேரடியாக நிர்வாகத்தில் சொன்னதே இல்லை .நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டாராம் . 
என மனைவிக்குச் சின்னச் சந்தோசம். 
வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசி விட்டு வந்து விட்டார்

 பெற்றவர்களுக்குப் பாசம் !

ஆசிரியைக்குக்கு கௌரவப் பிரச்சனை !

பள்ளி நிர்வாகத்திற்கோ பள்ளியின் பெயர் மேல் அக்கறை !

மூவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு ,பசங்க படும்பாடுதான் பாவம் !! 

சனி, 19 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் (கடிதம் ) - இரண்டாவது பகுதி

 பெண்களின் பார்வைக்கான அர்த்தம் முழுவதுமாக கண்டுபிடித்து விட்டால் மனிதனின்   உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் சொல்ல முடியும் சாத்தியம் அப்போதுதான் வரும் என்பதை அன்று அவள் பார்வையில்லிருந்துதான் நான் உணர்ந்துகொண்டேன் ” 

தேவன்
நாள் குறிப்பு  14-02-1989
.

            தேவன் தனது நாட்குறிப்பிலிருந்து   தனக்கு, உமாவுடனான தன் முதல் சந்திப்பை எழுதிருந்ததை இங்கு தந்து இருக்கிறேன் .சில சமயம் ஒன்று சேர்ந்த காதலை விட பிரிந்த காதலிலே அதிக அனுபவமிக்கதாகவும், ஆழமான செய்திகளை விட்டுச் சென்று இருக்கிறது. தேவனின் காதல் சந்திப்பு ....

             
 மார்கழி இதமான இதமான குளிர் நிறைந்த மாதம் . பூமி  சூரியனிடம் பொய்க் கோபம் கொண்டு வடக்குப்பக்கம் முகம் திருப்பிக்கொண்டு ஊடலுடனே  மிக அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் காலம் இது .இந்த மாதிரி ஒரு மார்கழி மாதத்தில்தான் அவளை முதன் முறையாக சந்தித்தேன் . என் இளமை தனது நீண்ட நினைவு பயணத்திற்கு முன்னுரை எழுத  தொடங்கிய காலம் அதுதான் .

              அதிகாலை பனிக்குளிரில் வீட்டுக்கு அருகிலிருக்கும் முருகன் கோவிலின் ஜெயராம் அர்ச்சகருக்கு உதவி புரிந்து கொண்டு இருந்த காலம் அது .அந்த கோவிலின் உள்புறத்தின் கர்ப்ப கிரகத்தில் நின்ற நிலை  முருகனுகனுக்கும் எனக்கும் சில அடிதூரம் வரை என் சேவை இருக்கும் .நான் பிராமணன் இல்லாததால் என் எல்லைக்கோடு அவ்வளவுதான்.அந்த முருகனை நான் எப்போது பார்த்தாலும்  என்னைப் பார்த்து மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாகவே தோணும்.அங்குதான் உமாவை முதல் முதலில் சந்தித்தேன் அவளுக்கு 11 வயது எனக்கு 14.

                 எத்தனைதான் காதல் விபத்துக்கள்  வாழ்க்கையில் சொல்லி வந்த காதல் அனுபவங்கள்  சொல்லாமல் வந்த காதல் அனுபவங்கள் என்று  இன்று வரை சந்தித்தாலும் முதன் முறையாக என் உடலில் உள்ள  72000 நாடிகளில் எனக்கு காதல் நாடியை அறிமுகப்படுத்தியது அவள்தான் .இத்தனைக்கும் அவளும் நானும் ஒருவரை ஒருவர் அந்த மார்கழி மாதத்திற்கு பிறகு பல முறை அதே கோவில் சந்தித்து கொண்டாலும் சிரித்ததுகூட இல்லை . ஆனால் முதல் முறையாக இருவரும் பேசிக்கொண்டது இப்போதும் நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது .

                 
     மார்கழி மாத கடைசி நாள் பூஜை பெண்கள் அதிகம் மதிப்பு தரும் நாள் .ஆண்டாளுக்கு நாரயணனைப்போல தனக்கும் இஷ்டப்பட்ட முகம் தெரியாத ஒரு காதல் கணவனுக்கு இறைவனிடம் கோரிக்கை வைக்கும் கடைசி நாள்.கோவில் உள் வளாகத்தின் முன் பக்கத்தில்  சுமார் இருபது பெண்கள் மட்டுமே அமர்ந்து பூஜை செய்ய முடியும் .அதனால் மற்ற பெண்கள் கோவிலைச்சுற்றி அமர்ந்தும் வெளியே உள்ள பந்தலில் பூஜை செய்வார்கள் .அதனால் கோவில் முன் பகுதியில் முருகனை தரிசித்துகொண்டே பூஜை செய்யும் அந்த இடத்திற்கு கடைசி நாளில் போட்டி அதிகம்.அன்று கோவிலில் வேலை அதிகம் மண்டகப்படியாளார்கள் அதிகம் வருவார்கள். அன்றைய இலவச பூஜைப்பொருள் இலவசமாக குவிந்து விடும் .மற்றைய நாளில் அவரவர்களே விளக்கு பூஜைக்கான பொருள் கொண்டு வருவார்கள் ஆனால் கடைசி நாளில் .விளக்குக்கு ஊற்றப்படும் எண்ணை முதல் திரி பழம் தாம்பூல பொருள்கள் அனைத்தும் இலவசம் .அன்றைய விளக்கு பூஜைக்கான நல்லலெண்ணை செலவு முழுவதுவும் என் வீட்டில் அம்மா ஏற்றுக்கொள்வார்கள் .

முன்னமே நான் சொன்னது போல அன்று முன் வரிசையில் இடம் பிடிக்க
போட்டா போட்டி இருப்பதால்  பூஜை ஆரம்பிக்கும் அதிகாலை 5 மணிக்கும் முன் கோவிலின் வெளிக்கதவை  பூட்டி வைத்து இருப்போம்.அன்று நான் கோவிலுக்கு 3 மணிக்கே போய்விட்டேன் . நான் மடப்பள்ளியில் பஞ்சாமிர்தம் தயார் செய்ய நாட்டுச்சக்கரையை அண்டாவுக்குள் கொட்டிக்கொண்டு இருந்தேன் . சுமார் 3.30 இருக்கும் யாரோ வெளியேயுள்ள இரும்புக்கதவை கதவை ஆட்டுவது போல சத்தம் கேட்டது கூடவே சாமி ,சாமி என்ற ஒரு பெண்ணுக்குரிய குரலும் கேட்டது.
 அர்ச்சகர் ,கிச்சப்பு ( எனக்கு அவர் வைத்த செல்லப்பெயர் அது ) யார்ன்னு ? பாரு என்றார் .
 அப்போது தெரியாது அப்படி ஒன்று நடக்கப்போகிறது என்று .ஆம் அங்கு அவள் தட்டியது கோவில் வாசல் கதவு இல்லை என் இளமையின் கதவை !
வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு உமா நின்று இருந்தாள் .
சாமி இல்லையா ? கேட்டாள்
உள்ள இருக்கார். 
கதவை திறந்து விடுங்கள் எனக்கு முன் பக்கம் கோளம் போட வேண்டும் என்றாள் .
எனக்கு புரிந்து விட்டது .
முன்னுரிமை பெற திருட்டு வழி .’அட்வான்ஸ் ரிசர்வேசன்’.
இல்லை சாமி இப்போது திறக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். நாழரைக்கு மேல்தான் திறக்க சொல்லியிருக்கிறார் என்றேன் .
கோவில் வாசல் குழல் விளக்கில் அவள் முகம் ஏமாற்றம் அடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
மீண்டும் அவள்
 சாமி எப்போ வருவார் ? .
குரலில் ஏமாற்றம் சுரத்தை குறைத்து இருந்தது
உள்ளேதான் இருந்தார்.
இல்லை வெளியே போயிருக்கிறார்.
அவர் அப்படிதான் ஏற்கனவே சொல்லச் சொல்லியிருந்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.சட்டெனெ திரும்பி பிடியிறங்கி நடக்க தொடங்கினால்..
அது எனக்கு என்னவோ செய்தது !

ஏனோ தெரியவில்லை என்னை அறியாமல் பூட்டியிருந்த கதவு வழியாய்  பார்த்தேன் . நிலவு ஒளியிலும், சாலையோரத்து தெருவிளக்கின் வெளிச்சத்திலும், முழங்கால் வரை குட்டைப் பாவடை இடமும் வலமும் அசைய அவள் மெல்ல நடந்து போய்க்கொண்டு இருந்தது தெரிந்தது .

அது எனக்கு குமுத்தில் சுஜாதாவின் ’பிரிவோம் சந்தித்தோம்’தொடருக்கு ஜெ... வரைந்த , மதுமிதாவின் ஓவியத்தை ஞாபகப்படுத்தியது !
அவள் திரும்பி பார்ப்பாள் என்று மனது சொல்லியது .
தெரு முனை வரை அவள் போய் திரும்புவது வரை  தொடர்ந்து பார்த்தேன் . அவள் திரும்பி பார்க்கவேயில்லை .
  
நான் திரும்பி மடப்பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நான் திரும்பி வந்த பின்னும், எனக்கு என்னையே ஒரு புது உணர்வுக்குள் இழுத்தது.

வேலையில் என் கை செயல் பட்டுக்கொண்டு இருந்தாலும் மனம் அந்த குட்டைப்பாவாடையில் தொங்கிக்கொண்டு, நடந்து கொண்டே இருந்துகொண்டு இறங்க மறுத்தது.

அப்போது பளிச்சென்று ஒரு யோசனை தோணியது .உடனேயும் அதைச் செய்து விட்டேன்.

அது ...

மணி நாழரைக்கெல்லாம் கோவில் கதவைத்திறந்து விட்டோம் .அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே வரக்காத்துக் கொண்டு இருந்தார்கள். அத்தனை பேரிலும் அவளை மட்டும் என் கண் தேடியது 
யாரோ என் தோளைத்தொட்டார்கள் .

தம்பி, இந்த இடத்தில்  யாரோ கோளம் போட்டு உமா என்று எழுதியிருக்கிறார்கள் ,அருவார்களா? 
கேட்டவர் தினமும் கோவிலுக்கு வரும் கோவில் ’ட்ரஸ்டியின்’ மருமகள் .
ஆமா அக்கா ,ஒருத்தங்க வந்து கோலம் போட்டு, சொல்லிட்டு போயிருக்கிறார் என்று பொய் சொன்னேன் .  
நாங்கள் வந்த பின்னால்தானே கதவு திறந்தீர்கள் என்று அவர் கேட்கவில்லை .
ஒரு வேளை இன்னொரு பொய் சொல்ல விடமால் எனக்கு அங்கு இருந்த முருகன் காப்பாற்றி விட்டார் போல ! 

ஒருவேளை அப்படிக் கேட்டு நின்று கொண்டு இருந்தால் அதற்குள் கோவிலுக்கு பின் புறம் இருக்கும் இடமும் பறி போய் ,பிறகு வாசலுக்கு வெளியே வந்து பந்தலுக்கு அடியில் பூஜை செய்ய வேண்டி நிலை வரலாம் என அவர் யோசித்து கேட்காமல் போயிருக்கலாம் !  
எதற்கும் பந்தலுக்கு வெளியே பார்ப்போம் என்று வெளியே வந்தேன்.
இரண்டாவது வரிசையில் பளிச்சென மஞ்சள் பட்டுப்பாவாடையில் உட்கார்ந்து இருந்தாள் . 

எப்படிச் சொல்வது ?
நல்ல வேளை ,அவளுக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் சின்னப்பெண் என்னை கவனித்தது.
சைகை செய்து பக்கத்திலிருக்கும் உமாவைக் காட்டிக் கூப்பிடச் சொன்னேன். 
நிமிர்ந்து பார்த்தவள் ,உடனே எழுந்து வந்தாள் . 
உள்ளே முதல் வரிசையில் கோவிலுக்குள் கைகாட்டி உங்களுக்காக இடம் போட்டு வைத்தேன் என்றேன் .
முதலில் அவளுக்கு புரியவில்லை . 
நீங்கதான் 4 மணிக்கே உள்ளே இடம் போட வந்தீர்களே என்று சொல்லி முடிப்பதற்குள் புரிந்து கொண்டாள் .
என் அந்த மிகப்பெரிய சேவைக்கு ஒரு நன்றி சொல்வாள் என்று எதிர்பார்த்தேன் .
ஆனால் அவள் உடனே திரும்பி தன்னிடம் போய் குத்து விளக்கை தூக்கி வந்து நான் சொன்ன இடத்தில் விளக்கை வைத்து விட்டு  உட்கார்ந்தாள் .
அந்த இடத்தில் கோவில் கோலப்பொடியில் சின்னதாய் அவள் பெயரை நான் எழுதிவைத்ததை பார்த்து இருப்பாளா ?
பூஜை முடித்த பின் ஏதாவது சொல்லிவிட்டுப் போவாள் என்று என்னை சமாதானப்படுத்திகொண்டு ,மறந்து போனேன் .  
ஆனால் பூஜை முடிந்த பின்னும் அவளைப் பார்க்க முடியவில்லை .


ட்டு வருடம் கழித்தபின்  ஒரு நாள் ..
என் நண்பரின் தங்கை, எனக்கு ஜூனியர்  . தமிழ் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். எனது நூலகத்திலிருந்து அவருக்கு ’ரெஃபரென்ஸ்’  புத்தகம் கேட்டு இருந்தார். வாங்கிப்போக வரும்போது கூடவே ஒரு பெண்ணையும் கூட்டி வந்து எங்கள் காம்பவுண்டுகு வெளியே நிற்க வைத்துவிட்டு வந்து இருந்திருக்கிறார்.என்னிடம் சொல்லவில்லை.

(எனக்குத்தெரிந்து ஒரு பெண் ஒரு ஆணுடன் என்னதான் பழகியிருந்தாலும் தன்னை விட அழகான பெண்ணை தான் பழகிய ஆணுக்கு அறிமுகப்படுத்துவதேயில்லை. இது நம்பிக்கையின் வேறு கோணமா ? சுய பாதுக்காப்பா ? என்பது தெரியவில்லை !)

புத்தகம் வாங்கிவிட்டு நண்பரின் தங்கை  திரும்பி போகும் போது எதேச்சையாக உயரம் குறைவான எங்கள் கம்பவுண்டுக்கு வெளியே நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .ஆனால் என்னைஅவள் பார்க்கவில்லை.
அந்த முகம் …

அந்த முகம் ....
வெகு நாளாய் என் நினைவின் ஆழத்தில் கிடந்த ஏதோ ஒரு  முகத்துடன் ஒத்துப்போவது போல இருந்தது !


மன்னிக்கவும்,
 மீண்டும் தொடர்கிறது.....

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் ( கடிதம் ) !


உலகில் ஆண்களை விடவும் பெண்கள்தான் காதல் கடிதங்கள் எழுதுபவர்களில் மிகப்பெரிய சமர்த்தர்களாக இன்னும் இருக்கிறார்கள் . நேரில் பேசுவதைப்போலத் தன் மன உணர்வுகளை அப்படியே எழுத்தின் மூலம் கொட்டித்தீர்த்து விடுகிறாகள்.இதில் மிகப்படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இல்லை எல்லோரும் தட்டி எறிகிறார்கள் .கல்யாணத்திற்கு முன் பெண்களால் எழுத்தப்படும் காதல் கடித்தங்களில்தான் ”ரொமான்ஸ்” அதிகம் வழிந்து ஓடுகிறது இதில் கி.மு 2200 ல் சுமேரிய நாட்டின் உயர்நிலைப் பாதிரியான இன்னானா முதல் இரவின்போது கணவனுக்காகக் கல்லால் செதுக்கப்பட்ட உலகின் முதல் காதல் (கவிதைக்) கடிதம் மட்டும் சேர்த்தியில்லை. 

நமக்கு வந்த காதல் கடிதங்களை விடவும் அடுத்தவர்களுக்கு வரும் காதல் கடிதங்கள்தான் உலகில் அதிகம் பேசப்படுகிறது.அமெரிக்காவின் அபிகெயில் ஆடம்ஸ் (Abigail Adams ) இங்கிலாந்தின் மேரி வோல்ஸ்டோன்க்ராஃப்ட் (Mary Wollstonecraft ) நெப்போலியன் (Napoleon Bonaparte ) முதல் ஜிம்மி ஹென் (Jimi Hendix ) வரை அனைத்துக் காதல் கடிதம் ரசங்களும் மிதக்கும் உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது .ஆனால் உங்கள் நண்பருக்கு வந்த காதல் கடிதம் படிக்க மனசு வருமா ? வராது எனக்கும் வரவில்லை.ஆனால் அந்த நண்பர் தேவன் விடவில்லை . 

நண்பர் தேவன் என்னை விடச் சில வயது மூத்தவர்.நிறைய படிப்பவர்.எழுதுபவர். மார்கழி மாத ஆண்டாளைத் தோழிகள் எழுப்புவதை மாற்றி அந்த நாரயணனே எழுப்புவதாகத் தனது காதலிக்காக யோசித்து ”மார்கழிப்பெண்ணே” என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் . நிறைய யோசிப்பவர்.நாங்கள் படித்த புத்தகம் பார்த்த திரைப்படம் எதிலுமே நாங்கள் பார்க்காத கோணத்தில் தன் பார்வையைப் பதிவு செய்பவர் .அவருக்கும் – உமா என்ற பெண்ணுக்குமானக் காதல் காலத்தில்தான் நான் உடன் இருந்திருக்கிறேன் . 

உமா முதல் இவர்கள் காதல் காலம் தொடங்கிய முதல் வருடத்தில் செமஸ்டர் லீவுக்குத் திண்டுக்கல்லு அருகில் இருக்கும் தனது பெரியப்பா ஊருக்குப் போய் 28 நாள் தங்கியிருந்தார் அப்போது தேவனுக்கு அங்கிருந்து எழுதிய கடிதங்கள் 23 (இது முதல் வருட செமஸ்டர் விடுமுறை மட்டும்தான் அடுத்த வருடம் எத்தனை என்பது எனக்கு ஞாபகம் இல்லை).ஒரு முறை அவர் வீடுக்குப் போனபோது மிகவும் கவனமாக ஒரு கோடு போடாத பேப்பரில் மிகக் கவனமாக ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டுப் படித்துக்கொண்டு இருந்தார்.என்ன என்று கேட்டு விட்டேன் .நான் செய்த மிகப்பபெரிய தவறு அதுதான் .மனிதர் படித்துகாட்டத் தொடங்கிவிட்டார்.. 

இது நாகரீகம் இல்லை அடுத்தவங்கக் குளியறைக்குள் எட்டிப்பார்ப்பது பொல என்று மறுத்த போது தேவன் விடவில்லை .இது என் குளியறைதான் என் நண்பன்தான் என்று சொல்லியிருந்தாக் கூடப் பரவாயில்லை . அவர் சொன்னப் பதில் அந்தப் பெண் உமா அவருக்கு எழுதிய கடித வரிகளை விடவும் ஒரு வித ரொமான்ஸாக இருந்தது. இது உனக்குப் படித்துக்காட்டும் போது எனக்கு ஒரு கவிதையைப் படிப்பது போலச் சுகமாக இருப்பதாக உணர்கிறேன்.இந்த உலகத்தில் எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சத்தமாக ஏதோ ஒரு மலை மீது ஏறி கத்துவது போல ஒரு கர்வமாக இருக்கிறது .இதனல் உமா மீது என் காதல் இன்னும் எனக்குள் இறுகுகிறது.என்றார்ப் பதில் சொல்லாமல் அந்தத் தவறை (அடுத்தவர் கடித்தை படிப்பதை ) கேட்டேன் ! 

ஒரு முறை அவருக்குக் கடிதம் தபாலில் வந்தபோது அவருடன் வீட்டிலிருந்தேன் .அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு மாதிரி இருந்தது.வந்து இருந்த அந்தத் தபால் கவரை பிரிக்காமல்உள்ளங்கயில் வைத்து ஒரு முறை அதன் கனத்தைக் கண்மூடி உள்வாங்கினார்.சில நிமிடம்தான் வேறு எதுவும் யோசிக்காமல் அந்தக் கவரை தனது மேஜை ட்ராயரில் வைத்து மூடி வைத்து விட்டு என்னோடு வெளியே கிளம்பிவிட்டார்.எனக்குப் புரியவில்லை .கேட்டு விட்டேன் .ஒரு வேளை நான் இருப்பதால் படிக்கவில்லையா என்றதும் இல்லை வேறூ காரணம் என்று கண் சிமிட்டினார்.

அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை என் மனம் தறிகெட்டுத் தவிப்பதோடு படித்தாள் அவள் என்ன சொல்லவந்தாள் என்பது புரியாதுப் போகலாம் .என்னுள் அந்த எதிர்பார்ப்புத் தீர்ந்துப் போன பிறகு ஓவ்வொரு வரியாய்ப் படிக்கும் போது மிகப்பெரிய சுகம் வருகிறது .அது மட்டுமல்ல என்ன எழுதியிருப்பாள் என்று அதைப் படிக்காமல் அந்தச் சுகமான வலியோடு சும்மா இருக்கும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு விதமான சுகம் என்றார். அது சரி இந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டால்தானே ? 

ஆனால் எனக்கும் ஒரு காதல் கடிதம் வந்தது நான் சில ஆண்டுகள் புதுவையில் இருந்த போது என் அண்ணியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒரு காதல் (!) கடிதம் எழுதியிருந்தாள் .அனேகமாக உலகத்தில் எழுதப்பட மிக மோசமான தமிழ் கொலைக்கடிதம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் ! இன்னானா   கணவனுக்காகச் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட காதல் ( கவிதை) கடிதத்தை வாசித்து விளங்கிக்கொள்ளவாவது 58 வருடங்கள் சுமேரிய மொழியில் நிபுணர்களான Muazzez Longso, Hatice ஆகியோருக்கு ஆகியிருக்கு.ஆனால் என்னால் அந்தக் கடித்தத்தைக் கடைசிவரைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. பொதுவாக நமக்குப் பிடித்தவர்கள் எழுதிய கடிதங்களில் பிழைகள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்.ஆனால் கடிதம் முழுதுமே பிழையாக இருந்தால் என்ன செய்வது ? அப்படியும் முயற்சிப் பண்ணி எழுத்துக்கூட்டிப் படிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் போது வீட்டு சொந்தக்காரர் ( House Owner ) பையன் ஒட்டுக்கேட்டுவிட்டு அவன் அக்காவிடம் சொல்லியிருக்கிறான் (அந்தப் பெண் சுமாராகத்தான் இருக்கும் ) ஒரு முறை நேரில் பார்த்தப் போது அங்கிள் உங்களுக்கு ’தமிள்’ வராதா என்று கேட்டது நக்கலாக .என் தலைவிதியை என்ன சொல்வது? 

சரி நான் அடுத்தவர் காதல் கடிதம் படித்த மோசமான பெருமையைப்பற்றிச் சொல்லவா இந்தப் பதிவுக்குள் வந்தேன் அதுவும் பதிவின் தலைப்புக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கும் விசயத்திற்கும் சம்பந்தமில்லாதது போலப் படுகிறதா ? இல்லை .

நண்பர் தேவனுக்கு உமா எழுதிய அத்தனை கடிதங்களும் ஒரு நாள் திருடு போய் விட்டது .திருடுப் போய் விட்டது என்பதை விடத் தேவனின் நெருங்கிய நண்பரால் திட்டமிட்டுக் களவாடப்பட்டு விட்டது ! 

 அது ஏன் என்பதைச் சொல்ல நேரம் போதவில்லை.அடுத்த பதிவில் தேவனின் அந்த நண்பர் ஏன் களவாடினார் என்பதைச் சொல்ல வருகிறேன் .     


செவ்வாய், 17 நவம்பர், 2015

என்றென்றும் அன்புடன் ,



அப்பாடா என்று புது அலுவலகம் வந்து உட்கார்ந்து விட்டோம் .அற்புதமான சூழலில் இன்னும் உற்சாகமாகப் புது விசயங்கள் எழுதுவதற்கு ஆர்வம் பிறக்கிறது.பொதுவாய்த் தேர்வுக்கு மிகக் கவனமாகப் படிக்கும் போதுதான் நிறையக் கவிதை எழுத ,கட்டுரை எழுதப் புத்திப் போகும்..அப்படித்தான் தொடர்ந்து வேலை இருக்கும் போது நிறையவிசயங்கள் வந்து போனது. 

குறிப்பாய் , 

நடனமாது மனது பற்றி.. 

கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் மட்டுமே விரும்பிய கவிஞர் சூர்தாசர் அருமையான ஒரு பக்திப் பாடலான ”பிரபு எந்தன் குறைகளைமனதிற்கொள்ளதே”என்றுத் தொடங்கும் பாடலை கேத்ரி மன்னரின் அரசச் சபையில் “அம்மா! என் கண்களைத் திறந்துவிட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?“ என்று சுவாமி விவேகானந்தரை கண்ணீர் மல்கக் மன்னிப்பு கேட்க வைத்த அந்த நடனமாது மனது பற்றியும் , 

ஆண் - பெண் மனநிலை

உலகில் எப்போதும் சுவாரசியமாகவே இருக்கும் ஆண் - பெண் மனநிலைகளைப் பற்றிச் சமீபத்திய நீயா – நானாவின் அழகியல் பற்றிய ஆய்வும்,இயற்கையிலேயே 
ஆண்-பெண் மூளை அமைப்பை இந்தியாவைத் தவிர 45 நாடுகளுக்கு மேல் நேரடியாக ஆய்வு செய்து எழுதிய ஆலன் & பார்பரா பீஸ் கட்டுரைகளும் , 

மனதில் எண்ணம்


எங்கிருந்து மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படாத ரோண்டா பைரனின் ( Rhonda Byrne - The Secret ) ”ரகசியம்” ( அதன்தொடர்ச்சியாய் வந்த .சக்தி .மாயாஜாலம் போன்ற புத்தகங்கள் ) ஏன் விற்பனையில் சக்கைப் போடு போடுவதையும், 

ஊனமுற்ற மனம்

எங்கள் அம்மாவைத் தொடர்ந்து அப்பாவின் மறைவின் வலியை சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல் ஊனமுற்ற மனதோடு உலவிக்கொண்டுஇருப்பதுவும் 

என எழுதப் பல விசயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .. 

அதில் ஒன்று திருப்பூரில் எனக்கு இருக்கும் இரண்டு நண்பர்களில் இரண்டாமவர் ராஜதுரை .அவரின் கல்யாணம் பொள்ளாச்சியில் . 


இப்போது இருக்கும் என் கம்பெனியில் அவர் ’சீனியர் மெர்சண்டைசராக’ இருந்தவர் அவர். ஒட்டன்சத்திரம் அருகில்தான் அவருக்குச் சொந்த ஊர்.எதையும் ’டேக் இட் ஈசியாய்’ எடுத்துக்கொள்ளும் கொள்கையுடையவர் அவரை விட அவர் அப்பா மிகச் சுவாரசியமானவர் .விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்ற என் அடுத்த ஜென்ம ஆசையை இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு விவசாயி .அவர்கள் தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் கணக்கன் பட்டி .இரண்டு முறை அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறேன் .முற்றிலும் வேறு தனித்த ஓர் உலகமாகப் படும் இடம் .அங்குச்செல்ஃபோன் எப்போதாவது வேலை செய்யும் .வெகுதூரம் வண்டிப்பாதைதான்.மிகுந்த வயல் பரப்பு மட்டுமே என்பதால் அது நகர மன அழுதத்திலிருந்து வெகு தூரம் தள்ளிச் சென்ற மிக விடுதலைப் போல உணர்வைத் தரும் இதல்லாமால் அங்குக் காட்டு யானைகள் வந்து போகும் இடம் அவர்கள் தோட்டத்தைப் பலமுறை துவம்சம் செய்துஇருக்கிறது .ஒருமுறை நாங்கள் போன போது அதிகாலை நான்கு மணிக்கு யானையின் பிளிறல் பயமுறுத்த்த்தி இருக்கிறது ! .அவர் அப்பா சுவாரசியமானவர் என்று இங்குச் சொன்னதற்குக் காரணம் வேறு. 

கண்டப் பயலுகச் சகவாசம் !

முதல் முறை ஊருக்கு நண்பர் ஆதியுடன் கண்ணக்கன் பட்டி போயிருந்த போது வீட்டுக்கு அடுத்தச் சாலை வீட்டில் ராஜதுரையும் அவர் அப்பாவும் முழுப்பாட்டிலைக் காலி செய்து கொண்டு இருந்தார்கள் . குடிப்பது தவறுதான் ஆனால் அதை அப்பா ஊற்றித்தர அம்மா கறி சமைத்துத் தட்டில் சுடச் சுட படைப்பதுவும் இது வரை எந்த வீட்டிலும் நான் பார்த்தது இல்லை.இங்கு யார் போனாலும் அவருக்கும் ஒரு கோப்பைக் காத்து இருக்கும் .இதற்கு நண்பரின்அப்பா சொல்லும் கரணம் என்ன தெரியுமா?என்னுடன் அவன் குடிப்பதால் ஒரு பொறுப்பு வருவதாகவும் கண்டப் பயலுகச் சகவாசம் குறைவதாகவும்சொல்கிறார். சரிதான் ! 

பொள்ளாச்சிக்குக் குறைந்தது ஒன்னறை மணி நேரப் பயணம்.போகும் போது படிக்க ஒரு பாலகுமாரன் பழைய அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டேன்.ஒரு வேளை நின்ற படியே பயணம் என்றால் அதற்கு ஹெட்ஃபோன் எடுத்துக்கொண்டு புஷ்பாத் தியேட்டர் நிறுத்தத்தில் மத்திய பேருந்துநிலையம் செல்ல நகரப் பேருந்ததில் ஏற முதல் படியில் கால் வைக்கிறேன் .உள்ளுகுள்ளிருந்து ஒரு கை என் தோளில் அழுத்தமான பிடிக் கவ்வியது.சுதாரிபதற்குள் யாரோ மனிதர் என்னைச் சரித்து விட்டு கீழே இறங்கினார்.உள்ளே ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னைத் தள்ளி விட்டு இறங்கியமனிதர் டாஸ்மாக் அனுதாபி போல !.அரசின் இந்த வருட இலக்கை அடைவதற்கு உதவக் காலை ஏழுமணிக்கே தொடங்கிவிட்டார் போல ! . 

டிக்கெட் எடுத்து விட்டுப் புத்தகத்தை எடுத்தேன் .பாலகுமாரனின் - ”என்றென்றும் அன்புடன்” பல்சுவை மாத இதழில் 1997ல் எழுதிய 155 பக்க நாவல்.பொதுவாகவே பாலாவின் கடிதங்களில் அவர் கையெழுத்துக்குக் கீழ் கற்றுக்கொண்ட இந்த என்றென்றும் அன்புடன் வரிதான் என் எல்லாக்கடிதங்களிலும் பாலாவிடம் கற்றுக்கொண்ட இன்றும் தொடர்கின்றன.ஒருக் கடிதம் முடியும் போது இந்த வசீகராமான வார்த்தையை வெட்கமில்லாமல்காப்பியடிக்கக் கற்றுக்கொண்டேன் நான் .அப்போதெல்லாம் என்னைப் பாலகுமாரனின் நிழல்போல நினைத்துக்கொண்ட காலம் ! அவர் எழுத்தை மறுபேச்சிலாமல் பின்பற்றும் தருணங்கள் அவை.இப்போது மீண்டும் அந்த நாவலைப் படிக்கிறேன்.அவரே அந்த நாவல் தன் சொந்தக் கதை என்பதாகச்சொல்லியிருப்பார். 

அடங்காத வெறி !
அந்தக் கதை சொன்ன இரண்டு விசயத்தை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது .ஒன்று அவர் இரண்டாவது மனைவியை வீட்டுக்குள் கொண்டுவர எழுதும் கதைக் கோணத்தில் தன்னைத் தன் புத்தியைப் பல கோணத்தில் ஆய்வு செய்துகொண்ட நுட்பம்.(எனக்கு இந்தப் புத்தகம் எப்படி அப்போதுபுரிந்தது என்பது ஆச்சர்யமக இருக்கிறது ) அடுத்தது அவருக்கு இருந்த ராஜராஜசோழனின் வாழ்வில் மேல் இருந்த அடங்காத வெறி ! அதுவே 2010 ல் ஆறுபாகம் கொண்ட 2733 உடையார் நாவலின் ஆணிவேர் இதைத் தினமலர் இணைய இதழில் அவரே சொல்லியிருக்கிறார்


கேள்வி : சோழதேசம் மீது ஏன் இந்தப் பாசம்? 
பாலகுமாரன் பதில்”உண்மைதான். அதுக்குக் காரணம் இருக்கு. கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுனத் தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தினநிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான்ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்தக் கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழதேசத்தின் மீது எனக்குக் காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களைத் தேட ஆரம்பிச்சேன்.சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவுப் பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறதுக் காதல்அல்ல...வெறி!” 
பாதி நாவல் படிப்பதற்குள் பொள்ளாச்சி வந்து விட்டேன். 


அப்போதுதான் ஓர் ஆர்வக்கோளாரில் ராஜதுரைக் கல்யாணப் பத்திரிக்கை வைக்கிறேன் என்று சொல்லியும் வேண்டாம் என்று வசனம் பேசியதன்பிரச்சனையைச் சந்தித்தேன் மண்டபத்தின் பெயர் என்ன எங்கு இருக்கிறது ? மாப்பிள்ளைக்கே தொடர்புக் கொண்டேன்.மறுமுனையின் மாப்பிள்ளைத் தோழர்ச் சரோ பேசினார் .தொழிற்பேட்டை அருகே உள்ள சரோஜினித் திருமண மஹால் எனக் கேளுங்கள் நடந்து வந்து விடலாம் என்றார்.எதற்கும்கேட்போம் என்று அருகிலிருந்த பேருந்து நடத்துனரைக் கேட்டேன் .எந்தத் தொழிற்பேட்டை உடுமலைப்பேட்டை சாலையில் இருப்பதா என்று பதிலுக்குப்பயமுறுத்தினார்.விவரம் சொன்னேன் .அதுவா அது உடுமலைச் சாலையில் மின்நகரம் நிறுத்தம் என்று கேளுங்கள் என்றார் .நடந்து போகலாமா என்றஎன்னைப்பார்த்துச் சிரித்தார்.மூன்றுக் கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டுதல் இருக்கா ? .அது சரி . சத்தமில்லாமல் நகரப் பேருந்தில்ஏறினேன்.மின்நகரம் தாண்டியும் நடத்துனர் எதுவும் பேசவில்லை .சந்தேகப்பட்டுக் கேட்டதற்கு அடுத்தம் நிறுத்தம் என்றார்.மண்டபம் பேரையேகாணோம்.அதற்குப் பதிலாக வால் புட்டிப் பெயிண்ட் விளம்பரம் மட்டுமே பெரிதாக இருந்தது .

பெண் தனியார் பள்ளியில் ஆசிரியை என்பதால் கல்யாண மண்டபதிற்குப் பதிலாகப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து விட்ட உணர்வு வரவைத்துவிட்டார்கள் . சமீபத்திய தீபாவளி வெளியீடு ஆடைகள் புது மடிப்புக் கலையாமல் ஆசிரியைகள் வலம் வந்தார்கள் . மாப்பிள்ளை ராஜதுரையுடன் படம்எடுத்துக்கொள்ள மேடையேறியப் போது என்னைப் பெண்ணிடம் இவர் என் அப்பா மாதிரி என்றார்.அதற்கு அவர்கள் என்ன வயசு குறைவா தெரியுது என்றார் .அதற்கு என்ன பதில் சொன்னார்த் தெரியவில்லை ! 

அங்கு வந்த இன்னும் சில நண்பர்களுடன் சாப்பிடப் போனோம் . அங்குச் சில ஆசிரியர்கள் மாணவர்கள் .வயது மூத்தவர்கள் விரல் விட்டுஎண்ணிவிடலாம்.இளமைப்பட்டாலம் எங்கும் நிறைந்து இருந்தது.எதுச் சொன்னாலும் க்ளு க்ளுக் என்ற சிரிப்பு வெடிகள் அமர்க்களப்பட்டது.மொத்தம் 50இருக்கைகள் மட்டுமே இருந்ததால் ஏற்கனவே சாப்பிட்டவர்கள் இலை எடுப்பதற்குள் உட்கார வேண்டிய நிர்பந்தம். 
அங்கு சில ஆசிரியைகள் நான் பார்த்த உடனே இவர் அறிவியல் பாடம் எடுப்பவர் இவர் கணக்குப் பாடம் எடுப்பவர் இவர் வரலாறுப் பாடம் எடுப்பவர்என்றதும் உடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நண்பர் எப்படிச் சொல்கிறீர்கள் என்றார் ஆச்சர்யத்துடன் . காரணம் சொன்னதும் சாப்பிட்ட உணவு மண்டையில் புறையேறச் சிரித்தார். 

விடைபெற்றுப் பேருந்து ஏறியதுவும் மீண்டும் என்றென்றும் அன்புடன் பயணம் தொடர்ந்தது. வீடு வந்துதான் முற்றியது. 

அந்த நாவலில் வரும் ராகவனும் நானும் சில விசயத்தில் ஒரே குணம் போலத் தோன்றியது .ஆமாம் .இதுதானே பாலகுமாரன் வெற்றி. 

திங்கள், 12 அக்டோபர், 2015

பிஞ்சுக்கால்களின் முள் பயணங்கள் !



குழந்தைகளுக்குத் தவறான விசயங்களைக் கற்பிப்பதில் நம்மைவிடவும் புத்திசாலிகள் யாரும் இருக்க முடியாது .பால் குடி மாறாத போதே பள்ளிச்சேர்க்கை விண்ணப்பப் படிவம் நிரப்பி வைத்துக் கொள்கிறோம். வயசு மூன்றரை வருகிறதோ இல்லையோ விஜயதசமிக்கு “ அ “ போட, அழைத்துக் கொண்டு போய் அடைத்து விடுகிறோம்.அப்புறம் தொடர் ஓட்டம் ... முதலில் நல்ல மார்க் எடுத்தால்போதும் என்போம் .பிறகு வகுப்பில் முதலாவதாக வரவேண்டும் என்போம் அப்புறம் மாவட்ட ,மாநில அளவில் இப்படியே விக்கிரமாத்தியன் கதை போல  கட்டளைகள் நீண்டு கொண்டே போகிறது  அவர்களுக்குக் கொடுத்து அனுப்பும் மதியம் உணவை அமுக்கி அனுப்புவதை விட அவர்கள் புத்திக்குள் வழிய வழிய ஏன் வழிந்து வந்த பிறகும்அமுக்கிக் கொண்டு இருக்கிறோம் கேட்டால் நாங்கள் கஷ்டப்பட்டோம் எங்கள் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற புலம்பல் அதோடு மட்டுமில்லைஇன்னொரு பகவத்கீதைப் போல நாங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம் அவனைப் படிக்க மட்டும்தானே சொல்லுகிறோம் என்ற புலம்பல்பட்டியல் நீள்கிறது ..பெற்றோர்களை உங்கள் படிப்பு என்ன என்றால் மூனாம் கிளாஸ் என்கிறார்கள் .உங்களைப்போல நிறம் இருக்க வேண்டும் ,கலர் இருக்க வேண்டும் ,பல்லு மூக்கு எல்லம் அப்படியே இருந்தால் சந்தோசப்படுவீர்கள் ஆனால் அறிவின் வளர்ச்சியில் ஐன்ஸ்டீன் போல இருக்க வேண்டும் என்றால் அந்தக் குழந்தை என்ன செய்வான் ?அப்படியே பார்த்தால் கூட ஐன்ஸ்டீன் கூடப் பள்ளியிலிருந்து ‘எதற்கும் லாயக்கில்லாத பிள்ளை’ என்றுவெளியேற்றப்பட்டவர்.

நண்பர் சுகுமாரிடம் பேசிக்கொண்டு இருந்த போது , நாம் பிள்ளைகளாக இருந்துதான் பெரியவர்கள் ஆனோம் .இது நாம் பெற்றோர் ஆன பிறகு  அடிக்கடி மறந்து போகிறது .குழந்தைளுக்குன்னு ஒரு உலகம் இருக்கு அதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது .நாமெல்லாம் முடிந்த அளவுக்கு படித்தோம் இப்போ நாமும் ஒரு இடத்தில் இல்லையா ? அவர்களை தொந்தரவு படுத்தாமல் விட்டாலே அவன் வழியை தேர்வு செய்து விடுவார்கள். அப்போது போய் உதவினால் போதும்  என்றார். அது மிகவும் சரிதானே ?  இப்படி நாம் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மன அழுத்தம் கொடுக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போனால்  பின்னாளில் புதுவித நோயாளிகளாக இந்த சமூகத்தில் வலம் வருவார்கள் அவ்வளவுதான் நடக்கும் !

மதிப்பெண் பட்டியலில் ரேங்க் பார்த்துக் கையெழுத்தும் போடும் நாம் பையன் ஒழுக்கம் பற்றியோ ,உடல் நலம் பற்றியோ. என்றாவது அதில் குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று கவலைப்பட்டு இருப்போமா ? சக மாணவர்களுடன் அவர்கள்  வைத்து இருக்கும் நட்புணர்வு எப்படி இருக்கிறது என்று என்றாவது பார்த்து இருப்போமா ? அவர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் , எப்படி விளையாட வேண்டும் ,விளையாட்டில் அவர்கள் விருப்பம் எது ? எதாவது தெரியுமா ? நம் வீட்டில் ஒரு புது ஜீவன் வளர்கிறது ஆனால் அதற்கு அதன் விருப்பம் எது என்று தெரியாமல்.இது நல்லதா ?நம் காரணங்களை அவர்கள் மேல் திணித்து எதிர்மறை எண்ணங்களின் விதைகளை அவர்களுக்குள் ஆழமாக விதைப்பதன் மூலம் வாழ்வே கஷ்டம் என்ற மன உணர்விலேயே அவர்கள் முள் செடியாய் வளர்வது அழகா?

இது பத்தாதுன்னு இப்போது இன்னொரு அபாயம் பரவி வருகிறது யோகா என்ற பெயரைச் சொல்லித் தனியார் பள்ளிகளில் மிகப்பெரிய ஸ்டால் போடாத குறையாகக் கூவிக் கூவி வியாபாரம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். ஆயிரம்கொடு ,ஐநூறு கொடு என்று பிள்ளைகளை  நச்சத் தயார் செய்து அனுப்பிவைக்கிறார்கள்  .

போன வாரம் என் பையன் இப்படித்தான் யோகாவுக்கு நான் தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறேன் .வெளியில் போட்டி வைத்து இருக்கிறார்கள் பணம் வேண்டும் என்றான் நாழாவது படிக்கும் என் பையன் பள்ளியில் பணம் கட்டப் போனால், பணத்தை வாங்கிய பிறகு  இந்த போட்டிக்கும்  எங்களுக்கும் எந்தச் சம்ப்ந்தமும் இல்லை.நீங்கள்தான் ஞாயிற்றுக்கிழமைக் குறிப்பிட்ட இடத்திற்குக் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றார்கள்.

போட்டி நடக்கும் இடத்திற்கு  பையனைக் கூட்டிப் போனால் எந்த ஒரு சரியான நிர்வாக ஒருக்கிணைப்பும் இல்லை . ஒரே கும்பல் மொச்சுகிறது கும்பலுக்கிடையில் மூன்று மேடை அதில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை ஒரு மேடை .நான்கு முதல் எட்டாம் வகுப்பு , அடுத்து ஒன்பது முதல் பனிரெண்ட்டாம் வகுப்புவரை . ஒவ்வொருமேடையிலும் மூன்று நடுவர்கள் கையில் மதிப்பெண் போட்ட பிரிண்ட்டடுப் பேப்பரை நடுவர்கள்  தங்கள் மதிப்பெண்ணைத் தூக்கிக்காட்டுவார்கள் பக்கவாட்டில் அவர்கள் ஜூனியர்கள் ( மாஸ்ட்டர்களின் மாணவர்கள் ) குறித்துக் கொள்வார்கள் .மேடையை விட்டு இறங்கியவுடன் ஒரு மெடல் ,சான்றிதல் தருவார்கள்  வாங்கிய பணத்துக்கு மனசாட்சிக்கு பதில் சொல்ல ஆறில் ஒரு பங்குச் செலவுசெய்து விட்டார்கள் .தேர்வு செய்யப்பட்டவர்கள் பின்னர் அழைக்கப்படுவார்கள் என்றார்கள் ( ஒரு வேளை விவேக் பாணியில் ’பின்னே காணும்’ என்பது போலவா? தெரியவில்லை  )

யோகா என்ற பெயரில் யோகா மாஸ்டர்கள் அசோசியேசன் மற்றும் பள்ளிகள் மூலம் ’அன்கோ’ போட்டு யோகாவை வளர்ப்பதாக சொல்லி அவர்கள்தான்  அமோகமாக வளர்கிறார்கள் அதன் மூலம் வரும் தொகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இது பற்றி எனது பையனுக்குப் பிரத்தியோக யோகா வகுப்பு எடுக்கும் ஆசிரியரைக் கேட்டேன் . அது ஏமாற்று வேலை சார் .சம்பாதிக்க இது ஒரு புதுவழி .இனி இதெல்லாம் நம்பிப் பசங்களைக் கூட்டிட்டுப்போய்த் தான் தேர்வு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்தை விதைக்காதீர்கள் என்று எச்சரித்தார் . (அவரும் அந்த அசோசியேசனில் ஒரு முக்கிய உறுபினர்தான்)

சரி அப்படியானால் யோகா வேண்டாமா என்ற உங்கள் கேள்விக்கு  ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதிலைப் படித்தேன்  இந்த மாதிரி விசப்பரிட்சைகளைத் தவிர்க்க இதை தெரிந்து கொள்ள வேண்டும் . ( நமது வாழ்வில் யோகா என்ன செய்கிறது என்பதான கேள்விக்கு அற்புதமான ஒரு புத்தகம் படித்து வருகிறேன் - விரைவில் அதையும் பதிவு செய்ய வேண்டும் )

கேள்வி: குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து யோகாசனங்கள் கற்றுக் கொடுக்கலாம்?


சத்குரு: எட்டு, ஒன்பது வயது வரை நாங்கள் குழந்தைகளுக்கு ஆசனங்கள் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்குப் பதினான்கு, பதினைந்துவயது ஆகும் வரை நாம் எல்லா ஆசனங்களையும் கற்றுக் கொடுப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு எல்லாயோகாசனங்களையும் கற்றுத் தருகிறார்கள். பத்மாசனம் போன்ற ஆசனங்களையெல்லாம் குழந்தைகளுக்கு, அவர்களுடைய எலும்புகள் இன்னும்வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கற்றுக் கொடுத்தால், அவர்களுடைய கால்கள் வளைந்து போவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் அதையெல்லாம்கற்றுக் கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆக வேண்டும். அவர்களுடைய எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைய வேண்டும்.அதன்பின்தான், அவர்களுக்கு ஆசனங்கள் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஈஷா யோகாப் பயிற்சி வகுப்பை நாம் ஏழிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தினாலும், அதில் கற்றுத் தரப்படும் ஒன்றிரண்டு ஆசனங்கள் மிக, மிகஎளிமையானவை. ஆனால் உங்கள் குழந்தைகள் யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எல்லாஆசனங்களையும் கற்றுத் தர ஆரம்பித்தால், அவர்கள் வளைந்த கால்களுடன், சிதைந்த மூட்டுகளை உடையவர்களாக ஆகிவிடலாம். ஏனென்றால்குழந்தைகளுடைய எலும்புகள் இன்னும் வளர்ந்துக் கொண்டும், உருவாகிக் கொண்டும் இருக்கின்றன. அந்தச் சமயத்தில் அவற்றின் மேல் அதிகமானஅழுத்தம் கொடுத்தால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
( http://tamilblog.ishafoundation.org/kundaliniyai-parisothikka-ninaithal/)


சனி, 10 அக்டோபர், 2015

மருத்துவமனைகளும் இன்னொரு ஆலயங்களே !



ரொட்டித்துண்டு 5 ரூபாய் !

பிரசவ வலியுடன் தவித்த மனைவியை இரவு பத்து மணிக்கு மேல் அவசர அவசரமாக அப்போதைக்குக் கிடைத்த ஆம்னி வேனில் அழைத்துகொண்டு அந்தத் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை ( ஈ.எஸ்.ஐ - Employees' state Insurance Corporation of India ) நோக்கிப் போய்க்கொண்டு இருந்தோம்.மனைவியுடன் வந்த பாட்டி பனிக்குடத்திலிருந்து நீர் வரத்தொடங்கி விட்டது கொஞ்சம் வேகமாகப் போங்கள் என்று எச்சரிக்க இன்னும் வேகமெடுத்தோம் .ஆம்னி வேன் ஓட்டுனர் ஐம்பது வயதைக் கடந்தவர் என்பதால் வேறு எதுவும் சொல்ல எனக்குத் தோணவில்லை.புரிந்து கொண்டு செயல்பட்டார். 

பனிரெண்டு மணிச் சுமாருக்கு மருத்துவமனைப் போய் விட்டோம் .பதிவுச் சீட்டு வாங்கி வரச்சொன்னார்கள் .ஓடினோம் .பதிவுச் செய்யும் அறைக்குப் போகும் வாசல் கதவு மூடியிருந்தது.தட்டியபோது ’கோன் ‘ என்று ஹிந்தியில்  அதட்டலாய் ஒரு குரல் வந்தது.நல்ல வேளை என்னுடன் வந்த நண்பனுக்கு ஹிந்தி மாலத்தெரிந்ததால், சமாளித்துப் பதிவு செய்து அங்கிருந்துத் தப்பித்து மருத்துவமனைக்குள் ஓடவும்,எதிரே பாட்டி வரவும் சரியாக இருந்தது ... 

இங்கு  இரவுப் பணிக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டும்தான் இருக்காங்களாம்.அதனால் அவசரமாப் பார்க்கணுன்னா அரசுப் பொது மருத்துவமனைக்கு எழுதிக் கொடுக்கிறார்களாம் அதுவும் உடனே அறுவைச் சிகிச்சைக்குச் சம்மத்தித்தால் எழுதிக்கொடுப்பதாகச் சொல்கிறார்கள் என்ன செய்யலாம் ?என்று பதஷ்டமாய்க் கேட்டார்கள் மனைவியின் பாட்டி தர்மாம்பாள். அவர்கள் பேத்திமார்க்களோடு சேர்த்து நூற்றுக்கு மேற்பட்ட சுகப் பிரசவம் ஆவதற்குத் துணைப் போனவர்கள் .அதுமட்டுமல்ல வேறு வழியில்லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களின் அவஸ்தை நன்கு உணர்ந்தவர்கள் .எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை அவர்களிடமே ,என்ன செய்யலாம் என்றேன் .கொஞ்ச நேரம் பார்ப்போம் அவள் தைரியமா ( மனைவி ) இருக்கா,ஒரு வேளை வலி வந்தால் எழுதி வாங்கிட்டுப் போயிறலாம் ஆனால் அதற்குள் பக்கத்தில் கார் எதுவும் இருக்கான்னுப் பார்த்து வைக்கச் சொன்னார்கள். ( தர்மாம்பாள் பாட்டி பற்றிய இன்னொரு பதிவு http://myowndebate.blogspot.in/2013/03/blog-post_9.html இருக்கிறது. )

இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் வெளுத்தும் வாங்கும் காற்றும் ,அது இல்லாத வேளையில் தாக்கும் கொசுக் கூட்டதிற்குப் பதில் சொல்லுவதிலேயும் நேரம் கரைந்து கொண்டு இருந்தது .பாவம் . கூட வந்த நண்பன் சங்கர்தான் , அங்குக் கிடந்த ஏதோ ஒரு செய்தித் தாளை விரித்துச் சுருண்டுப் படுத்துக் கிடந்தான்.அலுவலகத்தில் அவனோடு சண்டை நிறைய இருக்கும் .ஆனால் தூங்கும் போது யாரைப்பார்த்தாலும் பாவமாக இருக்கத்தான் செய்கிறது .காலை ஆறு மணிக்குள் மூன்று முறைப் பாட்டி வெளியே வந்து உள்ளே வேலைப் பார்ப்பவர்களுக்காகக் காஃபி வாங்கிவரச் சொன்னார்கள்.அப்போதெல்லாம் மனைவி பற்றி விசாரித்தபோது  தூங்கிக் கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். 

காலை 10:20 க்கு குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம் .அந்தச் சந்தோசம் ஒரு நாள் நீடித்தது .அடுத்த நாள் மதியம் வரை குழந்தைச் சிறுநீர்க் கழிக்கவில்லை செக்கப் வந்த மருத்துவரிடம் எதேச்சையாகக் கேட்டப் போது இதை ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டார்.அடுத்த நிமிடம் இன்குபேட்டரில் வைக்கச்சொல்லி எழுதிக் கொடுத்தார்கள்.இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பு இல்லை என்று எழுதி நிரப்பிய ஃபாரத்தில்  கையெழுத்துக் கேட்ட போது, வலியோடு போட்டேன் .

அடுத்த நாள் காலை திருப்பூர் வந்து ,மருத்துவமனை  கொஞ்சம் தாமதமாகப் போக, மனைவிக்குப் பாத்ரூம் போகத்தரும் வெண்ணீருக்காக இருபது ரூபாய்ப் பணம் கேட்டு இருக்கிறார்கள் அங்கு பணிபுரிபவர்கள் .சில்லறை இல்லை என்று சொன்னதற்காகத் திட்டிவிட்டு, பிரசவமானவர்களுக்குத் தரும் கோதுமை ரொட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டர்களாம் . 

ஆண்டொன்றுக்கு ஈ.எஸ்.ஐ தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் மொத்தக் காப்பீட்டுத் தொகை வருமானம் 14,000 கோடியாம் .

ஆனால் ஒரு ரொட்டித்துண்டு 5 ரூபாய்

மருத்துவச் சேவைப் புரிபவர்கள் !

கடந்த வாரம் சனிக்கிழமை மாமானார் ( மனைவியின் தந்தை ) ஒரு சாலையில் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டதால், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.எனக்கு இந்த விசயம் சொன்னவுடன் நான் விசாரித்த அளவில் அந்த மருத்துவமனை சிகிச்சைப் பார்ப்பதை விட  மிக மோசமாகவும் பில்லை போடுவதில் மட்டும் கவனம் கொள்பவர்கள் என அறிந்து முதலுதவியோடு வெளியே வந்து குடும்ப மருத்துவரிடம் போன போது ,அடிபட்டப் போது மூன்று முறை வாந்தி எடுத்தார் எனச் சொன்னதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் நல்லது. அரசு மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் இரவு பிரச்சனை ஏற்பட்டால் எப்படிச் சமாளிக்க முடியும் என்றார் .உடனே அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப் போனோம் அங்கு உடனே பார்க்க முடியாது வேண்டுமானால் எழுதி வாங்கிக் கொண்டு கோவைச் செல்லுங்கள் என்றார்கள் ஏற்கனவே இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது .இங்கே பார்த்துக் கொள்கிறோம் .என்று சேர்த்தோம் . 

காலைதான் தெரிந்தது. ஞாயிறு ஸ்கேன் எடுக்கமாட்டார்களாம் .விடுமுறையாம். காத்து இருந்தோம் அடுத்த நாள் காலை ஸ்கேன் எடுக்கப்பட்டது .அதை வார்டுக்கு வரும் மருத்துவரிடம் கேட்டப் போது பொறுங்கள் இதற்கு வேறு ஒரு மருத்துவர் வருவார் என்று கழற்றிக்கொண்டார் அங்கு இருந்த நர்ஸ்களிடம் கேட்டப் போது வருவார் காத்து இருங்கள் என்றனர் அவர்களும்.  கடவுளைக் கேட்டால்கூடச் சொல்லியிருப்பார்கள் போல ! ஆனால் நடந்தது வேறு .அந்த நாள் மட்டுமல்ல அடுத்த நாள்  மதியம் வரை கூட யாரும் வரவில்லை .வேறு வழியில்லை டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு ,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கிளம்பினோம். 

அரசு மருத்துவமனை வராண்டா விட்டு  வெளியே வரும்போது அங்கு ஒரு அறிவிப்பைப் பார்த்தேன் “ மருத்துவமனைப் பாதுகாப்புத் தண்டனைச் சட்டம் எண் 48/2008ன் படி, அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைப் புரிபவர்களுக்குக் காயம் ஏற்படுத்துதல், உடல், உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல், பணிச் செய்ய விடாமல் தடுப்பது, சொத்துகளுக்குச் சேதம் உண்டாக்குதல் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் ” 

அப்படியானால் நோயாளிக்கு யார் பாதுகாப்பும் இல்லையா ? 

இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ! 

எனக்கு ஒரு சமயம் சிறுநீர்த் தொற்று ( urinary infection ) ஏற்பட்டுவிட்டது .கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் முதலில் உடல் சூட்டினால் வந்ததாகக் கவனமில்லாமல் இருந்து உடல் சோர்வு மற்றும் குறையாத காய்சல் அதிகரிக்கவும் சந்தேகம் வலுக்கவே ஒட்டன்சத்திரம் - அம்பிளிக்கையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் அனுமதிக்கப்பட்டேன் . வழக்கம்போல ரத்த அழுத்தம் ,ரத்தம் மற்றும் சிறுநீர்ச் சோதனைக்கு அப்புறம் பிரத்தியோக மருத்துவரிடம் அனுப்பினார்கள் .அவர் உடனே பெட்டில் சேரச் சொன்னார்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைச் சிறுநீர்ப் பரிசோதனை நடந்ததது .காய்ச்சல் நின்றபாடில்லை. இரவு அப்பாதான் கூட இருந்தார் எனக்கு நடக்கும் தொடர்ச் சோதனை மற்றும் குறையாத காய்ச்சலால் லேசாய் அப்பாவுக்குப் பயம் வரத் தொடங்கி விட்டது . 

காலை வந்த முதல் வேளையாக என் அறைக்கு வந்து மீண்டும் பரிசோதித்த மருத்துவர் முற்றிலுமாக அனைத்து மருந்துகளையும் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டார். மதியத்திற்குள் மூன்று முறை என்னை நேரில் அவரே வந்து சோதித்தார் .அவர் முகத்தில் ஏதோ ஒரு கேள்வி இருந்தது .அப்பா அவரிடம் கேட்டே விட்டார்.சார் என்ன பிரச்சனை என்று . ஒரு நிமிடம் அப்பாவின் முகத்தைப் பார்த்த அவர் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் .இந்தத் தொற்றுக்கிருமியால்தன் இந்தப் பாதிப்பு என்பதைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்த அளவு போராடிக்கொண்டு இருக்கிறேன்.நீங்கள் பயப்படாதீர்கள் என்று தோளில் கைவைத்து அப்பாவை பார்த்துச் சொல்லிவிட்டு  , என்னைப்பார்த்தும் பயப்படாதீங்கக் குணமாக்கிடலாம் என்றார் .நர்ஸ்களைக் கூப்பிட்டுச் சில மாத்திரைகளை இருப்பில் இருக்கிறதா எனக் கேட்க்க சொன்னார் .காய்ச்சல் கொஞ்சம் விடைபெற்றது.மெல்ல , மெல்ல  என்னுடைய உடல் உணர்வு  திரும்பத் தொடங்கிவிட்டது . 

மதியம் மூன்று மணி இருக்கும்.திடீரெனெ என்னை வந்து பரிசோதித்தவர் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்  இருந்தது , கையில் எழுதிக் கொண்டு இருந்த பேனாவுடன் அப்படியே வந்து விட்டார் போல ! .நர்ஸ்ஸ்ஸ் என்ற அழைப்பின் அழுத்தத்தில் ஒரு புது உற்சாகம் இருந்தது.என்னைப் பெயரைச் சொல்லி அழைத்து , நீங்க கவலைப்படாதீங்க நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம் என்றார் .அப்பாவிடம் , உங்க மகனுக்கு ஒன்னுமில்லை காலைல நீங்க அழைத்துச் செல்லலாம் என்றார் மீண்டும் . ஏற்கனவே கொடுப்பட்ட மருந்துகள் திருப்பிப் பெற .நர்ஸ்களிடம் உத்தரவிட்டார். அப்பா சந்தோசமானார் .

சொன்ன மாதிரி மதியம் இரண்டு மணிக்கு அறையைக் காலிசெய்துவிட்டு இரண்டரை நாள் சிகிச்சைக்கும் தங்கியிருந்ததற்கும் சேர்த்து ஐந்தாயிரம் பில் கொடுத்தோம். மருத்துவர் அறையில் அப்பாவுடன் போனேன்.சில நாளுக்கும் மட்டும் மாத்திரைக் கொடுத்தார்.சத்தான ஆகாரம் எது என்ற ஒரு பட்டியலைத் தந்தார்.  

விடைப் பெறும்போது சார் இது எதனால் வந்தது என்று அவரிடம்
கேட்டேன் .பதில் சொல்லாமல் அப்பாவைப் பார்த்தார் .ஐயா நீங்க ரெண்டு நிமிசம் வெளியே இருங்க என்றார் அப்பா வெளியே போன பிறகு , இது மூன்று காரணத்தால வரும் .தவறான தொடர்பு , பொதுக் கழிவரை உபயோகப்படுத்துவது ,மற்றவர்கள் உபயோகித்த உள் ஆடைகளை உபயோகிப்பது .நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டீர்கள் என்பது உங்களிடம் கேட்க வேண்டும் என்று நிறுத்தினார் .அப்போதுதான் எனக்கு அது ஞாபகத்துக்கு வந்ததது.அலுவலகம் தொடர்பாகப் பலமுறை கோவைச் சென்று வந்தேன் .அப்போது பொதுக்கழிவறை உபயோகித்து இருக்கிறேன்.அதைச் சொன்னதும் இனிமேல் தவிர்த்து விடுங்கள் என்றார் .விடபெற்று வெளியே வந்தோம் . அப்போது எனக்கு உடல் அசதியாக இருந்தது .ஆனால் மனம் இன்னும் சில நம்பிக்கைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது .

அந்த மருத்துவமனையை விட்டு வரவேற்பு அறையைக் கடக்கும் போது அப்பா அங்கு இருந்த ஒரு வாசகத்தை காட்டினார். 

 ” நாங்கள் மருந்தளிக்கிறோம் இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ”. 

சமர்பணம் .

இது எனக்கான அனுபவம் மட்டுமே. எல்லோருக்கும் பொதுவானது அல்ல . எல்லோருக்கும் பொருந்தவும் வாய்ப்பும் இல்லை. மருத்துவம் தொழில் அல்ல சேவை .மருத்துவர்கள் நோயாளிகளின்  வாழ்நாளை அல்லது தலைவிதியை நிர்ணயிக்கும்  இன்னொரு  கடவுளர்கள் .இங்கு வெகு பல மருத்துவர்கள் தனது மருத்துவத் தொழிலைக் கடவுளுக்கு மேலாக மதித்து வருகிறார்கள் அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குடும்பத்தின்   பாதத்திற்கும் இந்தப் பதிவு சமர்பணம் .