புதன், 28 ஆகஸ்ட், 2013

பால்ய நட்பு


நாகராஜை சந்தித்து சுமார் 20 வருடங்கள் மேலாகிவிட்டது. இருந்தாலும் அவனை அடையாளம் காண்பது கஷ்டமாக இல்லை...


அவனும் நானும் எட்டாம் வகுப்பு ஒரு வருடம் சேர்ந்து படித்து இருந்தாலும்,  அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு நடிகை நடிகர்களுக்கெல்லம் சொல்லப்படும் கெம்ஸ்ட்ரி ,பாட்டனி உறவுக்கெல்லம்  மேலானது . மேலும் யார் வாழ்கையிலும் பால்ய நட்பு எப்போதுமே ஒருபரவசம்தான். அதர்க்கு தனி இடம் உண்டு .அதில் நாகராஜ் எனக்கு ஒரு ஆச்சர்யமானவன் .


          
நாகராஜுக்கு அப்பா இல்லை .ஒரு அக்கா, ஒரு தங்கை அவனுக்கு .பிராமணர் வகுப்பை சார்ந்த அவன் வீட்டுக்குள் யாரையும் அவ்வளவு சுலபமாக அனுமதிக்க மாட்டார்கள். 

அந்த வேறுபாடு அப்போது எனக்கு தெரியாது .இருந்தாலும் என் பெயரையும்  தோற்றத்தையும்  விடவும் என்னை நண்பன் என்பதால் அவன் வீட்டுக்குள் போராடி முன்னறை வரை அழைத்து சென்று இருந்தான் .அப்புறம் நடு வீடு வரை அவர்களே அனுமதித்தார்கள். என் மேல் ஏதோ எப்போதுமே ஒரு ஈடுபாடு இருந்ததால்தான் 20 வருடத்திற்க்கு பிறகும் கூட என்னை தேடிவந்து இருக்கிறான் .


வெகு ஆண்டுக்கு பிறகு சந்தித்ததால் ,நிறைய விசயங்கள் ஆர்வமாக பேசிக்கொண்டோம் . அக்காவின் திருமணம் அவசரமாக சொந்தத்தில் மும்பையில் உள்ள உறவினருக்கு பேசி முடித்து  கொண்டதால் எட்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்த கையோடு  வீடு காலி பண்ணி போனதால் சொல்ல முடியாமல் போய்விட்டார்களாம் . அவன் இப்போது மும்பைவாசி . இப்போது தங்கைக்கும் அடுத்த ஆண்டு திருமணமாம் .அது சம்பந்தமாக திண்டுக்கல் வந்ததாக சொன்னான் . 


பள்ளி ஆசிரியர்களை பற்றி பேச்சு வந்த போது ,இப்போது உள்ள ஆசிரியர்கள் பற்றி பேசினோம் .எங்கள் வகுப்பாசிரியர்கள் பலர் இப்போது அனேகமாக பணி ஓய்வு பெற்று விட்டார்கள் .இருந்தாலும் அவர்களை பற்றி அவன் நினைவு கூர்ந்தான். 

சொன்னால் யாரும் நம்ப மறுப்பார்கள் படிப்பில் அவனுக்கு பெரிதாய் ஆர்வம் இல்லை ஆனால் சகலவித விளையாட்டு போட்டிகளிலும் அவன் முன்னிலை .முக்கியமாக யாரும் கலந்து கொள்ளாத சர்க்கஸ் வித்தை போல நெருப்பு வளையத்திர்க்கு உள்ளே குதிப்பது ,வாயில் பெட்ரோலை ஊதி நெருப்பை வரவைப்பது போன்ற அப்போது பள்ளிகளில் அனுமதி மறுப்பு இருந்தாலும் நாகராஜால் அது மீட்டு எடுத்து பள்ளி CEO க்கள் முன்னே  நடைபெற்றது  நாகராஜுக்கு தனி பரிசு வழங்கப்பட்டது ..


இப்போது வாழ்க்கை பற்றி பேச்சு வந்தது .அதில் மும்பை சிவப்பு விளக்கு பற்றி அவன் சொன்ன ஒரு அனுபவம் என்னை புரட்டி போட்டது .நாயகன் கமல் போல ,முதன் முறையாக நண்பர்களுடன் சிவப்பு விளக்கு பகுதி நாகராஜ் மும்பை போயிருக்கிறான் .உடன் வந்த நண்பர்கள் இருவருமே மும்பைவாசிகள் .ஆனாலும் தோடா தோடாதமி(ழ்)ள் மால்பவர்கள்.
           
பெண்களுக்கான தேர்ந்தெடுப்பு  முடிவுபெற்ற பிறகு இவன் தேர்வு பெண்ணை காண்பித்து இருக்கிறான் .அந்த பெண்ணை பற்றி தனது நண்பர்களிடம் ஏதோ ஒரு வார்த்தை தமிழில் சொல்ல ,அதை கேட்ட அந்த பெண் நேரே வந்து இவன் தமிழ் ஆளான்னு  இவன் கூட வந்த நண்பனிடம் ஹிந்தியில் கேட்டுச்சாம் . அவன் ஆமாம் என்றதும்.அவனிடம் எனக்கு வர முடியாது  என்றதாம் . 

ஏன் கேட்டதற்கு அவள்
“நான் தமிழ் நாட்டுக்காரி, அங்கு  இருந்து வருபவன் எல்லாம் எனக்கு அண்ணன் தம்பிதான்”  என்று சொல்லி விட்டு உள்ளே போய்விட்டதாம் .




இதை சொல்லி முடிக்கும் போது  நாகராஜின் கண்ணில் நீர் தளும்பியது . அதற்க்கு பிறகு அந்த பக்கம்  இதுவரை அவன் மீண்டும்  போனதில்லை என்றான்.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகான எங்கள் இனிய சந்திப்பு ஏதோ ஒரு நிரடலுடன் முடித்தது.

சனி, 20 ஜூலை, 2013

ஒரு( விபரீத) ஆசை




         யாராவது உங்களிடம் (கொஞ்சம் மதிப்பாய்) நீங்கள் இந்த வேலைக்கு வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் எனும்போது  (நம்மால் முடியாவிட்டாலும் ) ஒரு பந்தாவுக்காகவாவது பிரபலமான ஒரு துறையில் இருந்து இருப்பேன் என்பதாக சொல்வது வழக்கம்தான்  .ஆனால் அப்படி நான்   சொல்லாவிட்டாலும் எனக்கு ஒரு ( விபரீத )ஆசை இருந்தது .அது நான் ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் ஆக வேண்டும் என்பது !
         நல்ல வேளை எனது நண்பர்கள் பலரின் குல தெய்வ வேண்டுதலால் !! அப்படி ஒரு துரதிருஷ்டம் இந்த உலகுக்கு ஏற்படவில்லை என்பது வேறு விசயமே .

        நான் புகைப்பட கலை பழக ஆசைப்பட்ட காலம் ஒயிட் அண்ட் பிளாக்கில் எடுப்பதானால் ஃபிலிம் செலவு குறைவு ஆனால் பிரிண்ட் காஸ்ட் அதிகம் .கலர் இதர்க்கு நேர் எதிர் என்பதால் நண்பரிடம் இருந்த ஒரு ஹாட் சாட் கேமிரா இருந்ததை  பழக கேட்டேன் .கொடுத்து விட்டார் .அதோடு அவர் சும்மா இருந்திருக்கலாம் .கொடுக்கும்போது இந்த கேமிராவில் ஐந்து அடிக்குள் மட்டும்தான் படம் எடுக்க முடியும் அதனால் நீங்கள் ஃப்ரேம் மட்டும் எப்படி எடுப்பது என்பதை இதில் கற்றுகொள்ளுங்கள் எனறார். உடனே ஒரு கருப்பு வெள்ளை ஃபிலிம் ரோல் மாட்டி எனது கற்பனை குதிரையை ,அமெரிக்காவின் பிரபல  Ansel Easton Adams  ரேஞ்சுக்கு யோசிக்க தொடங்கி விட்டேன் .ராப் பகலாய் இதே யோசனை !  


ஊருக்கு பக்கத்தில் ஓடைப்பட்டி என்று ஒரு ஊரில் சின்ன குன்றுதான் என் முதல் பலி சாரி முதல் ஃப்ரேம். ஒரு ஐந்து படங்கள் .அப்புறம் இருக்கவே இருக்கு( பாவம் ) திண்டுக்கல் மலை கோட்டை .நல்லவேளை அப்போது தொல்பொறுள் துறை வசம் அது இல்லை .இருந்திருந்தால் நான் எடுத்த கோணத்திற்காக அப்போதே எனது படம்தான் நுழைவு சீட்டில் படமாக இந்த உலகம் முழுதும் தெரிந்து இருக்கும்!   (அல்லது பித்தளை பெட்டி மலை சரிவுப்பக்கம் என்னை ஒருவேளை மேலே இருந்து உருட்டிகூட விட்டு இருக்கலாம்  என்பது வேறு விசயம் !)


       இது பத்தாது என்பதாக மனசுக்கு தோணவே ,அப்போது படித்து கொண்டு இருந்த தி .ஜானகி ராமனின் ‘மோகமுள் ‘ படத்துக்கு கதைக்கு ஏற்ப படம் எடுக்க ஆசைபட்டு ஆரம்பிக்க ,(இயக்குனர் ஞான ராஜசேகரன் மன்னிக்கவும் ) பக்கத்து வீட்டில் பள்ளி விடுமுறைக்கு வந்த ஒரு பெண்ணை அந்த கதையின் யமுனா கதாபாத்திரத்திர்க்கு ஏற்ப யோசித்து அந்த பெண்ணை நடுவீட்டுக்குள் உட்கார வைத்து கையில் ஒரு பூவை மட்டும் பிடித்து இருக்க, எல்லா கதவையும் சாத்தி விட்டு, (மன்னிக்கவும் ) முகத்தில் மட்டும் ஒளி விழுமாறு  எதிரே ஒரு ஜன்னலை மட்டுமே திறந்து வைத்து படம் எடுத்தேன் .


அப்புறம் எனது கிரிக்கெட் அணியை , எனது படிக்கும் அறையை ,சில நண்பர்களை ,வீட்டு வாழை மரத்தை ,பப்பாளி மரத்தையும் படம் எடுத்து ஃபிலிமை (நல்லவேளை )தீர்த்தேன் .


       ஸ்டுடியோவில் ப்ரிண்ட் போட்டு கொண்டு இருக்குபோது வெளியே நெர்வசாக ஒரு Robert Capa's வின் Falling Soldier ஃபோட்டோ அளவுக்கு என் ஒவ்வொரு ஃப்ரேம் அள்வுக்கு யோசித்து கொண்டு இருக்க , நண்பர்தான் முதலில் படங்களை பார்த்தார் .எதுவும் சொல்லவில்லை ,கை கொடுத்தார் .நீங்க இப்போ ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் என்றார் .அப்புறம் என் நிலை சொல்லவா வேண்டும் ? நானாகவே ஏதோ மலையிலிருந்து உருளுவது போல இருந்தது .



                 
                        நான் சின்ன வயதிலிருந்தே ஏதாவது புது புது விசயங்களை தேடிபோவதால் கிடைக்கும் அத்தனை நபர்களிடமும் நான் அப்போது செய்து கொண்டு இருக்கும் வேலை மிக ஈடுபாட்டுடன் ஒரு மேதாவித்தனத்துடன் ஒப்பிப்பது சகஜம் .அப்படி ஒரு நண்பர் கேள்விபட்டு ,தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவை புகைபடம் எடுக்க கேட்டு கொள்ள பள்ளபட்டி என்ற கிராமத்துக்கு போனோம் .பொதுவாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் .அதனால் ஒவ்வொருமுறையும் ,விசேசத்திர்க்கு சாப்பிட மட்டுமே வந்த பங்காளி மாதிரி பதுங்கி பதுங்கி போட்டோ எடுக்க, அப்புறம் எனக்கு ஒருவரை துணையாக உதவிக்கு தந்து முன்னுக்கு தள்ளினார்கள் .
              அதே நண்பரின் கல்யாணத்திர்க்கு போட்டோ எடுக்கும் அளவுக்கு ஓரளவு திருப்தியாக படங்கள் அமைந்தது .ஆனால் அந்த கல்யாணத்தில் தாலி கட்டும் போது ஃபிலிமை தீத்துவிட்டு மாப்பிளை நண்பர் என்பதால் கையில் தாலியுடன் காத்து இருக்க அய்யரை முறைக்க வைத்து விட்டு ,அவசரமாக ஃபிலிம் லோடு பண்ணி படம் எடுத்தது இதில் சேத்தி இல்லை .


 பொதுவாகவே போட்டோ கிராபருக்கு ஒரு மரியாதை உண்டு என்பது கொஞ்சம் போதையான விசயம் .முகம் தெரியாத ஆள்கூட தந்து முகத்தை பதிய வைத்து கொள்ள சினேகமாய் பேசுவது இன்னும் கொஞ்சம் உசத்தியாய் அப்போது யோசிக்க வைக்கும் .எனது ஆர்வம் அல்லது தொல்லை  தாங்காத இன்னொரு நண்பர் நான் பாண்டிசேரியில் இருக்கும்போது அப்போது வந்த புதிய மாடலான yashica kyocera MF2 வாங்கி கொடுத்து பல விசேசங்களை வாய்பு தேடித்தர ..கனவுகள் கூடசில சமயம் ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் அடடா போச்சே என வரும் ..


                  இப்போது எனது  பையன் மைக்ரோ மேக்ஸ் A 89 போனில் எடுக்கும் மிக சாதாரண போட்டோக்கள் கூட அசரவைக்கிறது .அவனுக்கு ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தட்டி எடுக்கிறான் .சில விசயங்களை(மற்றவர்களை) கஷ்டப்படுத்தி  நாம் கற்று கொள்வதை விட கவனாமாக செய்தால் போதும் என்பதர்க்கு  எனக்கு நானே ஒரு மிக மோசமான உதாரணம் போல !

வெள்ளி, 19 ஜூலை, 2013

நிர்மலாவின் கடிதம்



                அன்று வந்த கடிதங்களை வாசிக்க வகைப்படுத்தும்போது , முதலில்  சோவியத்யூனியனின் - மாஸ்கோ வானொலி நிலைய உறுப்பினர் வண்ண அட்டை , BBC தமிழோசையின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் அடுத்து அனுப்புனர் பெயரில்லாத  இலங்கையிலிருந்து ஒரு  கடிதம் .

 வானொலி மன்றம்.


                 இது எனக்கு ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .உலகம் முழுதும் செயல் படும் வெளி நாடுகளில் உள்ள  தமிழ் வானொலிகளுக்கு மட்டுமே கடிதம் எழுத நண்பர்கள் பலர் சேர்ந்து, மன்றம் வைத்து இருந்தோம். (பெயர்: சமாதான சகோதரர்கள் வானொலி மன்றம்.  அமெரிக்காவால் சோவியத்யூனியன் (USSR) உடைக்கப்படும் முன் அதன் அதிபர்  மிக்காயேல் கார்பச்சேவ் - நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட உறவினை கொண்டாடும் விதமாக, இந்த பெயர் )அப்படியிருந்தும் சின்ன வயது முதல் கேட்டு வரும் இலங்கை வானொலிக்கு  கடிதம் எழுதும் ஆர்வம் இல்லை .மேலும் அது வானொலி நிலையக்கடிதம் என்பதை அதன் அடையளங்கள் சொல்லவில்லை  அப்படியானால்..

               எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் கடிதத்தை உடனே படிக்கமாட்டேன் .ஆனால் அந்த விரதம் அடுத்த நாள் கோவை பேனா நண்பர் முருகேசன் கடிதம் வரும்வரைதான்  .அதில் இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா என விசாரிக்கபட்டு இருந்த போதுதான் எனக்கு தெரிந்தது .அது அவரின் நீண்ட நாள் தோழி நிர்மலாவால் அனுப்ப பட்டதென்று .



            பிரபலங்கள் எழுதிய கதைகளை தாங்கி வரும்  பல்சுவை நாவல் படிப்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாக கருதபட்ட சமயத்தில் அதில் வாசகர் வட்டம் ஏற்படுத்தியிருந்தார்கள் .அதன் மூலம் எனக்கு கிடைத்த பல நண்பர்களில் கோவை கலர் சாலை தோட்டத்தை சேர்ந்த முருகேசனும் ஒருவர் .பல மாதங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து உறவுகளை மேம்படுத்தி கொண்டு இருந்த போது ,அவர் எனக்கு எழுதிய கடித்தத்தில் தனக்கு இலங்கையில் நிர்மலா என்ற தோழி இருப்பதாகாவும்  என்னுடய சில தவறுகளால் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்வதில்லை என்பதாகவும் ஆனால் அவர்கள் மிகவும் தனது  சொந்த வாழ்வின் கசப்பான அனுபவங்களால் தவிப்பதாகவும் ,அவர்களுக்கு உங்களின் நட்பு ஆறுதல் தரும் என்பதால் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பிட்ட கடிதம் வந்து சில மாதங்களுக்கு பிறகே இந்த நிர்மலாவின் கடிதம் .



            கடிதம் மிக அழகிய இலங்கை தமிழில் அழகான மிக விசாரிப்புகளுடன் நீண்டதாக இருந்தது .பொறுமையாக படித்தபோது ,இங்கு நாம் வழக்கில்  தொலைத்த  பல  தமிழ் வார்த்தைகள் என்னை திணறடித்தன ஆனாலும் ஒரு மெல்லிய ஆழமான நட்பின் தேடல் கடிதம் முழுதும் என்னை ஆக்கிரமித்தன ..



           பிறகு மாதம் ஒரு கடிதம் வர தொடங்கியது .தான் ஒரு இளமை  பிராயத்தில் அறியாமல் ஒருவரை காதலித்து கைவிட பட்டதாகவும் இதனால் வீட்டில் பெற்றோர்களின் அன்பை இழந்ததாகவும்  , இப்போது படித்து விட்டு வேலைக்கு போன இடத்தில்  பல ஆண்டுக்கு பிறகு  மீண்டும் ஒருவரை காதலிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .ஆனால் அது திருமணம் வரை போக  சில சிக்கல்கள் இருந்தன. தனது காதலன் ஒரு சிங்கள வம்சாவளி என்பதால் ,அவர்கள் வீட்டில் சம்மதம் தடுமாறி கொண்டு இருப்பதாகவும் , அதனை பேசி முடிக்க அடுத்த மாதம் என் மேல் மிகவும் பாசம் உள்ள இரண்டாவது அண்ணன் வருகிறார்  என்பதகாவும்  அது நல்லபடியாக நிறைவேற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டு இருந்தார் நிர்மலா .

         ஆனால் ,அடுத்த மாதம் கடிதம் வரவில்லை .எனது இரண்டு கடிதங்களுக்கும் பதில் வரவில்லை ,மேலும் அப்போதுதான்  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கை தீவை தனது கட்டுபாட்டில் வைத்து கொண்டு இருந்தது .இதனால் இனம் புரியாத கவலை என்னை துரத்த தொடங்கியது .அதர்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக மூன்றாவதாக நான் எழுதிய கடிதம் எழுதினேன் .ஆனால் அதை அனுப்பும் முன் ஒரு கடிதம் 1987 டிசம்பர் மாதம் வந்தது .ஆனால் அது கடிதம் அல்ல எனக்கு தண்டனை !.




                 ஆம் .அந்த கடிதம் வந்தது நமது  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) அங்கு சென்ற சமயத்தில் 1987 அக்டோபர் 5 ஆம் நாள்  புலிகள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு கொள்கை அளவில் முரண்பாடு ஏற்பட்டதால் .(இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய உளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.)



             புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது .இந்த போரில் நிர்மலாவின்  காதலன் வீட்டு அருகே நடந்த புலிகளுக்கும் - நமது  அமைதிகாக்கும் படைக்கும் நடந்த யுத்தத்தில் நமது இந்திய ராணுவ வீரனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட ஒரு குண்டின் சிதறல் தவறிபோய் நிர்மலாவின்  காதலனின் வயதான பாட்டியின் காலில் பாய்ந்து இறந்து போகவே மீண்டும் கை கூட இருந்த நிமலாவின் உறவு இந்த காரணத்தால் மறுதளிக்கப்பட்டதாம் .

            இதில் மனம் உடைந்து போன தனது அண்ணனை  சில நாளுக்கு பிறகு இலங்கை ராணுவத்தால் விடுதலைபுலி என்று சந்தேகப்பட்டு வாயில் சுடபட்டு நடு ரோட்டில் கொல்லபட்டதாகவும் ,தனது அன்பு வாழ்கையும் , எனது மேல் பாசம் காட்டிய ஒரே ஜீவன் அண்ணன் இறப்பும் ,தனது வாழ்வில் மீளா சோகத்தில் தள்ளிய பின் நான் எங்கு போகிறேன் எனக்கு தெரியவில்லை ,எனவே மீண்டும் நான் இதை எல்லாம் தாங்கி கொண்டு பிழைத்து வந்தால் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என முடிந்திருந்தது அந்த கடிதம் ..



              எனக்கு தெரிந்த ஒரு நிர்மலாவின் நிலையே இவ்வாறு என்றால் இப்போது எத்தனை நிர்மலாவின் வாழ்கையின் சீரழிவை அந்த ராவண பூமி விதைத்து இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் ...

       வரலாறு ..( என்ன சொன்னாலும்  அங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பது வெறும் இரக்கமற்ற காகிதங்கள் மட்டுமே ! )




          காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர்.அன்றைக்கு கலிங்க நாட்டினில்(இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) இருந்து வெளியேற்றப்பட்ட  போரில் தோற்று ஓடிய  (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது) ஒரு இனக் குழுவின் இளவரசன்-விஜய சிங்கன் என்பவன் அங்கிருந்து  தெற்கே பயணித்து, இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும்(இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது )அங்கு இருந்த  தமிழ் பெண்  இளவரசி குவேனியை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான் உண்மை .இதர்க்கு சாட்சி



                    இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று? ( நன்றி - http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/2.html)



                இனி , ஒண்ட வந்த பிடாரிக்கும் ஊர் பிடாரிக்கும் வித்தியாசம் யாராவது காட்ட வேண்டும் என்றால் இந்திய வரைபடத்தில், தமிழகத்தின் தொங்குசதையாக இருக்கும் பார்வதியின் சாபம் பெற்ற ராவணத்தீவை காட்டுங்க்ள் 

திங்கள், 15 ஜூலை, 2013

திருட்டு ரோஜாக்கள்


                                             
                                         
                                       திருப்பூரில் ஒரு திருமண வரவேற்பு விழா லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது .மண்டபத்தின் நுழைவு வாயிலில் பலவகையான ரோஜாக்கள் மற்றும் பல மரக்கன்றுகள் இலவசமாக கொடுத்து கொண்டு இருக்க ,சரி நாம் வரும்போது வாங்கி செல்லலாம் என பேசிக்கொண்டு உள்ளே சென்றோம்.


                           இந்த வரவேற்பு முக்கிய நிகழ்சிகள் திருப்பூர் மனவளக்கலை அமைப்பினர் தலைமையில் சிறப்புற செதுக்கப்பட்டது போல மிக அழகான வகையில் அர்த்தத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                   எந்த கல்யாணத்திலும் பார்க்காத வகையில் மணமகனின் தந்தையும் , தாயும் வந்தவர்களை வரவேற்க்க ,அமர்ந்து இருக்கும் இடத்திற்கே வந்து வரவேற்று அசத்தினார்கள் .


                                                 அடுத்து சென்னை அனுஷம் வித்தியாசமான குழுவினரின் நாட்டிய நடன கலைநிகழ்ச்சி அரங்கேறியது .பொதுவாக இம்மாதிரி நிகழ்சிகளில் திரைபாடல்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதை தவிர்த்து நிறைய கருத்துருக்களை வைத்து அசத்தினார்கள் .இதில் உச்சகட்டமாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைத்து "நூறுவருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும்தான் " என்ற படலை ஒலிக்க செய்து, ஆட விரும்பிய பார்வையாளர்களையும் மேடைக்கு அழைத்து கொண்டாடினார்கள் .


                                             நினைவுபரிசாக வந்திருந்த அனைவருக்கும் ஒரு பரிசுபையை தந்தார்கள் .அதில் 1.வேதத்திரி அவர்களின் லேமினசன் படம் .2.வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு ...(கையடக்க புத்தகம்) .3. இல்லம் சங்கீதம் என்ற ஒரு கட்டுரை தொகுப்பு (அழகிய படங்களுடன் + முக்கிய தொலைபேசி எண்கள் ) 4.திருப்பதி +பத்மாவதி திருகல்யாண வண்ணப்படம் .5.மந்திரங்கள் + இறைப்பாடல்கள் அடங்கிய 1.05 G.B அளவுள்ள DVD என அருமையாக யோசித்து அளித்து இருந்தார்கள் .


                                                பொதுவாக இந்த கல்யாணங்களில் பபே ( Pafe ) முறைப்படி மட்டுமே வழங்குவார்கள் .ஆனால் இங்கு வழக்கமான முறையும் இருந்தது .( கையேந்தி பவனில் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு! )


                            எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக மண்டபத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பல வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள் .அங்குதான் நம் மக்களின் மனம் ஆரோக்கியத்தை கண்டோம் .இலவசமாக தந்தால்  அனைவருக்கும் சென்று அடையும்  என்ற கொடுப்பவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் ஒன்றுக்கு பல கன்றுகளை அள்ள , பாவம் பலபேர் ஒன்று கூட கிடைக்காமல் புலம்பிகொண்டார்கள் .

 வினோத திருட்டு!

                              நாங்கள் வண்டி நிறுத்தும் இடம் வந்த பொது ஒரு உண்மை  அப்போதுதான் தெரிந்தது .அங்கு நிறுத்த பட்டு இருந்த பல வாகனங்களில் பல  அற்புதமான செடிகள் பாலி பேக்குகள் வைத்து பலவிதமாக தொங்கிகொண்டு இருந்தன .இந்த வினோத திருட்டுதான் பல பேரை ஏமாற்றி விட்டது .சில பேர் போகும்போதே  ( வந்ததே இதர்க்காக என்பதாக  - விவரமாக முன் கூட்டியே !) நிறைய வாங்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள் .


             இப்படி திருட்டுக்கு சமமாக எத்தனைபேருக்கு போகவேண்டிய செடிகள் அந்த வண்டிகளில் தொங்கிகொண்டு இருக்கிறது ? அதில் நிறையபேரின் பெயர் இருப்பது போல மானசீகமாக எனக்கு பட்டது !!! .
                     

                                             

வியாழன், 30 மே, 2013

போலிஸ் ,குற்றவாளி ,நாங்கள் .


 போலிஸ் ...
                                   தருமபுரி மாவட்டதில்  புற நகர் பகுதியில் அந்த பிரதான சாலையை ஒட்டி இருக்கும் மூன்று வீடுகளை குறிவைத்து  வந்த அந்த டெம்போ ட்ராவலர் வேன் மெதுவாக யார் கண்ணிலும் படாமல் ஓசை குறைத்து  நின்றது . உள்ளே இருந்து மூன்று நபர்கள் இறங்கினார்கள் .மிக சாதாரண தோற்றத்தை கொண்ட அவர்கள் உடை சுருக்கங்கள் வெகு தூர பயனத்தை அனுபவித்ததாக சொன்னது .முதல் வீடு நோட்டமிட்டபோது அது பூட்டி இருந்தது .வீட்டூக்கு வெளியே ஒரு ஆடு இவர்களை கண்டு மிரண்டு பின் வாங்கி தவித்தது .


அடுத்தவீட்டை நெருங்கினர்கள் .

ஒரு பெண் பாத்திரம் கழுவி கொண்டே , யாரு ? என்றது .

வந்தவர்களில் ஒருவர் ரவி இல்லையா ? என கேட்டு கொண்டே அந்த பெண்ணை நெருங்கினார் .

அதர்க்குள் ஒரு மூன்று வயது பெண் வீட்டுக்குள் இருந்து இவர்களை பார்த்து கொண்டே ஓடிவந்து,

அந்த பெண்ணிடம் ,யம்மா தம்பி அழறான் என்றது .

அதர்க்குள் மூன்றாவது வீட்டுக்கு நெருங்கய மூவரில் ஒருவர்  உள்ளே நோட்டமிட்டார் ..அந்த வீட்டின் அமைப்புக்கு சம்பந்தமில்லாமல் அந்த பொருள் அவர் கண்னை உறுத்தியது .
மற்ற இருவர்களையும் நோக்கி இங்கே வாருங்கள் என்று அவர் வேகமாக கையசைக்க,
 அதர்க்குள்,
அந்த பெண் வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டை நோக்கி,
அக்கா என்று ஒரு வித பயத்துடன் கூப்பிட ...
அந்த மூன்று வயது சின்ன பெண் எதுவுமே புரியாமல் அழ தொடங்கியது ...

                  வந்தவர்கள், குற்றப் புலனாய்வு துறை ( Crime Branch ) அவர்கள் தேடி வந்தது ஒரு திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ரவி என்ற   நபரை   . ஏற்கனவே அவன் பல வழக்குகளில் சம்பந்தபட்டவன் .அவர்கள் புதியதாய் ஒரு  குறிபிட்ட திருட்டு குற்றதின் குற்ற முறை மற்றும் குற்ற பின்னனி இந்த ரவியின் குற்ற பதிவுகளுடன் ஒத்து போனதால் தேடிப்போனார்கள் அங்கு .ரவி அங்கு வருவதே இல்லை என வீட்டார்கள் சொன்னார்கள் .
        ஆனால் அவர்கள் பார்த்த மூன்றாவது வீட்டு ஆள் பெயர் விசாரித்தபோது  இது வரை அவன் எந்த காவல்துறை குற்றவாளி பட்டியலில் இல்லாதவன் . அவன் வீட்டில் பார்த்தது வித்தியாசமாக உணர்ந்தது விலை உயர்ந்த வெளி நாட்டு ஒரு சுவர் கடிகாரம் .

             வந்து இருந்த காவல் துறையின் ஒரு உதவி கண்காணிப்பாளருக்கு வேறு ஒரு பழையதிருட்டு குற்றதில் காணாமல் போன பட்டியலில் இந்த விலை உயர்ந்த ஒரு சுவர் கடிகாரமும் ஒன்று என உள்ளுணர்வு சொல்லியது .காலம் நேரம் பார்க்காமல் குற்றவாளியை தேடி அலையும் தமிழ்நாட்டு காவல் துறையின் மிக பெரிய சொத்து இந்த உள்ளுணர்வுதான் .

                உடனே ,இழந்தவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது  .அப்படியானல் இந்த வழக்குக்கும் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி ரவிக்கும் இந்த புதிய நபர் சந்தோஷ் என்ற சந்தோஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பது ஒரு புதிய கோணத்தில் குற்றத்தை தேட காவல்துறைக்கு வேலை வந்தது .

             இது மேலும் ஒரு தலைவலி .தேடி வந்த குற்றவாளியும் இல்லை .ஏற்கனவே போய் கொண்டு இருக்கு தேடலில் புதிய திருப்பம் வேறு ஏற்பட்டுவிட்டது .காவல்துறை உள்ளூர் துப்பு தரும் இன்பார்மர்களிடம் இந்த வீட்டை கண்காணிக்க அறிவுறுத்திவிட்டு திரும்பியது .


குற்றவாளி ...
                               சந்தோஷ் ஒரு சோம்பேறி .ஒரு வேலையும் தொடர்ந்து செய்ய பிடிக்காது .ஆனால் கல்யாணம் ஆன மூன்று வருடத்திர்க்குள்  சாந்தி . சச்சின் என்ற இரண்டு குழந்தைகள்  .அதனால்தான் புதிய வேலைக்கு போக ஆசைப்பட்டு கார் ஓட்ட கற்று கொண்டான் சில மாதங்களாக லோக்களில் உள்ள டாடா ஏஸ் (சின்ன யானயை 0 மூலம்   சின்ன ,சின்ன வாடகை போனான் .சொற்ப வருமானம்தான் .

                அவன் மனைவிக்கு அவன் கூலி வேலைக்கு போவது மட்டும்தான் பிடித்தது .அதனால் தன் அப்பாவின் உதவியை கார் வாங்க சந்தோஷ் கேட்க சொல்லியும் மறுத்து வந்தாள் .

               ஆனால் சந்தோசுக்கு வெகு நாளாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை .இதை அவன் அண்ணனின் சொன்னான் .அவன் தன்னுடய நண்பன் ரவியிடம் சொல்ல,அதர்க்கு ரவி , சரி நம்முடன் வரட்டும் , ஒட்டும் திறமை பார்த்து ஏற்பாடு பண்ணலாம் என சொல்ல, அடுத்தவாரமே சந்தோஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் .
அவனுக்கு தேவை கார் .

              முதன் முறையாக ஆம்னி வேன் ஓட்ட கொடுத்தார்கள் .அவர்கள் சொன்ன ஊர் வரை ஓட்டி போனான் . ரவி அண்ணன் வண்டி நன்றாக ஓட்டுவதாக  பாராட்டினார் .
             ஊருக்குள் சில இடங்களில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு ,அண்ணனும், ரவியும் போய் வந்தார்கள் .திரும்ப வந்தவுடன் ,ஒரு தியேட்டருக்கு வழி கேட்டு போக சொன்னார்கள் .


மதிய நேரம் .ஒரு திரைபடம் அரங்கு போனார்கள் .
மாலை ,படம் விட்டு தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏற்கனவே போன இடத்திர்க்கு போக சொன்னார்கள்.

நீ போன் எங்களுக்கு பண்ணவேண்டாம் .நாங்கள் போன் பண்ணினால் வந்தால் போதும் அது வரை வேறு  எதாவது இடத்திர்க்கு போய் வா என்று  சொல்லி விட்டு போனார்கள் .

போகும் போது காரின் சீட்டுக்கு அடியிருந்து  ஒரு கனமான பேக்கை அண்ணன் எடுத்து கொண்டு போனான் .
அவர்கள் போவதை பார்த்து விட்டு ,எங்கு போவது தெரியாத ஊரில் யோசித்து கொண்டே சந்தோஷ் வண்டியை கிளப்பினான் ...


      போன் வந்தது .அவசரமாக பேசினார்கள் .முன்னால் சொன்ன இடத்திர்க்கு பக்கத்தில் வர சொன்னார்கள் .கையில் மேலும்   ஒரு பையுடன் ஏறினார்கள் .வேகமா ஓட்டு என்று அண்ணன் சொல்ல ,நேரே வண்டியை சேலம் விடு என்றார்கள் .அவர்கள் எதுவும் அப்புறம் பேசவில்லை .அண்னன் தூங்கிவிட்டான் .ரவி மட்டும் மெயின் ரோடு வழியாக செல்லாமல்  வழி சொல்லி கொண்டே வந்தார் .

நாங்கள் ...

     அந்த வெளி நாட்டு சுவர் கடிகாரத்திர்க்கு சொந்தகாரருக்கு நான் நண்பன் என்பதால் இதுவரை இப்படி நடந்த   இந்த மேற்கண்ட சம்பவங்களை ,திருட்டில் பிடிபட்ட மூவரில் ஒருவனான் சந்தோஷ்  காவல் துறையிடம் பிடிபட்ட பிறகு அவனுடன் இருந்த மூன்று நாட்களில் என்னிடம் சொன்னான்
   பொதுவாக இந்த மாதிரி திருட்டை தொழிலாக ஆரம்பிப்பவர்கள் எதாவது ஒரு காரணம்   சொல்கிறர்கள் .பிறகு சிக்கி கொண்டு தண்டனை அனுபவித்த பிறகு மீண்டும் வேறு வழி இல்லை என்றும்  அப்படி பட்ட முத்திரை குத்திய பிறகு, திருந்த வாய்ப்பு குறைவு என்பதாக சொல்லிகொண்டு அதையே  தொடர்கிறார்கள்..


Recovery

       இந்த வழக்கில் இப்போதைக்கு மாட்டி கொண்டவன் சந்தோஷ்.அவன் தாங்கள் திருடிய குற்றத்தை ஒப்புகொண்டு திருடிய பொருள்களை விற்ற இடங்களை! காட்டி கொடுப்பதாக காவல்துறையும்  மற்றும் திருடபட்ட  பொறுளை அடையாளம் காட்ட நாங்களும் (நண்பருக்கு துணையாக நானும்) கிளம்பினோம் ..இம்மாதிரி பொறுள் மீட்டலுக்காக  போவதர்க்கு  Recovery என்பதாக காவல்துறை சொல்கிறது


வீடியோ படம்.
         இம்மாதிரி பொறுள் மீட்டலுக்கு ( Recovery ) போகும்போது காவல்துறை  தன்னுடன் ஒரு வீடியோ படம் எடுப்பவரை கூட்டிகொண்டு போகிறது .இந்த இடத்தில் நான் வைத்து இருக்கவோ ,விற்கவோ திருடிய பொறுளை கொடுத்தேன் என்று குற்றவாளி சொல்பவரை விசாரிக்குபோது வீடியோ படம் எடுப்பதர்க்காகவாம் !


 அதிர்ச்சி !!

      சந்தோஷ் பெங்களூர் வரை, மூன்று நாட்களில் பல இடங்களை காட்டினான் .அதில் பெரும்பாலும் நகை கடைகள் என்பது அதிர்ச்சி தந்த விசயம்.
மற்றவர்கள் ப்ரோக்கர்கள் போன்ற இடைதரகர்கள் ஒத்துகொண்டவர்களிடம்  நகை பெற்றுகொள்ளபட்டு அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது .ஒத்துகொள்ளாதவர்களிடம் வழக்கு பதியபட்டது .காரணம் குற்றவாளியே நேரில் வந்து சொல்லியும்  அவர்கள் இல்லை மறுப்பதால் அதை அவர்கள் பக்கம்  நிரூபிக்க வேண்டும் என்பதால் .

குற்றவாளி்யா நான் ..
          ஒரு இடத்தில் இம்மாதிரி ஒரு விசாரணையின் போது கூட்டம் கூடி விட்டது .அந்த பகுதியில் உள்ள அனைத்து நகை கடைகளும் மூடிவிட்டு,கடைக்காரர்கள் ( அவர்கள் சங்கம் ) ஒன்று கூடி காவல்துறையை எதிர்த்து குரல் கொடுக்க,வழக்கம்போல பத்திரிக்கை துறையும் கேள்விபட்டு ஓடிவந்து சரமாரியாக நாங்கள் இருந்த காவல்துறை வேனுக்குள் இருந்த குற்றவாளியை படம் எடுக்க முன்னேற   அப்போது வேனுக்குள் நான வேனின் சீட்டில் உட்கார்ந்து இருக்க, எனது சீட்டுக்கு பின்னால்  குற்றவாளியை மறைத்து கீழே உட்கார வைத்திருந்தார்கள் ( மற்ற காவல்துறையின பிரச்சனையை எதிர்கொள்ள வேனின்  கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றி வேனின் கதவுகள் அன்னைத்தும் பூட்டி விட்டு வெளியே இருந்தார்கள்) .போட்டோ எடுத்த பத்திரிக்கை தோழர்களிடம் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை - அதனால் அடுத்த நாள் பத்திரிக்கையில் குற்றவாளி என்ற இடத்தில் என் படம் வேனுக்குள் இருப்பது போல வந்தது .


இழந்தவனே ஜாமீன் கொடுக்க  வேண்டும் .

          மீட்ட பொறுளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ,பிறகு ஒருநாள் நண்பரை அழைத்து ஒரு நகை மதிப்பீட்டாளர் முன் மீட்ட நகைகள் சோதிக்கப்பட்டு ( ஒருவேளை மீட்ட பிறகு மாறி இருக்கலாம் அல்லது போலி நகையே மீட்க்கபட்டு இருக்கலாம் என்பதர்காக )அந்த நகையை பெற சொந்த வீடு வைத்து இருக்கும் இரண்டு நபர்கள் நண்பருக்கு ஜாமின் கொடுத்த பிறகு நீதிமன்றம் கொடுத்தது .


        இங்கு,இது  நீண்ட பதிவாகிவிட்டதால் - சந்தோஷ் என்ற குற்றவாளியுடன் மூன்று நாட்கள் இந்த தேடலில் இருந்த போது, ஏற்பட்ட அனுபவங்களை வேறு ஒரு பதிவில் சொல்ல ஆசைப்படுகிறேன்.