செவ்வாய், 8 மார்ச், 2016

காலம்தான் (முதற்) கடவுள் !



போன வாரம் எனது பையன் பயிழும் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது .

”தயவு செய்து பள்ளிக்கூட வாசல் முன் வாகனங்களை நிறுத்தி, குழந்தைகளை இறக்கிவிடுவதன் மூலம் மற்றவர்களுக்கு இடையூறு தராதீர்கள் ” 



                              நம் வீட்டில் நேர நிர்வாகம் சரியாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நம் வீட்டின் குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பி விடும் கடைசி அரை மணி நேர உச்ச பட்சக் கூத்துக்களைப் பார்த்தாலே போதும் .பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அப்பா சட்டை மாட்டி விட்டுக்கொண்டே இருக்கும் போது அம்மா உணவு ஊட்டுவதுவும் (அப்படிச் சொல்லக்கூடாது திணிப்பதுவும்) நடந்து கொண்டே இருக்கும்போது ஒருபக்கம் மாட்ட வேண்டிய ’டை ,பல்ட்டை ‘ தேடுவதுவும் ஒரு பக்கம் ’சூ ,சாக்ஸ்’ ஒரு ஆள் மாட்ட இன்னொரு பக்கம் சூ காலில் மாட்ட மறுக்கும் போதுதான் நேற்று போட்ட சூ ரோப்பே தளர்த்தவில்லை  அப்படியே இருக்கும் என்பதை அப்போதுதான் கவனிப்போம் எல்லாம் மாட்டிக்  கொண்டு பள்ளி பேருந்துக்கோ,ஆட்டோவுக்கோ அள்ளிப்போட்டு அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் அப்பாடா என்று நுழைந்தால் மேஜைமேல் போன வாரம் வாங்கிய புது ”லன்ஞ் பாக்ஸ்” கொடுத்து விட மறந்து போனது டிவிக்கு பக்கத்தில் மேசை மேல் நின்றுகொண்டு நம்மைப் பார்த்துச் அது கூடச் சிரிக்கும்.இதை விடச் சில சமயம் இரவு வரும் ஏழாம் உயிர் தொடரைக் கூடப் பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு செய்துகொடுத்த ’ப்ராஜெக்ட்’அந்தக் குழந்தையின் படிக்கும் மேஜை மேல் ஸ்கூல் பேக்கிற்குள் வைக்க மறந்து தேமே என்று கிடக்கும்  .என வீட்டில் போன வாரம், வியாழக் கிழமை மட்டும் அணிய வேண்டிய பள்ளிச்சீருடை அணிந்து கொள்ள மறந்து பள்ளிக்கூட வாசல் வரை போய் திரும்பி வந்து மாற்றிக்கொண்டு போனோம்.(நல்ல வேளை எங்கள் அனுபவத்தில் பட்ட பாடத்தில் பள்ளிக்கு அடுத்தத் தெருவுக்குக் குடியேறியே விட்டோம் .அதனால் நேரமும் தூரமும் வாய்ப்பு இருந்தது என்பது வேறு விசயம்) இப்படித் தினமும் அல்லோல் படும் பெற்றோர்கள் தங்கள் அவசரங்களைப் பள்ளி வாசலில் கூடப் ’பளிச்செனெக்’ காட்டியதன் விளைவுதான் அந்தக் குறுஞ்செய்திப் பாடம் பெற்றோர்களுக்கு நடத்தப்படுகிறது .



                                      ஒரு பக்கம் அன்றைய போக்குவரத்து ஆட்டத்திற்கு ஆடி முடித்து, பள்ளிக்கூட வாசலில் கொண்டு வந்து விட்ட தாய்மார்களில் பலபேர் இரவு உடையில் இருப்பார்கள் அவசரத்தில் காலில் செருப்பு கூட இருக்காது . தந்தைமார்கள் இதை விட உச்சம். வீட்டில் கூடப் அணிந்து கொள்ள லாய்க்கில்லாத பெர்முடாஸ் அல்லது ட்ரவுசரோடு பந்தாவாக வந்து கடுப்பேத்துவார்கள்.சரி இது கூடப் பராவாயில்லை அதே கோலத்தில் அங்கு வந்து இருக்கும் இன்னொரு அவசர கோலத்தாரிடம் , என்ன விஜயகாந்த் ஒத்துக்கொண்டாராமே ? என்று அவர் வீட்டுப் பத்திரிக்கை அரசியல் விவாதத்தைத் தொடங்க பல்லுகூட விளக்காத அந்த பிரகஸ்பதி பதிலுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில என்ன போட்டு இருக்கானான்னா...? என்று தனது பாழாய்ப்போன நினைவுகளைப் பின்னோக்கி பிறாண்ட ஆரம்பித்து, அபத்தமான அரசியல் பேசி வெறுப்பேற்றுவார்கள் .இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டு இருப்பது இவர்களை விடத் தாமதமாகக் கொத்தாகக் தன் குழந்தையை அள்ளிக்கொண்டு அவசர அவசரமாக , பாதி ராத்திரியில் ஓடிப்போன பேயைப்போலப் பறந்து வரும் இன்னொரு அவசரப் பெற்றோருக்கு வழி விடாமல் சாலைகளை மறித்துக்கொண்டும் பள்ளிக்கூட வாசல்களுக்குக் குறுக்கே நின்றுகொண்டுதான் பேசிக்கொண்டு இருப்பார்கள் !


              ஒரே சமயம் இரண்டு பிள்ளைகளை வெவ்வேறு பள்ளிகளில் விட்டுச்செல்லும் அப்பாமார்கள் இன்னும் பாவம். ஒரு நண்பர் இப்படித்தான் அவசரத்தில் டூவிலரில் முன் பக்கம் உட்ர்கார்ந்து இருக்கும் பிள்ளையை பள்ளி மாற்றி இறக்கிவிட அது அழுதுகொண்டே, அப்பா நான் இந்த ஸ்கூல் இல்லப்பா என்று பரிதாபமாகச் சொல்ல எப்படியோ இறக்கி விட்ட்துகூட டென்சனில்லை அவருக்கு , .இதை அப்படியே மனதில் வைத்துக்கொண்ட அந்த வீட்டின் இரண்டாவதாகப்  பெண் குழந்தை அவர்கள் வீட்டு விசேசத்தில், எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் எங்கப்பா என்னை வேற ஸ்கூல்ல இறக்கி விடப்பார்த்தார் என்று சத்தமாகச் சொல்லி போட்டு உடைக்கும் பாருங்க,அப்போதுதான் நமக்கு  அரசின் வீட்டுக்கு ஒரு குழந்தை போதும் என்ற சுவர் விளம்பரத்தின் ’முக்கோணக் கட்டத்தின்’  அர்த்தம் முழுமையாகப் புரியும் 
ஒருபக்கம் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று தினமும் இப்படி நம்ம வீட்ல நடக்குதே இதைக் குறைச்சுக்கிறதுக்கு வழியே இல்லையான்னு மெல்ல ஒவ்வொரு வீட்டுகுள்ளேயும் எட்டிப்பார்த்துக் காரணம் ஆராயப் போனால் அதிகப் பட்ச வீடுகள் சொல்லும் ஒரே காரணம் சீக்கிரம் குழந்தைகள் தூங்க மாட்டேன்கிறார்கள் தூங்கினாத்தானே காலையில சீக்கிரம் கிளம்ப முடியும் என்கிறார்கள். சரி உங்க வீட்டில் எல்லாரும் தூங்கும் நேரம் எது ?  என்றால் இரவு பத்துக்கு மேல் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள் சொல்கிறார்.அப்பா எதாவது விவாதமோ செய்தியோ பார்க்கவும் அம்மா நாடக தொடர் பார்க்கவும் , பாட்டிமாரோ தாத்தாமாரோ (ஒருவேளை வீட்டில் இன்னும் வைத்து இருந்தால் ? ) ’சங்கரா’ டிவி நிகழ்சி என் ஆக மொத்தத்தில் பார்த்து முடியப் பத்தரைக்கு மேல் ஆகிவிடுவதுவும் ஒரு காரணம் ! மனிதன் தனது பொழுதுபோக்கிற்காகக் கண்டுபிடித்த சில சாதனங்கள் அவன் வாழ்வின் கோலத்தை மெல்ல மாற்றிக்கொண்டே வருகிறது . 


                         மனிதனுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய கொடை மெலடோன் (melatonin) என்ற திரவம் .இயற்கை, தூக்கத்தின் மூலம் மூளைக்கும், உடலுக்கும் ஓய்வு எனும் மருந்துதான் அது .அதிக நேரம் தொலைக்காட்சிப் பார்ப்பதால், ஐபேடு,மொபைல் போன்ற கருவிகள் பயன்படுத்துவதால் மெலடோனின் சுரப்புக் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுக்கப்படுகிறது ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் ஒளியானது போட்டான்கள் ஸ்ட்ரீம்களை (stream of photons) உருவாக்குகின்றன,அந்தப் போட்டான்கள் ஸ்ட்ரீம்கள், மனித மூளைக்குள் நடக்கும் மெலடோனின் (melatonin) சுரப்பை தடுக்கும். தடுக்கப்பட்டால் அது நமது உடலை பகல் முழுதும் சோர்வு நிலையில் வைத்திருக்கும். அதேபோன்று தொடர்ந்து நீடிக்கும் போது மனிதர்களின் உறக்க-விழிப்புச் சுழற்சி (sleep wake cycle) மொத்தமாகப் பெரியவர்களான நமக்கும், வளரும் பிள்ளைகளுக்கும் பதிப்புக்குக் காரணமாகிறது.விஞ்ஞானக் கருவிகள் மருந்து போல .தேவைக்குத் தகுந்த இடத்தில் அதைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது தரும் அதைத் தவறாகப் பயன்படுத்தும்போதும் எதிர்விளைவுகளை இரட்டிப்பாகத்தரும் என்பதை மறக்கக் கூடாது. 

காலை அசதியாக எழுந்திருக்கும் அம்மாவால் எப்படி கவனமாக உணவு தயாரிக்க முடியும் நேற்று வாங்க மறந்த ஒரு பொருளால் அன்றைய காலை உணவு மாறிப்போகும் .அந்த அவசர உணவு பிள்ளைக்கு படிக்காது போகலாம் அதுக்கும் குடும்பத்தில் சண்டை தொடங்கும் நாங்களெல்லாம் அஞ்சும் பத்தும் பெத்தோம் இப்படியா வளர்த்தோம் ? என்று வீட்டு பெரியவர்கள் சுய தம்பட்டம் அடித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள் ! 



                          இந்தத் தூக்கமின்மைக் காலையில் விரைவாகப் படுக்கையை விட்டு எழ விடுவதுவும் இல்லை அப்படியே எந்திரிதால் சோர்வுக் கட்டி இழுக்க எந்தக் காரியமும் விளங்குவதுமில்லை . அதனால் உடற்பயிற்சிச் செய்வதில்லை இதில் சில பேர் இன்னும் கொஞ்சம் வில்லங்கம் பேசுவார்கள் .எங்க தாத்தால்லாம் தொன்னூறு வயசு வரைக்கும் எந்தப் பிரச்சனையும்மில்லை ஒரு உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை.மனுசன் கல்லு மாதிரி இருந்தார் என்பார்கள் .அதிலும் அவருக்குத் ( ஊருக்கு தெரிந்து ) இரண்டு மனைவிமார்கள் என்று கண்சிமிட்டிப் பெருமைப்படுவார்காள் .அந்தத் தாத்தா சித்ரகுப்தன் லெட்ஜரிலிருந்து கணக்கு முடித்து  நீக்கப்பட்டும் ஆத்ம சாந்தி அடையாமல் தெருவோர முருங்கை மரத்தில் இன்னும் தொங்கிக்கொண்டு அடுத்தவர்களை  பயமுறுத்திக்கொண்டு இருப்பது இது போலச் சிலரால்தான் என்பது உங்களுக்கு ஏன் ? என்று இப்போது புரியும் .

                                தாத்தா காலத்தில் அன்றாட உழைப்பின் மூலம் உடம்பின் எல்லாப் பாகமும் வேலை செய்ய வைத்தார்.அவர் உணவு இயற்கைச் சார்ந்ததாக அவர் வாழும் சூழலில் எந்த நேரத்தில் எந்த உணவுக் கிடைத்ததோ அதை உண்டார். அவருக்கு உணவே மருதாக இருந்தது .இயற்கைச் சார்ந்த வாழ்வியல் அவர்களுக்கு ஒரு சொத்தாகவே இருந்தது . அவரும் நாமும் ஒன்றாக முடியுமா? என் தாத்த வைத்து இருந்த உழவு மாடெல்லாம் அவரை விடவும் உயரமானது.கழப்பை என்னால் பத்து வயதிலும் நகட்டக்கூட முடியாது .எனவே நாம் நம் தாத்தாக்களைப் பற்றிப் பேசுவதும் அவருக்கு (தெரிந்து) வாக்கப்பட்ட இரண்டு பாட்டிமார்களைப் பற்றியும் பெருமூச்சுவிடுவது நமக்குச் சுட்டுப்போட்டலும் இப்போது ஒத்து வராது. 

          மனவேகம்தான் நம் அனைவரையும் மெல்லக்கொள்ளும் வியாதியாக மற்றிக்கொண்டே வருகிறது .மனதில் எதையாவது போடு நிரப்பிக்கொண்டே இருக்கிறோம் .வெவ்வேறு எண்ணங்கள் தொடர்பில்லாமல் கிளம்பி நம்மை அலைக்கழித்துகொண்டு இருக்கிறது.வீட்டுக்குள் நுழைந்தால் டிவி.வெளியில் வந்தால் செல்போன்,கம்யூட்டர் ,பத்திரிக்கை ,வெவ்வேறு நூதன மன அழுத்ததை விதைத்துக்கொண்டே இருக்கிறது.உணவில் அவசரம்,உறவில் அவசரம்,எல்லாமே எல்லா வருமானம் உள்ளோர்களிடமும் பரவி நிற்கிறது நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் நேரம் இல்லை என்று அபத்தமாக பேசி ஒரு கலாச்சாரம் உருவாக்க முயற்சிக்கிறோம்.இப்படி அழுத்தப்பட்ட மனநிலையில் எது நல்லது எது கெட்டது என்ற பிரித்துப்பார்க்கும் ஆறாவது அறிவு குன்றிப்போய் ”ப்ராய்லர்” கோளிகளாய் நாமும் நம் பிள்ளைகளும் வளர்ந்து வருகிறோம்!   



ஒருவரின் பிறந்த நேரம் முதல் இறந்த நேரம் வரை எல்லா இடத்திலும் காலம் முக்கியத்துவம் பெறும்போது அந்தக் காலத்தை எப்படிப் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்த புண்ணியம் அல்லது நம் பாவம் கூடவருகிறதோ இல்லையோ அல்லது வேறு எதுவும் நம் கூட வருகிறதோ இல்லையோ நம் நேரம் சாகும் வரை கூடவே வருகிறது .இதை எப்படி நாம் பயன்படுத்தினோம் என்பது வேறு விசயம் இனி வரும் தலைமுறைகளாவது அதை நல்ல முறையில் பயன்படுத்த பழக்கப்படுத்துவோம் .நாம் பள்ளிக்குக் கிளம்புகிறோம் என்ற பெயரில் தினமும் வீடுகளில் நடத்தும் மகாபாரத யுத்தங்களைத் தவிர்த்து நாம் காலத்திற்கு ஏற்ப அவர்களைத் திட்டமிட்டுப் பள்ளிக்குத் தயார் செய்வதுவும் அதை அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு செய்யவைப்பதுவும் இன்னும் நல்லது. பள்ளிக்கு ரிலாக்ஸாகப் போகும் பிள்ளைதான் பாடத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும் .எதிலும் ஈடுபாடுகாட்ட முடியும் . முக்கியமாக விளையாட்டில் உற்சாகமாகக் கலந்துகொள்ள முடியும் .இது அய்யாதுரைக் குழந்தை முதல்  ஐன்ஸ்டீன் குழந்தை வரை அனைவருக்கும் பொருந்தும்.அதனால் அன்பு,ஒழுக்கம் இதற்கு அடுத்துக் காலத்தைப் பயன்படுத்துவதை நாம் குழந்தைகளுக்குக் கடவுளாகச் சொல்லி வளர்த்தால் கல்வி எனும் சரஸ்வதியோ, லட்சுமியோ நம் வீட்டுக்கதவை தானே தேடி வந்து தட்டுவாள்... 



1 கருத்து:

  1. மிக மிக அற்புதமான பதிவு. பலருக்கும் தேவையானதும் கூட. இதைப் பற்றி நான் ஏற்கனவே என் பதிவுகளில் எழுதியும் உள்ளேன். மற்றொரு விசயத்தை குறிப்பிடவேண்டும். பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை வேளையில் மலம் கழிப்பதை தவிர்த்து அது பழக்கமாகி உடல் இயக்க செயல்பாடுகள் மாறி மெல்ல மெல்ல உடம்பு நஞ்சு போல மாறிக் கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். அடுத்த பத்தாண்டுகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்லீரல் நோயாலும் குழந்தைகள் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளும் உடையதாக இருக்கும் என்பது என் அனுமானம்.

    பதிலளிநீக்கு