வியாழன், 31 மார்ச், 2016

என் இறந்த தினம் ( My Dead Day ) !



பெரியவர்கள் வாழும் அல்லது வாழ்ந்த வீட்டின் தனியறைகளில் , பரண்களில் அல்லது இரும்புப் பெட்டிகளில் ஏதாவது ஒரு ஆச்சர்யம் எப்போதும் ஒளிந்து கொண்டு இருக்கும் என்பதை நம்புவது எல்லோருக்கும் பழக்கமான ஒன்று ! எனது நண்பர் சுகுமார் வீட்டின் பரண்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு மூட்டையிலும் எங்களுக்கான ஏதோ ஓர் ரகசியம் காத்து இருக்கும் ! வீட்டில் யாருமில்லாத போது அனேகமாக எங்கள் வேலை அங்குப் பரணை ஆராய்வது !


அப்படி ஒரு சமயம் மூட்டையை இறக்கிப் பார்க்கும் போது முதலில் சிக்கியது சுகுமாரின் அப்பா தன் கைப்பட வரைந்த ஓர் ஓவிய நோட்டு.அதில் மிக நேர்த்தியான சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய, செதுக்கியது போலான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன .மிகப்பல ஓவியங்கள் ஒளிவுமறைவின்றி வரையப்பட்டு இருந்தாலும் விகல்ப மனம் உள்ளவர்களின் கண்களில் பட்டால் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காகக் குறிப்பிட்ட இடங்களில் சமீபத்தில் வெளியான சாருக்கான் மகள் சுஹானா (Suhana) ’பிகினி’ உடை போன்ற சின்ன மறைப்புகள் இருந்தன.அந்தப் பதினைந்து வயதில் அது ஒருவித உள்ளூரக் குறுகுறுப்பைத் தந்தாலும் அந்தப் பெரியவர்களின் பார்வையில் அந்த ஓவியங்களைப் பார்க்கும் போது , ஒரு மதிப்பையும் பிரமிப்பையும் தந்தது. இவ்வளவு தத்ரூபமான கைப்பட வரைந்த ஓவியங்களின் முதல் கைப்பிரதியை அப்போதுதான் பார்க்கிறேன் . அதற்கு முன் குமுத்தில் ஜெ…(ஜெயராஜ்) படங்களையும் ம.செ….(மணியம் செல்வன்) படங்களை மட்டுமே ஓவியம் என்று நினைத்துக் கொண்டு இருந்த காலம் அது ! 

              அடுத்து எங்களுக்குக் கிடைத்த புத்தகம்  பெயர் இல்லாத பழுப்பேறியக் காகிதங்களையுடைய கனமான ஒரு ஜோதிடப் புத்தகம் .அந்தப் புத்தகம்தான் இந்தப் பதிவுக்கே காரணம்...

அதில் என் மரணத்தைப்பற்றி…. 

        அந்தப் புத்தகத்தின் பல இடங்கள் அடிகோடிட்டு இருந்தன. அந்தக் கிழிந்தப் புத்தகத்துக்கான தலைப்பு பட்டியல் (Index) பகுதி சில பக்கங்கள் தள்ளி மடித்து உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. அதில் எங்களைக் கவர்ந்தத் தலைப்பு..
’ஒருவரின் மரணத்தேதியை எப்படிக் கண்டறியலாம்’
உடனே அந்தப்பகுதியை பிரித்தாராய்ந்துக் கண்டு பிடித்து மிக ஆவலுடன் வாசித்தோம். எனக்கு அதில்... 


”துலாம் ராசி ,சுவாதி  நட்சத்திரத்தில் எட்டாம் அதிபதி தசையில்  ஜாதகனுக்குத் தனது 83 ஆவது பிராயத்தில் ஒரு ஞாயிறுக் காலை சூரிய உதயத்திற்குச் சில நாளிகை முன் மாரடைப்பால் மரணம் சம்பவிக்கும்.” 

அதைப் படித்து விட்டு சாயந்திரம்வரை சுகுமார் வீட்டிலிருந்து விட்டுத்தான் என் வீட்டுக்குக் கிளம்பினேன்.சுகுமாரின் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் .நடந்து போகும்போது மீண்டும் அந்த ஞாபகம் பற்றிக்கொண்டது ..என் வரை வீடு வரும் வரை அதே நினைவுதான் சவலைப்பிள்ளையாய் மனதில் தொற்றிக்கொண்டு வந்தது... உயிரனங்களிலே மனிதன் மட்டுமே தனக்கு மரணம் உண்டு என் தெரிந்து வாழ்பவன் .இருந்தாலும் பதினைந்து வயதில் அந்தபுத்தகத்தின் வரிகள் ஒரு ஆழ்ந்த கலவர அலையை என்னுள் எழுப்பியது .

நான் 13 வயது வரை வளர்ந்த சூழ்நிலையும் அப்படிப்பட்டது .அந்த வயதில் பேய் , செய்வினை ,குட்டிச்சாத்தான் ,ஏவல் என்ற செய்திகள் சதா என் கிராமத்தை இரவுகளானால் இருள் கவ்வுகிறதோ இல்லையோ இந்தப் பயம் கவ்விப்பிடித்துக்கொள்ளும் . இதுக்கெல்லாம் மேலாகத் திண்டுக்கல் - பழநி இருப்புப்பாதை அருகில் ( இப்போது இருக்கும் அங்கு நகர் ”ஹவுசிங்போர்டு” கட்டுவதற்கு முன்னிருந்த கிராமம் ) என்னுடைய புதியஊர்.( ஊர்ப் பெயர் ) அந்த ஊர் அப்போது நகரத்தை விட்டு சுமார் இரண்டு கி.மீ தள்ளியிருந்ததால் தற்கொலை செய்துகொள்ள நிறையப்பேர் எங்கள் வீட்டுக்கு சுமார் ஆயிரம் அடித் தள்ளியுள்ள இரயில் தண்டவாளங்களைத்தான் தேர்வு செய்தார்கள் ! அந்த பகுதியில் போகும் ரயில் திடீரென்று நிறுத்தபட்டு இருந்தால் விபத்து நடந்து விட்டது என்பதாய் புரிந்துகொள்ளலாம்   அந்தக் கிராமம் முழுதும் ஓடிப்போய்ப் பார்த்துவிட்டுதான் மற்ற வேலையைப் பார்க்கப் போவார்கள் . அதில் எங்கள் வீட்டு அண்ணன்கள் நாழ்வரில் இருவர் மட்டும் முதல் ஆளாய் அங்கு போய் நிற்பார்கள் . அவர்களுக்கு அன்று இரவு என்னைப் பயமுறுத்த ஆயுதம் அதுதான் ! 


இங்க பாரு அந்த ஆளு மொட்டையாய் இருந்தான்.( செத்தவன் முடியோடு இருந்தால் பிழைத்து விடவா போகிறான் ?) குடித்து விட்டுத் தண்டவாளத்தில் படுத்து இருந்து இருக்கிறான் .நம்ம முனியாண்டிப் பார்த்து இருக்கிறார். அப்படியே ரயில் வந்து சதக் சதக்ன்னு ஏறி கழுத்து ஒருபக்கம் கால் சிதறி ஒருபக்கம் போயிருச்சு . முண்டம் மட்டும் தண்டவாளத்துக்கு நடுவில கிடந்துச்சு... 
                  அப்படியே தந்தி நிருபர் போல வீட்டுக்கு வந்து  கலந்து கட்டி அடிப்பார்கள் ! அதைக் கேட்டு விட்டு இரவு எனக்கு  இருக்கிற கொஞ்ச நெற்றி பூராவும் இடமில்லாத அளவுக்கு விபூதியை எடுத்துப்பூசிப் பூசிப் பயந்து கொண்டு தூங்குவேன் அந்த மாதிரி இரவுகள் ஏனோ ஆமை வேகத்தில்தான் நகரும்!


               அது மட்டுமல்ல எங்கள் பகுதியில் புளிய மரங்கள் அதிகம் . எல்லாப் புளிய மரங்களுமே பேய் பிடித்தவர்களுக்குக் கழிப்புக் கட்ட பயன் படுத்தியதுதான் பேய் ஓட்டுபவர் பேய் ஓட்டக் கொடுத்த காசுக்கு ஏற்ப பிடுங்கிய தலை முடிகளை இங்குக் கொண்டு வந்து பத்திரமாகப் பெரிய ஆணிகளில் சுற்றி புளிய மரத்தில் அடித்து விடுவார்கள் .கணக்கில்லாத அந்த ஆணிகளில் நீள முடிகளைப் பார்க்கும் போது அது காற்றில் லேசாக அசைந்தால் கூட யாரோ முகம் தெரியாத குரல் ஒன்று என்னைக் கூப்பிடுவது போல ஒரு பிரம்மை எனக்குள் தங்கிக்கொள்ளும். வீடு திரும்பிய அன்றைய இரவில் வரும் கனவுகள் எல்லாமே ஏறக்குறையப் பாதி ரயில் ஓடிக்கொண்டு இருக்கும் யாரோ தள்ளிவிட்டு உருண்டு விழுவது போலவே வரும் ! 

இப்படிச் சிறு வயதில் பயத்தின் பின்னனியிலும் (முன்னனியிலும்) வளர்ந்தாலோ என்னவோ இப்போதும் ”ஹாரர்” படங்களை என் வீட்டில் மனைவியோ மகனோ பார்க்கும் அளவுக்குக்கூட என்னால் தைரியமாகப் பார்க்க முடியாது. தாவணிக் கனவுகள் பாக்கியராஜ் குடும்பத்தோடு படம் பார்க்கப் போன கதையாய், நான் பேய் வரும் சீன்களில் கீழே எதையாவது தேடுவது போல முகத்தைத் திருப்பிக்கொண்டோ கண்ணை மூடிக்கொண்டோ யாருக்கும் தெரியாமல் சமாளித்துத் தப்பித்து விடுவேன் ! 

இதை மறக்க நினைத்த சில மாதங்களுக்குள்,மேலும் ஒரு சம்பவம் … 

நான் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும் போது ஒரு நாள் அந்த வழியாய் வந்த கிளி ஜோதிடக்காரர் ரூபத்தில் ஒரு பிரச்சனை வந்தது! பொழுது போக்காய் ஜோதிடம் பார்த்ததில் எல்லோருக்கும் ராமன் , சீதை என்று மங்களம் பாடிய கிளி என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை ,எனக்குக் எடுத்த சீட்டில் யாரோ கூண்டுக்குள் சிறைபட்டு நிற்பது மாதிரி ஒரு படம் எடுத்து தந்து ஒரு நெல்லைக் கவ்விக்கொண்டு மீண்டும் கூண்டுக்குள் சிறைப்பட்டது .அதற்குக் கிளி சாமி பலன் சொல்லும்போது ஒரு குண்டைப் போட்டார்..



…தம்பிக்கு நேரம் இந்த ஒரு மாதம் மிகவும் சரியில்லை.யாரோலோ கூண்டேறி ஜெயிலுக்குப் போகணும்ன்னுக் குறி சொல்லுது .இந்த ஒரு மாதம் யார் வீட்டிலும் தங்கக் கூடாது ,பொழுது சாயறதுக்குள்ள வீடு வந்து அடையணும் என்றவர் அதோடு நிறுத்தவில்லை …முக்கியமாப் போலிசுப் பிரச்சனைன்னு ஒரு நாளாவது தம்பி கூண்டேற விதியிருக்குன்னு சொல்லுது .. 

        என்று கிளியைக் கூண்டிலிருந்து வெளிவிட்டு என்னைக் கூண்டுக்குள் அடைத்து விட்டார் அந்த மனிதர் !.வீடு பயந்து விட்டது.அரண்டவன் கண்ணில் இருண்டதெல்லாம் பயம் என்பது போல ஆகிப்போச்சு .

ஆனால் அந்தக் கிளி சாமி சொல்லிச் சென்று முப்பது நாளுக்குள் காலை எழு மணிக்கெல்லாம் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அரக்கப் பரக்க மூச்சு வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்தார்.வந்தவர் திண்டுக்கல் மாணிக்கம் செட்டியார் மளிகைக் கடையில் பொட்டலம் மடிப்பவர். எழுதப் படிக்கத் தெரியாதவர் மூணு நாளாக மனிதர் குடும்பத்தோடு கொழுந்தியால் திருமணத்தைக் கொண்டாடத் தேனி போயிருக்கிறார் .இவர் இல்லாத வாடகை வீட்டில் திருடன் வந்து பொருளெல்லாம் எடுத்துக்கொண்டு இங்கே கொண்டாடி விட்டுப் போய் விட்டான் .காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் துணைக்கு எழுத படிக்கத் தெரிந்த ஆள் வேண்டுமென்று என் அம்மாவிடம் கேட்க அவர்களும் கிளி ஜோதிடம் மறந்து போய் இரக்கப்பட்டு அனுப்பி விட்டார்கள் . 
    காவல் நிலையத்திற்குக் காலை ஏழரைக்கு (அப்படித்தான் அரம்பித்தது) போனோம். அய்யா (காவல் துறை துணை ஆய்வாளர்) வரும் வருவதற்குள், அப்படியே அடுத்தத் தெருவில் உள்ள கடையில் இரண்டு குயர் பேப்பர்,ஒரு பேனா, வயர்லெஸ் பேட்டரிக்கு இரண்டு பாட்டில் டிஸ்டில் வாட்டர் வாங்கிக் கொடுத்துவிட்டுக் காத்து இருக்கச் சொன்னார் .பத்தரைக்கு வந்தார் அய்யா.வந்தவுடன் மற்றதெல்லாம் விசாரித்த அய்யா கடைசியில் இவரை விசாரித்தவர்,

      யாரைக்கேட்டு மூணு நாளெள்லாம் ஒம் பாட்டுக்கு பூட்டிட்டு போற ? ஒரு வார்த்தை இங்க வந்து சொல்லிட்டு போயிருக்கல்லாம்ல நாங்க அந்தப் பக்கம் ஒரு கண் வச்சு இருப்போம்ல ? என்றார் . 
 அவர் அக்கறைப்படுகிறாரா ? இல்ல சொல்லிட்டுப் போயிருந்தா இவரே எல்லாத்தையும் ஆள் வச்சு அள்ளி அனுப்பியிருப்பாரோ தெரியவில்லை! எனக்கு அந்தச் சமயத்தில் சிரிப்பு வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . ஆனால் அடக்கிக்கொண்டேன்.(ஒருவேளை என்னை ஜெயிலில் போட்டு விட்டால் ?) 


அப்புறம் இரண்டு காவலர்கள் எங்களுடன் வீடு வந்து கை வைக்காமல் சோதித்தார்கள்.பிறகு தடயவியல் நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்து ஒரு பெண்ணும் ஆணும் வந்தார்கள்.கதவு ,டேபிள் ,பரண் ,பீரோ,எல்லாப் பக்கமும் ஒரு பவுடர்த் தூவி பிறகு மெல்ல ஒரு பிரஸ் வைத்துத் தேங்யிருந்த ரேகைப் பதிவுகளை ’லென்ஸ்’ வைத்துப் பார்த்தார்கள்.போட்டோ எடுத்தார்கள்.இதில் ஒரு விசேசம் எனக்கு அப்போது தெரிந்தது.திருடர்களில் கூட இரண்டு வகைகள் இருக்கிறார்களாம் . ஒருவன் பணம் மற்றும் நகைகள் மட்டும் திருடுபவன் ,இன்னொருத்தன் அண்டாக் குண்டா வெள்ளிப்பாத்திரம் மட்டும் திருடுபவனாம்.அந்த வீட்டில் திருடியவன் இரண்டாம் வகை. அவர் வீட்டில் பித்தளைபாத்திரம் , வெள்ளிக்குத்து விளக்குகள் மட்டுமே களவு போயிருந்தன .பீரோவில் துணிக்கடியில் (அவருக்குக் கூடத் தெரியாமல் அவர் வீட்டு அம்மா ( மனைவி ) வைத்து இருந்த பணமெல்லாம் அப்படியே இருந்தது. அந்தச் சம்பவத்தை நம் இயக்குனர் சசிகுமார் வார்த்தையில் இப்போது சொல்ல வேண்டுமென்றால்  , ‘பொருள் மட்டும்தான் திருடுவேன் என்ற அந்த திருடனின் நேர்மை எனக்குப் பிடித்து இருந்தது !’ 

இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஜோதிடத்தில் நம்பிக்கை வந்ததோ இல்லையோ ஒரு சுவாரசியம் வந்தது சரி நமக்கு உண்மையில் என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பார்க்க ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்டப் போதுதான் தெரிந்தது வீட்டில் யாருக்கும் முழுபலன்களைக் கணித்து ஜாதகம் நோட்டுக் கிடையாதாம்.பிறந்த போது எழுதிய குறிப்பு மட்டும்தான் இருந்தது.அதை எழுதியவரிடமே கொடுத்து முழுதாய் விரிவாக எழுதிக்கொள்ள அப்ப அந்த ஜோதிடரின் முகவரி சொன்னார் அவர் ஜோதிடர் மட்டுமில்லையாம் சிவன் கோவில் பூசாரியும் கூட .திண்டுக்கல் அரண்மனைக்குளத்தருகே (பேருந்து நிலையத்திலிருந்து மதுரைச் செல்லும் வழி ) அவர் வீடு தேடிப்போனேன் .சிவன் கோவில் பூசாரி என்பதால் உடனே வீட்டு அடையாளம் சொல்லி அனுப்பினார்கள். 

வீட்டு வாசலில் புதிதாய்ப் பந்தல் போடப்பட்டு இருந்தது.வாசலில் மத்திம வயதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
அவரிடம் ஜோஸ்யக்காரர் வீடு இதாங்களா ? என்றேன் .
ஆமாம் என்றார் .
அவரப் பார்க்க முடியுங்களா? என்றேன் .
அவரை என்னை உற்றுப்பார்த்து விட்டு ,

அவர் இறந்து இன்னைக்கோட மூணு நாளாகுது என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக