வெள்ளி, 19 ஜூலை, 2013

நிர்மலாவின் கடிதம்



                அன்று வந்த கடிதங்களை வாசிக்க வகைப்படுத்தும்போது , முதலில்  சோவியத்யூனியனின் - மாஸ்கோ வானொலி நிலைய உறுப்பினர் வண்ண அட்டை , BBC தமிழோசையின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் அடுத்து அனுப்புனர் பெயரில்லாத  இலங்கையிலிருந்து ஒரு  கடிதம் .

 வானொலி மன்றம்.


                 இது எனக்கு ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .உலகம் முழுதும் செயல் படும் வெளி நாடுகளில் உள்ள  தமிழ் வானொலிகளுக்கு மட்டுமே கடிதம் எழுத நண்பர்கள் பலர் சேர்ந்து, மன்றம் வைத்து இருந்தோம். (பெயர்: சமாதான சகோதரர்கள் வானொலி மன்றம்.  அமெரிக்காவால் சோவியத்யூனியன் (USSR) உடைக்கப்படும் முன் அதன் அதிபர்  மிக்காயேல் கார்பச்சேவ் - நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட உறவினை கொண்டாடும் விதமாக, இந்த பெயர் )அப்படியிருந்தும் சின்ன வயது முதல் கேட்டு வரும் இலங்கை வானொலிக்கு  கடிதம் எழுதும் ஆர்வம் இல்லை .மேலும் அது வானொலி நிலையக்கடிதம் என்பதை அதன் அடையளங்கள் சொல்லவில்லை  அப்படியானால்..

               எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் கடிதத்தை உடனே படிக்கமாட்டேன் .ஆனால் அந்த விரதம் அடுத்த நாள் கோவை பேனா நண்பர் முருகேசன் கடிதம் வரும்வரைதான்  .அதில் இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா என விசாரிக்கபட்டு இருந்த போதுதான் எனக்கு தெரிந்தது .அது அவரின் நீண்ட நாள் தோழி நிர்மலாவால் அனுப்ப பட்டதென்று .



            பிரபலங்கள் எழுதிய கதைகளை தாங்கி வரும்  பல்சுவை நாவல் படிப்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாக கருதபட்ட சமயத்தில் அதில் வாசகர் வட்டம் ஏற்படுத்தியிருந்தார்கள் .அதன் மூலம் எனக்கு கிடைத்த பல நண்பர்களில் கோவை கலர் சாலை தோட்டத்தை சேர்ந்த முருகேசனும் ஒருவர் .பல மாதங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து உறவுகளை மேம்படுத்தி கொண்டு இருந்த போது ,அவர் எனக்கு எழுதிய கடித்தத்தில் தனக்கு இலங்கையில் நிர்மலா என்ற தோழி இருப்பதாகாவும்  என்னுடய சில தவறுகளால் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்வதில்லை என்பதாகவும் ஆனால் அவர்கள் மிகவும் தனது  சொந்த வாழ்வின் கசப்பான அனுபவங்களால் தவிப்பதாகவும் ,அவர்களுக்கு உங்களின் நட்பு ஆறுதல் தரும் என்பதால் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பிட்ட கடிதம் வந்து சில மாதங்களுக்கு பிறகே இந்த நிர்மலாவின் கடிதம் .



            கடிதம் மிக அழகிய இலங்கை தமிழில் அழகான மிக விசாரிப்புகளுடன் நீண்டதாக இருந்தது .பொறுமையாக படித்தபோது ,இங்கு நாம் வழக்கில்  தொலைத்த  பல  தமிழ் வார்த்தைகள் என்னை திணறடித்தன ஆனாலும் ஒரு மெல்லிய ஆழமான நட்பின் தேடல் கடிதம் முழுதும் என்னை ஆக்கிரமித்தன ..



           பிறகு மாதம் ஒரு கடிதம் வர தொடங்கியது .தான் ஒரு இளமை  பிராயத்தில் அறியாமல் ஒருவரை காதலித்து கைவிட பட்டதாகவும் இதனால் வீட்டில் பெற்றோர்களின் அன்பை இழந்ததாகவும்  , இப்போது படித்து விட்டு வேலைக்கு போன இடத்தில்  பல ஆண்டுக்கு பிறகு  மீண்டும் ஒருவரை காதலிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .ஆனால் அது திருமணம் வரை போக  சில சிக்கல்கள் இருந்தன. தனது காதலன் ஒரு சிங்கள வம்சாவளி என்பதால் ,அவர்கள் வீட்டில் சம்மதம் தடுமாறி கொண்டு இருப்பதாகவும் , அதனை பேசி முடிக்க அடுத்த மாதம் என் மேல் மிகவும் பாசம் உள்ள இரண்டாவது அண்ணன் வருகிறார்  என்பதகாவும்  அது நல்லபடியாக நிறைவேற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டு இருந்தார் நிர்மலா .

         ஆனால் ,அடுத்த மாதம் கடிதம் வரவில்லை .எனது இரண்டு கடிதங்களுக்கும் பதில் வரவில்லை ,மேலும் அப்போதுதான்  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கை தீவை தனது கட்டுபாட்டில் வைத்து கொண்டு இருந்தது .இதனால் இனம் புரியாத கவலை என்னை துரத்த தொடங்கியது .அதர்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக மூன்றாவதாக நான் எழுதிய கடிதம் எழுதினேன் .ஆனால் அதை அனுப்பும் முன் ஒரு கடிதம் 1987 டிசம்பர் மாதம் வந்தது .ஆனால் அது கடிதம் அல்ல எனக்கு தண்டனை !.




                 ஆம் .அந்த கடிதம் வந்தது நமது  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) அங்கு சென்ற சமயத்தில் 1987 அக்டோபர் 5 ஆம் நாள்  புலிகள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு கொள்கை அளவில் முரண்பாடு ஏற்பட்டதால் .(இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய உளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.)



             புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது .இந்த போரில் நிர்மலாவின்  காதலன் வீட்டு அருகே நடந்த புலிகளுக்கும் - நமது  அமைதிகாக்கும் படைக்கும் நடந்த யுத்தத்தில் நமது இந்திய ராணுவ வீரனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட ஒரு குண்டின் சிதறல் தவறிபோய் நிர்மலாவின்  காதலனின் வயதான பாட்டியின் காலில் பாய்ந்து இறந்து போகவே மீண்டும் கை கூட இருந்த நிமலாவின் உறவு இந்த காரணத்தால் மறுதளிக்கப்பட்டதாம் .

            இதில் மனம் உடைந்து போன தனது அண்ணனை  சில நாளுக்கு பிறகு இலங்கை ராணுவத்தால் விடுதலைபுலி என்று சந்தேகப்பட்டு வாயில் சுடபட்டு நடு ரோட்டில் கொல்லபட்டதாகவும் ,தனது அன்பு வாழ்கையும் , எனது மேல் பாசம் காட்டிய ஒரே ஜீவன் அண்ணன் இறப்பும் ,தனது வாழ்வில் மீளா சோகத்தில் தள்ளிய பின் நான் எங்கு போகிறேன் எனக்கு தெரியவில்லை ,எனவே மீண்டும் நான் இதை எல்லாம் தாங்கி கொண்டு பிழைத்து வந்தால் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என முடிந்திருந்தது அந்த கடிதம் ..



              எனக்கு தெரிந்த ஒரு நிர்மலாவின் நிலையே இவ்வாறு என்றால் இப்போது எத்தனை நிர்மலாவின் வாழ்கையின் சீரழிவை அந்த ராவண பூமி விதைத்து இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் ...

       வரலாறு ..( என்ன சொன்னாலும்  அங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பது வெறும் இரக்கமற்ற காகிதங்கள் மட்டுமே ! )




          காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர்.அன்றைக்கு கலிங்க நாட்டினில்(இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) இருந்து வெளியேற்றப்பட்ட  போரில் தோற்று ஓடிய  (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது) ஒரு இனக் குழுவின் இளவரசன்-விஜய சிங்கன் என்பவன் அங்கிருந்து  தெற்கே பயணித்து, இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும்(இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது )அங்கு இருந்த  தமிழ் பெண்  இளவரசி குவேனியை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான் உண்மை .இதர்க்கு சாட்சி



                    இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று? ( நன்றி - http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/2.html)



                இனி , ஒண்ட வந்த பிடாரிக்கும் ஊர் பிடாரிக்கும் வித்தியாசம் யாராவது காட்ட வேண்டும் என்றால் இந்திய வரைபடத்தில், தமிழகத்தின் தொங்குசதையாக இருக்கும் பார்வதியின் சாபம் பெற்ற ராவணத்தீவை காட்டுங்க்ள் 

திங்கள், 15 ஜூலை, 2013

திருட்டு ரோஜாக்கள்


                                             
                                         
                                       திருப்பூரில் ஒரு திருமண வரவேற்பு விழா லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது .மண்டபத்தின் நுழைவு வாயிலில் பலவகையான ரோஜாக்கள் மற்றும் பல மரக்கன்றுகள் இலவசமாக கொடுத்து கொண்டு இருக்க ,சரி நாம் வரும்போது வாங்கி செல்லலாம் என பேசிக்கொண்டு உள்ளே சென்றோம்.


                           இந்த வரவேற்பு முக்கிய நிகழ்சிகள் திருப்பூர் மனவளக்கலை அமைப்பினர் தலைமையில் சிறப்புற செதுக்கப்பட்டது போல மிக அழகான வகையில் அர்த்தத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                   எந்த கல்யாணத்திலும் பார்க்காத வகையில் மணமகனின் தந்தையும் , தாயும் வந்தவர்களை வரவேற்க்க ,அமர்ந்து இருக்கும் இடத்திற்கே வந்து வரவேற்று அசத்தினார்கள் .


                                                 அடுத்து சென்னை அனுஷம் வித்தியாசமான குழுவினரின் நாட்டிய நடன கலைநிகழ்ச்சி அரங்கேறியது .பொதுவாக இம்மாதிரி நிகழ்சிகளில் திரைபாடல்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதை தவிர்த்து நிறைய கருத்துருக்களை வைத்து அசத்தினார்கள் .இதில் உச்சகட்டமாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைத்து "நூறுவருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும்தான் " என்ற படலை ஒலிக்க செய்து, ஆட விரும்பிய பார்வையாளர்களையும் மேடைக்கு அழைத்து கொண்டாடினார்கள் .


                                             நினைவுபரிசாக வந்திருந்த அனைவருக்கும் ஒரு பரிசுபையை தந்தார்கள் .அதில் 1.வேதத்திரி அவர்களின் லேமினசன் படம் .2.வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு ...(கையடக்க புத்தகம்) .3. இல்லம் சங்கீதம் என்ற ஒரு கட்டுரை தொகுப்பு (அழகிய படங்களுடன் + முக்கிய தொலைபேசி எண்கள் ) 4.திருப்பதி +பத்மாவதி திருகல்யாண வண்ணப்படம் .5.மந்திரங்கள் + இறைப்பாடல்கள் அடங்கிய 1.05 G.B அளவுள்ள DVD என அருமையாக யோசித்து அளித்து இருந்தார்கள் .


                                                பொதுவாக இந்த கல்யாணங்களில் பபே ( Pafe ) முறைப்படி மட்டுமே வழங்குவார்கள் .ஆனால் இங்கு வழக்கமான முறையும் இருந்தது .( கையேந்தி பவனில் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு! )


                            எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக மண்டபத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பல வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள் .அங்குதான் நம் மக்களின் மனம் ஆரோக்கியத்தை கண்டோம் .இலவசமாக தந்தால்  அனைவருக்கும் சென்று அடையும்  என்ற கொடுப்பவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் ஒன்றுக்கு பல கன்றுகளை அள்ள , பாவம் பலபேர் ஒன்று கூட கிடைக்காமல் புலம்பிகொண்டார்கள் .

 வினோத திருட்டு!

                              நாங்கள் வண்டி நிறுத்தும் இடம் வந்த பொது ஒரு உண்மை  அப்போதுதான் தெரிந்தது .அங்கு நிறுத்த பட்டு இருந்த பல வாகனங்களில் பல  அற்புதமான செடிகள் பாலி பேக்குகள் வைத்து பலவிதமாக தொங்கிகொண்டு இருந்தன .இந்த வினோத திருட்டுதான் பல பேரை ஏமாற்றி விட்டது .சில பேர் போகும்போதே  ( வந்ததே இதர்க்காக என்பதாக  - விவரமாக முன் கூட்டியே !) நிறைய வாங்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள் .


             இப்படி திருட்டுக்கு சமமாக எத்தனைபேருக்கு போகவேண்டிய செடிகள் அந்த வண்டிகளில் தொங்கிகொண்டு இருக்கிறது ? அதில் நிறையபேரின் பெயர் இருப்பது போல மானசீகமாக எனக்கு பட்டது !!! .
                     

                                             

வியாழன், 30 மே, 2013

போலிஸ் ,குற்றவாளி ,நாங்கள் .


 போலிஸ் ...
                                   தருமபுரி மாவட்டதில்  புற நகர் பகுதியில் அந்த பிரதான சாலையை ஒட்டி இருக்கும் மூன்று வீடுகளை குறிவைத்து  வந்த அந்த டெம்போ ட்ராவலர் வேன் மெதுவாக யார் கண்ணிலும் படாமல் ஓசை குறைத்து  நின்றது . உள்ளே இருந்து மூன்று நபர்கள் இறங்கினார்கள் .மிக சாதாரண தோற்றத்தை கொண்ட அவர்கள் உடை சுருக்கங்கள் வெகு தூர பயனத்தை அனுபவித்ததாக சொன்னது .முதல் வீடு நோட்டமிட்டபோது அது பூட்டி இருந்தது .வீட்டூக்கு வெளியே ஒரு ஆடு இவர்களை கண்டு மிரண்டு பின் வாங்கி தவித்தது .


அடுத்தவீட்டை நெருங்கினர்கள் .

ஒரு பெண் பாத்திரம் கழுவி கொண்டே , யாரு ? என்றது .

வந்தவர்களில் ஒருவர் ரவி இல்லையா ? என கேட்டு கொண்டே அந்த பெண்ணை நெருங்கினார் .

அதர்க்குள் ஒரு மூன்று வயது பெண் வீட்டுக்குள் இருந்து இவர்களை பார்த்து கொண்டே ஓடிவந்து,

அந்த பெண்ணிடம் ,யம்மா தம்பி அழறான் என்றது .

அதர்க்குள் மூன்றாவது வீட்டுக்கு நெருங்கய மூவரில் ஒருவர்  உள்ளே நோட்டமிட்டார் ..அந்த வீட்டின் அமைப்புக்கு சம்பந்தமில்லாமல் அந்த பொருள் அவர் கண்னை உறுத்தியது .
மற்ற இருவர்களையும் நோக்கி இங்கே வாருங்கள் என்று அவர் வேகமாக கையசைக்க,
 அதர்க்குள்,
அந்த பெண் வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டை நோக்கி,
அக்கா என்று ஒரு வித பயத்துடன் கூப்பிட ...
அந்த மூன்று வயது சின்ன பெண் எதுவுமே புரியாமல் அழ தொடங்கியது ...

                  வந்தவர்கள், குற்றப் புலனாய்வு துறை ( Crime Branch ) அவர்கள் தேடி வந்தது ஒரு திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ரவி என்ற   நபரை   . ஏற்கனவே அவன் பல வழக்குகளில் சம்பந்தபட்டவன் .அவர்கள் புதியதாய் ஒரு  குறிபிட்ட திருட்டு குற்றதின் குற்ற முறை மற்றும் குற்ற பின்னனி இந்த ரவியின் குற்ற பதிவுகளுடன் ஒத்து போனதால் தேடிப்போனார்கள் அங்கு .ரவி அங்கு வருவதே இல்லை என வீட்டார்கள் சொன்னார்கள் .
        ஆனால் அவர்கள் பார்த்த மூன்றாவது வீட்டு ஆள் பெயர் விசாரித்தபோது  இது வரை அவன் எந்த காவல்துறை குற்றவாளி பட்டியலில் இல்லாதவன் . அவன் வீட்டில் பார்த்தது வித்தியாசமாக உணர்ந்தது விலை உயர்ந்த வெளி நாட்டு ஒரு சுவர் கடிகாரம் .

             வந்து இருந்த காவல் துறையின் ஒரு உதவி கண்காணிப்பாளருக்கு வேறு ஒரு பழையதிருட்டு குற்றதில் காணாமல் போன பட்டியலில் இந்த விலை உயர்ந்த ஒரு சுவர் கடிகாரமும் ஒன்று என உள்ளுணர்வு சொல்லியது .காலம் நேரம் பார்க்காமல் குற்றவாளியை தேடி அலையும் தமிழ்நாட்டு காவல் துறையின் மிக பெரிய சொத்து இந்த உள்ளுணர்வுதான் .

                உடனே ,இழந்தவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது  .அப்படியானல் இந்த வழக்குக்கும் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி ரவிக்கும் இந்த புதிய நபர் சந்தோஷ் என்ற சந்தோஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பது ஒரு புதிய கோணத்தில் குற்றத்தை தேட காவல்துறைக்கு வேலை வந்தது .

             இது மேலும் ஒரு தலைவலி .தேடி வந்த குற்றவாளியும் இல்லை .ஏற்கனவே போய் கொண்டு இருக்கு தேடலில் புதிய திருப்பம் வேறு ஏற்பட்டுவிட்டது .காவல்துறை உள்ளூர் துப்பு தரும் இன்பார்மர்களிடம் இந்த வீட்டை கண்காணிக்க அறிவுறுத்திவிட்டு திரும்பியது .


குற்றவாளி ...
                               சந்தோஷ் ஒரு சோம்பேறி .ஒரு வேலையும் தொடர்ந்து செய்ய பிடிக்காது .ஆனால் கல்யாணம் ஆன மூன்று வருடத்திர்க்குள்  சாந்தி . சச்சின் என்ற இரண்டு குழந்தைகள்  .அதனால்தான் புதிய வேலைக்கு போக ஆசைப்பட்டு கார் ஓட்ட கற்று கொண்டான் சில மாதங்களாக லோக்களில் உள்ள டாடா ஏஸ் (சின்ன யானயை 0 மூலம்   சின்ன ,சின்ன வாடகை போனான் .சொற்ப வருமானம்தான் .

                அவன் மனைவிக்கு அவன் கூலி வேலைக்கு போவது மட்டும்தான் பிடித்தது .அதனால் தன் அப்பாவின் உதவியை கார் வாங்க சந்தோஷ் கேட்க சொல்லியும் மறுத்து வந்தாள் .

               ஆனால் சந்தோசுக்கு வெகு நாளாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை .இதை அவன் அண்ணனின் சொன்னான் .அவன் தன்னுடய நண்பன் ரவியிடம் சொல்ல,அதர்க்கு ரவி , சரி நம்முடன் வரட்டும் , ஒட்டும் திறமை பார்த்து ஏற்பாடு பண்ணலாம் என சொல்ல, அடுத்தவாரமே சந்தோஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் .
அவனுக்கு தேவை கார் .

              முதன் முறையாக ஆம்னி வேன் ஓட்ட கொடுத்தார்கள் .அவர்கள் சொன்ன ஊர் வரை ஓட்டி போனான் . ரவி அண்ணன் வண்டி நன்றாக ஓட்டுவதாக  பாராட்டினார் .
             ஊருக்குள் சில இடங்களில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு ,அண்ணனும், ரவியும் போய் வந்தார்கள் .திரும்ப வந்தவுடன் ,ஒரு தியேட்டருக்கு வழி கேட்டு போக சொன்னார்கள் .


மதிய நேரம் .ஒரு திரைபடம் அரங்கு போனார்கள் .
மாலை ,படம் விட்டு தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏற்கனவே போன இடத்திர்க்கு போக சொன்னார்கள்.

நீ போன் எங்களுக்கு பண்ணவேண்டாம் .நாங்கள் போன் பண்ணினால் வந்தால் போதும் அது வரை வேறு  எதாவது இடத்திர்க்கு போய் வா என்று  சொல்லி விட்டு போனார்கள் .

போகும் போது காரின் சீட்டுக்கு அடியிருந்து  ஒரு கனமான பேக்கை அண்ணன் எடுத்து கொண்டு போனான் .
அவர்கள் போவதை பார்த்து விட்டு ,எங்கு போவது தெரியாத ஊரில் யோசித்து கொண்டே சந்தோஷ் வண்டியை கிளப்பினான் ...


      போன் வந்தது .அவசரமாக பேசினார்கள் .முன்னால் சொன்ன இடத்திர்க்கு பக்கத்தில் வர சொன்னார்கள் .கையில் மேலும்   ஒரு பையுடன் ஏறினார்கள் .வேகமா ஓட்டு என்று அண்ணன் சொல்ல ,நேரே வண்டியை சேலம் விடு என்றார்கள் .அவர்கள் எதுவும் அப்புறம் பேசவில்லை .அண்னன் தூங்கிவிட்டான் .ரவி மட்டும் மெயின் ரோடு வழியாக செல்லாமல்  வழி சொல்லி கொண்டே வந்தார் .

நாங்கள் ...

     அந்த வெளி நாட்டு சுவர் கடிகாரத்திர்க்கு சொந்தகாரருக்கு நான் நண்பன் என்பதால் இதுவரை இப்படி நடந்த   இந்த மேற்கண்ட சம்பவங்களை ,திருட்டில் பிடிபட்ட மூவரில் ஒருவனான் சந்தோஷ்  காவல் துறையிடம் பிடிபட்ட பிறகு அவனுடன் இருந்த மூன்று நாட்களில் என்னிடம் சொன்னான்
   பொதுவாக இந்த மாதிரி திருட்டை தொழிலாக ஆரம்பிப்பவர்கள் எதாவது ஒரு காரணம்   சொல்கிறர்கள் .பிறகு சிக்கி கொண்டு தண்டனை அனுபவித்த பிறகு மீண்டும் வேறு வழி இல்லை என்றும்  அப்படி பட்ட முத்திரை குத்திய பிறகு, திருந்த வாய்ப்பு குறைவு என்பதாக சொல்லிகொண்டு அதையே  தொடர்கிறார்கள்..


Recovery

       இந்த வழக்கில் இப்போதைக்கு மாட்டி கொண்டவன் சந்தோஷ்.அவன் தாங்கள் திருடிய குற்றத்தை ஒப்புகொண்டு திருடிய பொருள்களை விற்ற இடங்களை! காட்டி கொடுப்பதாக காவல்துறையும்  மற்றும் திருடபட்ட  பொறுளை அடையாளம் காட்ட நாங்களும் (நண்பருக்கு துணையாக நானும்) கிளம்பினோம் ..இம்மாதிரி பொறுள் மீட்டலுக்காக  போவதர்க்கு  Recovery என்பதாக காவல்துறை சொல்கிறது


வீடியோ படம்.
         இம்மாதிரி பொறுள் மீட்டலுக்கு ( Recovery ) போகும்போது காவல்துறை  தன்னுடன் ஒரு வீடியோ படம் எடுப்பவரை கூட்டிகொண்டு போகிறது .இந்த இடத்தில் நான் வைத்து இருக்கவோ ,விற்கவோ திருடிய பொறுளை கொடுத்தேன் என்று குற்றவாளி சொல்பவரை விசாரிக்குபோது வீடியோ படம் எடுப்பதர்க்காகவாம் !


 அதிர்ச்சி !!

      சந்தோஷ் பெங்களூர் வரை, மூன்று நாட்களில் பல இடங்களை காட்டினான் .அதில் பெரும்பாலும் நகை கடைகள் என்பது அதிர்ச்சி தந்த விசயம்.
மற்றவர்கள் ப்ரோக்கர்கள் போன்ற இடைதரகர்கள் ஒத்துகொண்டவர்களிடம்  நகை பெற்றுகொள்ளபட்டு அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது .ஒத்துகொள்ளாதவர்களிடம் வழக்கு பதியபட்டது .காரணம் குற்றவாளியே நேரில் வந்து சொல்லியும்  அவர்கள் இல்லை மறுப்பதால் அதை அவர்கள் பக்கம்  நிரூபிக்க வேண்டும் என்பதால் .

குற்றவாளி்யா நான் ..
          ஒரு இடத்தில் இம்மாதிரி ஒரு விசாரணையின் போது கூட்டம் கூடி விட்டது .அந்த பகுதியில் உள்ள அனைத்து நகை கடைகளும் மூடிவிட்டு,கடைக்காரர்கள் ( அவர்கள் சங்கம் ) ஒன்று கூடி காவல்துறையை எதிர்த்து குரல் கொடுக்க,வழக்கம்போல பத்திரிக்கை துறையும் கேள்விபட்டு ஓடிவந்து சரமாரியாக நாங்கள் இருந்த காவல்துறை வேனுக்குள் இருந்த குற்றவாளியை படம் எடுக்க முன்னேற   அப்போது வேனுக்குள் நான வேனின் சீட்டில் உட்கார்ந்து இருக்க, எனது சீட்டுக்கு பின்னால்  குற்றவாளியை மறைத்து கீழே உட்கார வைத்திருந்தார்கள் ( மற்ற காவல்துறையின பிரச்சனையை எதிர்கொள்ள வேனின்  கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றி வேனின் கதவுகள் அன்னைத்தும் பூட்டி விட்டு வெளியே இருந்தார்கள்) .போட்டோ எடுத்த பத்திரிக்கை தோழர்களிடம் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை - அதனால் அடுத்த நாள் பத்திரிக்கையில் குற்றவாளி என்ற இடத்தில் என் படம் வேனுக்குள் இருப்பது போல வந்தது .


இழந்தவனே ஜாமீன் கொடுக்க  வேண்டும் .

          மீட்ட பொறுளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ,பிறகு ஒருநாள் நண்பரை அழைத்து ஒரு நகை மதிப்பீட்டாளர் முன் மீட்ட நகைகள் சோதிக்கப்பட்டு ( ஒருவேளை மீட்ட பிறகு மாறி இருக்கலாம் அல்லது போலி நகையே மீட்க்கபட்டு இருக்கலாம் என்பதர்காக )அந்த நகையை பெற சொந்த வீடு வைத்து இருக்கும் இரண்டு நபர்கள் நண்பருக்கு ஜாமின் கொடுத்த பிறகு நீதிமன்றம் கொடுத்தது .


        இங்கு,இது  நீண்ட பதிவாகிவிட்டதால் - சந்தோஷ் என்ற குற்றவாளியுடன் மூன்று நாட்கள் இந்த தேடலில் இருந்த போது, ஏற்பட்ட அனுபவங்களை வேறு ஒரு பதிவில் சொல்ல ஆசைப்படுகிறேன். 

செவ்வாய், 14 மே, 2013

கவிதை பருவம் ...




சில சிலிர்ப்புகள்..
                       கவிதை என்பது உணர்வா , தாக்கமா, வார்த்தைகளின் நளினமா ,என்பதை  ஆய்வு செய்யும் அளவுக்கு  அறிவு இல்லை .ஆனால் எனக்கு அந்த கவிதை நெய்யும் இயல்பு பூத்த போதெல்லாம் எனக்குள்ளே சில சிலிர்ப்புகள் நிகழும்  .அதை ஆராதிக்க மனசு பர பரக்கும் .ஆனால் அப்போதெல்லாம் கவிதையின் அர்த்தம் தேடி போகவில்லை .
எங்கோ எழுதி இருக்கிறது..
                       ஒருவேளை   ”கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில் இருக்கிறது” எனும் வின்செஸ்டர் வாக்கியங்கள் படித்து விட்டோ ,கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை; மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’என்ற புதுமைப்பித்தனின் கருத்தை பின்பற்றி இருந்தாலோ இரண்டு நல்ல விசயங்கள் நடந்து இருக்கும் .ஒன்று நான் கவிதை எழுதும் வெலையை  செய்யாமல் இருந்து இருப்பேன் .அல்லது இன்னும்  சரியாக செய்து இருப்பேன்.சரி என்ன செய்ய ?பல நண்பர்கள் என்னிடம் அவஸ்தைப்பட வேண்டும் என எங்கோ எழுதி இருந்து இருக்கிறது.      
   இறைப்பணி.             
              எனது 13 வயதில் ,மார்கழி மாத காலை நேர விளக்கு பூஜை நடத்தும் வீட்டுக்கு, பக்கத்தில் உள்ள முருகன் கோவில் போவதும்,அங்குள்ள அர்ச்சகருக்கு உதவுவதும் எனக்கு பிரியமான வேலை அதாவது இறைப்பணி ஆர்வம் .மற்றபடி பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பூஜை என்பதால் ஒருவித கூச்சம் இருக்கும் .
      முதல் வரி.         
            அப்படி ஒரு நாள் பௌர்ணமி நாள் காலை வேளையில் கோவிலுக்கு போகும்போது நிலவு ஒளி என் மேல் பட்டு எனக்கு பின்னால் என்னை தொடரும் என் நிழல் ஒருவித மன பாதிப்பை ஏற்படுத்த அதை ’நிலவு மகள் உலவி வர என் கற்பனை  அவளை தழுவி வர .. என ஆரம்பித்த அந்த முதல் வரிகளை எனது இரண்டாவது சகோதரர் முதல் ரசிகராய் படித்து உற்சாகப்படுத்த அந்த இடத்தில் ஆரம்பித்தது எனது கவிதை பருவம் ..                

   கவிதைகளை தேட ..
              பாலகுமாரன் நாவல் படிக்குபோது நினைவெல்லாம் நித்யாவில் (1982) வரும் ”பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்” பாடலை அவர் கதையின் போக்கோடு மிக சுவாரஸ்யமாக கிறங்கடித்து எழுதியதை படித்தபோது, கவிதையில் இவ்வளவு  விசயம் இருக்கிறதா என வியக்கவைத்தது .(அப்போது பாலகுமாரன் சொன்னால்தான் சில விசயங்களை படிப்பேன் ) அதிலும் இனி வரும் முனிவரும் தடுமாறும் ...என்ற வரியை ஏன் புரியவில்லை அந்த வயதில் தேடி தவித்து இருக்கிறேன் .இரும்பு குதிரையில் வரும் அவரின் ”குதிரைகள் சொல்லும் வேதம்”   கவிதை சுத்தமாக புரியவில்லை .அப்போது தான் கவிதை மேல் ஒரு தேடல் துவங்கியது .பாலா எது சொன்னாலும் புரிகிறது .இந்த கவிதைகள் மட்டுமே ஏன் தள்ளி நிற்கிரது என்ற கேள்வி பல கவிதைகளை தேட சொன்னது ..



பார்த்த காட்சி..
               ஒரு முறை நண்பரின் சகோதரி பணியாற்றும் ஆங்கில பள்ளி ஒன்றில் - ஆண்டு விழா நிகழ்சிக்கு முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்த காட்சிகளை!! இரவு ஒரு மணிக்கு திரும்பி அப்படியே கவிதயா எழுதி காலையில் நண்பரிடம் காட்டும் போது என் முகத்தில் கிழித்து போட்டார் .குறைந்த ஆடைகளுடன் அங்கு நடந்த பல காட்சிகளின் விளைவுகளான என் கவிதை அப்படி தண்டனைக்கு உட்பட்டபோதுதான் சரி நாம் இனி அப்படி எழுத கூடாது என்பதையும் அதோடு நம் எழுத்து மற்ற உணர்வுகளை சென்று அடைகிறது என்பதையும் உணர்ந்தேன் .

 ஒரு படி மேலே ..
                எனது நேருஜி நினைவு பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் திரு. அரங்க பெருமாள் பள்ளி முழுவதும் மாணவரை கவிதை போட்டிக்கு தேடும்போது அப்போது சுமார் 2000 பேர் படிக்கும் பள்ளியில் யாரும் சிக்கவிலை .எனது பெயரை யாரோ சொல்லி விட ,சரி பார்ப்போம் என ஒரு பரிசோதனை முயற்சியில் ஒத்துகொண்டேன் .காரணம் என்னை சோன்னவர் யார் என்று அவரே சொன்னார் .நான் 10 ஆவது படிக்குபோது ஒரு மனப்பாட செய்யுளை எழுதும்போது என்னை அறியாமல் சில வரிகளை சொந்தமாக எழுதிவிட்டேன் .அதை திருத்தும்போது கண்டுபிடித்து அடிப்பதர்க்கு கை நீட்ட சொன்ன ராபர்ட் தமிழாசிரியர் அப்புறம் கூப்பிட்டு பாராட்டி சென்றதோடு ,  அதை ஞாபகம் வைத்திருந்து நான் +1 படிக்குபோது அந்த போட்டிக்கு என்னை பரிந்துரை செய்திருக்கிறார் - அங்குள்ள பல ஆசிரியர்கள் அப்படித்தான் ஆசிரியராக மட்டுமில்லாமல் ஒரு படி மேலே உயர்ந்தவர்கள் .அதிலும் ஜோசப் பாபு அய்யா வகுப்பு எடுத்தால் மொத்த வகுப்புமே சிறு ஓசை இல்லாமல் கவனிக்கும் .
               
திருமதி புனிதா ஏகாம்பரம்.
               அதுவரை எந்த கவிதை போட்டியிலும் கலந்து கொண்ட அனுபவம் இல்லை என்பதால் ஒரு வித தயக்கத்துடன் கவிதை போட்டி அறைக்குள் நுழைந்தால் ,குறைந்தது  20 மாணவ மாண்வியர்கள் ஏதோ யோசித்தவண்ணம் உட்கார்ந்து இருக்க, இடம் இருந்த இடத்தில் மெல்ல நான் பதுங்கிகொண்டேன் .போட்டிக்கு தலைப்பு கொடுக்க உள்ளே வந்தவர் என்னை ஆச்சர்யபடுத்தினார் .ஆம் அவர்கள் திரு சாலமன் பாப்பயா பட்டி மன்றத்தில் அதிகம் கலந்து கொள்ளும் திருமதி புனிதா ஏகாம்பரம் அம்மையார் .அவர்கள் பேசினார்கள் ,உங்களுக்கு கொடுத்த தலைப்பு “புதியதோர் உலகம் செய்வோம் “ என்பதாகும் ,ஒருத்தர் எத்தனை புது கவிதை அல்லது மரபு கவிதை வேண்டுமானலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டு ,இதர்க்கு முன்னர் உங்களுக்கு வழங்க பட இருந்த கடினமான தலைப்பு ” ஆன்மீகமும் அறிவியலும் ”என்பது.நான்தான் மாற்றினேன் என்றார்கள் .யாரும் பேசவில்லை .ஆனால் நான் சொன்னேன், ஆன்மீகத்திலிருந்துதான் அறிவியல் வந்தது அது ஒன்றும் கஷ்டமான தலைப்பு இல்லையே என்றதும் ,என்னை உற்று பார்த்து வீட்டு எந்த பள்ளி என்று கேட்டுவிட்டு போனார்கள்.
             
     வாசலாக
           அந்த போட்டியில் இரண்டாவது பரிசு நான் .அதை மேடையில் அறிவித்த அவர்கள் இந்த கால புதுக்கவிஞர்கள் திறமைசாலிகள் எந்த தலைப்பு கொடுத்தாலும் எழுத தயாராக இருகிறார்கள் என்று பாராட்டி பேசினார்கள் அதுவும் முழுக்க ,முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் "Our Lady "  என்ற பள்ளி அது நடந்தது அதனால் .ஒரே நாளில் எங்கள் பள்ளியில் பிரசித்தம் ஆகிவிட்டேன்.அடுத்த நாள் பள்ளி அசம்பளியில் முன்னிறுத்தி பாராட்டப்பட்டேன்.  அடுத்து நடந்த பல போட்டிக்கு அந்த பரிசும் ,பாராட்டும்  வாசலாக இருந்தது .. 
           பிறகு எனது நண்பர்களின் சகோதரிகள் கல்லூரி விழாக்களுக்கு கவிதை எழுதி தர கேட்டு, வாங்கி சென்று இருக்கிறார்கள் .

         
  செல்ல குட்டு !           
         ஒரு சமயம் கலை இலக்கிய பெரும் மன்றத்தில்  அவசரமாக எழுதிய கவிதையில்...


நண்பர்களே இதுவரை 
எழுதியதும் படித்ததும் போதும்.
 அது இப்போது எதுவும் சாதிக்கவில்லை !.
என்னிடம் அரிவாள் இருக்கிறது
முடிந்தால் நீ சுத்தியலோடு 
விரைந்து வா !!
                என்று எழுதி விட்டேன். அங்கு இருந்தவர்கள் பெரும்பாலோர் கம்யூனிசவாதிகள் என்பதால் ரசித்தார்கள் .ஆனால் அப்போது அதன் செயளாலராக இருந்த திரு முத்துலக்கையன் (  என்ற என் மதிப்புக்குரியவர் அவர், ஒரு கம்யூனிச கட்சியின் கவுன்சிலர் ) சொன்னது என்னவென்றால் அவர்களும்(கம்யூனிசவாதிகள்) படித்தும் ,எழுதியும்தான் சாதித்து இருக்கிறார்கள் எனவே தோழர்( என்னை )  இன்னும் நிறைய வரலாறு படிக்கவேண்டும் என்று செல்ல குட்டு வைத்தார் .


அவர்தான் என்னை திரு.வைரமுத்து அவர்களின் இல்லத்திர்க்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தி  ’தடை கல்லை படிக்கல்லாக்கு ‘ என கையெழுத்து ஆசீர்வாதம்  வாங்கிதந்தார், என்பது முக்கியமான விசயம் . 
மார்கழி பெண்ணே அவதாரம் .!.
               பிறகு ஒரு சமயம் என் தோழி ஒருத்திக்கு ஒரு படைப்பு தர வேண்டும் என்ற ஆர்வத்தில் ”மார்கழி பெண்ணே” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு அப்போது (டைப்பிங்)  தட்டச்சு வெளியிட்டேன் .அதில் ஒரு வித்தியாசம் செய்தேன் .உண்மையான திருப்பாவை நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான் ( கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்) என்பதாக முதல் பாடலின் கடைசி வரிகள் முடியும்  ஆனால் நான் அதை மாற்றி அதே நாராயணன் இந்த ஆண்டாளூக்காக ஏங்கி தவித்து பாடுவது போல படைக்க ( லேசாக ஜொள் மாதிரி யோசிக்க தோனுமே).அதை பிரதி எடுத்த தட்டச்சு பெண்ணே எனக்கு தெரியாமல் சில பிரதிகளை சுட்டு விட்டது .அந்த மார்கழி பெண்ணே  சில கல்லூரி பேராசிரியைகளால் பாராட்ட பட்டாள் ..

போதி மர  நிழல் !
              காலத்தை திரும்பி பார்த்தால் கவிதை எழுதும் எனது பழக்கம் பல  சமயம் எனது உணர்வுகளின் வடிகாலாக இருந்திருக்கிறது .என் கோபத்தை ,சந்தோசத்தை ,துக்கத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை வளர்த்து  ஒரு போதி மர  நிழல் தோழனாக வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மை வாழ்க்கையின் கால் தடங்களாக தொடர்கிறது ....அற்புதம்தானே !!..