செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

முதல் பக்கம் முகம் சுளிக்கிறது - புத்தக திருவிழா .




புத்தகங்களின் வாசனையோடு ..

நமக்கு மிகவும் பிடித்த சொந்தம் வீடு நிறைய வந்து இருந்து விட்டு  திடீரெனெ கிளம்பி போன பிறகு வீட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது போல திருப்பூர் - KRC சிட்டி சென்டரில் புத்தக திருவிழா ஏக்கத்தை ஏற்படுத்தியது .பொதுவாகவே புத்தகங்கள் நிறைந்த பகுதியில் சும்மாவாது உட்காந்து போகவே ஆசையாக இருக்கும் அதிலும் புத்தக திருவிழாவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ? கிடைத்தது . ஸ்டால் எண் 92 வேதாத்ரி நிலையம் - மனவளக்கலை மன்றத்தின் சார்பில் (கரும்பு தின்னும்) பணி .பல மணி நேரம் அவசரமில்லாமல் பல்லாயிரம் புத்தகங்களின் வாசனையோடு கலந்து உறவாடும் அலாதியான அற்புத வாய்ப்பு .பல புத்தக ஆர்வ நண்பர்களை ஃபோன் செய்து  வர வைத்து  ஆர அமர 77 புத்தக வெளியீட்டாளர்களின் 99 ஸ்டால்களையும் சுற்றி பார்த்து பிரித்து படித்து பார்த்து மேய்ந்து தள்ளினோம்  .


நூல்களின்  அறுவடை...

ஒன்பது நாள் புத்தக விழாவில் ஐந்து  நாட்கள் - ஆறுமுறை போனோம் .முதல் நாள் சென்றபோது வெகு நாளாய் காத்து இருந்து பாலகுமாரனின் உடையார் தொகுப்பு,சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜெயகாந்தனின் ரிஷி மூலம் ,அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு,கல்கியின் பார்த்தீபன் கனவும் சிவகாமியின் சபதம் இணைப்பையும் நண்பர் ஆதி வாங்கி விட்டார். ( என்னுடைய சில புத்தகங்களை முடித்து விட்டு மெல்ல வாங்கிபடித்து விடலாம் ) .இரண்டாவது நாள் உமர் பாருக்கின் - உடல் மொழி கடைசி நாள் இரண்டாவது படிக்கும் பையனோடு போய் அவருக்கு ஹிந்தி மற்றும் தமிழ் சார்ட் வாங்கினேன் .அவர் பென் டென்னிசனின் ஏழியன் அவதார - கலரிங் புத்தகத்தை வாங்கினார்.  
     

காணாமல் போன பக்கங்கள் ...

எனது மகனின் யோக மாஸ்டருக்கு பரமஹம்ச யோகானந்தரின் - ஒரு யோகியின் சுய சரிதை வாங்கினோம் ஆனால் முதல் நாள் பார்த்த - மனிதனின் நிரந்தர தேடல் கிடைக்கவில்லை அதே போல  நான்  ஒவ்வொரு முறையும் தேடிய புத்தகம் தோழமை வெளியீடு 'காலத்தின் சுருக்கமான வரலாறு' Tamil Translation of "A Brief History of Time" by Stephen Hawking's.இந்த புத்தகம் ஆசிரியர் .நல்லங்கிள்ளி மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு செய்து தோழமை வெளியீடு மூலம் இரண்டாம் பதிப்பு 2005 ல் வெளியீடு செய்துள்ளது -  ஆனால் அதே பதிப்பகத்தை  தொடர்புகொண்ட போது இல்லை என கைவிரித்து விட்டார்கள் .கோவை விஜயா பதிப்பகமும் இதே பதில் சொன்னது ஏமாற்றத்தை அதிகரித்தது .நண்பர்களிடம் பல ஊர்களுக்கு கேட்டு இருக்கிறேன் . 


முதல் பக்கம் முகம் சுளிக்கிறது !

யாரையும் குறை சொல்ல வில்லை என்றாலும் இங்கு ஒரு வேதனை.புத்தக திருவிழா அரங்கத்திர்க்குள்  உள்ளே போனபோதெல்லாம் வந்தது .அது புத்தகங்களின் விலை .தமிழ் வளர்ப்பதாகவும் சரித்திரங்ளை மீட்டு கொண்டுவருவதாகவும் சொல்லிகொள்ளும் பல தற்கால தமிழ் படைப்பாளிகள் மெனக்கெட்டு மேலே வருகிறார்கள் .இதை யாரும் மறுக்க முடியாது ஆனால் காலத்தின் பின்னோக்கிய பார்வையில் இவர்கள் சிறந்த படைப்பாளிகளின் புத்தககளுக்காக தேடும் போது அதன் விலை எவ்வளவு முக்கியம் என்பதை உணராமலா  இருப்பார்கள் .(அதிலும் டீலக்ஸ் பிரிண்ட் இரண்டு மடங்கு விலை வேறு ) அவர்கள் முதலில் வாசிப்பவனாக இருக்கும்போது இந்த விலை எவ்வளவு வலித்து இருக்கும் ?


படிப்பவன் யார் ? அதுவும் சரித்திர புத்தகங்களை வாசிப்பவன் தமிழ் மீது கொஞ்சமாவது நேசம் இல்லாமலா இருப்பான் ? அவனை ஏமாற்றுவதும் அந்த சரித்திரத்தை ஏமாற்றுவதும் ஒன்றுதானே? 
தமிழன் ஆன நான் என ராஜ ராஜ சோழனை படிக்க 1400 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று பிரபல எழுத்தாளர் புத்தகத்தை வாங்கிய நண்பர் ஆதி நொந்து போய் கேட்டார். எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள் அவை ? பிரபல எழுத்தாளர்களை முன் வைக்கும் கேள்வி இதுதான். யாரை பற்றி சொல்ல யாரிடம் சம்பாதிக்கிறீர்கள் ? யோசியுங்கள் . இதனால் தமிழ் வளராது .உங்கள் தரித்திரமும் தீராது !வேதனையாக சொல்ல வேண்டி இருக்கிறது இதை .அப்படியானால் எழுதுபவன் கடைசி வரை பிச்சைகாரனாகத்தான் இருக்க வேண்டுமா என்பார்கள் .உங்களுக்கு தெரியும் .நீங்கள் தமிழ் மூலம் வளர்ந்து இருந்தால் அதில் வரும் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடுத்தவன் எவனும் உங்களுக்கு சொல்ல வேண்டாம்.


  சகோதரர் ஜோதிஜி (தேவியர் இல்லம்- http://deviyar-illam.blogspot.in/2013/12/2014.html ) டாலர் நகரம் புத்தகம் சிறந்த எட்டில் ஒன்று (ஆனந்த விகடன் இயர் புக் 2014) தேர்ந்தெடுத்த பின் கூட முதல் மின் நூல் இலவசமாக“ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெளியிட்ட போது  வெளியிட்ட இரண்டு வாரத்தில் 1400க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கம் செய்து மகத்தான ஆச்சரியத்தையும் ஆதரவையும் தந்த காரணத்தால் இந்த மின் நூலையும் உருவாக்கும் எண்ணம் உருவானது என்ற அவர்  தனது அடுத்த படைப்பான ”வெள்ளை அடிமைகள்” வெளியிட்டார்( http://freetamilebooks.com/ebooks/white-slaves/) .ஒருவேளை வேறு வகையில் காசு பார்க்க அவர் போய் இருந்தால் பல்லாயிர  சாதாரண தமிழனிடம் இந்த கருத்து சேராமல் தொலைந்தல்லவா போய் இருக்கும் ?


இதனால் தான் என்னவோ http://tamilnovelsdownload.blogspot.in/2011/02/all-tamil-novels-download.html மற்றும் http://www.openreadingroom.com/ போன்ற பல பிரபலங்களின் புத்தகங்கள்  தன்னை வெளியே சொல்ல இந்தமாதிரி அவதாரங்களை எடுத்து கொள்வதில் தவறில்லையோ ? 
   

           
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ,ஒரு நூலகம் கட்டுவேன்" என்று மஹாத்மா காந்தி  சொன்னதாக இந்த புத்தக திருவிழாவின் வாசகம் (முதல் படம் )சொல்கிறது .இன்று காந்தி இருந்தால் , நூலகம் கட்டி இருப்பார் ஆனால் புத்தகம் வாங்க பத்து கோடி கடன் வாங்க வேண்டி இருந்து இருக்கும் எனபதைத்தான்   குனிந்த தலையுடன் சொல்லி இருப்பாரோ ? 

சனி, 1 பிப்ரவரி, 2014

ஸ்டீபன் ஹாக்கிங்கின் -கடவுளுக்கு அவசியம் இல்லை.

           

பிரபஞ்ச தோற்றம் பற்றிய கருத்துக்களை புரட்டி போட்ட இரண்டு புத்தகங்களின் பி.டி.எஃப் கோப்புகளை இலவசமாக ( மன்னிக்கவும் - ஆங்கிலத்தில் ) வாசித்து - யோசிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது .


'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்'

                         எந்திரன் படத்தில் ரஜினிக்கும்  ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் விவாகரத்து நடக்கும்போது அவர் பரிசளித்த பொறுள்களை திருப்பி தரும்போது  கோபமாக, ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'தி பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம் ' என்ற நூலை காட்டுவாரே ! 



             அந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், பிக் பேங் தியரி, பிளாக் ஹோல்ஸ், லைட் கோன்ஸ் ஆகியவற்றை பற்றி எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி விவரித்திருக்கிறார். அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார்


  தறவிரக்க முகவரி 

http://www.fisica.net/relatividade/stephen_hawking_a_brief_history_of_time.pdf



                     ஆனால் அவரின் அடுத்த புத்தகமான 'தி கிரான்ட் டிசைன்'
இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று பிடிவாதமாக மறுக்கிறது . அதில் அவர் இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக அதில் எழுதியுள்ளார் ஹாக்கிங். இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது 



                      இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது. பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

அதன் தறவிரக்க முகவரி .. http://dxxandcdl.info/science/astronomy/5.pdf


சனி, 25 ஜனவரி, 2014

சினிமா என்ற சாதனம் புத்தகமாகட்டும்.


                    இப்போது திரை அரங்குகளில்  இரண்டு தமிழ் படங்கள் ஓடிகொண்டு இருக்கின்றன .ஒன்று இன்னும் சில காலம் ஓடும் மற்றொன்று ஓடாது .அது ஏன் என்பது எல்லாருக்கும் புரிந்த விசயம்தான் ! ஆனால் விசயம அதுவல்ல .நம் கதாநாயகர்கள் எப்படி எதிரே வரும் கெட்டவர்களை எலும்பு முறிய நொறுக்கி பிழிகிறார்கள் நியூட்டனின்  விதிகளையும் தவிடு பொடியாக்கி தியேட்டரில் படம் பார்க்கும் வரு ரசிகர்களின் உடையெல்லாம் ரத்தம் தெரிக்க சண்டை போட்டு திருப்பி அனுப்புகிறார்கள் .இதெர்க்கெல்லாம் ஏதோ காரணம் சொல்லுகிறார்கள். இருக்கட்டும் . இத்தனையும் பண்ணும் அவர்கள் ஒரு கதாநாயகியை கண்டவுடன் அத்தனை வன்முறை அஸ்திரங்களை தூக்கி எறிந்து விட்டு வெட்கப்படுவது எப்படி ? இதில்,இப்படி  இதை யோசிக்கும் இயக்குனர் மற்றும் நடிகர்கள் சேர்ந்து யாரை திருப்தி படுத்துகிறார்கள் அல்லது யாரை ஏமாற்றி கொள்கிறார்கள் ?


                              பொதுவாகவே வெளிப்படையாக ‘டுயல் ரோல்’(Dual role ) கொண்டவன் சந்தேகமில்லாமல் பைத்தியகாரன்தான் .(ஆனால் உண்மையில் நாம் பல பேர் உள்ளுக்குள் அன்னியனை(Muliple persionality) விட மோசம் என்பது வேறு விசயம் .)ஆனால் நம் கதாநாயகர்கள் ஒருபக்கம் காதலையும் இன்னொறு பக்கம் வன்முறையும் எப்படி ஒரே தோளில் சுமக்கிறார்கள் ? நடைமுறையில் உள்ளதைதான் நாங்கள் காட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தண்ணி அடிக்கும் காட்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக காட்டுவதும் ,வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டு திரிவதும், கட்டாயமாக காதலித்தே தீர வேண்டும் என்ற கதா நாயகிகளும்..


 அதிலும் கதாநாயகன் காதலுக்கு சம்மதித்து விட்டால் எந்த சம்மந்தமும் இல்லாமல் வெட்கத்தை அவிழ்த்து  விட்டு -  தன்னுடைய காதலியை அல்லது மனைவியை எத்தனை  பேர் இப்படி ஆபாசமாக எல்லாரும் பார்க்க ஆடுவதர்க்கு சம்மதிக்கிறார்களாம் ?இருப்பதை காட்டுவதாக சொல்லிகொண்டு அலையும் இவர்கள் இன்னும் எத்தனை சமாதானங்கள் சொல்ல போகிறார்கள்?   
  


                     கதை என்ற கட்டத்திர்க்குள் ஒரு காலத்தில் பொழுது போக்கை மையமாக்கினார்கள் ,அப்புறம் சமூக அக்கறை  ,அரசியல் , உண்மை சம்பவம் ,அறிவியல் ,நவீனம் ,என்று அந்த கட்டதிர்க்குள் காய் நகர்த்தி விட்டு  இப்போது காதல் என்ற விரசத்தையும் ,சண்டை என்று ரத்த சகதியையும் ,எதார்த்த பாதைகளை தூக்கி எறிவதுமே தனது கொள்கை என்று கடை பரப்பி வருகிறார்கள் .ஒரு காலத்தில் இதெல்லாம் திரும்பி பார்க்கும் போது இவர்களே சகித்து கொள்வார்களா என்பது புரியவில்லை .யார் இதை விரும்புகிறார்கள் என்று அவர்கள் சொன்னாலும் தனது குழந்தைகள் ரெஸ்ட்லிங்தான் (wrestling) மட்டுமே பார்க்க ஆசைபட்டால் அது நார்மல் இல்லை என்று அவர்களே ஒத்து கொள்வார்களா மாட்டார்களா ? தெரியவில்லை .   


              எது எப்படியோ வரும் தலைமுறை மேலும் கெட்டு போக அற்புதமான சினிமா என்ற சாதனத்தை குறை பிரசவ குழந்தைகளாய் மாற்றி எதிர்காலத்தை ஊனமாக்காதீர்கள் .அன்று கருப்பு வெள்ளையிலும் ,ஒரே கேமிராவால் ஒரே இடத்தில் தனக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்று ஒத்து கொண்டு திரைப்படம் எடுத்த இயக்குனர்களை மனதில் வைத்து கொண்டு படம் எடுங்கள் .அவர்களும் கதை சொன்னார்கள் .நம்புங்கள் .


காசு கொடுத்து படம் பார்க்க வருபவனை  அதிகபட்சமாக முட்டாளாக்கினால் கூட பரவாயில்லை  பைத்தியக்காரனாக அலையவிடாதீர்கள்.எதார்த்தம், எதார்த்தம் என்று ஆகாயத்தில் ரோடு போட ஆசைப்படாதீர்கள்.சினிமா என்ற சாதனம் தவிர்க்க முடியாத கடமைகளை கொண்டு உள்ளது .ரஷ்யாவில் பள்ளி பாடங்கள் இப்போது திரைப்பட முறையில் வடிவமைக்கபட்டு போதிக்க படுகிறது .நமது ஆவண படங்கள் அத்தனையும் உலக பரிசுகளையும் அள்ளிக்கொண்டு வந்து கொண்டு இருக்கிறது .


          ஆதலால் இந்த சினிமா சாதனம் அலமாரியில் வைக்கப்படும் புத்தகமாக படைக்கபட்டால்  கூட மீண்டும் ஒருகாலத்தில் திருப்பி பார்க்கலாம் .அழுகிய பழங்களாக்கினால் அது எங்கு போகும் என்பது அனைவரும் அறிவோம் .பார்த்து செய்யுங்கள் .ஏனென்றால் சினிமாவை நாங்கள் காதலிக்கிறோம் உங்களை போல அல்ல !

திங்கள், 20 ஜனவரி, 2014

ஓஷோ பூமிக்கு வந்து போன நாள் ஜனவரி 19


                          வெகு நாளாக திருப்பூர்,அவினாசிக்கு அருகே உள்ள ”ஜோர்புத்தா” (புது மனிதனின் புது வாழ்க்கைமுறை ) எனும் ஓஷோ சாஸ்வதம் போக திட்டமிட்டு  போக முடியவில்லை .ஆனால் சமீபத்தில் கிடைத்த ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை என்ற புத்தகம் ஓஷோவின் இளம் வயது முதல் அவர் வாழ்க்கை பற்றி மிக நுட்பமாக பேசியது போக வேண்டும் என்ற ஆர்வத்தை ஆக்கிரமித்தது .அதோடு அவரின் பகவத் கீதை-ஒரு தரிசனம் - புத்தகம் மேலும் அவர் மேல் உள்ள  தேடலை தாண்டி ஏதோ ஒரு விசயத்தை வாழ்க்கையில் தொடாமல் போய் கொண்டு இருக்கிறோம் என்பதாக உறுத்தியது .ஏற்கனவே அவரின் பல புத்தகங்கள் வாசித்து இருந்தாலும் வயதின் பக்குவம் வேறு ஒரு புரிதலின் பாதைக்கு இழுக்கிறது.


                      அவிநாசி,3/184 கந்தம்பாளையம், ஓஷோ சாஸ்வதம் போக (கொஞ்சம்) விசாரித்து போனபோது  ஒஷோவின் காம்பவுண்ட் சுவர் படம் எங்களை முறைத்து பார்த்தது .மரங்கள் அடர்ந்து புதிய வீடுகள் பல முளைத்து கொண்டு இருக்கும் காம்பவுண்டை நெருங்கும்போது ,60 வயதுக்கு மேற்பட்ட வெள்ளை தாடியுடன் ஒருவர் வெட்டிய ஒரு மரக்கிளையயை இழுத்து கொண்டு வெளியே போய் கொண்டு இருந்தார் .மெல்ல வளைந்து சென்ற பாதை முடிவை எட்டியபோது மத்திம வயது பெண் ஒருவர் தமிழ் பத்திரிக்கை வாசித்து கொண்டு இருக்க அவரை விசாரிப்போமா என்று யோசிக்கும்போதே எங்களை பார்த்து விட்டு மீண்டும் அவர் வாசிப்பை தொடங்க...



                 குழப்பமாகிவிட்டது எனக்கு .காரணம் , பல ஆண்டுக்கு முன் நான் திருச்சி - ஓஷோ மெடிடேசன் ரிசார்ட் - ஒஷோ தர்ம தீர்த் சன்யாஸ் ஆஸ்ரமதிர்க்கு  ஒரு நாள் தியான வகுப்புக்கு போன அநுபவம் இருக்கிறது . அதன் தோற்றமே அதன் நோக்கத்தை சொல்லும் .ஆனால் இங்கோ சின்ன சின்னதாய் வெள்ளை அடிக்கப்படாத புதிய குட்டி சிமெண்ட் காளான்கள் போல வீடுகளாய்  முளைத்து இருக்கிறது .எது தவ அரங்கம் என்பதே தெரியவில்லை .சரி அந்த தமிழ் வாசிக்கும் பெண்ணை கேட்போம் என்று கேட்டேன் .இதுதான் என்றார் .சொல்லியதோடு நிற்காமல், அழைத்து சென்று உட்கார சொல்லி இருக்கை தந்தார் . 


                        எப்படி இதை கேள்விபட்டீர்கள் என்றார் .இண்டெர்நெட் மூலம் என்றேன் .மெடிடேசன் ஹால் எங்கு இருக்கிறது என்ற சந்தேகத்தை என்னையும் மீறி ஆவல் வழிய கேட்டேன்.மெல்ல சிரித்து விட்டு அந்த காம்பவுண்டின் உள்ளே தள்ளி இருந்த மெடிடேசன் ஹாலுக்கு அழைத்து சென்றார் .உள்ளே ஒரு மெல்லிய அமைதி ஆட்சி செய்து கொண்டு இருந்தது .ஓஷோவின் பெரிய படங்கள் ஊடுருவி பார்த்தன .ஒரு டிரிபில் காங்கோ (Trible Congo ) இசை கருவி மவுனமாக நின்று கொண்டு இருந்தது .அது எனக்கு பல வருடங்களுக்கு முன் ஒஷோவின் Nataraj-meditation என்ற இசையை உள்வாங்கி எந்த ஒரு மன பாசாங்கு இல்லாமல் ஆடும் அல்லது ஆட்டிவைக்கபடும் இசை தந்திரம் ஞாபகம் வந்தது.  
            


                  அவர் பேசினார் .உங்கள் இருவரில் யார் இதில் ஆர்வம் என்றார் .நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டதை பார்த்து ,இல்லை இப்படித்தான் சிலர் யாரையாவது கூட்டி கொண்டு வருவார்கள் பிறகு நான் வேறு அமைப்பில் இருக்கிறேன் .இவர்தான் வருவார் என்று யாரையாவது காட்டுவார்கள் ,அதை தெளிவு படுத்தி கொள்ள கேட்டேன் என்றார் .சிரித்து கொண்டே வெளியே வந்து பழைய இருக்கைக்கு வந்தோம் .என்ன சாப்பிடுகிறீர்கள் ? டீ ? என்று கேட்டார்  .நான் இல்லை வேண்டாம்  தண்ணீர் கொடுங்கள் என்றதும் .டீ சாப்பிடுவீங்கல்ல  என்று மீண்டும் கேட்டு விட்டு போனார் .வந்து தண்ணீர் கொடுத்தார் .


                        பிறகு மீண்டும் சென்று இரண்டு பவுள்களில் கெட்டியாக ஒன்றை கொடுத்து கொண்டே, இன்று ஓஷோவின் இறந்த நாள் இனிப்பு இது என்றார் .ஆம் .வேதாத்திரி மஹரிசியால் இன்னும் 500 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்க வேண்டிய மஹான் என்று வருணிக்கப்பட்ட ஓஷோ என்ற  ரஜ்னீஷ் சந்திர மோகன்அப்படித்தானே சொல்லி இருக்கிறார் .இறப்பை கொண்டாடுங்கள் என்று .


                       அங்குள்ள உணவு அறை மற்றும் தங்கும் பகுதி வருபவர்கள் படிக்க (மட்டும்) நூலகம் .நூல் விற்பனை இகு இல்லை .நாங்கள் தேடி கொண்டு இருக்கும் எங்களுக்கு தெரிந்த அளவுக்கு ஒஷோவின் 136 தமிழ் புத்தகங்களும் அங்கு இருந்தன .எனக்கு அந்த இடத்திர்க்கு மீண்டும் போக வேண்டிய கட்டாயத்தை அந்த பத்தக செல்ஃப் சாட்சியமாக இருந்தது .மீண்டும் அதே இருக்கைக்கு திரும்பி ,அவரிடம் எங்கள் சந்தேகத்தை தொடுக்க துவங்கினோம் .இங்கு இருப்பவர்கள் வெளி ஊர்களில் இருந்து வந்தவர்களா எப்படி ஒன்றாக இருக்கிறீர்கள் என்றோம்.


                          அதர்க்கு அவர்  ஓஷோவின் கம்யூன் என்றால் சுதந்திரமான  தனிநபர்கள் கூடி வாழும் இடமே கம்யூன். இங்கு அவரவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியும், மலர்ச்சியுமே முக்கியம். கம்யூன் என்ற அமைப்பு வெறும் பயன்பாட்டு கருவியே, அதன் வளர்ச்சி என்ற மாயைக்கு இங்கு இடமில்லை. நிகழ்கணத்தை விழிப்புணர்வோடு நேர்கொள்ளும் வாழ்வே இது இயங்கும் மையம் என்பதாக சொன்னார் .அதோடு உங்கள் வாழ்வின் நோக்கம் என்று ஒரு ஆழமான கேள்வியை எங்கள் முன் வைத்தார் .நண்பர் ஏதோ சொல்ல மறுத்தார் .பிறகு கேள்வி என்னிடம் திரும்பியது .நான் பரிபூரணம் என்றேன் .புரியவில்லை என்றார் .வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொள்ளும் ஞானத்தை வளர்த்து கொள்ள என்றேன் .வளர்த்து கொண்டு ? என்றார் நல்ல முடிவுகளை எடுத்து பழக வேண்டும் என்றேன் .உங்கள் முடிவுகள் எப்படி பட்டதாக இருக்கிறது என்றார் .ஒரு சமயம் எடுத்த முடிவு மற்றொரு சமயம் தவறாக இருப்பதாக உணர்கிறேன் என்றேன் .சட்டென அவர் கண்ணில் ஒரு பிரகாசம் ,இதுதான் முக்கியம் என்றார் .எந்த ஒரு செயலையும் ஏன் செய்தோம் என்று ஒரு மணிநேரம் பிரித்து பாருங்கள் அப்போது புரியும் எவ்வளவு தேவை இல்லாத விசயத்தில் நாம் இருக்கிறோம் என்பது புரியும் என்றார் .


          வெவ்வேறு இடத்தில் இருந்து வந்து இங்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி வீடு கட்டிகொண்டு வாழ்கிறார்கள் .ஆனாலும் உணவு இங்கு ஒரே இடத்தில் தயாரிக்க படுகிறது.வெளியே வேலைக்கு சென்று திரும்புவர்களும் இங்கு உண்டு.ஆனால் கம்யூன் இருப்பவர்கள் வெளியே தங்க அனுமதில்லை என்றார் .வெளியில் இருந்து முதல் ஒரு நாள் தியான வகுப்பிற்க்கு வந்து சென்ற பிறகு மீண்டும் மூன்று நாள் வகுப்பு பிறகு  அடிக்கடி தோணும்போதெல்லாம் வருகிறார்கள் .தியானிக்கிறார்கள் என்றார் .எதையும் தெரிந்து கொள்வது முக்கியமல்ல அதை அனுசரிப்பதாலேயே அதன் பலன் இருக்கிறது என்றார் .


                       கிளம்பும் முன் ,”ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் ” என்ற http://www.osho-tamil.com/ பகுதியில் 48 தலையங்கங்களின் தொகுப்பு புத்தகத்தை கொடுத்தார் .இதை எழுதியது யார் என்றபோது அவர் சொன்ன அடையாள நாங்கள் உள்ளே வரும்போது ஒரு 60 வயது மனிதரை பார்த்தோம் என்றோமே அவர்தான் இதை எழுதியது .பெயர் புத்தகத்தில் - ஓஷோ சித் என்று இருந்தது . ஏற்கனவே ஒரு தேடலில் அவரின் அற்புதமான அவரின் http://masterosho.blogspot.in/ வலைப்பூவை படித்து இருக்கிறேன் .அதோடு http://www.osho-tamil.com/ பகுதியிலும் அவரின் எழுத்துக்களை மாதம் மாதம் காப்பி எடுத்து படிப்பது இப்போதும் என் வழக்கம் .

              நாங்கள் உள்ளே வரும்போது அவர் ஒன்றுமே கேட்கவில்லையே என்றோம் ,அதர்க்கு அவர் ’சதாகதா’ நிலையில்  எப்போது இருப்பார் .பேசினால் பேசுவார் என்றார்.சொல்லி கொண்டு இருக்கும்போது அவர் வந்தார் .அங்கிருந்த ஊஞ்சல் போன்ற இருக்கையில் அமர்ந்தார் .எங்களை பார்த்தார் .பிறகு எதுவும் பேசவில்லை நாங்கள்  விடைபெறும்வரை...

     

சனி, 28 டிசம்பர், 2013

மூன்றாவதாய் ஒரு உலகம்


 பள்ளி விடுமுறை..

                             மிக சில பெண்கள் மட்டும்தான் பள்ளி விடுமுறை நாட்களை மாமியார் வீட்டில் செலவு செய்கிறார்கள் .அந்த கணவன் மார்களும் அந்த குழந்தையும் வரம் பெற்றவர்கள் .எனக்கு அப்படி பட்ட வரம் கிடைக்க நாளாகலாம் .


எதிர் கட்சி எம்.எல்.ஏ
.
                         எப்போதுமே தன் அம்மாவுடன் போகும் எனது பையன் இந்த முறை தனித்தே எனது மாமியார் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறான் .பள்ளி நாட்களில் தூங்குபவனை எழுப்புவதிலிருந்து ,பிரஸ் பண்ணுவது,குளிப்பது ,சாப்பிட அடம் பிடிப்பது ,எல்லாத்தையும் அள்ளி போட்டுகொண்டு பள்ளிக்கு கிளம்புவதிலிருந்து தொடங்கி  அவனோடு மாலை வந்தவுடன் ட்ரெஸ் அழுக்கு ஆக்கியது ,டைரியில் சரியாக வீட்டு பாடங்களை குறிக்காதவரை மொத்த புகார்களும் எனக்காக அவன் மூலம் வீட்டுக்குள் நுழையும் முன்னும் சாப்பிட உட்கார்ந்த பிறகு அவன் அம்மாவிடமிருந்தும் எதிர் கட்சி எம்.எல்.ஏ புகார் போல சரமாரியாய் குவியும் .அந்த வகையில் அமைதி படுத்தியே வீட்டின் அமைதியை காக்கும் பல அப்பாகக்ளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பது போல எனக்கும் கிடைக்கலாம் !



பாக்கேட்டுக்குள் ...

                      கடந்த நான்கு நாட்கள் இந்த மாதிரி எதுவுமில்லை.மனைவிக்கு ஒரே தவிப்பு .பாருங்கள் ஒரு நாள் இருந்துட்டு வரேன்னு சொல்லிட்டு ,அவன் பாட்டுக்கு அங்கேயே தங்கிட்டான் என்றதர்க்கு அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என்ற என் பதிலில் எனக்குரிய நோபல் பரிசு பறிக்கப்பட்டு ,தாலிபான்கள் லிஸ்ட்டில் அப்போதே சேர்த்துவிட்டார்கள்.

                  ஆனால் எனக்கும் ஒரு கேள்வி ஓடிகொண்டே இருந்தது.எங்கிருந்தாலும் யார் போனிலாவது பேசுபவன் என்னிடம் பேச முயற்சி பண்ணவில்லை .எப்போதும் ஊருக்கு ஒரு நாள் அவனோ அல்லது நானோ போனால் கூட அவன் பொம்மைகளில் ஏதாவது ஒன்றை என் பாக்கேட்டுக்குள் திணிப்பவன் எப்படி இப்படி இருக்கிறான் ?



தொலைவுகளே குறையட்டும் .

                            அவன்  பிறக்கும் முன் எத்தனையோ கனவுகளை வைத்து கொண்டு இருந்தாலும் பிறந்த பிறகு வளர்ப்பதில் ,வேலையில் இருந்த சவால்களை சந்திக்கும் வேகத்தில் அவன் மேல்  இருந்த  கவனம் எனக்கு குறைந்த போது என்னை திருத்தி கொண்டேன் .அவனோடு பேசுவதை ,விளையாடுவதை கூட்டிக்கொண்டேன். அவனுக்கு காணாமல் போன பொறுள் கண்டு பிடிக்கும் தந்திரம் ,கதை சொல்வது ,சில பொறுள்களை பார்த்து கவிதை மாதிரி (அனேகமாக அது வசனமாகத்தான் அவன் சொல்லுவான் ) போட்டி போடுவது  இப்படியாக ...

                       அருள்புரத்திலிருந்து - சாமுண்டி புரம் வீடு மாறி வந்ததும் அதுவும் பத்தாது என்று இப்போது ராம் நகர் மாறியதும் அவன் பள்ளி தொலைவுகளை குறைப்பதர்க்கே. மூன்றரை வயதில் தனியார் யோகா பள்ளிக்கு சேர்க்க போனபோது 7 குறைந்தது 5 வயது ஆக வேண்டும் என்று மறுத்தார்கள்.அவன் பள்ளியில் கேட்டபோது பத்து வயதில்தான் சேர்க்க முடியும் என்று மறுத்தார்கள் .நாழு வயதில் இடது வலது இரண்டு கைகளிலும் கிரிக்கெட் விளையாடவும் , ஐந்து வயதில் செஸ் நகர்த்தல் ,கேரம் விளையாட்டு என்றும் ஆறு முடிந்தவுடன் இப்போது வாரம் ஒரு முறை என்னுடனே யோகாவும வருகிறான். 



 காசு செலவில்லாமல் ...

                              நான் ஏற்கனவே 7 ¼ வருடம் பணிபுரிந்த கம்பெனியிலிருந்து திடீரென விலகிய போது சட்டென நிதி பிரச்சனை .ஏற்கனவே எனக்கு பணம் சேர்த்து வைப்பதில் சாமர்த்தியம் பெரிதாய் இல்லாததால் ஸ்னாக்ஸ் வாங்க கூட புதிய  சம்பளம் போதவில்லை அப்போதைக்கு நான் தேவை இல்லாத  11 வருட புகை பிடிக்கு பழக்கம் கை விட்டு அதை ஸ்னாக்ஸ் தேவை பூர்த்தி ஆனது .ஆனாலும் அவ்வப்போது கனவில் காசு செலவில்லாமல் சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்து போனது ..



 ஆஃபீஸ் மருத்துவம் !

                         ஒரு முறை பள்ளியிலிருந்து மனைவிக்கு ஃபோன் .உங்கள் பையனுக்கு அடிபட்டு இருக்கிறது வந்து அழைத்து போங்கள் என்று .அவன் வேதனைப்படும் எந்த விசயமும் என்னால் பார்க்க முடியாது .மனைவியை கூட்டி பள்ளிக்கு போனால், ஆஃபீஸ் வாசலில் சட்டை இல்லாமல் சேரில் அவன் .எங்களை பார்த்தவன் என்னிடம் ஓடி வந்தான் .நல்ல வேளை அவன் முன்னால் நான் அழவில்லை .வலது நெற்றி புருவத்திர்க்கு அருகே  இரண்டு 'இன்ச்' வெட்டு .சட்டை காயப்போட்டு இருந்தது.வெளியேறிய ரத்தத்தை மறைக்க செய்த முயற்சியில் இன்னும் ஈரம் மீதம் இருந்தது.

                         யாரோ ஒரு பையனுக்கு இப்படி முன்னர் நேர்ந்த போது யாரை கேட்டு இந்த மருத்துவமனை அழைத்து சென்றீர்கள் என்று பெற்றோர்கள் கேட்டார்களாம் அதனால் வீட்டார் வரும் வரை முதல் உதவி மட்டுமே அதுவும் பள்ளி நிர்வாக ஆஃபீஸ் மருத்துவம் மட்டுமே.

                        ரேவதி மருத்துவமனையில் பார்த்தவுடன் தையல் போட வேண்டும் என்றார்கள் .பெட்டில் வைத்து பிடித்து கொள்ள கூப்பிட்டார்கள் .அவனே என் தைரியம் தெரிந்து அவன் அம்மாவை அழைத்து கொண்டான் .



பணம்டா எல்லாம் !
                       
                  சென்ற வாரம் பள்ளிக்கு அழைத்துவர போன போது அவன் கேட்ட கேள்வி எனக்கு வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது.அவன் பள்ளி தோழியின் நண்பர்கள் இவனை மதிப்பதில்லையாம் .அது ஏன் என்று அவளிடம் கேட்டதர்க்கு, (மணிரத்தினம் ரசிகை போல அவள் ! ”) பணம்டா எல்லாம் பணம்”என்றாளாம் .



மூன்றாவதாய் ஒரு உலகம் 

                         எனக்கு உடனே புரியவில்லை .பணம இருப்பவர்கள் ஒரு அணியும் இல்லாதவகள் ஒரு அணியாம் .இன்னும் இரண்டாவது படித்து முடிக்காத இவர்கள் ,உலகத்தை புரிந்து கொள்ள முடியாத  ஆச்சரியமும் பயமும் தந்ததுஎனக்கு இந்த சம்பவம் .ஓடி, ஓடி எனக்கு இன்றும் புரியாத விசயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டானே ! 
                  குழந்தைகள் நம்முடனே அவர்கள் இருப்பதால் ,அவர்களை புரிந்து கொண்டோம் என்ற நம் கணக்கு முற்றிலும் முட்டாள்தனமாகி விடுகிறது .எனக்கு ஒரு உலகம் ,மனைவிக்கு ஒரு உலகம் என்று மட்டுமே புரிந்து கொண்டு இருந்த ஏராளமான அப்பாக்களில் ஒருவனாய் இருந்த எனக்கு என் வீட்டுக்குள் மூன்றாவதாய் ஒரு உலகம் இருப்பது அபோதுதான் தெரிந்தது .எப்போதோ படித்த ஓஷோ வின் புதிய குழந்தை புரிய துவங்கியது

இறைந்து கிடக்கும் ..

                    அவன் வீட்டில் இல்லை . அவன் இருப்பை எப்போதும் வீட்டில் உணர்த்த  முழுதும் இறைந்து கிடக்கும் ”லெகோ- டூப்லோ” (அடுக்கிகள்) கலைக்க ஆள் இல்லாமல் கோபமாக இருந்தது . போகோ சேனலும் ,ஜியோகிராப் சேனலும் ஒளிபரப்பை தொலைத்து விட்டது போல ! .  அவன் தன் செல்லாமாக தம்பி என்று சொல்லி கொள்ளும் மிக்கி மவுஸும், புலியும்  சோகத்துடன் இருந்தது  என்னைப் போல..




கலீல் ஜீப்ரானனின் கவிதை....

"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால 
வாழ்வின் மகன், மகள்கள் 
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்; 
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை 
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் - 
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று 
அழகான சிந்தனைகள் உண்டு 
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல 
ஏனென்றால் அவர்களின் ஆன்மா 
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; 
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது 
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்; 
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள் 
வாழ்க்கை பின்னோக்கியோ 
நேற்றைக்கோ செல்வதில்லை 
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும் 
வாழும் அம்புகள் அனுப்பபடும் 
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"




திங்கள், 23 டிசம்பர், 2013

அது பாலகுமாரன் காலம் ..


                திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக  பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் பாரதி பிரிண்டர்ஸ்திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .

               உற்சாகமானோம். எங்கள்  கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்பும் இருந்தது. உடனடியாக நண்பர் சங்கர் திட்டமிட்டார் .விழாவை நடத்துபவர் யார் அல்லது இந்த பிரிண்டர்ஸ் ஓனர் யார் அல்லது யாரை பார்த்தால் பாலகுமாரனுடன் பேச முடியும் என்ற முயற்சியில் அரை மணி நேரத்தில்  வெற்றியும் கண்டார் .விழா நடந்துகொண்டு இருக்கும் மேடையின் பின் வழியாக உள்ளே போய் அவருடன் கைகொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக  சந்திக்க உதவியவர் சொன்னார்.என்னை முன் அனுப்பினார்கள்.


      அப்போது சட்டென உள்ளே ஒரு பொறி தட்டியது .இத்தனை ஆராவாரங்களுக்கிடயே எனக்கு பிடித்த அந்த எழுத்தாளனுடன் பின் பக்கம் வழியாக மேடையேறி என்ன பேச முடியும்? நான் உங்கள் வாசகன் அல்லது உங்கள் எழுத்தில் மேல் தீராத காதலும் வெறியும் உள்ளவன் ,என் இளமை முழுவதுவும் உங்கள் எழுத்துக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று பேசுவதா ?அப்படியே பேசினால் அவர் கேட்கும் நிலையில் இருப்பாரா ?அவரை தொந்தரவு படுத்தும் விசயம் ஆகிவிடாதா என்ற போராட்டம் மனசுக்குள் ஓட ,பார்க்கும் எண்ணத்தை கைவிட்டேன் .எனக்கும் அவர் எழுத்துக்கும் இடையே உள்ள மவுனமான காதலை இந்த சந்திப்பில் மூலம் காயப்படுத்தி கொள்ளும் நிலை வந்து விட்டால் ? இதை நான் சொன்னதும் உடனே நண்பர் சங்கர் உஷ்ணமாகிவிட்டார் .என்ன இவ்வளவு மெனக்கெட்டு பிறகு நீ சாதரணமாக வேண்டாம் என்கிறாய் ? என்றார் .இதர்க்கு என்னிடம் பதில் இல்லை .வேண்டாம் என்பதை மட்டும் புரிந்து கொள் என்றேன் .அவர் முகத்தை திருப்பி சென்று விட்டு சில நாள் என்னிடம் பேசவே இல்லை .



             இது நடந்த போது எனக்கு இருபது வயதுக்குள் இருக்கும் .என்னை பொறுத்தவரை எழுத்தாளானுக்கும் - வாசிப்பவனுக்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருக்கவேண்டும் என்பதை நம்புகிறேன்.அவர் எழுத்தை வாசிப்பதால் மட்டுமே எழுத்தாளான் நமக்கு சொந்த ஆகிவிடமுடியாது .அவரை எனக்கு தெரியும் என்பதால் எதுவும் நிகழ போவதில்லை என்று நினைத்தேன் .

                       சுஜாதா,ஜானகிராமன்,வையவன்,டெல்லாபுரூஸ்,கண்ணதாசன் இன்னும் பலரை படித்தாலும் பாலகுமாரன் எழுத்தின் மேல் இருந்தது, ஈடுபாடு என்பதையும் தாண்டி, ஒருவித கர்வமே வந்து விட்டது அப்போது .எனக்கு மட்டுமே பாலாவின் எழுத்து மிகவும் புரிகிறது என்ற கர்வம் . என் வயதுக்கே உரிய பெண்கள் பற்றிய பிரமிப்பு ,காதல் பற்றிய வித்தை ,அவரின் எழுத்தில் தவம் தியானம் போல, ஆழ்ந்து இழுத்து செல்லும் சூட்சுமம் இருந்தது .வெளியுலகம் ஒருவித வெளிச்சதுடன் புரிந்தது .வாழ்வின் தந்திரம் மெல்ல புரிய அவிழ்வதாக பட்டது .,அவரின் எழுத்தோடு என் இளமை முழுதும் பயணப்பட்டது.பாலா பெண்களை பற்றிய புரிதலை  நிறைய எழுதினார் .ஆனால் நான் படிக்க கொடுத்த  பாலாவின் புத்தகங்கள் அவர்களிடமிருந்து படிக்கபடாமலேயே அவசரமாக திரும்பி வந்தது. எனக்கு ஆச்சர்யாமாகிவிட்டது .சில பேர் தான் படிப்பதையே வெளியே சொல்ல மறுத்தார்கள் .அவர் புரிந்து கொள்ள முடியாத பகவான் ரஜனீஸ் போல அவரை பார்த்தார்கள்.பாலாவை அதிகம் மோசமாக விமர்சிப்பவர்கள் என்னை விட அவரை அதிகம் தேடித் தேடி படிப்பவர்களாக இருந்ததுதான் எனக்கு தீராத ஆச்சர்யமாகவே இருக்கிறது.
      

          யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால் அரை மணி நேரம் பாலாவின் ஏதோ ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியை படித்து விட்டுத்தான் எழுதி இருக்கிறேன் .சமீபத்தில் நண்பர் சங்கரின் ( திண்டுக்கல்லில் பாலாவை பார்க்க ஏற்பாடு செய்து பின்னால் நொந்து போனவர் ) +2 படிக்கும் பையன் விக்கி, நான் சங்கருக்கு, 22 வருடத்திர்க்கு முந்தி அவர் சென்னையில் இருந்தபோது எழுதிய கடிதத்தை பழையபெட்டியில் பார்த்து என்னப்பா இந்த அங்கிள் கட்டுரை மாதிரி இத்தனை பக்கம் எழுதி தள்ளி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு மானசீகமாக அப்பாவின் நட்பை யோசித்து இருக்கிறான். கவிதை,கட்டுரை ,கடிதம், விமர்சனம்  எது எழுதினாலும் அதில் பாலாவின் வாசனை இருக்கும் அளவுக்கு ஊறிபோய்விட்டேன் .  என் இளமை காலங்களை திரும்பி பார்த்தால் பாலாகுமாரன் என்ற எழுத்தாளானை சுவாசித்த வாசம் மட்டுமே இருக்கிறது . 


     பாலாவை படிக்க எனக்கு 13 வயதில், எனக்கு” பச்சை வயல் மனதை”  அறிமுகப்படுத்திய மூத்த சகோதரர் செல்வம் இந்த என் ஈடுபாட்டை ஒரு சமயம் எச்சரிக்கை செய்தார் .ஒரு எழுத்தாளனே கதி என்று நின்று விடாதே உலகமும் பெரியது, இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் படி .ஒரே ஆளை படிக்கும்போது மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று தோணிவிடும் ஆபத்து இருக்கிறது  என்று சொல்லி சாண்டில்யனையும் , கல்கியையும் கொடுத்தார் .அவர்களின் எழுத்தின் மேல் கவனம் செல்லவில்லை .இன்று கூட அந்த கவலை பற்றி நிற்கிறது .


ஆனால் பாலகுமாரன் வேறு யாரயும் படிக்க வேண்டாம் என்பதாக சொல்லவில்லை .அவர் சொல்லித்தான் மேலும் பலரை படித்தேன் .யோகிசுரத் குமாரிடம் இரண்டு முறை  ஆசீர்வாதம் அவரால்தான் பெற்றேன் .இருந்தாலும் இன்னும்  பல பேரை சகோதரர் செல்வம் சொல்லிய மாதிரி பாலகுமாரன் கிறுக்கு எனக்கு பிடித்து இருந்ததை இல்லை என்று இப்போது  எத்தனையோ எழுத்தாளார்கள் படித்த பிறகும் கூட சொல்ல முடியவில்லை .



         அதே போல திரைப்பட உலகத்திர்க்கு முந்திய அவரின் எழுத்தில் உள்ள சம்பவ விவரிப்புக்கும் ,அதர்க்கு பிறகு எழுதிய எழுத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு.அது போலத்தான் ஆன்மீக முழு ஈடுபாட்டுக்கு பிறகு அவரின் எழுத்தின் ஆழம் இன்னும் மாறு பட்டது.அவரின் எழுத்தோடு பயனம் செய்தவர்களுக்கு இது புரியும் .


       இப்போது கடந்த பத்து ஆண்டுகளாய் அவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு குறுகிவிட்டது .ஆனாலும் அவருக்கு முதல் கடிதம் எழுதி பதில் வராமல் தவித்த உணர்வை இன்று அவரின் ”முக நூலுக்கு” நட்பின் அனுமதிக்கு காத்து இருக்கும்போதும் அனுபவிக்கிறேன் .தமிழ்  மட்டுமே அதிகம் வாசிக்க தெரிந்த எனக்கு இன்னும் வேறு எழுத்துக்களை படிக்கும்போது உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள அவரின் எழுத்து இன்னும் உதவத்தான் செய்கிறது.  


    சமீபத்தில் எங்களை விட அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள என் அப்பா , உடையார் தொகுப்பை வாங்கி தரமாறு சொல்லி இருக்கிறார். அடுத்து கங்கை கொண்ட சோழன் வாங்க சொல்வார்.அவர் படித்த பிறகு நாங்கள் படிப்போம் !