சனி, 19 அக்டோபர், 2013

முதல் விதியை காதலித்தேன் - TVS வேலை.


               எல்லோரும் நியூட்டனின் மூன்றாம் விதியை துரத்தி  கொண்டு இருக்கும் போது நான் மட்டும் முதல் விதியை காதலித்தேன் .அது ”ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்”.            இதை நான் விரும்ப காரணம் அது "மனதில் இருக்கும் நம் எண்ணங்களுக்கு ஏற்ப நம் சூழ்நிலை அமைக்கிறது. நாம் எந்த சூழ்நிலையை விரும்புகிறோமோ அதற்கேற்ப நம் மன எண்ணங்களை அமைத்துக் கொள்ளும் போது நம் வாழ்க்கை நம் விருப்பம் போல் அமைகிறது"  (THOUGHT EVOLVED BEING) என்ற ஜேம்ஸ் ஆலன் கருத்தோடு ஒத்து இருந்ததாக பட்டது அதனால்தான் .


           சரி, இதர்க்கும் எனது TVS இண்டர்வியூக்கும் எப்படி தொடர்பு ...?
எனக்கு சின்ன வயதிலிருந்தே  TVS நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆசை என் வயதோடு வளர்ந்து வந்து விட்டது . நான் பிறக்கும் முன்னே அப்பா LGB நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார் .அப்போது இந்த இரண்டு போக்குவரத்து நிறுவனங்கள்தான் முடி சூடிய சாலை மன்னர்கள் .முக்கியமாக TVS நிறுவனத்தின் ஒழுக்கம் , கட்டுப்பாடு மற்றும் புரிதல் என்னை பெரிதும் கவர்ந்தது .இன்றும் வேறு எந்த நிறுவனதின் போக்குவரத்து வாகனங்களிலும் ஒரு உதவியாளர் என்று சொல்லக்கூடிய கிளீனர் இல்லாத வாகனங்களை பார்க்க முடியாது ஆனால் TVS வாகனங்களில் ட்ரைவர் மட்டுமே இருப்பதை பார்க்கலாம் !
       
    
                மேலும் +1 படிக்கும் போது ஒரு நண்பர் சொன்னார் TVS வேலைக்கு ஸ்போர்ட்ஸ் முன்னுரிமை உண்டு என்றார் .அந்த சமயம் கிரிகெட்டில் ஒப்பனிங் பேட்ஸ் மேனாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பட்டயை கிளப்பி கொண்டு இருந்தார்.அதனால் அதுவரை பிடிக்காத கிரிகெட்டை கெட்டியாக பிடித்து கொண்டேன் .நான் இடது கை பழக்கம் உள்ளவன் என்பதால்  அங்கு அது மிகவே உதவியது . 
                +2 மிக சராசரியான மதிப்பெண் பெற்றதால் அடுத்து எங்கு சேருவது என்று யோசிக்க நேரம் எடுத்து கொள்ள அப்பா திண்டுக்கல் அரசினர் தொழிற் பயிற்சியில் சேர்த்து விட்டர்.
              
                        அங்குதான் ,கும்பிட போன தெய்வம் குறுக்கே வருவது போல எனது ஐடிஐ கேம்பஸ் இண்டர்வியூ TVS ஓசூரிலிருந்து வந்து இருந்தார்கள் 13 பேரில் ஐவர் மட்டுமே தேர்வானோம் .மிக ஆர்வத்துடன் நேர்முகதேர்வுக்கு ஒசூர் போனோம்.அன்று எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருவரும் முதலில் அழைக்கபட்டார்கள் .அப்போது அவர்களிடம் கேட்க்க பட்ட கேள்விகளில் ஒன்று புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி ..அதர்க்கு இருவரும் எங்களுக்கு அதை கற்று கொடுத்தவர் பின்னாள் வருகிறார் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்கள் 


                     நான் போன உடன் கேட்க பட்ட கேள்வியில் அதுவும் ஒன்று .அத்துடன் யார் எழுதியதெல்லாம் படிப்பீர்கள் என்பதையும் கேட்டார்க்ள் இப்போது நேரம் குறைவு என்பதால் கொஞ்சம் செலெக்டிவாக படிக்க வேண்டியதாக இருக்கிறது அப்போது அப்படி இல்லை . கிடைத்ததெல்லாம் படிப்பதால், சொன்னேன். .கடைசியாக ஒரு கேள்வி என யூனியன் ,சங்கம் அவசியமா என்பது போல கேட்டார்கள் . . மிக முக்கியம் என்றேன் .அதர்க்கு அவர்கள் நீங்கள் ஒரு நிறுவனத்தை நம்பி சேரும்போது பிறகு அந்த நிறுவனம் அவர்கள் மீது எடுத்து கொள்ளும் அக்கரையை விட உங்கள் யூனியன் சாதித்துவிட முடியுமா என்று தொடர்ந்து கேட்ட போது கூட என்று கேட்டபோது எனது படிப்பறிவு அந்த கூர்மையான கேள்வியின் பின் புலம் தெரியாமல் பதில் சொல்ல வைத்தது. நிறுவனத்திர்க்கும் – தொழிலாளிக்கும் யூனியன்தான்  உறவு பாலம் என்றேன் பிடிவாதமாக . அப்படி நான் சொல்ல  காரணம் அப்பா இங்கு திண்டுகல்லில் LGB யூனியன் லீடர் .


                    என்னுடன் கலந்து கொண்ட எல்லோருக்கும் கம்பனி அப்ரண்டீஸ் தேர்வு செய்து கடிதம் வந்தது என்னை தவிர .பிறகு ஒசூரில் பை மெட்டல் பேரிங் என்ற கம்பனியில் வேலை பார்க்கும் என் சீனியரிடம் விசாரித்தபோது அவர் சொன்னார் . யூனியன் பற்றிய அந்த பதில்தான் மற்றவகளை விட மார்க் இருந்தும் உனக்கு வேலை கிடைக்காமல் போகவைத்து விட்ட்து. நீங்கள் இண்டர்வியூ வந்த போது யூனியன் பிரச்சனையால் கம்பெனி காலவரையற்று மூடி இருந்தது என்றார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது  குறுக்கே வந்த கடவுளை நான் தள்ளிவிட்டு விட்டேன் என்பதை .
                

               ஆனாலும் நியூட்டனின் மூன்றாம் விதியை அப்போதும் காதலித்தேன் .மீண்டும் அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் TVS கம்பெனியின் சிறு வாகனம் முதல் பெரிய வாகனம் வரை ரீ பெல்ட் ஏஜண்ட் . அவருக்கு உதவியாளராக இருந்தால் சேர்த்து விடுவதாக சொல்லவே அவரை நம்பி  அவருடன் பணிசெய்து கொண்டே  அனேகமாக த்மிழ் நாட்டில் உள்ள அனைத்து TVS நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன்  .பலன் இல்லை .ஆனால்  தொடந்து துரத்தும்போது சுமார் 3 வருடங்கள் கனவாகவே போய்விட்டது .இறுதியில்தான் போன பதிவில் ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் கூத்து .


                  திண்டுகல்லில் சசிகுமார் நம்பி எடுத்த படமெல்லாம் ஓடும்போது ,போத்தீஸ் விளம்பரத்தில் சிவ கார்த்திகேயன் சொன்னது போல என்னுடைய TVS வேலை என்ற கலர் பட காட்ட முடியாமல் போய்விட்டது .ஆனாலும் சசிகுமார் நண்பர்  சமுத்திரக்கனி சொன்னது போல கிடைத்ததை விரும்ப பழகி கொண்டேன் .


    ஆனால் நான் வைத்து இருப்பது TVS -Star City .இதில் என் கனவு நிறைய நிரம்பிவிட்டது 


               இந்த பதிவில் என்னுடன் ஐடிஐ படித்து ,பிறகு என்னுடன் இண்டர்வியூ வந்து புத்தகம் படிக்க கற்று கொடுத்தவர் என்று சொல்லி விட்டு  TVS வேலையில் பணிபுரியும் நண்பர் சாரி ராமன் ( இது பெயர்தான் ) பற்றிய சில வேடிக்கை, அடுத்த பதிவில் ..

வெள்ளி, 18 அக்டோபர், 2013

நேர்முக (இண்டர்வியூ ) கூத்துக்கள்


                   இப்போதுதான்  எங்கள் நிறுவனத்தில் இண்டர்வியூ புயல் ஓய்ந்தது .எப்போதுமே மெர்சண்டைசிங் ( merchandising ) மற்றும் குவாலிட்டி (Quality ) அழைப்புக்கு எனது ஜீ மெயில் முகவரியும் ,மொபைல் எண்ணும் கொடுத்து விடுவதால் ,ஞாயிறு யாரெல்லாம் தினமலர் வேலை வாய்ப்பு பக்கத்தை   பார்க்கிறார்களோ எனக்கு கூப்பிட அரம்பித்து விடுவது வழக்கம் .

                  இதை மறந்து விட்டு வெகு நாளைக்கு பிறகு ஒரு விருந்துக்கு பந்தி பறிமாற நான் போக ஒவ்வொரு ஒரு இலையை கடக்கும் போதும் ஒரு போன் வர துவங்கியது ... சிலர் பந்தா பண்ணுவதாக ஓடாத படத்தின் போஸ்டரை பார்ப்பது போல என் மேல் பார்வயை மேய விட பாதியில் எஸ்கேப் ஆகி ஒதுங்கிவிட்டேன் .ஆனால் இது இங்கு விசயமல்ல ..நான் அனுபவித்த நேர்முக (இண்டர்வியூ ) கூத்துக்கள் பற்றி

பில் கலெக்க்டர் !

                                ஐடிஐ முடித்து நேர்முக தேர்வுக்கு காத்து  இருந்த சமயம் அது . அப்பாவின் முதலாளி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் செயலாளர் பதவிக்கு அப்போதுதான் தேர்ந்தெடுக்க பட்டு இருந்தார்  .எனவே சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒருமுறை ரசீது கொடுத்து பணம் பெறும் வேலைக்கு, ஆள் போடும்வரை என்னை வசூலிக்க  ஒரு மாதம் மட்டும் கட்டாயத்தின் பேரில் அமர்த்த பட்டேன் .அப்போதுதான் வேலை பற்றி படிப்பதர்க்கும் அதை நேரிடையாக சந்திப்பதர்க்கும் உள்ள இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது .ஒரு மாதம் முடிந்த போது (முதல்) சம்பளம் வாங்க அப்பாவின் முதலாளியை பார்க்க போனேன்.அப்போதுதான் அவர் சொன்னார் இன்னும் உனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை முடிவு செய்யவில்லை நாளைக்கு இவரை போய் பார்த்து வாங்கி கொள்ள சொன்னார் .போனேன் .அதுவும் ஒரு பஸ் செட்.சட்டையில்லாமல் ஒரு மனிதர் கனத்த  குரலுடன் பேசிகொண்டு இருந்தார் .என்னை ஒரு காக்கி சட்டை(கண்டக்டர்) அறிமுபடுத்தினார் .உட்கார சொல்லாமல் உனக்கு எவ்வளவு சம்பளம் என்றார் ? எனக்கு அப்போதெல்லாம் கம்யூனிச சித்தாந்தின் மேல் நம்பிக்கை அதிகம் .அதன் படி உழைப்பவன் வேர்வை காய்வதர்க்குள் கூலி தந்துவிடவேண்டும். ஆனால் இங்கு ஓடி ,ஓடி மாதம் பூரம் வசூலித்து கொடுத்து விட்டு சம்பளம் கேட்டால் எவ்வளவா? எனக்குள் இருந்த அறைகுறை படிப்பறிவும் , கம்யூனிச சிற்றறிவுக்கும் யாரோ தீவைத்தது போல பற்றி கொள்ள , ஒரு மனிதன் வாழ்வதர்க்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு வேண்டும் என்றேன் .எதிரே இருப்பது யார் என்பதை கவலைப்பட கூடாது என்று தீர்மானித்து கொண்டு .அவர் இதை எதிர்பார்க்கவில்லை .உற்று பார்த்து உனக்கு வேண்டியதை சொல் என்றார் .அதை என் அப்பாவிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறேன் என்றேன் .என்னை போக சொல்லிவிட்டார் .அடுத்த நாள் என்னை அப்பாவின் கம்பனிக்கு அழைத்த முதலாளி ,அந்த அந்த ரசீது புக்கெல்லாம் கொடுத்து விட்டு பஸ் கம்பனிக்கு வேலைக்கு வந்து விடு என்றார் .நான் தயங்கி கொண்டே வெளியே வரும் முன்  ,நேற்று நீ பேசியது யார் தெரியுமாப்பா ? என்றார் .தெரியாது சார் என்றேன் .அவர்தான் அசோசியேசன் தலைவர் .பயமில்லாமல் நீ பேசியதர்க்கு இங்கு சேர்த்து கொள்ள சிபாரிசு பண்ணியதே அவர்தான் என்றார்  .
                 எனக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் கிடைக்கும் வரை அங்கு சுமார் இரண்டரை வருடம் பணிபுரிந்தேன் .
             

     அப்ரண்டீஸ்.
      
                அடுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் நேர்முகதேர்வு .பழைய எனது ஐடிஐ நண்பர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள் .அதில் ஒருவன் பால கிருஷ்ணன் .காவல்துறையில் அவன் அப்பா பணிபுரிகிறார் .எனக்கு இரண்டு பேருக்கு முன்னாள் அவன் அழைக்கப்பட்டான் .போய் சில நிமிடங்களில்  அவன் திரும்ப, எங்களுக்கு நேர்முக தேர்வு பயம் இருந்ததால் அவனிடம் ஆவலாய் உள்ளே என்ன கேள்வி கேட்கிறார்கள் என்றதர்க்கு எதுவும் சொல்லவில்லை . நாங்க முன்னாடியே ஏற்பாடு பண்ணிட்டோம் என்பதை மட்டும்  சொல்லிவிட்டு போய்விட்டான் .
                         
மொத்த வெல்டிங் ?
                  என்முறை வந்தது .மூன்று பேர் கேள்வி கேட்க காத்து இருந்தார்கள் .வெல்டிங் எத்தனை வகை  என்றார்கள் முதல் கேள்வியாய்.சார் எனக்கு தெரிந்த ஐடிஐ வெல்டிங் சொல்லவா ? அல்லது உலகத்தில் உள்ள மொத்த வெல்டிங் சொல்லவா சார்  என்று திருப்பி பணிவுடன் கேட்டேன் .ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள் .உனக்கு தெரிந்த வெல்டிங் எல்லாத்தையும் சொல்லுங்க என்றார் .நான் எனது ஐடிஐ சீனியர் வேல்முருகன் திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பார்த்து கொண்டு இருந்தவர் மூலமும் ,மெக்கானிகல் என்ஜீரியங் நண்பர் மூலம் அறிந்த விசயங்களை சொன்னேன் .’இண்ட்ரஸ்டிங்’ என்றார்கள்.

கப்பலில் ஓட்டை

              அப்புறம் ஏன் உங்கள்  ஐடிஐ படித்த பாலகிருஷ்ணன் நடுகடலில் கப்பலில் ஓட்டை ஏற்பட்டால் எந்த முறையில் வெல்டிங் செய்வாய் என்றதர்க்கு கரைக்கு கொண்டுவந்து ஆர்க் (Arc ) வெல்டிங் செய்வேன்னு எப்படி சொல்றார் என்று கேட்டார் .நான் உள்ளுக்குள் சிரித்து கொண்டேன் .அந்த இண்டர்வியூ வெறும் கண் துடைப்பு என்று அவன் சொன்னதை இங்கு எப்படி சொல்வது ?ஆனாலும் எனக்கும் அப்ரண்டீஸ் கிடைத்தது .என்ன பாலகிருஷ்ணன் திண்டுக்கல் RMTC நான் பழனியில் RMTC (ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம் )


அடுத்த எனது இண்டர்வியூ ,எனது கனவு நிறுவனமான TVS நிறுவனத்தில் பணிபுரிய எடுத்து கொண்ட முயற்சி பற்றி ...

வியாழன், 12 செப்டம்பர், 2013

அவர்கள் உதவட்டுமே...

மகனின் ஆசிர்வாதம் ..


                            வீட்டில் கோபித்து கொண்டு , சில நாட்களாய் எல்லாமே வெளியே சாப்பிடும் காரணத்தால் டீ, காஃபி,மற்றும் உணவகங்களின் யோக்கிதைகள் புரிந்து கொள்ளமுடிகிறது .பிரச்சனை புரியாத எனது பையன் அப்பா நல்ல ஒட்டலில் சாப்பிடுங்கள் என ஆசிர்வதித்து அனுப்புகிறான் தினமும் ( ஒருவேளை அவன் அம்மா சமையலில் இருந்து தப்பித்து விட்டதாக நினைக்கலாம் . )

வேலையில் திருப்தி.



                          எது எப்படியோ, இதனால் காலையில் அலுவலகம் வந்தால் பிறகு இரவு மட்டுமே வீட்டுக்கு போவதால் அலுவலக வேலை அத்தனையும் முடித்து விடுகிற திருப்தி கிடைக்கிறது என்பது வேறு விசயம் . அதனால்  போகும் இடமெல்லாம் கிடைக்கும் உணவகங்களில் எல்லாம் சாப்பிடும் நிலை .இன்று அட்வான்ஸ் டாக்ஸ் கட்டவேண்டி வங்கிக்கு போனால் அங்கு உணவு இடைவேளை.

மழையின் ஆசிர்வாதம்.



                       வெளியே மழை தனது ஆசிவாதத்தை பூமிக்கு வழங்கிகொண்டு இருந்த நேரத்தில், கிடைத்த ஓட்டலில் பசியாற ஒதுங்கினேன் .சாப்பிட ஆரம்பித்து ,உணவில் ரசத்திர்க்கு வரும்போது ஓட்டலின் வாசலில் ஒரு முப்பது வயதுக்கு உட்பட்ட கர்பிணி பெண் ,கையில் ஒரு இரண்டு வயது மதிக்கதக்க குழந்தையுடன்  பத்து ரூபா நீட்டி சாப்பாடு கேட்டது (அங்கு உணவின் விலை 40).அதர்க்கு தகுந்த மதிப்பாய் உணவை கடை பணியாளர் கட்டி கொடுக்கும்போது , எனக்கு சட்டனெ அந்த பணத்தை நாமே கொடுத்து விடலாம் என சொல்லும் முன் எனக்கு முந்திய டேபிளில் என்னை போல உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர் அதர்க்கும் நான் கொடுத்து விடுகிறேன் என்று கடை முதலாளியிடம் சொல்லி, முந்திக்கொண்டார் .கடை முதலாளி கொடுத்து அனுப்பி விட்டார் .அந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தை  ஆவலுடன் அந்த பெண்ணை முந்திகொண்டு உணவு பொட்டலத்தை வாங்க கை நீட்டியது .ஒரு விதத்தில் அது என்னமோ செய்தது  மனசுக்குள் .

அதோடு முடியவில்லை ...


                          அந்த பெண் சென்ற சில நிமிடத்தில் ,அந்த ஓட்டலில் உணவு கட்டி கொடுத்த பணியாளர் ,அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்க முன் வந்தவரிடம் கேட்டார் ,அந்த பெண் பற்றி உங்களுக்கு தெரியுமா சார் ? அதர்க்கு இல்லை , கையிலும் குழந்தை வயிற்றிலும் குழந்தை பாவம் என்றார். அதர்க்கு பணியாளர் மேலும் விடாமல் ,அது பிச்சை எடுக்குதேன்னு பரிதாப பட்டு இருப்பீர்கள் ஆனால் சாயந்திரம் ஏழு மணிக்கு , இது இந்த மாதிரி குழந்தைதையுடன் பிச்சை எடுக்கும்  காசெல்லாம் அவன் வீட்டுக்காரன் (? ) வந்து வசூல் செய்து விட்டு போய்விடுவான், அது தெரியுமா உங்களுக்கு என்று நக்கலாக கேட்டார் .இதர்க்குள் அங்கு பார்சல் வாங்க வந்த ஒரு பாட்டி ,இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் உதவி செய்யாதீங்க சார் என்று ( இலவசமாக கிடைக்குமே அந்த) அட்வைஸ் தர ,அவர் என்னமோ போல ஆகிவிட்டார் .

விமர்சிக்க உரிமை இல்லை .


                      அவருக்குள் இருந்த மனிதாபிமானம் தூண்டபட்டு ,அவர் உதவியது இத்தனை விமர்சனபடுகிறதே, நாம் அந்த இடத்தில் அதை செய்து இருந்தால் இதே அனுபவத்தை பெறும் வாய்ப்புதான் கிடைத்து இருக்கும் .நல்லவேளை தப்பி விட்டோம் என்பதாக அங்கு என்னை போல இருந்த எல்லோரும் யோசித்தாலும்   ,எங்கு நமது உதவி திரும்பி வராது என்று உணர்கிறோமோ அங்குதான் உதவி செய்வது நல்லது என்பதாக பட்டது . அந்த பெண் அந்த கையிலிருந்த குழந்தையை வாடகைக்கு வாங்கி கூட இந்த பிழைப்பில் ஈடுபட்டு இருக்கலாம் ( இதை பற்றி அறிய படிக்க ஜெயமோகனின் - ஏழாம் உலகம் அல்லது நான் கடவுள் திரைப்படம் பார்க்கவும்  ) ,அவளிடம் வந்து வசூலித்து போகின்றவன் அவள் கணவனாக கூட இல்லாமல் போகலாம் எல்லாமே ’லாம்’ ஆகலாம். ஆனால் ஒவ்வொருக்கு உள்ளே இருக்கும் இந்த உதவும் மனபான்மை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது மட்டுமே சத்தியம் என்பதாக எனக்கு பட்டது .       

புதன், 28 ஆகஸ்ட், 2013

பால்ய நட்பு


நாகராஜை சந்தித்து சுமார் 20 வருடங்கள் மேலாகிவிட்டது. இருந்தாலும் அவனை அடையாளம் காண்பது கஷ்டமாக இல்லை...


அவனும் நானும் எட்டாம் வகுப்பு ஒரு வருடம் சேர்ந்து படித்து இருந்தாலும்,  அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு நடிகை நடிகர்களுக்கெல்லம் சொல்லப்படும் கெம்ஸ்ட்ரி ,பாட்டனி உறவுக்கெல்லம்  மேலானது . மேலும் யார் வாழ்கையிலும் பால்ய நட்பு எப்போதுமே ஒருபரவசம்தான். அதர்க்கு தனி இடம் உண்டு .அதில் நாகராஜ் எனக்கு ஒரு ஆச்சர்யமானவன் .


          
நாகராஜுக்கு அப்பா இல்லை .ஒரு அக்கா, ஒரு தங்கை அவனுக்கு .பிராமணர் வகுப்பை சார்ந்த அவன் வீட்டுக்குள் யாரையும் அவ்வளவு சுலபமாக அனுமதிக்க மாட்டார்கள். 

அந்த வேறுபாடு அப்போது எனக்கு தெரியாது .இருந்தாலும் என் பெயரையும்  தோற்றத்தையும்  விடவும் என்னை நண்பன் என்பதால் அவன் வீட்டுக்குள் போராடி முன்னறை வரை அழைத்து சென்று இருந்தான் .அப்புறம் நடு வீடு வரை அவர்களே அனுமதித்தார்கள். என் மேல் ஏதோ எப்போதுமே ஒரு ஈடுபாடு இருந்ததால்தான் 20 வருடத்திற்க்கு பிறகும் கூட என்னை தேடிவந்து இருக்கிறான் .


வெகு ஆண்டுக்கு பிறகு சந்தித்ததால் ,நிறைய விசயங்கள் ஆர்வமாக பேசிக்கொண்டோம் . அக்காவின் திருமணம் அவசரமாக சொந்தத்தில் மும்பையில் உள்ள உறவினருக்கு பேசி முடித்து  கொண்டதால் எட்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்த கையோடு  வீடு காலி பண்ணி போனதால் சொல்ல முடியாமல் போய்விட்டார்களாம் . அவன் இப்போது மும்பைவாசி . இப்போது தங்கைக்கும் அடுத்த ஆண்டு திருமணமாம் .அது சம்பந்தமாக திண்டுக்கல் வந்ததாக சொன்னான் . 


பள்ளி ஆசிரியர்களை பற்றி பேச்சு வந்த போது ,இப்போது உள்ள ஆசிரியர்கள் பற்றி பேசினோம் .எங்கள் வகுப்பாசிரியர்கள் பலர் இப்போது அனேகமாக பணி ஓய்வு பெற்று விட்டார்கள் .இருந்தாலும் அவர்களை பற்றி அவன் நினைவு கூர்ந்தான். 

சொன்னால் யாரும் நம்ப மறுப்பார்கள் படிப்பில் அவனுக்கு பெரிதாய் ஆர்வம் இல்லை ஆனால் சகலவித விளையாட்டு போட்டிகளிலும் அவன் முன்னிலை .முக்கியமாக யாரும் கலந்து கொள்ளாத சர்க்கஸ் வித்தை போல நெருப்பு வளையத்திர்க்கு உள்ளே குதிப்பது ,வாயில் பெட்ரோலை ஊதி நெருப்பை வரவைப்பது போன்ற அப்போது பள்ளிகளில் அனுமதி மறுப்பு இருந்தாலும் நாகராஜால் அது மீட்டு எடுத்து பள்ளி CEO க்கள் முன்னே  நடைபெற்றது  நாகராஜுக்கு தனி பரிசு வழங்கப்பட்டது ..


இப்போது வாழ்க்கை பற்றி பேச்சு வந்தது .அதில் மும்பை சிவப்பு விளக்கு பற்றி அவன் சொன்ன ஒரு அனுபவம் என்னை புரட்டி போட்டது .நாயகன் கமல் போல ,முதன் முறையாக நண்பர்களுடன் சிவப்பு விளக்கு பகுதி நாகராஜ் மும்பை போயிருக்கிறான் .உடன் வந்த நண்பர்கள் இருவருமே மும்பைவாசிகள் .ஆனாலும் தோடா தோடாதமி(ழ்)ள் மால்பவர்கள்.
           
பெண்களுக்கான தேர்ந்தெடுப்பு  முடிவுபெற்ற பிறகு இவன் தேர்வு பெண்ணை காண்பித்து இருக்கிறான் .அந்த பெண்ணை பற்றி தனது நண்பர்களிடம் ஏதோ ஒரு வார்த்தை தமிழில் சொல்ல ,அதை கேட்ட அந்த பெண் நேரே வந்து இவன் தமிழ் ஆளான்னு  இவன் கூட வந்த நண்பனிடம் ஹிந்தியில் கேட்டுச்சாம் . அவன் ஆமாம் என்றதும்.அவனிடம் எனக்கு வர முடியாது  என்றதாம் . 

ஏன் கேட்டதற்கு அவள்
“நான் தமிழ் நாட்டுக்காரி, அங்கு  இருந்து வருபவன் எல்லாம் எனக்கு அண்ணன் தம்பிதான்”  என்று சொல்லி விட்டு உள்ளே போய்விட்டதாம் .




இதை சொல்லி முடிக்கும் போது  நாகராஜின் கண்ணில் நீர் தளும்பியது . அதற்க்கு பிறகு அந்த பக்கம்  இதுவரை அவன் மீண்டும்  போனதில்லை என்றான்.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகான எங்கள் இனிய சந்திப்பு ஏதோ ஒரு நிரடலுடன் முடித்தது.

சனி, 20 ஜூலை, 2013

ஒரு( விபரீத) ஆசை




         யாராவது உங்களிடம் (கொஞ்சம் மதிப்பாய்) நீங்கள் இந்த வேலைக்கு வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் எனும்போது  (நம்மால் முடியாவிட்டாலும் ) ஒரு பந்தாவுக்காகவாவது பிரபலமான ஒரு துறையில் இருந்து இருப்பேன் என்பதாக சொல்வது வழக்கம்தான்  .ஆனால் அப்படி நான்   சொல்லாவிட்டாலும் எனக்கு ஒரு ( விபரீத )ஆசை இருந்தது .அது நான் ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் ஆக வேண்டும் என்பது !
         நல்ல வேளை எனது நண்பர்கள் பலரின் குல தெய்வ வேண்டுதலால் !! அப்படி ஒரு துரதிருஷ்டம் இந்த உலகுக்கு ஏற்படவில்லை என்பது வேறு விசயமே .

        நான் புகைப்பட கலை பழக ஆசைப்பட்ட காலம் ஒயிட் அண்ட் பிளாக்கில் எடுப்பதானால் ஃபிலிம் செலவு குறைவு ஆனால் பிரிண்ட் காஸ்ட் அதிகம் .கலர் இதர்க்கு நேர் எதிர் என்பதால் நண்பரிடம் இருந்த ஒரு ஹாட் சாட் கேமிரா இருந்ததை  பழக கேட்டேன் .கொடுத்து விட்டார் .அதோடு அவர் சும்மா இருந்திருக்கலாம் .கொடுக்கும்போது இந்த கேமிராவில் ஐந்து அடிக்குள் மட்டும்தான் படம் எடுக்க முடியும் அதனால் நீங்கள் ஃப்ரேம் மட்டும் எப்படி எடுப்பது என்பதை இதில் கற்றுகொள்ளுங்கள் எனறார். உடனே ஒரு கருப்பு வெள்ளை ஃபிலிம் ரோல் மாட்டி எனது கற்பனை குதிரையை ,அமெரிக்காவின் பிரபல  Ansel Easton Adams  ரேஞ்சுக்கு யோசிக்க தொடங்கி விட்டேன் .ராப் பகலாய் இதே யோசனை !  


ஊருக்கு பக்கத்தில் ஓடைப்பட்டி என்று ஒரு ஊரில் சின்ன குன்றுதான் என் முதல் பலி சாரி முதல் ஃப்ரேம். ஒரு ஐந்து படங்கள் .அப்புறம் இருக்கவே இருக்கு( பாவம் ) திண்டுக்கல் மலை கோட்டை .நல்லவேளை அப்போது தொல்பொறுள் துறை வசம் அது இல்லை .இருந்திருந்தால் நான் எடுத்த கோணத்திற்காக அப்போதே எனது படம்தான் நுழைவு சீட்டில் படமாக இந்த உலகம் முழுதும் தெரிந்து இருக்கும்!   (அல்லது பித்தளை பெட்டி மலை சரிவுப்பக்கம் என்னை ஒருவேளை மேலே இருந்து உருட்டிகூட விட்டு இருக்கலாம்  என்பது வேறு விசயம் !)


       இது பத்தாது என்பதாக மனசுக்கு தோணவே ,அப்போது படித்து கொண்டு இருந்த தி .ஜானகி ராமனின் ‘மோகமுள் ‘ படத்துக்கு கதைக்கு ஏற்ப படம் எடுக்க ஆசைபட்டு ஆரம்பிக்க ,(இயக்குனர் ஞான ராஜசேகரன் மன்னிக்கவும் ) பக்கத்து வீட்டில் பள்ளி விடுமுறைக்கு வந்த ஒரு பெண்ணை அந்த கதையின் யமுனா கதாபாத்திரத்திர்க்கு ஏற்ப யோசித்து அந்த பெண்ணை நடுவீட்டுக்குள் உட்கார வைத்து கையில் ஒரு பூவை மட்டும் பிடித்து இருக்க, எல்லா கதவையும் சாத்தி விட்டு, (மன்னிக்கவும் ) முகத்தில் மட்டும் ஒளி விழுமாறு  எதிரே ஒரு ஜன்னலை மட்டுமே திறந்து வைத்து படம் எடுத்தேன் .


அப்புறம் எனது கிரிக்கெட் அணியை , எனது படிக்கும் அறையை ,சில நண்பர்களை ,வீட்டு வாழை மரத்தை ,பப்பாளி மரத்தையும் படம் எடுத்து ஃபிலிமை (நல்லவேளை )தீர்த்தேன் .


       ஸ்டுடியோவில் ப்ரிண்ட் போட்டு கொண்டு இருக்குபோது வெளியே நெர்வசாக ஒரு Robert Capa's வின் Falling Soldier ஃபோட்டோ அளவுக்கு என் ஒவ்வொரு ஃப்ரேம் அள்வுக்கு யோசித்து கொண்டு இருக்க , நண்பர்தான் முதலில் படங்களை பார்த்தார் .எதுவும் சொல்லவில்லை ,கை கொடுத்தார் .நீங்க இப்போ ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் என்றார் .அப்புறம் என் நிலை சொல்லவா வேண்டும் ? நானாகவே ஏதோ மலையிலிருந்து உருளுவது போல இருந்தது .



                 
                        நான் சின்ன வயதிலிருந்தே ஏதாவது புது புது விசயங்களை தேடிபோவதால் கிடைக்கும் அத்தனை நபர்களிடமும் நான் அப்போது செய்து கொண்டு இருக்கும் வேலை மிக ஈடுபாட்டுடன் ஒரு மேதாவித்தனத்துடன் ஒப்பிப்பது சகஜம் .அப்படி ஒரு நண்பர் கேள்விபட்டு ,தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவை புகைபடம் எடுக்க கேட்டு கொள்ள பள்ளபட்டி என்ற கிராமத்துக்கு போனோம் .பொதுவாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் .அதனால் ஒவ்வொருமுறையும் ,விசேசத்திர்க்கு சாப்பிட மட்டுமே வந்த பங்காளி மாதிரி பதுங்கி பதுங்கி போட்டோ எடுக்க, அப்புறம் எனக்கு ஒருவரை துணையாக உதவிக்கு தந்து முன்னுக்கு தள்ளினார்கள் .
              அதே நண்பரின் கல்யாணத்திர்க்கு போட்டோ எடுக்கும் அளவுக்கு ஓரளவு திருப்தியாக படங்கள் அமைந்தது .ஆனால் அந்த கல்யாணத்தில் தாலி கட்டும் போது ஃபிலிமை தீத்துவிட்டு மாப்பிளை நண்பர் என்பதால் கையில் தாலியுடன் காத்து இருக்க அய்யரை முறைக்க வைத்து விட்டு ,அவசரமாக ஃபிலிம் லோடு பண்ணி படம் எடுத்தது இதில் சேத்தி இல்லை .


 பொதுவாகவே போட்டோ கிராபருக்கு ஒரு மரியாதை உண்டு என்பது கொஞ்சம் போதையான விசயம் .முகம் தெரியாத ஆள்கூட தந்து முகத்தை பதிய வைத்து கொள்ள சினேகமாய் பேசுவது இன்னும் கொஞ்சம் உசத்தியாய் அப்போது யோசிக்க வைக்கும் .எனது ஆர்வம் அல்லது தொல்லை  தாங்காத இன்னொரு நண்பர் நான் பாண்டிசேரியில் இருக்கும்போது அப்போது வந்த புதிய மாடலான yashica kyocera MF2 வாங்கி கொடுத்து பல விசேசங்களை வாய்பு தேடித்தர ..கனவுகள் கூடசில சமயம் ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் அடடா போச்சே என வரும் ..


                  இப்போது எனது  பையன் மைக்ரோ மேக்ஸ் A 89 போனில் எடுக்கும் மிக சாதாரண போட்டோக்கள் கூட அசரவைக்கிறது .அவனுக்கு ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தட்டி எடுக்கிறான் .சில விசயங்களை(மற்றவர்களை) கஷ்டப்படுத்தி  நாம் கற்று கொள்வதை விட கவனாமாக செய்தால் போதும் என்பதர்க்கு  எனக்கு நானே ஒரு மிக மோசமான உதாரணம் போல !

வெள்ளி, 19 ஜூலை, 2013

நிர்மலாவின் கடிதம்



                அன்று வந்த கடிதங்களை வாசிக்க வகைப்படுத்தும்போது , முதலில்  சோவியத்யூனியனின் - மாஸ்கோ வானொலி நிலைய உறுப்பினர் வண்ண அட்டை , BBC தமிழோசையின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் அடுத்து அனுப்புனர் பெயரில்லாத  இலங்கையிலிருந்து ஒரு  கடிதம் .

 வானொலி மன்றம்.


                 இது எனக்கு ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .உலகம் முழுதும் செயல் படும் வெளி நாடுகளில் உள்ள  தமிழ் வானொலிகளுக்கு மட்டுமே கடிதம் எழுத நண்பர்கள் பலர் சேர்ந்து, மன்றம் வைத்து இருந்தோம். (பெயர்: சமாதான சகோதரர்கள் வானொலி மன்றம்.  அமெரிக்காவால் சோவியத்யூனியன் (USSR) உடைக்கப்படும் முன் அதன் அதிபர்  மிக்காயேல் கார்பச்சேவ் - நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட உறவினை கொண்டாடும் விதமாக, இந்த பெயர் )அப்படியிருந்தும் சின்ன வயது முதல் கேட்டு வரும் இலங்கை வானொலிக்கு  கடிதம் எழுதும் ஆர்வம் இல்லை .மேலும் அது வானொலி நிலையக்கடிதம் என்பதை அதன் அடையளங்கள் சொல்லவில்லை  அப்படியானால்..

               எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் கடிதத்தை உடனே படிக்கமாட்டேன் .ஆனால் அந்த விரதம் அடுத்த நாள் கோவை பேனா நண்பர் முருகேசன் கடிதம் வரும்வரைதான்  .அதில் இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா என விசாரிக்கபட்டு இருந்த போதுதான் எனக்கு தெரிந்தது .அது அவரின் நீண்ட நாள் தோழி நிர்மலாவால் அனுப்ப பட்டதென்று .



            பிரபலங்கள் எழுதிய கதைகளை தாங்கி வரும்  பல்சுவை நாவல் படிப்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாக கருதபட்ட சமயத்தில் அதில் வாசகர் வட்டம் ஏற்படுத்தியிருந்தார்கள் .அதன் மூலம் எனக்கு கிடைத்த பல நண்பர்களில் கோவை கலர் சாலை தோட்டத்தை சேர்ந்த முருகேசனும் ஒருவர் .பல மாதங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து உறவுகளை மேம்படுத்தி கொண்டு இருந்த போது ,அவர் எனக்கு எழுதிய கடித்தத்தில் தனக்கு இலங்கையில் நிர்மலா என்ற தோழி இருப்பதாகாவும்  என்னுடய சில தவறுகளால் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்வதில்லை என்பதாகவும் ஆனால் அவர்கள் மிகவும் தனது  சொந்த வாழ்வின் கசப்பான அனுபவங்களால் தவிப்பதாகவும் ,அவர்களுக்கு உங்களின் நட்பு ஆறுதல் தரும் என்பதால் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பிட்ட கடிதம் வந்து சில மாதங்களுக்கு பிறகே இந்த நிர்மலாவின் கடிதம் .



            கடிதம் மிக அழகிய இலங்கை தமிழில் அழகான மிக விசாரிப்புகளுடன் நீண்டதாக இருந்தது .பொறுமையாக படித்தபோது ,இங்கு நாம் வழக்கில்  தொலைத்த  பல  தமிழ் வார்த்தைகள் என்னை திணறடித்தன ஆனாலும் ஒரு மெல்லிய ஆழமான நட்பின் தேடல் கடிதம் முழுதும் என்னை ஆக்கிரமித்தன ..



           பிறகு மாதம் ஒரு கடிதம் வர தொடங்கியது .தான் ஒரு இளமை  பிராயத்தில் அறியாமல் ஒருவரை காதலித்து கைவிட பட்டதாகவும் இதனால் வீட்டில் பெற்றோர்களின் அன்பை இழந்ததாகவும்  , இப்போது படித்து விட்டு வேலைக்கு போன இடத்தில்  பல ஆண்டுக்கு பிறகு  மீண்டும் ஒருவரை காதலிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .ஆனால் அது திருமணம் வரை போக  சில சிக்கல்கள் இருந்தன. தனது காதலன் ஒரு சிங்கள வம்சாவளி என்பதால் ,அவர்கள் வீட்டில் சம்மதம் தடுமாறி கொண்டு இருப்பதாகவும் , அதனை பேசி முடிக்க அடுத்த மாதம் என் மேல் மிகவும் பாசம் உள்ள இரண்டாவது அண்ணன் வருகிறார்  என்பதகாவும்  அது நல்லபடியாக நிறைவேற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டு இருந்தார் நிர்மலா .

         ஆனால் ,அடுத்த மாதம் கடிதம் வரவில்லை .எனது இரண்டு கடிதங்களுக்கும் பதில் வரவில்லை ,மேலும் அப்போதுதான்  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கை தீவை தனது கட்டுபாட்டில் வைத்து கொண்டு இருந்தது .இதனால் இனம் புரியாத கவலை என்னை துரத்த தொடங்கியது .அதர்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக மூன்றாவதாக நான் எழுதிய கடிதம் எழுதினேன் .ஆனால் அதை அனுப்பும் முன் ஒரு கடிதம் 1987 டிசம்பர் மாதம் வந்தது .ஆனால் அது கடிதம் அல்ல எனக்கு தண்டனை !.




                 ஆம் .அந்த கடிதம் வந்தது நமது  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) அங்கு சென்ற சமயத்தில் 1987 அக்டோபர் 5 ஆம் நாள்  புலிகள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு கொள்கை அளவில் முரண்பாடு ஏற்பட்டதால் .(இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய உளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.)



             புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது .இந்த போரில் நிர்மலாவின்  காதலன் வீட்டு அருகே நடந்த புலிகளுக்கும் - நமது  அமைதிகாக்கும் படைக்கும் நடந்த யுத்தத்தில் நமது இந்திய ராணுவ வீரனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட ஒரு குண்டின் சிதறல் தவறிபோய் நிர்மலாவின்  காதலனின் வயதான பாட்டியின் காலில் பாய்ந்து இறந்து போகவே மீண்டும் கை கூட இருந்த நிமலாவின் உறவு இந்த காரணத்தால் மறுதளிக்கப்பட்டதாம் .

            இதில் மனம் உடைந்து போன தனது அண்ணனை  சில நாளுக்கு பிறகு இலங்கை ராணுவத்தால் விடுதலைபுலி என்று சந்தேகப்பட்டு வாயில் சுடபட்டு நடு ரோட்டில் கொல்லபட்டதாகவும் ,தனது அன்பு வாழ்கையும் , எனது மேல் பாசம் காட்டிய ஒரே ஜீவன் அண்ணன் இறப்பும் ,தனது வாழ்வில் மீளா சோகத்தில் தள்ளிய பின் நான் எங்கு போகிறேன் எனக்கு தெரியவில்லை ,எனவே மீண்டும் நான் இதை எல்லாம் தாங்கி கொண்டு பிழைத்து வந்தால் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என முடிந்திருந்தது அந்த கடிதம் ..



              எனக்கு தெரிந்த ஒரு நிர்மலாவின் நிலையே இவ்வாறு என்றால் இப்போது எத்தனை நிர்மலாவின் வாழ்கையின் சீரழிவை அந்த ராவண பூமி விதைத்து இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் ...

       வரலாறு ..( என்ன சொன்னாலும்  அங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பது வெறும் இரக்கமற்ற காகிதங்கள் மட்டுமே ! )




          காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர்.அன்றைக்கு கலிங்க நாட்டினில்(இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) இருந்து வெளியேற்றப்பட்ட  போரில் தோற்று ஓடிய  (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது) ஒரு இனக் குழுவின் இளவரசன்-விஜய சிங்கன் என்பவன் அங்கிருந்து  தெற்கே பயணித்து, இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும்(இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது )அங்கு இருந்த  தமிழ் பெண்  இளவரசி குவேனியை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான் உண்மை .இதர்க்கு சாட்சி



                    இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று? ( நன்றி - http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/2.html)



                இனி , ஒண்ட வந்த பிடாரிக்கும் ஊர் பிடாரிக்கும் வித்தியாசம் யாராவது காட்ட வேண்டும் என்றால் இந்திய வரைபடத்தில், தமிழகத்தின் தொங்குசதையாக இருக்கும் பார்வதியின் சாபம் பெற்ற ராவணத்தீவை காட்டுங்க்ள் 

திங்கள், 15 ஜூலை, 2013

திருட்டு ரோஜாக்கள்


                                             
                                         
                                       திருப்பூரில் ஒரு திருமண வரவேற்பு விழா லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது .மண்டபத்தின் நுழைவு வாயிலில் பலவகையான ரோஜாக்கள் மற்றும் பல மரக்கன்றுகள் இலவசமாக கொடுத்து கொண்டு இருக்க ,சரி நாம் வரும்போது வாங்கி செல்லலாம் என பேசிக்கொண்டு உள்ளே சென்றோம்.


                           இந்த வரவேற்பு முக்கிய நிகழ்சிகள் திருப்பூர் மனவளக்கலை அமைப்பினர் தலைமையில் சிறப்புற செதுக்கப்பட்டது போல மிக அழகான வகையில் அர்த்தத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                   எந்த கல்யாணத்திலும் பார்க்காத வகையில் மணமகனின் தந்தையும் , தாயும் வந்தவர்களை வரவேற்க்க ,அமர்ந்து இருக்கும் இடத்திற்கே வந்து வரவேற்று அசத்தினார்கள் .


                                                 அடுத்து சென்னை அனுஷம் வித்தியாசமான குழுவினரின் நாட்டிய நடன கலைநிகழ்ச்சி அரங்கேறியது .பொதுவாக இம்மாதிரி நிகழ்சிகளில் திரைபாடல்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதை தவிர்த்து நிறைய கருத்துருக்களை வைத்து அசத்தினார்கள் .இதில் உச்சகட்டமாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைத்து "நூறுவருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும்தான் " என்ற படலை ஒலிக்க செய்து, ஆட விரும்பிய பார்வையாளர்களையும் மேடைக்கு அழைத்து கொண்டாடினார்கள் .


                                             நினைவுபரிசாக வந்திருந்த அனைவருக்கும் ஒரு பரிசுபையை தந்தார்கள் .அதில் 1.வேதத்திரி அவர்களின் லேமினசன் படம் .2.வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு ...(கையடக்க புத்தகம்) .3. இல்லம் சங்கீதம் என்ற ஒரு கட்டுரை தொகுப்பு (அழகிய படங்களுடன் + முக்கிய தொலைபேசி எண்கள் ) 4.திருப்பதி +பத்மாவதி திருகல்யாண வண்ணப்படம் .5.மந்திரங்கள் + இறைப்பாடல்கள் அடங்கிய 1.05 G.B அளவுள்ள DVD என அருமையாக யோசித்து அளித்து இருந்தார்கள் .


                                                பொதுவாக இந்த கல்யாணங்களில் பபே ( Pafe ) முறைப்படி மட்டுமே வழங்குவார்கள் .ஆனால் இங்கு வழக்கமான முறையும் இருந்தது .( கையேந்தி பவனில் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு! )


                            எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக மண்டபத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பல வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள் .அங்குதான் நம் மக்களின் மனம் ஆரோக்கியத்தை கண்டோம் .இலவசமாக தந்தால்  அனைவருக்கும் சென்று அடையும்  என்ற கொடுப்பவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் ஒன்றுக்கு பல கன்றுகளை அள்ள , பாவம் பலபேர் ஒன்று கூட கிடைக்காமல் புலம்பிகொண்டார்கள் .

 வினோத திருட்டு!

                              நாங்கள் வண்டி நிறுத்தும் இடம் வந்த பொது ஒரு உண்மை  அப்போதுதான் தெரிந்தது .அங்கு நிறுத்த பட்டு இருந்த பல வாகனங்களில் பல  அற்புதமான செடிகள் பாலி பேக்குகள் வைத்து பலவிதமாக தொங்கிகொண்டு இருந்தன .இந்த வினோத திருட்டுதான் பல பேரை ஏமாற்றி விட்டது .சில பேர் போகும்போதே  ( வந்ததே இதர்க்காக என்பதாக  - விவரமாக முன் கூட்டியே !) நிறைய வாங்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள் .


             இப்படி திருட்டுக்கு சமமாக எத்தனைபேருக்கு போகவேண்டிய செடிகள் அந்த வண்டிகளில் தொங்கிகொண்டு இருக்கிறது ? அதில் நிறையபேரின் பெயர் இருப்பது போல மானசீகமாக எனக்கு பட்டது !!! .