வெள்ளி, 18 மே, 2018

சிவப்பு விளக்கில் ஒரு அன்னப்பறவை !


அன்புக் கிருஷ்ணாவுக்கு,

இங்கு மும்பையில் நம் வீட்டில் அம்மா,அக்கா,மாமா,தங்கை எல்லோரும் சுகம் .அங்கு நம் அம்மா அண்ணன்கள் சுகமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.வெகு நாளாய் உனக்குக் கடிதம் எழுத ஆசைப் பட்டு இன்றுதான் அது நிறைவடைந்து இருக்கிறது .அதிலும் இரண்டு முக்கியமான விசயத்தை உன்னோடு பேசாமல் என்னால் எனக்குத் தூக்கம் வராமல் தவிப்பின் கட்டாயமே என்னை எழுதத் தூண்டியிருக்கிறது .

முதல் விசயம் என்னை விடவும் உன்னை மிகவும் அதிகம் பாதித்த விசயம் எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்.அவரை நீ மிகச் சின்ன வயதிலிருந்து படித்து வந்தவன் என்ற முறையில் அவர் மரணத்தின் பாதிப்புச் சொல்ல முடியாத துக்கத்ஹ்டில் இருப்பாய் உணர்கிறேன். அப்போது அவர் எழுத்தோடு எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை .ஆனால் வயது ஆக ஆக நீ வரிக்கு வரி நீ வாசித்து அனுபவித்துச் சொன்ன போது புரியாதது இப்போது புரிகிறது .அதிலும் இங்கு மும்பை வந்து ஐந்து வருடங்களில் ஹிந்தியைக் ஒரே வருடத்தில் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன் ஆனால் தமிழ் மறந்து விடும் பயம் வந்து விட்டது அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், சார் வாசிக்கத் தொடங்கினேன் .

சென்ற வாரம்தான் இரும்பு குதிரை படித்தேன் . அதில் விஸ்வநாதன் ,வசந்தா - ஹைவே குயின் ,நெடுஞ்சாலை ராணி,பாதையோரப் பட்டிப்பூ சந்திக்கும் இடம் என்னை உலுக்கிவிட்டது . அதிலும் விஸ்வநாதன் அவளைப் பாடச் சொன்னபோது வசந்தாப் பாடும் தெழுங்குப் பாட்டு ..

தேவுடு சேசின பெள்ளியிது
மா தேவனின் லீலையிது
கலகல லாடே நவ்வுனு லோலா
கண்ணீர் எந்துக்கோ ?

வரிகளை வாசித்த போது எனக்குள் ஏதோ செய்தது. இதெல்லாம் நீயும் வாசித்து இருப்பாய் ஏன் இதைச் சொல்கிறேன்னா உனக்கு நான் சொல்லப் போகும் அடுத்த விசயத்திற்கும் ஒரு பெரிய தொடர்பு இருப்பதால்தான்.இதுக்கு உனது பாசையில் தசாவதார படத்து பட்டர்ஃபிளை எஃபெக்ட் என்பாய் ஆனால எனக்கு அதெல்லாம் தெரியாது.என்னோட ஸ்டைலில் ஏதோ காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக இருக்கலாம் ஆனால் விழப்போகும் பனம் பழத்தில் காக்கா உட்கார்ந்தது நிஜம். 


சரி விட்ட இடத்திற்கு வருகிறேன். அதை வாசித்த உடன் அந்தப் பெண்களில் இப்படியெல்லாம் இருப்பார்களா என்று சோதிக்கும் புத்தி எனக்கு வந்தது.உனக்குத் தெரியும் என்னைப் பற்றி எதிலும் பிராக்டிக்கலாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும் அதனால் சென்ற வாரம் எனக்கு எதிர்பாராதவிதமாக மும்பைக்குத் தென் பகுதியில் சாங்கிலி ( sangli ) ஏரியாவுக்கு அருகில் ஒரு ஓட்டல் மூன்றாவது மாடிக் கட்டிட எலெக்ட்ரிக் காண்ட்ராக்ட் வேலை போயிருந்தேன். ( இதுவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மும்பைக் காமத்திபுரம் ( Kamthipuram ) போல ஒரு சிவப்பு விளக்குப் பகுதி .)அங்கு நாங்கள் தங்குவதற்கு அந்த ஓட்டல் மேல் மாடியில் ரூம் ஒதுக்கிக் கொடுத்து இருந்தார்கள் .

அங்கிருந்த ஏரியாப் பசங்களிடம் சொல்லிக் கேட்டபோது முதல்ல எதுக்குப் பேசணும் ? என்றுதான் முதலில் கேட்டார்கள் . அவர்களுக்குள் இவன் என்னா லூசா என்று கண் சிமிட்டிப் பேசிக்கொண்டார்கள் .அவர்கள் அதை மராத்தியில் பேசிக்கொண்டார்கள் .எனக்கு லேசாய் அப்படித்தான் புரிந்தது.ஒரு வழியாய் ஒத்துக்கொண்டார்கள் . நீ அங்குப் போய்ப் பேசுவாயோ இல்லை பேச மாட்டாயோ எங்களுக்குத் தெரியாது .அது உன் சாமார்த்தியம். நாங்கள் அங்குப் போய்க் கூட்டிட்டுப் போய்க் காட்டுகிறோம் என்று ஒத்துக்கொண்டார்கள் அன்று மாலையே ஏழு மணிக்கு அழைப்போனார்கள்.

அந்த ஏரியாப் பசங்களுக்கு அவர்களுக்குப் பழக்கமான இடம் போல. அது ஒரு நீண்ட சந்துக்குள் ஆட்டோவில் அழைத்துப் போனார்கள் .போகும் வழியெல்லாம் பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள் கைகாட்டிச் சிரித்தார்கள் அதில் சில ஹிந்தி ,இன்னும் சில புரியாத பாசையில் கையசைத்தார்கள் .அதற்கு அர்த்தம் உள்ளே வா என்றும் மட்டும்தான் எனக்குப் புரிந்தது .ஓடுகிற எங்கள் ஆட்டோவை சில தட்டினார்கள் .எனக்கு எந்த ஊரில் இருக்கிறோம் என்பது கூட மறந்து போயிருச்சு.



ஒரு வீட்டு முன்னால் வண்டியை நிறுத்தி உள்ளே அழைத்துப் போனார்கள் .அங்கு ஒரு குண்டாய் ஒரு பெண் பழைய சோஃபா முழுவதும் நிறைத்து உட்கார்ந்து இருந்தது .இவர்களைப் பார்த்ததும் வெகு நாள் பழக்கப்பட்ட தொனியில் நிறைய விசாரித்தது.என்னைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஹால் போன்ற அறையின் மூளையில் சுண்டட்டி-எல்லம்மா பழைய கண்ணாடிச் சட்டமிட்ட படம்

யாரோ ஒரு சின்னப் பெண் எங்கள் எல்லோருக்கும் பாதாம் பால் டம்ளரில் கொண்டு வந்து கொடுத்தது.எனக்கு வேண்டாம் என்ற போது அந்தக் குண்டுப் பெண் அவர்களிடம் இது உனக்குப் புதுசா ? என்று கேட்டது

ஆமாம் என்றேன்.என்னோடு வந்தவர்களைப் பார்த்துச் சிரித்தது.

கொஞ்ச நேரத்தில் ஆறு பெண்கள் உள்ளிருந்து வந்தார்கள் .அந்தக் குண்டுப் பெண் என்னைப் பார்த்து யாரு வேண்டும் என்று கேட்டாள் .எனக்கு உள்ளே கூச்சமாக இருந்தது.அதைப் புரிந்து கொண்டவள் போல அந்தக் குண்டுப் பெண் அந்தப் பெண்களில் ஒருத்தியைப் பார்த்து அழைத்துப் போகச்சொன்னாள் .நான் தயங்கினேன் .அழைத்து வந்த பசங்கள் சிரித்தார்கள் .அவர்களோடு எல்லோரும் சிரித்தார்கள் .
எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அந்தக் குண்டுப் பெண் கை காட்டிச் சொன்ன பெண் என் அருகே வந்து மாடிக்குப் போகலாம் என்றாள் .
அவள் முகம் எனக்கு எங்கோ பார்த்தது போல இருந்தது.

மாடியில் அவளோடு தொடர்ந்து அறைக்குள் போனேன்.
உள்விளக்கைப் போட்டாள். விளக்கின் ஒளியில் சட்டேனெப் பிரகாசமானது அந்த அறை . 

அது ஒரு சின்ன அறை .ஒரு கட்டில் இருந்தது.அதில் மெத்தைப் போலக் கனமான பூப்போட்டப் போர்வை விரித்து இருந்தது.அறையின் மூளையில் ஒரு வாட்டர்க் கேன் இருந்தது.இன்னொரு மூளையில் ஒரு ஸ்கீரின் போட்டுச் சுவற்றில் செல்ஃப் இருந்தது.
சில மணி நேரத்திற்கு முன்னாள் இந்த அறையில் இருந்த எரியும் விளக்கு அணைக்கப்பட்ட எண்ணையோடு கலந்த விளக்குத்திரியின் கருகிய நெடி வந்தது.
என்னை உட்காரச் சொன்னாள்.
அப்போதுதான் அவள் முகத்தை முழுவதுமாகப் பார்த்தேன்.
என்னைப் பார்த்துக்கொண்டே சேலையைக் கழட்டப் போனவள் நிறுத்தி விட்டு
நீங்க அது கொண்டு வந்து இருக்கிங்களா ? என்றாள் .
என்ன ? என்றேன்.
காண்டம் என்றாள் .
இல்லை எனக்கு அது வேண்டாம் நான் வந்தது அதற்கு இல்லை என்றேன் மெதுவாக . 

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே எதுவும் பேசாமல் கதவைத் திறந்து கீழிறங்கிப் போனாள் .
எனக்கு அந்தச் செல்ஃபில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் மேலோங்கியது.சரி பார்த்து விடுவோம் என்று அந்தச் சின்ன ஸ்க்ரீன் விலக்கிப் பார்த்தேன் .

உள்ளே மங்கலாய் ஒரு ஆண் புகைப்படம் இருந்தது.ஒரு மண் விளக்கும் அதற்கு ஊற்ற ஒரு எண்ணெய்ப் பாட்டிலும் தீப்பெட்டி சில ரூபாய் நோட்டுக்கள் கூடவே ஒரு புத்தகம் இருந்தது.
புத்தக்கத்தை எடுத்தேன் .
கிருஷ்ணா சொன்னால் நம்ப மாட்டாய் அது நம் பாலாசாரின் இரும்பு குதிரை தமிழ் நாவல்.
எனக்குப் பளிச்சென்று ஒரு நிம்மதி. அப்படின்னா இவள் தமிழ் தெரிந்தவள்

 . 

புத்தக்கத்தை எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்து வாசிக்க உட்காரவும் அவள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவள் கையில் சின்னதாய் ஒரு கலர் ப்ளாஸ்டிக் கவர் கொண்டு வந்தாள்.
அதைக் கட்டிலின் மேல் வைத்தாள்
அவள் அப்போதுதான் என் கையில் உள்ள புத்தக்கதைப் பார்த்தாள் .
சட்டெனெ அவள் முகம் மாறியது.
நீ தமிழா ? என்றாள் .
ஆமாம் என்றேன் தமிழில்.
சட்டெனெக் கட்டிலில் வைத்த பிளாஸ்டிக் கவரை அறையின் மூளையில் கோபமாக வீசி விட்டு ஏதோ சொல்லவந்தவள் ,வேண்டாம் என்பது போலப் பேச்சை நிறுத்தி விட்டுத் திரும்பி அந்த அறையை விட்டுக் கீழிறங்கிப் போனாள்.
எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது .
அவள் நான் தமிழ்காரன் என்றவுடன் ஏன் கோபப்பட வேண்டும் ?

அவள் கீழிறங்கிப் போன சில நிமிடத்தில் உரக்க ஹிந்தில் யாரோடோ கத்திப் பேசியது கேட்டது .
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .
நான் எடுத்த புத்தக்கத்தை மீண்டும் அங்கேயே கொண்டு வைத்தேன்.
திரையை இழுத்து மூடிச் சரி செய்தேன்.
மீண்டும் அந்தக் கட்டிலில் வந்து உட்கார்ந்தேன் .
அந்த அறை எனக்கு ஏதோ குழித் தோண்டி உள்ளே வைத்தது போல ஒரு எண்ணத்தை உருவாக்கித் தந்தது

யாரோ படியேறி வரும் ஓசைக் கேட்டது .
அவள்தானா ?
இல்லை .நாங்கள் உள்ளே வந்த போது நான் பார்த்த ஆறு பெண்களில் ஒருத்தி அவள் .
அவள் எங்கே ? என்றேன்.
இல்லை அவள் வரமாட்டாள் அவளுக்குப் பதிலாக நான் வேண்டாமா என்று சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு என் கன்னத்தைத் தடவினாள் .
ஒரு நிமிடம் இங்கு உட்கார் என்று கட்டிலைக் கட்டினேன்.
நான் அதற்கு வரவில்லை வேறு நோக்கத்திற்காக வந்திருக்கிறேன் சுருக்கமாகச் சொன்னேன் .
அவள் புரிந்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அதற்கும் சிரித்தாள்.
இப்போது சொல் அந்தப் பெண் தமிழா என்றேன்.
அவளுக்கு என் கேள்வி புரியவில்லை ஆனால் ஒரு மாதிரியாகப் புரிந்துகொண்டு ,மதராசி என்றாள் .
ஏன் அவள் போய் விட்டாள் என்றேன் 
.
என் முகத்தைப் லேசாய் உற்றுப் பார்த்தபடியே அவள் ஒன்று சொன்னாள் கிருஷ்ணா செத்தாலும் அதை மறக்க முடியாதுடா .

மதராசியெல்லாம் அவ கூடப் பிறந்த பொறப்பு மாதிரியாம் .எவ்வளவு காசு வந்தாலும் வேணாம்ன்னுட்டாளாம் .

சொன்னா நீ நம்ப மட்டே, எனக்கு அதைக் கேட்டது கண்ணீர் வந்துருச்சுடா.
என்னால் கட்டுப்படுத்த முடியல.
நான் முகம் கவிழ்த்து அழுவதைப் பார்த்து அவள் என்ன நினைத்தாலோ தெரியவில்லை .
கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே உட்கார்ந்து இருந்துவிட்டு என்னிடம் எதுவும் சொல்லாமல் தயங்கி எழுந்து நின்று விட்டுப் படியிறங்கிப் போய் விட்டாள்.

எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்து இருந்தேன்னு தெரியவில்லை .
ஏதோ அடக்க முடியாத வலிபோல உள்ளே திரண்டு நின்றது .

அந்த இடத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கதறி விடுவேன் போலத் தெரிந்தது .

அந்த அறையை விட்டுக் கீழே வந்து எப்படி நான் தங்கியிருந்த ரூமுக்கு எப்படி வந்தேன்னு தெரியவில்லை .

இப்போது கூட அந்த வார்த்தைய நினைச்சா இதுக்கு மேல என்னால எழுத முடியல ...

முடிக்கிறேன் .

என்றென்றும் அன்புடன் ,
நாகராஜன்.

புதன், 2 மே, 2018

எஸ்.ராவின் - உப பாண்டவம்



சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொடங்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் - 

”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார். 

அது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்தக் திருவிழாவில் அவர் ”மறைக்கப்பட்ட இந்தியா” என்ற தன் வரலாற்று நூல் பற்றிய உரை மூலம் அவர் எனக்குள் விதையாகிப் போனார்.அவர் பேச்சு மிக நெருங்கிய நண்பனின் தோழமை போல வெகு எளிமையாக இருந்தது.என் ஆர்வம் இன்னும் ஒரு படி மேலேறியது.ஆனாலும் எந்த நூலில் வாசிக்கத் தொடங்கலாம் என்ற கேள்வி சில படிகள் இறக்கிவிட்டது . 

வெகு நீண்ட வாசிப்பில் ,தொடக்கம் மிக முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தேன் .ஏனெனில் இப்படிப்பட்ட தவறான துவக்கங்கள் சில சமயம் அந்த எழுத்தாளனை வாழ்நாளெல்லாம் சரி செய்ய முடியாத தள்ளிவைப்புக்கு இழுத்துச் செல்லும் வாய்ப்பாக்கி இருக்கிறது என்பது எனக்கும் ஒரு அனுபவம் . 

சென்ற ஆண்டு இறுதியில் திண்டுக்கல் போயிருந்த போது என் இரண்டாவது சகோதரரும் என் வாசிப்புலகுக்கு குரு நாதருமான திரு.செல்வத்தை வீட்டில் சந்திக்கும் போது அவர் எப்போது போலவே எனக்குப் புதிய பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது எஸ்.ராவின் உப பாண்டவத்தைக் காட்டி ,நல்லா இருக்குடா நான் வாசித்து விட்டுத் தருகிறேன் என்றார்.சென்ற இந்த முறை திண்டுக்கல் போனபோது சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிரபலமான ,புதிய எழுத்தாளர்களின் விலையுயர்ந்த புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார்.சரியான கனம்.வாசிப்ப நேசித்தால் புத்தகச் சுமை எப்போதும் வலிப்பதில்லை .அந்தக் கன வரிசைக்குள் எஸ்.ராவின் உப பாண்டவமும் அடக்கம் .நான் எதிர்பார்த்தது போலவே எஸ்.ரா எதுவும் சொல்லாமலேயே அவர் முதன் முதலில் எழுதிய நாவலான உப பாண்டவ வாசிப்புக் கிடைத்தது சந்தோசமாக இருந்தது. 


தேசாந்திரி ஒருவனின் துரியோதனப் படுகளத் தரிசனத்தைக் காணவிழையும் தேடலில் எதிர்படும்  கதை பாடும் சூதர்களின் அஸ்தினாபுரம் என்பது ஒரு கனவு என்ற வார்த்தையில் இந்த நாவல் தொடங்கினாலும் அதற்கு முன்னரே ”எல்லா வழிகளும் அஸ்தினாபுரம் நோக்கித்தான் போகின்றன” என்ற படகோட்டியான கிருஷ்ண துவைபான வியாசர் வார்த்தையிலிருருந்து வாசிப்பு என்னைக் கைப்பற்றிக்கொண்டது . 

மஹாபாரதம் எனும் நடந்ததாகப் பேசப்படும் ஒரு புனைவெனும் நதியோடை, ஓடி மறைந்த பிறகு அதைக் காலத்தின் பின்னோக்கிய சுவாசத்தின் சுவாசத்தில் மூழ்கிச் சேகரித்த மொத்தப் பயணம்தான் உப பாண்டம். 

”காந்தாரியின் கர்பம் நீண்டுகொண்டே போகிறது. காந்தாரித் தன் கர்பத்தைத் தனே வலிமையால் மோதிச்சரிக்கக் கர்ப்பப் பிண்டம் வெளிப்படுகிறது .அதை நூறு கலயங்களில் இடுகிறார்கள் நூறு குழந்தை பிறக்கிறது “ (ப.40) இன்று டெஸ்ட் டியூப்பில் குழந்த வளர்ப்பது பற்றிய பால பாடம் அங்கேதான் விதைக்கப்பட்டது என்பதைக் கதை பேசி நகர்கிறது . 

மயன் சிருஷ்டித்த மணிமண்டபம் தன் பகைமையின் உன்னதச் சிருஷ்டியின் வடிவாமாக்கி விட்டுப் புறப்பட்டு விட்டான்.மாயமண்டபம் எனும் அழகின் பின்னே எரிந்து உருத்தெரியாது போன காண்டவ வனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது (ப.137) 

பகடையாட்டம் என்பது ஒரு சிருஷ்டிகரம் .அதன் விதிகள் எங்கோ மர்மமாகத் தீர்மானிக்கப்படுகிறன.(ப.199) 

குருசேத்திர யுத்தகளத்திற்கான தேர்வு செய்யப்படும் சமந்த பஞ்சகம் என்ற இடம் காற்றின் உள்வட்டத்திற்கும் ஒளியின் கதிக்கும் எப்படி யுத்த சாதகத்தைச் செய்கிறது என்பதுவும் மேற்கில் என்று யுத்தம் புரிபவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற சூட்சுமச் செய்திகள் பிரமிக்கச் செய்கின்றன (ப.268). 

மேலும் யுத்த விதிகள் , ஒரு அக்ரோணிப் படையின் தேர்,யானை,குதிரை,காலாட்கள் போன்ற அளவுகள் தொடங்கிப் படை வியூகங்கள் நான்கு வகை அதன் உட்பிரிவு எட்டுவகை வியூகத்தின் அங்கம், தலை,சிறகு,உக்கிர அரூபி என்ற ஆழ விளக்கம் தாண்டி என்ன வகை ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன, யுத்தம் நடக்கும் இடத்தருகே அமைக்கப்படும் கூடாரம் தொடங்கி மருத்துவர்கள் வரையும் போர் தொடங்கி அதன் உள்விளைவுகளின் விவரணைகள் மிகுந்த வலியோடு வாசித்துப் பயணிக்க வைக்கிறது. 

இதெல்லாம் தாண்டி இந்த வாசிப்பின் முக்கிய நிகழ்வே மஹாபாரதத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சந்திப்பும் . அவர்களின் உள்மன விசாரணைகளும் அவ்வளவு சுலபமாக நமக்கு ஒரு மஹாபாரதம் பற்றிய ஒரே ஒரு நூலின் மூலம் கிடைக்கும் விசயங்கள் அல்ல .எஸ்.ரா எனும் வரலாற்றுத் தேசாந்திரியின் புதையல் தேடலின் விளைவே அவை .பல வாசிப்பின் உளோட்டங்களின் முடிவுதான் இப்படி உறுதியாகப் பேச வைக்கிறது அவரை .இந்தக் கதாபாத்திரங்களனைத்தும் வியாசன் மனவோட்டத்தில் காலத்தின் கைக்குள் சிக்கிய சதுரங்கக் காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன என்பதை முன்னெப்போதும் பாரதத்தை வாசிக்காதவர்களுக்குக் கிடைத்த வரம் . 

எஸ்.ரா கதை சொல்லும் விதம் சாதரண அறிவுக்கு எட்டாத , அடங்காத காலத்தின் ரகசியம் போல விரிந்து செல்கிறது .எழுத்து என்ற நமக்குள் இருக்கும் எல்லைகளின் பிம்பம் சொந்த உருவகங்கள் கரைந்து ,கரைந்து நாமும் எழுத்தாளனின் பின் தொடரும் நிழலான வியப்பின் ஆழச்சுழிக்குள் கொண்டு செருகிக்கொள்கிறோம். 

வாசிக்க வாசிக்க எல்லையற்ற மனவெளியின் நீண்டப் பயணத் தொலைவில் நிகழ்கால இருப்பை நழுவிய ஓர் கால் இழந்த கனத்தப் பறவையாய்த் தரை பாவாது மிதந்திருந்தேன்.கதை முடியும் போது எங்கோ ஒரு தீராத வலி காலத்தின் எல்லா அசைவுகளுக்கும் முடிவுகளோடுதான் பிறந்திருக்கின்றன என்ற மாயவிதிகளின் வழிகளைச் சொல்லி முடிக்கின்றன . 


”இன்றைக்கும் எனது உப பாண்டவம் நாவலின் முதல்பதிப்பை அடிக்கடி எடுத்து பார்த்துக் கொள்வேன். அது ஒரு பாடம். எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள நான் பட்ட சிரமங்களின் அடையாளச்சின்னம். இலக்கிய உலகில் எனக்கான இடத்தை உருவாக்கி தந்த படைப்பு.நான் எழுதிய நாவல்களில் என்னால் மறுமுறை எழுத முடியவே முடியாத படைப்பாகக் கருதுவது உப பாண்டவத்தை மட்டுமே.

அந்த நாவலை எழுதிய நாட்களில் இருந்த ஆவேசமும் கொந்தளிப்பான மனநிலையும் இன்றில்லை.”

உப பாண்டவத்திற்குப் பின்னால் - எஸ்.ராமகிருஷ்ணன்
(அந்திமழையில் வெளியானது)

நிறைவாக... 384 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் வாசிக்கப்படும் பொது எத்தனை முறை இடக்கை வலக்கை மாறி,அங்கு ,இங்கு வைத்து வாசிக்கப்படும் என்ற முன் நிகழ்வைக் கணித்து வடிவமைக்கப்பட்ட அட்டையின் தரம் அற்புதம் என்பதைச் சொல்லாமல் விலகக்கூடாது. 



புதன், 25 ஏப்ரல், 2018

காதல் அசடுகள் !



மனைவி ஊருக்கு போன பின்  குக்கரும் சொன்ன பேச்சை கேட்பதில்லை .
எதிர்பாராமல் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
முக்கா டம்ளர் அரிசி,ஒன்னேகால் சொம்பு தண்ணீர்,நாழு விசில் மனப்பாடம் பண்ணி வைத்து இருந்தேன்.
அடுப்பில் வைத்த சில நிமிடத்தில் அறுபது வயசு கிழவன் மூச்சு  போல விசில் பலவீனமாக வந்தது . எட்டு பலவீனமான விசிலுக்கு அப்புறம்தான் இறக்கினேன்.
திறந்து பார்த்தால் பத்தியகாரனுக்கு கஞ்சி சோறு ரெடியாகி இருந்தது .
வீட்டுக்கார அம்மாவ ஊருக்கு அனுப்பிய முதல் நாளே இப்படியா ?
அப்புறமென்ன திருப்பி அடுப்பு..நாழு விசில்..இறக்கினால்
 பாதி சாப்பாடு அடிப்பிடித்து போய்விட்டது.
முதல்ல கஞ்சி சோறாக இருந்தது ஃப்ரை ட்ரை ரைஷ் ஆகி விட்டது
சுரண்டி எடுத்து  தின்று தீர்த்தாகிவிட்டது .
பாவம் நண்பர் முகம் கோணாமல் சாப்பிட்டு விட்டு நடையை கட்டிவிட்டார் .
இனி வருவாரா இந்தப்பக்கம் ?
கவுளுக்கே வெளிச்சம் .


நான் இங்கு சொல்ல வந்தது சொந்த ஊரில் நடந்த ஒரு மலரும் (அவஸ்தை) நினைவு ..

இது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .
அவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்குத் தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .

பெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லச் சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .

நாங்கள் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தோம் . அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று சொல்லித்தான் நண்பர் இங்கு வந்தார் இருந்தாலும் தர்மசங்கடமாக நெளிந்துகொண்டே பேசி காலத்தை ஒப்பேற்றிக் கொண்டு இருந்தோம்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .
ஒருவேளை அந்தப் பெண் வந்து வண்டியைக் கொண்டு வந்து விட்டதா என்ற சந்தேகம் வரவே வெளியே வந்து பார்த்தேன்.
நான் வருவதற்காகவே காத்து இருந்தது போல அவர்கள் வீடு சில அடிகள் தள்ளி நின்று கையசைத்து அழைத்தாள் .வண்டியும் அவளிடம் இல்லை. 
அவள் முகம் பார்ப்பதற்குக் களேபரமாக இருந்தது.

என்ன என்று விசாரித்தபோது ,இந்தப்பெண் வேகமாக ஓட்டிச் சென்று யாரோ ஒருவரின் வீட்டுக் கதவில் முட்டி உடைத்து இருக்கிறாள் . அது காம்பவுண்ட் சுவருக்குள்ள மரக்கதவு .
அவர்கள் வண்டியைப் புடுங்கி வைத்துக்கொண்டு வீட்டில் பெரியவர்களைக் கூட்டிக்கொண்டு வாவெனெ அனுப்பி விட்டார்கள்.
இதைச் சொல்லி விட்டு வீட்டில் அப்பாவிடம் சொல்லிடாதீங்க அங்கிள் என்று கெஞ்சுவது போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால்.
நீ இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு நண்பருக்கு விசயம் சொல்லி வெளியே அழைத்து வந்தேன் .
வந்த காரியமும் தோல்வியென்பதால் அவரும் எப்படா என்று இருந்தார் போல !
நூலகம் போக வேண்டும் என்று கொஞ்சம் மதிப்பாக சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கழன்று கொண்டோம்.

அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு கதவை உடைத்த வீட்டுக்குப் போனோம்.
அது ஒரு ஹவுசிங்போர்டு ஏரியா - சி கிளாஸ் ரக வீடு.

கதவைத் தட்டினோம்.அந்த வீட்டிலிருந்து ஒரு முப்பத்தி ஐந்து மதிக்கத் தக்க மனிதர் வெளியே வந்தார் .
அந்தப் பெண்ணோடு எங்களைப் பார்த்தவுடம் புரிந்துகொண்டார் போல ? 
ஏன் சார் இந்த மாதிரிச் சின்னப் பிள்ளைகளிடம் வண்டி கொடுத்து விடறீங்க ? 
கதவுக்கு ஏதாவது ஆச்சுப் பரவாயில்லை .
அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க என்றார் .

அவர் பேச்சில் ஒரு நேர்மை இருந்தது.இப்போது சசிகுமார் வசனம் கேட்கும்போதெல்லாம் அவர்  ஞாபகம்தான் வருகிறது .
அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்க வேண்டும் .அப்பொதெல்லாம் அந்த மாதிரி இருந்தால்தான் ஹவுசிங்போர்டில் வீடு கிடைக்கும்.
அவர் என்னையையும் நண்பரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பேசினார்.
எனக்குப் புரிந்துவிட்டது .
சாதுர்யமாக யார் கதவைச் சரி செய்யும் பொறுப்பெடுத்துக் கொள்கிறீர்கள் என்ற பதிலை எதிர்பார்கிறார்.
நண்பர் என்னைப்பார்த்தப் பார்வையிலேயே தன்னை இதில் மாட்டி விடாதே என்று சொல்லாமல் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.
அவர் உடைக்கப்பட்ட அந்தக் கதவைக் காட்டினார்.
இரண்டு கதவில் ஒன்று மட்டும் தனியே காம்பவுண்டின் உள்புற சுவரோரம், குறுக்கு ரீப்பரெல்லாம் உடைந்த நிலையில் சாத்தி வைத்து இருந்தது.
அவர் சொன்ன மாதிரி, என்ன வேகத்தில் மோதி இருந்தால் இப்படி உடைந்து இருக்கும் ?
இதில் இந்த அசட்டுப் பெண்ணின் அக்காவை நண்பர் உருகி உருகிப் பார்த்து வருகிறார் .அது எப்படியோ ?
சரி எப்படி இருந்தால் என்ன ? விதி யாரை விட்டது ?

அவர் வழிக்கு வரும் வரை மெல்லப் பேசினேன் .
அப்போது கொஞ்சம் குருட்டுத் தைரியம் எனக்கு அதிகம் .
சரி செய்து கொடுக்கக் கொஞ்சம் அவகாசம் கேட்டேன்.அவருக்கு நம்பிக்கைக் கொஞ்சம் வந்த மாதிரி இருந்தது .

அந்தப் பெண்ணின் வீட்டு முகவரியைக் கொடுத்து விட்டு மெல்லக் கழன்று  வந்தோம் .

ஒருவழியாய் வண்டியை மீட்டுக்கொண்டு வரும் வழியில், நண்பர் அந்தப் பெண்ணிடம் உனக்கு ஒன்றும் அடிபடவில்லையே என்று அக்கறையாய் விசாரித்துகொண்டு இருந்தார் .
நான் முறைத்தேன் அவரைப் பார்த்து .

எங்களுக்குத் தெரிந்த ஐடிஐ சீனியர் நண்பர் வேல்முருகனுக்கு மரத்தச்சு வேலை நன்றாகத் தெரியும் .இத்தனைக்கும் அவர் ஒரு மெசினஸ்ட்.அவரிடம் போய்ச் சாஸ்டாங்கமாகச் சரணடைந்து உதவி கேட்டோம்.

அவர் வீட்டில் கிடந்த சில மரக்கட்டைகள்,ஆக்சா பிளேடு,கொஞ்சம் ஆணிகள் ,சுத்தியல் சகிதமாக அந்தக் கதவை உடைத்த வீட்டில் போய் இறங்கினோம்.

எங்கள் வரவைப் பார்த்த அந்த மனிதர் தன் நம்பிக்கை வீண் போகவில்லையென்று முகமெல்லாம் பிரகாசமானார் .
ஏறக்குறைய மூன்று மணிநேரம் போராடி சரி செய்து கொடுத்து விட்டுத் திரும்பினோம்.

வரும் வழியில் நண்பர் வேல்முருகன் கேட்டார் ,
ஏண்டா நொங்கு தின்னவிங்க நீங்க, என்னை ஏண்டா இதுல மாட்டிவிட்டீங்க ? .
நான் என் நண்பரைத் திரும்பிப் பார்த்தேன் .
அவர் அப்போதும் வழக்கம் போல இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மாதிரி முகத்தை அசடு வழிய என்னைப் பார்த்துச் சிரித்தார் .
காதல் பண்ணத் தொடங்கிவிட்டாலே இப்படி முகத்தில் அசடு கேட்காமலேயே வழியத் தொடங்கிவிடுமா என்ன ?

ஆனால் அந்தக் காதல் காதலாகவே முடிந்துவிட்டது .அந்தப் பெண்ணின் குடும்பமே சில சூழலால் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது .


அடுத்தப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பருக்கு வேறு பெண்ணுடன் பேசி முடித்தார்கள்.

நண்பரின் திருமணத்தின் போது சீனியர் நண்பர் வேல்முருகன் வந்த போது அதைச் சரியாக ஞாபகம் வைத்து ஏண்டா அந்த நொங்கு என்னடா ஆச்சு ? என்றார் .

இப்போதும் மணமேடையில் நின்று கொண்டு இருந்த  நண்பர் என்னைத்தான் பார்த்தார்.

நான் மெல்ல அவருக்கு மட்டும் கேட்கும் அளவில் பதில் சொன்னேன்
அந்த நொங்கு திங்க இவன் லாயக்கில்லை !.




வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாலகுமாரனின் - புருஷவதம்.



இன்று திரைப்படங்கள் ,நாடகங்கள் எங்குப் பார்த்தாலும் பேய்க்கதைகள் பிடித்து ஆட்டும் சூழலில் பாலா சாரின் புருஷவதம் வாசித்தேன் .முற்றிலும் ஒரு சூட்சும வாழ்வில் சஞ்சரித்த அனுபவத்தை இந்த வாசிப்பு நிகழ்த்துகிறது.பாலாசாரின் புத்தகங்களுல் முதன்முறையாக ஆங்கிலத்தில் WILL FULLY EVIL ( Zero Degree Publishing ) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் என்பதும் இந்த நாவலின் புதிய பலம்.

சென்னைக்கும் - திருவள்ளூருக்கும் நடுவேயுள்ள திருவாலங்காட்டில் பழையனூரில் இன்றும் வட்டார வழக்கத்தில் இருக்கும் பழையனூர் நீலி என்ற உண்மைக்கதைதான் புருஷவதம் என்று அவதாரமெடுத்து இருக்கிறது. இன்றும் இதன் ஆதாரமாகத் தீப்பாய்ந்த வேளாளர்கள் படைப்புச் சிற்பமாகச் தீக்குண்டம் அங்கு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் பழையனூரின் காவல் தெய்வமாக நீலியை வழிபாடு செய்து வருகிறார்களாம்.

கதை இதுதான் - பேராசைக் கொண்ட புவனபதி என்ற வேதமும் சகல சாஸ்திரமும் கற்றுத் தங்கள் குலச்சொத்தாகக் கருதும் வேதத்தை மனனம் செய்து அர்த்தம் தெரிந்து அடுத்தத் தலைமுறைக்கு மாற்றித்தரவேண்டும் தன் பிறப்பு ,உயிர்வாழ்தல்,திருமணம்,பிள்ளைப்பேறு,உண்ணுதல்,உடுத்துதல்,உறங்குதலும் இதன் பொருட்டே என்னை விட என் வேதம் முக்கியம் என்ற ஒரு பிரமாண இளைஞன் வாழ்வைப் பற்றித் தொடங்கும் கதை இது .



புவனபதிப் புண்ணியப் பயணம் செய்ய வந்த காசியில் சமணர்களிடம் பலகலைகள் கற்றுத் தேர்ந்து எதிர்பாராவிதமாகக் காசியின் பிரச்சனைக்குரிய நிரஞ்சனர்கள் என்ற ஒரு கூட்டத்தை எதிர்க்க வேண்டி வருகிறது. அப்போது அங்கு ஆதரவு தந்தவரின் மகள் நவக்கினியை ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்துத் தன் சுயநலத்திற்காகத் திருமணம் செய்துகொள்கிறான்.அவளை ஏமாற்றிக் காசியிலேயே விட்டு விட்டுத் திரும்ப முடியாமல் அழைத்துக்கொண்டு வரும் வழியில் புவனபதி நவக்கினியை இரும்பு உலக்கையால் அடித்துக்கொள்கிறான்.இறந்த நவக்கினியின் மேல் அளவு கடந்த பாசம் தம்பியும் இதனால் தற்கொலை செய்துகொள்கிறான்.புவனபதியால் கொல்லப்பட்ட நவக்கினியும் அவள் தற்கொலை செய்துகொண்ட அவள் தம்பியும் திருவாலங்காட்டில் சூட்சும சக்தியாய்ப் பழிவாங்கக் காத்து இருக்கிறார்கள்.

அந்த ஜன்மத்தில் புவனபதி சர்வ சக்தியும் பொருந்தியவனாய் வாழ்ந்ததால் அவனைக் கொல்ல முடியாமல் அடுத்த ஜன்மத்தில் தரிசனன் செட்டியாராகப் பிறக்கும் புவனபதியைக் காத்து இருந்து வதைத்துக் கொல்கிறாள் நவக்கினி.அதோடு மட்டுமில்லாமல் சிவனின் வரத்தால் மறு பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்த பின் இப்போதும் பழையனூர் நீலியாகப் பெண்களைக் காப்பவளாக வலம்வருகிறாள் என்று கதை முடிகிறது .

இந்த நாவல் மூலமாகப் போரில் இறந்தவர்கள் ,கொலை செய்யப்பட்டவர்கள் மேலும் அசம்பாவிதமாக அகால மரணமடைந்த நம் புறக்கண்களுக்குத் தெரியாத துக்கப்பட்டு இறந்தவர்கள் வாழ்வு பேசப்படுகிறது ...

மனிதனின் மனோசக்தி உடம்பை வளர்க்கிறது செயலைத்தூண்டுகிறது.கோபமோ ,ஆத்திரமோ மனோ சக்தியால் நிகழ்கிறது. எல்லா உணர்வுகளும் மனோசக்தியின் வெளிப்பாடே .மனம் வாழ்க்கையை நடத்துகிறது அந்த மனதை நடத்துவது எது ? எந்தச் சக்தி ? அந்தச் சக்தி உடலை விட்டுப் பிரியும்போது பழக்கத்தினால் மனதை இழுத்துப்போகிறது .நடந்த (வாழ்வியல்) நிகழ்ச்சிகளை மனம் ஆழ்ந்து பற்றிக்கொண்டு இருக்க அந்த உயிர் திரும்பத் திரும்ப நடந்தவைகளோடேயே இருக்கிறது.

சாகும்போது இருந்த மனோசக்தியைப் புறகணிக்க முடியாமல் உயிரை உடம்பாக நினைத்து வாழ்பவர்கள் பைசாசமாக அலைகிறார்கள் உடம்பிலிருந்து வெளியேறிய உயிர்சக்தி பெரும் சக்தியோடு இணைய ஒப்புக்கொடுத்தால்தான் பெரும் சக்தியின் வென்னீர் ஆறான வைதரிணியைக் கடந்து குளுமைப் பெற்று சாந்தியடைய முடியும் என்ற சூட்சும உலகையும் அதில் வாழ்பவர்கள் பற்றியும் விவரிக்கிறது நாவல்


இந்த நாவல் மூலம் முக்கியமான ஒரு செய்தியை முன்வைக்கிறார் நாவலாசிரியர் .

பெண்களை இம்சிப்பவன் அவன் தாக்கியதைப் போலப் பல நூறு மடங்குத் தாக்கப்படுவான்.கைகால்கள் சிதைக்கபட்டு ,கழுத்து அறுக்கப்பட்டுச் சாவான் .பல ஆயிரம் பேர்களுக்கு முன் அவமானப்படுத்தப் படுவான் .கசையால் அடிக்கப்படுவான்,உண்ணவும் உறங்கவும் முடியாமல் தவிப்பான்.பயமும் திடுக்கிடுதலும் எந்நேரமும் அவனிடம் இருக்கும் வாய்விட்டுச் சிரிக்க முடியாத பாவியாய் கண் மூடித் தியானம் செய்ய முடியாத கேவலனாய் வாழ்வான் இப்போது பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கும் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைக்கு என்ன தண்டனை என்பதை இந்த நாவலில் விவரித்து எச்சரிக்கிறார்.



வரலாற்றின் பின்னோக்கிய காட்சிப்படுத்துதலில்  புவனபதி காசிக்குப் போகும் முன் காட்டு மிருகங்களிடம் தற்காத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் பயிற்சிகளின்நுணுக்கம்,சூக்கும சரீரத்தோடு உலவும் அமானுஷ்ய உலகின் நடத்தைகள் போன்ற நாம் தேடியும் கிடைக்காத பலஆழமான விசயங்களைச் சொல்லுவதன் மூலம் ஒரு கதை காலத்தின் பின்னோக்கி நிகழும்போது ஒரு நாவலாசிரியன்தரவேண்டிய மெனெக்கெடல்களைச் சொல்லித்தருகிறார் பாலா சார் .


.எப்போதும் போலவே  தன்  மிகச்சிறந்த எழுத்தாளும் திறனை வெளிப்படுத்தி இந்த நாவல் முழுதும் பிரமிப்புக் களையாது கட்டி வைக்கிறது அவர் கதை சொல்லும் விதம் .

சனி, 24 மார்ச், 2018

அம்மா எனும் மாயநதி !




வாடகைக்குச் சுமார் மூன்று மாதங்களாய்த் தேடி அலைந்த பிறகு மனைவிக்கும் பையனுக்கும் அந்த வீடு பிடித்திருந்தது

இப்போது தங்கியிருக்கும் வீட்டில் அட்வான்ஸ் திருப்பித்தர ஒரு மாதம் கூட ஆகலாம்.திருப்பூரில் நாம் நினைக்கும் ஏரியாவில் வீடு கிடைப்பது மழைவரும் போது பாத்திரம் வைத்துத் தண்ணீரைச் சேமித்துக் கொள்வது போல உடனடியாகச் செய்து விடவேண்டும் .இல்லாவிட்டால் யாராவாது ஒரு வீட்டுப் புரோக்கர் அதிகம் வாடகைக் கொடுப்பத்தாகக் காய் நகர்த்தி நம்மால் யாரோ ஒருவருக்கும் வாடகையைக் கூட்டி விடுவார்.

வீட்டுக்கு அடவான்ஸ் கொடுக்க உடனடியாக ஐந்து மாத வாடகைத் தொகை வேண்டும் .அந்த அளவுக்குத் உடனே வேண்டும் என்ற ஞாபகத்தோடு மனதுக்குள்ளே மனைவியின் கழுத்தில் அணிந்திருக்கும் அம்மாவின் செயின்தான் முதலில் மனக்கண் முன் வந்து அசைந்தாடியது

அம்மாவின் செயினை வாங்கி ஹேண்ட் பேக்கில் வைக்கும் போது, மனசு கனத்தது .

இந்தத் தேசத்தின் என்ன சாபமோ என்னவோ தெரியவில்லை. எந்த ஒரு மகனும் அம்மா என்ற ஆன்மாவப் புரிந்து கொள்ளும் முன்னே அவள் இந்த உலகத்திலிருந்து இயற்கை மீட்டு அழைத்துக்கொள்கிறது .  
நாற்பது வயதுக்கு மேல் சொந்த வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் தாய்த் தந்தை ஞாபகம் தவிர்க்க முடியாத நிழலாய்த் தொடர்கிறது .

அம்மா இறந்து போவற்கு இரண்டாடுகளுக்கு முன்னால் கடைசி முறையாகத் திருப்பூர் வந்து திரும்பிச் செல்லையில் வாசல் வந்து வழியனுப்பும் போது , அப்பாவுக்குத் தெரியாமால் சுருட்டிய காகிதச்சுருளைப் போலப் பணத்தை என் கைக்குள் திணித்து விட்டு, யாருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்.எனக்கு ஏதாவது ஆச்சுன்னாக் கூட யாரிடமும் ஏதுவும் கேட்காதே என்று நான் வேண்டாம் என்று மறுத்தும், வச்சுக்க என்று ஒரு சின்ன அதட்டலாகச் சொல்லிவிட்டுப் போனார்.

அம்மா சுருட்டிக்கொடுத்த பணத்தை விரித்து எண்ணியபோது எட்டாயிரம் இருந்தது. ரெண்டு வருடம் கழித்து அம்மா இறந்த போது அம்மாவின் கடைசிக் காரியத்திற்கான மூன்று அண்ணன்களோடு செய்த செலவு மொத்தத்தில் என் பங்கு ஏழாயிரத்து ஐநூறு .

அது மட்டுமில்லை அப்பா மாதிரி சேர்த்து வைக்கும் தந்திரம் எனக்கு இல்லை என்பதுவும் அம்மாவுக்குத் தெரியும். அம்மா இறப்பிற்குப் பிறகு இருந்த நகைகள் பிரிக்கப்படும்போது அண்ணன்களும் அண்ணிகளும் என் மனைவிக்குச் செயினை விட்டுகொடுத்தார்கள். கழுத்தில் செயின் இல்லாத அம்மாவின் ஒரே மருமகள் என் மனைவிதான் என்பதால் .

ஆனால் எனக்கு அப்போது கூட அம்மாவின் செயின் அப்படி எங்கள் பங்குக்கு வந்ததன் காரணம் இப்படிச் செலவுக்குக் காத்து இருந்ததால் தானோ என்னவோ ! இறந்த பிறகும் தன்னைத் தேடிவந்தவருக்குக் கொடுத்தார் சீதக்காதி ( செய்தக்காதி ) என்ற 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' பற்றிப் படிக்காசுப்புலவர் பாடிய வரிகளில், “ ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்என்ற வரி தேடி வந்து மனதுக்குள் வந்து முன் நின்றது

 

ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/
கார்தட்டிய பஞ்ச காலத்திலே, தங்கள் காரியப்பேர்/
ஆர்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு/
மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.


அம்மாவை எரித்த சாம்பல் குவியல் கூடுதுறை ஆற்றில் கரைந்து கலந்து போனது உண்மைதான் . முக்கூடல் என்று பேசப்படும் அந்த ஆற்றில் காவிரி, பவானியும் வெளியே கண்ணுக்குத் தெரிந்த ஆறுகள் இரண்டுதான் ஆனால் வெறும் கண்ணுக்குப் புலப்படாத மாயநிலையிலான அமுதா என்ற இன்னொரு ஆறு இரண்டு ஆற்றுக்கும் கீழே ஓடிக்கொண்டு இருப்பதாக ஆன்மீக வரலாறு பேசுவது போல, அம்மா இன்னும் எங்களைச் சுற்றி அரூபமாக ஏதாவது ஒரு பொருள் வடிவத்தில் கலந்து நின்றுக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார் .


அடுத்த முறை என் அமராவதி அம்மா வயிற்றில் நான் மகனாகப் பிறக்கும் வாய்ப்புக் கிடைத்தால், என் மனதில் யாருக்கும் தெரியாமல் அடைந்து கிடக்கும் பல தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கதற வேண்டும் என்று மனம் ஏங்குகிறது !

அந்தப் பிரபலமான கேரள அடகுக் கடையின் செயினை எடையிட்டு மதிப்பிடுபவர் ,ஏன் சார் செயின் ஈரமாக இருக்கிறது என்று கேட்டார் .

ஒருவேளை கழுத்தில் அணிந்து இருந்ததால் அதை அப்படியே கொடுக்காமல் எனது மனைவி தண்ணிரில் கழுவிக் கொடுத்து இருக்கலாம்.ஆனால் அதன் எடை மதிப்புக் கூட்டுவதற்கானத் தந்திரமாகச் செய்து கொண்டு வந்து இருக்கலாமோ என்ற எடை மதிப்பீட்டாளர்த் தன் தொழில் முறையில் சிந்தித்து அப்படிக் கேட்டு இருக்கலாம் .


ஆனால் ஆந்தப் பணத்தைக் கையில் வாங்கி வந்து படியிறங்கும் போது என்  

கண்களின் கண்ணீரால் நனைந்தது .


அம்மாக்கள்  இருக்கும் போதும் இல்லாத போதும் தன் குழந்தைகளுக்குத்  

தேவை ஏற்படும்போதேல்லாம் சுழ்ந்து நின்று உதவும் மாய நதிகள்தான்...