வியாழன், 9 மே, 2013

ஒரு பெண்.எத்தனை திருப்பங்கள் ?

பெண் பார்க்க ..

                பொதுவாக முதல் முறையாக பெண் பார்க்க போவது என்பது ஒரு இனம் புரியாத உற்சாகமான விசயம் அதிலும் நண்பனின் சகோதரருக்கு பார்க்க போவது இரட்டிப்பு உற்சாகம் .நமக்கு அங்கு பொறுப்பேதும் இல்லை என்பதால் அங்கு நடக்கும் சகல விசயத்திலும் முடிந்தவரை ஓட்டு, ஓட்டு என்று ஓட்டலாம் .இன்னும் சொல்ல போனால் நண்பனின் குடும்பம் என்னை அந்த பெண் பார்க்கும் படலத்திர்க்கு கூட்டிகொண்டு போவதர்க்கு முக்கிய காரணம் என்னுடய சுபாவம் .முன் பின் அறிமுகம் இல்லாவிட்டாலும் எளிதில் ஒட்டி கொள்ளும் அந்த என் சுபாவம்  .


இயக்கம் + நடிப்பு ..

இங்கு இன்னொரு முக்கியமான ’த்ரில்’என்னவென்றால் நாங்கள் பெண் பார்க்க மட்டும் போகவில்லை .அங்கிருந்து பெண்ணுக்கே சொல்லாமல் நண்பரின் வீட்டுக்கு அழைத்து வந்து அங்கும் நண்பனின் சகோதரருக்கு தெரியாமல் அவருக்கு எதேச்சையாய் பார்க்க வைத்து , பிடித்தால் மேற்கொண்டு தொடரலாம் என்பதே எங்களின் - பெண் பார்க்கும் நாடகம் .இதர்க்கு உதவி - எனது நண்பனின் இன்னொரு சகோதரரின் மனைவி . அவருடந்தான்  திருச்சி அரசு மருத்துவமனையில்  நர்சிங் பயிற்சியில் இருக்கிறர் நாங்கள் தேடிப்போகும் உமா என்ற உமாமஹேஸ்வரி  .இந்த நாடக அங்கத்தினர்கள் - நண்பன் அவரின் ,அண்ணன் ,அவரின் மனைவி .இயக்கம் + நடிப்பு - சாட்சாத் நானே .


ஆர்வமில்லாமல் சோளம்..
பெண்ணின் சொந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கும் இருந்தது .அந்த கிராமம் நோக்கி அண்ணன் , அண்ணி , நான் நண்பன் நாழ்வரும்  போனோம் ..சில பஸ்கள் மட்டுமே வந்து போகும் அந்த ஊருக்கு நடந்து போவதே நல்லது என நடக்க ஆரம்பிக்க ...வழியில் ஒரு தரைப்பாலம். பெரிதாய் தண்ணி இல்லை .சில வயல்களில் மட்டும் சோளம் ஆர்வமில்லாமல்  அசைந்து கொண்டு இருந்தது .இப்போது இருப்பது போல- ஏப்ரல் மாதத்தில் நாங்கள் போனதால் நடவு எதுவும்  இல்லை என்று தெரிந்து கொண்டோம் .மற்றபடி அங்கொரு தோட்டத்திலும் இங்கொரு தோட்டத்திலுமாக அறுவடை போக மீதி நிற்க்கும் ஊடு பயிர்கள் முறைத்து கொண்டு இருந்தன . 


 முகம் சுழிக்காமல்..!
மிக பெரிய அறிமுக படலத்திர்க்கு பின்னர் நாங்கள் உமாவின் அம்மாவிடம் அனுமதி பெற்று பிற்பகல் வரவேண்டிய பஸ் வராததால் மீண்டும் நடந்து அதே தரைபாலம் ,சோளம்,முறைத்து கொண்டு இருந்த ஊடு பயிர்கள் கடந்து ,பிரதான சாலையிலிருந்து பஸ் பயனம் தொடங்கினோம் .வழக்கம் போல சிரிப்பு பட்டாசை கொளுத்த , நண்பனும் இணைந்து கொள்ள ,நாங்கள் அடித்த லூட்டியில் பஸ் பயனிகள் முகம் சுழிக்காமல் பல சமயம் வேடிக்கை பார்த்தனர். !! 


நாடகத்தின் கிளைமேக்ஸ்..
நண்பன் வீட்டில் அம்மா ,அப்பா ,சகலருக்கும் பிடித்து போனதால் ,அண்ணன் வரவுக்காக காத்து இருந்தோம்.அதாவது  எங்கள் நாட்கத்தின் கிளைமேக்சுக்காக !.வந்தார் ,பார்த்தார் , போகும்போது இது படித்த பெண் மாதிரி தெரியுது அவனுக்கே (என் நண்பனுக்கே) பாருங்கள் என்று ஒரு குண்டை மிக சர்வ சாதாரணமாக போட்டுவிட்டு போய்விட்டார் .இந்த நாடகத்தின் கிளைமேக்ஸ்- இயக்குனரான எனக்கே தெரியாமல் போய்விட்டது . ஆனால் இதில் இன்னொரு திருப்பமும் இருந்தது .அந்த பெண் போகும்போது அண்ணியிடம் எனது நண்பனை மிகவும் விசாரித்து விட்டு சென்றதாம் .போச்சுடா !


வில்லன்..அல்ல வில்லி ..

பிறகு வீட்டில் பேசும்போது இந்த விசயம் நண்பனுக்கு தெரியவரவே அவன் தனக்கு பச்சை கொடி காட்டி விட்டதாக நினைத்து பழக்கம் தொடர ,இருவருக்குமிடையே  மிக ஆழமான காதல் வேரூண்றியது. அண்ணனுக்கு பிறகு பேசி முடிக்கலாம் என வீட்டில் பேசிக்கொண்டார்கள் .நண்பன் உற்சாகமா காதலை மேலும் தொடர ,ஒரு கட்டத்தில் நண்பனுக்கு பாண்டிச்சேரிக்கு வேலை கிடைத்து போக, ஒரு சின்ன தொய்வு காதலில் வந்தது .பொதுவாகவே காதல் என்று வந்தால் அதர்க்கு வில்லன் வேண்டுமே .அதுவும் நடந்தது .


காதல் தோல்வி..
அந்த பெண்ணின் அம்மாவுக்கு ஒரு தம்பி ( தாய் மாமன் ) இருந்தான் .அவன் இந்த பெண்வீட்டில் பெண்ணின் அம்மாவை தவிர வேறு யாருக்கும் பிடிக்காது .காரணம்  கை நிறைய பணம் சம்பாதிப்பது காரணம் இல்லை . கூடவே சின்ன வயது அளவு மீறிய குடி .இதனால் யாரும் பெண் தர மறுக்க தம்பி பாசத்தில் அக்கா லேசாக தன் மகளின் காதல் தெரிந்தும் தம்பியை திருமணம் செய்ய  தூண்ட ,நண்பனின் சந்திப்பு இடைவெளியை பயன்படுத்திகொள்ள ஒரு கட்டத்தில் அந்த பெண் நண்பனிடம் மன்னிப்பு கேட்டு தன் அம்மாவின் கட்டாயத்தையும் ,தன் வீட்டின் வருமையையும் காரணம் காட்டி காதல் விவாகாரத்து கோர - நண்பனின்அண்ணியும் இதில் தலையிட முடியவில்லை ,காரணம் அந்த வீட்டின் வறுமை + உறவின் அழுத்தம் =காதல் தோல்வி .

அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் .நண்பனின் அண்ணியுடன் தொடர்பு இருந்ததால், எனக்கு இதெல்லாம் தெரியும் .  நண்பன் ஓரளவுக்கு இதெல்லாம் புரிந்து கொண்டு காதலில் இருந்து விடுபெற சில ஆண்டுகள் ஆகிவிட்டது. .பாண்டிசேரி வேலையும் தொடர விருப்பமில்லாமல் மீண்டும் திண்டுக்கல் வேலை . 


எங்கிருந்தாலும் வாழ்க ! 
                                     அதர்க்கு சில வருடம் கழித்து   நண்பனுக்கும் திருமணம்  ஆகி ஒரு குழந்தை ஆன பிறகு மீண்டும்  ஒரு நாள் உமாவிடமிருந்து போன் நண்பனுக்கு வந்தது .தனது கணவருக்கு இரண்டு சிறு நீரகங்களும் செயல் இழந்து விட்டதாகவும் தயவு செய்து உதவுமாறூம் கேட்க , எங்கிருந்தாலும் வாழ்க என்பது போல நண்பனும் உதவ தயாராக ,அப்புறம்தான் சட்ட சிக்கல்தடை செய்தது . இப்போது உள்ள நடைமுறைப்படி திருமணம் ஆகி இருந்தால் மனைவியிடமும் கையெழுத்து வேண்டும் .அதை கேட்க, அவர்கள் மறுத்து களேபரம் ஆகிவிட்டது .


எக்சேஞ்.. 



               வேறு வழியில்லததால் அந்த பெண் (எக்சேஞ் அடிப்படையில்) அவள் கணவனுக்கு  ஒரு டோனர் ஒரு சிறு நீரகம்  கொடுக்க அதே போல் கொடுத்த டோனரின்  உறவுக்கு இந்த பெண் ஒரு சிறுநீரகம் கொடுத்து இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .


வெள்ளி, 3 மே, 2013

ஆயுள் இல்லாத காப்பீடு



நீங்கள் அதிருஷ்டசாலியா ?

                சட்டென யாரிடமிருந்தும் இல்லை என்று பதில்வராது .இருந்திருக்கலாமே என்று தசாவதாரம் கமல் மாதிரி பதி சொல்ல ஆசைப்படுவோம் .அதே சமயம் எந்த வித ஜாதகமும் பார்காமல் ,காசு வாங்காமல் நீங்கள்  அதிருஷ்டசாலி என்று யாராவது அதுவும் மொபைல் ஃபோனில் கூப்பிட்டு ,திருப்பூர் டெலிபோன் டைரெக்டரியில் 1000 எண்களை குலுக்கி (?) போட்டதில் 100 அதிருஷ்டசாலி தேர்ந்தெடுத்தோம் அதில் நீங்களும் ஒருத்தர் அதனால் உங்களை எங்கள் செலவில் மூன்று இரவு இரண்டு பகல் தங்கி பார்த்து வர கோவா சுற்றுலா அழைத்துசெல்ல போகிறோம் என்பதாக இந்திய அளவில் ஒரு குறிப்பிட்ட ரேங்கிலும்  உலக வங்கி வரிசையில் ஒரு குறிப்பிட்ட ரேங்கிலும் இருக்கும்  அப்படிபட்ட இடதிலிருந்து வரும்போது எப்படி நான்  அதிருஷ்டசாலி இல்லை என்று நம்பிகொள்ள ? ஆனால் கூடவே அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்றது .ஆனால் இயற்கை விதி ..


              வேறு சொந்த வேலை காரணமாக அன்று போக முடியவில்லை . அடுத்த நாள் நான் 60 கி.மீ தொலைவில் இருக்கும் ஊருக்கு போய்இவிட்டேன். போனில் அழைத்த பெண் மீண்டும் அழைக்க அவர்கள் சொன்ன இடத்தை தேடிப்போனோம் ( குடும்பதோடு வரவேண்டும் என்பதாகவும் சொல்லப்பட்டு இருந்தது ).வரவேற்று உள்ளே அழைத்து சென்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் இந்தியாவில் அந்த வங்கியின் 13 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் இப்படி ஒரு அதிருஷ்ட வாய்ப்பை தந்து இருக்கிறோம் என்பதாகவும் , விளம்பரங்களுக்கு கொடுக்கும் அந்த செலவை மக்களுக்கு இந்த மாதிரி சுற்றுலா மூலம் செலவு செய்து எங்கள் விளம்பரதை செய்கிறோம் என்று கூடுதலாக காரணம் சொன்னார்.பிறகு எனது வருமானம்,வங்கி கணக்கு ,வீடு ,குழந்தை , வங்கி சேமிப்பு ,எனது கல்யாணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதா காதல்கல்யாணமா என்ற கேள்விகூடவ கடைசியாக என்னுடைய காப்பீடு பற்றி கேட்டார்கள் ( அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்றது மீண்டும்..ஆனால்..)


                பேசிமுடித்தவுடன் வேறு ஒருவர் உங்களை சந்திப்பார் அவர் சில விசயங்களை பகிர்ந்து கொள்வார் என்று அழைத்துவந்தார் அவர் அந்த குறிப்பிட்ட வங்கியின் சீருடை அணிந்து இருந்தார் .எங்களின் ஃப்ராடக்ட் ஒன்று இருக்கிறது கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால், அது பற்றி பேசலாம் இன்று ஒரு நாள்மட்டும் அந்த வாய்ப்பை உங்களுக்கு தருகிறோம் என்றும் நாளை இந்த வாய்ப்பு இல்லை என்றும் கூலாக சொன்னார்கள் .சரி பேசலாம் என்று சொன்னோம் ..கோவா கூட்டிட்டு போறாங்க கேட்டுட்டுதான் போவோமே ....
           

 இது  ஒரு மணி பேக் பாலிஸி .குறிப்பிட்ட வயதுக்கு இவ்வளவு தொகை பிரிமியம் . முதல் ஆண்டு முழு பிரிமியம் 13600/- தொகை செலுத்தவேண்டும். அடுத்த் ஆண்டு அதை பிரித்து முதல் பகுதி தொகை கட்டி விட்டு உங்கள் பாலிஸி தொகையின் மதிப்பில் 80 % எந்தவித கியாரண்டியும் இல்லாமல் லோன் தருவோம். அதை ஆறு வருடத்தில் எப்போது வேண்டுமானலும் செலுத்தலாம் .,நான்கு வருடத்திற்க்கு ஒருமுறை 20 % போனஸ் பதினாறு அல்லது இருபத்தி நான்கு  வருடத்திர்க்கு பிறகு நீங்கள் செலுத்தும் தொகையைவிட இரு மடங்கு பெற்றுக்கொள்ளலாம்.அதர்க்கு பிறகு இந்திய சராசரி ஆயுள் 85 வரை காப்பீடு .ஷேர் மார்க்கெட் முதலீடு இல்லாததும் இதர்க்கு ஏஜெண்ட் என்று யாரும் இல்லை என்பதாலும் முழுமையான உங்கள் தொகை காப்பீடாக மாறுகிறது என்றும் இன்னும் பல ..மேலும்  வருடம் ஒரு முறை இந்தியாவின் ஏதாவது ஒரு முக்கிய நகருக்கு இதே மாதிரி எங்கள் முழு செலவில் பயனம்..  


              அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்று ஏனோ சொல்லவில்லை .மனைவியை கேட்டேன்.உங்களால் முடிந்தால் கட்டுங்கள் ( எப்படி ? ) ஆனா எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்கள் அடஅட (எண்ட அம்மே )  குடும்பதோடு  ஏன் வரவேண்டும் என  சொன்னார்கள் என்பதை மிக சரியாக அப்போது புரிந்துகொண்டேன்.  சரி என்று சொன்னதுமே சில இடங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு கூடவே எங்களுடன் முதலில் பேசியவர் வீடுவரை வந்து காசோலையை சேகரித்து கொண்டு பறந்தார் .(ஒருவேளை நாங்கள் மனசு மாறிவிட்டால் !)


             காப்பீடு எடுத்து ”பாண்ட் “ ஒருவாரத்தில் ஒழுங்காக வந்தது அதில் ஏஜண்ட் என்பதாக ஒரு பெயர் இருந்தது. ”பாண்ட் “வந்து விட்டதா என உறுதி செய்ய போன் வந்தது .ஆனால் மூன்று மாதம் ஆகியும் சுற்றுலாவிர்க்கான எந்த ஒரு அழைப்போ அதர்க்கான பேச்சோ வரவில்லை .ஆனால் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் என் மனைவி போன் வந்ததா என கேட்க்கும் போது அடப்பாவிகளா இப்படி ஏமாந்துட்டேனே என்று யாரிடமாவது கத்தணும்போல  ஒரு வேகம் பிறக்கும் ...

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கொடைக்கானலின் - தற்கொலை முனை ( sucide point )




            சன் டி.வி சூரிய வணக்கம் தொலைந்து போய் அந்த இடத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் பட்டு சேலை நெசவு பற்றி ஒரு அழகான தொகுப்பு வெளியானது .சரி ,இனி இப்படித்தான் இருக்கும்போல என்பதை தகர்த்தது ,இன்றைய நிகழ்சியில்  கொடைக்கானல் தற்கொலை முனை ( sucide point )  பகுதியிலிருந்து இந்த உலகை விட்டு உயிரை பிரித்து கொள்ளும் உடல்களை மீட்க்கும் ஜோசப் என்பவரின் நேரடி உடல் மீட்க்கும் பேட்டி ஒளிபரப்பபட்டது .





இந்த கோடை வெய்யிலில் கொடைக்கானலை நினைத்தால் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது கடல் மட்டத்திர்க்கு 6998 அடி உயரமும் அதிக பட்ச வெப்பமான 19.8ºC யும் குறைந்த பட்சம்  11.3 ºC ஞாபகம் வரும் ஆனால் அதனுள் சுமார் 5000 அடி ”பசுமை பள்ளத்தாக்கை ”ஒரு சேர காணும் பகுதியான "Sucide Point/Green Valley View" ஒரு மரணக்கிணராக ( கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடல் பகுதியில் இருக்கும் எண்ணெய்க் கிணறு -  பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) என்ற எண்ணெய் நிறுவனம் அல்ல ) இங்குள்ள மக்களால் பேசப்படுகிறது என்பது ஒரு சோகம் 
.

ஜோசப் தன் தந்தை வழியாக இந்த தொழிலை (   தற்கொலை முயற்சியில் உயிர் இழந்த)  உடல் மீட்க்கும் வேலையை கடந்த 20 வருடமாக  செய்து வருவதாகவும் ,தனக்கு 50 மாடுகள் இருப்பதாகவும் தான் பணத்திர்காக மட்டும் இந்தவேலையை செய்வதில்லை என்கிறார் . இறந்தவரின் உறவுனர்களின் கோரிக்கையை ஏற்று காவல் துறை அனுமதியுடன் இதில் ஈடுபவதாகவும் தனக்கு இந்த தொழிலில் உதவியாக வெவ்வேறு பணியில் உள்ள பலரும் உதவுவதாகவும் சொன்னார் ,அதோடு அவர் சொன்ன இன்னொரு தகவல் ,நாங்கள் தேடி போகும் உடலுக்கு சொந்தக்காரர்களிடம் அவர் அணிந்து இருந்த உடைகளின் வண்ணம் ,கழுத்துக்கு கீழ் உள்ள மச்சம் போன்ற அடையாளங்களை கேட்டு கொள்வோம் அது பொருந்தி இருந்தால் மட்டுமே அந்த உடலை எடுத்து வருவோம் .ஏனென்றால் நாங்கள் தேடிப்போகும்போது பல உடல்கள் அங்கு கேட்க்க ஆள் இல்லாமல் கிடக்கும் .அதை அப்படியே விட்டு விடுவோம் என்று அதிர வைக்கிறார் .


மேலும் நாங்கள் தேடி கண்டுபிடித்த   அந்த உடலை ஒரு சாக்கு பையில் கட்டி சுமார் 3500 அடிக்கு மேல் ,பாதையே இல்லாத காட்டு விலங்குகளின் ஆபத்துகளுக்கு இடையேயும் மழை , பனிமூட்டம் போன்ற இயற்கை இடர்களை தாண்டி  அந்த உடலை பல இடங்களில் இழுத்து கொண்டேவும் சில இடங்களில் சுமந்து கொண்டு வருவதாகவும் சொல்கிறார். அதை படம் பிடித்து சன் டி.வி காட்டும் போது - ஒரு இறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இறந்த பிறகும் அது இவ்வளவு வலிகளை தரவேண்டுமா என்ற கேள்விக்கு நம்மிடம் எப்போது பதில் வரும் ? தெரியவில்லை .


             அதிலும் சில பேர் யாரையோ பழிவாங்குவதாக நினைத்து கொண்டு இங்கு வந்து தன் உயிரை மாய்த்து கொண்ட பின் காவல்துறைக்கு சொல்லி ,ஜோசப்பிடம் மன்றாடி , வேதனையுடன் காத்து இருந்து பிறகு அந்த உடலை பெற்றுகொண்டு ஈமக்கிரியை செய்து அது வரை எத்தனை தவிப்பு , கெஞ்சல் ,அவமானம் ,இறந்த பிறகு யாரை பழிவாங்கி என்ன செய்ய போகிறார்கள் ?இதை எப்படி இறந்தவர்களிடம்  கேட்பது ?


இதில் இன்னொரு புள்ளி விவரம் பயமுறுத்துகிறது .உலகில் வருடதிர்க்கு 1/2 மில்லியன் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களாம் அதில் இந்தியர்களின் பங்கு 20 சத விகிதமாம். இந்தியாவில் வருடத்திர்க்கு 1 லட்சம் பேர் தற்கொலையில் மட்டும் இறக்கிறார்களாம் .அப்படியானல் உலகமே நம்மிடம் ஆன்மீகமும் , குடும்ப வாழ்வையும் ,கற்று  கொள்ள ஓடோடிவந்து கொண்டு இருக்கும் போது நமக்கு என்ன ஆகி விட்டது ? ஏன் இறப்பை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் தெரியவில்லை .இதில் இன்னொரு கவனிக்க தகுந்த விசயத்தை ஜோசப் சொல்கிறார் அப்படி இந்த தற்கொலை முனையை தேடி வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆண்களாம் .தன் உயிரையே மாய்த்து கொள்ளும்  அளவுக்கு போகும் இந்த ஆண்கள் எதர்க்கு பெண்களை பலவீனமான பாலினம் ( weaker sex ) என்று  பெண்களை பார்த்து சொல்லிகொண்டு அலைகிறார்களோ ? சோகத்திலும் ஒரு வேடிக்கை ! 

              அதிலும் இப்படி இறப்பவர்களில் 37.8 சதவிகிதம் 30 வயதுக்கு கீழே உள்ளவர்களாம் .இந்தியா உலக சுகாதார அமைப்புக்கு 2009 ஆம் ஆண்டுவரை கொடுத்த தகவல் அறிக்கைப்படி உலகின் மொத்த தற்கொலையில் 10.5 நாம்தானாம் இதனால் உலகின் மொத்தம் 107 ! நாடுகளில் நாம் 45 ஆவது இடம் என்பது கூடுதல் தகவல் 

             சரி எது எப்படியோ தற்கொலை மனிதாபிமானப்படியும் ,சட்ட ரீதியாகவும் தவறு என்பதை சத்தம் போட்டு சொல்லிகொண்டு  அலைவதை விட்டு விட்டு ஏன் என்ற காரணத்தை மெல்ல புரிந்து  அதை பற்றி புத்தகங்கள் , மீடியாக்கள் , கல்வி கூடங்கள் ,வீடுகள் , புரிந்து கொண்டு பேச தொடங்கினால் ,கொடைக்கானல் குறிஞ்சி பூக்கள்  சுகமாக பூக்கும் தினமும் கூட ..

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

புத்தகம் வாசித்தல் - ஒரு வரம் .


இன்று உலக புத்தக தினம்.


எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே (அரசு தொடர்புடைய விவகாரத்தில் ) மிக எளிய விசயம் நூலகத்தில் உறுப்பினராவதுதான். சமீபத்தில் வீடு மாறிய போது பக்கத்தில் இருக்கும் நூலகத்தில் (எற்கனவே மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்தான் ) உறுப்பினர் அட்டை வாங்கி கொண்டு எனக்கு ஏரியா கவுன்சிலரிடம் கையெழுத்து வாங்க விருப்பமில்லை என்பதால் அருகில் உள்ள அரசு பள்ளிக்குப்போனேன் .காலை 9.40 மணி.தலைமையாசிரியர் அறை கேட்டு போனால் ஒரு சின்ன பெண் ஈரதுணிவைத்து தரை துடைத்து  கொண்டு இருந்தாள் ,அங்குதான்  படிக்கிறாள் என்பதை அவள் சீருடை சொல்லியது .இருங்க வருவாங்க சார் என்றது அந்த பெண்  .வந்தார்கள் .தலைமையாசிரியர் அல்ல தலைமையாசிரியை .குடும்ப அட்டையை சோதித்து விட்டு , பச்சை கையெழுத்திட்டு குடுத்தார்கள் .நன்றி சொல்லிவிட்டு பெற்று கொண்டு திரும்புபோது அந்த சிறுமி இன்னும் துடைத்து கொண்டு இருந்தாள் .அனேகமாக முதல் வகுப்பு ( Period ) தரை துடைக்கும் வகுப்புதான்  போல !


நூலகம் வந்து கொடுத்தபோது ,பணம் கட்ட சொன்னார்கள் ,கட்டியவுடன் சில விதிமுறைகளை சொன்னார்கள், அதில் ஒன்று புத்தகம் எடுத்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் இங்கு வந்து பதிவு செய்துகொள்ளவேண்டும் குறைந்தது  ஒருவாரத்திர்க்கு மேல் ஆன  பிறகு மட்டுமே கொண்டுவரவேண்டும் .ஒருவேளை ஒருவாரதிர்க்குள் படித்து விட்டால் என்ன செய்வது ? ( ஆனால் நான் கேட்கவில்லை ) எனக்கு தெரிந்த வாடகை புத்தகம் தருபவரிடம் ஜெயமோகனின் புத்தகம் இருந்தது .அதுவும் இந்த கிளை நூலகத்தை சார்ந்தது . அப்படியானால் அவர் செய்வது சரிதானே .

“ஏய் வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத் தாளர்கள்!”
என்று நகுலனின் ஒரு கவிதை.


இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதர்க்கு .எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இபோதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி  இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கோபம் கூட படுகிறது .


புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து என்று மூளையியல் விஞ்ஞானி சூசன் கிரின்பீல்ட் ( susan greenfield) என்பவர் செய்த ஆய்வில் இப்படி சொவதோடு சிறிய வயதில் படிக்கும் பக்குவத்தை சொல்லிதரும்போது  கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது .


             ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

புத்தகம் படிப்பது நல்லது என்பதை தெரிந்து கொண்டபோது எனது இரண்டாவது சகோதரரிடம் எனக்கு 11 வயது இருக்கும்போது கேட்டபோது இந்த மாதிரி உன் பாடங்களை மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்க உதவும் என்று சொல்லிவிட்டு ,சாண்டில்யனின் 'மஞ்சள் ஆறு' நாவலையும்  ,பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது" என்ற சிறுகதையும் தந்தார்  .மஞ்சள் ஆறு அந்த எழுத்து ஏனோ கனமாக பட்டது ஆனால் அண்ணன் படித்துவிட்டாயா என கேட்பாரே என்பதர்காக ( அப்போதே ) கடைசி பக்கம் சிலவும் படித்து வைத்து இருந்தேன் .அவர் கேட்டார் நான் சொன்ன பதிலில் ஏதோ சந்தேகம் வரவே (அண்ணனாச்சே) நடுபகுதியில் சில கேட்க மாட்டி கொண்டேன் .


       அதனால் முதலில் பச்சை வயல் மனதை புரியாவிட்டலும் படித்து சந்தேகம் கேட்டபோது மீண்டும் முதலில் இருந்து படி என்றார் ..அப்புறம் சுஜாதாவின் தொடர் கதை 'பிரிவோம் சந்திப்போம்' என பட்டியல் நீண்டது .எனக்கு ஏனோ அப்போதே சுஜாதாவோடு ஏதோ ஒரு ஒட்டுதல் பின்னாளில் பாலகுமாரன் படிப்பதில் ஏற்பட்டதை விட அதிகம்  ஏற்பட்டது.சுஜாதா எழுத்து எனக்கு நண்பனை போல  என்றால் பால குமாரன் எழுத்து ஒரு குருவை போல இருந்து வருகிறது .


இன்று காலை சூரிய வணக்கத்தில் ( 201 விருந்தினர் பக்கம் ) மூத்த தமிழ் எழுத்தாளர் திரு.ச.கந்தசாமி (இவர்  எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது) அவர்கள் பேசும்போது கூட ஒரு புத்தகம் படித்து முடிக்கும்போதுதான் ஆரம்பிக்கிறது அதன் வேலை  நமக்குள் என்பது அப்படியே ஏற்றுகொள்ளும் பக்குவம் வரும்போது நீங்கள் வாசிப்பதில் தேறிவிட்டீர்கள் என்பதாக புரிந்து கொள்ளலாம்.



ஸ்டெல்லா ப்ரூசின் - அது ஒரு நிலாக்காலம் படித்தவர்கள் இதை மிக எளிதாக உணரலாம் .விகடனில் தொடர்கதையாக வந்து பின் புத்தகமாக  வந்தது .அதில் வரும் ராம்குமார், சுகந்தா ஜோடி பற்றி அந்த கதை முடிந்தபோது நிறைய பேசினார்கள் .அதே போல தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ ஓர் எடுத்துக்காட்டு.( அது திரைபடமாக எடுக்கப்ட்டது அது முழுமையான நாவலை சொல்லவில்லை .ஆனால் ஒரு நல்ல முயற்சி என்பது வேறு விசயம் ) சுஜாதா தன்னுடய நாவல்கள் சில படமாக்கபட்டபோது படம் பார்த்து விட்டு கடைசியாய் இது யாருடைய கதை என்று வெறுத்து போய் கேட்டாராம் என்பது வேறு கதை .


சில ஆண்டுகளுக்கு முன் (RHONDA BYRNE) ராண்ட பைரனின் "ரகசியம்" படித்து விட்டு மிக அற்புதம் என எனக்கு தந்தார் நானும் பலருக்கு பரிசாகவும் படிக்கவும் சொல்லி வந்தேன் .அதர்க்கு பிறகு அதே ஆசிரியரின் "சக்தி" என்ற புத்தகம் வந்தது .அதை படித்த நண்பர் ஒருவர் இதை("ரகசியம்" ) விட அற்புதம் என்று எனக்கு போன் பண்ணி சொன்னார்.உண்மையிலேயே இது அபத்தம் என்பதாக நான் நினைத்து கொண்டேன் .காரணம் எந்த ஒரு எழுத்தாளனின் புத்தகமும் அவன் எழுதிய இன்னொரு புத்தகத்துடன் ஒப்பிடுவது அம்மாவிர்க்கும் - மனைவிக்கும் உள்ள வித்தியாசம் மாதிரி .(சில பேர் என் அம்மா சமையல் மாதிரி உன் சமையல் இல்லை என்று அதிகப்படியாய் பேசி ருசி என்றால் என்ன வென்று தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறுவிசயம் )


         மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .


ஒரு கலை இலக்கிய மன்றத்தில் - படித்த புத்தகங்களை பார்த்த திரைபடங்கள் விவாதிக்கும் பழக்கம் உண்டு .அப்படி ஒரு பால சந்தரின் சமயம் சிந்து பைரவி பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது  ,ஒரு நல்ல பள்ளியில் பணியாற்றி கொண்டு இருந்த ஆசிரியர் அவர் பேசும்போது அந்த படம் இரண்டு பெண்டாட்டிகள் விசயத்தை நியாபடுத்துவதாக இருப்பதாகவும் அதர்க்கு காரணம் அந்த படத்தின் உதவி இயக்குனர்தான்  (அப்போது பாலகுமாரன் )  அவருக்கும் இரண்டு மனைவி என்பதால் அப்படி என்றார் .அப்போது பாலாவின் மீது வெகு தீவிர ரசிகன் என்பதால் மறுத்து பேசினேன் .               உனக்கு தெரியாது நீ சின்னவன்  என்று ஓரங்கட்ட ஒரு தீவிரத்தில் இதை அப்படியே பாலகுமாரக்கு நான் கடிதமாக எழுத, அவர் பதிழும் எழுதினார் .அந்தகூட்டங்களை தவறவிடாதீர்கள் .என்னை பற்றி பேசியவருக்கு ஏதோ கோபம் இருக்கலாம் அதை விட்டு விட்டு இலக்கியம் தெரிந்து கொள்ளூம் அந்த இடத்திர்க்கு தொடர்ந்து போங்கள் என்று .இந்த கடிதத்தை அங்கு எடுத்து சென்றேன் .பாராட்டினார்கள் .அந்த ஆசிரியரை தவிர மற்றவர்கள் .
         சில சமயம் ஹோட்டல் கடையின் தோசை ருசி சமையல் அறை போக கூடாது என்பதாக மறைந்த திரு .கண்ணதாசன் அவர்கள் சொல்லுவார்.அவரும் அர்த்தமுள்ளவர்தானே !

உலகின் ஒட்டுமொத்த எழுதாளர்களிடமும் இன்றும் உள்ள ஒரே கேள்வி வாசகனுக்கு எப்படி எழுதினால் பிடிக்கும் என்பதுதான். இன்றுவரை ஒரு நல்ல புத்தகம் என்பது படிப்பவனின் மன நிலை , எழுதிவன் மேல் உள்ள பார்வை , சமூக பாதிப்பு , அவன் தேடல் , என்று இலங்கை சென்ற ஹனுமாரின் வால் போல நீண்டுகொண்டேதான் போகிறது .முடிவில்லை .ஏனெனில் சில ஆசிரியர்கள் அவர்களின் மேற்படி காரணங்களால் பாதிக்கபடுவது இயற்கைதானே .எனவே எல்லா புத்தகமும் வாசிப்பதர்க்காக பிறந்தவைகளே .அவை முடமாக்கபடுவது ,வாழ்வதுவும் வாசிப்பவனின் பார்வையில் இருக்கிறது .அதிலும் சில பேர் தனக்கு எந்த விசயம் பிடிக்குமோ அதை கெட்டியாக பிடித்துகொள்வார்கள் .கேட்டால், போதும் என்பார்கள்.ராஜேஸ்குமாரை விட்டு அகலாதவர்களையும் ,சுபா என்றால் மட்டும் படிப்பேன் என்பது அவர்களுக்கு அரோக்கியம் என்றால் அது தவறே இல்லை .சில மனிதர்கள் தன் நண்பர்களைப்போல போதும் என்று நின்று விடுகிறார்கள் .ஒருவேளை ஒரு கட்டத்தில் அவர்களின் ஆதர்ச ஆசிரியர் ஜெயகாந்தன் போல எழுதுவதை நிறுத்தி விட்டால் மீண்டும் மீண்டும் படித்ததை படிக்கலாம் ..சில சமயம் படிப்பதை விட இந்த மாதிரி வாசிப்பவர்களை விரும்பி பேசுவேன் .அதர்க்கும் ஏதாவது விசயம் அவர்களிடம் இருக்கலாம் அல்லவா ?

ஆனால் ஒவ்வொரு புத்தகங்களும் மிக பெரிய கடமை செய்கிறது .

1.சக மனிதர்களின் கருத்தை கேட்க்கும் பக்குவதை  வளர்க்கிறது .
2.ஒவ்வொரு விசயத்திலும் ஒரே பர்வை இல்லாமல் வேறு  ஒரு கோணத்தில் பார்க்க வைக்கிறது.
3.சுய அறிவு ( பட்டு தெரிவது ) சொல்லறிவு ( கற்று அறிவது )என்ற பாகுபாடு புரிய தொடங்குகிறது .
4.எந்த தளத்தில் வாழ்கையின் இருப்பு இருந்தாலும் அவன் அறியும் விசயம் எல்லோரையும் ஒரே தளத்தில் நிற்க வைக்கிறது .
5.வேறு ஒரு சிந்தனையை பெரும்போது சிற்றறிவு ,பேரறிவோடு கை கோர்க்கிறது .
6.தொலந்து போன வாழ்க்கையை தேடி தருகிறது .தொட முடியாத சிந்தனை தரிசனத்தை உள்ளங்கயில் வைக்கிறது.
7.கனவுகளை மேம்படுத்துகிறது .தேடிகொண்டு இருக்கும் வேறு ஒரு தளத்தின் ஆதங்கத்தை ஆறுதல் படுத்துகிறது.
8. மூன்றாவது கண் எனப்படும் ஆறாவது அறிவின் வாசலுக்கு வழிகாட்டுகிறது..
9.நல்ல நட்புக்கு பரிசாக வெகு நாளாக நம் நினைவை நிறுத்தி  வைக்கிறது .
10.உலகமே வெறுத்து போனாலும் ரகசியாமாக நம்மை மீட்டு கொண்டுவந்து தொடர்புகொள்தலே வாழ்க்கை என்று போதிக்கிறது.
11.நம் பலம் பலவீனம் என்ற பாதையை சரிபார்க்கும் நீதிபதியாக செயல்படுகிறது .
12. தேடலை அதிகபடுத்தும்போது திசைகள் நான்கு என்பதை சந்தேகபடுத்துகிறது
13.மேலும் என்ன எழுதலாம் என்று அடுத்தவருடமும் யோசிப்போம்.

இன்று படிக்க எத்தனை சுலபமான வழிகள் குவிந்து உங்கள் முன் குவிந்து கிடக்கிறது பல தொழில் நுட்ப சாதணங்கள் வடிவில் .படியுங்கள் ,சொல்லுங்கள் ,ஒவ்வொரு புத்தகமும் உங்கள் சுவீகரித்து கொள்ள கை நீட்டி காத்து இருக்கிறது ...







வியாழன், 18 ஏப்ரல், 2013

எதிர் காற்றே சுகம் !


 நாழுபேர் பார்க்கும் படி !!


மிக சாதரணமாக யாராக இருந்தாலும் எடுத்து கவிழ்க்கும் வார்த்தையில் ஒன்று , நாழுபேர் பார்க்கும் படி நடந்து கொள்ளக்கூடாது .ஒருவேளை இந்த வார்த்தை மிக பெரிய அர்த்தம்  இருந்தாலும் இதனால் எதிர்பதமான சிந்தனையை எற்படுத்திகொள்ளும் நபர்கள் ஆதிக்கம் இந்த வார்த்தையில் ஆட்சி செய்கிறது .ஒருத்தர் நடந்தா ,நின்றால் ,சிரித்தால் ,அழுதால் ,முன்னேறினால் ,பின்னெறினால் ,வாழ்ந்தால் ,செத்தால் ,இப்படி எதர்க்கு எடுத்தாலும் வேறு வேலை இல்லாமால் நம்மை கவனிப்பதே அடுத்தவர் அல்லது அடுத்தவள் வேலை என்ற மனோ மயக்கம் நம்மை சுற்றி இப்படி சலிக்காமல் எப்படி சகல இடத்திலும் துறத்துகிறதோ தெரியவில்லை .

         சொல்லபோனால், நம் சிந்தனையை நாம் இந்த நேரத்தில் இப்படி இருக்கும் அப்படி இருக்கலாம் என்ற தீர்மாணம் இல்லாத போது அடுத்தவன் நம்மை பற்றி இப்படித்தான் யோசிப்பான் என்ற கற்பனை இருக்கே அது மாதிரி ஒரு நினைப்பை அடுத்த கிரகத்தில் கூட பார்க்க முடியாது .ரொம்ப சின்ன பிள்ளைத்தனமான சிந்தனை.

உங்களை ஆளும் நாழ்வர்..


நாழுபேர் பார்த்தா என்ற வார்த்தை எப்படி வந்து இருக்குமோ என்ற மெல்ல நமக்கு நாமே  திட்டத்தினால், ஏன் என பார்க்கும் போது ஒரு நல்ல விசயம் எதிர்படுகிறது . அது நம் உடல் பொறுள் ஆவி சிந்தனை ,செயல் , அறிவு , எல்லாம் தந்தது யார் ?                                   

            முதலில் உடல் உயிர் தந்த தாய் ,தந்தை ,படித்தாலும் படிக்காவிட்டாலும் ஏதோ ஒரு தொழில் செய்தாலும் குரு அவசியம் ,அடுத்து துணைவி ,அல்லது துணைவன்.(இது இல்லாதவன் சாமியார் என்ற சௌகர்யமான பெயரோடு அலைபவர் அவருக்கு இது பாதிக்காது. ) நாம் வாழும் வாழ்க்கை முதலில் தாய் தந்தை என்ற இரண்டுபேரும் பார்த்து வளர்ந்து இருக்கிறோம் .அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் ,ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களை விலகி பிறகு வாழும் நம் வாழ்கை அவர்கள் மெச்சவில்லையானாலும் எட்டி பார்த்து விமர்சிக்காமல் இருந்தாலே போதுமானது .அடுத்து நம்மை படிப்பிலோ தொழிலிலோ குருவாக இருப்பவர் கற்று கொடுத்ததை சரியாக செய்வது அல்லது மதிப்பது .சரி அடுத்து நான்காவது துணைவி அல்லது துணைவனுக்கு செய்ய வேண்டிய கடமை அதில் குறை வைத்துகொண்டு ஊரே என்னதான் மெச்சினாலும் வீண் பெயர்தான் .

பேங்கில் லோன் கேட்பது.. 


இந்த நாழுபேர் மட்டும்தான் முக்கியம் நம் வாழ்க்கைக்கு .மற்றபடி வந்து போவோர்களுக்கெல்லம் நம் வாழ்க்கையில் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் நமக்கு நாமே குழிதோண்டிகொள்ளும் திட்டத்திர்க்கு ஸ்டேட் பேங்கில் லோன் கேட்பது போலத்தான் .அது மட்டுமல்ல இந்த குறிப்பிட்ட நாழுபேர்  சிந்தனை மட்டுமேதான் நம்மை சுற்றி ஒரு அதிர்வுகளை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது .இவர்களை மறுத்து நாம் சிந்திக்கும் அல்லது புறம் தள்ளி யோசிக்கும் சிந்தனை நன்மை தருவதே இல்லை. பெறும்பாலான விபத்துக்களில் காரணமானவர்கள் வீட்டில் சண்டையிட்டு சாலைக்கு வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது .

எதிர்காற்றை விரும்புங்கள் . 


அப்படியே நம்மை பற்றி மற்றவர்கள் நினைப்பதை உணர்ந்தால் அதை எதிர்காற்று போல நினைத்து முன்னேறினால் நல்லது .பின்னே இருந்து அடிக்கும் காற்று முன்னே தள்ளுவது போல தோன்றும் ஆனால் அது அதன் இலக்கை நோக்கி தள்ளி திசை மாற்றுகிறது என்பதை நம் காதுக்கு வராத சொந்தமாக எவனோ நினைக்கிறான் என்ற நம் கற்பனையை சொல்லாம் .ஆனால் எதிர்காற்று நாம்மை தூண்டும் அது ஆரோகியமானது கூட  எனவே  அது சுகம்.எதிர்காற்றை விரும்புங்கள் . 

கொடுத்த வாக்குகள்..


இந்த இடத்திர்க்கு ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை ஞாபகத்திர்க்கு வருகிறது 

. "அடர்ந்து இருள்படர்ந்த அழகான காடு கொடுத்த வாக்குகள் உண்டு காப்பதர்க்கு கடந்து போகவேண்டும் இன்னும் பலகாத தூரம்"..

சனி, 6 ஏப்ரல், 2013

பேய் , உலகத்தி்ல் இல்லாமல் இருக்கலாம் ...


                     இன்று மனவளக்களை மன்றத்தில் நான்காம் நிலை அகத்தாய்வு வகுப்பில், பிறப்புக்கு முன் இறப்புக்கு பின் - உயிரின் நிலை வகுப்பு நடந்தது .அதில் கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் ...பேசியது பற்றிய ஒரு உதாரணம் சொல்லப்பட்டது .மரணங்களின் மூன்று விதமான இயற்கை மரணம் . துர் மரணம் , ஜீவமுக்தி எனப்படும் யோகியர்களின் இறப்பு பற்றி பேசப்பட்டது .அதோடு பேசப்பட்டு இருந்தால் இந்த பதிவிர்க்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும் .


              ஆனால் அதர்க்கு பிறகு அப்படி இறந்து போனவர்கள் உயிர் அவரவர் இறப்பின் நிலைக்கு ஏற்ப நான்கு விதமான இடங்களில் தங்கி செல்வதாக கடோபனிசத்தை மேற்கோள் காட்டி பேசபட்டது.


கடோபநிசத்தில்..
              அதன் படி  முதலிடம்   சாலோக்கியம். - இந்த இடம்  உலகத்தை ஒட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட ஒரு பகுதியில் துர்மரணம் எற்பட்ட உயிர்கள் நிறைவேறாத ஆசைகளோடு பைசாசம் ( பிசாசு ) என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், அடுத்து சாமீப்பியம் - பூமியைக் கடந்த பிறகு அடுத்து உள்ளது சூரியன் சூரியனைச் சுற்றி உள்ள களம் சூரிய களம் எனப்படுகிறது இந்தபகுதியில் இயற்கையாக இறந்து போன உடலை விட்டு பிரிந்த உயிர்கள் இருக்கு இடம் அதர்க்கு அடுத்து சாரூப்பியம் -  சூரிய களத்தை கடந்து போனால் அதற்கு அப்பால் 12வீடுகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும்  சக்தி களத்தை வீடாக கொண்டு மரணத்தை உவந்து ஏற்ற உயிர்கள் இருப்பு நிலையாக கோண்டு இருப்பதாகவும் கடைசியாக  சாயுச்யம் -  முடிவாக இருப்பது அதாவது இயக்க மற்று இருப்பது சுத்தவெளி இந்த சுத்த வெளியைத் தான் சாயுச்யம் என்பர் இங்கு நேரடியாக ஜீவமுக்தி பெறுபவர்கள் உயிர்கள்  இங்கு  கலந்துவிடும் என்கிறார்கள் .  .உதாரணம் - மஹரிஷிகள் உயிர் .  ( இதில் நித்தியான்ந்தா உயிர்  யாருடன் மன்னிக்கவும் எந்த இடம் போவார் என்பது பற்றி நாங்கள் பேசவில்லை !   ( ஆனால் அங்கு நிச்சயம் கேமிரா இருக்கிறதா என அவர்  பார்ப்பார் ! )   
  

வெளியே சொல்லாத அனுபவங்கள் ..
                     எனக்கு மட்டுமல்ல பேயை பற்றி பலருக்கும் பல கருத்துக்கள் பேய்த்தனமாக இருக்கிறது ! .பேய் எது ? ஆவி எது ?பிசாசு எது ? குறளி பேய் எப்படி இருக்கும் ? என்பது பற்றி பயந்துகொண்டே யோசிப்போம் ! வெளியே சொல்லாத அனுபவம் நிறைய இருக்கும் ஆனால் முடிவான விடையேதும் இல்லை .காலத்திர்க்கு ஏற்ப கருத்துக்கள் மாறிகொண்டே இருந்தாலும் எனது பதிமூன்று வயது வரை சிறு கிராமத்தில் வாழ்ந்ததால் பேயை பற்றி பல்வேறு குழப்பமான மன நிலையில் பயந்து கொண்டே இருந்திருக்கிறேன் நான்  . வீட்டுக்குள் யாரும் இல்லாத போது துணையில்லாமல் போகவே பயமான பயமஎனக்கு உண்டு்.அதர்க்கு பல காரணம் இருந்தது .


சாத்தானுக்கு  டோக்கன் !
                  எங்கள் கிராமத்தில் இருந்த பழனியம்மாளுக்கு வயது 50 க்குமேல் இருக்கும் .குழந்தைகள் இல்லை .அந்த அம்மாள் கேரளாவுக்கு போய் ஏதோ செப்பு காசு ( குட்டி சாத்தானுக்கு  டோக்கன் ) வாங்கி வைத்து இருந்தாராம் .அதனால் அம்மாவாசை நடு நிசியில் ஊரை வலம் வருமாம் அந்த பழனியம்மாள்  .ஒரு முறை அண்ணன் பார்த்ததாக சொல்லி இருக்கிறார்.( நல்லவேளை அவருக்கு பதிலாக நான் பார்த்து இருந்தாள் அன்றே பேயாகி இன்று இந்த கட்டுரையை வேறு யாரெனும் எழுத காரணமாக இருந்திருப்பேன்!! ) அதனால் அதை பார்த்த  அண்ணன்  கேட்டதெல்லாம் கொடுத்து விடுவேன் .

பேய் ஓட்டும் ஸ்பெசலிஷ்ட் !
                     அப்புறம் ஒரு சமயம் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கு  பேய் பிடித்து விட்டதாக சொல்லி அடைத்து வைத்து இருந்தார்கள்  .என்னை விட சில வயது மூத்தவள் அந்த பெண் . நான் அப்போது பாடும் ரோசாப்பு ரவிக்கை காரி படத்தின் ”உச்சி வகுந்தெடுத்து” பாட்டுக்கு ரசிகை ! . அந்த பெண்ணை அவர்கள்  வீட்டு வாசலில் வைத்து ,எருக்கம் கொடி,சவுக்கு ,இன்ன பிற ( வசதிக்கு ஏற்ப )  சில பொருளால் அடித்தார் யாரோ பேய் ஓட்டும் ஸ்பெசலிஷ்ட் ! இதில் சாரயம் ,கோழி,சுருட்டு ,இனிப்பு பண்டங்கள் படைத்து கத்த,கத்த அடித்தார்கள் .பல நாள் பசியில் அந்த பெண் அடிதாங்காமல் போய்விடுகிறேன் ,போய்விடுகிறேன் என்று கத்த கடைசியில் ஏதோ வாக்கு வாங்கி கொண்டு ,அந்த பெண்ணின்  உச்சி முடியை கொஞ்சம் அறுத்துக்கொண்டு ,ஒரு கோழியை எடுத்துக்கொண்டு ( பழி கொடுக்கவாம் )அந்த பூசாரி அல்லது பேய் ஓட்டும் ஸ்பெசலிஷ்ட் மறைந்து போனார் . அவர் போன பிறகு ஆண்டாள் அந்த இனிப்புகளில் ஒன்றை தின்றுகொண்டே என்னைப்பார்த்து வேணுமா என்று கேட்டுக்கொண்டே பார்த்த பார்வையை நான் பல வருடம் மறக்கவில்லை .

தற்கொலை புகலிடம்
           அது மட்டுமல்ல எங்கள் வீட்டிற்க்கு சில நூறு மீட்டர் கடந்து திண்டுக்கல் - பழனி ரயில் பாதை இருக்கிறது  .அது தற்கொலை செய்து கொள்ள பல பேரின் புகலிடம் . இறந்தவர்கள் உடலை ரயில்வே போலிஸ் அங்கேயே அதிகம் குழிதோண்டாமல் புதைத்து விடுவதால் நாய்கள் ஒவ்வொரு பாகமாக இழுத்துகொண்டு ஓடும் கோரகாட்சி பல இரவுகளை பயமுறுத்தி இருக்கிறது.

கடவுளும் பேயும் .
            பதினான்கு வயதில் கிராமத்தை விட்டு நகர்புறம் வந்து சில மாதங்களில் அதிகாலை மூன்று மணியிருக்கும். பக்கத்து வீட்டில் ஒரு 35 வயதுள்ள பெண்ணுக்கு சாமி வந்து விட்டதாக சொல்லி நான்கு மணிவரை எல்லா வீட்டு விபூதியும் அடித்தும் , பல மரத்து வேப்பிலை கொத்தும் அடித்து பார்த்தபிறகு ,என்னை எழுப்பி அந்த 35 க்கு முன்னாள் சில அடிகள் தூரத்தில் உட்கார வைத்து, கையில் மாரியம்மனின் பாடல்கள் கொண்ட புத்தகத்தை கொடுத்து, அங்கு இருந்த   குறைந்த வெளிச்சத்தில் தமிழ் படிக்க தெரிந்த ஒரே பாவத்திர்க்கு பாட சொல்லிவிட்டார்கள் .அதர்க்கு பிறகும் அந்த 35 வயதுக்கார அம்மாவின் டேய், டேய் என்று பல்லை கடித்துகொண்டு போட்ட சத்தம் குறையாது போகவே ஒவ்வொருவராக அந்த 10 * 8 அடை அறையை விட்டு வெளியே சென்று ஆலோசிக்க போக, ஒரு கட்டத்தில் அந்த 35 ம் + நானும் மட்டும் தனியே , குறைந்த வெளிச்சத்தில் இதை உணரவே எனக்கு பல நிமிடம் ஆகிவிட்டது .அப்போதுதான் அந்த அம்மா முகத்தை பார்த்தேன் அந்த அம்மாவின் கண்கள் என்னை மட்டுமே வெறித்து கொண்டு இருந்தது ... பயத்தில் படிக்கும் மாரியாமன் பாடல்கள் கூட எனக்கே பயமாக இருந்தது .ஒரு ஆறு மணி இருக்கும்போது என்னை காப்பாற்றி வெளியே அழத்து வந்தார்கள் .அப்பொதும் தமிழ் வாசிப்பில்  இருந்த ஆர்வத்தில் அம்மாவிடம் காரணம் கேட்டேன் .அந்த அம்மாவிர்க்கு பேய் பிடித்து விட்டதாம் என்றார்கள் மிக சாதரணாமாக ! அப்படியனால் இத்தனை நேரம் பேய் பிடித்த 35 வயசு அம்மாக்கு , சாமி பாட்டு பாடியிருக்கேன் .ஒருவேளை நல்ல பேயாக இருந்திருக்கும் போல அப்படியே ஒரு அறைவிடாமல்  விட்டு விட்டது !

 வீட்டுக்குள் ரத்தம்!
          சமீபத்தில் புதிதாய் குடி பெயர்ந்த திருப்பூர் வாடகை வீட்டில் வந்த சில மாதங்களில் பக்கத்து வீட்டு அம்மா மெல்ல என மனைவியிடம் , உங்களிடம் சொன்னால் பயந்து விடுவீர்கள் என்பதால் சொல்ல கூடாது என்று நினைத்தேன் எங்கள் வீட்டுக்குள் சில சமயம் சில இடங்களில் ரத்தம் உறைந்து போனதை பார்த்து இருக்கிறேன் ஏன் என கேட்க என் மனைவி பயத்துடன் இதை சொன்னார்கள் .இத்தனைக்கும் என்னை விட அவர்கள் பேய் படம் பார்ப்பதில் அவர்கள் துணிந்தவர்கள் .நான் இப்போதும்  திகில் படம்  பார்க்கமாட்டேன் .இருந்தாலும் பயமில்லாமல் என் மனைவியிடம் சொன்னேன் ,அவர்கள் வீட்டில் எலி அதிகம் இருப்பதால் பூனையை பிடித்து கடித்து இருக்கும் .அதனால் ரத்தம் இருக்கலாம் என்று சமாளித்தேன் .


        ஆனால் பேயிக்கும் எனக்கும் ஏதோ ஒரு உறவு எங்கு போனாலும் பிடித்து ஆட்டிகொண்டே இருக்கும்போல ....அட போங்கப்பா !